kiyaa-22

coverpage-1c695480
Akila kannan

கிய்யா – 22

கடிதத்தை பார்த்ததும் விஜயபூபதிக்கு பல விஷயங்கள் புரிவது போல் இருந்தது.

கடிதத்தில் ஆங்காங்கே இலக்கியாவின் கண்ணீர் துளிகள். அவன் விரல்கள் அந்த கண்ணீர் துளிகளை தீண்ட, அவன் கண்கள் கலங்கியது.

அத்தான்,

 என் பணி முடிந்துவிட்டது. உங்கள் வாழ்வில் என் அத்தியாயாமும் இத்தோடு முடிகிறது. தன்னை கூண்டிற்குள்ளும் அடைத்து கொள்வாள் பெண். நான் எனக்கான கூண்டிற்குள் என்னை அடைத்து கொள்ளும் நேரமும் வந்துவிட்டது.

  ‘அத்தான்… அத்தான்…’ இந்த அழைப்புக்கு நான் மட்டும் தான் சொந்தக்காரி. உரிமைக்காரியும் கூட. இந்த பந்தம், காலத்தின் கட்டாயத்தால் உருவானது இல்லை.

இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நான் சர்வ நிச்சயமாக நம்புகிறேன் அத்தான். ஏன் தெரியுமா? என் தாயையும், தந்தையையும் என்னிடம் இருந்து பிரித்த அந்த கடவுள், அவர்களை உங்கள் மூலமாக தான் என்னிடம் அனுப்பி வைத்திருக்கார் என்பது என் நம்பிக்கை.

மாமாவை எனக்கு பிடிக்கும். ஆனால், மாமாவிடம் நெருங்க, எனக்கு ஒரு தயக்கம் உண்டு. மாமாவின் வயது அதற்கு காரணம் என்று எண்ணிக் கொள்வேன்.

பாட்டி எனக்கு எல்லாம் செய்தாலும், அவரை எனக்கு பாதுகாப்பாக ஒருநாளும் என்னால் எண்ண முடியவில்லை. நான் தான் பாட்டியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள். என் குடும்ப சூழ்நிலை, நான் யாரிடமும் பெரிதாக நட்பு பாராட்டியதில்லை.

உண்ண உணவு, இருக்க இடம், என் வேலைகளை செய்ய கையும் காலும் மூளையும், எல்லாரிடம் பேச வாயும், பார்க்க கண்களும் என எல்லாம் இறைவன் கொடுத்திருக்க, எதற்கு கவலை படவேண்டும் என்று இந்த வாழ்வை நான் சந்தோஷமாகவே வாழ விரும்புகிறேன். வாழ விரும்பினேன்.

அதற்கு காரணம் நீங்கள் தான் அத்தான்.

எனக்கு வழிகாட்டி, தோழன், என் பெற்றோர் என் எல்லாமும் நீங்கள் தான் அத்தான். என் முகம் வாடினால், நீங்க அங்க இருப்பீங்க அத்தான்.

வாழ்க்கையில் நான் உங்களுக்கு பட்ட கடனுக்கு, திரும்ப ஏதாவது செய்யணும்னு எனக்கு தோணும் அத்தான். நீங்க விழுந்து இருந்த பொழுது, உங்களை நடக்க வைக்க வேண்டும் என்ற வெறி என்னுள்.

இதுக்கு திருமணம் தேவையான்னு நீங்க கேட்கலாம். இந்த திருமணத்துக்கு நன்றி கடன் மட்டும் காரணமில்லை அத்தான். அதுக்கும் மேல.

எப்படி சொல்றது. வீட்டில் வளர்க்கும் நாய், நன்றி கடனை மட்டும் காட்டுறதில்லையே, எஜமானுக்காக எதுவேணுமினாலும் செய்யுமே அப்படி தான். அன்று, நான் சிலவற்றை மீற முடியாத சூழ்நிலை.

என் பிறவியும் ஒரு நான்கு கால் பிராணிக்கு சமமானது தான் அத்தான். உங்களிடம் கையேந்த கூடாது என்று எண்ணுவேன். ஆனால், என் விதி என்னை உங்களிடம் மீண்டும் கையேந்த வைத்துவிட்டது.

நான் எங்கிருந்தாலும் உங்களை பற்றி தெரிந்து கொண்டே தான் இருப்பேன். நீங்கள் துர்காவை திருமணம் செய்து கொண்டால், நான் திரும்பி வந்து விடுவேன். இல்லையென்றால்… நான் மேலே எதுவும் சொல்லி உங்களை மிரட்ட விரும்பவில்லை. எந்த தவறான விஷயத்திலும் எனக்கு உடன்பாடு கிடையாது. அதை நோக்கி நான் செல்ல நீங்கள் காரணமாக இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் அத்தான்.

அடுத்ததாக மீண்டுமொரு கோரிக்கை. என் தம்பியை பார்த்துக் கொள்ளுங்கள். அவனை படிக்க வைத்துவிடுங்கள். அவன் படித்து மருத்துவராகி எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை அவனுக்கும், எனக்கும் உண்டு.

உங்களிடம் கையேந்தும் நிலையிலேயே என்னை எப்பொழுதும் வைத்திருக்கும் விதியை எண்ணி சிரித்து கொண்டேன்.

இந்த கடிதத்தில், ஆங்காங்கே இருக்கும் கண்ணீர் துளிகளை பார்த்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் அத்தான்.

நிச்சயமாக இது ஆனந்த கண்ணீர் தான். உங்கள் உடல்நிலை மீண்டு விட்டதே என்ற ஆனந்தம் மட்டும் தான்.

 

என் அன்பு அத்தானுக்கு உங்கள் இலக்கியாவின் நன்றி. உங்கள் இலக்கியா. மனைவியாக இல்லை. இலக்கியா என்றும் உங்கள் மனைவி ஆகமுடியாது. அவளிடம் காதல் கிடையாது. அவள் உங்கள் மனதை கவர்ந்தவளும் கிடையாது.

இலக்கியா, நீங்கள் சிறு வயதில் இருந்து பார்த்து வளர்ந்த உங்கள் இலக்கியா. உங்கள் மேல் அன்பும், மரியாதையும் கொண்டவள் மட்டும் தான்.

இப்படிக்கு,

கிய்யா… கிய்யா…

நம் வீட்டில் பறந்து கொண்டிருக்கும் குருவிகள் என்றும் உங்களுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் என் வேண்டுதல்களை.

                                                   

கடிதத்தை படித்து முடித்திருந்தான் விஜயபூபதி. அவனுக்கு அவள் மேல் சிறிதும் பரிதாபம் எல்லாம் ஏற்படவில்லை. கோபம் கனன்றது. அதை கிழித்து எறிய வேண்டும் என்ற வெறி அவனுள் கிளம்பியது.

அவன் கவனத்தை திசை திருப்புவது போல் அங்கு மற்றோரு கடிதம்.

‘கடிதம் எழுதியே இவள் நம்மை கொல்லுவாளோ?’ எண்ணம் தலை ஒங்க அதை பிரித்து படித்தான்.

துர்கா,

     உன் தோழியாக இலக்கியா எழுதி கொள்வது.

அத்தானை உங்க கூட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு.’ அப்படின்னு சொல்லி இருந்தேன். ஆனால், முன் நின்று செய்ய முடியாததை விலகி நின்று செய்கிறேன்.

நான் அத்தானை உங்களோடு சேர்த்து வைத்த பின், அத்தானை உங்க கைக்குள் போட்டுக்கறது உங்க சாமர்த்தியசாலித்தனமுன்னு சொல்லி இருந்தேன். உங்களுக்கு புரியும் துர்கா.

நான் அத்தானுக்கு துணைவி மட்டும் தான். அதுவும், சில காலத்திற்கு. அத்தானின் துயரமான வழியில், சில காலம் துணையாய் வந்தவள்.

அத்தானின் மனதையும், இந்த மனையையும் கவர்ந்த நீங்கள் தான் அத்தானுக்கு மனைவியாக முடியும்.

உங்கள் திருமணத்திற்கு என் வாழ்த்துகள்.

இப்படிக்கு,

உங்கள் தோழி

இலக்கியா.

கடிதத்தை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்தவன், தனக்கு தெரிந்த வகையில் இலக்கியாவை தேட சொல்லிவிட்டு, வேகமாக தன் வீட்டிற்குள் சென்றான் விஜயபூபதி.

அங்கு அமர்ந்திருந்த தந்தையின் முகத்தில், இலக்கியா எழுதி வைத்திருந்த கடிதத்தை விட்டெறிந்தான்.

அவன் செய்கையில், “விஜய்…” பாட்டியும், அம்மாவும் அலற, “யாராவது பேசினீங்க, எல்லாரையும் கிழி கிழின்னு கிழிச்சிருவேன்.” அவன் ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டினான்.

ரங்கநாத பூபதி அந்த கடிதத்தை பிரித்தார். அவர் நெற்றி சுருங்கியது.

“இப்ப என்ன யோசிக்குறீங்க? அது தான் உங்க மகனுக்காக இரண்டு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்தாச்சே?” விஜயபூபதி கோபமாக கேட்க, அவர் மறுப்பாக தலை அசைத்தார்.

“இப்பவும் நான் சொல்றேன். நான் ஒரு பொண்ணோட வாழ்க்கையை மட்டும் தான் கெடுத்தேன். இலக்கியாவின் வாழ்க்கையை மட்டுந்தான் நான் கெடுத்தேன். அதிலும் உனக்கு சரி பாதியான பங்கு இருக்கு.” அவர் தன் மகனை கூர்மையாக பார்த்தார்.

அவர் குற்றச்சாட்டில் அவன் தலையை பிடித்து கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

“துர்காவுக்கு நான் துரோகம் செய்யலை.” அவர் கூற, அவன் சரேலென்று நிமிர்ந்து தன் தந்தையை பார்க்க, “நீ துர்காவுக்கு துரோகம் பண்ணிட்டதா நினைக்குறியா விஜய்?” அவர் கேள்வியில் அவன் மறுப்பாக தலை அசைத்தான்.

“இல்லை அப்பா. நான் இப்பவும் சொல்றேன். நான் துர்காவுக்கு நல்லது தான் பண்ணி இருக்கேன். இன்னைக்கு என் உடல் நிலை சரியாகிருச்சு. ஆனால், சரியாகாம போயிருந்தா…” அவன் குரலில் தடுமாற்றம்.

“சரியானது மட்டுமில்லை விஜய். நீ எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டாலும், இன்னும்…” ரங்கநாதபூபதி தடுமாற, “துர்காவோட அப்பா என்கிட்டையும் எல்லா கேள்வியையும் கேட்டார் அப்பா.” தன் தந்தையின் தடுமாற்றத்தில், அவர் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்.

ரங்கநாத பூபதியின் கண்கள் கலங்கியது.

“அப்பா” அவர் தோள்களில் கை வைத்தான்.

“உன்னை காதலிக்கும் பொழுது துர்காவிடம் இருந்த உறுதி, இப்ப யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு அந்த பொண்ணுகிட்ட இருக்கிற உறுதி, ஏன்பா அவங்க அப்பா உன்னை வேண்டாமுன்னு சொல்றப்ப அவரை எதிர்த்து உன்னை பார்க்க வரும்பொழுது இல்லை?” அவர் கேள்வியாக நிறுத்தினார்.

“அப்பா, இப்ப எதுக்கு தேவை இல்லாத பேச்சு? நான் ஒருநாளும் துர்காவை அவங்க வீட்டில் இருந்து பிரிக்கணுமுன்னு நினைக்கலை.” அவன் நிதானமாக கூறினான்.

“நான், உனக்கும் இலக்கியாவுக்கும் உடனே கல்யாணம் செய்யலை. இடையில் சில நாட்கள் நேரம் கொடுத்து தான் கல்யாணம் பண்ணினேன். ஒருவேளை அந்த பொண்ணு வருவாளோன்னு நினைச்சேன்.” அவர் நிறுத்த, அங்கு மௌனம்.

“நீ அப்ப இருந்த நிலையில் உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு துர்கா முடிவு பண்ணிட்டா… அவங்க அப்பா…” அவர் பேச, “அப்பா, ப்ளீஸ் துர்காவுக்கு நான் துரோகம் பண்ணலை. நான் அதில் தெளிவா இருக்கேன். அவ பக்கத்தில் இருந்து யோசிச்சா அவ நியாயங்கள் எல்லாம் சரி. அவளை வேண்டாமுன்னு சொன்னது நான். துர்கா கிட்ட கோபப்பட்டது நான்.” விஜயபூபதி தன் பேச்சை நிறுத்தினான்.

அவன் உடல் இறுகியது. “துர்காவோட அப்பா கேட்ட கேள்வி, இன்னும் என் காதில் இருக்கு. அந்த கேள்வி எனக்கு இன்னும் வலிக்குது அப்பா. நான் அவரை தப்பு சொல்ல மாட்டேன். அவர் பேசியது முழுசும் நியாயம். அவர் பெண்ணுக்காக அவர் பேசியது எல்லாம் சரி. நான் துர்கா விஷயத்தில் தெளிவா தான் இருக்கேன் அப்பா.” அவன் குரலில் உறுதியா இருந்தது.

“துர்காவையோ, அவங்க குடும்பத்தையே தப்பா பேசுறது எனக்கு பிடிக்கலை. அந்த பேச்சு வேண்டாமே” அவன் கூற, அங்கு மௌனம்.

“நான் கெடுதல் பண்ணி இருந்தா, அது இலக்கியாவுக்கு மட்டும் தான்.” விஜயபூபதி கூற, ஆமோதிப்பாக தலை அசைத்தார் அவன் தந்தை.

‘துர்கா அப்பா அப்படி என்ன சொன்னாங்க?’ என்ற கேள்வி பாட்டிக்கும், நிர்மலா தேவிக்கும் எழுந்தாலும், அதைவிட முக்கியமான கேள்வி அவர்கள் மனதில் எழுந்தது.

“இப்ப எதுக்கு தேவை இல்லாத பேச்சு? இலக்கியா எங்க?” நிர்மலாதேவி கேட்க, “நீங்க ஏன் அம்மா அவளை தேடுறீங்க? நீங்க சந்தோசம் தானே படணும்” அவன் வெறுப்பாக கூறினான்.

“டேய், உன் பொண்டாட்டியை உனக்கு சரியா பார்த்துக்க வக்கில்லை. எங்களை குறை சொல்லறீயா? அவர் ஏற, பாட்டி அந்த கடிதத்தை எடுத்து படித்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

“பாட்டி, நான் இலக்கியாவை எல்லா இடத்திலும் தேட சொல்லிருக்கேன்.” அவன் அவரை சமாதான படுத்த, அவர்கள் வீட்டிற்குள் ஸ்ரீராம் நுழைந்தான்.

“எங்களுக்கு யாருமில்லை அப்படின்னு தான் எல்லாரும் இப்படி பண்ணிடீங்க.” அவன் பரிதாபமாக கேட்டான்.

“அக்கா, ஒரு நாளும் உங்க கிட்ட எல்லாம் கோபப்படக்கூடாதுனு சொல்லிருக்கா. எங்களுக்கு அம்மா, அப்பா இருந்திருந்தா இப்படி உடம்பு சரி இல்லாதப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு, உடம்பு சரியானதும் அவளை வெளிய அனுப்பிருப்பீங்களா?” அவன் அனைவரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தினான்.

“டேய், யாரும் உன் அக்காவை வெளிய அனுப்பலை. அவளே கொழுப்பெடுத்து போயிருக்கா. இங்க என்ன குறைன்னு அவ போயிருக்கா?” பாட்டி கோபமாக கத்த, “நீங்க பேசாதீங்க பாட்டி. அவ மனசில் என்ன இருக்குனு உங்க யாருக்காவது தெரியுமா?” ஸ்ரீராம் அமைதியாக நிறுத்தினான்.

“வேற யாருக்கோ உடம்பு சரி இல்லைனா இப்படி அக்காவை கட்டி வச்சிருப்பீங்களா? உங்களுக்கு உங்க பேரன் முக்கியம்.” ஸ்ரீராம் கூற, அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

“எனக்கும் அத்தான் சரியாகணும்னு ஆசை தான். அக்கா வாழ்க்கையை பலி கொடுத்தாலும் பரவாலைன்னு நானும் நினச்சேன் தான். ஆனால், காரியம் முடிந்ததும் அவளை கறிவேப்பில்லை மாதிரி தூக்கி போட்டுடீங்களே.” அவன் கோபமாக பேசினான்.

கோபத்தினோடு, ஸ்ரீராமின் கண்கள் கலங்கியது. “நான் அக்காவோட எல்லா கஸ்டமெர்ஸ் கிட்டயும் பேசி பார்த்துட்டேன். அக்காவுக்கு பெருசா ஃபிரெண்ட்ஸ் கிடையாது. இருந்தாலும் அவ கொஞ்சம் பழகுற ஃபிரெண்ட்ஸ் கிட்டயும் கேட்டுட்டேன். அக்கா அங்கையும் போகலை.” அவன் கூற அப்பொழுது விஜபூபதியின் அலைபேசி ஒலித்தது.

அவன் பேசிமுடித்துவிட்டு, “போலீஸ் கிட்ட கேட்டிருந்தேன். அவங்களும் எந்த தகவலும் இல்லைனு சொல்றாங்க.” அவன் குரலும் இறுகி இருந்தது.

நிர்மலாதேவியின் கண்கள் கலங்கியது.

“நான் அவளை திட்டுவேன். அவளை பார்க்கும் பொழுது எனக்கு அவ அம்மா நியாபகம் வரும். இலக்கியாவோடு பேச்சு அவ அம்மா பேச்சை நியாபக படுத்தும். கடைசியில், இவளும் அவங்க அம்மா பண்ணதையே பண்ணிட்டு போய்ட்டாளே.” அவர் தலையில் அடித்து கொண்டு விழ, “அத்தை…” ஸ்ரீராம் பதறினான்.

“அத்தை, அக்காவுக்கு உங்களை பிடிக்கும். நீங்க அவளை எவ்வளவு திட்டினாலும், நீங்க எனக்கு அம்மா மாதிரி. உங்களை நான் என்னைக்கும் மரியாதை குறைவா பேச கூடாதுன்னு அக்கா சொல்லுவா. நான் கோபத்தில் ஏதாவது பேசி இருந்தா என்னை மன்னிச்சிருங்க. என் அக்காவை மட்டும் கண்டுபிடிச்சி கொடுங்க” சிறு வயதில் இருந்து தான் பார்க்கும் அத்தையின் கண்ணீரை பார்த்ததும் ஸ்ரீராம் தன் அத்தையின் கைகளை பிடித்து கொண்டு கதறினான்.

அவன் அத்தை இலக்கியாவை மட்டும் தானே திட்டுவார். அவனை ஒரு வார்த்தை கூட சொல்லியதில்லையே.

“டேய்… ஸ்ரீராம் நீ ஏன்டா இப்படி கதறுற? எனக்கு உங்க மேல பாசம் இல்லாமலா உங்களை என் கண்முன்னாடியே வச்சிருக்கேன். நீங்க எனக்கு யாருன்னு தெரியுமா?” நிர்மலாதேவி தலையில் அடித்து கொண்டு கதறி அழுதார்.

“அம்மா…” என்று விஜயபூபதி அவரை நெருங்க, “இப்ப எதுக்கு தேவை இல்லாத பேச்சு? எல்லாரும் இலக்கியாவை தேடுங்க” பாட்டி கட்டளையிட, விஜயபூபதியும், ஸ்ரீராமும் கிளம்பினர்.

ஸ்ரீராம், அவனுக்கு தெரிந்த இடத்தில் எல்லாம் தேடினான். விஜயபூபதி அவள் செல்லும் கோவில், அவள் செல்லும் கடைகள், அவள் நடந்து செல்லும் இடம் என ஒவ்வொரு இடமாக தேடினான்.

இலக்கியா எங்கும் இல்லை. ‘இலக்கியா எங்கே?’ என்ற மில்லியன் டாலர் கேள்வி அனைவருக்கும் மரணவலியை கொடுத்தது.

சிறகுகள் விரியும்!

  யாருக்கு விரியும்?

    யாருடன் விரியும்?

சிறகுகள் விரியும்…