Kiyaa-23

coverpage-0b07222a

Kiyaa-23

கிய்யா – 23

 விஜயபூபதி தனக்கு தெரிந்த காவல்துறை நண்பர்கள் மூலமாக இலக்கியாவை தேடச் சொல்லி கேட்டிருந்தான். அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

அவன் அவள் செல்லும் எல்லா இடத்திற்கும் காரிலும், இரு சக்கர வாகனத்திலும், நடையிலும் என பல இடங்களுக்கு பல விதமாக புகுந்து பார்த்து விட்டான். அவளை காணவில்லை.

 தெரிந்த இடத்தில எல்லாம் விசாரித்துவிட்டான். அவளை பற்றிய தகவல் இல்லை.

அவன் உடைந்து போனான். அவன் இதயம் துடிக்கவே அஞ்சி துடித்தது. அவன் இதயம் காதலில் துடிக்கவில்லை. அவன் காதலிக்காக துடிக்கவில்லை. அவன் மனைவிக்காக துடிக்கிறாதா? அவனுக்கு தெரியவில்லை.

அவள் எப்பொழுது அவனுக்கு மனைவியானாள்? தாலி கட்டியவுடனா? இல்லை, அவனுக்கு சமைத்து கொடுக்கும் பொழுதா, இல்லை அவள் அவனுக்கு பணிவிடை செய்யும்பொழுதா? இல்லை அவளறியாமல் அவள் கண்களில் அவ்வப்பொழுது மின்னும் காதல் பார்வையிலா? பல கேள்விகள் அவன் தேடலோடு அவனை குத்தி கிழித்தது.

அவனோ பதில் தெரியமால் தன் வீட்டு குழந்தையை தொலைத்த தவிப்போடு கண்ணீர் மல்க நடுத்தெருவில் நடந்து கொண்டிருந்தான்.

அவன் பல இடங்களுக்கு அலைந்ததில் அவன் சட்டை கசங்கி இருந்தது. அவன் தலை முடி குலைந்திருந்தது. அவன் பல இடங்களில் ஏறி இறங்க, அவன் துவண்டிருந்தான். கண்களில் நீர் படலம்.

அவனுக்கு எதிரே, துர்கா நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் சேவைக்கு இடையில் அவ்வப்பொழுது தன்னை தனிமைப் படுத்தி கொள்வது உண்டு. மீண்டும் நாளை இரவு, தன் பணியை அவள் தொடங்க வேண்டும்.

அதற்கு இடையே அவளுக்கு தேவையானவற்றை வாங்க துர்கா கடைக்கு வரும் பொழுது அவள் பூபதியை பார்த்தாள். அவன் கோலம் அவளை தாக்கியது.

‘என பூபதியா இது?’ அவள் பதறிக்கொண்டு அவன் அருகே செல்ல, அவன் கண்கள் துர்காவை இலக்கில்லாமல் பார்த்தது. அவன் சிந்தை அவளை துர்கா என்று கூட அறிய முற்படவில்லை.

‘இந்த பெண் இலக்கியா இல்லை’ என்று மட்டுமே அவன் சிந்தை அவனுக்கு அறிவுறுத்த, அவன் இலக்கில்லாமல் நடக்க, “பூபதி எதுவும் பிரச்சனையா?” அவள் குரல் அவனை இடைமறிக்க, அவன் சட்டென்று நின்றான்.

நீர்த்துளியாய் அவன் கண்களை மறைத்து கொண்டிருந்த கண்ணீர் அவன் இதயத்தை தொட்டது. எங்கு, தன்னால் விஜயபூபதியின் இதய வலியை போக்கிவிட முடியுமா என்ற ஆவலுடன்.

அவன் தன் சட்டையில் உள்ள இரண்டு கடிதங்களையும் எடுத்து துர்காவிடம் நீட்டினான்.

அந்த கடிதத்தை படித்து முடித்துவிட்டு, உணர்ச்சி துடைத்த முகத்தோடு அவனை பார்த்தாள்.

“நானும் இலக்கியாவை தேடுறேன் பூபதி.” அவள் கூற, அவன் அந்த கடிதத்தை வாங்கிக்கொண்டான்.

சற்று தூரம் சென்றவள், “காதலியை பலர் இழக்கறது இயல்பு. அது விதி. ஆனால், மனைவியை ஒரு மனிதன் எந்த சூழ்நிலையிலும் இழக்கவே கூடாது. அப்படி இழந்தா அது கணவனின் தப்பா தான் இருக்கணும். தான், அவளுக்கு கணவன். அவளுக்கு எந்நேரமும் கூட இருப்பேன் அப்படிங்கிறதை அவன் தன் மனைவிக்கு புரிய வைக்க தவறிட்டான்னு தான் நான் சொல்லுவேன்” அழுத்தமாக கூறிவிட்டு, ஒரு நொடி நின்றாள்.

“உங்க மனைவியையாவது இழந்துடாதீங்க.” கூறிவிட்டு விடுவிடுவென்று சென்றாள் துர்கா.

அவன் வாடிய முகம் அவளை வாட்டியது. ‘அவன் வருத்தத்தை கேலி செய்யும் அளவுக்கு நான் கெட்டவள் இல்லை. ஆனால், அவன் வருத்தத்தை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நான் ரொம்ப நல்லவள் இல்லை’ என்ற எண்ணத்தோடு துர்கா அவனிடமிருந்து விலகி சென்றாள்.

அதே நேரம், ‘இலக்கியா எங்கே?’ என்ற கேள்வியும் அவளை குடைந்தது.

இலக்கில்லாமல் தன் காரை செலுத்த ஆரம்பித்த விஜயபூபதியை, அலைபேசி ஒலி சுயநினைவுக்கு கொண்டு வந்தது.

காவல்துறையினர், அவனை வண்டியை ஓரங்கக்கட்ட சொல்லி மீண்டும் அழைக்கும்படி கூறினர்.

அவன் இதயத்தின் படக்படக்கென்ற ஓசை அவனுக்கே கேட்டது. அவன் நெற்றியில் வியர்வை துளிகள் அவன் முகத்தில் வழிந்தது. நடுங்கிய கைகளோடு தன் காரை ஓரமாக நிறுத்திக்கொண்டான்.

ஆழ மூச்சு எடுத்தான். மீண்டும் காவல்துறை நண்பனை அழைத்தான்.

எதிர்முனையில், “விஜய், கடற்கரை ஓரமா ஒரு டெட் பாடி. நீ சொல்ற வயசில் ஒரு பொண்ணு.” அவன் தயங்க, “நோ…” அவன் குரல் அழுத்தமாக வெளிவந்தது.

“இல்லை, விஜய்… நீ ஒரு தடவை வந்துட்டு…” அவன் கூற, “வாய்ப்பே இல்லை. அதுக்கு வாய்ப்பே இல்லை. அவ எங்க போனான்னு மட்டும் தான் தேடணும். இலக்கியா அப்படி செய்யவே மாட்டா. அவள் முட்டாளும் இல்லை. கோழையும் இல்லை.” விஜயபூபதியின் குரல் அழுத்தமாக வெளிவந்தது.

“சரி, இது யாருன்னு நான் பார்க்க சொல்றேன். இலக்கியாவை தேட சொல்லுவோம்.” அவர்கள் பேச்சு முடிய, விஜயபூபதி காரை விரைவாக வீட்டை நோக்கி செலுத்தினான்.

அவன் இலக்கியாவோடு தங்கியிருந்த தோட்டத்து வீட்டை நோக்கி செல்ல, “இலக்கியாவே அங்க இல்லை. நீ ஏன் அங்க போற?” நிர்மலாதேவி தடுக்க, அவன் பதில் கூறாமல் அங்கு சென்று அந்த அறைக்குள் தன்னை பூட்டி கொண்டான்.

***

அதே நேரம், இலக்கியா அந்த நெருக்கமான வளவு போல் இருந்த பல வீடுகளுக்குள் இருந்த ஒற்றை அறை வீட்டிற்குள் தன்னை அடைத்து கொண்டாள்.

அங்கு மரங்கள் இல்லை. எங்கும் வீடுகள் மட்டுமே இருந்தது. சின்னதாக ஒரு வீட்டில் இருந்தாலும், விசாலமான தோட்டத்தில் நடந்து வழக்கமாக தன் மனதை அமைதி படுத்திக்கொள்வாள் இலக்கியா. இன்று அதற்கும் வழி இல்லமால் இருந்தது அந்த ஒற்றை அறை வீடு.

அறையை அடைத்துக்கொண்டு சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள் இலக்கியா.

‘இனி இங்கு தான் என் வாசம். நான் சம்பாதித்ததில் கொஞ்சம் பணத்தை எடுத்து கொண்டு வந்திருக்கிறேன். இங்கு ஏதாவது வேலை தேடணும். இந்த லாஃடவுனில் எதுவும் கிடைக்காது. ஆனால், எல்லாம் சீக்கிரம் சரியாகிரும்.’ நிதானமாக சிந்தித்தாள்.

முதலில் கொஞ்சம் நாட்களுக்கு சாப்பாட்டை வெளியே வாங்குவதாக திட்டமிட்டு கொண்டாள். அதன் பின் அடுப்பு வாங்கி கொள்ள வேண்டும் அவள் திட்டமும் எண்ணமும் நீண்டு கொண்டே போனது.

அவள் முகத்தில் ஒரு தெளிவு. ‘இனி அத்தான் நல்லாருப்பாங்க. கொஞ்சம் நாள் என்னை தேடுவாங்க. அப்புறம் எல்லாம் சரியாகிரும். துர்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நான் வருவேன்னு அத்தானுக்கு தெரிஞ்சா நிச்சயம் துர்காவை கல்யாணம் செய்துப்பாங்க.’ அவள் தன்போக்கில் சிந்தித்து கொண்டாள்.

அன்றிரவு, புது இடம் தூக்கம் வராமல் திரும்பி படுத்தாள் இலக்கியா. தான் உறுதியாக இருப்பதாகவும், தெளிவாக இருப்பதாகவும் தான் அவள் மனம் நம்பியது. பல எண்ணங்களுக்கு இடையே கண்ணயர்ந்தாள் இலக்கியா.

அவள் வீட்டிலிருந்து கிளம்பிய மறுநாள் காலை. சுமார் நாலு மணிக்கு, ‘கிய்யா… கிய்யா…’ என்ற சத்தம்.

“அத்தான்…” அலறலோடு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் இலக்கியா.

“அத்தான்… அத்தான்…” வீடெங்கும் அவனை தேடினாள் இலக்கியா. தான் இருக்கும் இடம் தூக்கம் கலைந்து மெல்ல மெல்ல அவளுக்கு புரிய ஆரம்பித்தது.

மின்விளக்கை இயக்க அவள் முனைகையில் அது எரியவில்லை. மின்தடை சதி செய்தது. மின்விசிறி ஓடவில்லை. ஜன்னலை அவள் திறக்க முற்படுகையில் அங்கு சூழ்ந்திருந்த இருட்டில் பயம் அவளை முதல் முறையாக ஆட்கொண்டது.

‘ஏதாவது பிரச்சனை வந்தால் என்னை காப்பாற்ற அத்தான் இல்லை.’ அவள் சிந்தனை ஓடியது.

“அத்தான்…” அவள் உதடுகள் முணுமுணுக்க, அவள் முகத்தில் மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது.

அவள் தன் கண்களை இறுக மூடினாள். சிறு வயதில் அவள் அனாதையாக நின்ற பொழுது தன்னை தோளோடு சேர்த்து கொண்ட அத்தான்.

அவள் கீழே விழும் பொழுதுதெல்லாம், ‘அரசியலில் இதெல்லாம் சகஜம்…’ என்று அவளை சமாதானம் செய்யும் அத்தான். அவள் பருவம் எய்தி வெட்கத்தோடு விலகிய பொழுது, தோழனாய், ‘உனக்கு வாய்க்கு ருசியா ஏதாவது சாப்பிட வேணுமா?’ என்று கேட்ட அத்தான்.

அதன் பின் கல்லூரி செல்லும் பொழுது, அவள் அவன் உதவியை ஒதுக்கினாலும், திட்டி கொண்டே உதவி செய்யும் அத்தான்.

அவள் எண்ணம் முழுவதும் அத்தான் என்ற சொல்லே நிறைந்து வழிந்தது.

“அத்தான்…” அவள் சத்தமாக ஆசையோடு அழைத்து பார்த்தாள்.

அவள் முகமெங்கும் தன் கைகளால் தடவி பார்த்தாள். ‘அன்று அத்தான் கனவில் என்னை தீண்டிய பொழுது இனிமையாக இருந்தே. உண்மையாக தீண்டினாலும் அப்படி தான் இனிமையாக இருக்குமோ?’ அவள் முகத்தில் வெட்க புன்னகை எட்டி பார்த்தது.

‘இது தான் காதலா? என் காதலிலும் அத்தான் தான் நிறைந்திருக்கிறாரா என்ன?’ அவளுள் சந்தேகம் எழுந்தது.

“ச்சீ… ச்சீ… காதலா?” அவள் மறுப்பாக தலை அசைத்தாள். ‘ஏழைகளுக்கு, என்னை போல் வைராக்கியம் உள்ள பெண்களுக்கு காதல் எல்லாம் வராது.’ மறுப்பாக தலை அசைத்து கொண்டாள்.

‘அத்தான் துர்காவுக்கு சொந்தம். நான் செய்த இடைஞ்சல் போதும். நான் யோசிக்க கூடாது.’ அவள் மனதோடு கூற ஆரம்பித்து, “நான் அத்தானை பத்தி யோசிக்க கூடாது. நான் அத்தானை பத்தி யோசிக்க கூடாது.” சத்தமாக கூற ஆரம்பித்தாள்.

‘குரங்கை நினைத்து மருந்தை சாப்பிடாதே.’ என்று கூற, குரங்கின் ஞாபகம் வருவது போல,’நினைக்க கூடாது நினைக்க கூடாது…’ என்று எண்ண அவளுக்கு அவள் அத்தானின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.

ஞாபகம் எல்லை மீற, ‘நான் எண்ணத்தால் அத்தானோடு வாழ்ந்தால் என்ன? நான் அத்தானின் மனைவி தானே? அதை யாரால் மாற்ற முடியும்?’ என்ற கேள்வியும் அவளுள் வந்தது.

‘என் எண்ணங்கள் என் உரிமை’ என்று இப்படியான சிந்தனைகளோடு வாழத்தான் அவள் எண்ணினாள். அவள் அவளை மாய்த்து கொள்ள நினைக்கவில்லை. ஆனால், அவள் எடுத்து கொண்ட தனிமை, அவளை பார்த்து ஏளனமாக சிரித்தது.

***

அதே நேரம், விஜயபூபதி அவன் வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

‘லூசு மாதிரி இப்படி தனியா எங்க போய் தொலைந்தாளோ. காலம் கெட்டுகிடக்கு ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு நடந்தா என்ன பண்றது?’ அவன் தூக்கம் வரமால் தவித்தான்.

‘கூட இருந்தாலும் பேசி கொல்லுவா. இப்ப எங்கையோ போய் இப்படி என்னை கொல்லுறா. முதலில், அவளை கண்டுபிடிச்சி, நல்லா செவிட்டோட நாலு சாத்து சாத்தானும். இதுல அந்த போலீஸ்காரன் வேற டெட் பாடின்னு நம்மளை டென்ஷன் பன்றான். இந்த இலக்கியா, அசால்ட்டா நாலு பேரை சாகடிப்பா. அது அவனுக்கு தெரியலை.’ கோபமாக அவன் சிந்தித்தாலும், அவன் மனதோரமாக வலித்தது.

‘நான் தான் தப்பு பண்ணிட்டேனோ? ஏன் என்னை கல்யாணம் செய்தேன்னு கேட்டு கேட்டு அவளை விலகி ஓட வச்சிட்டேனோ? நான் அவளுக்கு மட்டும்தான்னு புரிய வச்சிருக்கணுமோ?’ அவன் தன் நெஞ்சை நீவிக்கொண்டான்.

அவன் உடற்பயிற்சிக்காக அவள் கைகள் காட்டிய ஸ்பரிசத்தை அவள் நினைவோடு உணர, அவன் கால்கள் மெல்ல தள்ளாட தரையில் அமர்ந்தான்.

“கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, ‘கிய்யா… கிய்யா… மேஜிக்’ அவள் கூறுவது அவன் செவிகளில் விழுந்தது.

‘எந்த மேஜிக்கும் அவள் இருக்கும் இடத்தை கூறாதா?’ அவன் இதயம் தவித்தது.

“அத்தான்…” அவள் சத்தம் கேட்க, ஓடி சென்று அவளை கட்டியணைத்தான். அவளை இடையோடு இறுக்கிக்கொண்டு அல்லேக்காக தூக்கி சுற்றினான். அவள் கழுத்தில் முகம் பதித்து அவள் வாசம், அவள் சுவாசம் உணர்ந்து, “எங்கு இலக்கியா போன?” அவன் கதறினான்.

அவன் கைகளை தன்னோடு இறுக்க, அங்கு அவள் இல்லை. அவன் மட்டுமே இருந்தான். அனைத்தும் மாயை. ‘ஐயோ… மாயை…’ அவன் மனம் அலறியது.

‘தன் வாழ்வும் மாயையாக மட்டுமே போய்டுமோ? இலக்கியா வரவே மாட்டாளோ? அவளால் எப்படி என்னை விட்டு விலகி செல்ல முடிந்தது.’ அவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்.

“கிய்யா… கிய்யா…” குருவிகளின் சத்தம். அந்த குருவிகள் அவளை நம்பிக்கையோடு அந்த வீட்டில் அவளை தேடியது.

‘நான் சோர்ந்து போக கூடாது.’ நிமிர்ந்து அமர்ந்தான்.

‘திருடன் எங்கையாவது தடயத்தை விட்டு சென்றிருப்பான். இலக்கியாவும் எப்படியாவது ஏதாவது ஒரு தடயத்தை விட்டிருப்பாள்.’ அவன் நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தான்.

‘ஃபிரென்ட் வீட்டுக்கு போகலை. அவள் அலைபேசியை எடுத்து செல்லவில்லை. அலைபேசியில் யாரையும் புதிதாக அவள் பெரிதாக தொடர்பு கொள்ளவில்லை. அவள் தொடர்பு கொண்ட சிலருக்கும் அவளை பற்றி தெரியவில்லை. எல்லா இடங்களிலும் முட்டுக்கட்டை.’ அவன் தன் தாடையை தடவினான்.

‘அவள் எங்கு இருக்கிறாள் என்று கண்டுபிடிக்க ஏதாவது ஒன்று இருக்கும்.’ அவன் அவளோடு தங்கியிருந்த வீட்டை புரட்டினான்.

அவன் கைகளுக்கு ஒரு சின்ன காகிதம் சிக்கியது. அவள் பொது இடத்தில் தொலைபேசி பேசியதற்கான ரசீதை இலக்கியா அவளறியாமல் விட்டுச் சென்றிருந்தாள். அதை தன் ஆள் காட்டி விரலால் நிமிண்டினான் விஜயபூபதி.

 அவன் உதட்டோரம் வெற்றி புன்னகை உதித்தது.

‘இலக்கியாவை கண்டுபிடிக்கறேன். நல்ல நாலு சாத்து சாத்தறேன்.’ அவன் அந்த காகிதத்தை வைத்து அவளை தேட கிளம்பினான்.

அவன் அந்த ரசீதை எடுத்து கொண்டு அவள் பேசிய கடைக்கு கிளம்பினான். அவள் பேசிய தொலைபேசி எண் கிடைக்க அதன்பின் அனைத்தும் மளமளவென்று அரங்கேறியது.

அவள் அந்த வீட்டை நோக்கி செல்லத்தான் கிளம்பினான். ஆனால், ஏதோவொன்று அவனை தடுக்க அவன் தன்னை நிதானித்து கொண்டான்.

“இலக்கியா அவளாகத்தான் போனாள். அவளாக வர வேண்டும்.” அவன் உறுதியாக கூற, வீட்டினர் அனைவரும் அவனிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு வாக்குவாதம் கிளம்ப, “அத்தான் சொல்றது தான் சரி. நம்ம மேல அக்கறை இல்லாமல், அக்கா அவளாத்தானே போனா. அவளா தான் வரணும்.” தன் சகோதரி இருக்கும் இடம் தெரிந்ததும், ஸ்ரீராம் மனதில் மண்டிக்கிடந்த பயம் கோபமாக மாறி இருந்தது.

‘எத்தனை நாள் இலக்கியா வெளியே தங்க முடியும்?’ என்ற எண்ணத்தோடு, அவள் தங்கியிருந்த வீட்டின் பாதுகாப்பை கண்காணிக்க ஒருவரை நியமித்திருந்தான் விஜயபூபதி.

சுமார் ஒரு வாரம் கடந்திருந்தது. இலக்கியா வெளியே உணவு வாங்குவதும், அங்கு எங்கையாவது வேலை தேடுவதுமாக இருந்தாள். நெருக்கடியான இடம். யாரும் முகக்கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளி இல்லை. கொரோனா இருப்பது போல் யாரும் நடந்து கொள்ளவில்லை.

      ஒரு வாரத்தில், இலக்கியா மெலிந்திருந்தாள். அவள் உடலில் சோர்வு. அவள் தலை வின்வின்னென்று வலித்தது. எதையோ இழந்துவிட்ட உணர்வு அவளுள். என்னவென்று தான் அவளுக்கு தெரியவில்லை. ‘நான் விரும்பி எடுத்த முடிவு தானே?’ சுய அலசலில் இறங்கினாள்.

அவள் உடல் எங்கும் வலி. ‘இன்னைக்கு எங்கயும் போக வேண்டாம்.’ சுருண்டு படுத்து கொண்டாள். நேரம் செல்ல செல்ல பசி அவள் வயிற்றை கிள்ளியது.

ஒரு வாரத்தில் அக்கம் பக்கத்தினர் கொஞ்சம் பழகி இருந்தனர். உணவு கேட்டால் கொடுப்பார்கள் தான். கேட்க அவளுக்கு மனம் வரவில்லை.

வீட்டில் இருந்த பிஸ்கேட், பிரெட்டை சாப்பிட எத்தனித்தாள்.

“உவ்வே…” அதில் அவளுக்கு ருசியே தெரியவில்லை. வாசனையை நுகர எத்தனித்தாள். ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை.

‘ஒருவேளை கொரோனாவா இருக்குமோ?’ அவளுக்கு சந்தேகம் வந்தது.

அவள் புதிதாக வைத்துக்கொண்ட, அலைபேசியை தடவி பார்த்தாள். புது எண். வேறுயாரும் இவளை தொடர்ப்பு கொள்ள முடியாது. ஆனால், இலக்கியா தன் பாதுகாப்பிற்காக புது அலைபேசி வாங்கி வைத்திருந்தாள்.

தனிமை அவளை வாட்டியது. ‘பாட்டி எப்படி இருப்பாங்க? தம்பி எப்படி இருப்பான்? அத்தான் பார்த்துப்பாங்க’ உடல் சோர்வில் மனமும் சோர்ந்து கொண்டு அவள் வீட்டை தேடியது.

‘அத்தான் எப்படி இருக்காங்களோ? அத்தான் கிட்ட பேசலாமா?’ அவள் மனம் தவித்தது.

அவள் கைகள் அலைபேசியை எடுத்தது. அவன் எண்களை தட்டியது.

‘அழைக்கவா? வேண்டாமா?’ அவள் மனம் ஒரு நொடி தடுமாறியது. அவள் உடலெங்கும் வலி. இருமல் வர ஆரம்பித்தது. அவள் கண்கள் கலங்கியது.

‘நான் ஏன் விலக வேண்டும். ஆசை கொண்ட அவள் மனம் மெல்ல தடுமாறியது.’ அவள் தடுமாற்றம், துர்காவுக்கு செய்யும் துரோகம் என்று அவள் அறிவு குற்றம் சாட்ட தன் அலைபேசியை தூக்கி எறிந்தாள் இலக்கியா.

இருமல் தொடர்ந்து வர ஆரம்பிக்க, அவள் தொண்டை எரிய ஆரம்பித்தது.

“அத்தான்…” அவள் முனங்க ஆரம்பித்தாள்.

சுவரோடு சாய்ந்து முழங்காலிட்டு அமர்ந்தாள் இலக்கியா. அவள் முகத்தை முட்டோடு புதைக்கும் பொழுது கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலி அவளை அழுத்த, தன் தலையில் படார் படாரென்று அடித்து கொண்டு கதறினாள் இலக்கியா.

‘எனக்கு அத்தானை எப்பவுமே பிடிக்குமே. ஆனால், நான் அத்தான் மேல் இத்தனை உரிமை கொண்டாட இந்த தாலி தான் காரணமா?’ அவள் மனம் காரணம் புரியாமல் தவித்தது.

உடலில் ஏற்பட்ட சோர்வில், தனிமையில் அவள் மனம் அவளுக்கு அப்பட்டமாக தெரிந்தது.

“அத்தான், நான் தப்பு பண்ணிட்டேன். என்னையறியாமல் உங்களை நான் ஏன் மனதில் சுமக்க ஆரம்பித்துவிட்டேன் அத்தான். எனக்கு இது எப்பவோ தெரிந்தாலும், அதை கடந்திரலாமுன்னு நினச்சேன் அத்தான். ஆனால், என்னால் இப்ப முடியலை அத்தான். முடியலை அத்தான்.” முகத்தில் படார் படாரென்று அறைந்து கொண்டு கதறினாள்.

ஏற்கனவே நோய் வாய்ப்பட்ட அவள் உடல் அவள் அழுகையில் பலம் இழக்க ஆரம்பித்தது.

மூச்சு விட அவள் மிகவும் சிரமப்பட்டாள்.

“எனக்கு உங்களை பார்க்கணும் போல இருக்கு அத்தான். எல்லாரையும் நீங்க பார்த்துப்பீங்க அத்தான். ஆனால், உங்களை நான் தானே அத்தான் பார்க்கணும். உங்க கிட்ட பேசணும் அத்தான். உங்கள் மேல் சாய்ந்து கதறணுமுன்னு இருக்கு அத்தான்.” அவள் தன் தலையை பிடித்து கொண்டு விம்மி அழுதாள்.

அவள் வேகமாக அலைபேசியை எடுக்க கைகளை நீட்டினாள். அவள் கால்கள் வலியில் துடித்தது. மீண்டும் எண்களை அழுத்தினாள்.

அவளுக்கு இப்பொழுது மூச்சு விட சிரமமாக இருந்தது. ‘அத்தான்…’ இம்முறை, அவளுக்கு அத்தானோடு துர்காவின் முகமும் வந்தது.

அலைபேசியை வெறித்து பார்த்தாள். ‘இப்பொழுது நான் அத்தானுக்கு அழைத்தால், நான் செய்த அனைத்தும் வீணாகிவிடும். நான் அத்தானுக்கு அழைக்க கூடாது.’ அவள் மனம் தடுமாறினாலும், அவள் சிந்தை தெளிவாக நிற்க, மீண்டும் மறுப்பாக தலை அசைத்து அலைபேசியை வைத்துவிட்டாள்.

அவள் மார்பு மூச்சு விட சிரமப்படுவதை எடுத்து கூறுவது போல் மேலும் கீழும் ஏறி இறங்கியது. “…ஆஹ்… ஆஹ்…” அவள் மூச்சின் இடைவெளி சற்று அதிகமாகி கொண்டிருந்தது.

‘ஆக்சிஜென் லெவல் கம்மி ஆகுமுன்னு சொல்லுவாங்களே. அது இது தானோ?’ அவள் கண்கள் மேலே சொருகியது.

கண்கள் மெல்ல மெல்ல மூட, அங்கு அவளுக்கு விஜயபூபதி தான் தெரிந்தான். ‘எல்லாருக்கும் மரணிக்கும் தருவாயில் யமன் தானே தெரிவான். எனக்கு மட்டும் ஏன் அத்தான் முகம் தெரியுது? அத்தானும், காதலும் தான் என் எமனா?’ அவளுள் அப்பொழுதும் ஒரு கேலி உதிக்கத்தான் செய்தது.

‘எமனையும் என் கால்களால் எட்டி மிதிப்பேன்.’ அவள் படித்த பாரதியின் வரிகள் நினைவு வர, தன் கால்களை உதறினாள். அவள் கால்கள் தான் பலமிழந்து சரியாக செயல்படவில்லை.

ஆனால், அவள் மனமும், சிந்தையும் தைரியமாகத்தான் இருந்தது. ‘எனக்கு முடிவு இப்படி தான் என்றால்… ஆஹ்… இதனால் என் அத்தானின் வாழ்வு நேர்படும் என்றால்… ஆஹ்… இதையும் நான் ஏற்று கொள்ள தயார்.’ சிரமப்பட்டு மூச்சுவிட்டாலும், அவள் எண்ணங்கள் அவனையே சுற்றி வந்தது.

நேரம் செல்ல செல்ல மூச்சு விட அவள் சிரமப்பட்டாலும், அவள் உதடுகள் மட்டும்    “அத்தான்”  என்ற அழைப்பை நிறுத்தவேயில்லை.

அவள் மூச்சுக்கான இடைவெளி மெட்டும் மெல்ல மெல்ல கூடி கொண்டே இருந்தது. ஆனால், அவள் அத்தானுக்கான அழைப்பு மட்டும் அவளுக்கு சுகத்தை தருவது போல் அவள் உடலின் ஒவ்வொரு அணுவையும் நெருங்கி கொண்டே இருந்தது.

சிறகுகள் விரியும்…

Leave a Reply

error: Content is protected !!