YALOVIYAM 18

YALOVIYAM 18


யாழோவியம்


அத்தியாயம் – 18

அத்தனை நாள் அவனிடம் பேசாமல் ஓய்ந்து போயிருந்தவள், அழைப்பு ஏற்கப்பட்டவுடன், “மாறா…” என்றுதான் தொடங்கவே செய்தாள்.

பல நாட்கள் கழித்துக் அவள் குரலைக் கேட்கிறான். அந்தக் குரலில் இருந்த சோர்வை உணர்ந்து, “என்னாச்சு சுடர்? ஏன் ஃபோன் அட்டன் பண்ணலை?” என்று கேட்டான்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை தயக்க நரம்புகள் மட்டுமே ஓடுவது போன்ற ஒரு குரலில், “நீ… நியூஸ் பார்த்திருப்பேல…? அப்புறம்… ஏன் இப்படிக் கேட்கிற?” என்று வலிமிகுந்த குரலில் கேட்டாள்.

அவள் கேள்விக்கு, அவன் பதில் சொல்ல முடியாமல் இருந்தானா? இல்லை, அவனது கேள்விக்கான அவளது பதில் போதுமானதாக இல்லையா? தெரியவில்லை. ஆனால் அமைதியாக இருந்தான்.

அவளிடமும், ‘எப்படிச் சொல்ல?’ என்ற தயக்கம் இருந்தாலும், ராஜாவிடம் சொல்லியதை அப்படியே சொன்னாள்.

உடனே, “ஏன்… என்னமோ நீயே தப்பு… பண்ண…” என்றவனுக்கு, அதற்குமேல் எப்படி? எந்தப் பக்கம் நின்று? எந்த வார்த்தைகளைக் கொண்டு? தேற்றுவது என தெரியாமல் திணறினான்.

“மாறா… மாறா ப்ளீஸ்! நான் தப்பு பண்ணலை. எனக்கு அது நல்லா தெரியும். பட்  ஒரு கில்ட்டி பீல் இருக்குன்னு சொல்றேன்… ” என்று தெளிவு படுத்தியவள், “நாம வேற ஏதாவது பேசலாமே?” என்று தொய்வடைந்து குரலில் கேட்டாள்.

“ம்ம்ம்” என்றாலும்… மனம் கேட்காமல், “வேற ஏதாவது ப்ராபளமா?” என்று கேட்டுப் பார்த்தான்.

வீட்டில் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்லத் தோன்றியது. ஆனால் அவனைப் பொறுத்தவரை லிங்கம் ஊழல் குற்றவாளி. அவன் தந்தையின் இழப்பிற்கு காரணமானவர்.

அவர் பற்றிய பேச்சை, அவனால் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற புரிதலில், “ம்ம்… ஆனா ராஜாண்ணா வந்து என்னையும் அம்மாவையும் அவங்க-கூட கூட்டிட்டு வந்துட்டாங்க?” என சுருக்கமாக முடித்தாள்.

லிங்கம் ஏதாவது பேசியிருக்கலாம் என்று மாறனுக்குப் புரிந்தது. அது, ‘என்ன? ஏது?’ என கேட்கும் மனம் துளியும் வரவில்லை.

அவளுக்காக, தன் அப்பாவிடம்… அம்மாவிடம் பேசியவன்தான்! அதற்காக லிங்கம் பற்றிய பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அது அவளே பேசினாலும்!!

‘ஏன் அப்படி?’ என்ற கேள்விக்கான பதிலாய், பாசத்தையும் காதலையும் சமமாய் பார்க்க, அவனுக்கென்ற தனிப்பட்ட ஒரு நியாயம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

தன் நிலையைப் புரிந்து கொண்டாள் என்ற நிம்மதியில், “ஓ! இப்ப உன் அண்ணன் வீட்லதான் இருக்கியா?” என, அவள் பேசாமல் விட்டதையெல்லாம் கடந்து போய் நின்று ஒரு கேள்வி கேட்டான்.

“ம்ம்”

“சரி இதைச் சொல்லு. ராஜா ஏன் இதெல்லாம் பண்ணான்?” என்று, தன்னை முன்னிறுத்தி ராஜா செய்தவற்றைக் குறித்துக் கேட்டான்.

ஆச்சரியமாய், “உனக்குத் தெரியுமா?” என்றாள். பின், இந்த முறைகேட்டை வெளிக்கொணர்வதற்காக ராஜா செய்த விடயங்கள், அவனுக்கு அதனால் ஏற்பட்ட இழப்புகள் என அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

மேலும், “ஏன் கட்சி வேலை செய்யலைன்னு நிறைய தடவை கேட்டிருக்கேன். இந்த ஸ்கேம் பத்தியே யோசிச்ச-தால, எதுவும் செய்ய முடியலை போல. இப்பதான் புரியுது.

பிடிச்சிதான் பார்ட்டி-ல ஜாயின் பண்ணாங்க. ஆனா, முன்ன இருந்த மாதிரி பேர் இருக்காது போல. எப்படி இதெல்லாம் சரி செய்யப் போறாங்களோ?” என ராஜாவிற்காக வருந்தினாள்.

அதற்கு மேல் கட்சி சார்ந்த விடயங்களைப் பேசுவதில் உடன்பாடில்லை என்பதால், “ம்ம்” என ஒத்துக் கொண்டு, அந்தப் பேச்சிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.

 கூடவே, “இவ்வளவு யோசிச்சி பண்றவனுக்கு… அவனுக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை எப்படிக் கொண்டு போறதுன்னு-ம்… தெரிஞ்சிருக்கும்” என, ராஜா பற்றிய கணிப்பில் பேசி, அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

‘இப்படியே உட்கார்ந்திருந்தா எதுவும் மாறாது’ என ராஜா சொன்னது நியாபகம் வந்ததும், “ம்ம்ம்” என்றவள், “எனக்குத்தான் என்ன பண்ண-ன்னு தெரியலை மாறா?” என்று திடமே இல்லாத குரலில் சொன்னாள்.

“ஏன் அப்படிச் சொல்ற? இந்த ஸ்கேம் பத்தி முதல பேசினது நீயும், அந்தப் பையனும்தான்… அவன்கிட்ட பேசு.  அவனை மிரட்டினதை வெளியே சொல்ல சொல்லு.

இதுக்கு முன்னாடி பயந்திருந்தாலும், இப்ப அவன் சொல்ல நினைக்கலாம் இல்லையா? அதுக்கு நீ ஹெல்ப் பண்ணு” என்று அவளுக்குத் திடமளிக்கப் பார்த்தான்.

“ம்ம்ம் ட்ரை பண்றேன்” என்று உறுதியே இல்லாத குரலில் சொன்னாள்.

“தப்பு பண்ணவங்களுக்கு எதிரா கேஸ் இன்னும் ஸ்டராங் ஆகும்-ல. அதான் சொல்றேன். இப்படி இருக்காத சுடர்… ஏதாவது செய்…” என்று அழுத்தமாகச் சொல்லிப் பார்த்தான்.

“புரியுது. கண்டிப்பா மதிகிட்ட பேசறேன்” என்ற போது, அவள் குரலின் ஒரு ஓரத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை ஒட்டிக் கொண்டிருந்தது.

அதற்குமேல் அவன் எதுவும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அடுத்தடுத்து பேசும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

சட்டென, பேசிக் கொண்டிருந்தவர்களின் அலைபேசி அலைவரிசையில் ஓர் அமைதி அதிக நேரத்திற்கு நிலவியது.

அந்த அமைதியில், ‘எதையெதையோ பேசுகிறீர்களே? என்னைப் பற்றி எப்போது பேசுவீர்கள்?’ என்று காதல் கேள்வி கொண்டிருந்தது.

காதலின் கேள்விக்குப் பதிலாய், “உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று மெதுவாக ஆரம்பித்ததும், “சொல்லு சுடர்” என்றான்.

“உனக்குத் தெரியுமான்னு தெரியலை… உங்க அம்மா-வும் நானும் மீட் பண்ணோம்… பேசணும்னு சொன்னாங்க… அதான்…” என ‘ஏதோ ஒரு ஆறுதல்’ மனம் வேண்டியதால், திலோ பேசியதை சொல்லலாம் என்று நினைத்தாள்.

“தெரியும் சுடர். அம்மா எல்லாம் சொல்லிட்டாங்க” என்று, அவன் வலியை வெளிப்படுத்தாத குரலில் சொன்னான்.

“தெரியுமா?” என்று சொல்லும் பொழுது… ஏமாற்றம் என்றில்லை… ஆனால் ஏதோ ஓர் வலியை அவள் குரல் உணர்த்தப் பார்த்தது.

இத்தனை வருடத்தில் இருவரும் சந்தித்த நாட்கள் குறைவுதானே! குரல் வழியாகத்தானே எல்லா உணர்வுகளும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இப்போது மட்டும் புரியாமல் போகுமா?

புரிந்தது! அவள் வலி தெரிந்தது!! எனவே, “நீயும் சொல்லு” என்றான்.

புருவங்களைச் சுருக்கி, “ம்ன்… என்ன சொல்ல?” என்று கேட்கும் பொழுது, சுடரின் விழிகள் இரண்டும் தடாகம் ஆனது.

“உனக்கு என்கிட்ட என்ன சொல்லணும்னு தோணுதோ… அதைச் சொல்லு” என்றவன் குரல் சுகவீனமாய் ஒலித்தது.

அந்தக் குரலின் உணர்வைப் புரிந்ததாலோ…? இல்லை, தயக்கத்தாலோ…? ஓரிரு நொடிகள் மௌனமாக இருந்தாள்.

பின், “பேசணும்னு கூப்பிட்டாங்க மாறா… நானும் போனேன்… சில கேள்வி கேட்டாங்க…. எனக்குச் சரியா பதில் சொல்ல முடியலை” என்றபோது, அவள் குரல் ஏங்கி ஏங்கி ஒலித்தது.

“ம்” என்ற போது, அவளின் நிலையை நினைத்து ஒரு கண்ணில் லேசாக கண்ணீர் தேங்கியது.

“அவங்க சொன்னாங்க, ‘என் நிலைமை உங்களுக்குப் புரியாது-ன்னு’. பட் எனக்குப் புரிஞ்சது… அவங்களுக்கு உங்க அப்பா-வ ரொம்பப் பிடிக்கும்னு புரிஞ்சது மாறா…”

“ம்ம்” என்ற போது, அப்பாவின் இழப்பை… அம்மாவின் தவிப்பை நினைத்து மற்றொரு கண்ணிலும் கண்ணீர் கட்டியது.

“ஆனா… எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்-ங்கிறதை… அவங்களுக்கு எப்படிப் புரிய வைக்க-ன்னே தெரியலை…??!” என்று பாரமேறிய குரலில் சொன்னாள்.

மனம் உணர்வுகளின் கலனாக இருந்ததால், எங்கே உடைந்து அழுதுவிடுமோ என்ற பயம் மாறனுக்கு வந்தது. அழுதால்… அவளை எப்படித் தேற்ற?? எனவே “ம்ம்ம்” என்று சொல்லி, தன்னைச் சமன்படுத்த எழுந்து நடமாடினான்.

இன்றைய நாள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றவள், “ஒரே நாள்-ல… எல்லாரும் வேண்டாம்னு சொல்றாங்க மாறா… ரொம்பக் கஷ்டமாயிருக்கு” என்று இதயத்தின் பாரத்தை அவனிடம் இறக்கி வைத்தாள்.

நிலவொளியில் நடந்துகொண்டே, “வேற யாரு சொன்னாங்க?” என கேட்டதும், “அம்மா சொன்னாங்க… என்கிட்ட இல்லை. ராஜாண்ணா-கிட்ட…” என்று லதா சொன்னதாக ராஜா கூறிய அனைத்தையும் சொன்னாள்.

அவள் மனம் பட்டிருக்கும்பாட்டை உணர்ந்தவனின் உள்ளம் நிலையில்லாமல் தவித்தது. ‘உன்னை… என்னை… எண்ணி அழுகிறேன்’ என்ற நிலையில்தான் இருந்தான்.

சுடரோ… லிங்கத்தின் எச்சரிக்கை நியாபகம் வந்ததில், “மாறா… எல்லாரும் உன்மேல… கோபமா இருக்காங்க போல… நீ ஃகேர்புல்லா இருக்கணும்…” என ஒருவித பயத்தில் சொன்னாள்.

இரவின் இருளை ஓரளவு போக்கிய நிலவின் வெளிச்சத்தில் நின்றவன், “பார்த்துக்கலாம்” என்று சொன்ன போது, அவன் குரல், ‘இப்பவோ, அப்பவோ’ உடைந்து போகும் நிலையில் இருந்தது.

அவன் குரலின் பேதைமை தெரிந்ததும், “மாறா என்னாச்சு-ன்னு சொல்லு? ஏன் வாய்ஸ் ஒருமாதிரி இருக்கு??” என்று பரிதவிப்புடன் கேட்டாள்.

‘அவளைச் சமாதானம் செய்!’ என்று காதல் நெஞ்சம் உந்தித் தள்ளினாலும், குரல் உடைந்து கொண்டிருப்பதை ஒத்தி போடும் முயற்சியாக ஓசையின்றி நின்றான்.

அவன் அமைதி, ‘நான் கஷ்டப்படறேன்-னு நினைக்கிறானோ?’ என்ற அர்த்தம் கொடுக்க, “மாறா… நான் கவலைப்படறேன்னு நினைக்கிறியா? அப்படி எதுவும் இல்லை. பாரு… நான் இன்னைக்கு அழக்கூட செய்யலை…” என்று கிட்டத்தட்ட அழுவது போல் சொன்னாள்.

என்ன முயற்சி செய்தும் தன்னையும் சமன் செய்ய முடியாமல், அவளையும் சமாதானப் படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். மேலும் குரல் இன்னும் வசத்திற்கு வராததால் அமைதியாகவே நின்றான்.

‘இவனுக்கு என்னாச்சு?’ என பதட்டமானவள், “ஏதாவது பேசு மாறா…இப்படி இருக்காத … ஒருமாதிரி இருக்கு…” என உள்ளம் வறண்டு போன குரலில் சொன்னாள்.

இதற்குமேல் இப்படி இருக்கக் கூடாது என நினைத்தவன், முயன்று குரலை சீர்படுத்திக் கொண்டு, “சுடர் கஷ்டமாயிருக்கா?” என்று கேட்டான்.

வருத்தத்தில் வார்த்தைகளை சீராக கோர்க்க முடியாமல், “இல்லை மாறா… நான் சொன்னேன்-ல… அப்படி… ஏதும்… இல்லைன்னு?” என்று விட்டுவிட்டுப் பேசினாள்.

“இத்தனை வருஷமா பேசியிருக்கேன்… எனக்குத் தெரியாதா?” என்றவன், “சரி… இவ்வளவு நேரம் நீ பேசின… நான் கேட்டேன்-ல?! இப்ப நான் பேசறேன் நீ கேளு…” என்று ஒரு முடிவுடன் சொன்னான்.

“என்ன பேசப் போற?” என்று கேட்டாள்.

“இங்க பாரு சுடர்… எங்க அம்மா, உங்க அம்மா பேசினதை நினைச்சி கவலைப்படாத! ரெண்டு பேருமே…. இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கையை… ஒவ்வொரு வகையில இழந்திட்டு நிக்கிறாங்க.

இந்த நேரத்தில, அவங்ககிட்ட போய்… எங்களுக்காக முடிவெடுங்க-ன்னு சொல்ல வேண்டாம்… சொல்லவும் கூடாது! நாமதான் அவங்களுக்கு சப்போட்டா இருக்கணும்.

நான் இப்படிப் பேசறதுனால, அவங்க எடுத்த முடிவை ஏத்துக்கிட்டேன்னு நினைக்காத… இதைக் கடந்து வர்றதுக்கு அவங்களுக்குக் கொஞ்சம் டைம் கொடுக்கலாம்னு சொல்றேன்” என, இன்றைய தேதியில் அவர்கள் காதலின் நிலையை நிதானமாகச் சொன்னான்.

“ம்ன்?!” என்று சுடரின் குரலில் ஒரு அதிர்வு மட்டும் வந்தது. அதுமட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.

“அப்புறம் சுடர்… இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்துகிட்டு என்னால இருக்க முடியாது! ஏன்னா? இது இதோட முடியற விஷயம் கிடையாது. இன்னைக்கு இது-னா… நாளைக்கு வேற ஏதாவது ஒன்னு இருக்கும்.

யாருக்கும் பயந்துகிட்டு… வேலை பார்க்காம இருக்க முடியாது! ஸோ, இதெல்லாம் யோசிச்சி நீ பயப்பிடாத… புரியுதா?” என்று, பணியிடத்தில் என்றைக்கும் தன் நிலைப்பாட்டைச் சொன்னான்.

அவனைப் பற்றித் தெரிந்திருந்தாலும், அவன் நிலைப்பாட்டைச் சொன்ன விதத்தில் ஓரளவு பயம் குறைந்திருந்தது. ஆனால் காதலின் நிலை பற்றிச் சொன்னது… அதிலிருந்த உண்மை… அவள் உள்ளத்தை ஏதோ செய்தது.

அதன்பின் அலைபேசி அலைவரிசையில் மௌனத்தின் அதிர்வுகள் மட்டுமே இருந்தன. அந்த மௌனத்தில், காதல் ஓவிய காட்சிகள் அனைத்தும் காதலர்கள் இருவரின் கண்களில் தெரிந்தது!

முதல் சந்திப்பிலே, பார்த்தவளை பார்வைக்குள் பத்திரப்படுத்த நினைத்தது  – அவன்!

அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு போனவனை, அட்டை பட நாயகன் போல ரசித்தது – அவள்!

நிறுவனர் சிலையருகே, தன் பெயரை அவள் உதடுகள் உச்சரித்தால், உள்ளம் நச்சரிக்கத் தொடங்கியது – அவன்!

அந்தச் சந்திப்பின் முடிவில் இருவருக்குள்ளும் உண்டான ஈர்ப்பை உணர்ந்தது – அவனும்! அவளும்!

நூலக கட்டிடத்தில் அவளின் செயல்களால், இதயத்தில் பட்டாம் பூச்சிகள் பம்பரம் விளையாடிய நிமிடங்களின் நினைவில் – அவன்!

அதே நூலகத்தில்… அளவாய் குனிந்து அழகாய் சிரித்தவனால், உள்ளத்தில் தட்டான் பூச்சிகள் தடதடத்த நொடிகளின் நினைவில் – அவள்!

அந்தச் சந்திப்பின் முடிவில் இருவருக்குள்ளும் ‘என்னமோ ஆயிற்று’ என உணர்ந்தது – – அவனும்! அவளும்!

கல்லூரி நடைகூடத்தில், ‘நீ எனக்கானவன்’ என்ற உரிமையை எடுத்துக் கொள்ளும் ஆசையில் நின்றது – அவள்!

அதே இடத்தில், ‘நான் உனக்கானவன்தான்’ என்ற உரிமையை கொடுக்கும் ஆவலில் நின்றது – அவன்!

அந்தச் சந்திப்பின் முடிவில் இருவரும் காதல் திருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளத் தயாரானது – அவனும்! அவளும்!

அவனைப் பார்க்க முடியாமல் போனதால், கல்லூரி கட்டிடம் முழுவதும் தேடி அலைந்தது… பிறந்தநாள் வாழ்த்துக்காக அவன் முன் சென்று நின்றது – அவள்!

இது ‘சரிவராது’ என்று காதலை விட்டுச் சென்று… பின், ‘இவள்தான் என் சகி’ என்று திரும்ப வந்து காதலை யாசித்து நின்றது – அவன்!

கடைசியில்… சில வருடங்களுக்கு முன்… பாண்டிச்சேரியில்… வெப்பக் காற்று, வெயில், கடல்அலைகளின் முன் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதல் நினைவில் – அவனும்! அவளும்!

இதோ… இன்றும்… சில வினாடிகளாக… கைப்பேசியில்… குளிர்காற்று, இரவு, நிலவொளியின் பிடியில் பரிதவித்துக் கொண்டிருக்கும் காதல் நிஜத்தில் – அவனும்! அவளும்!

நினைவிலிருந்து மீண்டு… அந்த நிஜத்தை உணர்ந்து, “மாறா… நான் ஒன்னு கேட்பேன். எனக்காக செய்வியா?” என்று மிருதுவான குரலில் கேட்டாள்.

அந்தக் கேள்விக்கு… அவளின் தற்போதைய நிலைக்கு… ‘உனக்காக என்ன வேணாலும் செய்வேன்’ என்று சொன்னால், அவள் உள்ளம் ஓரளவாவது சரியாகும் என தோன்றியது.

ஆனால் அப்படிச் சொல்லும் நிலையில் தான் இல்லை என்பதால், “என்ன வேணும்?” என்று மட்டும் கேட்டான்.

“எனக்காக ஒரு சாரீ வாங்கியிருந்தே-ல?! எனக்கு அது வேணும்? எப்படியாவது எனக்கு கிடைக்கிற மாதிரி பண்ண முடியுமா?”

“எதுக்கு இப்ப இந்தமாதிரி கேட்கிற? நேர்-ல பார்க்கிறப்போ கொடுக்கிறேன்”

இதுவரை சூழ்நிலையறிந்து பேசியவள், “எப்ப பார்ப்போம்? எனக்கு இப்பவே பார்க்கணும் போல இருக்கு மாறா…” என அழும் மனதின் தேவையை அடம்பிடிக்கும் குரலில் சொன்னாள்.

‘என்ன செய்ய? இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கவே இல்லையே?’ என அவன் மனம் வாய்மூடி அழுதாலும், “கண்டிப்பா பார்க்கலாம்… பார்க்காம எங்கே போயிடப் போறோம்… சொல்லு?” என்று, அவளையும்… தன்னையும் தேற்றும் குரலில் சொன்னான்.

மேலும், “முதல இதைப் புரிஞ்சிக்கோ. இது சரிவராதுன்னு நான் சொல்லலை… இதெல்லாம் சரியாகிறதுக்காக… காத்திருக்கலாம்-னு சொல்றேன்… ம்ம்ம்?” என காதலையும் காதலியையும், வழி நடத்தும் குரலில் சொன்னான்.

“மாறா…” என்று, அந்தப் பெயர் உச்சரிப்பில் தன் மொத்த காதலையும் காட்டுவது போல் அழைத்தாள்.

உரிமையுடன் அவள் விளிக்கும் இந்த அழைப்புதானே… அவன் காதல் வாழ ஆகாரமும்… ஆதாரமும்…  “மாறாதான்… உன் மாறாதான். அது என்னைக்கும் மாறாது” என ‘தன் பெருங்காதலின் முழுவடிவமும் அவள்தான்’ என்பது போல் பேசினான்.

பின், “லேட்டாயிடுச்சி. தூங்கு” என்றவன்… சேர்ந்து வாழப் போகும் நாள் அருகில் இல்லை என்பதனால்… அவள் திரும்பச் சொல்லிவிடக் கூடாதே என்ற அச்சத்தில், “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்றான்.

‘சொல்லவாது செய்யலாமே?’ என்ற ஆசை சுடருக்கு இருந்தது. ஆனால் தான் சொன்னால் நிச்சயம் வருத்தப்படுவான் என தெரியுமென்பதால், “இனிமே பேசாம இருக்க மாட்டேன் மாறா. நீயும் தூங்கு…” என்று ஆறுதலாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

யாழோவியத்தின் ஒரு பாதியான ஓவியச்சுடர்…

பேசி முடித்தவுடன், கதவில் சாய்ந்து நின்றவள் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்து கொண்டாள்.

லிங்கம் கைது செய்யப்படும் காட்சிகள் கண்முன் வந்தன.

தன் அப்பா… ஒரு ‘நல்ல அரசியல்வாதி’, ‘நல்ல மனிதர்’ என்ற பிம்பமெல்லாம் எப்போதோ சுடருக்குள் உடைபட்டுப் போயிருந்தது.

இன்று அவர் பேசிய பேச்சில்… தன் விருப்பத்திற்கு குறுக்கே நின்ற விதத்தில்,  ‘பாசமான அப்பா’ என்ற பிம்பமும் சுக்கு நூறாய் உடைந்து போனதில், மகளாய் ஏக வருத்தம் வந்திருந்தது.

மகிழ்ச்சியோ… துக்கமோ… அவள் பகிர்ந்து கொள்வது மாறன், ராஜா என்ற இருவரிடம்தான். அவர்களிடம் கூட இதைச் சொல்லி அழ முடியாது. அப்படி ஒரு சூழ்நிலையில் அவளை நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.

வருத்தம் மிகுதியில் கருவிழிகள் இரண்டும் கண்ணீரில் மிதக்க ஆரம்பித்தன.

அப்படியே தரையில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

அறையின் தனிமையில் ஓரிரு நொடிகள் அப்படியே அசையாமல் படுத்திருந்தாள்.

‘இந்தக் காதலின் நிலையென்ன?’ என்ற கேள்விக்கு, தொடுகின்ற தூரத்தில் அது இல்லையோ? என்ற மற்றொரு கேள்வியே பதிலாக வந்ததில், தேங்கிய கண்ணீர் துளித்துளியாக கண்களின் ஓரங்களில் வழியே வடிந்து… தரையில் வீழ்ந்தது!

அவள் அழுகின்றாள்!!

யாழோவியத்தின் மறுபாதியான யாழ்மாறன்…

பேசி முடித்தவன் கைபேசியை வைத்துவிட்டு, வீட்டு வளாகத்திற்குள் இருந்த குழாயில் தண்ணீர் திறந்துவிட்டு, முகத்தில் வாரி வாரி அடித்துக் கொண்டான்.

அப்படியே முழங்கையாலே முகத்தை துடைத்து, அங்கே போடப்பட்டிருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்தவன் மனம், ‘உடனே அவளைச் சந்திக்க முடியுமா?’ என யோசிக்க ஆரம்பித்தது.

இந்த முறைகேடு வழக்கினாலோ… இல்லை பொதுவாகவோ… ஆளும் மற்றும் எதிர்கட்சி ஆட்கள் தன்மேல் அதிருப்தியுடன் இருப்பார்கள் என்று தெரியும்.

ஆதலால், தான் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் கவனமாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு இருந்தது.

மேலும் அம்மாவைப் பற்றி யோசித்தே ஆக வேண்டும். அவர் இருக்கும் மனநிலையில்… சுடரைச் சந்தித்து, இன்னும் அவர் மனதைக் கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணம் வலுவாக இருந்தது.

உடனே அவளைச் சந்திக்கும் சூழ்நிலையில் தானில்லை என்று புரிந்தது. பிறகுதான் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

இரவின் சூழலில் ஒருசில வினாடிகள் அப்படியே அசையாமல் இருந்தான்.

அந்த இடம்… அந்த மூங்கில் நாற்காலி… அப்பாவுடன் அங்கே பேசியது, விளையாடியது… என எல்லாம் சேர்ந்து கொண்டு, அவரை நிரம்ப தேட வைத்தது.

அந்தத் தேடுதலின் வெளிப்பாடாய், அவன் கண்களில் கண்ணீர் தேங்கியது. அப்படியே மூங்கில் நாற்காலியின் பின்புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

இரவின் தனிமையில் சிலபல வினாடிகள் அப்படியே இருந்தான்.

‘என்னை என்ன செய்யப் போகிறாய்?’ என்ற காதலின் கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்ல முடியாமல் போனதில்.… இறகின் மேல் இமயத்தை வைத்தது போன்ற பாரத்தை… அவன் இதயம் எங்கிலும் கொடுத்தது.

அந்த பாரமானது… தேங்கிய இருந்த கண்ணீரை, அவன் விழி ஓரங்களின் வழியே வழிந்தோடச் செய்தது!

அவனும் அழுகின்றான்!!

காதலர்களின் இந்தக் கண்ணீர் எதற்காக?… ‘நாளை எப்படியோ?’ என்ற காரணத்தினால், காதலின் கேள்விகளுக்கு அவர்களால் சரியாகப் பதில் சொல்ல இயலவில்லை அல்லவா? அதற்காக!

ஆம்! நாளை எப்படியோதான்!

என்றைக்கு…? எப்பொழுது…? எப்படிச் சேர்வார்கள்…? என்று தெரியாததால், நாளை எப்படியோதான்!

லதா, திலோ… என்ற இரு பெண்களின் மனம் மாறுமா என்று தெரியவில்லை என்பதால், நாளை எப்படியோதான்!

மேலும் அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாததால், நாளை எப்படியோதான்!

ஆனால் ‘நாளைகள்’ எப்படி இருந்தாலும், இவர்களின் இந்தக் காதல் மாறப் போவதில்லை! மறையப் போவதில்லை! குறையப் போவதில்லை!

ஆக! தூரத்தில் இருந்தே காதலிக்கப் போகிறார்களா? என்ற கேள்வி கேட்டால், இல்லை… இல்லை… தூரங்களையெல்லாம் காதலால் நிரப்பப் போகிறார்கள் என்று பதில் சொல்லலாம்!

சரி! இவர்களின் நிலைப்பாடு புரிகிறது. ஆனால் காதலின் நிலையென்ன?! அதாவது வெற்றியா, தோல்வியா என்ற கேள்வி வருமல்லவா? அதற்குப் பதில் என்ன?!

பொதுவாகத் திருமணத்தில் முடிந்தால்தானே வெற்றி பெற்ற காதல்!?! அப்படியென்றால்… இது தோல்வியைத் தழுவிய காதலா?

இல்லை, இல்லவே இல்லை! மணமேடை பார்த்தால்தான் காதல் முழுமையடையுமா என்ன? காதலர்கள் மனநிலை மாறாமல் இருந்தாலும் முழுமையடையும்தானே!!

அப்படிப் பார்த்தால்… இந்தக் காதல் வெற்றி பெற்ற காதல்தான்!

காதல் வெற்றியெல்லாம் சரி! ஆனால் சேர்ந்திருப்பதுதானே காதலர்களுக்கு அழகு. இவர்கள் இருவரும் இப்படி இருந்தால், அழகேது? என்ற வினா எழுமல்லவா? அதற்கு விடை?!

சமுத்திரத்துக்கு… ஆழ்கடல் முத்துக்கள் மட்டுமா அழகு? கரையோர கிளிஞ்சல்கள் கூட ஏதோ ஒரு வகையில் அழகு கொடுக்குமே! அப்படிப் பார்த்தால்… இந்தக் காதலர்களும், இவர்களின் காதலும் ஏதோ ஒரு வகையில் அழகுதான்!!

கடைசியாக, இது காதலா? என்று மிகப் பெரிய கேள்வி கேட்டால், இதுதான் காதல் என்று ஆணித்தரமாகப் பதில் சொல்ல முடியாவிட்டாலும், இதுவும் காதல்தான் என அமைதியாகச் சொல்ல முடியும்.

சுருக்கமாக… இது வண்ணங்களால் வரையப்பட்ட காதல் ஓவியம் அல்ல! யாழ்மாறன், ஓவியச்சுடர் என்ற காதலர்களின் கண்ணீரால் வரையப்பட்ட யாழோவியம்!!

இருவரின் கண்ணீர் மட்டும் கிடையாது. இன்னும் நிறைய பேரின் கண்ணீரால் எழுதப்பட்டது.

காரணம்? ஓர் ஊழல்!

லிங்கம் என்னும் அரசியல்வாதியின் ஓர் ஊழல்! உரிமையாய் இருந்த உறவுகளையெல்லாம் இப்படி ஊசலாடச் செய்திருக்கிறது!!

அவரின் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக நடத்தப்பட்ட மரணங்களினால்… எவ்வளவு இழப்புகள்? எத்தனை வேதனைகள்?

ராஜா… வாழ வேண்டிய ஓர் அழகான வாழ்க்கையை கண்முன்னே இழந்த துயரத்தில் வருந்திக் கொண்டிருக்கிறான்.

திலோ… ‘தான், மகன், கணவர்’ என்று சிறுகூடாய் வாழ்ந்த வாழ்க்கையில், கணவரை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

லதா… இப்படிபட்ட  ஒருவருடன் இத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கிறோமே? என்ற வெறுப்பு… வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறார்.

மாறன்-சுடர்… நம்பிக்கையோடு காதலின் கைப்பிடித்து நின்றாலும், அந்தக் காதல் கேட்கும் கேள்விக்கு நம்பிக்கையாகப் பதில் தர முடியாமல் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி இங்கே… லிங்கம் என்ற ஒரு நேர்மையற்ற அரசியல்வாதியின் செயல், இத்தனை அன்பு நெஞ்சங்களை அரற்ற வைத்திருக்கிறது.

வாழும் சமுதாயத்தில் கூட… அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் மரணங்களின் பின்னாலும், இது போன்ற அன்பு நெஞ்சங்கள் இருக்கத்தானே செய்யும்?! அவைகளும் இவர்களைப் போல அரற்றிக் கொண்டுதான் இருந்திருக்குமோ?!

இருந்திருக்கலாம்! ம்ம்ம்!!


Dears ,
Few words…
இந்தக் கதை… நல்ல தொடக்கம்… நேர்கோட்டில் பயணிப்பது… நிறைவான முடிவு… என்று முந்தைய கதைகளைப் போலிருக்காது.
வேறு எந்தக் கதைக்கும் இந்தமாதிரி கேட்கலை. என்னமோ இந்தக் கதைக்கு கேட்கணும்னு தோணிச்சி, so கேட்கிறேன்.
கதையின் முடிவு… பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்பதைத் தாண்டி, கதையோடு பயணித்த அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்ல முடியுமா?
Just a request. மற்றபடி உங்கள் விருப்பம்.
நிறைய பேசணும்னு நினைச்சேன். Even இது scam-based story-ன்னு சொன்ன episode-ல கூட. But I am less expressive . So முடியலை.
அடுத்த கதைக்கான கருவும், தலைப்பும் ready. But, 3 – 4 months எடுக்கும் முழுதாய் எழுதி முடித்து வருவதற்கு. 
So thank you so much for the love and support. take care… bye!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!