kiyaa-25

kiyaa-25
கிய்யா – 25
துர்கா அறைக்குள் முடங்கி கிடந்தாள். அன்று இலக்கியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் அவள் வெளியே செல்லவில்லை.
‘என் காதல் ஏன் தோற்றது?’ என்ற கேள்வி அவளுள். அவனை இழந்தன்று பூபதியை நினைக்கும் பொழுது அழுகை வந்தது. இன்று அழுகை எல்லாம் வரவில்லை. இருந்தாலும் நெஞ்சோரத்தில் ஒரு வலி.
‘பூபதியை நினைக்கும் பொழுதெல்லாம், அவோனோடு இலக்கியாவும் வந்துவிடுகிறாள்.’ இப்படி சிந்திக்கும் பொழுது அவளுக்கு இலக்கியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தினம் நினைவு வந்தது.
இலக்கியா நிறைய பேசினாள். ஆனால், துர்காவின் மனதில் எதுவும் பதியவில்லை. துர்காவின் செவிகளில் ஒலித்து கொண்டிருந்தது எல்லாம் இலக்கியாவின், ‘அத்தான்… அத்தான்…’ என்ற அழைப்பு மட்டும் தான்.
‘அதை என்ன சொல்வது? ஒரு பெண் இப்படி இருப்பாளா? அவன் திட்டினாலும் விலகாமல், அவனுக்காக தன் வாழ்வை தியாகம் செய்து, அதன் பின் உயிரை கூட தியாகம் செய்யும் அளவுக்கு. அது காதலா? இல்லை நன்றி கடனா? இல்லை அன்பா?’ இலக்கியாவின் வெளிப்பாட்டை அவளால் கணிக்க முடியவில்லை.
‘என் காதல் குறைவில்லை. அது தோற்கவுமில்லை. ஆனால், இலக்கியாவின் அன்பு அபரீதமானாது. அது ஜெயித்துவிட்டது போலும்’ அவள் முகத்தில் விரக்தி புன்னகை.
‘நான் பெரிதாக எந்த தப்பும் செய்யவில்லை. ஆனால், இந்த நிலையில் விஜயபூபதியை யார் திருமணம் செய்து கொள்ள முடியும் . என்னைவிட்டால், அவனுக்கு யார் இருக்கிறார்கள்? என்ற மமதை என்னுள் ஒரு நொடி வந்தது நிஜம் தானே?’ அவள் கண்களில் நீர்த்துளி.
‘அந்த என் ஒரு நொடி சிந்தனைக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது தான் எண்ணம் போல் வாழ்வா?’ அவள் விழியோர நீரை துடைத்து கொண்டு மெலிதாக புன்னகைத்து கொண்டாள்.
அவன் அறையின் கதவு தட்டப்பட, “நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க.” குமரன் கண்டிப்பான குரலில் கூறினார்.
“அப்பா…” அவள் இடைமறிக்க, “வீட்டில் இருக்கிறதும், எங்களை அவமான படுத்திட்டு வெளிய போறதும் உன் விருப்பம். உன்னை மீட்டு கொள்ள உனக்கு பல மாசம் கொடுத்தாச்சு. காதல் நிறைவேறாம போறது, கல்யாணம் நிக்குறதெல்லாம் ஒரு சாதராண விஷயம்.” அவர் கண்டிப்போடு கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
***
அதே நேரம், இலக்கியா தோட்டத்து வீட்டில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு தனிமை தேவைப் பட்டிருந்தது.
‘அத்தான்…’ அவளின் அழைப்பு அவள் செவிகளுக்கே கேட்டது. அதில் இருக்கும் அன்பையும், அதன் பின் இருக்கும் பல கதைகளையும் காரணங்களையும் ஆராய அவள் மனம் விரும்பவில்லை.
அவள் மனம் துர்காவை தான் சுற்றிவந்தது. ‘நான் அவளுக்கு இப்பொழுது துரோகம் செய்து கொண்டிருக்கிறேன். இதிலிருந்து எப்படி வெளியே வருவது?’
‘குற்ற உணர்ச்சிலிருந்து வெளியே வந்தால் போதும்’ அவள் மனம் எடுத்துரைக்க, ‘இந்த வாழ்வில் இருந்து வெளியே வா’ என்று அவள் அறிவு கட்டளையிட்டது.
அறிவின் சொற்படி நடக்க அவள் விழைந்தாலும், மனம் தடுமாறியது. ‘அத்தானும், துர்காவும் இணைந்து வாழ்வதை கண்டு ரசிக்கும் அளவுக்கு நான் சகிப்புத் தன்மை கொண்டவள் இல்லை’ அவள் மனதோடு துளிர்த்த அன்பு, இப்பொழுது முரண் செய்தது.
‘எனக்கு முன்பும் அத்தானை பிடிக்கும் தான். ஆனால், இந்த கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப பிடித்து தொலைத்துவிட்டது.’ அவள் முகத்தை சுளித்து கொண்டாள்.
அப்பொழுது பாட்டியின் அரவம் கேட்க, அவள் கவனம் அங்கு திரும்பியது. பாட்டி இவளை கண்டும் காணாதது போல் எதிர்பக்கம் மரத்தில் சாய்ந்து அமர்ந்துகொண்டிருந்த விஜயபூபதியிடம் சென்றார்.
‘நான் இந்த பாட்டியை எவ்வளவு பார்த்துக் கொண்டாலும், பாட்டிக்கு பேரன் மேல் தான் பாசம் அதிகம்.’ உதட்டை சுளித்து கொண்டு வீட்டிற்குள் முடங்கி கொண்டாள் இலக்கியா.
“கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பி கொண்டு பல நாள் கழித்து இலக்கியாவை பார்த்த சந்தோஷத்தில் குருவி அவளை தீண்ட, அவள் மனமோ தன்னவனை தேடியது.
வீட்டிற்குள் முடங்கி கொள்ள எத்தனித்த அவள், “கிய்யா… கிய்யா…” என்ற சத்தத்தில் தன்னை மறந்தாள். அந்த சத்தம் அவள் மனதை தொட்டு அவள் உணர்வை தூண்டியது. வழி தெரியாத அவள் அன்பு, வழி தேட துணிந்தது.
“கிய்யா… கிய்யா…” குருவிகளின் சத்தம், தன்னவனை மட்டுமே அவளுள் நிரப்ப தன் எண்ணங்களை பின்னே தள்ளிவிட்டு, ஜன்னலோரமாக தலையை நீட்டி அவனை பார்த்தாள்.
அவள் இதழ்கள் அவனை அழைக்க மறந்தாலும், அவள் இதயம் ‘அத்தான்… அத்தான்…’ என்றே அழைத்தது.
குருவிகள் அவர்களுக்கு இடையே, “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்ப, அவன் கண்களும் அவளைத் தான் தேடியது. அவன் கண்கள், அவள் விழிகளில் தெரியும் அன்பை பார்க்க துடித்தது.
அவன் தன் பார்வையை அவளை நோக்கி செலுத்த, அவன் விழிகள் அவள் தேடலை கண்டுகொண்டது. ‘இவ தான் என்னை விட்டுட்டு போகிற ஆளா?’ அவன் முகத்தில் ஏளன சிரிப்போடு கொஞ்சம் கோபம்.
“விஜய்…” பாட்டியின் அழைப்பில் அவர் வருகையை உணர்ந்தவன், “பாட்டி…” சடாரென்று எழுந்து நின்றான்.
பாட்டி அருகில் இருந்த திண்டில் அமர்ந்து கொண்டு, கை காட்டி அவனையும் அவர் பக்கத்தில் அமரச் சொன்னார்.
“விஜய்…” அவர் நிதானமாக அழைக்க, “இலக்கியவுக்காக பேச வந்தீங்கனா என்கிட்டே பேசாதீங்க பாட்டி. புருஷன் பொண்டாடிகுள்ள இருக்கிற பிரச்சனையை அவங்க தான் பேசி சரி செய்துக்கணும் பாட்டி. சமரச பேச்சு வேலைக்கு ஆகாது பாட்டி.” அவன் கறாராக கூற, அவர் சிரித்து கொண்டார்.
“நான் இலக்கியாவை பத்தி பேச வரலை விஜய். உன்னை பத்தி தான் பேச வந்தேன்.” அவர் கூற, அவனிடம் மௌனம்.
தன் பாட்டியை கூர்மையாக பார்த்தான். பாட்டி பேசட்டும் என்று அவன் அமைதி காத்தான்.
“அந்த பொண்ணை நினைச்சிட்டு இருக்கியா விஜய்?” அவர் கேட்க, “எந்த பெண்ணை?” என்று எதுவும் அறியாதவன் போல் உதட்டை மடித்து கேட்டான் விஜயபூபதி.
“பேராண்டி… உன் வேலையை என்கிட்டயே காட்டுற பார்த்தியா?” அவர் சிரித்தார்.
“நீ மறந்த மாதிரி நடிச்சாலும், உனக்கு வலிக்காத மாதிரி சிரித்தாலும் நீ அந்த பொண்ணை மறக்கலை. ஏதோவொரு குற்ற உணர்ச்சி உன்கிட்ட இருக்கு. அதனால், தான் உன்னால் இலக்கியா கிட்ட வெளிப்படையா பேச முடியலை.” மற்றவர்கள் பிடித்திராத நாதத்தை அவர் பிடித்துவிட, அவன் கைகள் இறுகியது. அவன் கண்கள் கலங்கியது.
நொடிப்பொழுதில் தன்னை சுதாரித்து கொண்டான் விஜயபூபதி.
தன் பேரனின் முகமாற்றத்தைக் கூர்மையாகப் பார்த்தார் பாட்டி.
“உங்க அப்பா மிரட்டலுக்கு மட்டும் பயந்து நீ துர்காவை ஒதுக்கி வைக்கலைனு எனக்கு தோணுது. உங்க அப்பா, அப்படி ஒன்னும் இலக்கியா வாழ்க்கையை திராட்டில் விட்டிருக்க மாட்டான்.” அவர் யோசனையாக நிறுத்தி, மீண்டும் தொடர்ந்தார்.
“உங்க அப்பா கொஞ்சம் முரடன் தான். கோபத்தில் என்ன வேணுமின்னாலும் செய்வான் தான். ஆனால், இலக்கியாவுக்கு எதிரா எதுவும் செய்யமாட்டாங்கிறது என் நம்பிக்கை.” பாட்டி பேரனை பார்த்தபடி கூற, அங்கு மீண்டும் அமைதி.
சில நிமிட அமைதிக்கு பின் தன் மனதை திறந்தான் விஜயபூபதி.
“எனக்கு வலியே இல்லைன்னு நான் சொல்ல மாட்டேன் பாட்டி. ஆனால், உண்மையில் எனக்கு இப்ப வலி இல்லை பாட்டி. நான் துர்காவுக்கு துரோகம் பண்ணிட்டனேனோ எண்ணம் எல்லாம் எனக்கு இல்லவே இல்லை.”
“வலிக்க வலிக்க நான் எடுத்த முடிவு பாட்டி. அப்ப, வலிச்சுது பாட்டி. ஆனால், நான் அந்த முடிவை விரும்பித்தான் எடுத்தேன். துர்காவின் நல்லதுக்காத்தான் எடுத்தேன்.” அவன் கூற, பாட்டி அவனை நம்பாமல் பார்த்தார்.
“பாட்டி, உங்க கிட்ட நான் சில விஷயங்கள் சொல்றேன். இது அப்பாவுக்கு தெரியும்.” அவன் பீடிகையோடு ஆரம்பிக்க, பாட்டி வரப்போகும் செய்தியின் வீரியம் அதிகமாக இருக்கும் என்று கணித்தவர் போல் நிதானமாக தலை அசைத்தார்.
ஆழ மூச்சு எடுத்து கொண்டான் விஜயபூபதி. ‘நான் எங்கும் மனதை தளர விட கூடாது. நான் இலக்கியாவின் கணவன். துர்காவுக்கான என் சின்ன வருத்தம் கூட, நான் இலக்கியாவுக்கு செய்யும் துரோகம்.’ என்பது போல் அவன் தன்னை சரி செய்து கொண்டான்.
“காதல் கல்யாணத்தில் முடியணும். ஆனால், துர்கா அவ குடும்பத்தை இழந்தோ, இல்லை துர்கா அவ குடும்பம் கிட்ட இருந்து பிரிந்தோ இந்த கல்யாணம் நடக்கணும்னு நான் ஒருநாளும் நினைச்சதே இல்லை பாட்டி.” அவன் வார்தைகள் இயல்பாக வந்து விழுந்தாலும் அவன் கண்களில் அத்தனை வலி.
“துர்காவோட அப்பா என்னை பத்தி டாக்டர்ஸ் கிட்டயும் பேசிருக்காரு. என் கிட்டையும் தனியா பேசினார் பாட்டி.” அவன் கூறியதில், பாட்டியின் கண்கள் சுருங்கியது.
“நான் அவரை தப்பு சொல்ல மாட்டேன். அவர் பொண்ணோட வாழ்க்கை இல்லையா?” அவன் புன்னகைத்து கொண்டான்.
“என் பொண்ணு உங்களுக்கு சேவை செய்யணுமான்னு கேட்டார் பாட்டி. அவர் கேள்வி தப்பில்லை.” அவன் நிதானித்தான்.
“நான் துர்கா அப்பா கிட்ட நம்பிக்கையா சொன்னேன் பாட்டி. எனக்கும் வயசாகலை. துர்காவுக்கும் வயசாகலை . நான் திரும்பவும் எழுந்து நடப்பேன். கொஞ்சம் நாள் காத்திருங்க. எல்லாம் சரியானதும், கல்யாணத்தை வச்சிக்கலாமுன்னு சொன்னேன் பாட்டி” விஜயபூபதி சற்று தடுமாறினான்.
தன் பேரன் எதையோ சொல்ல தயங்குவது போல் தெரிந்தது. ஆனால், தனக்கு தெரிந்தே ஆக வேண்டும் என்பதால் மௌனமாக காத்திருந்தார் பாட்டி.
“எழுந்து நடந்தா மட்டும் போதுமான்னு துர்காவோட அப்பா கேட்டாங்க பாட்டி. அந்த வார்த்தை…” அவன் கண்கள் கலங்கியது.
“இந்த மாதிரி விபத்து ஆகிட்டா, குழந்தை எல்லாம் பிறக்காதுனு சொன்னார் பாட்டி.” அவன் கூற, “லூசா நீ. எவன் சொன்னது அப்படி. அபப்டி எல்லாம் இல்லை. இப்ப மருத்துவம் எவ்வளவு வளர்ந்திருச்சு?” பாட்டி இவன் கூற்றில் படபடத்தார்.
“தொண்ணுற்று ஒன்பது சதவீதம் எந்த பிரச்சனையும் இல்லை பாட்டி. இது எனக்கும் தெரியும். ஆனால், நான் நடப்பேன். துர்க்காவை பார்த்துப்பேன்னு நம்பிக்கை கொடுக்க முடிந்த என்னால், இந்த விஷயத்தில் நம்பிக்கை கொடுக்கவே முடியாதே பாட்டி. துர்கா அப்பா சொல்ற மாதிரி ஆகிருச்சுனா?” அவன் உடல் நடுங்கியது.
“அது நான் துர்காவுக்கு செய்யுற பெரிய துரோகம் இல்லையா?” விஜயபூபதி கேள்வியாக நிறுத்தினான்.
“துர்கா என்னை உடனே கல்யாணம் செய்யணும்னு சொல்றா. நான் இதை எல்லாம் சொல்லி அவளுக்கு எப்படி புரிய வைக்கிறது? புரிய வைத்தாலும், எனக்கு குழந்தை எல்லாம் வேண்டாம். நீ போதுமுன்னு பிடிவாதம் பண்ணுவா.” அவன் முகத்தில் விரக்தி புன்னகை.
“நான் இப்படி மறுபடியும் நடப்பேன் அப்படிங்கிறதே சந்தேகமா இருந்தது. என்னை காதலித்த ஒரே பாவத்துக்கு துர்காவுக்கு எல்லா தண்டனையும் கொடுக்க சொல்றீங்களா பாட்டி?” அவன் அங்கிருந்து எழுந்து நடந்து தன்னை சரி செய்து கொண்டான்.
“நான் துர்கா அப்பாவை தப்பாவே நினைக்கலை பாட்டி. அவர் பொண்ணு வாழ்க்கை இல்லையா?” அவன் கேட்க, பாட்டி ஆமோதிப்பாக தலை அசைத்தார்.
“அவர் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு பிறகு, நான் துர்கா அப்பா கிட்ட மேலும் பேசவேயில்லை. கடைசி முயற்சியா என்னை பார்க்காமல் என் கிட்ட பேசாமல் துர்கா ஒரு நாள் கூட இருக்கமாட்டானு சவால் விட்டேன். துர்காவை இழந்து விடக்கூடாதுன்னு தவிப்பு மட்டும் தான் எனக்கு.” அவன் முகத்தில் சுளிப்பு. சலிப்பு.
“ஒரு நாள் என்ன அவளை உங்க கூட மூணு நாள் கூட பேசவிடாம இருக்க வைக்க என்னால் முடியுமுன்னு சவால் விட்டார் துர்காவின் அப்பா. நான் கொஞ்சம் அதிர்ச்சியா தான் பார்த்தேன். என் மகளின் மனசை என்னால் மாத்த முடியும், உங்க குறுக்கீடு இல்லாமல் இருந்தானு சொன்னார் துர்காவோட அப்பா.” அவன் பெருமூச்சு விட்டான்.
“மூணு நாள் இல்லை, ஐந்து நாள் துர்கா என் கூட பேசவேயில்லை.” அவன் கூற, “ஒருவேளை துர்காவை அடிச்சி… அவளை ரூம்ல பூட்டி வச்சி… அவள் மொபைலை பிடுங்கி வச்சி…” என்று பாட்டி படபடத்தார்.
“பாட்டி, துர்கா அப்பா குமரன் வில்லன் இல்லை. நல்ல அப்பா. நீங்க அவரை வில்லன் ஆக்கிருவீங்க போலையே” விஜயபூபதி சிரித்தான்.
“இருந்தாலும் உனக்கு ஐந்து நாள் போதுமா துர்கா வேண்டாமுன்னு முடிவு பண்ண?” என்று பாட்டி விடாமல் கேட்டார்.
“துர்கா வேண்டாமுன்னு முடிவு பண்ண ஐந்து நாள் இல்லை இந்த ஜென்மமே பத்தாது பாட்டி. ஆனால், அவ நல்லாருக்கணும்னு முடிவு பண்ண ஐந்து நொடி போதும் பாட்டி.” அவன் கூற, பாட்டி தன் பேரனின் குணத்தில் மெய்சிலிர்த்து போனார்.
“ஐந்து நாளுக்கு அப்புறமும் துர்காவோட அப்பா வந்தாங்க. என் பெண்ணை நான் எப்படியோ பேசி இங்க வரதை தடுத்திட்டேன். நீங்க அவளுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினச்சா விலகிடுங்கன்னு சொன்னார். நீங்க இப்படியே விலகி நின்னுட்டா, நான் அவள் மனசை முழுசா மாத்திடுவேன்னு சொன்னார்” அவன் பாட்டியை பார்த்தான்.
“துர்கா அப்பா என்னை மிரட்டலை. நான் அவர் பொண்ணுக்கு வேண்டாமுன்னு என்னிடம் கெஞ்சினார்.” அவன் முகத்தில் கசப்பான உணர்வு.
“துர்கா உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நான் அந்த வருத்தத்திலே இறந்திடுவேன்னு சொன்னார் பாட்டி. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா துர்கா அப்பாவும் இல்லாமல், குழந்தையும் இல்லமால் நோயாளி கணவனோடு கஷ்டப்படுவான்னு சொன்னார் பாட்டி.” அவன் முகத்தில் சொல்லிலடங்கா வேதனை.
“நம்மால் நாலு பேரு வாழனும். யாரும் சாக கூடாது. வருத்தம் கூட படக்கூடாது பாட்டி. துர்காவுக்கு வருத்தம் தான். ஆனால், அந்த வருத்தம் அவளுக்கு நல்லது தானே? மருந்து மாதிரி” அவன் தன் பாட்டியின் முன் மண்டியிட்டான்.
அவர் கைகளை பிடித்து தன் கைகளுக்குள் புதைத்து கொண்டான். “நான் துர்காவுக்கு துரோகம் பண்ணலைன்னு நம்புறேன் பாட்டி. நான் துர்க்கா விஷயத்தில் தப்பு பண்ணலையே பாட்டி?” உறுதியாக ஆரம்பித்து, அவன் பரிதவிப்போடு கேட்டான்.
அவர் அவன் முடி கோதினார். “துர்கா விஷயத்தில் நீ எந்த தப்பும் பண்ணலை விஜய். நீ சொல்ற காரணத்தில் ஒரு துளி நிஜமிருந்தாலும், நீ அவளுக்கு செய்தது நியாயம் தான். துர்காவோட அப்பாவின் சந்தேகத்தில் எப்படி உன் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்? ஒருவேளை ஏதாவது தப்பா போச்சுன்னா, அந்த குற்ற உணர்ச்சி உன்னை கொன்னுடும்.” பாட்டி பேரனை சமாதானம் செய்தார் .
விஜயபூபதி தலை அசைத்துக் கொண்டான்.
“அவளுக்கு அவங்க அம்மா அப்பா இருக்காங்க. யார் வாழ்க்கையும் ஒரு காதல் தோல்வியில் நின்னு போய்டாது. துர்கா மனசு மாற கொஞ்சம் நாள் ஆகலாம். அந்த பொண்ணும் ரொம்ப நல்ல பொண்ணு. அவ வாழ்க்கையும் நல்லாருக்கும்.” என்று மனமுவந்து கூறினார் பாட்டி.
“துர்காவுக்கு பொருந்திய எல்லா விஷயமும் இலக்கியாவுக்கும் பொருந்துமே பாட்டி. நான் இலக்கியாவுக்கு எந்த நியாயமும் செய்யலையே பாட்டி.” அவன் உடைந்த குரலில் கூறினான்.
“அதுக்கென்ன விஜய். அவ காலம் முழுக்க உன் கூடத்தானே இருக்க போறா? நியாயம் செய்திட்டா போச்சு.” அவர் சிரித்த முகமாக பேசினார்.
“துர்காவை விலக்க, நான் இலக்கியாவை பயன்படுத்திகிட்டு இருக்கேனேன்னோ எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கு பாட்டி. இலக்கியாவுக்கு அம்மா, அப்பா இருந்திருந்தா துர்கா அப்பா கேட்டதை இலக்கியா அப்பாவும் கேட்டிருப்பங்கள்ல?” அவன் கேட்க, பாட்டி ‘திக்…’ என்று தன் பேரனை பார்த்தார்.
அங்கு நிசப்தம் நிலவியது.
சிறகுகள் விரியும்…