kiyaa-29

coverpage-2ba1be2c
Akila kannan

கிய்யா – 29

அன்றிரவு.

      இலக்கியா தூங்கி கொண்டிருந்தாள். அவள் முகம் சிவந்து அவள் கண்கள் சற்று வீங்கி அவள் அழுததை அப்பட்டமாக எடுத்து காட்டியது.

   அவள் அருகே விஜயபூபதி மெத்தையில் அமர்ந்திருந்தான்.

   ‘இவளுக்கு எவ்வளவு கஷ்டம். ஏதோ பிரச்சனைன்னு தெரியும். இவ்வளவு பெருசா இருக்குமுன்னு நான் நினைக்கலை.’ அவன் நெற்றி சுருங்கியது.

‘இவளை எப்படி சமாதானம் செய்வது? பொறுமையா பேசினாலும் ஏத்துக்க மாட்டா. அனுதாபம்ன்னு சொல்லுவா?’ அவன் அவள் தலையை கோதினான்.

அவள் அவன் தொடுகையில் சற்று அசைந்தாள். அவள் அசைவுக்கு ஏற்ப, அவள் தேகமும் அசைந்தது.

அவள் சேலை விலகி, அவள் வடிவை எடுத்து காட்டியது. அவன் புன்னகைத்து கொண்டான்.

‘இவளை சிறு வயதிலிருந்து பார்க்கிறேன். என் மனதில் அப்பொழுதெல்லாம் எந்த எண்ணங்களும் வந்ததில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் சர்வ சாதரணமாக எல்லா எண்ணங்களும் வருகிறது.’ அவன் முகத்தில் வெட்க புன்னகை.

அவளிடம் மெல்லிய விசும்பல். ‘இன்றைய நிகழ்வின் தாக்கம்’ அவன் கணித்து கொண்டான்.

அவன் அவள் புருவத்தை நீவி கொடுத்தான். அவன் தீண்டலில் ஆறுதலடையும் குழந்தை போல, அவள் முகத்தில் நிம்மதி. சின்னதாய் புன்னகை கீற்று.

அந்த புன்னகை அவனுக்கு அழைப்பு கொடுக்க, அவன் முகம் நோக்கி குனிந்தான் விஜயபூபதி.

பட்டும்படாமலும் அவள் முகத்தில் அவனின் இதழ் தீண்டல்கள், “அத்தான்… ஏன் இப்படி எப்ப பார்த்தாலும் என்னை கனவில் அடிக்கடி தொந்திரவு செய்யறீங்க?” அவள் சிணுங்கினாள்.

அவன் சட்டென்று விலகி அவளை குறுஞ்சிரிப்போடு பார்த்தான்.

“அட கேடி, இன்னைக்கி ஓ ராமானு அழுகை கதை எல்லாம் சொன்னாளே! இதை சொல்லலையே.” அவள் காதை திருகினான்.

அவள் விழிப்பு தட்டி எழுந்து கொள்ள, அவன் படுத்துக்கொண்டான்.

“அத்தான்… என்னை எழுப்பினீங்களா?” என்று அவள் தூக்கத்திலிருந்து எழுந்து கேட்டாள்.

“ஏன் இலக்கியா தூங்கிட்டு இருக்கிற எனக்கு வேற வேலை இல்லை பாரு. உன்னை எழுப்பறது தான் என் வேலையா?” அவன் சிடுசிடுத்தான்.

 அவள் அவனை சந்தேகமாக பார்த்தாள்.

“இந்த பார். உனக்கு என்னை பிடிக்காது.” அவன் கூற, “அத்தான் நான் அப்படி சொன்னேனா?” என்று அவள் சிடுசிடுத்தாள்.

“ம்… ஆமா, நீ அப்படித்தானே சொன்ன? உனக்கு என்னை கல்யாணம் செய்ய சுத்தமா விருப்பமில்லை. நன்றி கடன் அப்புறம் பாவக்கடன். அதெல்லாம் இல்லாம, படுத்த படுக்கையா இருந்த என்னை கட்டிக்க சொல்லி எங்க அப்பா உன் காலில் விழுந்து கதறி இருக்காங்க.” அவன் தீவிரமாக கூற, “அத்தான்…” அவள் அவன் வாயை மூடினாள்.

அவன் கூற்றில், அவள் உடல் பதறியது. அவன் ஸ்பரிசத்தை தீண்டிய அவள் ஸ்பரிசம் அவனுக்கு அவள் மனநிலையை எடுத்து காட்டியது.

அவன் அவள் கைகளை தட்டிவிட்டான். “இதோ பார், இதெல்லாம் நான் சொல்லலை. நீ தான் சொன்ன. இப்படி வேண்டா வெறுப்பா இருக்கிற ஒரு பொண்ணை நான் திரும்பி கூட பார்க்க மாட்டேன்.” அவன் உறுதியாக கூறினான்.

“அதனால், அர்த்த ராத்திரியில் எழும்பி என் தூக்கத்தை கெடுத்து, என்னை தொந்திரவு செய்யாத” அவன் கறாராக கூற, “அத்தான், நான் உங்களை தொந்திரவு செய்யறேனா?” அவன் சீறினாள்.

“ஆமா, இதில் உனக்கு சந்தேகம் வேறையா? படுத்திருந்த என்னை எழுப்பி, உன்னை எழுப்பினேனான்னு நீ எழும்பி என்னை எழுப்பியது நீ தான?” அவன் சட்டமாக கேட்டான்.

“ஏன் அத்தான் என்னை அர்த்த ராத்திரியில் என்னை எழுப்பினது மட்டுமில்லாமல், எழுப்பி எழுப்பினு சொல்லி இப்படி குழப்பறீங்க?” அவள் பரிதாபமாக கேட்டாள்.

“எப்படி நீ என் வாழ்க்கையை குழப்பின மாதிரியா?” அவன் முகத்தில் குறுஞ்சிரிப்பு எட்டி பார்த்தது.

“அத்தான், என்ன விளையாடுறீங்களா?” அவள் கோபித்து கொள்ள, “உன்கிட்ட விளையாட நீ என்ன என் மேல ஆசை வைத்த பொண்டாட்டியா? நான் வேண்டாமுன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு போனவ தானே?” அவன் விடாப்பிடியாக நின்றான்.

“போனது மட்டுமில்லை. மூச்சே விட முடியாதப்ப கூட என்னை கூப்பிட கூடாதுனு வைராக்கியமா இருந்தவ தானே நீ?” அவன் எழுந்து அமர்ந்து கொண்டு அவளிடம் கோபமாக கேட்டான்.

“அத்தான்…” அவள் அழைக்க, “நீ என்னை அத்தான்னு சொல்லவே வேண்டாம்.” அவன் கூற, “ஏன்? ஏன்? ஏன்?” அவள் காட்டமாக கேட்டாள்.

“அந்த வார்த்தைக்கு நீ உண்மையா இருந்திருக்கியா? என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிருக்கியா?” அவன் முறைத்துக் கொண்டான்.

“விஜய்யபூபதின்னு இழுத்தே கூப்பிடுவியே… அப்படியே கூப்பிடு.” அவன் கடிந்து கொண்டான்.

“இப்ப என்ன தான் நீங்க சொல்ல வரீங்க?” அவள் கேட்க, “புரியலை? உனக்கு புரியலை?” அவன் அவள் முகம் பார்த்து கேட்டான்.

“சத்தியமா புரியலை.” அவள் கூற, அவள் புரிந்து கொண்டே புரியாதவள் போல் பாவனை செய்கிறாளோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.

“ஓ…” என்று அவன் இழுக்க, “என்ன ஓ!” அவள் அவன் முன் கழுத்தை சரித்து கேட்டாள்.

“கல்யாணாம் பண்ணிகிட்ட ஒரே ஒரு காரணத்துக்காக உன்னை என்னால் மனைவியா ஏத்துக்க முடியாது. நாம பிரிய வேண்டியது தான்.” அவன் மறைமுகமாக பேசினான்.

“சரி தான் அத்தான். கரெக்ட்… து…” சட்டென்று நிறுத்தினாள். ‘அவ பெயரை எடுத்தா அத்தான் கொன்னுடுவாங்க. இனி துர்காவின் பேச்சுக்கு இடம் இல்லை.’ அவள் தனக்கு தானே அறிவுறுத்திக்கொண்டாள்.

“என்ன கரெக்ட்? என்னை பிரியறது? என்னை விட்டுட்டு போறது? இப்படி எந்த ஐடியா கொடுத்தாலும் உனக்கு கரெக்ட்டா தெரியுமே?” அவன் ‘ஈ…’ என்று பற்களை காட்டி கேட்க, அவள் உதட்டை சுளித்து கொண்டு படுத்து கொண்டாள்.

‘அத்தான் என்னவோ சொல்ல வராங்க. இல்லை… இல்லை… நான் என்னவோ சொல்லனுமுனு நினைக்குறாங்க. என்னவா இருக்கும்?’ அவள் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

அவளை அவ்வப்பொழுது இப்படியே எழுப்பி, குழப்பி காலம் கனியட்டும் என்று அவளை அளவோடு தொந்திரவு செய்து கொண்டிருந்தான் அவள் கணவன்.

***

நாட்கள், மாதங்களாக அதன் போக்கில் நகர்ந்தது.

  துர்கா கோவிலுக்கு சென்றாள். அவள் எதிரே ராஜேஷ். அவள் அவனை சந்தேகமாக பார்த்தான்.

“என்னங்க நீங்க, நான் உங்களை ஃபாலோ பண்ற மாதிரியே பார்க்கறீங்க? இது கோவில் யார் வேணும்னாலும் வரலாம்.” ராஜேஷ் படபடவென்று பேசினான்.

“நான் எதுமே கேட்கலையே” துர்காவின் முகத்தில் புன்சிரிப்பு.

“உங்க சிரிப்பு அழகா இருக்கு” அவன் கூற, துர்கா தன் இதழ்களை இறுக மடித்து கொண்டாள்.

“நான் உங்களை தொந்திரவு செய்யலை. நீங்க சாமி கும்பிட்டுட்டு வாங்க. நான் வெளிய இருக்கேன்” ராஜேஷ் வெளியே செல்ல, “நான் உங்களை ஒன்னும்…” துர்காவின் சொற்கள் காற்றோடு தான் போனது.

“சரியான… அவசர குடுக்கை போல…” துர்கா முணுமுணுத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வர எத்தனிக்க, அவள் அலைபேசி ஒலித்தது.

பட்டென்று அலைபேசியை எடுத்து கொண்டு வெளியே வந்தாள் துர்கா.

அங்கிருந்த காரை ஒட்டி நின்று பேசிக் கொண்டிருந்தாள். காருக்குள் அமர்ந்தபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ராஜேஷ்.

துர்காவின் முகத்தில் மலர்ச்சி. அவள் பேசி முடித்ததும், காரிலிருந்து வெளியே வந்தான் ராஜேஷ்.

“என்னை வெளிய போக சொல்லிட்டு, நீங்க என்னை ஃபாலோ பண்றீங்க போல?” கண்களில் குறும்பு மின்ன கேட்டான் ராஜேஷ்.

“நீங்களா ஏதாவது கற்பனை செய்து பேசிட்டே இருப்பீங்களா?” பட்டென்று கேட்டாள் துர்கா.

“அது அப்படி தான் பழகிப் போச்சு. ” அவன் இயல்பாக கூற, அவன் பதிலில் அவள் முகத்தில் புன்னகை.

“ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?” அவன் அவளை பார்த்தபடி கேட்டான்.

தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள். “நாங்க ஒரு கூட்டமா கொரோனாவால் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்வோம். எங்க டீமுக்கு நாளைக்கு ஒரு அவார்டு கொடுக்க போறாங்க போல. எதையும் எதிர்பார்த்து நாங்க செய்யலை. இருந்தாலும், பரிசுன்னு சொல்லும் பொழுது ஒரு மகிழ்ச்சி. இப்ப தான் கூப்பிட்டு சொன்னாங்க” அவள் தன் அலைபேசியை காட்டியபடி அப்பொழுது தான் கேட்ட செய்தியை அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

“அட, என்னை இப்ப பார்த்த பிறகு தான் விஷயம் உங்களுக்கு வந்திருக்குனு சொல்லுங்க” அவன் கேட்க, “இது என்ன காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையா இருக்கு.” துர்கா கண்களை விரித்தாள்.

“பனம் பழம் விழுந்ததா? விழலையா?” அவன் கறாராக கேட்க, ‘இல்லை…’ என்று கூற, அவள் சந்தோஷமான மனநிலை இடம் கொடுக்கவில்லை.

“அவார்டு எப்ப கொடுக்கறாங்க? எங்க வைத்து கொடுக்கறாங்க?” அவன் கேட்க, “எதுக்கு?” அவள் கண்களை சுருக்கினாள்.

“நான் வரனுமில்லை?” அவன் கேட்டான்.

“எதுக்கு?” அவள் கேட்க, “என்னங்க, இப்படி கேள்வி கேட்கறீங்க? எதிர்காலத்தில், நீங்க ஒருவேளை என் லைஃப் பார்ட்னரா வந்தால், நான் இதை மிஸ் பண்ணிட்டேன்னு ஃபீல் பண்ண கூடாதில்லை?” அவனும் கேள்வியாகவே நிறுத்தினான்.

“நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே?” அவள் கூற, “இல்லைன்னும் நீங்க சொல்லவே இல்லையே?” அவன் சிரித்தான்.

‘இவர் கிட்ட பேசுவது ஆபத்து.’ எண்ணியபடி, “கோவில் பொது இடம் நீங்களும் உள்ள வாங்க. எனக்காக ஏன் வெளிய நிக்கறீங்க?” துர்கா பேச்சை மாற்றிவிட்டு மடமடவென்று கோவிலுக்குள் சென்றுவிட்டாள்.

அவன் சிரித்து கொண்டான்.

***

காற்று சற்று வேகமாக வீசி கொண்டிருந்தது. தோட்டத்தில் குருவிகள், “கிய்யா… கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன.

காற்று வேகத்தில் குருவி கூடு அதன் பலத்தை இழக்க, ஒரு குஞ்சி வெளியே விழ எத்தனித்தது. “அச்சோ…” அலறிக்கொண்டு அதை கைகளில் தாங்கி பிடித்தாள் இலக்கியா.

சற்று இறங்கி இருந்த கிளையில் கால்களை ஊன்றி, மரத்தின் மீது ஏறினாள்.

கிளைகளுக்கு இடையே அந்த குருவி கூட்டை வைக்க, மீண்டும் காற்றின் வேகத்தில் குருவி கூடு சரிந்தது.

அவள் அதை கைகளில் ஏந்தியபடி விழிக்க, அப்பொழுது அங்கு விஜயபூபதி வந்தான்.

“அத்தான்… ஒரு சின்ன பூ கூடை இருக்கும். அதை எடுத்து தாங்களேன்” அவள் கோரிக்கை வைக்க, அவன் பூ கூடையோடு வந்தான்.

அவள் பூ கூடையை மரத்தில் தொங்கவிட்டு, அதற்குள் பத்திரமாக அவள் வைக்க எத்தனிக்க, அவளுக்கு எட்டவில்லை.

அதை பார்த்து கொண்டே நின்ற விஜயபூபதி அவளை பின்னோடு தூக்கினான்.

அவன் தீண்டலில் அவள் உடல் சிலிர்த்தாலும், குருவியை மனதில் வைத்து காரியத்தில் கண்ணாக அவ்வற்றை பத்திரமாக கிளைகளுக்கு இடையில் வைத்தாள் இலக்கியா.

அவள் வைத்ததும், அவன் இறக்கி விட, அவள் கால்களை கீழே சரிந்து கிடந்த மரக்கிளையில் வைக்க அந்த கிளை விலகியது. விலகியதோ? இல்லை விலக்கப்பட்டதோ? அவள் அவன் மீது சரிந்து விழுந்தாள்.

அவன் அந்த புல் தரையில் உல்லாசமாக படுத்திருந்தான். அவள் ஸ்பரிசத்தை ரசித்தப்படி.

அவள் பிடிமானமின்றி நெளிய, அவன் அவளை ரசித்து சிரித்தான். அவள் அவன் தோள்களை பிடிமானமாக்கி எழ, அவன் கைகள் அவள் வெற்றிடையை உரிமையோடு தீண்டி, அவள் இடையை சுற்றி பிடித்தது.

“அத்தான், விடுங்க” அவன் மீது உரிமையாய் கைகளை வைத்து கெஞ்சினாள்.

அப்பொழுது அங்கு நிர்மலாதேவி வர, “ஐயோ… என் பையனை எப்படி மாத்திட்டா பாருங்க. கொஞ்சம் கூடம் வெட்கமே இல்லாம?” என்று அவர் ரங்கநாத பூபதியிடம் புலம்ப, “சின்ன சிறுசுங்க… முன்ன பின்ன தான் இருப்பாங்க. உனக்கு வயசாகிருச்சுனா என்ன பண்றது?” பாட்டி கழுத்தை நொடித்து கொண்டார்.

“ஆமா, எனக்கு வயசாகிருச்சு. உங்களுக்கு இளமை ஊஞ்சல் ஆடுது?” என்று நிர்மலாதேவி கேள்வி எழுப்ப, “இதில் உனக்கு சந்தேகம் வேறயா?” என்று பாட்டி கம்பீரமாக கூறினார்.

‘மாமியார் மருமகள் பனிப்போரில் நாம்ம சிக்கிக்க கூடாது’ அமைதியாக அங்கிருந்து நழுவினார் ரங்கநாதபூபதி.

“அத்தான்… யாராவது வந்திற போறாங்க?” அவனிடமிருந்து விலகவே அவள் முயல, அவன் பிடி இறுகியது.

“யாராவது வர்றது தான் உன் பிரச்சனை? இல்லைனா, நீ என் மேல இப்படி…” அவன் வார்த்தைகளை முடிக்காமல் சிரித்தான்.

“அத்தான்… இது பழைய ஜோக். நான் நிறைய கதைகளில் படிச்சிட்டேன். நிறைய சினிமாவில் பார்த்துட்டேன். வேண்டாம் அத்தான்” அவள் சிணுங்கினாள்.

“என்ன வேண்டாம் இலக்கியா? இந்த அத்தான் வேண்டாமா?” அவன் குரலில் கோபம் இருந்தது.

“அத்தான்…” பதறிக்கொண்டு, அவர்கள் இருவரின் முகத்திற்கு இடையில் தன் கரங்களை நீட்டி, அவன் இதழ்களை மூடினாள்.

“கடவுள் கிட்ட வரம் கேட்க போவோம். அந்த கடவுளே வரமா வந்தால் வேண்டாமுன்னு சொல்லுவோமா?” அவள் கண்கள் அத்தனை உணர்வுகளை காட்ட, அவள் கன்னத்தில் அவன் இதழ் பதித்தான்.

“அத்தான்…” அவள் முகம் சிவக்க, “வசனம் எல்லாம் பழைய படத்தில் வர்ற மாதிரி நல்லாத்தான் இருக்கு. எனக்கு தான் கேட்க பிடிக்கலை.” அவன் கூற, அவனை வேகமாக தள்ளிவிட்டு, அவள் உருள, அவன் அருகே புல் தரையில் விழுந்தாள் இலக்கியா.

தன் ஒற்றை கையை தன் தலைக்கு அண்டை கொடுத்து மற்றோரு கையை அவளை சுற்றி வளைத்து தன்னோடு நிறுத்தி கொண்டான் விஜயபூபதி.

‘பொதுவாக விலகியே நிற்கும் அத்தான், என்ன இன்னைக்கு இப்படி செய்யறாங்க?’ அவள் விழிகள் படபடத்தன.

அவள் முகம் பல பாவனைகளை காட்ட, அவன் அதை ரசித்தான்.

‘இத்தனை நாள் நான் கேக் செய்தேன். என் பிஸினஸ்க்கு உதவியா இருந்தாங்க. இப்படி எதுமே என்னை தொந்திரவு செய்யலியே’ அவள் எண்ணங்கள் வேகமாக ஓட, வீசிய காற்றில் அவள் சிகை கலைய, அவன் அவள் முடியை ஒதுக்கி,

“யோசிச்சிட்டியா இலக்கியா? அத்தான் வேணுமா வேண்டாமான்னு?” அவன் கேட்க, மேலே “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பிக் கொண்டு குருவிகள் பறந்தன.

அந்த சத்தம் அவனின் அழைப்பு, அவளை ஏதேதோ செய்ய, அவன் அருகாமை, அவன் தீண்டல் அவள் நிலை குலைந்து போனாள்.

அந்த குளிர் காற்றிலும், அவன் சுவாச காற்று தந்த வெப்பம், “வேண்டாமுன்னு முடிவு பண்ணிட்டியா இலக்கியா?” அவன் குரல் ஆழமாக ஒலிக்க, “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, “அத்தான்…” அவள் அவனை இறுக கட்டிக்கொண்டு விசும்பினாள்.

“இப்படி எல்லாம் பேசாதீங்க அத்தான். நான் உங்களிடம் எதுவும் கேட்க கூடாதுன்னு நினைப்பேன். நீங்க என் கிட்ட கேட்கறதும் எனக்கு பிடிக்கலை அத்தான். அதுவும் இப்படி எல்லாம் கேட்குறது தாங்கவே இல்லை அத்தான்.” அவள் வேதனையை அவன் மார்பில் புகுத்தினாள்.

“என்ன பிரச்சனை உனக்கு?” அவன் அவள் தலை கோதி கேட்க, “எனக்கு காதல் இல்லை” அவள் கூற, குருவிகள், “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்ப, அந்த அழைப்பில் அவள் கண்கள் அவனை பார்த்தன. அவள் கருவிழிகள் அங்கும் இங்கும் அசைந்தன. அந்த கருவிழியில் அவனே தெரிந்தான். அவள் விழிகள் அவனை மட்டும் காட்டவில்லை. அவள் மனதையும் அல்லவா காட்டியது.

அவன் கேள்விக்கு பதில் கூறிய அவள் விழிகளில் அவன் இதழ் பதித்தான்.

“காதல் இல்லை இலக்கியா. நீ என் மேல் வைத்திருப்பது அன்பு, பாசம், பக்தி எல்லாத்துக்கும் மேல…” அவன் கூற, அவள் விலகி கொண்டு தன் விழிகளை மூடி கொண்டாள்.

அவன் செய்கை அவளுக்கு இனித்தது. அது அவனுக்கு புரிந்தது. ‘ஆனால்…’ என்ற உணர்வை அவள் முகம் காட்ட, “துர்காவை யோசிக்குறியா?” அவன் கேட்க, “இல்லை அத்தான். இனி துர்கா வாழ்க்கையை நான் குழப்ப மாட்டேன். அன்னைக்கு ஏதோ நல்லது பண்றதா நினைச்சி தப்பு பண்ணிட்டேன். இனி அப்படி எல்லாம் செய்யவே மாட்டேன் அத்தான்.” படபடத்த அவள் குரலில் உறுதி இருந்தது.

“அம்மாவுக்காக யோசிக்குறியா?” அவன் அவள் முகம் உயர்த்தி கேட்டான்.

“உங்க அம்மாவுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.” அவள் குரல் சீறிக் கொண்டு வர, அவன் முகத்தில் புன்னகை.

“வேற என்ன பிரச்சனை?” அவன் கேட்க, “அது… அது…” அவள் இழுத்தாள்.

அவள் தடுமாற்றம் அவனுக்கு புதிது. கொஞ்சம் அவனுக்கு பிடித்தும் இருந்தது. அவன் கண்கள் கூர்மையாகியது.

“இலக்கியா கூட பேச தடுமாறுவாளா??” அவன் அவளை சீண்டினான்.

“தெய்வமே கணவனாக வந்தாலும், மனைவியை மட்டும் தான் அவர் மனதால் நினைக்கணும்முன்னு…” அவள் கேள்வியை முடிக்காமல் தடுமாற, அவன் பெருங்குரலில் சிரித்தான்.

படுத்திருந்த அவள் எம்பி, அவன் வாயை மூட, அவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்.

“அத்தான்… நான் கேட்ட கேள்விக்கு பதில்” அவள் கறாராக கேட்க, “அதை தான் தருகிறேன் பெண்ணே” அவன் இதழணைப்பில் அவள் கட்டுண்டு அவணைப்பில் நிம்மதி அடைந்தாள்.

“இது மாதிரி வேற கேள்வி இருக்கா?” அவன் சீண்ட, “நிறைய இருக்கு” அவள் எழுந்து அமர்ந்து கொண்டு முகத்தை திருப்பினாள்.

“கேளு இலக்கியா. எனக்கு இந்த கேள்விகள் ரொம்ப பிடிச்சிருக்கு.” அவன் கண்சிமிட்டினான்.

“உங்க கிட்ட பதில் இல்லை. என்னை சமாளிக்குறீங்க” இனித்த அவள் இதழ்கள் சற்று காட்டமான பதிலை கொடுக்க, அவளை தோளோடு சேர்த்து கொண்டு அவள் அருகே அமர்ந்து, “எப்படி கிய்யா… கிய்யா மேஜிக்குன்னா என்னனு உன்கிட்ட பதில் இல்லாத மாதிரியா?” அவன் வம்பிழுக்க,

“என்கிட்டே பதில் இருக்கு. நான் சொல்லட்டுமா?” அவள் சவால் விட, “தேவை இல்லை… நான், உனக்கு சொல்லி தரேன் கிய்யா… கிய்யா மேஜிக்…” அவன் அவள் செவியோடு கிசுகிசுக்க, அவள் முகத்தில் செம்மை பறந்தது.

நொடிக்குள் தன்னை சுதாரித்து கொண்டு, “என் கேள்விக்கு பதில்” கறாராக நின்றாள் இலக்கியா.

எழுந்து சென்று மரத்தில் சாய்ந்து மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை கூர்மையாக பார்த்தான் அவன்.

“இவ்வளவு நேரம் நான் உன்கிட்ட பேசிட்டு இருந்தேன். என் மனதில் துர்கா இருக்கான்னு நீ நினைக்குறியா இலக்கியா.” என்று அவள் கண்களை பார்த்து அழுத்தமான குரலில் கேட்டான் விஜயபூபதி

“அத்தான்…” அவள் அவனருகே அவனை சமாதானம் செய்ய வர, அவன் ஒற்றை விரல் காட்டி அவளை சில இடைவெளி தூரத்தில் நிறுத்தினான்.

“இல்லை இலக்கியா. நீ பதில் சொல்லிட்டு என் பக்கத்தில் வா.” அவன் கட்டளையாக கூற, “நான் என்னைக்கு அத்தான் நீங்க சொல்லி கேட்டிருக்கேன். அதெல்லாம் எனக்கு பழக்கமே இல்லையே” ஓடி வந்து அவன் நெஞ்சோரம் உரிமையாக சாய்ந்து கொண்டாள் அது அவளுக்கான இடமென்பது போல.

‘அத்தான் மனதில் வேறு யாரவது இருந்திருந்தால், அத்தனால், என்னிடம் இப்படி உரிமை எடுத்து கொள்ள முடியுமா?’ பெண்ணவளின் இதயம் அவனை புரிந்து கொண்டது என்பது போலவும்.

“என்னைக்கு உனக்கு தாலி கட்டினேனோ அன்னைக்கே என் மனதில் உன்னை மனைவியா நினைத்து மட்டும் தான் தாலி கட்டினேன். நான் துர்காவை மறந்தாலும், நீ தான் அவளை எப்ப பார்த்தாலும்…” அவன் நக்கலாக சிரிக்க, “அத்தான்… உங்களை என்ன செய்யறேன் பாருங்க” அவள் அருகே கிடந்த கம்பை எடுத்தாள்.

“அடிப்பாவி….” அவன் அவளை பின்னோடு சேர்த்துக்கொண்டு மரத்தில் சாய்ந்தான்.

அவள் கழுத்து வளைவில் தன் தாடையை வைத்து, “இலக்கியா…” அவன் அழைக்க, “ம்…” அவன் மீது வாகாக சாய்ந்து கொண்டாள் அவள்.

அவள் கைகளை தன் கைகளுக்குள் போதித்து, “காதல் ஓர் உணர்வு அவ்வளவு தான். சிலரை பிடிக்கும். அவங்களோடு வாழ்வில் பயணிக்கனுமுனு நினைப்போம். நடந்தால் சந்தோசம். நடக்காமல் போனா, நிச்சயம் மனிதர்களால் அதை கடக்க முடியும் இலக்கியா. நான் என்னை வைத்து அதை நிச்சயமா சொல்றேன்.” அவன் கூற, அவள் “ம்…” கொட்டினாள்.

“அந்த நொடி கஷ்டம் தான். எனக்கும் கடக்க கஷ்டமா தான் இருந்தது.” அவன் கூற, அவள் முகத்தை திருப்பி, “ரொம்ப கஷ்டமா இருந்ததா அத்தான்?” அவள் கண்களை விரிக்க, அவன் தன் நெற்றியால் அவள் நெற்றியை முட்டினான்.

“நான் வேற உங்களை கஷ்டப்படுத்தினேனோ?” அவள் இமை கொட்ட, “அதில் உனக்கு சந்தேகம் வேறயா?” அவன் கேலி பேச, அவள் கோபமாக விலகி செல்ல எத்தனித்தாள்.

அவன் அவளை விலகவிடவில்லை. “எவ்வளவு கோபம் வந்தாலும், சண்டை வந்தாலும், இனி மேடம் இப்படி தான் என்கூட இருக்கணும்” அவன் குரலில் இருந்த கண்டிப்பில் அவளிடம் மெல்லிய மழைச்சாரல்.

அவளை அருகாமையில் வைத்து கொண்டு, அவன் மேலும் தொடர்ந்தான்.

“பெற்றோரை இழந்து, பிள்ளைகளை இழந்து, வாழ்க்கை துணையை இழந்து இப்படி எல்லாரும் வாழும் பொழுது, இடையில் வந்த காதலை எல்லாராலும் கடக்கவும் முடியும். மறக்கவும் முடியும்.” அவன் கூற, அவள் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

“நானும் இதை முன்னாடி யாரவது சொல்லி இருந்தா நம்பி இருக்க மாட்டேன். என் கால்களை இழந்தப்ப, எனக்கு நிறைய பாடம். கண் இழந்து, காதை இழந்து, கைகள் இல்லாமல் எல்லாரும் வாழும் பொழுது…” அவன் நிறுத்தி சற்று கோபமாகவே தொடர்ந்தான்.

“காதல் முக்கியமுன்னு குடும்பத்தை இழக்கறவங்களை, உயிரை இழக்குறவங்களை நான் அடி முட்டாளுன்னு தான் சொல்லுவேன். கதைகளும், சீரியலும், சினிமாக்களும் ஏற்படுத்திய மாயை.” அவன் குரலில் அத்தனை உறுதி இருந்தது.

“காதலை கடந்துட்டோம். சரி போனா போதுன்னு இந்த இலக்கியாவை கட்டிக்கிட்டிங்க?” அவள் முகத்தில் குறும்பு கூத்தாடியது.

ஆனால், அவன் கூறிய பதிலில் அவள் நெக்குருகி அவன் முகமெங்கும் இதழ்களால் அன்பளித்தாள்.

சிறகுகள் விரியும்…