kiyyaa-30

coverpage-c732504a

kiyyaa-30

(கதையை தொடர்ந்து படித்தும், லைக்ஸ் கொடுத்தும், கருத்துகள் கூறியும் என்னோடு பயணித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வழக்கமாக கதையில், ‘கேள்வியை நான் கேட்கட்டுமா?’ என்ற முறையில் நான் கேள்விகளை தொடுப்பேன்.
இந்த கதையில் ஒரு மாறுபட்ட அனுபவம். பல கேள்விகளை நீங்கள் கேட்டீர்கள். அது ஒரு அழகான அனுபவமாக இருந்தது. மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. நன்றி தோழமைகளே!
உங்கள் கருத்துக்களையும், விமர்சனத்தையும் எதிர்பார்த்து நான்.)

         கிய்யா – 30 (நிறைவு பகுதி)

கிய்யா – 30

“காதலை கடந்துட்டோம். சரி போனா போகுதுன்னு இந்த இலக்கியாவை கட்டிக்கிட்டிங்க?” இலக்கியா குறும்பு மின்ன கேட்க, அவன் புன்னகைத்தான்.

“நான் ஒரு கதை சொல்லவா?” அவன் கேட்க, “வேண்டாமுன்னு சொன்னா விடவா போறீங்க?” அவள் கண் சிமிட்ட, அவன் அவள் காதை திருகினான்.

“ஒரு குழந்தை ஒரு கடைக்கு போச்சாம். அந்த கடைக்காரர் ஒரு பாட்டிலை திறந்து உனக்கு எவ்வளவு சாக்லேட் வேணுமோ, அவ்வளவு எடுத்துக்கோ அப்படின்னு சொன்னாராம்.” அவன் நிறுத்த, அவள் தலை அசைத்தாள்.

“குழந்தை சாக்லேட் எடுத்துக்கவே இல்லையாம். ‘நீங்களே கொடுங்க அங்கிள்’ அப்படின்னு சொல்லிடுச்சாம். அவரும் கை நிறைய சாக்லேட் எடுத்து கொடுத்தாராம். கடையை விட்டு வெளியே வந்ததும், ‘அவங்க அம்மா நீ ஏன் பாப்பா சாக்லேட் எடுத்துக்கலைன்னு’ கேட்டாங்களாம்” அவன் கூற, அவனை இடைமறித்தாள் இலக்கியா.

“ம்… இந்த கதை தான் எனக்கு தெரியுமே. ‘என் கை சின்ன கை. நானே எடுத்தா கம்மியா தான் வரும். கடைக்காரர் அங்கிள் கொடுத்தா நிறைய கொடுப்பாங்க. ஏன்னா அவங்க கை பெரிய கை.’ அப்படினு பாப்பா சொல்லுச்சாம்” அவள் கதையை முடிக்க, அவன் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

“இந்த கதை தான் எல்லாருக்கும் தெரியுமே. இதை ஏன் அத்தான் இப்ப சொல்லுறீங்க?” அவள் சந்தேகமாக கேட்டாள்.

“கடவுளும் அந்த கடைக்காரர் மாதிரி தான் இலக்கியா. நான், எனக்கு பிடித்த என்னை நேசிக்கும் பெண் போதுமுன்னு நினைச்சேன். அந்த கடவுள் என்னை மட்டுமே உலகமா நினைக்குற பெண்ணை கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டார். அதை யாரால் மாற்ற முடியும்.” அவன் அவள் முகத்தை பார்த்தபடி கூறினான்.

“என் வலியில் துடித்து, எனக்காக வலியை தாங்க தயாராக இருக்கும், எனக்காக உயிரையும் கொடுக்க துணியும் நீ கடவுள் கொடுத்த வரம் இல்லையா?” அவன் அவள் விழிகள் காட்டும் நேசத்தை பார்த்தபடி அவள் முகத்தை கைகளில் ஏந்தி கேட்க,

“என்ன அத்தான், நான் எதுவோ விளையாட்டா கேட்டா, நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க” அவள் நெக்குருகி அவன் முகமெங்கும் தன் இதழ்களால் அன்பளித்தாள்.

அன்பளிப்பில் அங்கு ஓர் அழகான வாழ்வு ஆரம்பமானது.

***

துர்காவின் வீட்டில்!

சில நாட்களக்கு பின் ஒரு ரம்மியமான காலை பொழுதில்.

“எஞ்சாய் எஞ்சாமி… வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

அம்மா ஏ அம்பாரி… இந்தா இந்தா மும்மாரி…”

     சென்னையில் ஆதம்பாக்கம் முழுவதுமே கேட்கும் அளவுக்கு அலைபேசியின் அலாரம் அலறியது. அந்த சத்தத்தில் தன் உடலை பெரிதாக அலட்டி கொள்ளாமல் மெல்லமாக திரும்பிப்படுத்தாள்.

“குக்கூ குக்கூ” மீண்டும் அலராத்தின் ஒலி.

  “ஏய்… துர்கா… குக்கூ… குக்கூ… ன்னு அது கத்திகிட்டே இருக்கு. ஒண்ணு எழுந்துக்கோ. இல்லைனா அதை ஆஃப் பண்ணிட்டு தூங்கு.” என்ற தாயின் குரலில், படக் என்று எழுந்து அமர்ந்தாள் துர்கா.

“அந்த குக்கூ… குக்கூ பாட்டைவிட, என் அம்மா குரல் தான் ஸோ ஸ்வீட்.” தன் தாயின் கன்னத்தை அவள் செல்லமாய் இழுக்க, “அடியேய்… ஏதோ அவார்ட் வாங்க போகணுமுன்னு சொன்னியே. நீ கேட்டேன்னு வாசல் தெளித்து பெருக்கி ரெடியா வச்சிருக்கேன். கோலத்தை நீ போடுறியா? இல்லை நான் போடட்டுமா?” என்று கலைச்செல்வி மணியை பார்த்தபடியே கேட்டார்.

“பாடுபட்ட மக்கா…வரப்பு மேட்டுக்காரா…”

பாடியபடியே, தன் இடையை அசைத்து ஆடியபடியே, வேகவேகமாக பல வண்ண கோலப்பொடியோடு வாசலுக்கு சென்றவள், மாம்பழத்தை கொத்தி தின்பது போல் இருக்கும் பச்சைகிளிகளை மிக அழகாய் வரைந்தாள். அவள் இதழ்கள் பாடலை முணுமுணுத்து கொண்டே இருந்தன.

தன் மகளை கூர்மையாக பார்த்துக்கொண்டே இருந்தார் கலைச்செல்வி.

தன் தாயின் பார்வையை பார்த்த துர்கா, கேள்வியாக புருவத்தை உயர்த்தினாள்.

“நீ உண்மையிலே சந்தோஷமா இருக்கியா? இல்லை எங்களுக்காக நடிக்கறியா?” அவர் கேட்க, தன் தாயின் தோள்களில் கைகளை மாலையாய் கோர்த்துக் கொண்டாள்.

“அம்மா, உங்களுக்கு இதில என்ன சந்தேகம்? நான் சந்தோஷமா தான் இருக்கேன்.” அவள் கூற, அவர் தன் மகளை சந்தேகமாக பார்த்தாள்.

“விஜயபூபதி மேல கோபமோ, வருத்தமோ இல்லையானு கேட்க போறீங்களா?” என்று துர்கா கேட்க, “இல்லை, உனக்கு கோபமோ, வருத்தமோ வந்திருந்தா உன் அப்பா மேல இல்லை விஜயபூபதி அப்பா மேல தான் வந்திருக்கணும்.” கலைச்செல்வி தன் மகளின் மனதை முழுதாக தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் கேட்டார்.

“யார் மேலையும் எனக்கு கோபமும் இல்லை வருத்தமும் அம்மா. இலக்கியாவை நான் சில சமயங்களில் ஹாஸ்பிடல்ல பார்க்குறேன். ஏதோ ட்ரீட்மெண்ட்ன்னு நினைக்குறேன். இலக்கியா சந்தோஷமா தான் இருக்காங்க. ஆனால், பாவம் இலக்கியா, அவளுக்காக யோசிக்கன்னு யாருமே இல்லையோன்னு தோணும். மற்றவர்களின் விருப்பத்தில் அவள் வாழ்க்கை அமைஞ்சிருச்சு. ” யோசனையோடு நிறுத்தினாள் துர்கா.

“தன் மகளுக்கு நல்லதை பண்ணணும்முன்னு அப்பா எனக்காக கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. பூபதியை பார்த்துக்க அப்ப அவன் இருந்த மனநிலையில், அவன் இருந்த உடல் நிலையில் அவனுக்கு நிச்சயம் மனைவியா ஒரு பெண் தேவை. தன் மகனுக்கு நல்லது பண்ணணுமுன்னு பூபதி அப்பா அவனுக்காக கல்யாணத்தை பண்ணிட்டாங்க.” இது தான் நிதர்சனம் என்பதை உணர்ந்து பேசும் தன் மகளின் பேச்சுக்கு அந்த தாய் ஆமோதிப்பாக தலை அசைத்தார்.

“கோபம் வருத்தம் எல்லாம் இல்லை அம்மா. ஒருவேளை, விஜயபூபதிக்கு குணமாகாம இருந்திருந்தா, இல்லை அவன் வாழ்க்கை நல்லா இல்லாமல் போயிருந்தா என் மனதில் ஓர் குற்ற உணர்ச்சி இருந்திருக்கும். ஆனால், அவன் வாழ்க்கை ரொம்ப நல்லாருக்கு அம்மா.” துர்கா கூற, கலைச்செல்வியின் கண்கள் சுருங்கியது.

“உண்மை அம்மா. கொரோன வந்து மூச்சு விட சிரமப்பட்டப கூட, இலக்கியா ‘அத்தான்… அத்தானு…’ தான் சொல்லிக்கிட்டு இருந்தா. சுயநினைவு இல்லாமல் இருந்தப்ப கூட, நானும், பூபதியும் கல்யாணம் பண்ணிக்கணும் சத்தியம் எல்லாம் வாங்கினா.” துர்கா கூற, அவர் தன் மகளை ஆச்சரியமாக பார்த்தார்.

“ஆமா அம்மா. உண்மை தான். அன்னைக்கு அவ மட்டும் சுயநினைவோடு இருந்திருந்தா, ‘அடி பெண்ணே உனக்கு அத்தான் மேல் கொள்ளை பிரியம். வேறு ஒரு பெண்ணை காதலிச்சிருந்தாலும் கல்யாணம் பண்ணிப்ப… அப்புறம் அவளுக்காக விட்டு கொடுப்ப…’ நான் உன்னை மாதிரி எல்லாம் தியாகி இல்லை இரண்டாம் தாரமா வரதுக்குன்னு சொல்லிருப்பேன் அம்மா” தன் தாயின் மனக்குழப்பத்தை போக்க வெளிப்படையாக பேசினாள் துர்கா.

“காதல் ஓர் உணர்வு அம்மா. நம்ம வாழ்வில் எத்தனையோ விஷயங்களை ஆசை போடுறோம். எல்லாமே நடக்குதா என்ன? இல்லைனா, தூக்கி போட்டுட்டு அடுத்த கட்டத்துக்கு நகராமலா இருக்கோம்? தூக்கி போடுறதுக்கும், அடுத்த கட்டத்துக்கு நகரத்துக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும்மா. அது எனக்கு இருக்கு.” புன்னகையோடு கூறினாள் துர்கா.

“காதலில் தான் வாழ்க்கையின் முடிவு இருக்குனு நினைக்குற அளவுக்கு நீங்க என்னை கோழையா வளரக்கலை அம்மா.” துர்காவின் தெளிவான பேச்சில் அவர் தன் மகளின் முகத்தை வாஞ்சையோடு தடவி முத்தமிட்டார்.

“அம்மா, நேரமாச்சு நான் கிளம்பனும்.” துள்ளி குதித்து கிளம்பினாள் துர்கா.

***

விஜயபூபதியின் வீட்டில்!

        “எப்பப்பாரு இரண்டு பெரும் தோட்டத்து வீட்டில் தான் இருக்காங்க. அங்க என்ன தான் பண்ணுவாங்களோ?” நிர்மலாதேவி கழுத்தை நொடித்து கொண்டார்.

   “நானே, மனக்குழப்பத்தில் இருந்தேன். வேற எந்த பெண்ணாலும் நம் மகனை இவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியாது. தடாலடியான இலக்கியாவால் மட்டும் தான் முடியும்முனு கெஞ்சி மிரட்டின்னு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்.” அவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேலும் தொடர்ந்தார்.

 “விஜய் வாழ்க்கை நல்லாருக்கும்னு எனக்கு தெரியும். இலக்கியா வாழ்க்கை என்ன ஆகுமோன்னு பயந்துட்டு இருந்தேன். இப்ப தான் நான் நிம்மதியா இருக்கேன்” அவர் தன் நெஞ்சை நீவிக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டார்.

“உங்க மருமக வாழ்க்கைக்கு என்ன? அவளை உங்க மகன் தாங்கறான்.” நிர்மலாதேவி பட்டென்று கூற, “அதில் உனக்கு என்ன வருத்தம்?” என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் பாட்டி.

“ம்… வருத்தம் தான். இலக்கியா சும்மாவே நான் சொல்றதை கேட்க மாட்டா. இப்ப, இந்த வீட்டு மகாராணி ஆகிட்டா. என் மகன் சும்மாவே இலக்கியா அப்படின்னா, அவ பக்கம் சாஞ்சிருவான். இப்ப, அவளை கல்யாணம் வேற செஞ்சி வச்சிடீங்க. ஸ்ரீராம் ஒருத்தன் தான் நான் சொல்றதை கேட்பான். அவனையும் வேற ஊருக்கு அனுப்பிடீங்க. வருத்தம் இருக்காதா?” நிர்மலா தேவி கேட்டார்.

அப்பொழுது இலக்கியாவும், விஜயபூபதியும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“ஒரு ஃபங்க்ஷன் இருக்கு. நானும், இலக்கியாவும் போயிட்டு வந்திடறோம்.” இலக்கியாவை கைவளையத்தில் நிறுத்தி அவன் கூற, மூவர் கண்களிலும் நிம்மதி.

நிர்மலாதேவியின் இதழ்கள் வேறு பேசினாலும், அவர் மனதை தான் அனைவரும் அறிவார்களே!

அவர்கள் சம்மதமாக தலை அசைக்க, இருவரும் கிளம்பினர்.

காரை செலுத்தியபடி, “முன்னாடி எல்லாம் மாமா கண்களில் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும் அத்தான் என்னை பார்க்கும் பொழுது. இப்ப தான் நல்லாருகாங்க.” இலக்கியா கூற, “பெரியவங்க பெருசா என்ன ஆசை படுறாங்க? நாம்ம சந்தோஷமா இருக்கணும்னு தானே, அவங்களுக்குகாக நாம்ம நீக்கு போக்கா நடந்துக்கறதில் என்ன கஷ்டம் இருக்கு.” விஜயபூபதி சாலையில் கவனத்தை செலுத்தியபடி கேட்டான்.

“நமக்காகவே வாழற பெற்றோர்கள் எல்லாருக்கும் கிடைக்கறதில்லை அத்தான். நமக்காகவே யோசிக்கிற பெரியவர்களும் எல்லாருக்கும் கிடைக்கறதில்லை. நாம, இவங்களுக்காக என்ன வேணும்ன்னாலும் செய்யலாம்.” இலக்கியா கூற, அவனும் தன் மனைவியின் பேச்சை ஆமோதித்து தலை அசைத்தான்.

“அத்தான், என்னை எதுக்கு இன்னைக்கு கூட்டிட்டு போறீங்க?” இலக்கியா கேட்க, “இன்னைக்கு ஒரு கிளப்பில் இருந்து அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமா சமூக சேவை இளைஞர்கள் கூட்டணி, அப்புறம் அந்த ஏரியா சிறந்த மாணவர்கள் எல்லாருக்கும் அவார்ட் கொடுக்கறாங்க. அதுக்கு நீ தான் சீஃப் கெஸ்ட்” விஜயபூபதி சீட்டியடித்தபடியே கூறினான்.

“அத்தான், நானா? ஏன்?” அவள் அலற, “நானும் இதையே தான் கேட்டேன். முதலில் கிளப் சார்பா உனக்கும் அவார்டு கொடுக்க தான் நினைச்சிருக்காங்க. இப்ப நீ வளர்ந்து வரும் தொழில் அதிபர் இல்லையா? அது தான் உன்னையே சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டுட்டாங்க.” அவன் வண்டியை நிறுத்தியபடி கூறினான்.

“என்னை எதுக்கு அத்தான்?” இலக்கியா கேட்க, “அவங்க சொல்லுவாங்க…” கூறியபடி அவன் முன்னே நடக்க, அவள் பின்னே தொடர்ந்தாள்.

விழா தொடங்கியது. இளம் பெண் பேச ஆரம்பித்தாள்.

         “விதவிதமா அழகா கேக் செய்யறவங்களை எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தில் பிறந்தநாள் வர்ற இந்த ஏரியாவில் இருக்கிற அநாதை குழந்தைகளுக்கும், கஷ்ட்டப்பட்ட குழந்தைளுக்கும் பல வருஷமா இலவசமா கேக் செய்து தரவங்களை நமக்கு தெரியாது.” பேச்சை நிறுத்தி, அந்த பெண் விஜயபூபதி அருகே இருக்கும் இலக்கியாவை பார்த்தாள்.

‘அட, இவங்களுக்கு எப்படி தெரிந்தது?’ என்று இலக்கியா கண்களை விரித்தாள்.

 “குழந்தைகள் மட்டுமில்லை, முதியோர் இல்லத்தில் இருக்கிறவங்களுக்கும், எந்த பணமும் வாங்காம செய்து கொடுக்கறவங்க தான் இலக்கியா. வலது கை கொடுக்கறது இடது கைக்கு தெரிய கூடாதுனு சொல்லுவாங்க. அந்த மாதிரி, அவங்க இப்படி எல்லாம் செய்றது அவங்க குடும்பத்துக்கே தெரியாதுன்னா பாருங்களேன். அவங்க தான் நம்ம சீஃப் கெஸ்ட் இலக்கியா” அவர்கள் அறிமுகப்படுத்தி அழைக்க இலக்கியா முன்னே வந்தாள்.

“நீங்க வளர்ந்து வரும் தொழிலதிபர். உங்க பிசினெஸ் வளர்ச்சி பத்தியும் நீங்க சொல்லணும்” அந்த இளம் பெண், இலக்கியாவிடம் தோழமையுடன் கோரிக்கை வைத்தாள்.

முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் விஜயபூபதி. நான்காம் வரிசையில் துர்கா அமர்ந்திருந்தாள். அவள் அருகே, வந்தமர்ந்தான் ராஜேஷ்.

“ஹாய்… நீங்க அவார்டு வாங்குறதை பார்க்க வந்தேன்.” அவன் கூற, துர்கா அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

இலக்கியாவை காட்டி, “இவங்க விஜயபூதி மனைவி தானே? அப்பாவும், விஜயபூபதியும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ்” ராஜேஷ் கூற, “தெரியும், அப்பா சொன்னாங்க” இயல்பாக பதில் கூறிய துர்காவை ராஜேஷ் மெச்சுதலாக பார்த்தான்.

இலக்கியா முன்னே வந்து பேசினாள்.

“எல்லாருக்கும் வணக்கம். அவங்க சொல்ற மாதிரி எல்லாம் நான் பெருசா எதுவும் செய்யலை. எனக்கு அம்மா, அப்பா கிடையாது. எனக்கு எப்பவும் என் பிறந்தநாள் அப்ப மாமா எல்லாமே வாங்கி தருவாங்க. ஆனால், யாரும் இல்லாத குழந்தைகளுக்கு என்ன செய்வாங்கனு எனக்குள் ஒரு கேள்வி வரும்.”

“என்னால் முடிந்தது ஏதாவது செய்யணும்னு தோணும். என்னால் முடிந்தது இந்த கேக் தான். அப்படி, நான் செய்ய ஆரம்பித்தது தான் இந்த கேக் டொனேஷன்.” அவள் கூற அங்கு கரகோஷம் எழும்பியது.

“எனக்கு அம்மா, அப்பா இருந்தா அவங்க கூட நேரம் செலவழிப்பேன். அப்படி எல்லாம் முடியாத பொழுதை முதியோர் இல்லத்தில் போய் செலவழிக்குறேன். அதில் எனக்கு ஒரு மனநிம்மதி. அவங்களுக்கு வீட்டில் செய்யற கேக் அப்படினா, உடம்புக்கு ரொம்ப கெடுதல் இல்லைன்னு அவங்களுக்காக கொண்டு போவேன். வேற எதுவும் பெருசா நான் செய்யலை” அவள் நிறுத்த, அங்கு அமைதி.

“இந்த எண்ணம் வளர்ந்ததே என் கணவர் கிட்ட இருந்துதான். எந்த பாரபட்சமில்லாமல், எனக்காக சின்ன வயசிலிருந்து எல்லாமே செய்வாங்க. நான் எப்படினு கேட்டால், அவங்க நான் சின்ன வயசிலிருக்கும் பொழுது சொன்ன விளக்கம் தான் காரணம்.” அவள் நிறுத்த, விஜயபூபதியின் கண்களில் ஆர்வம் கூடியது.

“எங்க வீட்டில் இருக்கும் மரத்தில் நிறைய குருவிகள் வாழும். அந்த குருவிகளை காட்டி, குருவிகள் புத்திசாலி, புதுமையா யோசிக்கும், அதே நேரத்தில் ரொம்ப பரந்த உள்ளத்தோடு நடக்குமுன்னு சொல்லுவாங்க. மேல பறப்பதால், பறவைகளின் பார்வை விசாலமானதுன்னு சொன்னாங்க.” இலக்கியா, தன் கணவனை பார்த்தாள்.

அதில் மெல்லிய குறும்பு கூத்தாடியது. அவனும் அவளை பார்த்தான், அவன் கண்களில் ரசனை வழிந்தது.

“நானும் அப்ப தான் குருவிகளை உற்று பார்க்க ஆரம்பித்தேன். அது எப்பவும், கிய்யா… கிய்யான்னு சத்தம் எழுப்பி பறந்துகிட்டே இருக்கும்.” அவளையும் மீறி, அவன் பக்கம் அவள் விழிகள் வளைந்தது.

‘கிய்யா… கிய்யா… மேஜிக்…’ அவன் மனம் அவளிடம் மயங்கியது.

“அந்த குருவிகளுக்கு இல்லாத கஷ்டமா? வேகமா காத்து அடிச்சா, நல்ல மழை பெய்தா அது உடல் நடுங்க ஆரம்பிச்சுரும். ஆனால், அந்த குருவிகள் சோர்ந்து போவதே இல்லை. உயர உயர தான் பறக்கும். நாமளும் அப்படி தான் கஷ்டம் வரும் பொழுது மேல மேல உயரணுமுன்னு யோசிக்கணும்.”

“அந்த பறவைகள் மழையில் சரிந்த கூட்டை தள்ளி இருந்து பார்த்திட்டு அதாவது தன் கஷ்டத்தை தள்ளி வைத்து பார்த்திட்டு திரும்ப சாதாரணமா வாழ ஆரம்பிச்சுரும். நாமளும் அப்படி தான் நம்ம கஷ்டத்தை தள்ளி வச்சி பார்த்தோமுன்னா நம்ம கஷ்டம் சின்னதா தெரியும். அப்புறம் வாழ வழி யோசிச்சா, நம்ம மனசில் நம்பிக்கை பறக்கும். நம்பிக்கையோடு பார்த்தா நிச்சயமா வெற்றி தானே” அவள் உரையை முடிக்க, அங்கு மீண்டும் கரகோஷம்.

அதன் பின் பரிசளிப்பு அரங்கேறியது. ஒவ்வொருவரும் அவர்கள் இதில் ஈடுபட்டதற்கான உந்துதலை பற்றி சில வார்த்தைகள் பேசினர். துர்காவின் முறையும் வந்தது.

“பெண் என்பவள் அன்பின் வடிவம் அப்படின்னு முழுசா நம்புறவ நான். சில நேரம் அருகிலிருந்து அன்பை பொழிவாள். சில நேரம் விலகி இருந்து அன்பை பொழிவாள். அப்படி குடும்பத்துக்காக இல்லாமல் சமுதாயத்துக்கு என் அன்பு தேவைப்படுத்துனு நினைத்து நான் இந்த பணியை செய்ய ஆரம்பித்தேன்.” துர்காவின் குரலில் நிதானம் இருந்தது.

“என் அன்பு இந்த சமுதாயத்துக்கு மட்டும்தான் அப்படின்னு யோசிச்சேன். ஆனால், அன்பு என்பது வரையறை இல்லாதது. இங்கு பறந்து திரியும் குருவிகளை போல அன்பும் கட்டுப்பாடு இல்லாததுனு இலக்கியா நிரூபிச்சிட்டாங்க.” அருகே இருக்கும் இலக்கியாவை பார்த்தாள்.

“குடும்பத்தில் அன்பு செலுத்தும் அதே நேரத்தில் சமூக சேவையில் ஈடுபடலாம். சமூக சேவையில் ஈடுபட்டுக்கிட்டே, குடும்பத்தையும் அழகா பார்த்துக்கலாம். இலக்கியா என் தோழி. அவங்களுக்கு குடும்பத்தில் இல்லாத கஷ்டமா? சமூகம், குடும்பம் இரண்டிலும் அன்பு செலுத்தும் சக்தி பெண்ணிடம் இருக்குன்னு வாழ்ந்து காட்டிய  என் தோழி இலக்கியாவுக்கு வாழ்த்துகள்.” அவள் கூற, இலக்கியா துர்காவை ஆரத்தழுவிக் கொண்டாள்.

இலக்கியாவின் கண்களில் நீர்த்துளி. துர்காவின் கண்களிலும் நீர்த்துளி. அதில் வருத்தம் இல்லை. பாரம் இறங்கிய ஓர் உன்னதம்.

‘எத்தனை பரந்த உள்ளம் கொண்டவர்கள் பெண்கள்!’ விஜயபூபதி இருபெண்களையும் பார்த்தான். அவன் முகத்தில் புன்னகை.

‘அன்பும், பாசமும், நேசமும் நிறைந்தவர்கள் பெண்கள்.’ அவன் கண்கள் வாஞ்சையோடு மனைவியை தழுவியது.

ராஜேஷின் பார்வை துர்காவை வட்டமடித்து.

‘எத்தனை பரிவு? எத்தனை கம்பீரம்? எத்தனை நிதானம்?’ இவள் மனம் விரைவில் மாறும் அவன் மனம் உறுதியாக நம்பியது.

அன்று மாலை!

  துர்கா அவள் தோட்டத்தில் உலாவி கொண்டிருந்தாள். மேலே, “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, அவள் அந்த குருவிகளை அண்ணாந்து பார்த்தாள். ‘இலக்கியா கூறியது போல் பறவைகளின் பார்வை விசாலமானது. நாமும் விசாலமான மனதோடு சிந்திக்க வேண்டும். என் மனமும் விரைவில் முழுதாய் மாறிவிடும்.’ அவள் மனதிலும் ஒரு நம்பிக்கையின் ஒளி வீசியது.

அதே நேரம் இலக்கியாவின் தோட்டத்து வீட்டில்…

“கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்பிக்கொண்டு விஜயபூபதி இருக்கும் அறைக்குள் நுழைந்தன.

“குருவி ஏன் வீட்டுக்குள் நுழையுது?” அவன் முன் போல் அதிகாரமாக கேட்க நினைத்து தோற்றான்.

“பெயர் விஜய்யபூபதியா இருந்தா, நீங்க அரசராகிற முடியாது. உங்க கட்டளைக்கு, உங்க கிட்ட கை நீட்டி காசு வாங்குறவங்க பணிந்து நடக்கலாம். தன்மானம் கொண்ட எந்த சுதந்திர பறவைகளும் கட்டுப்படாது.” பவ்யமாக சிரித்த முகமாக கூறி கொண்டே அவன் அருகே வந்தாள் இலக்கியா.

பச்சை நிற சேலை அணிந்திருந்தாள். கழுத்தில் அவன் கட்டிய தாலி. தலைமுடியை சற்று தளர்வாக பிண்ணி இருந்தாள். கருமேக கூந்தல் அவள் இடையை சூழ பொன்னிற மேனியை விட மின்னியது அவள் முகத்திலிருந்த புன்னகை.

அவளை இடையோடு தூக்கி அவன் முன் நிறுத்தினான் அவள் கணவன்.

“நான் சொன்ன கதையை வைத்து எனக்கே நீ கிய்யா… கிய்யா மேஜிக் காட்டிருக்குற?” அவன் புருவம் உயர்த்த, “அது தான் விளக்கம் சொல்லிட்டேன்னிலை. இனி கிய்யா… கிய்யா… மேஜிக்குன்னா என்னனு கேட்க கூடாது.” அவள் ஆள் காட்டி விரலை உயர்த்தி அவனை மிரட்டினாள்.

“கிழிச்ச… அதெல்லாம் ஒரு விளக்கம்? மொக்கை… மொக்கையா… ஊரை கூட்டி மரண மொக்கையா ஒரு விளக்கம் கொடுக்குற? கிய்யா… கிய்யா மேஜிக்குனா நான் என்னனு சொல்லட்டுமா?” அவன் ராகம் பாடினான்.

“தேவை இல்லை அத்தான். நான் கேட்கலை, நீங்களும் சொல்ல வேண்டாம்” அவள் விலக எத்தனிக்க, அவன் அவள் கைகளை பிடித்து மோதிரம் அணிவித்தான்.

அதில், “கிய்யா…” என்று கற்களால் இருக்க, “அத்தான் என்ன இது?” அவள் வாய் பொத்தி கண்களை விரித்தாள்.

“உனக்கு ஒரு கனவு வருமே, அது எப்படின்னு நீ செய்து காட்டு. நான் சொல்றேன்” அவன் உதட்டை மடித்து சிரிக்க, “ஐயோ… அத்தான்…” அவள் முகம் மூடி வெட்கப்பட்டு சிரித்தாள்.

“கேடி… என் கிட்ட சொல்லலை தானே?” அவன் கேட்க, “நீங்க மட்டும் என்னவாம்? அன்னைக்கு மரத்தோட கிளை தானா விலகலை. நீங்க தான் விலக வச்சி என்னை விழ வச்சீங்க?” அவள் வெட்கத்தை மறந்து அவனிடம் சண்டைக்கு சென்றாள்.

‘நானா அசருவேன்?’ என்பது போல், அவனோ, “இல்லைனா நான் உனக்கு எப்படி மேஜிக் கத்து கொடுக்கறது?” என்று அவள் தலையில் மோதினான்.

“அத்தான், இது என்ன?” அவள் மோதிரத்தை நீட்ட, அவள் மோதிர விரலில் இதழ் பதித்து, “இலக்கியா… உன் பெயரில் உள்ள கியா… என்னை நீ கூப்பிடுவியே இழுத்து, விஜய்யபூபதி… அப்படின்னு, அதுல வர்ற, ‘ய்..’ உன் கிட்ட நான் மாட்டிக்கிட்ட மாதிரி உன் பெயருக்கு இடையில் என் எழுத்து ‘ய்..’ எல்லாம் சேர்ந்து, ‘கிய்யா…’ எப்புடி?” அவன் தன் சட்டை காலரை உயர்த்திவிட்டு கொண்டான்.

“எல்லாரும் அன்பா கிஃப்ட் கொடுப்பாங்க. நீங்க என்னை கேலி செய்ய கிஃப்ட் கொடுத்திருக்கீங்க அத்தான்.” அவள் அவன் மார்பில் குத்த, “உன்னை மாதிரி அடாவடி மனைவிக்கு இப்படி தான் கிஃப்ட் கொடுக்க முடியும்” அவன் கூற, அவள் முறைத்தாள்.

“யாராவது கேட்டா நான் என்ன சொல்லுவேன்?” அவள் கேட்க, “கிய்யா… கிய்யா… மேஜிக்ன்னு சொல்லு. நீ இன்னைக்கு சொன்ன மாதிரி அன்பு, பாசம், நேசம், நம்பிக்கைன்னு சொல்லமால், நான் சொல்லி கொடுக்கறதை சொல்லு” அவன் கண்களில் குறும்பு மின்னியது.

அங்கு குருவிகள் “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் எழுப்பிக்கொண்டு பறக்க, அவன் செவியோரம் ரகசியத்தை கிசுகிசுத்தான். அவன் அருகாமையில் அவன் கிசுகிசுப்பில் அவன் சுவாசா காற்றில் அவள் முகம் சிவந்தாள்.

கிய்யா… கிய்யா…
அவர்களின்…
ரகசிய ஒலி!
அன்பின் ஒலி!
பாசத்தின் ஒலி!
நேசத்தில் ஒலி!
நம்பிக்கையின் ஒலி! 

கிய்யா… கிய்யா… கிய்யா… கிய்யா…

எல்லோர் வாழ்விலும் அன்பின் கானம் ஒலிக்கட்டும்.

அன்புடன்,

அகிலா கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!