kiyaa-3

coverpage-ac378ae2

kiyaa-3

கிய்யா – 3

இலக்கியா தன் வீட்டில், “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் செய்து கொண்டு  குறுக்கே பறந்து கொண்டிருந்த குருவிகளுக்கு, தானியங்களை தூவி கொண்டிருந்தாள்.

“இலக்கியா, உங்க மாமாவுக்கு நீ பண்ண கேக் ரொம்ப பிடிக்கும். அங்க போய் கொடுத்துட்டு வாயேன்.” பழனியம்மாள் கூற, “பாட்டி, அங்க அத்தை இருப்பாங்க. மூஞ்சியை காட்டுவாங்க. நான் போக மாட்டேன். உங்க மகன் மேல அவ்வளவு அக்கறை இருந்தா நீங்க போய் கொடுத்துட்டு வாங்க.” இலக்கியா பாட்டியின் முன் சண்டை கோழியாய் நின்றாள்.

“ஐயோ, நான் போனால், வம்பு வரும் டீ. என் பேரன் கூட இப்ப வீட்டில் இல்லை.” பாட்டி மறுப்பு தெரிவிக்க, “அதே தான், நான் போனாலும் வம்பு வரும்” இலக்கியா கழுத்தை திருப்பி கொண்டாள்.

“கொஞ்சம் பொறுமையா பேசி கொடுத்திட்டு வாயேன்.” பாட்டி கெஞ்ச, இலக்கியா அதே வளாகத்தில் இருக்கும் தன் மாமாவின் வீட்டிற்கு சென்றாள்.

இலக்கியாவை பார்த்ததும் விஜயபூபதியின் தாய் முகத்தை திருப்பி கொண்டு உள்ளே செல்ல, ‘முகத்தை திருப்பிக்கிட்டா போறீங்க? இருங்க உங்களுக்கு வைக்கிறேன் வேட்டு’ மனதிற்குள் கருவி கொண்டாள் இலக்கியா.

ரங்கநாதபூபதி இருக்கும் அதே அறையில் நிர்மலாவிதேவியும் அமர்ந்தார். ‘மாமாவும் மருமகளும் என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்போம்.’ அவர் பார்வையை எங்கோ செலுத்தி, செவிகளை இவர்கள் பக்கம் பறக்க விட்டார்.

“மாமா, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்க நல்ல மனசுக்கு, எல்லாம் நல்லதாகவே நடக்கும். இந்தாங்க உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்.” என்று சிரித்த முகமாக கூறினாள் இலக்கியா.

‘திமிர் பிடித்தவள். சிலை மாதிரி நான் இதே ரூமில் இருக்கேன். எனக்கு ஒரு வார்த்தை புத்தாண்டு வாழ்த்து சொன்னா இவ கெளரவம் குறைந்து போய்டுமா?’ கருவியபடி, தன் பார்வையையும் இப்பொழுது இவர்கள் பக்கம் பறக்கவிட்டார் நிர்மலாதேவி.

‘இப்ப தான் கண்ணுக்கு தெரியறேனா? நான் வீட்டுக்கு வந்தப்ப, என்னை ஒரு வார்த்தை வான்னு சொன்னால் இவங்க வாயில் இருந்து முத்தா உதிர்ந்து போய்டும். இல்லை இவங்க சொத்தில் மதிப்பு குறைஞ்சி போய்டுமா?’ இலக்கியா அத்தையின் பக்கம் பார்த்தும் பார்க்காதது போல் முகத்தை திருப்பி கொண்டு, மாமாவின் முன் நின்று கொண்டிருந்தாள்.

“உட்காரு மா.” ரங்கநாதபூபதி கூற, “நிறைய வேலை இருக்கு.” நிர்மலாதேவி கூற, கிளம்ப எத்தனித்த இலக்கியா மாமாவின் எதிரே  சோபாவில் அமர்ந்தாள்.

“அத்தான் இல்லையா? அத்தானுக்கும் விஷ் பண்ணலாமுன்னு நினைச்சேன்…” ஏதும் அறியாதவள் போல் கண்களை சுழலவிட்டாள் இலக்கியா.

“என் மகனை அத்தான்னு சொல்ல கூடாதுனு நான் சொல்லிருக்கேன் இல்லையா?” நிர்மலா தேவி கேட்டுக்கொண்டே தன் கணவரின் அருகில் அமர்ந்தார்.

“என் மாமா பையனை அத்தான்னு கூப்பிடாம, அண்ணன்னா கூப்பிட முடியும்?” என்று இலக்கியா தன் பற்களை காட்டி நியாயம் கேட்டாள்.

“வந்த வேலை முடிச்சிருச்சு இல்லையா? உங்க மாமாவுக்கு ஸ்வீட் கொடுத்தாச்சு. வாழ்த்தும் சொல்லியாச்சு. கிளம்ப வேண்டியது தானே? இல்லை, என் பையனுக்கு பொண்ணு பார்க்கறியா?” அவர் குரலில் நக்கல் இருந்தது.

“நான் என் பையனுக்கு பொண்ணு பார்க்க போறேன். எல்லாம் பெரிய இடம். அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்க.” அவர் பேச, இலக்கியா சுருக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

“நிர்மலா…” கணவனின் அதட்டலில், “நான் பொதுவா சொன்னேன்.” அவர் உதட்டை சுளித்து கொண்டார்.

“நான் எதுவும் சொல்லலை. இவ அத்தான், அத்தான்னு கூப்பிட்டுக்கிட்டு இந்த வீட்டையே சுத்தினா, என் மகனுக்கு வரபோற மனைவிக்கு கோபம் வராதா? அப்புறம், என் வருங்கால மருமகள் ஏதாவது சொல்ல, உங்க தங்கை பொண்ணு… பாவம் தாயில்லா பொண்ணு மனசு கஷ்டப்பட கூடாதேன்னு இப்பவே சொல்றேன்.” என்று நிர்மலா பட்டும்படாமலும் கூறினார்.

‘இன்னமும், மருமகள் யாருன்னே தெரியாது. அதுக்குள்ளே இவ்வளவு பேச்சு…’ என்று எண்ணம் தோன்ற, இலக்கியாவின் முகத்தில் குறும்பு எட்டி பார்த்தது.

“மருமகளை செலக்ட் பண்ணியாச்சா?” என்று தன் அத்தையிடம் கேள்வியை திருப்பினாள் இலக்கியா.

“இதோ, போட்டோஸ் பார்க்குறியா?” என்று அனைத்து புகைப்படங்களையும் நீட்டினார் நிர்மலாதேவி. ஒவ்வொரு பெண்ணையும், பின்புலத்தோடும், வசதியோடும் பெருமையாக கூறினார்.

தன் மனைவி மற்றும் இலக்கியாவின் பனிப்போர் அறிந்ததால் ரங்கநாதபூபதி இவர்கள் பேச்சை மௌனமாக பார்த்து கொண்டிருந்தார்.

அனைத்து புகைப்படங்களையும் ஆர்வமாக பார்த்த இலக்கியா, “எல்லாருமே ரொம்ப அழகா இருக்காங்க. வசதியாவும் இருக்காங்க? எல்லாரையும் அத்தானுக்கு கட்டி வச்சிருவீங்களா?” அப்பாவியாக கண்களை விரித்தாள்.

“என்ன நக்கலா?” என்று நிர்மலாதேவி முறைக்க, “நக்கல் எல்லாம் இல்லை, ஒரே ஒரு குறை தான். இந்த ஃபோடோஸில் அத்தான் லவ் பண்ற பொண்ணு இல்லையே.” என்று பாவமாக உதட்டை சுளித்தாள்.

“என்ன சொல்ற இலக்கியா?” இப்பொழுது நிர்மலா தேவி கைகளில் இருந்த புகைப்படங்களை தவறவிட்டபடி குரலை உயர்த்த, ‘என் கிட்ட ஃபோட்டாவை காட்டி என்னை மட்டமா தட்டுறீங்க. வைத்தேனா வெட்டு’ என்று புன்னகைத்து கொண்டே, “எஸ்… உங்க பையன், என் அத்தான் லவ் பண்ற பொண்ணு ஃபோட்டோ இதில் இல்லை.” என்று கூறிவிட்டு சோபாவில் இருந்து எழுந்தாள்.

“மாமா, நான் வீட்டுக்கு கிளம்புறேன். நேரமாச்சு…” என்று கூறி அவள் வீட்டை  நோக்கி சிட்டாக பறந்தாள்.

அதே நேரம், துர்காவிடம் பேசியபடி தன் காரை செலுத்தி கொண்டிருந்தான் விஜயபூபதி.

“துர்கா, நான் சீக்கிரம் வீட்டில் பேசிட்டு, உன்னை பெண் பார்க்க வரேன். உங்க வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம். எங்க வீட்டில், நான் லவ் பண்றதா சொல்லி, கூட்டிட்டு வரேன். உன் ஸைடில் எந்த ப்ரோப்ளேமோ, கஷ்டமோ உனக்கு வர கூடாது.” அவன் சாலையை பார்த்தபடி கூற, அவனை காதல் பொங்க பார்த்தாள் துர்கா.

“தேங்க்ஸ், பூபதி.” அவள் குரல் உருகி வழிய, “இந்த தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம், நான் தேங்க்ஸ் எல்லாம் வேற வழியில் வசூல் பண்ணிக்கிறேன்.” அவன் கூற, “உன்னை….” அவன் கைகளில் குத்தினாள் துர்கா.

“ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரிக்க, “ரவுடி மாதிரி சிரிக்குற, ரவுடி மாதிரி பேசுற…” அவள் செல்லமாக சிணுங்க, “என் ஸ்வீட் லவ்வர் கிட்ட இப்படி எல்லாம் பேசாம, வேற யார் கிட்ட பேசப்போறேன்?” அவன் கண்சிமிட்ட, அவள் முகத்தில் வெட்க புன்னகை.

“துர்கா…” அவன் ஆழமான குரலில் அழைக்க, “ம்…” அவள் அவனை பார்க்க, “அப்படி எல்லாம் பேச கூடாதா?” அவன் புருவம் உயர்த்த, பேச்சின் போக்கு செல்லும் திசையை ஊக்குவிக்காதவள் போல், “தேங்க்ஸ் பூபதி… நான் எங்கயும் கஷ்டப்பட கூடாதுன்னு நினைக்குற, உன் நல்ல மனசு தான் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம்.” அவள் அவன் காதலன் என்ற தூரத்தில் அவனை கண்ணியமாக நிறுத்தினாள்.

அவன் தன் காதலியின் ஒவ்வொரு செயலையும் ரசித்து சிரித்து கொண்டான்.

அப்பொழுது அலைபேசி ஒலிக்க, “அம்மா கூப்பிடுறாங்க. அம்மா சும்மா கூப்பிட மாட்டாங்களே?” அவன் புருவம் உயர்த்தி, சந்தேகமாக முணுமுணுக்க,அலைபேசி ஒலி நின்றது.

அடுத்த அலைபேசி ஒலியாக, இலக்கியாவின் அழைப்பு வர, ‘இவளும் கூப்பிடுறா? எதுவும் பிரச்சனையோ?’ அவன் அவள் அழைப்பை ப்ளூ டூத்தில் பேச ஆரம்பித்தான்.

“மிஸ்டர் விஜய்யபூபதி… இலக்கியா ஹியர்…” என்றாள்.

அவள் குரலில், பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்று கண்டுகொண்டவன், “சொல்லுங்க மேடம்…” என்றான் அவனும் அவளை போல்.

“உங்க லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சி போச்சு” என்று அவள் கூற, அவன் சட்டென்று வண்டியை நிறுத்தினான்.

“என்ன சொல்ற? எப்படி?” தாயின் அழைப்புக்கும் காரணம் அறிந்து கொண்டவன் போல் கேட்டான்.

“நான் தான் சொன்னேன்.” அவள் எதிர்முனையில் தோள்களை குலுக்க, “கிராதகி… நான் பக்குவமா சொல்லனுமுன்னு நினச்சேன்.” அவன் பற்களை நறநறக்க, “நானும் பக்குவமா சொல்லாம இருக்கணுமுன்னு தான் நினச்சேன். ஆனால், உங்க அம்மா ஓவர் பேச்சு. அது தான் சொல்ல வேண்டிய கட்டாயம். இருந்தாலும், என்னை மாதிரி நல்லவங்க செய்யுற எல்லா செயலும் நல்லபடியா தான் முடியும். அதனால், பயப்படாம விஷயத்தை பேசி முடிச்சிருங்க.” என்று நாக்கை துருத்தி தன் பேச்சை முடித்து கொண்டாள் இலக்கியா.

“எதுவும், பிரச்சனையா?” துர்கா விஜயபூபதியை பார்த்தபடி கேட்க, “லைட்டா… ஆனால், சமாளிச்சிறலாம். நீ கவலை படாத. நான் உங்க வீட்டுக்கு சீக்கிரம் வருவேன்.” அவன் அவளை பத்திரமாக இறக்கிவிட்டு, தன் வீட்டை நோக்கி பயணித்தான்.

சில நாட்களில் துர்காவின் வீட்டில்!

ஒருவாறு தன் வீட்டினரை சமாளித்து, விஜயபூபதி தன் வீட்டினரை துர்கா வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

          துர்காவும் வீட்டில்  விஜயபூபதி பற்றி பட்டும்படாமலும் சொல்லி வைத்திருந்தாள்.

விஜயபூபதி வீட்டிலிருந்து  பெரிய காரில் வந்து இறங்கினர்.  விஜயபூபதியின் தாயார் வைரத்தில் மின்ன, விஜயபூபதியின் உடையும், நடையும் அவன் செல்வச்செழிப்பை கூறியது.

    ‘ஐயோ… இது என்ன? ரொம்ப பெரிய பணக்காரங்களா இருப்பாங்க போல! இது சரிப்பட்டு வருமா?’ என்ற கவலை துர்காவின் தாயின் மனதில் எழுந்தது.

          “துர்கா…” துர்காவின் தாய் கலைச்செல்வி அவளை எதுவோ எடுத்துவர சொல்ல, “அதெல்லாம் வேண்டாம்ங்க. நோ ஃபார்மாலிட்டீஸ். துர்கா எங்களோட இருக்கட்டும்.” அவள் சங்கடம் அறிந்தவன் போல் விஜயபூபதி பேச, ஒரு வாசகம், திருவாசகம் என்பது போல் ஒரே செயலில் சட்டென்று துர்காவின் வீட்டில் நூற்றுக்கு நூறு வாங்கிவிட்டான் விஜயபூபதி.

துர்கா நீல நிற பட்டு சேலையில் இருந்தாள். அவள் விழிகள் அழகாய் அபிநயம் பேசியது. அந்த அபிநயத்தில் விஜபூபதிக்கான அன்பும், அவள் வயதிற்கே உரிய காதலும் இருந்தது.

பெரியவர்கள் இருக்கிறார்கள் என்று அவள் இதழ்கள் மௌனம் காத்தாலும், அவள் கண்கள் மௌன விரதத்தை கைவிட்டிருந்தது.

விஜயபூபதியின் தாய் துர்காவின் வீட்டை தன் கண்களால் அளவிட்டு கொண்டிருந்தார்.  ‘இந்த வீடு பூபதியின் ரூம் அளவுக்கு கூட இல்லை. இதை எல்லாம் பார்த்து காதலிக்க மாட்டானா? இதை தான், காதலுக்கு கண் இல்லை. அறிவு இல்லைனு சொல்றாங்களோ?’ என்ற எண்ணத்தோடு  நிர்மலாதேவி தன் பார்வையை மகனின் பக்கம் திருப்பினார்.

‘அறிவு, கண், வெட்கம் இப்படி அனைத்தயும் தாண்டியது தான் காதல்…’ என்று நிரூபித்து கொண்டிருந்தான் விஜயபூபதி. அவன் கண்களில் அவளுக்கான அன்பு, அவளை தன்னவளாக்க வேண்டும் என்ற தவிப்பு மட்டுமே இருந்தது.

மகனின் விருப்பம், மகளின் ஆசை  இரண்டும் அங்கு பெற்றோரின் தடங்கல்களை தவிடுபொடியாக்கி அவர்கள் திருமண பேச்சை வெற்றிகரமாக முடித்து வைத்தது.

அன்று விஜயபூபதி, துர்கா நிச்சயதார்தம்!

கூட்டம் அலைமோதியது. எங்கும் செல்வச்செழிப்பு. இவர்கள் செல்வச்செழிப்பை  அறிந்த இலக்கியாவே சற்று அசந்து தான் போனாள். அப்படி என்றால் துர்கா வீட்டினரை பற்றி சொல்லத் தேவையே இல்லை. வாயடைத்து போயிருந்தார்கள்.

தாம்பூலம் மாற்றி நிச்சயம் செய்வதற்கான மணமேடை  நீல நிறத்தில் வெள்ளி நிறத்தில் கதிர் வீச்சுக்கள் வீசுவது போல் அமைக்கப்பட்டிருந்தது.  

     மனிதர்கள் வாழும் இடமா, தேவர்கள் வாழும் இடமா என்று வந்திருந்த உறவினர்கள் சந்தேகிப்பது போல் தேவலோகமாய் காட்சி அளித்தது அந்த மணமேடை.

“எவ்வளவு தான் காசு இருந்தாலும், இந்த ஆர்ப்பாட்டம் ரொம்ப ஓவரா இருக்கு பாட்டி” என்று மணமேடைக்கு கீழே அமர்ந்திருந்த இலக்கியா, தன் அருகே அமர்ந்திருந்த பாட்டியின் காதில் கிசுகிசுத்தாள்.

தேவலோக தேவர்களும் அதையே நினைத்திருப்பார்களோ?

சிறகுகள் விரியும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!