kiyya-7

coverpage-16680859

கிய்யா – 7

 இலக்கியா தான் பேசிய பேச்சில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர, “என்ன டீ பேசுறதை எல்லாம் பேசிட்டு, நல்லவ மாதிரி நடிக்கிற?” நிர்மலாதேவி அவள் முன் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு கோபமாக நிற்க, இலக்கியா விசுக்கென்று அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன டீ அப்படி பார்க்குற? உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு உன் அம்மா ஞாபகம் தான் வருது. அதோட, அவ செய்த துரோகமும். நான் இழந்ததும் தான்.” அவர் பேச, இலக்கியா அவரை கையெடுத்துக் கும்பிட்டாள்.

நிர்மலாதேவியின் கண்கள் கலங்கியது. “நான் இழந்தது எவ்வளவு தெரியுமா? என் வலி உனக்குப் புரியுமா? நீ அப்படிப்பட்ட அம்மாவுக்கு பிறந்தவ தானே?” நிர்மலாதேவி இலக்கியாவை இன்னும் நோகடிக்க, இலக்கியா அங்கிருந்து விலகிச் செல்ல எத்தனித்தாள்.

“நில்லு, எங்க ஓடுற? நான் என் பையன் விஷயத்தில் ஏமாறவே மாட்டேன்.” அவர் சூளுரைக்க, இலக்கியா அவரை சோர்வாகப் பார்த்தாள்.

 “உங்களை யாரும் ஏமாத்த போறதில்லை. நீங்களே இப்படி சபதம் போட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க” அவள் கூற, “என்ன நக்கலா? நீ இப்ப இங்க பேசினதை என் மகன் கிட்ட சொல்லி, இப்பவே உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பறேன் பாரு.” அவர் சபதமிட்டார்.

 “முடிஞ்சா பண்ணுங்க” அவள் உதட்டில் நக்கல் புன்னகையோடு ஒயிலாக நடந்து விஜயபூபதியின் அறைக்குள் நுழைந்தாள்.

“திமிர்… திமிர்…” அவர் அதரங்கள் அவள் நடையைப் பார்த்து அழுத்தமாக உச்சரித்தது.

விஜயபூபதியின் அறைக்குள் சென்ற இலக்கியா அவன் கட்டிலை திருகினாள். அது சற்று மேலே உயர்ந்தது. அவள் உதவியோடு அவன் அமர்த்தப்பட்டான்.

அவன் முகத்தில் இந்த செய்கையில் வலி இருந்தது. இலக்கியா, அவனை ஆழமாகப் பார்த்தாள். ‘அத்தானுக்கு ஏன் இந்த நிலைமை?’ அவளுள் கேள்வி கனன்றது.

“எனக்கு எதுவுமே வேண்டாம் இலக்கியா. தயவு செய்து நீ இங்க இருந்து போறீயா?” அவன் முகச்சுளிப்போடு கேட்டான்.

“ஏன் விஜய்யபூபதி, இந்த ஏழை வீட்டுக் கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட மாட்டீங்களா?” அவள் குதர்க்கமாகக் கேட்க, அப்பொழுது அந்த அறைக்குள் நிர்மலாதேவி நுழைந்தார்.

தன் மகன் சரியாகச் சாப்பிடுவதில்லை நிர்மலா தேவியின் மனம் தாயாக வருந்தியது.

“நான் அப்படி சொன்னேன்னா?” அவன் கேட்க, “நீங்க சொன்னதுக்கு அப்படி தான் அர்த்தம்” அவள் பிடிவாதமாகக் கூற, அவன் அவளிடம் பெற்றுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

“உங்களுக்கு பிடிக்குமுன்னு பாசிப்பருப்பு வறுத்துப் போட்டு இனிப்பு பிடி கொழுக்கட்டை. அப்புறம் தேங்காய் போட்டு, காரக்கொழுக்கட்டை.” அவள் கொடுக்க, அவன் உதட்டில் மெல்லிய புன்னகை.

நிர்மலாதேவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“என்ன இலக்கியா? இப்ப தான் உங்க மகனுக்கு சேவை செய்ய நான் என்ன மதர்தெரேசாவா இல்லை ஃபிளாரென்ஸ் நைடிங்கேலான்னு கேட்ட? அதுக்குள்ள இப்படி சேவை செய்யுற?” அவர் தன் மன பாரத்தை போட்டு உடைத்தார்.

அங்கு மயான அமைதி நிலவியது. விஜயபூபதி இலக்கியாவை கூர்மையாகப் பார்த்தான்.

“நான் எப்ப அப்படி சொன்னேன்?” என்று இலக்கியா தன் அத்தையைப் புரியாதவள் போல் பார்த்தாள்.

‘கிராதாகி’ அவர் கண்களை விரிக்க, “நான் இப்ப அத்தானுக்கு சாப்பாடு கொடுக்கறேன். அவ்வளவு தான். இதுல சேவை எதுவும் இல்லை.” நறுக்கென்று அவள் பதில் கொடுத்தாள்.

“உங்க மகனுக்கு உடம்பு சரி இல்லைன்னு நீங்க உங்க மகனை பார்க்கறீங்க. அதுக்கு பெயர் சேவையா? நீங்க அப்படி நினைக்குறீங்களா? நான் என் அத்தானை பார்த்துக்கிட்டாலும் அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன்” என்று இலக்கியா அவரை மடக்கினாள்.

“நான் அந்த அர்த்தத்தில் பேசலை. நீ பேசினதுக்கு அது தான் அர்த்தம்” நிர்மலாதேவி நிலையாக நிற்க, “நான் என்ன பேசினேன்னு எனக்கு ஞாபகம் இல்லை. நீங்க என்ன சொன்னீங்கன்னு சொல்லுங்க. நானும் நான் என்ன சொன்னேன்னு சொல்றேன்” இலக்கியா இப்பொழுது அவரிடம் சவால் விடும் விதமாக கூறினாள்.

‘பாவி, நான் பேசினதை சொல்ல முடியாதுன்னு இப்படி சொல்றாளே?’ அவர் இவளை முறைத்து பார்க்க, “அம்மா, இலக்கியா சின்ன பொண்ணு, ஏதாவது பேச தெரியாமல் பேசிருப்பா. அதை எதுக்கு பெருசு படுத்தறீங்க” விஜயபூபதி பரிவாக கூறினான்.

“சின்னவங்களுக்கு இருக்கிற அறிவு பெரியவங்களுக்கு இல்லை.” முணுமுணுத்து கொண்டே வெளியே சென்றார் ரங்கநாத பூபதி.

வேறுவழியின்றி நிர்மலாதேவியும் வெளியே செல்ல, ‘இலக்கியா செத்த… தப்பிச்சி ஓடிரு.’ என்று எண்ணியபடி நழுவ எத்தனிக்க, “இலக்கியா…” அவன் குரல் கர்ஜித்தது.

“….” அவள் அவனைப் பரிதாபமாக பார்த்தாள்.

“எங்க தப்பிச்சு ஓட பார்க்குற?” அவன் புருவம் உயர்த்தினான்.

“அதாவது, நான் நடந்து வந்து உன்னை பிடிக்க முடியாதுங்குற தைரியத்தில் ஓட பார்க்குற?” அவன் புருவங்கள் நெரிந்தது.

“லூசா நீங்க. இப்படி எக்குத்தப்பா பேசிகிட்டு.” அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“சரி, அம்மா கிட்ட என்ன சொன்ன?” என்று அவன் கிடுக்குபிடியாகக் கேட்க, அவள் நழுவ முயன்றாள்.

அவன் அவள் கைகளைப் பிடித்திருந்தான். அவன் பிடி உடும்பு பிடியாக இருந்தது.

“இடுப்புக்கு கீழ தான் வேலை செய்யாது. கை நல்ல பலமா இருக்கு” அவன் குரலில் வெறுப்பு.

அவள் கண்கள் கலங்கியது. “ஏன் அத்தான் இப்படி பேசறீங்க? இப்படி பேசாதீங்க.” அவள் குரல் அவனிடம் கெஞ்சியது.

“உங்களை நம்பி பலர் இருக்காங்க அத்தான். நீங்க இப்படி பேசலாமா? நீங்க தைரியமா பேச வேண்டாமா? தைரியமா மட்டும் தானே பேசணும். அப்ப தானே எங்களுக்கு பிடிக்கும்” அவளுக்கு காரியம் ஆக வேண்டும் என்னும் பொழுது மட்டும் தழைந்து போகும் அவள் குரல் அவன் மனதைத் தொட, கண்களை இறுக மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். 

‘என்னை நம்பி பலர் இருக்காங்களோ என்னவோ. நீயும், உன் தம்பியும் இருக்கீங்க. நான் நிதானிக்க வேண்டும். உங்களை கரை சேர்க்கவாவது நான் எழ வேண்டும்.’ அவன் எண்ணத்தின் பிடியில் அவன் கைகளின் பிடி தளர்ந்தது.

“அம்மா, உன்னை எதுவும் சொன்னாங்களா?” அவன் அக்கறையாகக் கேட்டான்.

அவள் மறுப்பாகத் தலை அசைத்தாள். அவள் முகத்தில் விரக்தி புன்னகை. ‘நான் கேட்காத பேச்சா?’ அவள் கண்கள் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டது.

“இலக்கியா…” அவன் குரல் இப்பொழுது இளகி ஒரு வேண்டுதலை வைக்கத் தயாரானது.

“பணக்கார விஜயபூபதி கூட இலக்கியா கிட்ட உதவி கேட்பாரா?” அவள் சூழ்நிலையைச் சமன் செய்ய முயற்சித்தாள்.

அவன் குரலில் அவள் அவனைக் கண்டுகொண்டதில் அவன் சிரித்துக் கொண்டான்.

“நீ என்ன பேசியிருந்தாலும், மனசுல இருந்து பேசியிருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்.” அவன் கூற, அவள் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.

“அத்தான், உங்களுக்கு ஒன்னுனா பார்க்க வேண்டியது என் கடமை. நான் சொன்ன வார்த்தை தப்பு தான். ஆனால்,” அவள் மென்று விழுங்க, அவன் மறுப்பாகத் தலை அசைத்தான்.

“அம்மா பாவம். அவங்க நிலைமையிலிருந்து யோசிச்சி பாரு. அவங்களை காயப்படுத்தாத ப்ளீஸ்.” அவன் தன் தாய்க்காக இறங்கிப் பேச, ‘எல்லாருக்கும் நல்லது நினைக்கும் அத்தானுக்கு ஏன் இந்த நிலைமை.’ அவள் மனம் அவனுக்காக வருந்தியது.

“அம்மா, என்ன பேசினாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்” அவன் குரலிலிருந்த உறுதியில், அவள் அவனை விசுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் கிளம்புறேன் விஜயபூபதி” அவள் கூற, அவன் உதட்டில் நமட்டு புன்னகை.

“நான் உனக்கு சப்போர்ட் பண்ணி அம்மா கிட்ட பேசினேன் தானே?” அவள் கோபத்தை அவன் சமாதானம் செய்ய முயல, “நீங்க சப்போர்ட் பண்ணிருக்கவே வேணாம்.” அவள் கழுத்தை நொடித்துக் கொண்டாள்.

“இலக்கியா…” அவன் குரல் இப்பொழுது உயர்ந்தது.

“நீங்க எப்பவாவது தான் என் மாமா மாதிரி நல்ல குணம். மத்தபடி உங்க அம்மா மாதிரி தான்” அவள் கோபமாக எழுந்து கொள்ள, “நீ என்னை என் அம்மா மாதிரி சொல்லலாம். ஆனால், எங்க அம்மா உன்னை உங்க அம்மா…” அவன் வார்த்தைகள் அங்கு நின்றுவிட, அவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள். பளபளத்த அவள் கண்ணீரை, அவள் விழிகள் அடக்கிக் கொண்டது.

“மிஸ்டர். விஜயபூபதி நான் உங்களை பார்க்க வரலை. உங்க மேல பரிதாபப்பட்டு வரலை. உங்க மேல இருக்கிற அக்கறையில் வரலை. என் பாட்டி உங்களுக்கு கொழுக்கட்டை பிடிக்கும்முன்னு சொன்னாங்க. அதை கொடுக்க சொன்னாங்க கொடுக்க வந்தேன். உங்களுக்கு எது பிடிக்கும்… எது பிடிக்காதுன்னு எனக்கு தெரியாது. பாட்டி சொன்னாங்கனு மட்டும் தான் இங்க வந்தேன். கொடுக்கச் சொன்னதை கொடுத்துட்டேன் கிளம்புறேன்.” விறுவிறுவென்று கதவு வரை சென்றவள் மீண்டும் அவனருகே வந்து நின்றாள்.

“நான் உங்களை மயக்க வந்தேன்னு உங்க அம்மா சொன்னாங்க. நான் நிறுத்துங்கன்னு சொல்லச் சொல்ல அதையே திரும்பத் திரும்ப சொன்னாங்க. அதுக்கு தான் நான், உங்க மகன் நல்லாருக்கும் பொழுதே நான் அவரை கல்யாணம் செய்யணுமுன்னு நினைக்கலை. இப்ப உங்க மகனைக் கல்யாணம் செய்ய நினைக்க நான் என்ன சேவை மனம் கொண்ட மதர்தெரேசாவா இல்லை ஃபிளாரென்ஸ் நைடிங்கேலான்னு கேட்டேன்” அவள் அழுத்தமாகக் கூறினாள்.

“நீங்க எப்பவும் இப்படி இருக்க போறதில்லை. சீக்கிரம் சரியாகிருவீங்க. அது எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். அதனால் தான் நான் அப்படி சொன்னேன். அவங்க பேசினாங்க. நானும் பேசினேன். அவங்க என்னை காயப்படுத்தினாங்க. உங்க அம்மாவைக் காயப்படுத்த மட்டும் தான் நான் அப்படி சொன்னேன். நிச்சயம் உங்களைக் காயப்படுத்த இல்லை. ஆனால், நீங்க என்னை காயப்படுத்திடீங்க” அவள் கோபமாக கூறிவிட்டு கடகடவென்று வாசல் வரை சென்று மீண்டும் உள்ளே வந்தாள்.

“உங்க அம்மா சொல்ற மாதிரி, நான் உங்களை மயக்க நினைச்சிருந்தா, எனக்கு இத்தனை வருஷம் தேவை இல்லை. இடையில் எந்த துர்காவும் வந்திருக்க முடியாது. என் அத்தானை எப்படி என் கைக்குள்ள போட்டுக்கணுமுன்னு எனக்கு தெரியும்முனு உங்க அம்மா கிட்ட சொல்லுங்க. நீங்க வேண்டாம். உங்க குடும்பம் வேண்டாம். உங்க சங்காத்தமே வேண்டாமுன்னு முடிவு பண்ணது நான். இந்த வீட்டில் இருக்க கூடாதுன்னு வெளிய இருக்கிறவ நான்…” அவள் அடுக்கிக் கொண்டே போக, “நீ இன்னும் கிளம்பலியா?” அவன் கண்களை மூடியபடி கேட்டான்.

இலக்கியா கடுப்போடு அவர்கள் வீட்டுக்கு சென்றாள்.

“என்னடி என் பேரனுக்கு கொழுக்கட்டை கொடுத்தியா?” பாட்டி அக்கறையோடு கேட்க, “உங்க பேரனுக்கு கொழுக்கட்டை ஒன்னு தான் குறைச்சல். அடிபட்டு கிடந்தாலும், உங்க பேரனுக்கு துளி கூட கொழுப்பு குறையலை. உங்க பேரனுக்கு மட்டுமா, உங்க மருமகளுக்கும் நக்கல் அதிகமாகத் தான் இருக்கு.” என்று சிடுசிடுத்தாள் இலக்கியா.

“அப்படி என்ன ஆச்சு?” பாட்டி கேட்க, “ஒரு அப்பாவி பொண்ணு போனா, ரெண்டு பெரும் சீண்டுறாங்க” அவள் பற்களை நறநறத்தாள்.

“ரெண்டு பேரு யாரு? விஜய்யும், நிர்மலாவும்மா? அது சரி. ஆனால், அப்பாவி பொண்ணு யாரு இதுல?” பாட்டி சந்தேகம் கேட்க, “என்ன கிழவி நக்கலா? அன்னைக்கு நீங்க மயங்கி விழுந்தப்ப தூக்கிட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும். உங்க பேரனும், மருமகளும் தூக்கிட்டு வரட்டும்முன்னு அப்படியே உங்களை விட்டுருக்கணும்.” இலக்கியா ருத்ர தாண்டவம் ஆட,பாட்டி சிரித்துக் கொண்டார்.

“கிய்யா… கிய்யா” என்று குருவிகள் அவளைச் சுற்றி வர, “நீ வேற ஏன் என் கடுப்பை கிளப்புற?” அவள் குருவியிடம் மட்டும் தான் தன் கோபம் செல்லுபடியாகும் என்பது போலக் கோபித்து கொண்டாள்.

அப்பொழுது விஜயபூபதி வீட்டிற்கு ஒரு கார் வந்தது. காரிலிருந்து துர்காவின் தந்தை குமரன் இறங்கினார்.

 அவர் அந்த வீட்டைப் யோசனையோடு பார்த்தார். இதற்கு முன்னும் இந்த வீட்டை பார்த்திருக்கிறார் குமரன். ஆனால், அன்று தன் மகள் வாழப்போகும் வீடு என்று பார்த்தார். ஆனால், இன்று யாருக்கு வாழ்க்கை கொடுத்து வைக்கவில்லை என்ற பதிலறியா ஏக்கத்தோடு பார்த்தார்.

 நிர்மலாதேவி, துர்காவின் தந்தையை நன்றாக உபசரித்தார். அவரை பேசவிடவில்லை. அவர் வீட்டிற்கு வந்ததே, நிர்மலாதேவிக்கு பயங்கர மகிழ்ச்சியாக இருந்தது. ரங்கநாத பூபதி சற்று அமைதியாக இருந்தார். அவருக்கு குமரனின் மனநிலை புலப்படுவது போல் இருந்தது.

 எதுவாக இருந்தாலும், அவராகப் பேசட்டும் என்று மௌனம் காத்தார் ரங்கநாத பூபதி. 

 நிர்மலா தேவி துர்காவின் தந்தையை விஜயபூபதியின் அறைக்கு அழைத்துச் சென்றார். அவர் விஜயபூபதியிடம் நலன் விசாரித்தார்.

மேலும் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் அவர் தடுமாறினார். “நான் கொஞ்சம் உங்க கிட்ட தனியா பேசணும்.” அவர் ரங்கநாதபூபதியிடம் கூற, “எதுவா இருந்தாலும், இங்கயே பேசுங்க” அழுத்தமாக கூறினான் விஜயபூபதி.

“கல்யாணத்தை கொஞ்ச நாளைக்கு அப்புறம் வச்சுக்கலமா?” குமரன் தயக்கத்தோடு கேட்க, விஜயபூபதியின் தாய் சற்று அதிர்ச்சியாகப் பார்த்தார்.

எதிர்பார்த்தது தான் என்றாலும், அதை அவர் கூற கேட்கையில் ரங்கநாத பூபதி சற்று தடுமாறினார்.

“கொஞ்சம் நாள் எல்லாம் தள்ளி வைக்க வேண்டாம். கல்யாணத்தை நிறுத்திருங்க” உறுதியாக கூறினான் விஜயபூபதி.

“விஜய்” அவன் தாய் அழைக்க, தன் கை உயர்த்தி, அவரை மௌனம் காக்கச் செய்தான்.

“நான் துர்காவை காதலித்தது, அவளோடு நான் சந்தோஷமா வாழணுமுன்னு தான். அவளை சந்தோஷமா வாழ வைக்கனுமுன்னு தான். கஷ்டப்படுத்த இல்லை. எனக்கு எப்ப சரியாகும்முன்னு எனக்கு தெரியாது. எல்லா சரியாகுமான்னு கூட தெரியாது. அதுவரைக்கும் துர்காவை காக்க வைகுறத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இனி துர்காவை இங்க வரவேண்டாமுன்னு சொல்லுங்க” விஜயபூபதி நிதானமாகப் பேசினான்.

அவர் முகத்தில் குற்ற உணர்ச்சி இருக்க, “இதுல நீங்க வருத்தப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை. நடைமுறை வாழ்க்கையை யோசிச்சி தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கேன். எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். நான் கல்யாணம் பண்ணிக்குற மனநிலையில் இல்லை.” அவன் தெளிவாக கூறினான்.

“அது… “அவர் தடுமாற, “எனக்கு துர்கா இங்க வர்றது கூட பிடிக்கலை. அவ கூட பேச பிடிக்கலை. நான் அவ கூட பேசும் பொழுது, ஏதோ அவளுக்கு தப்பான நம்பிக்கை கொடுத்து அவளுக்கு துரோகம் பண்ற மாதிரி இருக்கு” அவன் கோர்வையாக பேசி முடித்தான்.

பேச்சோடு அனைத்தும் முடிந்துவிட்டது என்பது போல் அவன் தன் கண்களை இறுக மூடிக் கொண்டான். அவன் உடல் இறுகி அவன் மனபாரத்தை காட்டியது. 

மேலே என்ன பேசுவது என்று தெரியமால், விஜயபூபதி இடமும் கொடுக்காததால் மற்ற மூவரும் வெளியே சென்றுவிட்டனர்.

எல்லாரும் வெளியே சென்றதும் அவன் கண்களில் நீர்த்துளி. அறிவை முன்னிலை படுத்தி தெளிவாக பேசிவிட்டான். ஆனால், அவன் மனம் பல கேள்விகளோடு முரண்டியது.

‘இந்த ஒரு விபத்தில் எல்லாம் முடிந்துவிட்டதா? என் காதல் முடிந்துவிட்டதா? என் வாழ்க்கை முடிந்துவிட்டதா?’

 அவன் மனம் கதற, தன் கைகளை இறுக மூடினான். அவன் நரம்புகள் புடைத்தன. அவன் கண்களில் நீர்த்துளி.

விஷயத்தைக் கேள்விப்பட்ட, துர்கா மனதில் கோபம் எழுந்தது. 

 ‘இந்த ஒரு விபத்தில் எல்லாம் முடிந்துவிட்டதா? என் காதல் முடிந்துவிட்டதா? என் வாழ்க்கை முடிந்துவிட்டது ?’ 

பூபதி சொல்லிட்டா இந்த துர்கா கேட்கணுமா? அவள் மனம் கதற, அவள் உடல் நடுங்கியது. அவள் கண்களில் ரௌத்திரம் குடிகொண்டது.

‘காதலிக்க மட்டும் இருவர். காதலை வேண்டாமுன்னு சொல்ல ஒருத்தர் போதுமா? என் காதலுக்கு என்ன மரியாதை?’ 

இரண்டில் ஒன்று தெரிந்தே ஆக வேண்டும், என் கேள்விக்கு பதில் கிடைத்தே ஆக வேண்டும் என்று அவள் பெற்றோர் தடுத்தும், விஜயபூபதியின் வீட்டை நோக்கி பயணித்தாள் துர்கா.

சிறகுகள் விரியும்…