kkavithai04

kkavithai04

கவிதை 04

காயத்ரியின் திருமணம் நேற்று முடிந்திருந்தது. கோலாகலம், குதூகலம், கும்மாளம் என அனைத்தும் இனிதாக நிறைவுபெற்று இப்போது வீடு கொஞ்சம் அமைதியாக இருந்தது. ரிஷி அவனது ரூம் பால்கனியில் நின்றிருந்தான். அப்போதுதான் பொழுது புலர்ந்திருந்தது. தொட்டுவிடலாம் எனும் தூரத்தில் மேகப்பஞ்சுகள் பவனி வந்த வண்ணம் இருந்தன.

கல்யாணத்தன்றும் அதற்கு முதல் நாளும் பவித்ராவை அவனால் சரியாகப் பார்க்கக் கூட இயலவில்லை. மணப்பெண் அலங்காரம், மண்டப அலங்காரம் என அனைத்தும் அவள் தலைமையில்தான் நடைபெற்றது. ஆனால் பெண் எங்கேயும் அவள் இருப்பைக் காட்டிக் கொள்ளவில்லை.

பாண்டியனும் அவருக்கு உதவியாக அனைத்து வேலைகளிலும் ரிஷியை பங்கெடுக்க வைத்ததால் அவனாலும் கூட அவளை அணுகிப் பேச இயலவில்லை. திருமணத்தன்று அவள் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். அன்னபூரணி மறக்காமல் அவர்களை ரிஷிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்.

மேகத்தை ரசித்திருந்த ரிஷி இப்போது தனக்குள் புன்னகைத்தான். இந்த அனுபவம் அவனுக்குப் புதிதாக இருந்தது. இதுவரை எந்தப் பெண்ணைப் பார்த்தும் இதுபோல அவன் உணர்ந்ததில்லை. இவள் தன் வாழ்க்கையில் பெரிதாக ஒரு இடத்தை அபகரித்துக் கொள்ளப் போகிறாள் என்று தெளிவாகத் தெரிந்தது.

திருமணம் முடிந்த கையோடு காயத்ரி மாப்பிள்ளை வீட்டிற்குப் போய்விட்டாள். இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வருவார்களாம். இலங்கையில் திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை பெண் வீட்டில் வசிப்பதுதான் வழக்கம். திருமணம் முடிந்த மறுநாள் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு ‘ஹோம் கம்மிங்’ போவதுண்டு. ஒரு சில நாட்கள் மாப்பிள்ளை வீட்டில் புதுத் தம்பதியர் தங்கிவிட்டுப் பெண் வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.

அவனோடு அளவளாவ காயத்ரியும் இல்லாததால் ரிஷி தன் தாபத்தை மேகங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தான். புன்னகையில் முகம் ஊறிக் கிடந்தது. 

“என்னடா கண்ணா தனியாச் சிரிக்கிறே?” சட்டென்று கலைந்த ரிஷி திரும்பிப் பார்த்தான். அன்னபூரணி அவன் அறைக்குள் வந்து கொண்டிருந்தார்.

“அப்பாடா!” வந்ததும் வராததுமாக அங்கிருந்த பெரிய கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தார் அன்னபூரணி.

“அவனவன் எப்பிடித்தான் நாலஞ்சு பொண்ணுங்களை ஒப்பேத்துறானுங்களோ! நமக்கு ஒன்னை ஒப்பேத்துறதுக்குள்ளயே நாக்குத் தள்ளிப்போச்சு!” அன்னபூரணி அங்கலாய்க்க ரிஷி தனது பெரிய தாயின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

“என்னப் பண்ணுது அன்னம்மா?”

“முடியலைடா.” உடம்பில் உபாதை இருந்தாலும் அந்த முகத்தில் தெரிந்த நிம்மதி ரிஷியையும் மகிழ்வித்தது.

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மாதிரி இல்லை ரிஷி?”

“ஆமா அன்னம்மா, அதுலயும் மாப்பிள்ளை தங்கம், மனுஷன் நம்ம காயத்ரி மேலப் பைத்தியமா இருக்காரு.” சொல்லிவிட்டு ரிஷி கலகலவென்று சிரித்தான். அன்னபூரணியும் இளையவனோடு இணைந்து கொண்டார்.

“காயத்ரி இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குதில்லை ரிஷி?”

“ம்… இன்னும் ரெண்டு நாள்தானே அன்னம்மா, சீக்கிரமே வந்திடுவா, கவலைப் படாதீங்க.”

“அதுசரி, நாம எப்ப பவித்ரா வீட்டுக்குப் போறோம்?” திடீரென்று அன்னபூரணி கேட்க ரிஷி திகைத்துப் போனான். 

“அன்னம்மா?!”

“எதுக்கு இவ்வளவு ஆச்சரியப்படுறே ரிஷி? பொண்ணைப் புடிச்சிருக்குதானே?” பெரியவர் கேலி பேச இளையவன் சிரித்தான்.

“உங்களுக்கு என்னைப் பார்த்தாக் கேலியா இருக்கில்லை.”

“ஆமா, அதான் அந்தப் பொண்ணைப் பார்த்தாலே நீ உலகத்தை மறந்து நின்னுடுறியே! பெரியப்பா கூட நேத்துக் கேட்டாங்க.”

“என்னன்னு?”

“ரிஷிக்கு பவித்ராவை பிடிச்சிருக்கான்னு.”

“அவ்வளவு வெளிப்படையாவாத் தெரியுது?!”

“ம்க்கும்… அனேகமாக இந்நேரத்துக்கு அது பவித்ரா வீட்டுலயும் தெரிஞ்சிருக்கும், நமக்கு வேலை மிச்சம் போ!”  அன்னபூரணி இப்படி இங்கே சொல்லிக் கொண்டிருக்கும் போது உண்மையிலேயே பவித்ரா வீட்டில் அதே பேச்சுத்தான் போய்க் கொண்டிருந்தது. காலையில் எல்லோருக்கும் டீயை கொடுத்த ரேணுகா கணவரின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

“என்னங்க.”

“ம்… என்னம்மா?” பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த பாஸ்கர் மனைவியை நிமிர்ந்து பார்த்தார்.

“நம்ம பவிக்கு மாப்பிள்ளைப் பார்க்க வேணாமாங்க?” கேட்ட மனைவியைச் சற்று வினோதமாகப் பார்த்தார் பாஸ்கர்.

“எதுக்குங்க இப்போ என்னை இப்பிடிப் பார்க்கிறீங்க? அப்பிடி என்னத்தை நான் தப்பாக் கேட்டுட்டேன்?”

“அதுக்கில்லை ரேணு, பவித்ரா இப்பதான் படிப்பை முடிச்சிட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சிருக்கா, கொஞ்ச நாளைக்கு அவ நல்லா சம்பாரிச்சு சொந்தக் கால்ல நிக்கட்டுமே, பொண்ணுங்களுக்குச் சுய சம்பாத்தியம் ரொம்ப முக்கியம்மா.”

“அது சரிதான்…” மனைவியின் பதிலில் உயிர்ப்பில்லாமல் இருக்கவே பாஸ்கர் உஷாரானார்.

“என்னாச்சு ரேணு? எதுக்கு நீ இப்ப இவ்வளவு யோசிக்கிறே?”

“அது வந்துங்க…”

“சொல்லு.”

“அன்னைக்கு காயத்ரியோட நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தப்ப உங்க அத்தானோட வைஃப் ஒன்னு சொன்னாங்க.”

“என்ன சொன்னாங்க?”

“இல்லை… நம்ம பவியை அவங்களுக்கு ரொம்பப் புடிச்சிருக்காம்.”

“சரி.”

“எனக்குப் பசங்க இல்லைன்னாலும் குடும்பத்துக்குள்ள இருக்கிற யாருக்காவது நான் பவித்ராவை கேட்பேன், நீ கண்டிப்பாக் குடுக்கணும்னு சொன்னாங்க.”

“சும்மா சொல்லி இருப்பாங்கம்மா, குடும்பத்துக்குள்ள அப்பிடி யாரு இருக்கா எனக்குத் தெரியாம?”

“உங்க பக்கம் இல்லைன்னாலும் அன்னபூரணி அண்ணியோட பக்கம் யாராவது இருக்கலாமில்லை?”

“ஓ… நீ அப்பிடிச் சொல்றியா… எனக்குத் தெரிஞ்சு அப்பிடி… யாருமில்லையே…” பாஸ்கர் தீவிரமாகச் சிந்திக்க,

“கல்யாணத்துக்கு அண்ணியோட தங்கைப் பையன் ஒருத்தர் லண்டன்ல இருந்து வந்திருந்தாரே, கவனிச்சீங்களா?” என்று கேட்டார் ரேணுகா.

“ஆமா, அத்தான், அன்னபூரணி அக்கா ரெண்டு பேரும் எனக்கு அந்தப் பையனை அறிமுகப் படுத்தினாங்களே.”

“ம்… அண்ணி எனக்கும் அந்தப் பையனைக் காட்டினாங்க, எனக்கு… ஒருவேளை அந்தப் பையனுக்கு நம்ம பவியை கேட்பாங்களோன்னு தோணுதுங்க.”

“ஓ…” தாடையை நீவிக்கொண்டு பலமாக இப்போது யோசித்தார் பாஸ்கர்.

“ரொம்பப் பெரிய இடமாச்சேம்மா… அவங்க எப்பிடி நம்ம வீட்டுல…”

“அது எனக்கும் புரியுதுங்க, ஆனா என்னமோ எம் மனசுக்குள்ள…” ரேணுகா முழுதாக முடிக்காமல் நிறுத்தினார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீ வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காதே.”

“இல்லைங்க, அந்தப் பையன் பவித்ராவை பார்த்த பார்வை…”

“ஏன்? ஏதாவது தப்பாப் பார்த்…”

“ஐயையோ! அப்பிடியெல்லாம் இல்லைங்க.” கணவரைச் சட்டென்று நிறுத்தினார் ரேணுகா. 

“அநேகமா அவங்களே நம்மக்கிட்டப் பொண்ணு கேட்பாங்களோன்னு எனக்குத் தோணுது.” மனைவியின் பேச்சை ஏற்றுக் கொள்ளவும் பாஸ்கரால் இயலவில்லை. அதே நேரம், எந்த முகாந்திரமும் இல்லாமல் மனைவி இப்படியெல்லாம் பேசக்கூடியவள் அல்ல என்பதால் பாஸ்கர் அமைதியாக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.

***

பவித்ரா அழகுசாதனப் பொருட்கள், சிகையலங்காரங்கள் நிறைந்த கடைக்குள் நுழைந்தாள். அந்தக் கடை நுவரெலியாவிலேயே மிகவும் பிரசித்தம். பொருட்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரம் மிகவும் உன்னதமாக இருக்கும் என்பதால் பவித்ரா எப்போதும் இங்கேதான் அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவாள்.

எப்போதும் தரத்திற்கு பவித்ரா முக்கியத்துவம் கொடுப்பாள். அவள் செய்யும் அழகு படுத்தல் வேலைக்குத் தரம் மிகவும் முக்கியமானது. மாதம் ஒரு முறை இந்தக் கடைக்கு வந்து தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளும் பெண். அன்றும் டவுனுக்கு இதற்காகவே வந்திருந்தாள்.

க்ரே ப்ளூ ஷேடட் ஷிஃபான் சேலை அணிந்திருந்தாள் அன்று. அவள் பார்க்கும் தொழிலுக்கு ‘அழகு’ என்பது எப்போதுமே அவசியம் என்பதால் வெளியே இது போலப் போகும் போது பகட்டில்லாமல் எப்போதும் தன்னை அவள் அலங்கரித்துக் கொள்வது வழக்கம். அதுவும் முக்கியமாக இந்தக் கடைக்கு வரும்போது பவித்ரா கொஞ்சம் சிரத்தை எடுத்துத் தன்னை அலங்கரித்துக் கொள்வாள். 

தேவையான பொருட்களுக்கான பட்டியலை அவள் ஏற்கனவே கொண்டு வந்திருந்ததால் வந்த வேலை சீக்கிரமே முடிந்துவிட்டது. எப்போதுமே அவள் பொருட்களுக்கான விலை ஒரு லட்சத்தைத் தொடும் என்பதால் பவித்ரா பணமாகக் கையில் வைத்திருக்க மாட்டாள்.

பணம் என்றதும் சட்டென்று அன்னபூரணியின் ஞாபகம் வந்தது. சொந்தத்தில் வந்த முதல் திருமணம் என்பதால் அவள் அப்பா அவர்களிடம் பணம் வாங்க வேண்டாம் என்று மகளிடம் கூறி இருந்தார். அவளும் அதைப் பின்பற்றத்தான் செய்தாள். ஆனால் அன்னபூரணி அதற்கு இடம் கொடுக்கவில்லை.

“இங்கப்பாரு பவிம்மா, தொழில் வேற உறவு வேற, நீ ரெண்டையும் போட்டுக் குழப்பிக்காதே, உன்னோட வேலைக்கு உண்டான கூலியைக் கண்டிப்பா நீ வாங்கியே ஆகணும்.” தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லிவிட்டு அவள் கையில் ஒரு கவரை திணித்திருந்தார்.

பவித்ரா எவ்வளவு மறுத்தும் அவர் கேட்கவில்லை. அவளாலும் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. அன்னபூரணி என்றதும் ‘அன்னம்மா’ என்ற ஒரு குரல் அவள் உள்ளுக்குள் கேட்டது. கடந்த இரண்டு நாட்களாக பெண்ணின் நெஞ்சுக்குள் அவன் நினைவுகள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. பார்த்த தினத்திலிருந்து எத்தனை உரிமையாக அவளோடு பேசுகிறான்! எத்தனைத் தைரியமாக அவன் கண்கள் அவளை அளவெடுக்கின்றன!

‘பக்கத்துல பெரியம்மா, அவங்க பொண்ணு இவங்கெல்லாம் நிக்குறாங்க எங்கிற பயம் கொஞ்சம் கூட இல்லையே?!’ தனக்குள் சிரித்தபடி பணம் செலுத்துவதற்காக ஆயத்தமானாள் பெண். அவன் சார்ந்த நினைவுகள் தனக்குக் கோபத்தை வரவைக்காமல் இதமாக இருப்பது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

“பவித்ரா!” அந்தக் குரலில் சட்டென்று நின்றாள் பெண். இந்தக் குரலுக்குச் சொந்தக்காரன்… பெண் அவசரமாகத் திரும்பியது. அவனேதான், அதே கம்பீரம்தான்! அவள் திகைத்த பார்வைப் பார்த்து ஒரு புன்னகையோடு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“எல்லாம் வாங்கியாச்சா?” அவன் இயல்பாகப் பேச்சை ஆரம்பித்தான். ஆனால் அவளால் அது இயலவில்லை. பேந்தப் பேந்த விழித்த பெண்ணை ஒரு சுவாரஸ்யத்தோடு பார்த்தான் ரிஷி.

“பே பண்ணிடலாமா?” மீண்டும் அவனே பேசினான். பெண்ணைப் பொறுத்தவரை அது ஒரு எதிர்பாராத, யதார்த்தமான சந்திப்பு. ஆனால் அவன்… அவள் அங்கிருப்பது தெரிந்துதான் வந்திருக்கிறான் என்று அவளுக்குத் தெரியாது.

“ம்…” தலையை ஆட்டியபடி பணம் செலுத்துவதற்காக அவள் நடக்க அவளோடு கூட நடந்தான் ரிஷி. பொருட்களை சற்று அதிகமாக வாங்குவதனால் கடை நிர்வாகம் எப்போதுமே பவித்ராவிற்கு ஃப்ரீ டெலிவரி செய்வதுண்டு. அதனால் பொருட்களை வீடு வரைக் கொண்டு போக வேண்டுமே என்ற கவலை அவளுக்கு இருந்ததில்லை.

நீளமாக அவள் கையிலிருந்த பில்லை பார்த்த ரிஷி அதை மெதுவாக அவளிடமிருந்து வாங்கினான். ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கான மொத்தத் தொகை அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கவுன்டரில் இருந்த பெண்ணிடம் இவன் பில்லையும் தனது கார்டையும் நீட்ட இரண்டு பெண்களுமே இப்போது திகைத்துப் போனார்கள்.

பவித்ரா ஏற்கனவே அங்கு வேலை பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமானவள் என்பதனால் ஒரு குறுகுறுப்போடு அந்தப் பெண் இவளை இப்போது பார்த்தது.

“இல்லையில்லை… நான் குடுக்கிறேன்.”

“இருக்கட்டும் பவித்ரா.” ஓர் உரிமையோடு வந்து வீழ்ந்தன வார்த்தைகள்.

“தெரிஞ்சவங்களா மேடம்?” இது கடைக்காரப் பெண்.

“உறவுக்காரங்க.” அவனே பதிலும் சொன்னான். பவித்ரா மீண்டும் திகைத்தாள். இப்போது ஒரு மெல்லிய சிரிப்போடு அந்தப் பெண் ரிஷியிடமிருந்து கார்டை வாங்க பவித்ரா தடுத்தாள்.

“இல்லையில்லை… ரொம்பப் பெரிய தொகை… நானே…” அவன் அவளைப் பார்த்த பார்வையில் அவள் வார்த்தைகள் அத்தோடு நின்று போனது. கடைக்காரப் பெண் பின் நம்பருக்காக அவனிடம் கார்ட் மெஷினை நீட்ட சட்டென்று அதில் நான்கு நம்பர்களை தட்டிக் கொடுத்துவிட்டான் ரிஷி.

“போகலாமா?” விஷயம் அவ்வளவுதான், நீ என்னோடு இப்போது கிளம்பு என்பது போல இருந்தது அவன் பேச்சு, செய்கைகள். ஒரு தர்மசங்கடத்தோடு பவித்ரா கடைக்காரப் பெண்ணைப் பார்க்க, அவள் இவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தாள்.

“எப்பவும் போல நாளைக்குக் காலையில எல்லாப் பொருட்களும் வீட்டுக்கு வந்திடும் மேடம்.”

“தான்க் யூ.” 

கடையை விட்டு இருவரும் வெளியே வந்தார்கள். நேரம் அப்போதுதான் பிற்பகல் மூன்று மணி. ஐந்து மணிக்கெல்லாம் சட்டென்று அங்கு இருள் சூழ்ந்து விடும் என்பதால் பவித்ரா எப்போதுமே வெளி வேலைகள் இருந்தால் இந்த நேரத்திற்குத்தான் வீட்டை விட்டுக் கிளம்புவாள். 

“பவி.” அந்த உரிமையான அழைப்பு பவித்ராவிற்கு கிலியை உண்டு பண்ணியது. அன்னபூரணியின் வீட்டிலேயே அவன் நடந்துகொண்ட விதம் அவளுக்குள் பல சந்தேகங்களை விதைத்திருந்தது. ஆனால் இன்று அவன் நடந்து கொண்ட விதம் அனைத்தையும் ஊர்ஜிதப்படுத்த பவித்ராவிற்கு இப்போது லேசாக நடுங்கியது.

“நான் உங்கூடக் கொஞ்சம் பேசணும்.”

“நான்… நான் வீட்டுக்குப் போகணும், லேட்டானா அம்மா திட்டுவாங்க.”

“பரவாயில்லை, கொஞ்ச நேரந்தான், லேட்டானா நானே கொண்டு போய் வீட்டுல விட்டுர்றேன்.”

“ஐயையோ! வேணாம் வேணாம், அம்மா கொன்னேப் போட்டுடுவாங்க.”

“அப்ப எப்பிடித்தான் உங்கூடப் பேசுறது?” அவன் குரல் இப்போது சற்றே உயர்ந்தது, கோபமாக.

“வீட்டுக்கு வாங்க.”

“கண்டிப்பா வருவேன், நாளைக்கே வருவேன், அதுக்கு முன்னாடி எனக்கு உங்கூடக் கொஞ்சம் பேசணும்.”

“இல்லை…” அவள் மீண்டும் ஏதோ மறுத்துப் பேச ஆரம்பிக்க ரிஷி சட்டென்று அவளைக் கை உயர்த்தி நிறுத்தினான்.

“இங்கப்பாரு பவித்ரா, இன்னும் ரெண்டு நாள்தான் நான் ஸ்ரீ லங்கால இருப்பேன், அதுக்கப்புறம் கிளம்பிடுவேன்.” ஒரு தவிப்பான பார்வையோடு அவள் அவனை இப்போது நிமிர்ந்து பார்க்க அவன் முகம் கனிந்தது.

“அதுக்கு முன்னாடி நான் பேச வேண்டியவங்கக்கிட்டப் பேசி முடிக்கணும், கொஞ்சம் புரிஞ்சுக்கோ.”

“……….”

“அதோ தெரியுற பார்க்ல கொஞ்ச நேரம் உங்கிட்டப் பேசணும், எங்கூட வா.” அவன் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தாள் பெண். 

“அங்க வேணாம், இங்கேயே…” அது ‘காதலர் பூங்கா’ என்று அவள் அறிவாள். அவள் மனம் அவன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிற்கும் இப்போது அதீதமாகப் பயந்தது.

“ப்ளீஸ்… நடு ரோட்டுல கெஞ்ச வைக்காதே.” அந்தக் கெஞ்சும் குரல் அவளை ஏதோ பண்ணக் கூட நடந்தாள் பவித்ரா.

இது போல இடங்களுக்கெல்லாம் பவித்ரா போவதில்லை. நுவரெலியா சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகளவு கொண்ட இடம். அதிலும் வெளிநாட்டுக் காரர்கள் ஏராளமாக வரும் இடம். சுற்றம் மறந்து இன்புற்றிருக்கும் இளையவர்களைப் பார்க்கும் போது அவளுக்கு முகம் சிவந்து போகும்.

“இங்கேயே இருக்கலாமே.” பார்க்கின் வாசலிலேயே போடப்பட்டிருந்த பெஞ்ச்சை அவள் காட்ட, அவளை வினோதமாகப் பார்த்தான் ரிஷி.

“ஏன்? கொஞ்ச தூரம் நடக்கலாமே பவி.”

“இல்லையில்லை…” அவசரமாக மறுத்தது பெண்.

“பார்க் வாசல்ல உட்கார்ந்து எப்பிடிம்மா பேசுறது? போறவங்க வர்றவங்க அத்தனைப் பேரும் நம்மளைத்தான் பார்ப்பாங்க.”

“…………….” அவன் சொல்வதிலும் நியாயம் இருந்தது. ஆனால் உள்ளே போனால்… எப்படி இதையெல்லாம் இவனிடம் விளக்குவது?!

“வா…” அவன் சற்றே அழுத்திச் சொல்ல அவனோடு கூட நடந்தாள் பவித்ரா. சற்று உள்ளே சென்றதும் ரிஷி அங்கிருந்த ஒரு பெஞ்ச்சில் அமர்ந்தான். ஆனால் பவித்ரா உட்காரவில்லை. 

“உட்காரு.”

“பரவாயில்லை… நீங்க சொல்லுங்க.” அவன் என்ன பேசப் போகிறான் என்று தெரிந்திருந்தும் கேட்டது பெண்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா பவி?” அந்தப் பட்டவர்த்தனமான பேச்சில் பவித்ரா மிரண்டு போனாள். அவன் இதைத்தான் கேட்கப் போகிறான் என்று அவளுக்கு முன்னமே ஓரளவு தெரியும், ஊகித்தும் இருந்தாள். ஆனால்… எந்தவிதமான முஸ்தீபுகளும் இல்லாமல் சட்டென்று அவன் போட்டு உடைக்கப் பெண் பிரமித்துப் போனது! ஏற்கனவே நிதானமின்றி ஒருவிதப் பதட்டத்தோடு நின்றிருந்த பவித்ரா இப்போது பக்கத்தில் இருந்த மரத்தின் தண்டில் சாய்ந்து விட்டாள்.

“என்னாச்சு பவி?!” சட்டென்று எழுந்தவன் இவள் அருகில் வந்தான். பவித்ரா இப்போது மரத்தோடு ஒன்றினாள். ரிஷியின் நடை அங்கேயே நின்றது.

“ஏன்? பிடிக்கலையா?” ரிஷி கேட்டுக் கொண்டிருக்கும் போதே கலகலவென்ற சிரிப்புக் குரல்கள் கேட்டன. இவர்கள் இருவரது பார்வையும் சிரிப்பு வந்த திசையை நோக்கித் திரும்பியது.

உல்லாசப் பயணிகள் இருவர், எந்த நாட்டுக்காரர் என்று பவித்ராவுக்கு கண்டுபிடிக்கத் தெரியவில்லை. அவர்கள் நின்றிருந்த இடத்துக்குப் பக்கத்தில் குன்று போல இருந்த மேட்டைத் தழுவிய வெண்பஞ்சு மேகத்தைத் தொட ஓடினார்கள். பவித்ராவிற்கும் இது போலச் சின்னஞ் சிறு மேகங்கள் தாழ்ந்து வருவதைப் பார்க்க மிகவும் பிடிக்கும். வெளிநாட்டு வாசிகள் மேகத்தைப் பிடிக்க ஓடிவிட்டு அது முடியாமல் போகவே மீண்டும் மீண்டும் கலகலத்துச் சிரித்தார்கள். 

ஒரு கட்டத்தில் அவர்களது குதூகலம் எல்லை மீறிப் போக அன்னியோன்யம் அதிகரித்தது. பவித்ரா சாதாரணமாக அவர்களைப் பார்த்திருந்த வேளையில் அங்கே ஒரு இதழொற்றல் இனிதாக நடந்தேறியது. பவித்ரா ஏதோ தேள் கொட்டியது போலச் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டாள். முகம் சிவந்து போனது!

இதற்குத்தான் இது போல இடங்களுக்கெல்லாம் அவள் வருவதில்லை. தலைகுனிந்து நின்றிருந்தவளின் பார்வை வட்டத்தில் ரிஷியின் கால்கள் இப்போது தெரிந்தது.

“அவங்கெல்லாம் இப்பிடிப் பயந்து பயந்து வாழ மாட்டாங்க, புடிச்சாப் புடிச்சிருக்குன்னு தைரியமாச் சொல்லுவாங்க.” அவன் குரலில் இப்போது லேசான விஷமம் இருந்தது. பவித்ரா எதுவுமே பேசவில்லை. மௌனமாகவே நின்றிருந்தாள். அவன் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தான்.

“நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை பவி.”

“………………” 

“இப்பிடியே உங்கூட எவ்வளவு நேரம் வேணும்னாலும் நிற்க நான் தயார்தான், ஆனா…”

“…………….” பவித்ரா இப்போதும் குனிந்த தலை நிமிரவில்லை. அவள் கண்கள் மட்டும் அங்கே இங்கே என அலைப்புற்றன.

“சொல்லு பவி, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” 

“எனக்கு அதெல்லாம் தெரியாது, அப்பா அம்மாதான்…” குரல் நடுங்கச் சொன்னாள் பெண்.

“தனியா, இவ்வளவு தைரியமாத் தொழில் பண்ணுறே, உன்னோட வாழ்க்கையைப் பத்தின முக்கியமான முடிவை நீ எடுக்க மாட்டியா?”

“நீங்க… வீட்டுல பேசுங்க.” அவள் பதிலில் அவன் முகத்தில் ஏமாற்றம் தோன்றியது.

“வீட்டுல ஓகே சொன்னா உனக்கும் ஓகேவா?” இப்போது மட்டும் பெண் தலையை உருட்டியது.

“அவங்க சம்மதிக்கலைன்னா?” ரிஷி கேட்க சட்டென்று அவள் பார்வை நிமிர்ந்தது. அந்தப் பரிதவித்த பார்வையைப் பார்த்த ரிஷி பெண்ணைத் தைரியமாக நெருங்கினான். அந்த நெருக்கத்தைத் தாங்க முடியாதவள் போல சட்டென்று பவித்ரா விலகி நடந்தாள். ஆனால் ரிஷி அதற்கு அனுமதிக்கவில்லை. அவள் கைப்பிடித்து நிறுத்தினான். 

“எனக்குப் பதில் சொல்லாம உன்னால இங்கிருந்து நகர முடியாது பவித்ரா.” ஆணித்தரமாக வந்தது அவன் குரல். பெண் நடுங்கிப் போனது. ஆனால் ரிஷி இது எதையும் கண்டுகொள்ளவில்லை.

“சொல்லு, உங்க வீட்டுல என்னைப் பிடிக்கலைன்னா நீ என்னப் பண்ணுவ?”

“அவங்களுக்கு உங்களைப் பிடிக்கும்.”

“அப்பிடியா? எப்பிடி இவ்வளவு நம்பிக்கையாச் சொல்றே?!”

“ஏன்னா…”

“ம்… மனசுல இருக்கிறதை எங்கிட்டச் சொல்லு பவி.”

“ஏன்னா, எனக்கும் உங்களைப் பிடிக்கும்.” அவள் சொல்லி முடிக்க ரிஷி இப்போது வாய்விட்டுச் சிரித்தான்.

“அடேயப்பா! இதைச் சொல்ல இவ்வளவு நேரமா?” அவன் உல்லாசமாகக் கேட்க பவித்ராவின் கண்கள் கலங்கி விட்டன.

“ஏய்! என்னாச்சு? எதுக்கு இப்போ அழுறே?” ரிஷி பதட்டமாகக் கேட்க பெண் கண்களைத் துடைத்துக் கொண்டது.

“நாம இப்ப இங்கப் பேசிக்கிட்டது… எப்பவும் யாருக்கும் தெரியக்கூடாது.” கண்ணீர் குரலில் கூறினாள் பவித்ரா.

“ம்ஹூம்… எப்பவும், யாருக்கும் தெரிய வராது.”

“நான் கிளம்புறேன்.” அவள் சொல்லிய பிறகும் அந்தக் கரத்தை விட மனமில்லாமல் பிடித்திருந்தான் ரிஷி.

“இதுக்கு மேல லேட் பண்ணினா அம்மா திட்டுவாங்க.”

“எதுல போவே?”

“டாக்ஸியில.”

“அதே டேக்ஸியில என்னையும் கூட்டிக்கிட்டுப் போனா ஆகாதா?” அவன் கேட்டு முடித்த போது பெண் அவனை ஓர் பரிதாபப் பார்வைப் பார்த்தது.

‘என் நிலைமையைக் கொஞ்சம் புரிந்து கொள்ளேன்!’ என்ற கெஞ்சல் அந்தப் பார்வையில் தொனிக்க ரிஷி புன்னகைத்தான்.

“சரி சரி, நீ கிளம்பும்மா.” அவன் விடை கொடுக்க பவித்ரா மெதுவாக நகர்ந்தாள். சற்றே நகர்ந்து போனவள் இவனைத் திரும்பி ஒருமுறை பார்க்க ரிஷியின் மனதுக்குள் மழைப் பொழிந்தது. அவன் முகம் இளஞ்சிரிப்பால் மலர்ந்தது.

அந்த வசீகர முகம் பெண்ணின் மனதுக்குள்ளும் பதிந்து போனது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!