kkavithai06

kkavithai06

கவிதை 06

நேரம் நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. ரிஷி நிதானமாக அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தான். வீட்டிற்குத் தெரியாமல் பெண்கள் நால்வரும் வருவதால் பிரதான சாலையிலிருந்து சற்றே ஒதுங்கி இருந்த ஒரு நட்சத்திரத் தரம் வாய்ந்த ஹோட்டலை தெரிவு செய்திருந்தான்.

வெளிநாட்டு வாசிகள் மாத்திரமே அங்கு புழங்குவதால் உள்ளூர் வாசிகளின் கண்களில் அந்தப் பெண்கள் படுவது சாத்தியமில்லை. சரியாக நான்கடிக்கும் போது நான்கு பெண்களும் வருவது தெரிந்தது. ரிஷியின் உதடுகள் சந்தோஷத்தில் லேசாக விரிந்தன.

சுடிதார் அணிந்து, கூந்தல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்க, இதுவரைப் பாடப் புத்தகங்களோடு மல்லுக்கட்டிய களைப்பு முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, மூன்று பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். அழகான மெல்லிய பார்டர் சேலையில், ஒற்றைப் பின்னலிட்டு, அந்தக் குளிர் பிரதேசத்திற்கே உரித்தான மலர்ச்சியோடு அவன் ரோஜாவும் கூட நடந்து வந்து கொண்டிருந்தது. அவள் நடையிலேயே அவள் பயம் தெரிந்தது. தங்கைகளின் வற்புறுத்தலில்தான் வருகிறாள் என்பது பார்த்தாலே புரிந்தது.

“ஹாய் அத்தான்!” மூன்று பேரும் ஒன்றாகக் கை அசைக்க ரிஷியும் கை அசைத்தான். பவித்ரா லேசாக அவனை நிமிர்ந்து பார்த்தாள், அவ்வளவுதான்.

தனியே ஒற்றையாக வளர்ந்த ரிஷிக்கு அந்தப் பெண்கள் அவர்கள் அக்கா மேல் காட்டிய பாசமும், அக்காவின் கணவர் ஆகப் போகின்றான் என்பதால் அவன் மேல் காட்டிய உரிமையும் மிகவும் பிடித்திருந்தது. விசித்திரமான, நூதனமான அந்த உணர்வை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த உணர்வுகளை அறிமுகப்படுத்திய அந்தப் பெண்களின் மேலும் இனம்புரியாத பாசம் தோன்றிய. அத்தோடு, அவர்கள் பவித்ராவின் உடன்பிறப்புகள் என்பது அவனுக்கு இன்னுமே அவர்களிடம் ஒரு வாஞ்சையை உண்டு பண்ணியது.

“ஹைய்யோ! என்ன அத்தான் இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு வந்திருக்கீங்க? நாங்கெல்லாம் பக்கிங்க மாதிரி இருக்கோம்.” அகல்யா வருத்தப்பட ரிஷி பவித்ராவை பார்த்துப் புன்னகைத்தான்.

“அகல்யாக்கா, அத்தானோட இந்தச் சிரிப்புக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா?” பைரவி கேட்கும்போதே எல்லோரும் ஹோட்டலுக்கு உள்ளே வந்திருந்தார்கள். ரிஷி அவர்களுக்கென்று தனியாக ஒரு டேபிள் புக் பண்ணி இருந்தான். சற்று ஒதுக்குப்புறமாக இருந்த அந்த இடம் யார் கண்ணிலும் படாமல் இளையவர்கள் நிம்மதியாக இருக்க வசதியாக இருந்தது.

“என்னோட சிரிப்புக்கு அர்த்தம் என்னவாம்?” ரிஷி மீண்டும் எடுத்துக் கொடுத்தான். 

“யாரு எப்பிடி வந்தா என்ன? என்னோட ஆளு சூப்பரா வந்திருக்கா, எனக்கு அது போதுங்கிற சிரிப்பு.” பைரவி சொல்ல ரிஷி வாய்விட்டுச் சிரித்தான். 

வட்ட வடிவில் மேசை இருக்க, அதைச்சுற்றி அரைவட்ட வடிவில் இருக்கை போடப்பட்டிருந்தது. தனித்தனியாக இல்லாமல் ஒன்றிணைந்த அரைவட்ட சோஃபா. தங்களோடு ஒன்றாக அமரப்போன அக்காவைப் பிடித்து ரிஷியின் பக்கத்தில் அமர்த்தினாள் அகல்யா. அக்காவையும், அத்தானையும் சோஃபாவின் ஒரு புறமாக அமர்த்தி விட்டு அவர்களைப் பார்த்தாற் போல பெண்கள் மூவரும் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டார்கள். தன்னோடு தங்கள் அக்காவை இணைத்து வைத்துப் பார்த்து அந்த இளம்பெண்கள் சந்தோஷப்படுவது ரிஷிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

“அப்புறம்… படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?” பேச்சை ஆரம்பித்தான் ரிஷி.

“ஐயோ! இன்னைக்கு செம போர் அத்தான், அறுவையா இருந்தது, எப்படா மனுஷன் முடிப்பாருன்னு நான் காத்துக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்.” இது பைரவி.

“ஐயையோ! என்ன சப்ஜெக்ட்?”

“ஃபிஸிக்ஸ்.”

“ஓஹோ! அப்போ பாவம்தான்.” சொல்லிவிட்டு ரிஷி சிரித்தான்.

“ஏன் அத்தான்?” கடைக்குட்டி தர்ஷினி இப்போது ஆரம்பித்தது.

“என்னம்மா?”

“இந்தப் படத்துல எல்லாம் வர்ற ஹீரோ மாதிரி நீங்க சும்மா சூப்பரா மாடர்ன் கார்ல வந்து இறங்குவீங்கன்னு பார்த்தா… டாக்சியில வந்திருக்கீங்க போல?!”

“இந்த ஊர்ல கார் ஓட்டுற…”

“ஸ்டாப் ஸ்டாப்…” ரிஷியை முழுதாக முடிக்க விடாமல் இப்போது நிறுத்தினாள் பைரவி.

“இந்த ஊரா? என்னத்தான் இப்பிடித் தள்ளி நிக்கிறீங்க? நம்ம ஊருன்னு சொல்லி இன்னும் கொஞ்சம் நெருங்கி வாங்க.”

“நெருங்கிட்டாப் போச்சு.” என்ற ரிஷி வேண்டுமென்றே பவித்ராவை இடித்துக் கொண்டு நன்றாக நெருங்கி உட்கார்ந்தான்.

“ஹா… ஹா…” பெண்கள் மூவரும் சிரித்து ஆர்ப்பரிக்க பவித்ராவின் முகம் சிவந்து போனது.

“ஏன் க்கா இப்பிடிக் கூச்சப்படுறே? பாவம் அத்தான், உன்னைப் பார்க்கத்தானே இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்காங்க, கொஞ்சம் நீயும் பேசேன்.” அகல்யா சொல்ல பவித்ரா ரிஷியை திரும்பிப் பார்த்தாள்.   அந்தக் கண்களில் தெரிந்த தாபத்தைப் பார்த்த போது சட்டென்று தலையைத் திருப்பிக் கொண்டது பெண். ரிஷி முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

பேச்சு, சிரிப்பு என்று சிறிது நேரம் அங்கே இளமை கோலோச்சி இருந்தது. ரிஷி விதவிதமான உணவுகளை ஆர்டர் பண்ண சிரித்தபடியே உண்டு முடித்தார்கள்.

“நேரமாச்சு அத்தான், நாங்க கிளம்பணும், இல்லைன்னா எங்க வீட்டுல இருக்கிற ப்ரிகேடியர் கொன்னுடும்.” அவசரமாக அவர்கள் கிளம்பப் போக தனக்கு அருகிலிருந்த பையை எடுத்தான் ரிஷி. உள்ளேயிருந்து அவன் எதையோ எடுக்கப் பெண்கள் கேள்வியாகப் பார்த்தார்கள்.

“முதல் தடவை உங்களையெல்லாம் பார்க்க வர்றேன், அதான்…” சொன்னபடி இளைய பெண்கள் மூவரிடமும் மூன்று சிறிய பெட்டிகளை நீட்டினான்.

“என்னத்தான் இது?!” ஆச்சரியத்துடன் கேட்டாள் அகல்யா.

“பிரிச்சுப் பாருங்க, புடிச்சிருக்கான்னு தெரியலை, உங்களைக் கூட்டிக்கிட்டுப் போய் ஷாப்பிங் பண்ணணும்னுதான் நினைச்சேன், ஆனா… யாரோட கண்ணுலயாவது பட்டுட்டாப் பிரச்சினை ஆகிடுமில்லை? ஆனா கண்டிப்பா அடுத்த தரம் உங்களைக் கூட்டிக்கிட்டுத்தான் போவேன்.” ரிஷி பேசிக் கொண்டிருக்கும் போதே இளையவர்கள் பெட்டியைத் திறந்தார்கள். உள்ளே அழகான கைக்கடிகாரம் இருந்தது. தங்க நிறத்தில், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள். பவித்ரா கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை.

“ஐயோ அத்தான்! எதுக்கு இப்ப இதெல்லாம் வாங்கினீங்க?” இதுவரை இருந்த குதூகலம் போய் இப்போது அங்கே ஒரு மௌனம் நிலவியது.

“ஏன் அகல்யா? அத்தான் உங்களுக்காக இதெல்லாம் வாங்கக் கூடாதா?”

“அப்பிடியில்லை அத்தான்…” அகல்யாவுக்கு என்னப் பேசுவதென்றே புரியவில்லை, தடுமாறினாள்.

“உங்கப்பா, அம்மா கூட இன்னும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கலை, ஆனா அது எதையும் கண்டுக்காம என்னை எவ்வளவு உரிமையா அத்தான்னு கூப்பிடுறீங்க! நம்பிக்கையா இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கீங்க! இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” ரிஷி கேட்ட போது இளையவர்கள் நெகிழ்ந்து போனார்கள். பவித்ராவின் கண்கள் கலங்கிப் போனது. சூழ்நிலையை மாற்ற இப்போது கடைக்குட்டி பேச ஆரம்பித்தது.

“எங்களுக்கு கிஃப்ட் குடுத்தீங்க சரி, அக்காக்கு ஒன்னுமே நீங்க குடுக்கலையே அத்தான்?” 

“அதானே?!” 

இப்போது ரிஷி புன்னகைத்தபடி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சின்ன பாக்ஸை எடுத்தான். இளையவர்கள் ஒரு பிரமிப்போடு பார்த்திருக்க அதிலிருந்த வைர மோதிரத்தை வெளியே எடுத்தான்.

“வாவ்!” தலைக்கு மேல் தொங்கிய சான்டலியர் வெளிச்சத்தில் மோதிரம் மின்னியது. ரிஷி தன்னருகே அமர்ந்திருந்த பவித்ராவின் இடது கரத்தை எடுத்து அதில் மோதிரத்தை அணிவித்தான்.

“ஹேய்!” இளையவர்கள் மூவரும் தங்களை மறந்து கூச்சல் போட ஒரு புன்னகையோடு அந்தக் கரத்தைத் தன் கரங்களுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

“லேட் ஆகுது, நீங்க கிளம்புங்கம்மா.”

“ஆமா அத்தான்.” சட்டென்று எழுந்த அகல்யா மீண்டும் அமர்ந்து ரிஷியின் முகத்தைப் பார்த்தாள். 

“சொல்லு அகல்யா.”

“அத்தான்… அக்கா… ரொம்ப அமைதி, பொறுப்பு, எல்லாத்துலயும் ஒரு நிதானம், இப்பிடி இருக்காளேன்னு நினைக்காதீங்க, பாசம் வெக்கிறதுல அவளை மிஞ்சிட முடியாது, பார்த்துப் பார்த்துச் செய்வா.”

“ம்…” ரிஷி புன்னகைத்தபடி பவித்ராவை பார்த்தான்.

“அவளை நல்லாப் பார்த்துக்குவீங்க இல்லை?” கேட்ட போது அகல்யாவின் கண்கள் கலங்கிப் போனது.

“ஹேய்! என்னப் பேச்சு இது அகல்யா? உங்கக்காவை நான் இங்க வெச்சிருக்கேன், என்னோட உயிர் இருக்கிற வரைக்கும் அவ இங்கதான் இருப்பா.” அவன் பற்றியிருந்த பவித்ராவின் கையினால் தன் இடதுபக்க மார்பைத் தட்டிக் காட்டினான் ரிஷி. பெண்கள் மூவரும் இப்போது சட்டென்று எழுந்து கொண்டார்கள், இங்கிதம் தெரிந்தவர்கள் போல.

“அத்தான், நாங்க வெளியே வெயிட் பண்ணுறோம்.” சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிட்டார்கள். ரிஷி பவித்ராவை திரும்பிப் பார்த்தான்.

“நீ எதுவும் பேச மாட்டியா பவி?” அவன் ஏக்கத்தோடு கேட்க பவித்ரா இப்போது அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் கலங்கி இருத்தன. அதையும் தாண்டி அந்தக் கண்களில் காதல் வழிந்தது.

“ஏய்! என்னாச்சு?”

“தான்க்ஸ்.” என்றாள் கண்ணீர் குரலில்.

“எதுக்குடா?”

“தெரியலை… ஆனா சந்தோஷமா இருக்கு.” சொன்னவளின் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது. 

தான் இன்னும் பற்றியிருந்த அவள் கரத்தில் லேசாக முத்தம் வைத்தான் ரிஷி. பவித்ரா இப்போது தன் கரத்தை மெதுவாக விடுவித்துக் கொண்டாள். ரிஷி அடிக்குரலில் சிரித்தான்.

“கிளம்புடா, லேட் ஆகுது.”

“ம்…” பெண்கள் நால்வரையும் பத்திரமாக ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பிவிட்டு சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தான் ரிஷி. மனது நிறைந்து போனது.

***

அடுத்த நாள் அன்னபூரணியின் வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. நாளைக்கு விடிந்தால் நிச்சயதார்த்தம். நேற்று இரவே பெண் வீட்டார் தங்கள் சம்மதத்தைத் தெரியப்படுத்தி இருந்தார்கள். ரிஷி ஹோட்டலிலிருந்து திரும்பி வீடு வந்து சேர்ந்த போது அந்த இன்பமான சேதி அவன் முகத்தில் வந்து மோதியது.

“ரிஷி கண்ணா!” வீட்டுக்குள் நுழைந்தவனை அன்னபூரணி ஓடிவந்து கட்டிக் கொண்டார். 

“அன்னம்மா, என்னாச்சு? ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?” என்றான் சிரித்தபடி.

“சங்தோஷமா? உங்க அன்னம்மா பறக்காத குறை!” சொல்லியபடி ரூமிலிருந்து காயத்ரி வெளியே வந்தாள், கூடவே சாரங்கன்.

“அடடே! காயத்ரி… நீ எப்போ வந்தே? வாங்க மாப்பிள்ளை.” 

“இருக்கட்டும் மச்சான், வீடே இங்க ரெண்டு படுது, நீங்க எங்க இவ்வளவு சாவகாசமாப் போய்ட்டு வர்றீங்க?”

“சும்மாதான்… என்னாச்சு அன்னம்மா?”

“பாஸ்கர் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டாரு ரிஷி!”

“ஓ!”

“எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?” 

“பூரணீ…” இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே பாண்டியன் மனைவியை அழைத்தபடி வந்தார்.

“ஓ… ரிஷி, வந்துட்டியா? சேதி கிடைச்சுதா?” மனிதர் குறும்பாகக் கேட்க, இளையவனுக்குப் பேச்சு வரவில்லை.

“பெரியப்பா…”

“சரி சரி, இங்கப்பாரு ரிஷி, பத்திரிகை அடிக்க நமக்குக் கால அவகாசம் இல்லை, ஆனா நிச்சயதார்த்தத்துல எந்தக் குறையும் வந்திரப்படாது.”

“கண்டிப்பா பெரியப்பா.”

“பாஸ்கர் வீட்டுல நடக்கிற முதல் விசேஷம் இது, சும்மா ஜாம் ஜாம் ன்னு நடக்கணும், என்னோட மூத்தப் பொண்ணு கல்யாணம் மாதிரி இங்க எந்தப் பொண்ணோட கல்யாணமும் நடக்கலைன்னு பாஸ்கர் பெருமையாச் சொல்லிக்கிற மாதிரி நாம எல்லாத்தையும் நடத்திக் குடுக்கணும் ரிஷி.” 

“செஞ்சிடலாம் பெரியப்பா.”

“இந்தா பூரணி, நீ சீக்கிரமா ரெடியாகு, வாங்க வேண்டிய சாமான்களையெல்லாம் லிஸ்ட் போட்டு எடுத்துட்டு வா, நகை, ஜவுளியை நாளை மத்தியானத்துக்கு மேல போய் வாங்கிக்கலாம்.”

“சரிங்க, இதோ வந்திடறேன்.” அன்னபூரணி உள்ளே போக, சாரங்கன் வந்து ரிஷியை அணைத்துக் கொண்டான்.

“கன்கிராட்ஸ் மச்சான், ரொம்ப சந்தோஷமா இருக்கு!” பெண் வீட்டாரின் சம்மதம் கிடைத்த உடனேயே மகளையும் மருமகனையும் வீட்டிற்கு அழைத்துவிட்டார் பாண்டியன். ரிஷியின் தங்கை ஸ்தானத்தில் காயத்ரி கட்டாயம் நிற்க வேண்டும் என்பது அவரது நோக்கம்.

தாய், தகப்பன் இல்லாத பையன். ஆனால் எங்கேயும் அதை மனதளவில் அணு அளவு கூட அவன் உணரக்கூடாது என்பதில் மனிதர் பிடிவாதமாக இருந்தார். நேற்று நடந்ததை நினைத்த போது இப்போதும் ரிஷிக்கு பொங்கி வழிந்தது. காலையில் சீக்கிரமாகவே எழுந்து விட்டான். நித்திரை வருவேனா என்று அடம் பிடித்தது.

“அண்ணா!” அவசரமாக அழைத்தபடி வந்தாள் காயத்ரி.

“என்னாச்சு காயத்ரி?”

“பவியோட அப்பா வந்திருக்காரு.”

“ஓ… பெரியப்பா வெளியே போயிருக்காங்க இல்லை?”

“ஆமா… அம்மாவும் கூடப் போயிருக்காங்க, நீ வா ண்ணா.”

“ம், வர்றேன்.” ரிஷி ரூமை விட்டு வெளியே வர சாரங்கனோடு பேசியபடி பாஸ்கர் மாடிக்கு வருவது தெரிந்தது.

“என்னம்மா மேல வர்றாங்க?”

“அவர் உங்கூடப் பேசணும்னு வந்திருக்கார் போல ண்ணா.”

“ஓ…” ரிஷி இப்போது தன்னை வெகுவாக நிதானப் படுத்திக் கொண்டான். 

“மச்சான், யாரு வந்திருக்காங்க பாருங்க.” சாரங்கன் சுமுகமாகப் பேச்சை ஆரம்பித்து வைத்தார்.

“வாங்க.” என்றான் ரிஷி பொதுவாக. பாஸ்கரின் கலங்கிய முகம் அவனுக்கு என்னவோ போல இருந்தது.

“நீங்க பேசிக்கிட்டு இருங்க, குடிக்க ஏதாவது நாங்க கொண்டு வர்றோம், வா காயத்ரி.” மனைவியை மெதுவாக அழைத்துக் கொண்டு சாரங்கன் நகர, மாமனாரும் மருமகனும் தனித்து விடப்பட்டார்கள்.

“உள்ள வாங்க.” அவர் நோக்கம் புரிந்து போக ரிஷி அவரைத் தனது அறைக்குள் அழைத்துப் போனான்.

“உட்காருங்க.”

“இருக்கட்டும் மாப்பிள்ளை.” வாய் நிறைய மாப்பிள்ளை என்று அழைக்கும் பாஸ்கரின் முகத்தில் எதுக்கு இத்தனைக் குழப்பம் என்று ரிஷிக்கு புரியவில்லை.

“சொல்லுங்க மாமா.”

“தம்பி…” மனிதர் வெகுவாகத் தயங்கினார்.

“எதுவா இருந்தாலும் நீங்க எங்கிட்டத் தயங்காமப் பேசலாம்.” ரிஷி முகத்தில் இப்போது அழகானதொரு புன்னகை மலர்ந்தது.

“எதையோ எங்கிட்டப் பேசணும்னு நினைக்கிறீங்க, ஆனா… தயங்கிறீங்க.”

“ரொம்ப அவசரமா எல்லாம் நடக்குது…” பாஸ்கர் தயங்கியபடி ஆரம்பித்தார்.

“ம்…”

“எனக்கு நாலும் பொண்ணுங்கதான்… என்னடா நாலையும் பொண்ணாப் பெத்து வெச்சிருக்கேன்னு சொந்த பந்தமெல்லாம் கவலைப்பட்டப்போ… அதை நான் பெருசா எடுத்துக்கவே இல்லை… ஏன்னா, அதை ஒரு குறையா நான் நினைக்கவேயில்லை.”

“……………..”

“பின்னாடி இருக்கிற மூனும் நினைச்சதைப் பேசுங்க, தைரியமாத் தங்களுக்கு இது வேணும், இது வேணாம்னு சொல்லிடுங்க, ஆனா பவித்ரா…” இப்போது பாஸ்கரின் கண்கள் கலங்க ரிஷி புன்னகைத்தான்.

“அதிர்ந்து கூட யார்கிட்டயும் பேச மாட்டா, மூத்த பொண்ணுங்கிறதால அவ்வளவு பொறுமை, நிதானம்… எனக்கு இது பிடிச்சிருக்கு, இது வேணும்னு அவளுக்குச் சொல்லக் கூடத் தெரியாது.”

“…………….” ஒரு வீட்டில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் தந்தைமாருக்கு அதன் மேல் பாசம் அதிகமாக இருக்கும் என்று ரிஷி கேள்விப் பட்டிருக்கிறான். அதை பாஸ்கர் நிரூபித்துக் கொண்டிருந்தார்.

“உண்மையைச் சொன்னா… இந்தக் கல்யாணத்துல… இதை நீங்க தப்பா எடுத்துக்கப்படாது மாப்பிள்ளை.”

“இல்லையில்லை… நீங்க சொல்லுங்க மாமா.” 

“இந்தக் கல்யாணத்துல உங்க அத்தைக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.”

“ஓ…”

“அது உங்களைப் புடிக்காம எல்லாம் இல்லை, தன்னோட பொண்ணை இவ்வளவு தூரத்துல கட்டிக் குடுத்தா… நாளைக்கு அவளோட நல்லது, கெட்டதைப் பார்க்க முடியாமப் போயிடுமேன்னு அவ ரொம்ப யோசிக்கிறா, கவலைப்படுறா.”

“புரியுது மாமா.”

“ஆனா… நான் அதைப்பத்தி எதையுமே யோசிக்கலை, ஏன் தெரியுமா?”

“………….”

“பவிக்கு உங்களைப் புடிச்சிருக்கு, அவ கண்ணுல அதை நான் பார்த்தேன்.” பாஸ்கர் இதைச் சொல்லும்போது ரிஷிக்கு சிலிர்த்தது. இதுவரை அமைதியாக நின்றிருந்தவன் இப்போது சட்டென்று பாஸ்கரின் அருகில் போய் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“தம்பி… எம் பொண்ணை நீங்க கண் கலங்காமப் பார்த்துக்குவீங்க இல்லை? அவளை நாங்க வளர்த்ததை விட நீங்க நல்லா வெச்சுக்கிடுவீங்க இல்லை?” கண்களில் உயிரைத் தேக்கிக் கேட்டார் பெரியவர்.

“என்னோட உயிர் இருக்கிற வரைக்கும் அவளை நான் தாங்குவேன் மாமா.” உணர்ச்சி ததும்ப ரிஷி சொன்னபோது பாஸ்கர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“எனக்கு அது போதும் மாப்பிள்ளை, எம் பொண்ணு எந்தக் குறையும் இல்லாம சந்தோஷமா வாழணும், எனக்கு அது மட்டுந்தான் வேணும், வேற எதுவும் வேணாம்.”

“பவியை பத்தி இனி எந்தக் கவலையும் உங்களுக்கு வேணாம், இனி அவ என்னோட சொத்து, அவளைப் பத்திரமா நான் பார்த்துக்குவேன்.”

“சந்தோஷம் மாப்பிள்ளை… நான் கிளம்புறேன், அங்க வேலை தலைக்கு மேல கிடக்கு.” சொல்லிவிட்டு ஒரு புன்னகையோடு பாஸ்கர் தலையசைத்தார்.

ரிஷி போகும் அந்தத் தந்தையை விழி அகற்றாமல் பார்த்திருந்தான். மனதுக்குள் என்னவோ போல உணர்ந்தான். இது போல பாசப் பரிமாற்றங்களை இதுவரை அவன் பார்த்ததில்லை. அவன் வாழும் ஊரிலும் திருமணங்கள் நடக்கும். ஆனால், பெற்றவர்கள் இத்தனை உணர்ச்சிவசப்பட்டு அவன் பார்த்ததில்லை. பாஸ்கர் அவன் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்தார்.

பவித்ராவின் மேல் இந்த மனிதருக்கு எத்தனை அன்பு இருக்க வேண்டும்?! தன் பெண்ணின் வாழ்க்கை மேல் எத்தனை அக்கறை இருந்தால் இப்படி வந்து பேசிவிட்டுப் போவார்?! அவளை இப்போதே பார்க்க வேண்டும் போல இருந்தது ரிஷிக்கு. அவளுக்கென்று எதையும் கேட்கக்கூட அவளுக்குத் தெரியாதாமே! 

அதைத்தான் நேற்றே அவன் பார்த்தானே! தங்கைகள் மூவரும் அத்தனைப் பேசுகிறார்கள், இவள் மட்டும் அமைதியாக உட்கார்ந்திருந்தாளே! ஆனால்… அதே தங்கைகளோடு நான் பாசமாகப் பழகியது அவளுக்குப் பிடித்திருந்தது. அப்போது மட்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காண்பித்தாள். 

குடும்பம்தான் தன் உலகம் என்று வாழ்ந்து பழகிவிட்டாள். பாசம் வைப்பதில் அவளை அடித்துக் கொள்ள முடியாது என்று அகல்யா கூடச் சொன்னாளே! அப்படியென்றால்… என் மீதும் அளவு கடந்து பாசம் வைப்பாளா? காதலிப்பாளா?!

மனதுக்குள் மழை பெய்வது போல இருக்க ரிஷி புன்னகைத்துக் கொண்டான். நாளைய விடியல் அவன் வாழ்க்கையில் ஒரு வசந்தத்தையே கொண்டு வரப்போகிறது என்று நினைத்த போது மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது!

Leave a Reply

error: Content is protected !!