kkavithai15

kkavithai15

கவிதை 15

பவித்ரா தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் போனாள். புதிதாக நிர்மாணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது அந்த இடத்தில். ஒரு கட்டிடம் முழுதாக நிறைவுற்றிருந்தது. அந்தக் கட்டிடத்தில்தான் பவித்ராவிற்கென்று இப்போது தனியாக அறை ஒன்றை ஒதுக்கி இருந்தார்கள்.

பக்கத்தில் இன்னொரு கட்டிடம் முடியும் தறுவாயில் இருந்தது. லில்லியனின் செல்வ வளம் அத்தனைச் சாதாரணம் இல்லை என்று பவித்ரா அங்கு வந்த சிறிது நேரத்திலேயே புரிந்து கொண்டாள்.

“இந்த ஹோட்டலை நான் புதுசாக் கட்டுறதால ரிஷி என்னை இங்க தேடுறதுக்கான வாய்ப்புகள் ரொம்பக் குறைவு பவித்ரா.” இது லில்லியன் சொன்ன விளக்கம். பவித்ராவிற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாததால் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். தன் அத்தானிடமிருந்து தானே ஒளிந்து வாழும் ஒரு காலமும் வரும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

ரூம் மிகவும் அழகாக இருந்தது. முதலிரவிற்காக அவர்கள் தங்கிய நுவரெலிய ஹோட்டல் சட்டென்று ஞாபகம் வந்தது பெண்ணுக்கு. அதைத்தொடர்ந்து ஏதேதோ ஞாபகங்கள் எண்ணத்தில் மோத கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. தன்மீதேக் கோபப்பட்டவள் வலி கொடுத்த எண்ணங்களை உதறிவிட்டுக் குளியலறைக்குள் போனாள்.

அன்று சூரியன் தன் பொற் கதிர்களை பூமி மீது தாராளமாக அள்ளி வீசியதால் குளித்துவிட்டு ஒரு புடவையை உடுத்திக் கொண்டாள் பெண். கூந்தலை ஒற்றைப் பின்னலாகப் போட்டாள். நெற்றியில் திலகத்தை வைத்தபோது விரல் நடுங்கியது. கழுத்துத் தாலியை வெளியே எடுத்து அதைச் சில நொடிகள் பார்த்தாள். ரிஷியின் முகம் கண்ணுக்குள் வந்தது. கூடவே பெற்றோரின் முகங்கள். ஒரு பெருமூச்சோடு பவித்ரா தயாரானாள்.

‘ரிஷி இந்நேரம் வீட்டிற்கு வந்திருப்பான்.’ பவித்ரா தன் கணவனுக்கு எந்தவிதமான தகவலும் வைத்துவிட்டு வரவில்லை. ஏனோ அது அவளுக்குத் தோன்றவுமில்லை. அவள் உபயோகத்திற்கென வைத்திருந்த ஃபோனையும் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள். அது தான் இருக்கும் இடத்தை ரிஷிக்கு சுலபமாகக் காட்டிக் கொடுக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

அறைக்கே மாலைத் தேநீர் வந்தது. நிதானமாக அருந்திவிட்டு வெளியே வந்தாள் பவித்ரா. குழந்தையைப் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தது. ஹோட்டலில் வேலை செய்யும் ஒரு பணியாள் வந்து பவித்ராவை அழைத்துக்கொண்டு போனார். லில்லியனை அவள் சற்று முன்பு சந்தித்த அதே அறை.

இப்போது அறையில் லில்லியன் மாத்திரம் இருக்கவில்லை.. கூடவே இன்னொரு பெண்ணும் இருந்தது. நடுத்தர வயதில் இருந்தார் அந்த மாது. கூடவே… பவித்ரா கண்களை இமைக்க மறந்து அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அறையின் வாசலிலேயே அவள் குழந்தையைப் பார்த்துவிட்டதால் அதற்கு மேல் அவள் கால்கள் நகர மறுத்தன.

அறைக்குள் இருந்த இரு பெண்களும் இவளைத்தான் பார்த்தபடி இருந்தார்கள். லில்லியனுக்கு ஏனோ தன் பேரனை ஒரு பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்கப் போகும் திருப்தி இப்போதே மனதுக்குள் தோன்றியது.

“பவித்ரா.” இமைக்க மறந்து நின்றிருந்த பெண்ணை அழைத்தார் லில்லியன். பெண் இப்போது அவரை நோக்கியது. 

“உள்ள வரலாமே.” மீண்டும் லில்லியனே பேசினார். அப்போதுதான் தான் அறையின் வாசலிலேயே நிற்பதை உணர்ந்த பெண் உள்ளே போனாள். புதிதாக வந்திருக்கும் பெண்ணைக் குழந்தை இப்போது திரும்பிப் பார்த்தது. தன் பாட்டியிடம் போகாமல் அங்கிருந்த நடுத்தர வயதுப் பெண்ணிடம் குழந்தைத் தானாகப் போய் ஒட்டிக் கொண்டது.

புதியவர்களைக் கண்டால் குழந்தைகள் பயப்படுவது இயல்புதான். அதை பவித்ரா பெரிது பண்ணவில்லை. ஆனால் தனது பாட்டியிடம் போகாமல் மற்றைய பெண்ணிடம் போன போதே குழந்தைக்கும் பாட்டிக்குமான உறவின் நிலை புரிந்தது பெண்ணுக்கு.

பவித்ராவின் உடம்பு முழுவதும் இப்போது புதுவிதமான ஒரு உணர்ச்சி தோன்றியது. அந்தக் குழந்தைத் தன்னிடம் வரவேண்டும் என்ற ஆவல் அவளிடம் பேரலை போல உண்டானது. தன் கண் முன்னே நிற்பது ரிஷியின் குழந்தை என்ற உண்மை அவளை வெகுவாகப் பாதித்தது. அந்தக் குழந்தையைத் தானே பெற்றெடுத்தது போல ஒரு மாயை உருவாக அவளுக்கு இப்போது கண்கள் பனித்தது.

இதுபோல ஒரு குழந்தை அவளுக்கும் ரிஷிக்கும் பிறந்திருந்தால் இப்படித்தான் வளர்ந்திருக்குமா? எப்போது நல்ல சேதி சொல்லப் போகியாய் என்று சதா கேட்கும் அன்னபூரணி தனது தங்கையின் பேரனை இப்படித்தான் அநாதரவாக வளர விட்டிருப்பாரா? பவித்ராவிற்கு இப்போது தலை சுற்றியது. வேதனை நெஞ்சை அடைக்க அங்கிருந்த சோஃபாவில் சட்டென்று அமர்ந்தாள்.

“பவித்ரா, ஆர் யூ ஓகே?” பதட்டத்தோடு கேட்டார் லில்லியன்.

“ம்… ஓகே ஆன்ட்டி.” இதழ்கள் பதில் சொன்னாலும் கண்கள் குழந்தையை விட்டு நகரவில்லை. பவித்ராவின் கை இப்போது இயல்பாகக் குழந்தையை நோக்கி நீண்டது. பால் சதையோடு கொழுகொழுவென இருந்தது குழந்தை. ரிஷியை பார்ப்பது போலவே இருந்தது, ஆனால் அந்தக் கண்கள் மாத்திரம் நீல நிறத்தில் மின்னியது.

ஆங்கிலேயர்களுக்கே உரித்தான நிறம். தலைமுடி கூட பழுப்பு நிறத்திலேயே இருந்தது. பார்க்க அத்தனை அழகாக இருந்தது. ஆனால் பவித்ரா கையை நீட்டியபோது அவளிடம் வர மறுத்தது. பவித்ரா தன்னை மறந்து ஒரு புன்னகையோடு குழந்தையின் அருகே மண்டியிட்டு அமர்ந்தாள். குழந்தைக்கும் என்ன புரிந்ததோ, மெதுவாகக் கையை நீட்டிப் பெண்ணின் நெற்றியில் இருந்த திலகத்தைத் தொட்டுப் பார்த்தது. 

பவித்ரா இப்போது சிலிர்த்துப் போனாள். அந்தப் பிஞ்சு விரல்களை மெதுவாகத் தொட்டு மென்மையாக முத்தம் வைத்தாள். இப்போது குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது. அள்ளிக் கொள்ளலாம் போலத் தோன்றினாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். நான்கைந்து பச்சரிசிப் பற்களைக் காட்டிச் சின்னவன் சிரித்தபோது ரிஷியே சிரித்தாற் போல இருந்தது.

‘அத்தான்! இங்கு வந்து நம் குழந்தையைப் பாருங்களேன்! எத்தனை அழகாக உங்களைப் போலவே இருக்கிறான்!’ அவள் மனது உள்ளுக்குள் கூக்குரலிட்டது.  அந்த நொடி அந்தக் குழந்தையின் தாயாகத் தன்னையும், தந்தையாக ரிஷியையும் எண்ணி மகிழ்ந்தது அந்தப் பேதைப் பெண்!

குழந்தையை இதுநாள் வரைப் பார்த்துக்கொண்ட பெண் பவித்ராவோடு சரளமாகப் பேசினார். குழந்தையை அவளோடு ஒட்ட வைக்கத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்தார். லில்லியன் அதற்கு மேல் விட்பி யில் தாமதிக்காமல் கிளம்பிவிட்டார். குழந்தையும் அதன் பாதுகாவலரும் பவித்ராவின் அறைக்கு அடுத்தாற்போல இருந்த அறையில் தங்க லில்லியன் ஏற்பாடு பண்ணி இருந்தார். ஆனால் அந்த ஏற்பாட்டிற்கு பவித்ரா சம்மதிக்கவில்லை. அவர்கள் இருவரையும் தன்னுடைய அறையிலேயே தங்குமாறு வேண்டிக் கொண்டாள். 

குழந்தை எவ்வளவு சீக்கிரத்தில் அவளோடு அன்னியோன்யமாகிறதோ அதை அவ்வளவுக்கவ்வளவு பவித்ரா விரும்பினாள். அவளின் மனதைப் புரிந்து கொண்ட மற்றைய இரு பெண்களும் அவள் சொன்னதற்குத் தலையை ஆட்டினார்கள். லில்லியன் கிளம்புவதற்கு முன்பாக அங்கிருந்த மேனேஜரிடம் பவித்ரா எது கேட்டாலும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு பணித்துவிட்டுத்தான் கிளம்பினார்.

அன்றைக்கு முழுவதும் பவித்ரா குழந்தையோடுதான் நேரம் செலவழித்தாள். பாதுகாவலராக இருந்த பெண்ணோடு மூவரும் கடற்கரை வரை போய் வந்தார்கள். குழந்தைக்கு உணவு கொடுக்கும் வேலையை அன்றே முழுதாகத் தன்வசம் எடுத்துக் கொண்டாள் பெண். குழந்தையின் சின்னச் சின்னத் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டாள்.

பெண்களுக்கு இயற்கையிலேயே உரித்தான தாய்மை உணர்வு பவித்ராவிற்குள்ளும் இருந்ததால் பல விஷயங்கள் பிறர் சொல்லாமல் அவளுக்கேப் புரிந்தது. அன்றிரவு கூட தூங்கும் குழந்தையை வெகுநேரம் வரைப் பார்த்திருந்தாள். யாரோ பெற்ற குழந்தை அது என்பது மறந்து போய், தானே பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பிள்ளை என்பது போல உணர ஆரம்பித்து விட்டாள் பெண்.

அன்றைக்கு நடந்தது அனைத்தையும் பவித்ராவோடிருந்த பெண் லில்லியனுக்கு அலைபேசி மூலம் அறிவித்தது அவளுக்குத் தெரியாது. 

“நான் சரியான கைகளில்தான் ஹரியை ஒப்படைத்திருக்கிறேன்.” என்று ஒரு பெருமூச்சுடன் கண்ணீர்க் குரலில் லில்லியன் அந்தப் பெண்ணிடம் பதில் சொன்னதும் பவித்ராவிற்கு தெரியாது.

***

காலையில் வெளியே போன ரிஷி வீடு திரும்பிய போது நண்பகல் பன்னிரெண்டு மணி. வெயில் அன்றைக்கு நன்றாகவே அடித்தது. வரும்போதே உணவையும் ஆர்டர் பண்ணி எடுத்துக் கொண்டு வந்திருந்தான். கவுன்சில் வேலை ஆரம்பித்ததில் இருந்து அடிக்கடி சிறிது நேரம் வெளியே போகவேண்டி ஏற்படுகிறது.

பவித்ராவை வீட்டில் தனியாக விட்டுவிட்டுப் போவது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் இப்போதைய சூழ்நிலைக்கு அது நல்லது என்றுதான் ரிஷி நினைத்தான். லில்லியன் இப்படியொரு காரியத்தைப் பண்ணுவார் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. லில்லியனை அவனுக்குப் பிடிக்கும்.

ரிஷியின் அப்பா தொழில் பண்ணிய காலத்திலிருந்து இவர்களுக்குள் பழக்கம் உண்டு. அப்போது தொழில் இத்தனைத் தூரம் வளர்ந்திருக்கவில்லை. ரிஷியும் படித்துக் கொண்டிருந்தான். ஷார்லட்டை ரிஷிக்கு தெரியாது. ஆனால் லில்லியனை இவன் அறிவான். அன்பான பெண்மணி, கனிவோடு இவனிடம் பேசுவார்.

தந்தையின் மறைவுக்குப் பின்னர் ரிஷியின் கைகளில் தொழில் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் ஆரம்பித்த அசுர வளர்ச்சியில்தான் ஷார்லட்டின் பார்வை இவன் மேல் திரும்பியது. அழகான பெண்ணான ஷார்லட்டின் மனதில் பல கணக்குகள் ஓடுகின்றன என்பதை ரிஷி ஆரம்பத்தில் அறிந்து கொள்ளவில்லை. எல்லாம் புரிந்த போது காலம் கடந்திருந்தது. ஆனாலும் ஷார்லட்டின் நிர்ப்பந்தங்கள் எதற்கும் ரிஷி பணிந்து கொடுக்கவில்லை.

விதிமுறைகள் தெரிந்துதான் அத்தனைப் பேரும் விளையாட வருகிறார்கள். அத்தோடு ஷார்லட் ஒன்றும் அத்தனைப் பாப்பா அல்ல என்பதையும் ரிஷி நன்கறிவான். ஒரேயொரு முறை மாத்திரம் அப்போது லில்லியன் ரிஷியிடம் பேச முயன்றார். ரிஷி அதற்கு இடம் கொடாமல் போகவே நாகரிகமாக விலகிக் கொண்டார்.

அப்படி விலகிய லில்லியன் இப்போது இப்படிப் பண்ணுவார் என்று ரிஷி எப்படி எதிர்பார்ப்பான்?! அப்படியே தொடர்பு கொள்ள நினைத்திருந்தாலும் தன்னை நெருங்காமல் எதற்கு பவித்ராவை நெருங்க வேண்டும்?! ஆனால் கடந்த ஒரு வருடமாக லில்லியன், ஆலிவர் மூலம் தன்னை நெருங்க முயன்றதை ரிஷி வசதியாக மறந்து போனான்.

தன்னை நெருங்க முயன்று தோற்று கடைசி முயற்சியாகவே அந்த வயதான பெண்மணி பவித்ராவை அணுகி இருக்கிறார் என்பது அவனது புத்திக்குத் தட்டுப்படவே இல்லை. மாறாக லில்லியன் மேல் கோபமே வந்தது. மகளுக்குத்தான் புத்தியில்லை என்று பார்த்தால் அம்மாவின் நிலையும் அதுதான் போலிருக்கிறது என்று வஞ்சம் வைக்க மட்டுமேத் தெரிந்திருந்தது.

வாங்கிவந்த பொருட்களை கிச்சனில் வைத்து விட்டு மனைவியைத் தேடிக்கொண்டு போனான் ரிஷி. இந்த இரண்டு நாட்களும் அவளை எந்த வகையிலும் அவன் தொந்தரவு பண்ணவில்லை. ஒதுங்கி ஒதுங்கிப் போனவளுக்கு ஆரம்பத்தில் விளக்கம் சொல்ல முயன்றவன் பிற்பாடு அமைதியாகிவிட்டான்.

அவள் இப்போது குழப்பமான மனநிலையில் இருக்கிறாள். அவளாகவே சிந்தித்துத் தன்னை ஒருநிலைப் படுத்தட்டும். பிற்பாடு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தான். வெளி வேலைகள் அவர்களுக்கான தனிமையை இயற்கையாகவே ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. மாடியை நோக்கிப் போன ரிஷி விருந்தினர் அறையைத் திறந்தான். பவித்ரா அங்கே இல்லை! அறையின் பால்கனி, பாத்ரூம் என எங்கும் தேடிப் பார்த்தான், பெண்ணைக் காணவில்லை.

“பவித்ரா!” அவர்கள் அறையிலும் தேடினான். அம்மா, அப்பாவின் அறைக்குள் அவள் போவதில்லை. இருந்தாலும் அங்கும் தேடினான்.

‘ஒருவேளை பின்புறம் கார்டனில் இருக்கிறாளோ?!’ அவசர அவசரமாக கிச்சன் கதவைத் திறந்து பின்புறத் தோட்டத்தைப் பார்த்தான். பவித்ரா அங்கேயும் இல்லை! வயிற்றுக்குள் லேசான கிலி பரவியது. பவித்ரா வெளியே எங்கேயும் போயிருக்க மாட்டாள் என்பது அவனுக்கு உறுதி. ஏனென்றால் அவளுக்கு எங்கே, எப்படிப் போவது என்று கூடத் தெரியாது.

எல்லாவற்றுக்கும் அவளுக்கு ரிஷி வேண்டும். அதனால்தானே அனைத்து வேலைகளையும் அவன் வீட்டிலிருந்து பார்ப்பதே. அவளது அலைபேசியைத் தொடர்பு கொண்டு பார்த்தான். ரிங் போனது, ஆனால் பவித்ரா ஆன்ஸர் பண்ணவில்லை. ரிஷி இப்போது குழம்பிப் போனான்.

சட்டென்று ஏதோ தோன்ற ஓடிப்போய் கப்போர்ட்டில் இருந்த அவளது பாஸ்போர்ட்டை தேடினான். அவன் வைத்த இடத்தில் அது அப்படியே இருந்தது.

‘அப்படியென்றால் எங்கே போயிருக்கிறாள்?! உடம்புக்கு வேறு முடியாமல் இருந்ததே!’ ரிஷிக்கு தலை சுற்றியது. ஒருவேளை வெளியே காலாற நடந்துவிட்டு வரலாம் என்று போயிருப்பாளோ?! வாய்ப்புகள் இருந்ததால் அமைதியாகச் சிறிது நேரம் சோஃபாவில் அமர்ந்திருந்தான். இருந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு பட்சி எதுவோ சரியில்லை என்று சொல்லவே ஆஃபீஸ் அறையில் இருந்த கம்பியூட்டரை உயிர்ப்பித்தான். அதில் ‘சிசிடிவி’ இணைக்கப்பட்டிருந்தது.

தான் வீட்டை விட்டு வெளியே போயிருந்த நேரத்தில் என்ன நடந்தது என்று பார்த்தபடி இருந்தான் ரிஷி. அவன் கார் வீட்டை விட்டு வெளியே போய் சரியாக இருபதாவது நிமிடம் பவித்ரா கையில் ஒரு சிறிய சூட்கேஸோடு முன்வாசலைக் கடப்பது தெரிந்தது. ரிஷி உறைந்து போனான்! இந்த முட்டாள் பெண் எங்கே போகிறாள்?! இங்கே அவளுக்கு யாரைத் தெரியும்?! சட்டென்று லில்லியனின் ஞாபகம் வரவே அவரை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றான்.

ஆனால் பலனேதும் கிட்டவில்லை. கோபம் தலைக்கேறவும் ஆலிவரை அழைத்தான் ரிஷி. இவன் போதாத காலம் அவன் அலைபேசி கூட அப்போது பிஸியாக இருந்தது. மீண்டும் அந்த வீடியோ பதிவை கம்பியூட்டரில் ஓட விட்டான் ரிஷி. பவித்ரா வீட்டை விட்டுச் சாலைக்குப் போவது தெரிந்தது. ஆனால் அதன் பிற்பாடு என்ன நடந்தது என்று புரியவில்லை.

மேலே இருந்த அவர்களின் அறைக்கு வந்தவன் அவள் பொருட்களை ஆராய்ந்தான். உடைகள் சிலதைக் காணவில்லை. அவள் ஃபோனும் அங்கே கப்போர்டில்தான் இருந்தது. ஃபோனை அங்கே பார்த்தபோது ரிஷிக்கு லேசாக எல்லாம் விளங்கியது. தன்னைத் தவிர்த்து விட்டுத்தான் தன் மனைவி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாள். ஃபோன் அவளிடம் இருந்தால் அவள் இடத்தைத் தன்னால் இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிந்தே அதை அவள் எடுத்துக் கொண்டு போகவில்லை!

ரிஷிக்கு இப்போது சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. அவள் வீட்டை விட்டு வெளியே போனது கூட இப்போது பெரிதாகத் தோன்றவில்லை. மனைவி தன்னை நிராகரித்து விட்டாள் என்ற உண்மை அவனை நிலைகுலையச் செய்தது. மீண்டும் மீண்டும் லில்லியனையே தொடர்பு கொள்ள முயன்றான். இப்போது பவித்ரா எங்கே போயிருப்பாள் என்பது அவனுக்கு உறுதி. 

கப்போர்டில் இருந்த அவளது பேங்க் கார்ட்டையும் தன்னோடு அவள் கொண்டு போயிருந்ததால் ரிஷி இப்போது பெரிதாகக் கவலைப்படவில்லை. நிச்சயம் இது லில்லியனின் ஏற்பாடுதான். ஒரு துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் தைரியம் பவித்ராவிற்கு நிச்சயமாக இல்லை.

ஒரு கட்டத்தில் லில்லியனை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே அவருடைய உதவியாளர், மேனேஜர்கள் என்று பலரை அணுகிப் பார்த்தான். அனைவரும் ஒன்று போல,

“மேடம் இப்போ உடம்புக்கு முடியாம இருக்காங்க, சாரி சார்… இப்ப அவங்களோட நீங்க பேச முடியாது.” என்றே பதில் சொன்னார்கள். 

ரிஷியின் அழைப்பைப் பார்த்து விட்டு ஆலிவர் அப்போதுதான் இவனைத் தொடர்பு கொள்ள அவனைக் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி விட்டான் ரிஷி.  ஆலிவரும் அப்போதே கிளம்பி ரிஷியின் வீட்டிற்கு வந்துவிட்டான். பல மணி நேரப் போராடலுக்குப் பிறகு ஆலிவரின் அழைப்பை ஏற்றார் லில்லியன். அப்போது மணி இரவு ஏழு.

“ஹாய் மேடம், எப்பிடி இருக்கீங்க?” ஆலிவர் பேச்சை ஆரம்பிக்க ரிஷி உஷாரானான்.

“நல்லா இருக்கேன் ன்னு சொல்ல மாட்டேன் யங் மேன்.” நலிந்த குரலில் சலிப்பான புன்னகையோடு பேசினார் லில்லியன். லில்லியன் பேசியதை ரிஷியும் நண்பன் பக்கத்தில் நின்றபடி கேட்டுக் கொண்டுதான் இருந்தான். 

“என்னாச்சு மேடம்?” ஆலிவருக்கு எப்போதுமே லில்லியன் மேல் ஒரு பரிதாபம் கலந்த அன்புண்டு. அதனாலேயே அவர் இவனைத் தொடர்பு கொண்டு உதவி கேட்ட போதெல்லாம் ரிஷியிடம் வந்து பேசி இருந்தான்.

“வயசு போகுதில்லையா ஆலிவர், எனக்குன்னு யாரு இருக்கா? ஒரு ஆளா எத்தனைச் சுமையை நானே சுமக்கிறது?” லில்லியன் பேசப் பேச ஆலிவரின் முகம் கவலையைக் காட்டியதென்றால் ரிஷியின் முகம் கோபத்தில் சிவந்தது.

‘பண்ணுறதையெல்லாம் பண்ணிட்டுக் கிழவிக்குக் கொழுப்பைப் பாரு?!’ ரிஷி கண்ணால் ஜாடை செய்ய ஆலிவர் இப்போது மீண்டும் பேசினான்.

“இப்போ எங்க இருக்கீங்க மேடம்?”

லீட்ஸ் ல இருக்கேன் ப்பா.” 

அவ்வளவுதான், லில்லியன் பதில் சொன்னதுதான் தாமதம், காரின் கீயை எடுத்துக் கொண்டு ரிஷி வெளியே வந்துவிட்டான். வீட்டை மூடிக்கொண்டு ஆலிவரும் ஓடிப்போய் காரில் ஏறிக் கொள்ள அந்த ப்ளாக் ஆடி லீட்ஸ் நோக்கி விரைந்தது. 

கோடைகாலம் என்பதால் மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்த அந்த இரவு வேளையிலும் வெளிச்சம் நன்றாக இருந்தது. ரிஷி மூர்க்கத்தனமாக அந்தக் கறுப்பு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தான்.  

Leave a Reply

error: Content is protected !!