kkavithai25
kkavithai25
கவிதை 25
அன்னபூரணி அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு படுக்கையறைக்கு வந்தார். காயத்ரியும் அவள் கணவனோடு மாமியார் வீடு போயிருந்ததால் சமையலை சிம்பிளாக முடித்திருந்தார் அன்னபூரணி. மனைவியின் வருகையை எதிர்பார்த்திருப்பவர் போல கட்டிலில் சாய்ந்திருந்தார் பாண்டியன்.
“என்னங்க? இன்னும் தூங்கலையா?”
“இல்லை பூரணி, உங்கிட்டக் கொஞ்சம் பேசணும், அதுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்.”
“ஏதாவது முக்கியமான விஷயமாங்க?” கேட்டபடி கட்டிலில் வந்தமர்ந்தார் அன்னபூரணி.
“வரனொன்னு வந்திருக்கு பூரணி, மாப்பிள்ளை என்ஜினியர், ரொம்ப நல்ல இடம்.”
“யாருக்குப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க?” ஆச்சரியமாகச் சிரித்தார் மனைவி.
“நான் என்னத்தை நினைக்க, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களேக் கேட்கிறாங்க.”
“ஓ… யாரை? நம்ம சொந்தத்துல யாருமா?”
“ம்… பாஸ்கரோட ரெண்டாவது பொண்ணு, அந்தப் பொண்ணைத்தான் கேட்கிறாங்க.”
“ஓ…” அன்னபூரணி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அமைதியாக யோசனை செய்தபடி அமர்ந்திருந்தார்.
“என்ன பூரணி அமைதியாகிட்டே?”
“நல்ல இடம் ன்னு சொல்றீங்க, தானாத் தேடி வரும்போது விடவும் மனசில்லை.”
“ம்…”
“ஆனா இதைப்பத்தி நீங்க பேசினா அந்த பாஸ்கர் வீம்புக்குன்னே வேணாம்னு சொல்லுவாரு.”
“கரெக்ட்டு… அதான் நானும் யோசிக்கிறேன் ம்மா.”
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன சொல்றாங்க?”
“பொண்ணு உங்க சொந்தம்தானே, நீங்களே முன்ன நின்னு பேசி முடியுங்கன்னு சொல்றாங்க.”
“அது நடக்கும் ன்னு எனக்குத் தோணலைங்க.” சட்டென்று சொன்னார் அன்னபூரணி.
“அப்ப என்ன பண்ணலாம் பூரணி?”
“பவித்ராக்கிட்ட நாம விஷயத்தைச் சொல்லுவோம், பாஸ்கர்தான் தலைகீழா நின்னு ஆடுறாரேத் தவிர ரேணு கொஞ்சம் நிதானமா இருக்கிற மாதிரித்தான் தெரியுது.”
“ம்…”
“பவித்ராவை ரேணுக்கிட்டப் பேசச் சொல்லிச் சொல்லுவோம், ஆயிரந்தான் இருந்தாலும் மூனு பொண்ணுங்களை வரிசையா வீட்டுல வெச்சிருக்கிறவ வீடு தேடி வர்ற நல்ல சம்பந்தத்தை அவ்வளவு சீக்கிரத்துல உதாசீனம் பண்ண மாட்டா.”
“அப்போ பவித்ராக்கு நாளைக்குக் காலையில ஃபோனை போட்டு விஷயத்தைச் சொல்லும்மா, அதுக்கப்புறமா என்ன பண்ணுறதுன்னு யோசிக்கலாம்.”
“நாம இதுல முன்னாடி நின்னு நடத்தணும்னு எந்த அவசியமும் இல்லைங்க, அந்தப் புள்ளைங்களுக்கு நல்லதா ஒரு வாழ்க்கை அமைஞ்சா அதுவேப் பெரிய சந்தோஷந்தான், இந்த ரிஷி பண்ணின காரியத்தால எல்லாரையும் பகைச்சுக்க வேண்டியதாப் போச்சு.” அன்னபூரணி இப்போது பெருமூச்சு விட்டார்.
“பூரணி, அதையேத் திரும்பத் திரும்பப் பேசாதம்மா, விட்டுத் தள்ளு, பிரச்சினைகள் ஓரளவுக்கு ஓய்ஞ்சு போய் ரிஷி இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கான், இனியும் என்னத்துக்கு அந்தப் பேச்சு?”
“அதுவும் சரிதான்.”
“பேசாமப் படு, காலையில அந்தப் பொண்ணுக்கிட்டப் பேசலாம்.”
“ம்…” அன்னபூரணி லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு வந்து படுத்துக் கொண்டார். இந்தக் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று அவர் மனது பிரார்த்தனைப் பண்ணியது. ஆனால் பாண்டியன் அத்தனைச் சீக்கிரத்தில் தூங்கி விடவில்லை. யோசனை செய்தபடி படுத்திருந்தார். என்னதான் பவித்ரா ரிஷி செய்த காரியத்தைப் பெரிய மனதோடு ஏற்றுக் கொண்டிருந்தாலும் ஊர் அப்படி ஏற்றுக் கொள்ளுமா என்ன?!
“என்ன பாண்டியன்? பெரிய பொண்ணு குடும்பத்தோட பாஸ்கர் பேச்சுவார்த்தை வெச்சுக்கிறது இல்லைப் போல?” இன்றைக்கு வந்த இன்ஜினியர் மாப்பிள்ளையின் அப்பா இப்படித்தான் கேட்டார்.
“பாஸ்கரோட மூத்த பொண்ணு உங்க சம்சாரத்தோட சொந்தத்துலதானே கட்டியிருக்கு?”
“ஆமாங்க…” பாண்டியன் இந்த இடத்தில் கொஞ்சம் திணறித்தான் போனார். வேறு யாருமாக இருந்தால் ஊர் வம்புக்கு அலைகிறார்கள் என்று தட்டிவிடலாம். இங்கே கேட்பது மாப்பிள்ளையின் அப்பா. நாளை சொந்தம் என்று ஆகப்போகிற உறவு, விளக்கம் சொல்லத்தானே வேண்டும்.
“என்னாச்சு பாண்டியன்?”
“என்னத்தைச் சொல்ல? வெளிநாட்டுல பொறந்து, வளர்ந்த பையன், அங்கத்தைய நாகரிகம் நமக்குப் பிடிபட மாட்டேங்குது, ஆனா சொந்தத்தையும் உதற முடியலை.”
“அதுவும் சரிதான்.”
“நடந்தது எதுவும் எங்க யாருக்கும் தெரியாது, ஆனா பொண்ணுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கும் போல.” பவித்ரா சொன்ன அதே பொய்யை இப்போது பாண்டியனும் சொன்னார்.
“ஓ… அப்போப் பொண்ணு எல்லாந் தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணி இருக்கு!”
“ஆமா செல்வம், அப்பக்கூட பையன் எல்லாத்தையும் உங்க வீட்டுல சொல்லலாம் ன்னு பொண்ணுக்கிட்டச் சொல்லி இருக்கான், ஆனா பொண்ணு ஒத்துக்கலை.”
“அதுசரி, பையனை ரொம்பப் புடிச்சுப் போச்சு போல, வீட்டுல சொன்னாச் சம்மதிக்க மாட்டாங்கன்னு நினைச்சிருக்குது!”
“ஆமா… ஆனா விஷயம் தெரிய வந்தப்போ பாஸ்கர் ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துட்டாரு.”
“நியாயந்தானே பாண்டியன், ஆயிரம் இருந்தாலும் பொண்ணைப் பெத்தவர் இல்லையா?”
“உண்மைதான், அவரு நிலைமைல நாம இருந்தாலும் இதைத்தானே செஞ்சிருப்போம்?”
“அதைச் சொல்லுங்க, பாஸ்கரோட பொண்ணுங்களைப் பத்தி இதுவரை யாரும் தப்பா ஒரு வார்த்தைச் சொன்னதில்லை.”
“இதுவரை மட்டுமில்லை, இனியும் யாரும் ஒரு வார்த்தை அந்தப் பொண்ணுங்களைப் பத்திப் பேச முடியாது செல்வம்.”
“ஆமா பாண்டியன், எனக்கிருக்கிறது ஒரே பையன், வீட்டுக்கு வர்ற மருமகள்தான் எங்களுக்கு மகள், அது நல்லபடியா அமையணும், பையன் என்ஜினியர் ன்னதும் கொஞ்சம் பெரிய இடத்துல இருந்தெல்லாம் கேட்டு வந்தாங்க, ஆனா எனக்கு அதுலெல்லாம் உடன்பாடு இல்லைப்பா.”
“அதுவும் சரிதான், வீட்டுக்கு வர்றவ கொண்டு வந்தா இனி உங்களுக்கு நிறையப் போகுது.” மாப்பிள்ளை வீட்டார் நல்ல வளமான குடும்பத்தவர்கள் என்று பாண்டியனுக்கும் தெரியும்.
“எங்க கவுரவத்துக்கு ஏத்த மாதிரி ஏதாவது பண்ணினாலேப் போதும் பாண்டியன், நாங்க ரொம்ப எதுவும் எதிர்பார்க்கலை.”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை செல்வம், பாஸ்கர் அதுல எந்தக் குறையும் வெக்கமாட்டார்.”
ஊர் உலகத்தில் என்ஜினியர் மாப்பிள்ளைக்கு செய்யும் சீர் செனத்திகளை பாண்டியன் நன்கறிவார். அதில் பாதியைக் கூட பாஸ்கரால் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் வந்திருக்கும் நல்ல வரனை விட்டுவிடவும் மனது வரவில்லை. பவித்ராவிடம் எல்லாவற்றையும் விலாவரியாக நாளைப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பாண்டியனும் கண்ணயர்ந்தார்.
***
அடுத்த நாள் காலை ஒரு பத்து மணி போல தன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள் பவித்ரா. குழந்தையை ரிஷியிடம் விட்டுவிட்டு வந்திருந்தாள்.
“நான் எப்பிடி பவி? எனக்கு இதெல்லாம் தெரியாது.” ஹரியை தன் பொறுப்பில் விட்ட பவித்ராவிடம் ரிஷி அலறினான்.
“ப்ளீஸ் த்தான், கொஞ்சம் பார்த்துக்கோங்க, பேச வேண்டியதைப் பேசி முடிச்சிட்டு நான் சீக்கிரமாவே வந்திடுவேன்.” கணவனிடம் குழந்தையை விட்டுவிட்டு வரவேண்டும் என்று பவித்ராவும் நினைக்கவில்லை. ரிஷியின் ஒதுக்கம் அவளை இப்படிச் செய்யத் தூண்டியது. புது வீட்டிற்குப் போய் இத்தனை நாட்களில் பவித்ரா கணவனைக் கவனித்திருந்தாள். ஆரம்பத்தில் தன் மனைவியின் சந்தோஷத்திற்காக மாத்திரமே ரிஷி அந்தக் குழந்தையை ஏற்றுக் கொண்டான். ஆனால் காலப்போக்கில் அந்த எண்ணம் மாறியிருக்க வேண்டும். இப்போது அவன் பேச்சுக்களில் குழந்தையின் பெயரும் அவ்வப்போது இடம் பெறுகின்றன. லேசான நெருக்கம் தெரிகின்றது.
“நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க, எனக்கு வேலை நிறைய இருக்கு.” கடைத் தெருவிற்குப் போக பவித்ரா அழைத்த போது இப்படித்தான் பதில் வந்தது.
“ஹரி க்கு இந்த ட்ரெஸ் நல்லாவே இல்லை.” ஒரு நாள் பார்க் இற்குப் போகலாம் என்று கிளம்பிய போது ரிஷி சொன்ன வார்த்தைகள் இவை.
குழந்தை மேல் பாசம், அக்கறை எல்லாம் இயல்பாகவே உருவாகி இருந்தது. ஆனால் ரிஷிக்கு அதைக் காட்டத் தெரியவில்லை. ஒருவேளை குழந்தை மேல் தனக்கிருந்த அன்பை வெளிக்காட்டத் தயங்குகிறானோ என்ற எண்ணம் தோன்றவே பவித்ரா இப்படியான தனிமைகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தாள். பவித்ரா அம்மாவின் வீட்டுக்கு வந்த போது ரேணுகா மாத்திரமே இருந்தார். மகளைப் பார்த்ததும் தாய் முகம் மலர்ந்து போனது. புது வீட்டிற்குப் போன பிறகு பவித்ரா இன்றைக்குத்தான் இங்கு வருகிறாள்.
“வா பவி, எப்பிடி இருக்கே?”
“ம், நல்லாருக்கேன் ம்மா.” சொல்லிய படி உள்ளே வந்த மகளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார் அம்மா. நிறைவான மலர்ச்சியோடு இருந்தது அந்த முகம்.
“உட்காரு பவி, குட்டிப் பையன் எங்க?”
“அவங்க அப்பாவோட இருக்கான்.”
“ஓ… மாப்பிள்ளை சின்னவனோட நல்லாப் பழகுறாரா?”
“ரொம்ப எல்லாம் கிடையாது, ஆனா முன்னைக்கு இப்போப் பரவாயில்லை.” புன்னகைத்தபடி சோஃபாவில் அமர்ந்தாள் பவித்ரா. முதல்முறையாக இந்த வீட்டுக்குள் ஹரியோடு நுழைந்த பொழுது பெண்ணுக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்தது. அன்றைக்கு இவ்வளவு இயல்பாக அந்தச் சிறு குழந்தையை ஏற்றுக் கொள்ளவில்லை ரேணுகா.
“யாருடி இது? உனக்கெதுக்குடி இந்தத் தேவையில்லாத சுமை?” இப்படித்தான் தன் மகள் மேல் பாய்ந்தார் ரேணுகா. பவித்ராவின் சகோதரிகள் கூட அந்தச் சின்னஞ்சிறு பையனை ஒரு தினுசாகத்தான் பார்த்தார்கள். ஆனாலும் நாட்கள் நகர நகர அவர்களுக்கு கொள்ளை கொள்ளும் அழகோடு இருந்த அந்தச் சிறுவனைப் பிடித்துப் போனது. இயல்பிலேயே பெண்களுக்கே உரித்தான தாய்மை உணர்வா? இல்லை ஹரி மேல் அந்த ஆண்டவன் அளவில்லாத பாசம் வைத்திருந்தானா? எதுவென்று தெரியவில்லை. அந்த வீட்டின் செல்லப் பிள்ளையாக மாறிப் போனான் ஹரி.
அதற்கு விதிவிலக்காக இருந்தவர் பாஸ்கர் ஒருவர்தான். ஏனோ தெரியாது, ஹரியை எந்த விதத்திலும் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தாய், தந்தை இருவரது பாசத்தையும் தவறவிட்ட துரதிருஷ்டசாலி இந்த ஹரி என்பது கூட அவரை இளக்கவில்லை. தன் மகளின் வாழ்க்கையைப் பறிக்க வந்த விஷப் பூச்சியாகவே அந்தச் சிறுவனை பார்த்தார் பாஸ்கர். சொல்லப் போனால் வீட்டிலிருக்கும் பெண்கள் அந்தக் குழந்தையைக் கொண்டாடுவது கூட அவருக்குப் பிடிக்கவில்லை.
ஆனால்… அதைச் சொல்லும் தைரியம் அவருக்கு இருக்கவில்லை. தான் ஏதாவது சொல்லப்போக, ஏற்கனவே நொந்து போயிருக்கும் தன் மூத்த பெண் இன்னும் வருந்திவிடக் கூடாதே என்று பாஸ்கர் தன்னை அடக்கிக் கொண்டார்.
“சொல்லு பவி, என்ன திடீர்னு இந்தப் பக்கம் வந்திருக்கே?”
“ஏம்மா? நான் இங்க வரக்கூடாதா?” பட்டென்று சிரித்தாள் பெண்.
“இல்லைடி, புது வீடு வாங்கி அதுல பிஸியா இருக்கிற நீ திடீர்னு இந்தப் பக்கம் வந்திருக்கேன்னா… காரணம் இல்லாமலா இருக்கும்?”
“காரணம் இருக்குத்தான், அதிருக்கட்டும்… நீங்கெல்லாம் எப்போ எங்க வீட்டுக்கு வரப் போறீங்க?”
“ம்… ஆசைதான், என்ன பண்ணச் சொல்றே? உங்கப்பா ஒத்து வரணுமே!”
“அதெல்லாம் கூடிய சீக்கிரம் வந்திடுவாங்க, அன்னபூரணி அத்தை வந்துட்டாங்களே!” பவித்ரா இப்போது பரவசப் பட்டாள்.
“நானும் கேட்கணும்னு நினைச்சேன் பவி, உண்மையாவே அண்ணி உங்க வீட்டுக்கு வந்தாங்களா?!”
“ஆமா ம்மா.”
“உங்கிட்ட நல்லாப் பேசினாங்களா?” ஆர்வத்தோடு கேட்டார் அம்மா.
“வரும் போது முகத்தை நாலு முழத்துல நீட்டி வெச்சுக்கிட்டுத்தான் வந்தாங்க, வந்தும் டக்குன்னு பேசிடல்லை, ஆனா ஹரியை பார்த்துட்டு ஓன்னு அழுதாங்க, உனக்கு இதெல்லாம் தேவையாடின்னு என்னைத் திட்டினாங்க, அதுக்கப்புறம் கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுதாங்க.”
“ம்…” கேட்டுக் கொண்டிருந்த ரேணுகாவின் கண்களும் இப்போது கலங்கியது.
“அதை விடும்மா, நான் பேச வந்ததை மறந்துட்டு என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்கேன்.”
“சொல்லு பவி.”
“இன்னைக்குக் காலையில அன்னபூரணி அத்தை கூப்பிட்டாங்க.”
“என்னவாம்?”
“பாண்டியன் மாமாவும் பேசினாங்க, மாப்பிள்ளை ஒன்னு வந்திருக்காம்.”
“மாப்பிள்ளையா?! யாருக்கு?!” பேச்சின் தலை கால் புரியாமல் அதிசயித்தார் ரேணுகா.
“நம்ம அகல்யாவை கேட்கிறாங்களாம் ம்மா, பையன் என்ஜினியராம்.”
“ஓ… என்ஜினியரா? யார் வீட்டுப் பையனாம்?”
“செல்வம் ன்னு சொன்னாங்க, இதே ஊர்தானாம், அம்மாக்கிட்டச் சொல்லு பவி, அவங்களுக்குத் தெரியும்னு சொன்னாங்க.”
“செல்வமா? ரொம்பப் பெரிய இடமாச்சே பவி?! நம்மால எப்பிடி அவங்களுக்கு ஈடுகொடுக்க முடியும்?! பையன் வேற என்ஜினியர் ன்னு சொல்றே?!”
“அதனால என்னம்மா? அதெல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம், பாண்டியன் மாமா இந்த வரனை விட்டுடக் கூடாது ன்னு சொன்னாங்க.”
“எப்பிடி டீ?”
“அவங்களாத்தான் கேட்டிருக்காங்க, பாஸ்கர் உங்களுக்குச் சொந்தம்தானே? இந்த விஷயத்தை நீங்களேப் பேசி முடிச்சுக் குடுங்கன்னு கேட்டிருக்காங்க.” பவித்ரா சொல்லி முடிக்க ரேணுகா யோசனையாக மகளைப் பார்த்தார்.
“புரியுது ம்மா, உம் மனசுல ஓடுறதைத்தான் அன்னபூரணி அத்தையும் சொன்னாங்க, நாங்க வந்து நின்னா வீடு தேடி வர்ற இந்த நல்ல வரனை உங்கப்பன் வேணாம்னு சொல்லிடுவான், அதனால நீயேப் போய் பேசுன்னு சொன்னாங்க.”
“அதுவும் சரிதான், என்னதான் நல்ல சம்பந்தமா இருந்தாலும் அவங்க அளவுக்கு சீர் செனத்தி செய்ய நம்மால முடியாது பவி.” கவலையோடு சொன்ன அம்மாவின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள் மகள்.
“அவங்களாத்தானே கேட்டு வர்றாங்க ம்மா.”
“இருந்தாலும் எதிர்பார்ப்பாங்க பவி, வீடு கேட்கலைன்னாலும் நகை, ரொக்கம் ன்னு எதிர்பார்ப்பாங்க.”
“நகை நம்ம வீட்டுல இருக்குத்தானே ம்மா?”
“நகை இருக்கு, அது பிரச்சினை இல்லை, ரொக்கம் கேட்டா என்ன பண்ணுறது? எனக்கென்னவோ இது நம்ம தகுதிக்கு மீறின இடமோன்னு தோணுது.”
“ஓ… இருந்தாலும் அப்பாக்கிட்ட ஒரு வார்த்தை நீங்க பேசிடுங்க ம்மா, நம்ம வசதி என்னன்னு தெரிஞ்சுதானே பொண்ணைக் குடுங்கன்னு வர்றாங்க, பார்ப்போம்… நம்மளால முடிஞ்சதை எதிர்பார்த்தா மேற்கொண்டு பேசுவோம், இல்லைன்னா ‘சாரி’ ன்னு சொல்லிட வேண்டியதுதான்.”
“ஆமா… அகல்யா தலையில என்ன விதிச்சிருக்கோ அது நடக்கட்டும்.” அதற்கு மேலும் தாமதிக்காமல் பவித்ரா வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.
“சாப்பிட்டுட்டு போயேன் பவி.”
“இல்லை ம்மா, சீக்கிரமா வந்திடுறேன் ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன், நீங்க எப்போ எங்க வீட்டுக்கு வரப் போறீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல.” மீண்டும் கேட்டது பெண்.
“உங்கப்பா சம்மதிக்கணுமே?”
“அதெல்லாம் சம்மதிப்பாங்க, அகல்யாக்கு கல்யாணம் பேசும் போது மூத்த மாப்பிள்ளை ன்னு சபையில அத்தான் வந்து நிற்கத்தானே வேணும்.”
“அதுக்கும் உங்கப்பா என்ன சொல்லுவாரோ?!”
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்.” நல்ல வார்த்தை சொன்ன மகளை மனம் நிறைந்த புன்னகையோடு வழியனுப்பி வைத்தார் ரேணுகா.
***
வீட்டுக்கு வந்த பவித்ரா ரிஷியை தேடினாள். ஹாலில் அப்பா, மகன் இருவரையும் காணவில்லை. ஆஃபீஸ் ரூமில் பார்த்தாள், அங்கேயும் இல்லை.
“ரெண்டு பேரும் எங்க போயிட்டாங்க?” முணுமுணுத்தபடி ஹரியின் அறையை எட்டிப் பார்த்தாள். அவள் கண்ட காட்சி அத்தனை அழகாக இருந்தது. ஹரி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். அவனருகே ரிஷியும் கால் நீட்டி அமர்ந்திருந்தான். மகனின் தலையை ஆதூரமாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது தந்தையின் கரம். பக்கத்தில் ஹரி விரும்பிப் படிக்கும் புத்தகம் ஒன்று கிடந்தது கட்டிலில்.
“அத்தான்.” மனைவியின் அழைப்பில் சிந்தனைக் கலைந்தது ரிஷிக்கு.
“வந்துட்டயா பவி.” மகனுக்கு அணைவாக ஒரு தலையணையை வைத்து விட்டு ரிஷி மெதுவாக எழுந்து வந்தான். தன் கண்களையே நம்ப முடியாமல் வைத்த கண் வாங்காமல் அவர்கள் இருவரையும் பார்த்தாள் பவித்ரா. ரிஷி ஒரு நல்ல கணவன். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் பெண்ணுக்கு இல்லை. ஆனால் அவன் எத்தகைய தந்தை என்று இதுவரை அவள் பார்த்ததில்லை.
ஆரம்பத்தில் ஹரியை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சொல்லப்போனால் தன் வாழ்க்கைக் கெட்டு நாசமாய் போனதற்குக் காரணமே அந்தக் குழந்தைதான் என்ற வெறுப்பு கூட ரிஷிக்கு இருந்தது.
நாட்கள் செல்லச் செல்ல அந்த நினைப்பு மாறிப் போனாலும் ஹரியை அத்தனைச் சுலபத்தில் தன் மகன் என ரிஷி ஏற்றுக் கொள்ளவில்லை. நிறையவே ஒதுக்கம் காட்டினான். பவித்ராவுக்கு அது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ரிஷிக்கு விழுந்திருக்கும் அடியின் வீரியம் சற்று அதிகம் என்பதால் காலம் தானாகக் கனியட்டும் என்று காத்திருந்தாள்.
ஆனால் இன்றைக்கு அவள் பார்த்த காட்சி மனதுக்கு வெகு திருப்தியாக இருந்தது. தனக்கும் ரிஷிக்குமாக ஒரு குழந்தைப் பிறந்தால் அதை ரிஷி எந்தளவுக்குத் தாங்குவான் என்று அவளுக்குத் தெரியும். அதை விட ஒரு விகிதம் கூட ஹரி மேல் ரிஷி காட்டும் அன்பு குறைந்து விடக்கூடாது என்பது அவளது பேரவா. தனது ஆசை எங்கே நிறைவேறாமலேயேப் போய் விடுமோ என்று பவித்ரா பலமுறைக் கவலைப் பட்டதுண்டு. ஆனால் அந்தக் கவலை இன்று காணாமல் போனது. அத்தானின் மனது கூடிய சீக்கிரமே ஹரியை முழு மனதாக ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கைப் பிறந்தது.
“தூங்கிட்டானா த்தான்?” பேசிய படியே இருவரும் ஹாலுக்கு வந்தார்கள்.
“நீ போன கொஞ்ச நேரத்துலேயே தேட ஆரம்பிச்சுட்டான், என்னப் பண்ணுறதுன்னு புரியலை, அதான் அவனோட புத்தகத்தை எடுத்து ரீட் பண்ணினேன், கதை கேட்டபடியே தூங்கிட்டான்.”
“கதை சொன்னா நல்லாக் கேட்டுக்கிட்டுத் தூங்கிடுவான்.”
“அதுசரி, சொல்லுற ஆள் அப்பிடியில்ல! நீ கதை சொன்னா யாருதான் கேட்க மாட்டாங்க?!” சிரித்தபடியேச் சொன்னவன் மனைவியைத் தன்னருகே அழைத்துக் கொண்டான்.
“என்ன சொல்றாங்க என்னோட மாமியார்?”
“பூரணி அத்தை சொன்னதைச் சொன்னேன், ரொம்பத் தயங்குறாங்க த்தான்.”
“ஏன் டா?”
“வசதியான இடம் போல இருக்கு, பையன் வேற என்ஜினியர், அதிகமா எதிர்பார்த்தா நம்மால முடியாதுன்னு சொல்றாங்க.”
“அதெல்லாம் முடியும், முதல்ல பையன் எப்பிடின்னு மட்டும் பார்க்கச் சொல்லு பவி.”
“பையன், குடும்பம் எல்லாம் நல்ல மாதிரின்னுதான் பாண்டியன் மாமா சொன்னாங்க.”
“இருந்தாலும் நாமளும் ஒரு தரம் விசாரிக்கிறது நல்லதில்லையா?”
“அதுவும் சரிதான்.”
“பணந்தான் பிரச்சினைன்னாக் கவலைப்படாதே டா, நாம அதைப் பார்த்துக்கலாம்.”
“உங்களுக்கு ஓகேவா த்தான்?” தயங்கியபடி கேட்டாள் பவித்ரா.
“ஏய்! என்னப் பேசுறே நீ? நம்ம அகல்யாக்கு பண்ணாம வேற யாருக்கு நாம பண்ணப் போறோம்?!”
“இல்லை… இப்போதான் வீட்டுலயும் கார்லயும் நிறையப் பணத்தைப் போட்டிருக்கீங்க…” கவலையோடு பேசிய மனைவியை ஆதரவாக அணைத்துக் கொண்டான் ரிஷி.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை டா.”
“அதில்லை த்தான்…”
“எனக்கிருக்கிற ஒரே பிரச்சினை இப்ப உங்கப்பாதான், அவரை எப்பிடிச் சரிக்கட்டுறதுன்னுதான் எனக்குப் புரியலை.” ஏதோப் பேச ஆரம்பித்த மனைவியை இடைமறித்துச் சொன்னான் ரிஷி.
“அப்பாவை நான் பார்த்துக்கிறேன், அந்தக் கவலை உங்களுக்கு வேணாம் த்தான்.”
“அப்போக் கவலையை விடு பவி, அகல்யா கல்யாணத்தை ஜாம் ஜாம்னு முடிச்சிடலாம்.” கலகலவென்று சிரித்த கணவனை கண்களில் கனவு மின்னப் பார்த்திருந்தாள் பவித்ரா.