kkavithai28
kkavithai28
கவிதை 28
நிச்சயதார்த்தம் நல்ல விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் எனக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. மண்டபம் எடுத்துக் கொஞ்சம் பெரிய அளவில் நிச்சயதார்த்தத்தைப் பண்ண வேண்டும் என்று மாப்பிள்ளையின் அப்பா எதிர்பார்த்ததால் பாஸ்கர் எந்தத் தயக்கமும் படவில்லை. சரியென்றிருந்தார்.
நிச்சயதார்த்தம், கல்யாணம் எல்லாவற்றின் செலவிலும் பாதி பாதியை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளலாம் எனத் தீர்மானித்திருந்தார்கள். அந்த வகையில் செல்வத்தை பாராட்டத்தான் வேண்டும். வரதட்சணை கேட்டதோடு சரி. மற்றும்படி பெண்வீட்டாரை அவர் எந்தத் தொல்லையும் பண்ணவில்லை. மாப்பிள்ளை வீட்டு பந்தா எதுவும் காட்டவுமில்லை. ரிஷி குடும்ப சகிதம் மண்டபத்திற்கு வந்திருந்தான். பாஸ்கர் தான் வந்து அழைக்கவில்லை என்றாலும் மனைவியை அனுப்பி வைத்திருந்தார். அதில் பவித்ராவுக்கு லேசான வருத்தம் இருந்தது. ஆனாலும் ரிஷி எதையும் கண்டு கொள்ளவில்லை.
அன்றைக்கு யாரும் எதிர்பாராத விதமாக ரேணுகா அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்ற போது பவித்ரா திக்குமுக்காடிப் போனாள். ரிஷி கூட ஆச்சரியப்பட்டான்.
“வாங்கத்தை.” வாய் நிறைய வரவேற்ற மாப்பிள்ளையைப் பார்த்து ஒரு சங்கடமான சிரிப்பை உதிர்த்தார் ரேணுகா.
“அம்மா!” பவித்ரா ஓடிப்போய் அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டாள்.
“எப்பிடிம்மா? அப்பாக்கு நீங்க இங்க வந்தது தெரியுமா இல்லையா?!”
“தெரியும் பவி.”
“என்னது?!”
“பவி, அம்மாவை வாசல்ல நிற்க வெச்சாப் பேசிக்கிட்டு இருப்பே?” ரிஷி சொன்ன பின்பே நனவுக்கு வந்த பவி அம்மாவை உள்ளே அழைத்துச் சென்றாள். முகம் பூத்துக் கிடந்தது.
“வீடு ரொம்ப அழகா இருக்கு பவி.” அம்மா சொல்லவும் வீடு முழுவதையும் சுற்றிக் காண்பித்தது பெண்.
“என்னால நம்பவே முடியலைம்மா, அப்பா எப்பிடி இதுக்கு சம்மதிச்சாரு? அன்னைக்கு இங்க வந்து சத்தம் போட்டுட்டுப் போனாரு.”
“வாழ்க்கை, குடும்பம் ன்னா இதெல்லாம் உள்ளதுதான் பவி, நாமதான் கொஞ்சம் அனுசரிச்சு, விட்டுக்குடுத்துப் போகணும்!”
“ம்… இப்போ என்ன ஆச்சாம் அப்பாவுக்கு? மனசு இரங்கிடுச்சாமா?”
“என்னமோத் தெரியலை பவி, அவராவேதான் வந்து உன்னோட பொண்ணையும் மாப்பிள்ளையையும் நிச்சயதார்த்தத்துக்கு வரச்சொல்லு அப்பிடின்னு சொன்னார்.”
“ஓஹோ! அதை அவங்க வந்து சொல்ல மாட்டாங்களாமா?” பவித்ரா இப்போது முறுக்கிக் கொண்டாள்.
“எனக்கு அதெல்லாம் தோணலைம்மா, அந்த மனுஷன் மனசு மாறுரதுக்கு முன்னாடி நான் இங்க ஓடி வந்துட்டேன்.”
“நிம்மதியா எங்க வீட்டுல உட்கார்ந்து இன்னைக்கு நீங்க சாப்பிட்டுட்டுத்தான் போகணும் அத்தை.” இது ரிஷி.
“இல்லை மாப்பிள்ளை, நான் வீட்டுக்குப் போகணும், வேலை தலைக்கு மேல கிடக்குது, நிச்சயதார்த்தத்தையும் மண்டபம் எடுத்து கொஞ்சம் க்ராண்டா பண்ணணும்னு மாப்பிள்ளை வீட்டுல சொல்லிட்டாங்களாம்.” லேசான வருத்தம் அந்தக் குரலில்.
“அதனால என்னத்தை? தாராளமாப் பண்ணிடலாம், அதுக்கு ஏன் வருத்தப்படுறீங்க?”
“அப்பிடியில்லை மாப்பிள்ளை.” பிரச்சனை என்று வந்த பிற்பாடு ரேணுகா இப்போதுதான் மருமகனை நேருக்கு நேராகப் பார்க்கிறார். ஆரம்பத்தில் வருத்தம் இருந்த போதிலும் இப்போது என்னமோ மனது இளகிப் போனது. ரிஷி கெட்டவன் இல்லை என்ற எண்ணம் ஆழ்மனதில் உறுதியாகப் பதிந்து போனது. தன் கணவர் ஒருசில விஷயங்களைப் பிடித்துக் கொண்டு வன்மம் பாராட்டுவது போல அவரால் இருக்க முடியவில்லை.
“உங்கக்கிட்டச் சொல்லுறதுக்கு என்ன மாப்பிள்ளை? வழிவழியா இவங்கப்பாவுக்குன்னு வந்த வயல் பூமி கொஞ்சம் கிடக்குது, அதை விக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாரு.” ரேணுகா சொல்லவும் இப்போது ரிஷியும் பவித்ராவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.
“அகல்யாக்கு ஒரு நல்ல வரன் வர்றது சந்தோஷந்தான், அதுக்காக இந்தளவு போக வேணாம்னு தோணுது மாப்பிள்ளை, இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, அவங்களை நடுத்தெருவிலயா விட முடியும்? என்ன சொல்றதுன்னேப் புரியலை! எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன், அவர் கேட்குற மாதிரித் தெரியலை.”
“அம்மா, அந்த வயலை யாரு வாங்கப் போறாங்கன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”
“இல்லையே பவி, ஏன் கேட்கிறே?”
“பாண்டியன் மாமாவுக்கு தெரிஞ்சவங்கதான் நம்ம பூமியை வாங்கப் போறாங்க, பேருக்குத்தான் அவங்க வாங்குறாங்க, பாட்டியோட பூமி நம்மகிட்டத்தான் திரும்பவும் வரப்போகுது.” பவித்ரா சொல்ல ரேணுகா திடுக்கிட்டுப் போனார்.
“பவி! நீ என்ன சொல்றே?!”
“நான் டீ போடப் போறேன், அத்தான் எல்லாத்தையும் உங்களுக்கு விலாவரியாச் சொல்லுவாங்கம்மா.” அத்தோடு பவித்ரா கிச்சனுக்குள் போய்விட ரேணுகா மருமகனை பார்த்தார்.
“என்ன மாப்பிள்ளை சொல்றா இவ?!”
“அத்தை, விசாரிச்ச வரைக்கும் கார்த்திக் ரொம்ப நல்ல பையன்னு தெரிஞ்சுது, அதோட… படிக்கிற காலத்துல இருந்தே கார்த்திக்குக்கு அகல்யா மேல ஒரு அபிப்பிராயம் இருந்திருக்கு.”
“ஓ!”
“ஆமா, பல காரணங்களை யோசிச்சு பயல் மனசுல இருக்கிறதை வெளியே காமிச்சுக்கலை, ஆனா அவங்க அப்பாக்கு இது எப்பிடியோத் தெரிஞ்சிருக்கு, அதான் பையன் ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் உங்க வீட்டுக்குப் பொண்ணு கேட்டு வந்திருக்காரு.”
“……”
“அகல்யாக்கும் பையனை ரொம்பப் பிடிச்சிருந்துது, அதுல இன்னொரு பியூட்டி என்னத் தெரியுமா? பையன் ஒருநாள் எனக்கு ஃபோன் பண்ணி என்னைப் பார்க்கணும்னு சொன்னான்.”
“எதுக்கு மாப்பிள்ளை?!”
“டௌரி விஷயமா எங்கப்பா அகல்யா வீட்டுல பேசியிருப்பாரு, பாவம் பாஸ்கர் சார், அவருக்கு அது பெரிய தொகை, நான் ஒரு பத்து லட்சம் குடுக்கிறேன், யாருக்கும் தெரியாம அதை அகல்யா வீட்டுல குடுத்திருங்கன்னு சொன்னாப்ல.”
“என்னது?!” ரேணுகா பிரமித்துப் போனார்.
“அந்தளவுக்கு பொண்ணைப் பையனுக்குப் பிடிச்சிருக்கு அத்தை.” இப்போது ரிஷி சிரிக்க ரேணுகாவிற்கும் சந்தோஷமாக இருந்தது. இந்தளவு யோசிக்கும் பையனால் தன் பெண்ணின் வாழ்வு சுகப்படும் என்று தோன்றியது.
“அப்புறம் என்னாச்சுன்னு சொல்லுங்க த்தான்.” கையில் ட்ரேயோடு வந்தாள் பவித்ரா.
“பணத்துக்கு நாங்க ஏற்பாடு பண்ணிட்டோம், நீங்க எங்கப் பொண்ணை நல்லாப் பார்த்துக்கிட்டா அதுவேப் போதும் ன்னு சொல்லிட்டேன், மாமா அந்த வயலை விற்கப் போறது எங்களுக்கும் தெரிய வந்துச்சு அத்தை, பவியும் நீங்க அதைப்பத்தி வருத்தப்பட்டுப் பேசினதாச் சொன்னா, பாண்டியன் பெரியப்பாக்கிட்ட அது சம்பந்தமா நான் பேசினேன்.”
“என்னன்னு மாப்பிள்ளை?”
“விஷயத்தைச் சொன்னேன், முப்போகமும் விளையுற நல்ல நிலம், அதை இந்த பாஸ்கர் விற்கப் போறானேன்னு அவரும் வருத்தப்பட்டார், யாராலயும் எதுவும் பேச முடியாது, உங்க வீட்டுக்காரர் அதை ஏத்துக்கப்போறதும் இல்லை…”
“ம்…” ரேணுகாவும் வருத்தத்தோடு அதை ஆமோதித்தார்.
“அதனால நாங்க வேற மாதிரி காய் நகர்த்தினோம்.”
“எப்பிடி?”
“பெரியப்பாவோட சொந்தம் ன்னா மாமாவுக்கும் சொந்தம்தானே… சந்தேகம் வராதுன்னு குடும்பத்துக்குள்ள ஒரு ஆள் வாங்குற மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்கு, அவங்க வயலை முதல்ல வாங்குவாங்க, ஒரு வாரத்துலேயே அந்த இடம் பவித்ரா பேருக்கு மாறிடும், நீங்க கவலைப் படாதீங்க அத்தை, இப்போதைக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியா நடந்தாச் சந்தோஷம்.” ரிஷி பேசி முடித்ததுதான் தாமதம், ரேணுகா கண்கள் கலங்க இரு கரங்களையும் ரிஷியை நோக்கிக் கூப்பினார்.
“ஐயோ அத்தை! என்னப் பண்ணுறீங்க நீங்க?!”
“அம்மா!” கணவனும் மனைவியும் பாய்ந்து வந்து ரேணுகாவின் கையைத் தட்டிவிட்டார்கள். ரேணுகா இப்போது குலுங்கி அழுதார்.
“அம்மா! என்னாச்சு? ஏம்மா அழுறீங்க?” பவித்ராவின் முகத்தில் அவ்வளவு கவலை. ஆனால் ரிஷி தன் மாமியாரின் மனதைப் புரிந்து கொண்டான்.
“அத்தை… இப்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம், கல்யாணம் நல்ல படியா முடியணும், பத்திரம் பவி பேருக்கு மாறணும், அதுவரைக்கும் நீங்க யாருக்கிட்டயும் வாயைத் திறக்கக் கூடாது.”
“சரி மாப்பிள்ளை.”
இந்தத் திருமணம் நடப்பதற்கு முழுமுதற் காரணமாக இருந்த ரிஷி மண்டபத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக நடமாடிக் கொண்டிருந்தான்.
நிச்சயதார்த்தத்திற்கு பாண்டியனும் அன்னபூரணியும் கூட வந்திருந்தார்கள். பாஸ்கர் போகவில்லையேத் தவிர ரேணுகாவை அவர்கள் வீட்டிற்கும் அழைப்பு விடுக்க அனுப்பி வைத்திருந்தார். ரேணுகாவை பார்த்த போது அன்னபூரணியின் முகம் இறுகிப் போனது. ஆனால் பெண்ணைப் பெற்றவள் எதையும் பொருட்படுத்தவில்லை.
“வாம்மா ரேணுகா.” பாண்டியன் வாய் நிறைய வரவேற்றார். ஆனால் அன்னபூரணி அசைந்து கொடுக்கவில்லை.
“பூரணி! யாரு வந்திருக்காங்கன்னு பாரு.” பாண்டியன் அழைத்த பிற்பாடும் கல்லுப் போல நின்றிருந்தார் அன்னபூரணி. பாண்டியனுக்கே ஒருமாதிரி ஆகிப் போனது.
“அண்ணி எங்க மேல கோபத்துல இருக்காங்க ண்ணா, அதுவும் நியாயம்தானே?” சட்டென்று இறங்கி வந்தார் ரேணுகா.
“நடந்தது எல்லாத்துக்கும் நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன் அண்ணி, எதையும் மனசுல வெச்சுக்காதீங்க.” அந்தப் பணிவான வார்த்தைகள் அன்னபூரணியை இறங்கிவிட்டது.
“உம் புருஷன் நடந்துக்கிட்ட முறை சரியா ரேணு? நீயே சொல்லு?” சட்டென்று பாய்ந்தார் அன்னபூரணி.
“தப்புதான் அண்ணி, ஏதோ பவித்ரா மேல இருக்கிற கண்மூடித்தனமான பாசம் இப்பிடிப் பண்ணிட்டார்.”
“ரிஷி செஞ்சது தப்புதான், அதை நான் நியாயப்படுத்தலை, அதுக்காக? வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை கைநீட்டி அடிப்பாங்களா? அது சரியா?”
“தப்புத்தான் அண்ணி.”
“இப்போப் பாரு, அதுங்க ரெண்டும் ஒன்னாச் சேர்ந்திடுச்சு, இப்போ உம் புருஷன் முகத்தை எங்கக் கொண்டு போய் வெச்சுக்குவாரு?”
“….”
“வருத்தம் எங்களுக்கும் இருந்துச்சுதான், ஏன்னா பவியை ரிஷிக்கு கேட்டதே நான்தானே! நான் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பேன்? என்ன ஏதுன்னு உட்கார்ந்து பேசுறதை விட்டுட்டு இதென்ன மருமகனை கை நீட்டுற பழக்கம்?”
“சரி விடு பூரணி, இன்னும் எத்தனை நாளைக்கு இதையேத் திரும்பத் திரும்பப் பேசப் போறே?” பாண்டியன் ஒரு அதட்டல் போட்ட பிற்பாடுதான் சிரித்த முகமாக ரேணுகாவோடு பேச ஆரம்பித்தார் அன்னபூரணி.
பாஸ்கர் வந்து அழைப்பு வைக்காததால் நிச்சயதார்த்தத்திற்குத் தாங்கள் போக வேண்டுமா என்று நிரம்பவும் யோசித்தார் அன்னபூரணி. ஆனால் அந்த எண்ணம் துளிகூட பாண்டியனுக்கு இருக்கவில்லை.
“இங்கப் பாரு பூரணி, பாஸ்கர் வந்து அழைக்கலைன்னா என்ன? செல்வம் குடும்பமா வந்து நம்மளை அழைச்சிருக்காரில்லை, அது போதாதா உனக்கு?”
பாண்டியனின் மனம் இப்போது முழுதாக ரிஷி பக்கம் சாய்ந்திருந்தது. ஏனென்று தெரியவில்லை, ரிஷி மேல் ஆரம்பத்தில் இருந்த வருத்தம், கோபம் எல்லாம் இப்போது காணாமல் போயிருந்தது.
வெளிநாட்டில் வளர்ந்த பையன், கை நிறையப் பணம் இருக்கிறது. அவன் நினைத்திருந்தால் பாஸ்கர் நடந்து கொண்ட முறைக்கு பவித்ராவை உதறிவிட்டு எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். இங்கிருந்து இங்கிலாந்து வரை சென்று அவன் சட்டைக் காலரை யாரும் பிடிக்கப்போவதில்லை.
ஆனால் ரிஷி அப்படி நடந்து கொள்ளவில்லை. தான் செய்த தவறை நினைத்து வருந்துகிறான். அதற்குப் பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறான். தன்னை இழிவாக நடத்திய தன் மாமனாரின் நிலையைப் புரிந்து கொண்டு அவருக்கும் நன்மை செய்யவே நினைக்கிறான். இந்த மனது யாருக்கு வரும்?!
“பெரியப்பா, பவியோட அப்பா இந்தக் கல்யாணத்துக்காக அவரோட பூர்வீகச் சொத்து ஒன்னை விற்கப் போறாராம்.” என்று ரிஷி வந்து நின்ற போது பாண்டியனுக்கு முதலில் எதுவுமேப் புரியவில்லை.
‘பாஸ்கர் எதை விற்றால் நமக்கென்ன?’ என்ற மனநிலையில்தான் அவர் இருந்தார். ஆனால் ரிஷி அதற்குச் சொன்ன காரணங்கள் அவரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.
“வர்றது நல்ல வரன் ரிஷி, அதனால இந்த முடிவை பாஸ்கர் எடுத்திருப்பாரா இருக்கும்.”
“ஆனா இது தேவையில்லாத வேலைன்னு பவியோட அம்மா ஏற்கனவே பவிக்கிட்ட வருத்தப்பட்டிருக்காங்க.”
“ஓ…”
“இந்த நிலத்துல இருந்து வர்ற வருமானத்துலதான் பொண்ணுங்களுக்காக அத்தை சேமிப்பாங்க போல.”
“அதுக்கு நம்மால என்னப் பண்ண முடியும் ரிஷி?”
“அந்த நிலம் வேற யாரோட கைக்கும் போகக்கூடாது பெரியப்பா.”
“ஆமா! நீ கேட்ட உடனேயே குடுத்துட்டுத்தான் உம் மாமனார் மத்த வேலையைப் பார்ப்பாராக்கும்!” இப்போது அன்னபூரணி நொடித்துக் கொண்டார்.
“அதனாலதான் பெரியப்பாக்கிட்டச் சொல்லுறேன் அன்னம்மா.”
“என்னப் பண்ணணும் ரிஷி?”
“உங்க சொந்தத்துல நம்பிக்கையானவங்க யாரையாவது வெச்சு முதல்ல நிலத்தை வாங்கலாம் பெரியப்பா, அதுக்கப்புறமா பவி பேருக்கு மாத்திடலாம்.”
“எதுக்குடா உனக்கு இந்தத் தேவையில்லாத வேலை?” அன்னபூரணி மீண்டும் பாய்ந்தார்.
“அன்னம்மா, இதை நான் அத்தைக்காகவோ இல்லை மாமாவுக்காகவோப் பண்ணலை, உண்மையைச் சொல்லப் போனா பவிக்காக கூடப் பண்ணலை, அந்தப் பொண்ணுங்க மூனும் என்னை அத்தானாப் பார்க்கலை, ஒரு அண்ணனாத்தான் பார்க்குதுங்க, அவங்களுக்காக நான் இதைக் கண்டிப்பாப் பண்ணணும்.” ரிஷியின் இந்த வார்த்தைகளை அன்னபூரணியும் மறுக்கவில்லை, பாண்டியனும் நிராகரிக்கவில்லை. ஏனென்றால் இளைய பெண்கள் மூவரும் தங்கள் அத்தான் மேல் எத்தனைப் பாசமாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் அறிந்த கதை ஆயிற்றே! ரிஷியின் திட்டப்படி அனைத்தையும் நடத்திக் கொடுத்தார் பாண்டியன்.
ஆனால் நடந்தது எதையும் யாருக்கும் சொல்லாமல் அமைதியாக நிச்சயதார்த்த விழாவில் நடமாடிக் கொண்டிருந்த ரிஷியை பார்த்த போது பாண்டியனுக்கு பெருமையாக இருந்தது.
ஒரு கட்டத்தில் இந்தப் பையன் பார்த்த வேலையால் ஊருக்குள் நம் மானம் போகிறதே என்று வருத்தப்பட்டவர்தான் அவர். ஆனால் அந்த மனநிலை இன்று மாறிப்போனது. ரிஷி அதை மாற்றி இருந்தான். அத்தான்… அத்தான் என்று எல்லாவற்றிற்கும் ரிஷியை அபிப்பிராயம் கேட்ட பெண்களை பாஸ்கர் கவனிக்கத் தவறவில்லை. மாப்பிள்ளை உபசாரம் பண்ணிய மனைவியையும் அவர் தடுக்கவில்லை.
“அத்தான்! கொஞ்சம் உள்ளே வர்றீங்களா?” ஹரியை தன் வசம் வைத்திருந்த தர்ஷினி பரபரப்போடு வந்து அழைக்கவும் ரிஷி திடுக்கிட்டுப் போனான்.
“என்னாச்சு தர்ஷி?!” அப்போதுதான் மாப்பிள்ளை, பெண்ணோடு மேடையில் நின்றபடி அளவளாவிக் கொண்டிருந்தான் ரிஷி.
“தெரியலை, கொஞ்சம் அவசரமா வாங்களேன், பவிக்காக்கு…” தர்ஷினி முடித்திருக்கவில்லை.
“பவிக்கு என்னாச்சு?!” பதறிக் கொண்டு கேட்ட ரிஷி அதன்பின் அங்கே நிற்கவில்லை. அப்போதுதான் ஏதோ வேலையாக அந்தப்பக்கம் வந்த பாஸ்கர் காதிலும் ரிஷி பதறிய குரல் கேட்டது.
“என்னாச்சு தர்ஷி?” அகல்யா சத்தமில்லாமல் கேட்க,
“பவிக்கா ஒரே வாந்தி அகல்யாக்கா, அம்மா வந்தவங்களைக் கவனிக்கிறாங்க, பைரவிக்காவால சமாளிக்க முடியலை, அதான் அத்தானை கூட்டிக்கிட்டு வான்னு சொன்னா.” என்றாள் கிசுகிசுப்பாக.
“ஓ… எதுக்கும் அன்னபூரணி அத்தைக்கிட்டயும் போய் சொல்லு, அங்க இருக்காங்க பாரு.” அகல்யா கைகாட்டிய திசையில் அன்னபூரணி யாரோடோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
“சரிக்கா.” தர்ஷினி சட்டென்று அவரை நோக்கிப் போய்விட்டாள்.
“என்னாச்சு பைரவி?!” ஓடோடி வந்த ரிஷி மனைவியைத் தாங்கிக் கொண்டான். மருமகனின் பின்னாடியே வந்த பாஸ்கர் முகத்திலும் பதட்டம் தெரிந்தது.
“தெரியலை அத்தான், திடீர்னு அக்கா வாந்தி எடுத்துட்டா.” சோர்ந்து போய் ரிஷியின் தோளில் சாய்ந்த அக்காவின் வாயை நீர் கொண்டு துடைத்து விட்டாள் பைரவி.
“நான் பவியை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன் பைரவி, நீ அத்தைக்கிட்டச் சொல்லிடு.”
“ஐயையோ! ஃபங்ஷன் இன்னும் முடியலையே அத்தான், இப்போ அக்கா இங்க இல்லைன்னா நல்லாவா இருக்கும்?” பாஸ்கர் அங்கே நிற்பதைக் கவனிக்காமல் ரிஷியும் பைரவியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“இல்லை பைரவி, பவிக்கு இப்போ டேப்லெட் குடுக்கணும், இல்லைன்னா வயித்து வலியால கஷ்டப்படுவா.” மனைவிக்கு மாதாந்திரத் தொல்லைகள் வந்தால் வாந்தி வருவது வழக்கம்தான் என்பதால் ரிஷி தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தான்.
“இங்கேயே டேப்லெட் வாங்கிப் போட்டுக்கலாம் அத்தான்.” பைரவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அன்னபூரணி அங்கே வந்துவிட்டார். அவரைக் கண்டவுடன் பாஸ்கர் கொஞ்சம் அப்பால் தள்ளி நின்று கொண்டார்.
“என்னாச்சு ரிஷி?!”
“ஒன்னுமில்லை அன்னம்மா, சாதாரணமா வர்ற வாந்திதான்.” ரிஷி பதில் சொல்ல அன்னபூரணி பவித்ராவை கேள்வியாகப் பார்த்தார். இதுவரை கணவனின் நெஞ்சில் சோர்ந்து போய் கிடந்த பவித்ரா இல்லை என்பது போல தலையை ஆட்டினாள். அவளால் பேசக்கூட இயலவில்லை.
“நீ சாதாரணமா வர்ற வாந்தின்னு சொல்றே, அவ என்னடான்னா இல்லேங்கிறா?!” அன்னபூரணி வியந்து சொல்லவும் இதுவரைத் தன் இஷ்டப்படி முடிவெடுத்திருந்த ரிஷி மனைவியைக் குனிந்து பார்த்தான்.
“பவி?!” என்றான் ஆச்சரியமாக.
“எதுக்கு இப்போ பவின்னு அவ முகத்தைப் பார்த்துக்கிட்டு நிற்கிறே! சட்டுன்னு பவித்ராவை ஒரு லேடி டாக்டர்கிட்டக் கூட்டிக்கிட்டுப் போ ரிஷி.” அன்னம்மா சொல்லவும் மனைவியைக் கைகளில் அள்ளிக் கொண்டான் ரிஷி.
“பைரவி! எங்க உங்கம்மா? முதல்ல கூப்பிடு, அடடா! ஒரு பொண்ணுக்கு நல்லது நடக்கும் போது இன்னொரு பொண்ணு நல்ல சேதி சொல்லுதே!” அன்னபூரணி மகிழ்ச்சியாகக் கண்கலங்க இதுவரைச் சற்று அப்பால் நின்றிருந்த பாஸ்கர் தானும் கண்கலங்கிய படி போய்விட்டார்.
***
நன்றாக இருள் கவிந்திருந்தது. குளிர் சேராத இதமான தென்றல் வீசிக்கொண்டிருக்க வீட்டின் பின்புறத் தோட்டத்தில் கண்மூடிச் சாய்ந்திருந்தாள் பவித்ரா. தலை கிர்ரென்று சுழன்றபடி இருந்தது. வாய் கசந்து வழிந்தது. ஆனாலும் முகம் முழுவதும் புன்னகை பூத்துக்கிடக்க ஏதோ பறப்பவள் போல சோர்ந்து கிடந்தாள்.
“பவி, இப்போ எப்பிடி இருக்குடா?” மனைவிக்கு வலித்து விடுமோ என்ற தவிப்பில் வெல்வெட்டின் மிருதுவோடு வந்தது ரிஷியின் குரல்.
“அத்தான்…” அதற்கு மேல் பேச இயலாது அவன் தோள் சாய்ந்தது பெண்மை.
“என்னடாப் பண்ணுது?”
“தெரியலை த்தான், பறக்கிற மாதிரி இருக்கு, என்னமோப் பண்ணுது.” அவன் உள்ளங்கையை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள் பவித்ரா. ரிஷி மௌனமாகச் சிரித்தான். இன்றைக்கு முழுவதும் பவித்ராவின் வீட்டில் சிரிப்புக்குப் பஞ்சம் இருக்கவில்லை. ரிஷி மனைவியை டாக்டரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகு எல்லாமேத் தலைகீழாக மாறிவிட்டது.
நிச்சயதார்த்த மண்டபத்தில் பவித்ரா கர்ப்பமாக இருக்கும் சேதியும் சேர்ந்துவிட இரட்டைக் குதூகலமாக ஆகிவிட்டது. அன்னபூரணி குதிக்காத குறைதான். தன் தங்கையின் வம்சம் விருத்தியாகிவிட்ட மகிழ்ச்சியில் தன்னை மறந்து போனார். ரிஷி திருமணமான நாளிலிருந்து இந்தச் சேதியை எதிர்பார்த்த வண்ணம் இருந்தவர். இத்தனை நாட்கள் கழித்துத் தான் ஆசைப்பட்டது நடந்ததில் மிக்க மகிழ்ந்து போனார்.
ரேணுகாவிற்கும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. எங்கே ‘ஹரி ஹரி’ என்று தன் மகள் அந்தக் குழந்தையோடே ஐக்கியமாகி விடுவாளோ என்று பயந்து போய் கிடந்தவருக்கு இந்தச் சேதி வயிற்றில் பாலை வார்த்தது. அன்னபூரணி அதற்கு மேல் ரிஷியையும் பவித்ராவையும் மண்டபத்தில் தங்க அனுமதிக்கவில்லை. வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். பின்னோடேயே நிச்சயதார்த்த விழாவை முடித்துக்கொண்டு பவித்ராவின் குடும்பமும் அங்கே வந்துவிட்டது. இவ்வளவு நேரம் அந்த வீடு ஜேஜே என்று இருந்தது.
“அப்பா மட்டும் வரலையே த்தான்.” ஹீனமான குரலில் மனைவி சொல்லவும் ரிஷி புன்னகைத்தான்.
“வரலையேத் தவிர உங்கப்பாவோட கண்ணு இன்னைக்கு எத்தனைத் தடவைக் கலங்கிச்சுத் தெரியுமா?”
“நானும் கவனிச்சேன்.”
“பொண்ணோட தலையை நோகாம எப்பிடித் தடவிக் குடுத்தாரு, அடேயப்பா! இந்த மாப்பிள்ளை இல்லாம எங்க இருந்து வந்துச்சாம் இவரோட பொண்ணுக்கு…” ரிஷி மேலே வில்லங்கமாகப் பேசப் போகச் சட்டென்று அவன் வாயை மூடினாள் பவித்ரா. முகம் வெட்கிப் போனது. அவள் நாணம் பார்த்து அவன் வாய்விட்டுச் சிரித்தான். இவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கட்டும் என்று ஹரியை தங்களோடு அழைத்துச் சென்றிருந்தாள் பைரவி.
“ஹரி என்னப் பண்ணுறானோத் தெரியலை த்தான்.”
“அதெல்லாம் அகல்யா பார்த்துக்குவா டா.”
“யாரு? அகல்யாவா?! நல்லாச் சொன்னீங்க! அவளுக்கு இப்போ கார்த்திக்கை தவிர வேற யாரும் தெரிய மாட்டேங்குது.”
“ஹா… ஹா… அப்பிடியா?!”
“ம்…” மனைவி சிணுங்கலாகப் பதில் சொல்ல அவளை அப்படியே இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் ரிஷி.
“பவி… அதெல்லாம் ஒரு சுகமான காலம் இல்லையா…” கணவனின் குரலில் பேதத்தை உணர்ந்த பெண் சிரித்தது, சிலிர்த்தது.
“ம்…”
“உங்க வீட்டுக்குத் தெரியாம அந்த ஹோட்டல்ல மீட் பண்ணினதையெல்லாம் இப்போ நினைக்கும் போது எப்பிடி இருக்குத் தெரியுமா?!” அவன் அந்த நொடி எப்படி உணர்கிறான் என்பதை அவனது இறுகிய அணைப்புச் சொன்னது.
“உன்னைப் பார்க்காம லண்டன் ல போய்க்கிடந்து தவிச்சது… அப்பப்பா! இப்பக் கூட நினைச்சா உசிரு வலிக்குது பவி.”
“அத்தான்!”
“இந்த அத்தான் பவி மாதிரி ஒரு பொண் குழந்தைக்கு எவ்வளவு ஆசைப்பட்டான்னு உனக்கு நல்லாவேத் தெரியும் பேபி.”
“அதுதான் இப்போ நடக்கப் போகுதே த்தான்.” பரவசப்பட்டுப்போய் பவித்ரா சொல்ல அவள் முகமெங்கும் முத்தம் வைத்தான் ரிஷி.
“ஒன்னு இல்லை பவி, உங்க வீடு மாதிரி நாலு பொண்ணுங்க.”
“ஐயையோ! பாவம் ஹரி! தங்கைங்களுக்கு மாப்பிள்ளை பார்த்தே டயர்டாகிடுவான்.”
“எதுக்கு டயர்டாகணும்? உங்கப்பா எந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தாராம்?! இந்த இளிச்சவாயன் தானா வந்து இந்த தேவதை கால்ல விழுந்தான், அங்க ஒரு இளிச்சவாயன் பத்து லட்சத்தைக் கையில வெச்சுக்கிட்டு அலையுறான்.”
“ஐயோ அத்தான்!” பவித்ரா இப்போது ரிஷியின் வாயில் செல்லமாக அடித்தாள்.
“உண்மைதானே பேபி, இந்த ரிஷி உங்கால்ல அன்னைக்கு விழுந்தவன்தானே, இன்னைக்கு வரைக்கும் எந்திரிக்கலையே!”
“ம்… அத்தான்…” சிணுங்கிய பெண்ணின் முகம் பற்றி அவள் இதழ்களில் முத்தம் வைத்தான் ரிஷி. மனதுக்குள் ஒரு சில கசப்புணர்வுகள் இருந்தாலும் மனது நிறைவாக இருப்பது போல உணர்ந்தான். தன் வாழ்க்கையின் எல்லாக் கசப்புகளையும் இனிப்பாக மாற்றும் வல்லமை இந்தப் பெண்ணுக்கு உண்டு என்று அவன் உள்மனது அடித்துச் சொன்னது. மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்த என்னை ஒரு வரைமுறைக்கு உட்படுத்தியதும் இந்தப் பெண்தான்!
வாழ்க்கையில் நான் தடம் மாற இருந்த தருணங்களில் கூட என்னை மடைமாற்றம் செய்ய வைத்ததும் இவள் மேல் நான் வைத்த காதல்தான். இவள் மேல் வைத்த காதல்தானே என்னை இன்று மனிதனாக மாற்றி இருக்கிறது!
“அத்தான்… என்ன எதுவும் பேசாம இருக்கீங்க?”
“பேசணுமா பேபி?” இப்போது அவன் அவள் இதழ் அணைத்த போது பெண் லேசாக மயங்கியது. மயங்கிய பெண்ணை விட்டு ரிஷியும் அத்தனைச் சுலபத்தில் விலகிவிடவில்லை. அவளுக்குள் கரைந்து விடுபவன் போல அவளை இறுக அணைத்து மீண்டும் மீண்டும் முத்தம் பதித்தான். கானல் நீராகக் கரைந்து போக இருந்த அவர்கள் வாழ்க்கை காதலெனும் கயிற்றைப் பற்றி கார்காலக் கவிதை ஆனது!
(முற்றும்)
One thought on “kkavithai28”
Leave a Reply
You must be logged in to post a comment.
Good story, Pavi handled the Hari (or is it Harry) matter really well.