KT2
KT2
மறுதலிப்பின் சவுக்கடித் தழும்புகளோடு அந்த அலையையே வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்த மிதுராவின் வறண்ட மனதை அந்த குளிர்காற்றால் கூட சமன்படுத்த முடியவில்லை.
எதனால் தன்னை மறுதலித்தான்? என்ற கேள்வியே அவள் மனதினில் எழவில்லை.
அவன் அவளை மறுதலித்துவிட்டான் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டால் தானே அந்த கேள்வியை கேட்க முடியும்?
மனது எதையும் உட்கிரகிக்காமல் இலக்கில்லாமல் எங்கேயோ எதையோ வெறித்துக் கொண்டு இருந்த நேரம் மீண்டும் கரைந்து வந்து அவளது காதுகளை நிறைத்தது ஆதனின் குரல்
அந்த குரலைக் கேட்டதும் அதுவரை பிரம்மை பிடித்து இருந்த அவளது உடலில் ஓர் அசைவு.
மெதுவாக திரும்பி அந்த ரேடியோ பெட்டியைப் பார்த்தாள். அதில் ஆதனின் குரல் மிதந்து வந்தது.
“வணக்கம் மக்களே.. நம்மளோட கதாநாயகியோட பெயர் மிதுரா. இவங்க ஒரு பிரபலமான மென்தொழில் நிறுவனத்திலே வேலைப் பார்க்கிறாங்க. அவங்க முதல் முறையா கார்த்திக்கை எங்கே மீட் பண்ணாங்கனா. ” என்று பேசிய ஆதனின் குரல் அவளது கையைப் பிடித்து கார்த்திக்கை முதன் முதலில் சந்தித்த நாளுக்குக் கூட்டிச் சென்றது.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அந்த வீடு பெரியதளவு விஸ்தாரமாகவும் இல்லை அதே சமயம் அவ்வளவு சிறியதாகவும் இல்லை.
மூன்று பேர் வசிப்பதற்கு தாரளமாகவே அமைந்து இருந்தது அந்த வீடு. அடக்கமாக அதே சமயம் அழகாகவும்.
வீட்டின் முன்புறம் நிழல் கம்பளம் விரித்து இருந்தது அந்த பன்னீர்மரம்.
அதன் கீழே பூக்கள் அணிவகுத்து நிலத்திற்கு மணம் சேர்த்தன.
பால்கனியில் பூத்து இருந்த மலர்களைப் பறித்தவாறே அந்த சுகந்த மணத்தை தன் நுரையீரல் வரைக் கொண்டு சென்று வாசம் பிடித்தார் சீமா தேவி.
அதிகாலை அந்த மலர்களின் சுகந்தம் தீண்டாமல் முழுமை பெறாது அவருக்கு.
இன்றும் எப்போதும் போல அந்த நாளை முழுமையுடன் தொடங்கியவரை பின்னால் இருந்து அணைத்தாள் மிதுரா.
“அம்மா விஷ் மீ.. ” என்றாள் சீமாவின் கன்னத்தில் முத்தமிட்டவாறே.
“நான் விஷ் பண்ணலனா கூட நீ உன் முதல் நாள் வேலையிலே கலக்கிட்டு வருவேனு எனக்குத் தெரியும். ” என்றவரின் வார்த்தைகளில் பெருமிதமும் நம்பிக்கையும் ஒரு சேர கலந்து இருந்தன.
ஆனால் இந்த பதிலில் திருப்தியடையாத மிதுராவோ தன் அன்னையின் கழுத்தை மேலும் கட்டிக் கொண்டு ” மம்மி நான் கேட்டது விஷ், அதை மட்டும் பண்ணுங்க. இந்த டயலாக் எல்லாம் அப்புறமா பேசிக்கலாம். ” என்றுக் கொஞ்சியவளின் கைகளைப் பிடித்து முன்னே இழுத்தார் சீமா.
அவளது முகத்தை வாஞ்சையாகப் பார்த்தவர் முன்னே விழுந்த அந்த கற்றை முடியை கோதிவிட்டு ” ஆல் தி பெஸ்ட்.. கலக்கிட்டு வா.. ” என்று நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வாழ்த்த மிதுராவின் முகத்தில் சந்தோஷப் பளிச்சிடல்.
ஆனந்தமாக தன் அன்னையின் கன்னத்தில் முத்தத் தடத்தைப் பதித்துவிட்டு வெளியே வந்தாள்.
அங்கே அவளது தந்தை விஸ்வம் செய்தித்தாளில் தன் தலையை சரித்துக் கொண்டு இருந்தார்.
மிதுரா அவரது கவனத்தைக் கலைக்கும் விதமாய் இருமிப் பார்த்தாள், செருமிப் பார்த்தாள், மேஜையை அடித்துப் பார்த்தாள் ஆனால் அவரிடம் அசைவே இல்லை.
எப்போதும் அன்னையிடம் தான் ஆல் தி பெஸ்ட் இற்காக கெஞ்ச வேண்டும். ஆனால் அப்பா அதற்கு நேர் எதிர்.
முதல் ஆளாக ஆல் தி பெஸ்ட்டோடும் ஒரு வாழ்த்து அட்டையோடும் வந்து தான் அவளது எந்த நல்ல விஷயத்தையும் தொடங்கி வைப்பார்.
ஆனால் இன்றோ அவளை கண்டு கொள்ளாமல் செய்தித் தாளில் மூழ்கி இருந்தது அவளைக் கோபத்தின் விளிம்பில் தள்ளி இருந்தது.
கோபமாக தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வாசலை அவள் புயலாய்க் கடக்க முயன்ற நேரம் விசுவத்தின் குரல் ஒலித்தது.
அந்த கோபப் புயலோ வேகத்தை குறைத்து சற்று திரும்பிப் பார்த்து என்னவென்று கேட்க அவரிடமோ ஓர் புன்முறுவல்.
“அப்பா மறந்திட்டேனு நினைச்சுட்டியாடா? ” என்ற குரலில் தான் எவ்வளவு வாஞ்சை!
“பின்னே எதுவும் ரியாக்ஷன் காட்டாம முகத்தை நியூஸ் பேப்பர்க்குள்ளே புதைச்சு இருந்தா மறந்துட்டாங்கனு தானே நினைப்பாங்க? அந்த நியூஸ் பேப்பர்ல என்னை விட அப்படி முக்கியமா என்ன தான் இருக்கோ? ” என்றவளது குரலே சொல்லியது இன்னமும் கோபம் அடங்கவில்லை என்பதை.
அதைக் கண்டு கொண்டவர் முகத்திலோ இன்னும் பெரியதான புன்னகை.
” நீயே நான் புதைஞ்சு கிடக்கிற நியூஸ் பேப்பரிலே என்ன இருக்குனு வந்து பாரு.” என்று அந்த நியூஸ் பேப்பரைப் பார்க்க ஊக்கியது அவரது குரல்.
அவளும் நெற்றியில் விழுந்த குழப்ப முடிச்சோடே அந்த நியூஸ் பேப்பரை எட்டிப் பார்த்தாள்.
பார்த்தவளது கண்கள் ஆனந்த அதிர்ச்சியில் விரிந்தது.
அந்த செய்தித் தாளின் இருபுறமும் ” ஆல் தி பெஸ்ட் மிது மா.. ” என்ற செய்தி குண்டு குண்டு எழுத்துக்களில் மின்னியபடி இருந்தது.
ஓடிச் சென்று தன் தந்தையைக் கட்டிக் கொண்டவள் ” எப்படி டாடி?” என்றாள் வியப்பு சரியாத குரலில்.
“என் ப்ரெண்ட் ப்ரிண்டிங் ப்ரெஸ் வெச்சு இருக்கான். அவன் கிட்டே இந்த பேப்பரை ரெடி பண்ணேன் டா.. உனக்கு பிடிச்சு இருக்கா?” என்றுக் கேட்டவருக்கு இறுக்கி அணைத்து தன் பதிலை செய்கையில் சொன்னாள்.
“லவ் யூ அப்பா.. ” என்று அவரது நெற்றியில் முத்தமிட்டவள் அந்த செய்தித்தாளை மறக்காமல் எடுத்துத் தன் கைப்பையில் போட்டுக் கொண்டு வெளியே காலடி வைத்தவளது மனம் முழுக்க ஆனந்தத்தில் மிதந்தது.
ஆனால் அதையும் மீறி ஏதோ ஒரு குறை அவளது அடிமனதில்.
படித்து முடித்த உடனேயே அவளுக்குப் பிடித்த துறையில் அவளுக்கு பிடித்த வேலையில் இன்று முதன் முதலாய் சேரப் போகிறாள்.
அதுவும் அன்னை தந்தையின் தனித்தனி ஆசிர்வாதத்தோடும் முத்தத்தோடும். இருந்தும் ஏன் அவளது மனதினில் ஒரு குறை?
ஒரு வேளை அவர்கள் இருவரது தனித்தனி முத்தத்தால் ஆசிர்வாதத்தால் தானோ?
அவளுக்கு நினைவுத் தெரிந்த நாளில் இருந்து தன் பெற்றோர் இருவரிடமும் ஒன்றாக சேர்ந்து அவள் ஆசிர்வாதம் வாங்கியதே இல்லை.
அம்மாவிடம் தனியாக அப்பாவிடம் தனியாக தான் வாங்கி இருக்கின்றாள்.
எதையாவது கலந்துரையாடும் பொழுதுக் கூட தாயிடம் தனியாக தந்தையிடம் தனியாக..
ஏனோ அவர்கள் இருவரிடமும் இடையே ஒரு இணக்கமில்லாத சூழ்நிலை.
இருவரும் அவளுக்கு ஒரு நல்ல தகப்பன் தாய். ஆனால் இருவரும் ஒரு நல்ல கணவன் மனைவியா? எனக் கேட்டால் அவளிடம் பதில் இல்லை.
எதனால் தன் பெற்றோர் இப்படி பட்டும் படாமல் விலகி இருக்கிறார்கள் ஒரு வேளை என் பிறப்பு தான் அவர்களைத் தள்ளி வைத்து இருக்கிறதோ?
பொதுவாகவே கல்யாணம் ஆகும் போது இருக்கும் நெருக்கம் குழந்தை பிறந்தவுடன் குறைந்துவிடும் என்பார்களே, அதனால் இருக்குமோ?
ஆனால் என் நண்பர்கள் வீட்டில் யாருடைய தகப்பனும் தாயும் இப்படி தாமரை இலை மேல் தண்ணீர் போல் இல்லையே? என்னவாக இருக்கும்? என்று அவள் யோசித்துக் கொண்டு இருந்த நேரம் கவனத்தைக் கலைத்தது அந்த பேருந்தின் ஹாரன் ஒலி.
நிமிர்ந்துப் பார்த்தாள் அவள் ஏற வேண்டிய கம்பெனி வண்டி.
சட்டென்று பரபரப்பு தொற்றிக் கொண்டது அவளிடம்.
கையை நீட்டி வண்டியை மறிக்க அதுவும் சடன் ப்ரேக் போட்டபடி நின்றது.
உள்ளிருந்து ட்ரைவர் எட்டிப் பார்த்து ” new joinee ஆ?” என்றுக் கேட்க ஆமாம் என்று அவள் தலையாட்டிச் சொன்னதும் கண்ணாடி கதவு திறந்து அவளை உள் வாங்கிக் கொண்டது.
உள்ளே நுழைந்தவள் அந்த பேருந்தைத் திரும்பிப் பார்க்க ஒரு ஈ காக்கை இல்லை. அவளது முகம் குழப்பத்தைக் காட்டியது.
அவளது முக பாவத்தை பார்த்த ட்ரைவரோ ” அம்பத்தூர் தான் மா பஸ்ஸோட முதல் ஸ்டாப். இதுக்கு அப்புறம் பதினைந்து நிமிஷம் கழிச்சு தான் அடுத்த ஸ்டாப்.. அங்கே தான் நிறைய பேரு ஏறுவாங்க.. ” என்றவரின் பதிலுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவள் அந்த பேருந்தின் கடைசி இருக்கையின் வலப்பக்க ஜன்னலருகே அமர்ந்துக் கொண்டாள்.
அவளது கைகளோ பரபரப்பாக தனது கைப்பையை ஊடுருவி ஹெட்செட்டைத் தேடியது.
ஆனால் அவள் கிளம்பும் அவசரத்தில் எடுத்து வைக்க மறந்துவிட்டாள். அதை உணர்ந்ததும் உதடுகள் உச் கொட்டியது.
நேற்று இரவு கேட்க முடியாமல் போன ஆதனின் குரலை காலை பேருந்து பயணத்தில் கேட்கலாம் என நினைத்து இருந்தவள் நினைப்பிலோ ஒரு எதிர்பாராத துண்டு.
சோகமாக அவள் ஜன்னலை வெறிக்க முனைந்த நேரம் மனதுக்குள் மின்னலிட்டது ட்ரைவர் சொன்ன தகவல்.
இன்னும் பதினைந்து நிமிடம் யாரும் வண்டியில் ஏறப் போவது இல்லை
என்ற ட்ரைவரின் குரல் தந்த தைரியத்தில் ஹெட் போன் இல்லாமலேயே சப்தமாகவே ஆதனின் குரலை ஒலிக்கவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
அவனது ஒவ்வொரு வார்த்தைகளின் ஏற்ற இறக்கங்களிலும் காதுகளில் சுகந்ததத்தைப் பரப்பும் உச்சரிப்பிலும் தன்னை மறந்து அவள் மூழ்கிக் கொண்டு இருந்த நேரம் அவளை தட்டி எழுப்பியது ஒரு கரம். திகைத்துப் போய் கண்விழித்துப் பார்த்தாள்.
எதிரே ஃபுல் ஃபார்மலில் ஒருவன்.
கொஞ்சம் கவனம் எடுத்து வெட்டிக் கொண்ட முடி… உருக்குத் துண்டாய் மீசை.. இடுங்கிய கண்கள்… அதில் கூரிய பார்வை.
அவளது கண்கள் அவனையே அளவெடுத்துக் கொண்டு இருந்த நேரம் மீண்டும் இடையிட்டு ஒலித்தது அவன் குரல்.
“இது என்னோட இடம். கேன் யூ ப்ளீஸ்?” என்று அவன் கேட்க இங்கிதமாய் சட்டென்று எழுந்துக் கொண்டவள் சற்றுத் தள்ளி அமர்ந்தாள்.
அளவாக அவளைப் பார்த்து சம்பிரதாய புன்னகைப் புரிந்தவன் அந்த இருக்கையை தன்வசப்படுத்திக் கொண்டான்.
மீண்டும் ஆதனின் குரலை கேட்டு கண்களை முடியவளை எக்ஸ் க்யூஸ் மீ என்று சொல்லி கண் திறக்க வைத்தது அதே குரல்.
“ப்ளீஸ் ஹெட் செட் இருந்தா யூஸ் பண்ண முடியுமா?” என்று அவன் கேட்க சட்டென்று தன் போனை ஆஃப் செய்துவிட்டு இது போதுமா என்பதைப் போல அவனைப் பார்த்தாள்.
அவளது கண்களில் லேசாக வருத்தமும் கோபமும் இருந்ததை கண்டு கொண்டது அவனது கண்கள், சமாதனமாய் வந்தது அவன் குரல்
“நான் உங்களை ஆஃப் பண்ண சொல்லலங்க. ஹெட்ஃபோன் இருந்தா யூஸ் பண்ணிக்கோங்கனு தான் சொன்னேன்.”
“இருந்தா யூஸ் பண்ண மாட்டேனா? இல்லைன்றதாலே தான் ஆஃப் பண்ணேன். உங்களுக்கு பிடிச்ச சீட்டையும் கொடுத்தாச்சு. எனக்கு பிடிச்ச குரலையும் நிறுத்தியாச்சு. இப்போ நீங்க எந்த தடையும் இல்லாம உங்க பயணத்தை சுகமா அனுபவிக்கலாம். நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ” என்று சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டவளைப் பார்த்து அவனுக்கே கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.
“சாரிங்க உங்களை ஹர்ட் பண்ணனும்ன்றதுக்காக நான் அப்படி சொல்லல. நீங்க சவுண்டா கேட்கிறதுல எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை.. ஆனால் நமக்கு முன்னாடி சீட்டுல உட்கார்ந்து இருக்கிற என் ப்ரெண்டுக்கு பிடிக்காது. அவன் தான் நிறுத்த சொல்லி என் கிட்டே சொன்னான்.. ” என்று ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தபடியே தன் பேக்கில் கைககளை நுழைத்து ஹெட்செட்டை வெளியே எடுத்தான் அவன்.
“என் கிட்டே ஹெட்செட் இருக்கு.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து கேட்கலாமா?” என்று அவன் நட்புக் கரம் நீட்ட இவளும் கோபத்தை மறந்து தன் கைகளை நீட்டினாள்.
முன்னால் அமர்ந்து இருந்த அவன் நண்பனோ அவர்கள் இருவரும் கைக்குலுக்குவதை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு மீண்டும் முன்னே திரும்பிக் கொண்டான். அவனையே குழப்பமாகப் பார்த்தபடி ” யாருங்க அவர்?” என்றுக் கேட்டாள் அவள்.
“கார்த்திக் ராஜ் .. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். ” என்று அவன் சொல்ல அவளது பார்வை அவனைத் தொட்டு மீண்டும் இவனிடம் வந்து நின்றது.
“உங்களோட பெயர் என்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்க ” கார்த்திக் தீரன்?” என்றான்.
“ஓ இரண்டு பேரோட பெயரும் கார்த்திக் ஆ ?” என்று அவள் கேட்க எதிரில் இருந்த கார்த்திக் ஆமோதிப்பாக தலையசைத்தான். முன்னிருக்கையில் இருந்த கார்த்திக்கோ அவளை மீண்டும் ஒரு முறைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.