KT6

KT6

தன் கண் விழிகளுக்குள் இருந்து மறைந்த அவளையே இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டு இருந்தான் தீரன்.

அவன் மனம் முழுக்க மிதுராவின் மீதான கோபம் ஊற்றாகப் பெருகி இருந்தது.

தன் நெருங்கிய நண்பனின் இயலாமையை சொல்லி  காயப்படுத்திய அவளின் மீது வழிந்த கணக்கில்லாத ஆத்திரத்தை அடக்கியபடி கார்த்திக் ராஜ்ஜின் தோளை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.

“டேய் அவள் பேசுனதைக் கண்டுக்காதே. நீ ஊமை இல்லைடா. உனக்கு குரலா நான் இருக்கேன் சரியா?” என்று தீரன் தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டே இருக்க ராஜ்ஜின் பார்வையோ கடைக்குள் இருந்த இன்னொருவனையே வெறித்துக் கொண்டு இருந்தது. அவன் தன் பார்வையை தாங்க முடியாமல் தலை குனிய சந்தேகம் உறுதிப்பட்டு போனது ராஜ்ஜிற்கு.

தீரனின் கரத்தை வேகமாக விலக்கிவிட்டு அந்த கடைக்குள் நுழைந்து அங்கே இருந்தவனின் முகத்தில் ஒரு குத்துவிட அவன் தடுமாறிப் போய் கீழே விழுந்தான்.

கூடவே அவன் பாக்கெட்டில் இருந்த பணக்கட்டுகளும் கீழே விழுந்தது.

அதைப் பார்த்த கணேசனின் முகத்தில் கோபமும் வருத்தமும் ஒரு சேர கிளர்ந்து எழுந்தது.

“அடப்பாவி! நீ தானா, அந்த பணத்தை எடுத்தது. ஐயோ இது தெரியாம அந்த பொண்ணு மேலே பழிப் போட்டுட்டேனே.” என்று தலையில் அவர் அடித்துக் கொள்ள தீரனோ குழப்பமாக அவரைப் பார்த்தான்.

“எந்த பொண்ணு அண்ணா சொல்றீங்க?” என்று அவன் குழம்பியபடிக் கேட்க

“இப்போ அழுதுக்கிட்டே போச்சே பா அந்த பொண்ணை தான் சொல்றேன். ” என்றவரை தீப்பார்வைப் பார்த்தான்.

“அண்ணா அந்த பொண்ணு மேலே திருட்டுப் பழி சுமத்த எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு? சே” என்று மேஜையின் மீது குத்தியவன் இப்போது வருத்தமாக திரும்பி மிதுரா சென்ற அந்த திசையையேப் பார்த்தான்.

ஏற்கெனவே திருட்டுப்பட்டம் சுமந்து இருந்தவளையா நான் மேலும் காயப்படுத்தினேன் என்ற ஆற்றாமை பெருகிட வேகமாக தன் அலுவலகம் நோக்கி ஓடினான்.

ஆனால் அங்கே மிதுராவின் இருக்கை காலியாக இருந்தது.

அங்கே இருந்த human resource காவ்யாவிடம் மிதுராவைப் பற்றி விசாரித்தான்.

அப்போது தான் மிதுரா பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது, கூடவே அவள் கைகளில் ஏற்பட்டு இருந்த காயமும்.

அந்த செய்தியைக் கேட்ட தீரனுக்கோ அங்கே இருக்கவே பிடிக்கவே இல்லை.

வேகமாக தன் அலுவலகத்தின் முகப்பில் இருக்கும் பூங்காவிற்கு நடந்து வந்தான்.

அவனது உடம்பில் உள்ள சக்தி எல்லாம் வற்றிப் போனாற் போல இருக்க, தொப்பென அந்த  இருக்கையில்  தலையைத் தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.

கலங்கிப்  போய் அமர்ந்து இருந்த தன் நண்பனின் தோளை ஆதரவாகப் பற்றியது ராஜ்ஜின் கரங்கள்.

அந்த கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவனது உதடுகளோ கலக்கமாக “தப்புப் பண்ணிட்டேன் டா ராஜ். ” என்று சொல்லி மேலும் கலங்கியது.

ராஜ்ஜோ அவனைப் பார்த்து ஆமாம் என்று அழுத்தமாக தலையசைத்துவிட்டு வேகமாக தன் வாயை அசைத்தான், அதை வார்த்தைகளாய் மொழிப்பெயர்த்தது தீரனின் இதயம்.

“தீரா அவளுக்கு நான் ஊமைனு தெரியாதே டா.” என்று ராஜ் வாயசைத்ததைப் படித்தவனது முகமோ மேலும் சிவந்தது.

வேகமாக ராஜ்ஜின் கழுத்தைப் பிடித்து நெறித்தவன் ” அடுத்த தடவை ஊமைனு சொன்னா நான் உன்னை கொன்னுடுவேன்டா.” என்றவனது கோபத்தைக் கண்டு ராஜ்ஜிற்கு சிரிப்பு தான் வந்தது.

தீரனைக்  கட்டிக் கொண்டவன் மீண்டும் வாயசைத்தான்.

“தீரா, நான் ஊமைன்றதை யாருமே அவள் கிட்டே இதுவரை  சொன்னது இல்லையே. அவள் மேலே திருட்டுப் பட்டம் சுமத்துன அப்போ நான் தான் பக்கத்துல இருந்தேன். அதனாலே தான் என்னை உண்மையை சொல்ல சொல்லி கேட்டா. நான் பதில் சொல்லாததும் கோவத்துல ஊமையானு கத்திட்டா. இது எதுவும் தெரியாமல் நீ அவசரப்பட்டு அவள் மேலே கோவத்தை காட்டிட்டே. ” என்ற ராஜின் இதழசைவைப் படித்ததும் தீரனின் மனதினில் இன்னும் வலி கூடியது.

அவசரத்தில் அவளை சொற்களாலும் உடம்பாலும் காயப்படுத்தியதை எண்ணி தன் தலையில் அடித்துக் கொண்டான்.

“ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட்” என்று அவனையே அவனது உதடுகள் மீண்டும் கடிந்துக் கொண்டது.

“பெரிய தப்பு பண்ணிட்டேன் டா ராஜ். உனக்கே தெரியும்ல உன்னைப் பத்தி யாராவது ஏதாவது சொன்னா என்னாலே தாங்க முடியாதுனு. கோவம் சுர்ருனு ஏறிடுச்சுடா. அதுல மடையன் மாதிரி பண்ணிட்டேன்.” என்றவன் தன்னையே நொந்துக் கொண்டு இருக்க ராஜ் அவனது தோளைப் பற்றிக் கொண்டான்.

“நான் ஊமைன்றதை நீ ஏத்துக்கிட்டது தான் ஆகணும் தீரா. நானே அந்த வார்த்தைக் கேட்டு வருத்தப்படல. பட் நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? ரியாலிட்டியை அக்செப்ட் பண்ண ட்ரை பண்ணு. ” என்றவனது வார்த்தைகளை படித்தவனது கண்கள் குளம் போல் நிரம்பியது.

“மச்சான் நீ ஊமை இல்லைடா. எனக்கு உன் வாய் அசைவு எல்லாம்  உன் குரலா தான் கேட்குது. உன்னோட ஆளுமையான குரல் என் மனசுலே இன்னும் பதிஞ்சு போய் இருக்கு. அடுத்த வாட்டி ஊமைனு சொல்லாதே டா. ” என்று கலங்கியபடி தன்னை அணைத்துக் கொண்ட தீரனின் அன்பை எண்ணி  நெகிழ்ந்துப் போனது ராஜ்ஜிற்கு.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

கணேசன் கடை.

சிற்பிகா திகைத்துப் போய் அமர்ந்து இருந்தாள், அபி சொல்லிய விஷயங்களைக் கேட்டு.

தன் தலையை உலுக்கி நிமிர்ந்தவள் தன் தோழியின் மீது திருட்டுப் பட்டம் சுமத்திய அந்த கடைக்காரரை நோக்கி சென்றாள் கிழி கிழியென கிழிப்பதற்காக.

“அவளைப் பார்த்தா திருடுற பொண்ணு மாதிரியா தெரியுது.

அண்ணா திருடனை உங்களுக்கு பக்கத்துலயே வெச்சுட்டு என் ப்ரெண்ட் மேலே பழி போட்டு இருக்கீங்களே. அவளை அவமானப் படுத்தி இருக்கீங்களே. எப்படி அண்ணா இப்படி எல்லாம் பண்ண உங்களுக்கு மனசு வந்துச்சு? ” என்று மடமடவென கோபத்தை கொட்டிவிட்டு அவரை அனல் பார்வை பார்த்தாள்.

“இல்லை மா. அந்த நேரத்துல பணம் தொலைஞ்சதும் சரியா யோசிக்க முடியல.

என்னை மன்னிச்சுடு மா. பெரிய தப்பு பண்ணிட்டேன். ” என்று சொல்லி தலை குனிந்தவரை முறைத்தவளது கண்களிலோ கடலளவு கனல்.

“செய்யுறது எல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பு கேட்டா சரியா போயிடுமா? இனி உங்க வியாபாரம் எப்படி நடக்குதுனு பார்க்கிறேன். இந்த கடைக்கு வெளியேவே இனி டென்ட் கட்டி உட்கார போறேன். உள்ளே வரவங்க எல்லார் கிட்டேயும் திருட்டுப் பட்டம் கட்டுவாங்கனு சொல்லி வர விடாம பண்ணல என் பேர் சிற்பி இல்லை. ” என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்றவளையே அபி திகைப்போடு பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் கண்களில் ஈயாடவில்லை.

தன் தோழிக்கு ஒன்று என்றதும் களத்தில் இறங்கி நின்று சண்டைப் போட்டவளை கண்டு பிரம்மித்துப் போய் நின்றவனை பக்கத்தில் ஒலித்த  ஹாரன் ஒலி மீட்டுக் கொண்டு வந்தது.

சட்டென தன் நிலைக்கு வந்தவன் சிற்பிகாவின் பின்னால் ஓடிச் சென்றான்.

“ஹே  சிற்பி, கொஞ்சம் அமைதியாகு. கோபத்துல பாரு உன் முகம் எப்படி சிவந்துப் போய் இருக்கு. ” என்றான் ஓடியக் களைப்பில் மூச்சு வாங்கியபடி.

“எப்படி அமைதியா இருக்க முடியும்? அந்த ஆளு என் ப்ரெண்ட் மேலே பழி போடுவான். அதைப் பார்த்துட்டும் நான் அமைதியா இருக்கணுமா? ” என்று மேலும் மேலும் கோபத்தில் கத்தியவளின் கைகளை சட்டென்று பற்றிக் கொண்டான் அவன்.

அந்த ஒற்றைக் கைப்பற்றலில் அவள் மனதினுள் கிடந்த ஒட்டு மொத்த கோபமும் வடிந்து போனவளாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“நீ கோவப்பட்டதை நான் தப்பே சொல்லல. ஆனால் இப்படி கோவத்தோடவே இருக்கிறது தான் தப்புனு சொல்றேன. சோ பி கால்ம். ” என்று அவன் சொல்ல மெதுவாக தலையசைத்தாள்.

அவள் சமாதானமானதைப் பார்த்து மெதுவாக அவள் கைவிரலில் இருந்து தன் விரலைப் பிடித்துக் கொண்டு அவளுக்கு இணையாக மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

சிற்பிகா   பல முறை மிதுராவின் அலைபேசிக்கு முயற்சி செய்ய மிதுராவோ எடுக்கவே இல்லை.

உள்ளே வந்து பார்க்க அங்கே மிதுராவும் இல்லை.

கவலைப் பூசிய முகத்துடன் தன் இருக்கையினில் வந்து அமர்ந்தவளின் அருகில் தண்ணீர் பாட்டிலை வைத்த அபி  “தண்ணி குடிச்சுட்டு ரிலாக்ஸா வேலை பாருங்க சிற்பி.” என்று சொல்லிவிட்டு செல்ல உதட்டில் துளிர்த்த புன்னகையோடு தொண்டையில் தண்ணீர் சரித்துவிட்டு மெதுவாக வேலைப் பார்க்கத் துவங்கினாள்.

சிறிது நேரத்திலேயே பக்கத்தில் நிழலுருவம் தெரிய திரும்பிப் பார்த்தாள், அருகே தீரனும் ராஜ்ஜீம் நின்றுக் கொண்டு இருந்தனர்.

கண்களில் கோபத்தைத் தேக்கி அவர்களைப் பார்த்தவள் வேகமாக தன் கணிணித் திரைப் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அவளது கோபத்தைத்  தீரனும் புரிந்துக் கொண்டுவிட்டான் தான், ஆனால் அலுவலக நேரத்தில் சொந்த விஷயங்களை பற்றி பேச விரும்பாமல் தன் வேலையில் கவனம் செலுத்த முயன்றான்.

ஆனால் மனமோ திரும்ப திரும்ப மிதுராவை காயம் செய்த அந்தப் புள்ளியிலேயே வந்து நின்றது.

கண்கள் கலங்க அவனை ஒரு பார்வை பார்த்தாலே அந்த பார்வையே மீண்டும் நெஞ்சில் தோன்றி தோன்றி மறைய ஆற்றாமையில் தன் மேஜையில் குத்தியவன் வேகமாக கார்த்திக் ராஜ் பக்கம் திரும்பினான்.

“ராஜ் நான் நாளைக்கு பெங்களுர் போக வேண்டி இருக்கிறதாலே இன்னைக்கே எல்லா ஏற்பாடும் பண்ண வேண்டி இருக்கு. அதனாலே நான் கிளம்புறேன். நீ எல்லாத்தையும் பார்த்துக்கோ.” என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பியவனுக்கு சிறு தலையாட்டலை மட்டும் பதிலாக அளித்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான் ராஜ்.

தன்னறைக்குள் வந்து கதவை அறைந்து சாய்த்திய தீரனுக்குள் கோபம் பல மடங்காக பெருகியது.

ஒரு பெண்ணை மனதாலும் உடம்பாலும் காயப்படுத்தியதை நினைத்து நினைத்து  உடைந்துப் போய் கொண்டு இருந்தான்.

எப்போதும் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்று பார்த்து பார்த்து நடந்துக் கொள்பவன் இன்று தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை காயப்படுத்தியதை எண்ணி மனம் காயமுற்றது.

குற்றவுணர்வுடன் அந்த அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவன் அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காக கடிகராத்தையேப் பார்த்து விடியலுக்காகக் காத்து இருந்தான்.

  பொழுதும் மெதுவாக புலர்ந்தது.

எப்போதும் போல சூரியனும் கடமை தவறாது அந்த வானத்தை தன் வெளிச்சத்தால் நிரப்பத் துவங்க ஆரம்பித்து இருந்தது. ஆனால் தீரனின் மனம்  முழுக்க இருட்டு.

சோர்வான முகத்துடன் அலுவலகத்துக்கு கிளம்பி நின்றவனின் தோள் மீது கைவைத்த ராஜ், “அவள் கிட்டே மன்னிப்பு கேளு.” என்று சைகையில் சொன்னான்.

“கண்டிப்பா அதுக்காக தான் டா காத்துக்கிட்டு இருக்கேன். வா டா சீக்கிரமா போகலாம். ஆபிஸ் பஸ் மிஸ் பண்ணிடப் போறோம்.” என்று அவசரப்பட்டவனாக பேருந்து வந்து நிற்கும் இடத்திற்கு வந்து நின்றான்.

இவன் எதிர்பார்த்தது போல பேருந்தும் வந்து நின்றது, ஆனால் அதில் மிதுரா  தான் இல்லை.

கவலை சூழ  பேருந்து இருக்கையில் தொப்பென அமர்ந்துக் கொண்டான் தீரன்.

அவன் முகத்தில் சொல்ல முடியா துயரம் ஒட்டி இருந்தது.

அதை புரிந்தவனாக ராஜ் அவனது தோளில் கைப்போட்டுக் கொண்டான்.

“தீரா ஆல் தி பெஸ்ட். பெங்களூர் ப்ராஜெக்ட் மாஸ்ஸா பண்ணிட்டு வா. ” என்று ராஜ் வாயசைக்க  அதைப் பார்த்து மென்மையான சிரிப்போடு தலையாட்டினான் தீரன்.

பேருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து நிற்க ராஜ் ஜிடம் விடைப்பெற்றுக் கொண்டு பெங்களூர் ஸ்டேஷன் செல்லும் ட்ரைனில் அமர்ந்தான்.

அவளிடம் நேரிடியாக மன்னிப்பு கேட்பதற்கு   இன்னும் மூன்று நாட்கள் காத்து இருக்க வேண்டுமா என்ற  சோர்வுடன் இமைகளை மூடிக் கொண்டது அவன் விழிகள்.

அலுவலகத்திற்

குள் நுழைந்த ராஜ்ஜிற்கு ஆச்சர்யம்.

அங்கே மிதுரா தன் இருக்கையில் அமர்ந்தபடி உள்ளே வந்த  அவனையேப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து புன் முறுவல் புரிந்தவன் தன் அலைப்பேசியில் எதையோ டைப் செய்து அவளருகே வைத்து அவளைப் பார்க்கும் படி கண்களாலேயே செய்கை செய்தான்.

“ஆர் யூ ஓகே?” என்று எழுதி இருந்த அந்த எழுத்துக்களைப் படித்ததும் அவள் முகத்தில் துக்கத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட ஒரு மோனலிசா புன்னகை.

“ஐ யம் ஃபைன். ” என்று சொன்னவள்
இதயத்தின் அருகே தன் கையை வைத்து சைகை  மொழியில் சாரி என்று கேட்க அவனது விழிகளில் வியப்பின் விரிவு.

Leave a Reply

error: Content is protected !!