KT7

KT7

சில நேரங்களில் அப்படி தான்.

சில செயல்கள் நம் இயக்கத்தை அப்படியே நிறுத்திப் போட்டுவிடும்.

ஒரு சிறு அன்பின் செயல் நம் இதயத்தின் வறண்ட நிலங்களில் கடும் மழையை சட்டெனப் பொழிந்துவிடும்.

அப்படி பொழியப்பட்ட அன்பின் மேகங்களில் தான் ராஜ் திகைத்துப் போய் அமர்ந்து இருந்தான்.

பின்பு ஒரு நிலைக்கு வந்தவனாக திரும்பி மிதுராவைப் பார்த்தான்.

 பல நாட்கள் கழித்து ஒரு சிநேகப் பார்வை அவன் விழிகளில் குடியேறியிருந்தது.

லேசான புன்னகை பூத்த முகத்துடன் “எப்படி சைகை பாஷை தெரியும்?” என்று சைகையாலேயே கேட்டான்.

அதற்கு மிதுரா பதில் சொல்ல வருவதற்குள் சிற்பிகா, ” ஹாய்” என்ற குரலோடு தன் இருக்கையினில் வந்து அமர்ந்தாள்.

வந்ததும் அவள் செய்த முதல் காரியம், மிதுராவின் கைகளை எடுத்துப் பார்த்து காயத்தின் வீரியத்தை ஆராய்ந்தது தான்.

அதைக் கண்ட ராஜ்ஜின் கண்கள் மீண்டும் நெகிழ்ந்தது.

இவர்கள் இருவரும் பேசி மூன்று நாள் இருக்குமா? அதற்குள் எவ்வளவு பாசம் இவளுக்கு மிதுராவின் மீது என்று நினைத்தவனால் ஆச்சர்யப்பட தான் முடிந்தது.

அவர்கள் இருவரும் முதற்கட்ட நல விசாரிப்பை முடித்துக் கொண்டு மீண்டும் கார்த்திக் ராஜ் புறம் திரும்பினர்.

“குட் மார்னிங்.” என்று சிற்பிகா சைகை மொழியில் சொல்ல மீண்டும் ஒரு முறை ஆனந்த அதிர்வுக்குள் சிக்கி மீண்டான் ராஜ்.

மறுபடியும் அவன் கண்களில் சிற்பிகாவிற்காக ஒரு சிநேகப் பார்வை சுரந்தது.

இத்தனை ஆண்டு கால அலுவலக வாழ்க்கையில் அவனுடன் பேசுவதற்காக யாரும் சைகை பாஷையை கற்றுக் கொண்டதில்லை தீரனைத் தவிர.

ஒவ்வொரு முறையும் அலைபேசியில் டைப் செய்து மற்றவர்களுடன் பேசுவது அவனுக்கு சிரமமாக இருக்கும்.

இந்த சைகை பாஷையை மற்றவர்கள் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்குமே என்று பல முறை அவன் எண்ணியதுண்டு. ஏங்கியதுண்டு.

இன்று அந்த ஏக்கத்தை போக்கும் அன்பின் தேவதைகளாக சிற்பாகாவும் மிதுராவும் நின்றுக் கொண்டு இருந்தனர்.

அவர்களை பார்த்து ” எப்படி தெரியும் ?” என்று சைகையால் கேட்டான்.

“கத்துக்கிட்டோம். ” என்று இருவரும் கோரசாக பதில் சொல்லினர்.

“நேத்து நைட்ல இருந்து கத்துக்க ஆரம்பிச்சு இருக்கோம் ராஜ் சார். இப்போதைக்கு சைகை மொழிக்கான அடிப்படை விஷயங்கள் தான் தெரியும். ஆனால் போக போக புகுந்து விளையாட ஆரம்பிச்சுடுவோம்.” என்று சொல்லிய சிற்பிகாவையே இதழ்களில் ஊறிய புன்னகையுடன் பார்த்தான்.

அவனது புன்னகை முகத்தை முதல் முதலாக பார்த்த மிதுரா மெதுவாக  அவனைப் பார்த்து பேசத் துவங்கினாள்.

“சாரி ராஜ் சார். எனக்கு நீங்க  ஊமை.. ”  என்று சொல்ல வந்தவளுக்கு சட்டென தீரன் நேற்று கழுத்தைப் பிடித்த நொடி நியாபகத்துக்கு வர சட்டென அந்த வார்த்தையை சொல்லாமல் உதடுகளுக்குள்ளேயே நிறுத்தியவள் ” எனக்கு நீங்க இப்படினு தெரியாது. உங்களை ஹர்ட் பண்றதுக்காக நான் அப்படி பேசல. ஏதோ ஒரு கோவத்துலே பேசிட்டேன். ” என்று வார்த்தைக்கு தடுமாறி நின்றவளின் முன்பு கை நீட்டி பேசாமல் இடைமறித்தான்.

தன் அலைப்பேசியை எடுத்தவன் “ஐ கேன் அன்டர்ஸ்டான்ட். எனக்கு உங்க மேலே கோவமோ வருத்தமோ எதுவும் கிடையாது. ” என்று டைப் செய்துவிட்டு அவளின் முன்பு வைத்தான்.

அதைப் படித்தவள் “தேங்க் காட்.” என்று பெருமூச்சுவிட்டாள்.

“என் மேலே உள்ளே பாசத்தாலே தான் தீரா அப்படி நடந்திக்கிட்டான். அவன் பண்ணது தப்பு தான். இருந்தாலும் அவனை மன்னிக்க முடியுமா?” என்று இவன் தன் நண்பனுக்காக பேச அதைப் படித்த மிதுராவின் உடலோ விரைப்புற்றது.

உதடுகளில் அழுத்தமான ஒரு மௌனம்.

அதைப் பார்த்து ஒரு சோகப் பெருமூச்சோடு ராஜ் தன் கணிணிப் பக்கம் திரும்பிக் கொண்டான்.

மூவரும் அதற்கு பிறகு எதுவும் பேசாமல் அன்று முழுக்க பரபரப்பாக வேலை செய்துக் கொண்டு இருந்தனர்.

மணி இரவு ஏழை நெருங்கி இருக்க சிற்பிகாவும் மிதுராவும் ஒரே நேரத்தில் தன் பேக்கை எடுத்துக் கொண்டு அலுவலக பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்துவிட்டனர்.

மிதுராவின் பேருந்து  வந்துவிட அதில் ஏறிக் கொண்டவள் தன்னிச்சையாக  எப்போதும் அமரும் இருக்கைக்கு சென்று அமரப் போனாள்,ண ஆனால் அங்கே  எப்போதும் பக்கத்தில் அமரும்  தீரனின் முகம் நினைவுக்கு வந்தது.

சட்டென அங்கே அமராமல் ராஜ் பக்கத்தில் வந்து தயங்கியபடி நின்றாள்.

அதைப் புரிந்துக் கொண்டவன் சற்றுத் தள்ளி அமர்ந்து அவளுக்கு தனது ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுத்தான்.

உதட்டில் பூத்த முறுவலுடன் அந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவளது கைகள் எப்போதும் போல ஹெட்போனை எடுத்து தன்னிச்சையாக  தீரனைத்  திரும்பித் தேடியது.

பின்பே அவன் இல்லை என்பதை உணர்ந்தவள் சோகமாக  ஹெட்போனை எடுத்து காதில் வைத்தாள்.  எப்போதும் அவளை கட்டி அணைக்கும் ஆதனின் குரல் அன்று ஒலிக்கவில்லை.

என்ன ஆயிற்று நேற்று இரவு ரெக்கார்ட் செய்து அனுப்ப மறந்துவிட்டானா? என்று தன் நண்பனைத் திட்டிக் கொண்டே அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

நேற்று இரவு அவள் நண்பன் ரெக்கார்ட் செய்து அனுப்பி தான் இருக்கின்றான் தான்.  ஆனால் ஆதனின் குரலிற்கு பதிலாய் வேறு ஏதோ குரல் ஒலித்துக் கொண்டு இருந்தது.

 நேற்று ஆதனின் நிகழ்ச்சி இல்லைப் போல என்று உணர்ந்தவள் சலித்துப் போனவளாக ஹெட்செட்டைக் கழட்டி வைத்துவிட்டு ராஜ்ஜின் பக்கம் திரும்பினாள். அவனும் அவள் பக்கம் திரும்பினான்.

“ராஜ் சார் ஆபிஸை விட்டு வெளியே வந்துட்டோமே நாம இப்போ ஃப்ரெண்ட்ஸா பேசலாமா?” என்றுக் கேட்க புன்முறுவலோடு தலையசைத்தான்.

“நீங்க ஆதன் ஷோ கேட்பீங்களா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.

அவனோ இல்லை என்று இடம் வலமாய் தலையசைத்தான்.

“ஏன் பிடிக்காதா?” என்ற அவளது குரலிலோ லேசாக சுணக்கம்.

“பிடிக்காதுனு இல்லை..கேட்கிறதுக்கு ஆர்வம் இல்லை. ” என்று டைப் செய்தவனது பதிலுக்கு லேசாக தலையசைத்துக் கொண்டு ஜன்னலோரம் பக்கம் திரும்பிக் கொண்டவளது முன்பு தன் அலைப்பேசியை நீட்டினான்.

“மிதுரா உங்களுக்கு ஏன் ஆதன் ஷோ ரொம்ப பிடிச்சு இருக்கு?” என்ற கேள்வி அதில் படர்ந்து கிடந்தது.

“ஆதனோட குரல் ரொம்ப பிடிக்கும்.
அந்த குரல் கண்ணோரம் ஒட்டிக் கிடக்கிற என்னோட கண்ணீரை வெளிக் கொண்டு வரும். அந்த குரல் என் உதட்டுல உறைஞ்சுப் போன சிரிப்பை மறுபடியும் கரைய வைக்கும். நான் சோகமா இருக்கும் போது எல்லாம் அந்த குரலோட தோளிலே தான் சாஞ்சுப்பேன்.” என்று அவள் சொல்லி முடித்துவிட்டு  ராஜ்ஜின் முகம் பார்க்க அதில் படிக்க முடியாத உணர்ச்சிகள் விரவிக் கிடந்தது.

தன் குரல் வளையை இழந்து நிற்கும் ஒருவனிடம் இத்தனை முறை “குரல் குரல்”என்று சொன்னது அப்போது தான் நினைவு வந்தவளாக சங்கடமாக தலைக் குனிந்தாள்.

ஒரு வேளை நான் சொன்ன வார்த்தைதளினால் காயம்பட்டு இருப்பானோ?  நினைத்த மாத்திரத்தில் மீண்டும் அவள் மனம் கலங்கியது.

எப்போதும் அவனைக் காயப்படுத்துவதையே வேலையாக வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று தன்னைத் தானே கடிந்தவளாக வருத்தத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள்.

ராஜ் ஆதரவாக ஒரு புன்னகை பூத்துவிட்டு “எனக்கு ரேடியோ கேட்கப் பிடிக்காது. ஆனால் கவிதை எழுத பிடிக்கும்.உங்களுக்கு கவிதைப் பிடிக்குமா?” என்றுக் கேட்டான்.

இவள் ஆமாம் என்று வேகமாக தலையாட்டினாள்.

எழுத வருமா? என்று மறுபடியும் அவன் எதிர் கேள்வி கேட்டான்.

கொஞ்சமாக என்று தன் குட்டி விரலை மடக்கி குட்டியாக காண்பித்தாள் அவள்.

அப்போ இந்த ஓவியத்துக்கு நீங்களும் நானும் கவிதை எழுதலாமா? என்று அவன் கேட்க “முயற்சி பண்றேன்” என்று சொல்லிவிட்டு அலைபேசியில் அவன் காண்பித்த புகைப்படத்தைப் பார்த்தாள்.

பார்த்த மாத்திரத்தில் அவளது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

பெண் ஒருத்தி ஆறாத் துயரங்களோடு  பன்னீர் மரத்தின் கீழ் அமர்ந்து இருக்கிறாள்.

அவள் கைகளில் தன்னை இறப்பிற்கு ஒப்புவிக்கும் பொருட்டு தூக்க மாத்திரைகள் நிறைந்து இருந்தது.

அதை உட்கொள்ளும் சமயம், தட்டிவிடும் நோக்கில் ஃபர்தா அணிந்த பெண்ணொருத்தி நின்றுக் கொண்டு இருக்கிறாள்.

அந்த பர்தா பெண்ணின் கையில் ஒரு அலைப்பேசி…

“அதில் கவலைப்படாதே. எல்லாம் சரியாகிவிடும். ” என்ற வரிகள் ஒலியாய் படர்ந்துக் கிடப்பது போல வரையப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றாள் அவள்.

அவளது நினைவுகள் எல்லாம் கடந்த காலத்திற்குள் நொடிப் பொழுதில் பயணித்து மீண்டது.

என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களெல்லாம் ஓவியமாய் இவன் கைகளில் வந்தது எப்படி? என்ற கேள்வி அவள் நெற்றியில் சிந்தனைக் கோடுகளை முடுக்கிவிட திகைத்துப் போய் ராஜ்ஜை விழியலகாது பார்த்தாள்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

மிதுரா இல்லாத அந்த வீடு எப்போதும் போல இப்போதும் அமைதியாகவே இருந்தது.

அவள் இருக்கும் போது தான் இருவரும் சந்தோஷமான தம்பதிகள் போல நடிப்பதற்கு நிறைய பிரயர்த்தனங்கள் மேற் கொள்ள வேண்டும்.

அவள் இல்லை என்றால் அவர்கள் நெருங்கிய தம்பதி போல போலியாய் ஒரு முகமுடி அணிய வேண்டிய நெருக்கடி இருக்காது.

அந்த நெருக்கடியில்லாமல் சமையலறையில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்த சீமாவின் அருகே வந்து தயங்கியபடி நின்றார் விஸ்வம்.

“மிதுரா நம்மளைக் கவனிக்க தொடங்கிட்டா சீமா. அவளுக்கு  உண்மை தெரிஞ்சா என்னாலேயும் தாங்கிக்க முடியாது. அவளாலேயும் தாங்கிக்க முடியாது. அதனாலே இனிமேல் ஒரு நல்ல கணவன் மனைவியா அவள் முன்னாடி நடிச்சு தான் ஆகணும். உனக்கு இதுல சம்மதம் தானே. ” என்று அவர் கேட்க சீமாவின் முகத்தினில் வருத்த ரேகைகள்.

“இருபத்து மூணு வருஷமா அப்படி தானே நடிச்சுட்டு இருக்கோம். இனி கவனமா நடிக்கப் போறோம். அவ்வளவு தானே வித்தியாசம்.” என்று கேட்க பதில் பேச முடியாமல் மெதுவாக சமையலறையை விட்டு வெளியேறினார் விஸ்வம்.

அவருடைய கண்களில் வருத்தத்தின் மேகங்களால் விளைந்த ஒரு சொட்டுக் கண்ணீர்.

காலம் முழுக்க கணவன் மனைவியாக நடிக்க மட்டும் தான் முடியுமா? வாழ முடியாதா? என்ற கேள்வி இருவரின் மனதிலும் பூதாகரமாக எழும்பி நின்றது..

Leave a Reply

error: Content is protected !!