KurumbuPaarvaiyile-15

குறும்பு பார்வையிலே – 15

மறுநாள் காலையில், அவர்கள் குளித்து உடை மாற்றிக் கொண்டனர்.

ஸ்ருதி, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வெட்கம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக அல்ல. குற்ற உணர்ச்சி என்ற பெயரில்.

ஆகாஷும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான்.

‘நான் காதலனா? ஐயோ… காதலனாய், காவலானாய் இருக்க வேண்டிய நான் கண்ணியம் தவறி விட்டேன்.’ அவன் மனம் அரற்றியது.

அவர்களுக்கு இடையில் மௌனம்… மௌனம்… மௌனம் மட்டுமே!

மௌனம் அபஸ்வரமாக ஒலிக்குமா? ஒலித்தது அவர்களுக்கு இடையில்!

‘ம்…ச்… என்னைப் பற்றி என்னை நினைப்பா?’ என்ற கேள்வி அவன் மனதில். ‘நான் என் மொத்த மரியாதையும் இழந்து விட்டேனோ?’ என்ற சந்தேகம்  அவளுள்.

‘நான் எப்படி அனுமதித்தேன்? மறுக்க மனமில்லாமலா? இல்லை, நான் மனதளவில் அவன் மனைவியாக வாழ ஆரம்பித்து விட்டேனா?’ பதில் தெரியா கேள்விகள் அவள் மனதில் அலை அலையாக எழும்பிக் கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு வந்த பிரிவெட்டிங் ஷூட் குழுவினர், “நேத்து மழையில் எடுக்க முடியலை. இன்னைக்கு எல்லாம் ஓகே. இப்ப ஷூட் முடிச்சிட்டு போயிருவோமா?” என்று கேமரா மேன் கேள்வியோடு நிறுத்தினான்.

“…” இருவரும் மற்றொருவர் பதிலுக்காகக் காத்திருந்தனர்.

அங்கு அமைதியே நிலைத்திருக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நொடிப் பொழுதுக்கும் குறைவான பார்வை பரிமாற்றம் மின்னல் வேகத்தில் நிகழ்ந்தது. என்ன நினைத்தார்களோ, “ம்…” என்ற ஒற்றை சொல் பதிலாக வந்தது.

நேற்று இருந்த உற்சாகம் இன்றைய ப்ரீ வெட்டிங் ஷூட்டில் இல்லை. இயந்திர தன்மையோடு அரங்கேறியது.

‘எல்லை மீறிவிடுமோ?’  என்ற எண்ணத்தோடு அவன் கைகள் அச்சத்தில் நடுங்கியது. ‘அவன் தொடுதலில், நான் மீண்டும் கரைந்து விடுவேனோ?’ என்ற பதட்டத்தோடு விறைப்பாக நின்று கொண்டிருந்தாள்.

அந்த தீவில் வேலை முடியப் படகிற்காகக் காத்திருந்தனர். அவன் அருகில் நின்று கொண்டாள். ஆனால், அவள் பேசவில்லை. அவனும் பேசவில்லை. ‘பேச மாட்டாளோ?’ அவனுள் கேள்வி எழுந்தது.

‘கோபமா இருப்பாளோ? நான் பேசவா? என்ன பேச?’ பல சந்தேக கணைகள் அவனுள். செய்வதறியாமல், பேசுவதறியாமல் அவனும் அமைதி காத்தான்.

இருவரும் படகில் எல்லாரும் இருக்கும் தீவுக்குச் சென்றனர்.

கீதா அவர்களை இன்முகத்தோடு வரவேற்றாள்.  “என்ன, நைசா எங்களை கழட்டிவிட்டுட்டு, நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் ட்ரிப் மாதிரி போய்ட்டிங்க?” என்று  அவர்களைக் கேலி பேசினாள்.

ஆகாஷ், ஸ்ருதி இருவரின் உடலும் ஒரு சேர நடுங்கியது.

பாட்டி, நறுக்கென்று அவள் தலையில் கொட்டினார். “பேச்சை பாரு பேச்சை. என் பேரன் சொக்க தங்கம். உன்னை தான் நம்பி அனுப்ப முடியாது.” என்று கூற, கீதா பாட்டி கொட்டியதால் வலி தாளாமல் தன் தலையைத் தடவிக் கொண்டாள்.

“நீங்க பேசுற பேச்சுக்கு எங்கயாவது அடி விழுமுன்னு எனக்கு தெரியும். ஆனால், இத்தனை சீக்கிரம் விழுமுன்னு நான் நினைக்கலை.” என்று கார்த்திக் கேலி பேச, தாத்தா, பாட்டி இருவரும் சிரித்தனர்.

ஏனோ, ஆகாஷ், ஸ்ருதி இருவரும் சிரிக்கவில்லை.

கார்த்திக் அவர்களைக் கவனித்து விட்டான். பாட்டி அவர் போக்கில் பேச ஆரம்பித்தார்.

“இன்னைக்கு கிளம்பி, அப்படியே கேரளா போறோம்.” என்று அவர் கூற, “வேண்டாம் பாட்டி. நேரா வீட்டுக்கு போறோம்.” என்று அழுத்தமாகக் கூறினான் ஆகாஷ்.

“ஏண்டா…  ட்ரடிஷனல் ஷூட் போட்டோஸ் போடணும். நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கில்ல?” என்று பாட்டி இழுக்க, “பாட்டி… ஸ்ருதிக்கு உடம்பு முடியலை. எனக்கும் புது  வேலை  ஒன்னு வந்திருச்சு. அதனால் இத்தோட சரி. வீட்டுக்கு போறோம்.” சுள்ளென்று விழுந்தது ஆகாஷின் வார்த்தைகள்.

“இல்லை… ஆகாஷ்….” என்று பாட்டி இழுக்க, “ஆவுடை… பேரன் சொல்லறானில்லை கிளம்பிருவோம்.” என்று தாத்தா கூற, பாட்டி தலை அசைத்தார்.

ஆகாஷ் உள்ளே சென்றுவிட, “உனக்கும் ஆகாஷுக்கும் ஏதாவது பிரச்சனையா?” என்று கார்த்திக் தன் கண்களைச் சுருக்கி கேட்டான்.

“அண்ணா இப்படி சும்மா கோபப்படமாட்டான். உங்களுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லையா?” என்று அவள் நெற்றியில் கை வைத்துக் கேட்டாள் கீதா.

ஸ்ருதியின் கண்கள் கலங்கியது. ஆனால், யாரும் அறியாவண்ணம் அவள் கண்ணீரை உள்ளித்துக் கொண்டாள்.

‘என் உடம்புக்கு என்ன? நல்லா தான் இருக்கேன். என் மனம். என் அறிவு தான் செயலிழந்து விட்டது. இப்பொழுது, ஆகாஷும் என்னால், குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறான்.’ என்று நொந்து கொண்டாள் ஸ்ருதி.

“ரொம்ப உடம்பு முடியலையா?” என்று கார்த்திக் அவள் முக மாற்றத்தைக் கண்டு கேட்டான்.

“வீட்டுக்கு போனால் சரியாகிரும்.” என்று முடித்துக் கொண்டாள் ஸ்ருதி.

அதன் பின் நிற்கவும் நேரமில்லாமல் போக விரைவாக வேலையை முடித்துக் கொண்டு, அனைவரும் சென்னை நோக்கிப் பயணித்தனர்.

அவர்கள் வீட்டுக்கு செல்லும் கார் வந்துவிடவே, ஒருவருக்கு ஒருவர் விடை பெற்றுக்கொண்டனர். கார்த்திக், கீதா இருவரும் தலை அசைத்து விடை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடையே நட்பா? இல்லை அதற்கும் மேலா? அவர்களுக்குத் தெரியவில்லை.

ஸ்ருதியின் இதயம் வேகமாகத் துடித்தது.  அவன் அழைப்புக்காக ஏங்கியது. ஆனால், பேச வழி இல்லாமல், இல்லை வழி தெரியாமல் உழன்று கொண்டிருக்க, “டாலி…” அவனின் அழைப்பு அவளுக்கு உயிர் கொடுத்தது.

ஆயிரம் மின்னல்கள் வேகத்தோடு அவன் பக்கம் திரும்பினாள். அவன் கண் மூடி கண் திறந்தான். அவன் கண்கள் என்ன பாஷை பேசியது? அது ஆகாஷுக்கு  மட்டுமே தெரியும். ஸ்ருதிக்கு மட்டுமே புரியும் என்பது போல் அமைந்திருந்தது.

ஸ்ருதி அவன் பார்வை கொடுத்த செய்தியை உள்வாங்கிக் கொண்டது போல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

இருவரும் சில சங்கடமான மனநிலையோடு வீட்டை நோக்கிப் பயணித்தனர்.

ஸ்ருதி வீட்டுக்குச் சென்றதும் குற்ற உணர்ச்சியோடு, தன் தாயைச் சந்திக்க முடியாமல் அவள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“கார்த்திக், என்ன ஆச்சு அவளுக்கு?” என்று கார்த்திக்கைக் கிடுக்கு பிடியாகப் பிடித்தார் பார்வதி.

‘ஆகாஷ், ஸ்ருதிக்கு ஏதோ சண்டையோ?’ என்ற சந்தேகம் இருந்தாலும்    “சி சிக்கனஸ்… அதுலயே ஸ்ருதி சோர்வாகிட்டா.” என்று சமாளிப்பாகக் கூறினான் கார்த்திக்.

“இவ்வளவு நேரமா? காத்துல பறந்து வந்துமா?” என்று அவர் கேள்வியாக நிறுத்த,  கார்த்திக் திருதிருவென்று முழித்தான்.

“பயணக் களைப்பா இருக்கும். எதுக்கு கார்த்திக்கை நிக்க வச்சி கேள்வி கேக்குற?” என்று கார்த்திக்கு உதவிக் கரம் நீட்டினார் ஈஸ்வரன்.

“ஊர்ல கொரொனா வைரஸ்… அந்த வைரஸ்ன்னு என்னன்னவோ ஆயிரம் வைரஸ் நடமாடுது. அந்த பயம் தான் எனக்கு.” என்று பார்வதி கவலையோடு கூறினார்.

“ஐயோ… ஆண்ட்டி! இது காதல் வைரஸ்… ஆகாஷ் வைரஸ்.” என்று கூறிக்கொண்டு நாக்கை கடித்துக் கொண்டான் கார்த்திக்.

பார்வதி தலையில் அடித்துக் கொள்ள, ஈஸ்வரன் பெருங்குரலில் சிரித்தார். ‘இரண்டு நாளா, இந்த கீதா கூட பேசிப்பேசி அவளை மாதிரி நானும் பேச ஆரம்பிச்சிட்டேன்.’ என்று நொந்து கொண்டான் கார்த்திக்.

கார்த்திக் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

ஆகாஷ், வீட்டில் சுமதி வானத்துக்கும், பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார்.

“ஆகாஷ்! வசதி கம்மினாலும், உனக்கு பிடிச்சிருக்குன்னு தானே ஸ்ருதியை பேசி முடிச்சோம். இப்ப அவ உடம்பு சரி இல்லாத பொண்ணு வேறையா?” என்று கோபமாகக் கேட்டார்.

ஆக்ஷ்ன் நெற்றி சுருங்கியது. அவன் கோபம் விற்றென்று ஏறிக்கொண்டிருந்தது.

“அம்மா… ஸ்ருதி என் மனைவி.” அழுத்தம் திருத்தமாகக் கூறினான் ஆகாஷ்.

“அவளை பத்தி யாரும் பேச வேண்டாம்.” அதிகாரமாக சற்று கோபமாக ஒலித்தது அவன் குரல்.

“மனைவியா? அது எப்படி? இன்னும் கல்யாணம் ஆகலையே?” அவர் ஆகாஷை கிடுக்கு பிடியாகப் பிடித்தார்.

“ம்… ச்…” என்று ஆகாஷ் சிடுசிடுக்க, “மனைவியா வர போறவ… அவ்வுளவு தான்.”  என்று சுமதி கடுப்பாகக் கூறினார்.

ஆகாஷின் கோபம், கடுப்பு, சிடுசிடுப்பு எல்லாம் இந்த குடும்பத்திற்குப் புதிது. தந்தை, தங்கை, பாட்டி, தாத்தா என அனைவரையும் அவனை விசித்திரமாகப் பார்த்தனர்.

“மனைவியா வரப்போறவளை தான்… அங்க பிடி, இங்க தொடுன்னு போட்டோ எடுக்க சொன்னீங்களா? எப்ப நிச்சயதார்த்தம் முடிஞ்சிதோ, அப்பவே அவ என் மனைவி.” என்று அவன் காட்டமாகக் கூறினான்.

ஆகாஷின் குற்ற உணர்ச்சி கோபமாக மாறிக்கொண்டிருப்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

‘அது என்ன இப்பவே மனைவின்னு அந்த ஸ்ருதிக்கு இப்படி பரிஞ்சி பேசுறான்’ என்று தன் மகனைப் பொறாமை பொங்க பார்த்தார் சுமதி.

மேலே பேசுவதற்கு எதுவும் இல்லை என்பது போல் அவன்  அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஆகாஷ் அறைக்குள் நுழைந்து தன் அலைபேசியைப் பார்த்தான். ‘ஸ்ருதியிடம் பேச வேண்டும். கல்யாணம் முடியுற வரைக்கும் அவளை ஆபீஸ்க்கு வர வேண்டாமுன்னு சொல்லணும். சொன்னா என்ன நினைப்பாள். நான் அவளை தப்பா நினைக்குறேன்னு நினச்சிருவாளோ?’ அவன் எண்ணம் தறிகெட்டு ஓடியது.

அலைபேசியைத் தூக்கி எறிய, அதை லாவகமாகப் பிடித்தாள் கீதா.

“அண்ணா… இப்ப தான் நீ சரியான இடையினத்தில் இருக்க… அண்ணி கால் பண்ணனுமுனு நீ தவிக்க… நீ பண்ணணுமுன்னு அவங்க தவிக்க… மொபைல் உங்களுக்கு இடையில், உங்க பேச்சை கேட்டு தவிக்க…”  என்று கூறிக்கொண்டு அவனிடம் ஒரு வாழ்த்து அட்டையை நீட்டினாள் கீதா.

வாழ்த்து அட்டையில்,

மெல்லினத்தில் ஆரம்பித்த காதலில் சிக்கி…

தவிப்புக்கு இடையில் காதலனாக மாறி…

இடையினத்தில் சுகமாகப் பயணித்து…

விரைவில் கணவனாக மாறி…

வல்லினத்தில் பயணிக்க என் அண்ணனுக்கு                                                                 அன்பு தங்கையின்  வாழ்த்துக்கள்!

என்று எழுதியிருந்தது.

“அண்ணா… வல்லினம்ன்னா என்னனு நீ அந்த ஸ்டேஜ்க்கு வரும் பொழுது சொல்றேன். அதுக்கு அப்புறமும் ஒரு ஸ்டேஜ் இருக்கு.” என்று கண்சிமிட்டிச் சிரித்தாள் கீதா.

‘நீ சொல்ற ஸ்டேஜ் உயிர்மெய்… எப்பொழுதோ நாங்கள் உயிரும், மெய்யுமாகக் கலந்து விட்டோம்.’ என்ற எண்ணத்தோடு, குற்ற உணர்ச்சி மேலோங்கி, பதில் எதுவும் கூறாமல் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் ஆகாஷ்.

“ஆகாஷ்… ஒரு தேங்க்ஸ் கூட சொல்லமாட்டேங்குற? நீ சரி இல்லை.” என்று கூறிக்கொண்டு கீதா அறையை விட்டு வெளியேறினாள்.

ஆகாஷ், அவன் அலைபேசியை எடுத்து ஸ்ருதியிடம் பேசினான். பேச்சை முடித்த அவன் கண்களில் இரு துளி கண்ணீர்.

குறும்புகள் தொடரும்…