ஊஞ்சல் – 12-a
அன்று உடல்நிலை சரியில்லாமல் மருந்தின் வீரியத்தால் தூங்கிய பொம்மியை தனியே வீட்டில் விட்டுவிட்டு, வீட்டின் பின்வாசலை பூட்டாமல் சென்றதை, முற்றிலும் மறந்து போயிருந்தாள் அசலாட்சி. வீட்டைத் திறக்கும் நேரத்திலேயே ஏதோ ஒரு ஒவ்வாதவாசம் நுகர்ந்தவள், உள்ளறையில் ஆள் அரவம் உணர்ந்து அங்கே சென்றாள்.
அருகே வசிக்கும், குடித்தனக்காரரின் இருபது வயது மகன் மகேஷ், மூடப்படாத பின்வாசலின் வழியாக அசலாவின் வீட்டிற்குள் நுழைந்து ஐந்து வயது பொம்மியிடம் அத்துமீறிக் கொண்டிருந்தான். குழந்தையின் மூக்கும், வாயும் ஒருசேர துணியால் கட்டப்பட்டிருக்க மூர்ச்சையாகி இருந்தாள் அந்த சின்னசிட்டு.
அவள் பார்த்த காட்சி உயிரை உறைய வைக்க இதயம் தன்துடிப்பை நிறுத்தி விட்டதைப் போல் அதிர்ச்சியில் மூச்சு விடவும் மறந்து போனாள்,
தன்பிஞ்சின் உடல் முழுவதும் பதிந்திருந்த நகக்கீறல்களும், பற்தடமும் என்ன கொடுமை நடந்தது என்பதை அசலாவிற்கு சொல்லாமல் சொல்லியது.
“விடு… வி…டு… விடுடா… என் புள்ளைய… சின்ன குழந்தைடா… பாவி! கண்ணு தெரியலையா?” ஆக்ரோஷமாய் கத்திகொண்டே ஆங்காரத்துடன் அவனை, குழந்தையிடம் இருந்து மிகக் கடினப்பட்டு பிரித்தாள்.
மிதமிஞ்சிய போதையில் இருந்த காமுகனின் பார்வைக்கு வயசு வித்தியாசம் என்றெல்லாம் தெரியவில்லை. தன்னை வலுக்கட்டாயமாய் தடுத்துப் பிரித்து விட்டவளும் ஒரு பெண் என்பதை உணர்ந்தவன், “அப்போ நீ வர்றியா?” என தள்ளாடிய போதையில் அசலாவை பிடித்து இழுக்க, வந்த ஆத்திரத்தில் தன் பலத்தை எல்லாம் திரட்டி அவனை தள்ளி விட்டாள். போதையில் தள்ளாடியவன் உள்ளறைக்கும், சமயலறைக்கும் இடைப்பட்ட இடத்தில் மல்லாக்காக விழுந்து வைத்தான்.
“உன் வீட்டுக்கு போடா! உன் அம்மாவும், தங்கச்சியும் பொண்ணுங்கதான்… அவங்கள போய் கேளு…” கண்களும் முகமும் சிவக்க, ஆவேஷமாய் கத்திவிட்டு தன் மகளைப் பார்க்க விரைந்தாள்.
மலரிதழ்களை உதிர்த்து விட்ட காம்பாக அந்த பிஞ்சும் அசைவின்றி கிடக்க, அவசரகதியில் முகத்திற்கு கட்டிய துணியை எடுத்து விட்டவள் கைக்கு வந்த ஒரு உடையை போர்த்தி விட்டாள்.
பேச்சு மூச்சின்றி கிடக்கும் மகளை இந்தக் கோலத்தில் பார்க்க நேர்ந்த தன்நிலையை நினைத்து, அந்தக் கணம் உயிரோடு மரித்தே போனாள். பிள்ளையின் கன்னத்தில் தட்டிப் பார்க்க அசைவில்லை. மகளை தன்மேல் போட்டு கொண்டு உலுக்கிப் பார்த்தாலும், அவள் கண்மணிக்கு கண்ணசைவும் மூச்சுக் காற்றும் வரவில்லை.
மல்லாக்க விழுந்தவன் தத்துபித்தென்று பிதற்றிக் கொண்டு எழுந்து நிற்கும் முயற்சியில் இருக்க, அதைப் பார்த்தவளுக்கு கோபம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து அந்த சமயத்தில் ஆக்ரோஷம் கொள்ள வைத்தது.
மகளை துர்கதிக்கு ஆளாக்கியவன் கண்முன்னே இன்னும் அசைந்து கொண்டு இருக்கின்றான் என்பதை கண்கூடாகக் கண்டவள், அவனைத் தன்காலால் உதைத்து மீண்டும் அவனை மல்லாக்க விழ வைத்தாள்.
மனம் ஒருநிலையில் இல்லாமல் தவிக்க அந்த நேரத்துப் பதட்டம், கோபம், தடுமாற்றம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து அவள் நிதானத்தை பின்னுக்கு தள்ளியது.
மனமானது ‘அவனை அந்த நிமிடமே பழி தீர்த்துவிடு’ என்று அறிவுறுத்த அந்த சமயத்தில் கைக்கு அகப்பட்டது, அவள் வீட்டில் உபயோகிக்கும் இரண்டு கற்கள் இணைக்கப்பட்ட கிரைண்டரின் மாவாட்டும்கல்.
கையோடு அதனை எடுத்தவள், தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவன் இடுப்பிற்கு கீழே அடிக்கத் தொடங்கினாள். அவளைத் தடுப்பதற்கென அந்தக் கயவனும் எழ முயற்சிக்க, தனது வலதுகாலை தூக்கி அவன் கழுத்தில் வைத்து அழுத்தி நின்றவள் சராமாரியாக அவனைத் தாக்கத் தொடங்கினாள்.
அவனோ தன் கைகளைக் கொண்டு அவள் கால்களை தன் மீதிருந்து விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டான். ஆனால் அவனுள் இருந்த மிதமிஞ்சிய போதை, பெண்ணவளின் உறுதியான காலினை அசைக்க விடவில்லை.
மீண்டும் ஒரு முயற்சியாக அசலா அடிக்கும் இடத்தில் தன்கைகளை கொண்டு சென்று அந்த கல்லை அவன் பறிக்க முயல, வயிற்றுப் பகுதியோடு அவனது கை விரல்களுக்கும் சேர்த்தே அடிவிழுந்தது.
வலியால் துடித்த அவனது கதறல்கள் அசலாவின் காதில் கேட்கவில்லை. தன்மகளின் அசையாத உடல்மொழியே கண்களில் நிலைக்க பொங்கிவரும் கண்ணீரோடு, மிக ஆக்ரோஷமாக ஆவேசமாக அந்த கிராதகனின் ஆண் என்ற அடையாளத்தை அவனது அகம்பாவத்தை அழித்துக் கொண்டிருந்தாள்.
“செத்துப் போடா! பச்ச பிள்ளைன்னு அறிவுக்கு தெரியாம அலையிறவன், இந்த உலகத்துல இருக்க வேண்டிய அவசியமில்ல…” கத்தியபடி அடித்து அவனை துவம்சம் செய்தாள். சிவப்பும் பச்சையும் கலந்த சல்வாரில் இருந்த அவளது உக்கிரத் தோற்றம், அந்த நேரத்தில் அவளை காளியாய் காட்டியது.
அடிபட்ட வலியில் அவனும் கத்த ஆரம்பிக்க, அந்த பெரிய குரல்களில் எழுந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கம் வீடுகளில் உள்ள பெண்கள், அவள் வீட்டை எட்டிப் பாரத்தனர்.
அவளின் ருத்ர தாண்டவத்தையும் அவன் உயிர் வலியில் துடிப்பதையும் மூச்சுக்குத் தவிப்பதையும் பார்த்தவர்கள் முதலில் அவனை, அசலாட்சியிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு அவளை தடுத்து, வம்படியாய் விலக்கி, ஓரிடத்தில் நிற்க வைத்தனர்.
“அசலா! என்ன காரியம் பண்றே?”
“மகேஷ் என்ன பண்ணினான்?”
“எதுவா இருந்தாலும் அவன் வீட்டுல சொல்லி இருக்கலாமே?”
“அவங்க வீட்டுல யாரும் இல்லாத நேரத்துல, நீ இப்டி செய்றது உனக்கே எதிரா முடியும், அவன விடு…” அங்கே வருகை தந்திருந்த இரண்டு பெண்களும் ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகளை கேட்டு, பேசிக்கொண்ட நேரத்திலும் அசலாட்சி பித்துப்பிடித்தவளைப் போல் அதிர்ச்சி இன்னமும் விலகாமல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றிருந்தாள்.
அவர்களின் கேள்வியில் சுயத்தை அடைந்தவள், கரை தாண்டிய கண்ணீருடன் குழந்தையின் பக்கம் தன் பார்வையை திருப்ப,
“பொம்மிக்கு என்ன ஆச்சு அசலா?”
“ஏன் பாப்பா உருக்குலைஞ்சு போயிருக்கா?” என்ற அவர்களின் கேள்விகளுக்கு என்னவென்று பதில் சொல்வாள்.
இனிமேல் வெளியுலகைப் பார்க்க ஆரம்பிக்கப் போகும் சின்னமொட்டை முளையிலேயே கிள்ளி எரியும் வகையில் நடந்த அசம்பாவிதம் கண்முன்னே வந்து அவளை பேச்சிழக்க வைத்தது.
சத்தம் கேட்டு வந்தவர்களுக்கு அசலாவின் கலைந்த தோற்றமும் அவளது அழுத, கோபமுகமும் மகேஷின் மீதே குற்றம் இருக்கும் என்பதை ஊகிக்க போதுமானதாய் இருக்க
“சொல்லு அசலா… என்ன ஆச்சு?”
“எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு?” மற்றவர்களின் கேள்விகளுக்கு செவி சாய்க்காமல், குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைய, துணையாக அங்கிருந்த ஒரு பெண்ணும் உடன் சென்றாள்.
போகும் வழியெங்கும் குழந்தையை பலவாறு அழைத்தும், உலுக்கியும் பார்த்தே சோர்ந்து போனாள் அசலாட்சி.
‘பத்மாக்ஷினி’ என்று அவளது முழுப்பெயர் கூறி அழைத்தால் அந்த இளவரசிக்கு செல்லக் கோபங்களும் சோகங்களும் வந்து தன்முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள். அந்த சமயத்தில் அதுவும் நினைவிற்கு வர அப்படியும் அழைத்துப் பார்த்தாள்.
“பத்மாக்ஷினி… பத்மாக்ஷினி… கண்ணைத் தொறந்து பாரு… அம்மா உன்ன பேர் சொல்லி கூப்பிடுறேன்! பேசு… இப்டி கூப்பிடாதேன்னு சொல்லு!” என்று மகளை போட்டு உலுக்கி எடுக்க, அதைப் பார்த்து உடன் வந்த பெண்ணிற்கும் கண்ணில் நீர் திரண்டது.
“கொஞ்சம் அமைதியா இரு அசலா! பிள்ளைக்கு பெருசா ஒன்னும் இருக்காது…” சிரமத்துடனேயே அவளை சமாதானப்படுத்தினார். மருத்துவமனையில் பொம்மி அவசர சிகிச்சை பிரிவிற்கு, அனுமதிக்கப்பட,
“அக்கா… வீட்டு அட்ரஸ் சொல்லி, இந்த கார்ட்ல அவங்க கேட்குற பணத்தை கட்டிடுங்க… நான் உள்ளே போறேன்…” தன்னுடன் வந்த பெண்ணிடம், தனது பண அட்டையின்(atm card) ரகசிய இலக்க எண்ணை கூறிவிட்டு சிகிச்சைப் பிரிவிற்கு விரைந்தாள்.
உள்ளே சென்றவள் தன்னை அங்கே அறிமுகப்படுத்திக் கொண்டு, கீழே விழுந்ததில் மூர்ச்சை ஆகிவிட்டாள் என்று பொய் சொல்ல முயன்றாள். நடந்த கொடூரத்தை தன் வாயால் சொல்லவும் பிடிக்கவில்லை என்பதை விட, அதை சொல்லி முடிக்கும் வரையில் தன் உயிர் தன்னிடம் இருக்குமா? என்ற சந்தேகம் வந்து அவளை தடைசெய்தது.
இந்த உணர்வுகள் ஒருபுறம் இருக்க, இப்பொழுது நடமாடிக் கொண்டிருக்கும் ஊடகங்களும் தொலைக்காட்சி சேனல்களும் இது போன்றதொரு விடயங்கள் கிடைத்தால், அதை பற்றிப் பேசிப் பெரிதாக்கியே தங்களுக்கு நல்லதொரு தீனியை இட்டுக் கொள்கின்றனர். பாதிக்கபட்டவர்களுக்கு ஆதாயம் தேடித் தருகிறோம் என்று தங்கள் நிறுவனத்திற்கு லாபத்தை மட்டுமே சம்பாதித்துக் கொண்டு ஒதுங்கி விடுவதுமாக இருக்கும் நிகழ்காலங்களும் சேர்ந்து நடந்ததை சொல்ல அவள் மனம் ஒப்பவில்லை.
அது மட்டுமல்லாது பள்ளி மற்றும் வெளியிடங்களில் தன்மகளுக்கு இப்படி ஒரு கெடுதல் நடந்தது என்ற பாவ, பரிதாபப் பார்வைகள் நிச்சயம் பிஞ்சு மனதை பாதித்து அவள் எதிர்காலத்தினை சிதைக்க செய்யும் என்பதை தெளிவாக அறிந்தவள் எக்காரணம் கொண்டும் பொம்மிக்கு நடந்த அக்கிரமத்தை வெளியே சொல்லாமல் இருக்க மனதிற்குள் உறுதி கொண்டாள்.
ஆனால் அசலாட்சியின் பொய்ப்பேச்சு அங்கே இருந்த மருத்துவர்களிடம் எடுபடவில்லை. “நடந்தத மறைக்காம சொல்லுங்க… வெளியே சொல்லாம ரகசியமா வைக்க வேண்டியது எங்க பொறுப்பு…” என்று மருத்துவர்கள் ஆறுதல்படுத்தி நடந்தவைகளை மெதுமெதுவாய் கேட்டு அவளை ஆசுவாசப் படுத்தினர்.
“இப்போ பேபி கொஞ்சம் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்தான்… ஏற்கனவே உடம்பு முடியாம இருந்த பேபி, ரொம்பநேரம் மூச்சுவிட முடியாம சிரமப் பட்டிருக்கா… இப்போ வென்டிலேசன்ல(செயற்கை சுவாசம்) வச்சிருக்கோம்… எப்படியும் காப்பாத்தி உங்க முன்னாடி உட்கார வைக்க வேண்டியது எங்க பொறுப்பு…” என்ற தற்போதைய நிலவரத்தையும், பிழைத்துக் கொள்வாள் என்ற தேறுதலான வார்த்தைகளும் அசலாட்சிக்கு அந்த நிமிடத்து இளைப்பாறுதலை அளித்தது.
அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வந்தவுடன் நிலைமையின் தீவிரத்தை உரைத்த மற்ற மருத்துவர்கள், அசலாவின் வேண்டுதலையும் கூறிட, அவருக்கு சரி என்று பட்டாலும் சற்று அதிருப்தியை காட்டினார்.
“இப்படிச் சொல்லியே நிறைய பேர் தங்களோட பாதிப்புகளை வெளியே சொல்லாம மனசுக்குள்ள புதைச்சு வச்சா, அந்த குற்றவாளிகளை யார் தண்டிக்கிறது?” – தலைமை மருத்துவர்.
“வெளியே சொன்னா மட்டும், அவனுக்கு தண்டனை கிடைக்குமா டாக்டர்? அப்படி கிடைச்சாலும் என் பிள்ளைக்கு நடந்தது இல்லன்னு ஆகிடுமா?” அசலா ஆதங்கமாய் தன் பதிலை சொல்ல
“இந்த யதார்த்தம்தான் பல வெறிநாய்களை தப்பிக்க வைக்குதும்மா! என்ன சட்டம் கொண்டு வந்தாலும், இப்படி நடக்குறத தடுக்க வழியில்லாம போயிடுது?” கோபத்துடன் கூடிய இயலாமையில் கூறினார் மருத்துவர்.
“எதிர்காலம்னு ஒன்னு இருக்கே டாக்டர்! அது கண்ணுமுன்னாடி நின்னு பூச்சாண்டி காண்பிக்கும்போது, நம்மள மாதிரி நடுத்தர வர்க்கம் வேறென்ன செய்ய முடியும்? நமக்கு அசிங்கம் வந்து சேர்றது மட்டுமே மிச்சமாகுது” – அசலா
“சரிம்மா… நான் சொல்றத சொல்லிட்டேன்! நாங்க வெளியே சொல்லாம இருக்குறதும் பெரிய குற்றம். நான் ஹாஸ்பிடல் ரூல்ஸ்படி ரிப்போர்ட் கொடுத்திடுறேன்… இந்த மாதிரி கேஸ் எடுத்து நடத்துறதுல பேர் வாங்கின லாயர் மிஸ்.ஆதிரை. அவங்ககிட்ட உங்கள அறிமுகப்படுத்தி வைக்கிறேன். உங்களோட முடிவு என்னனு அவங்ககிட்ட எடுத்துச் சொல்லிடுங்க…” தன்தரப்பு விளக்கத்தை கூறி, சென்று விட்டார்.
இடைப்பட்ட நேரத்தில் அசலாவின் தந்தைக்கும் சேதி தெரிந்து அங்கே வர, அவரிடமும் மகளின் நிலையை சொல்ல மனம் வரவில்லை. ஏற்கனவே இழக்ககூடாத இழப்புகளை இழந்து, தனிமையில் தவிப்பவருக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை.
ஏறி இருந்த பாரத்தோடு இதனையும் சேர்த்தே தாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவள் தந்தையிடமும் உண்மையை மறைத்து வைத்தாள்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பேத்தியை பார்த்தவர், அங்கேயே கதற ஆரம்பிக்க அவரை தேற்ற மிகுந்த பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. மகளுக்கு ஆறுதல் சொல்வதா? பேத்தியை பார்ப்பதா என்று பெரியவரும் திண்டாடித் தவித்து விட்டார்.
தொடர்ந்து வந்த நாட்களில் சுந்தரராஜுலு பேத்திக்கு காவலாய் இருப்பேன் என்று சட்டமாய் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி விட, அசலாட்சி மட்டுமே, அவருடைய தேவைகளை கவனித்து கொண்டு வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாய் நடந்து கொண்டு இருந்தாள்.
மூன்றாம் நாள் காலையில் தலைமை மருத்துவர் சொன்ன வழக்கறிஞர் ஆதிரை அங்கே வர, அசலாட்சியை தனியே அழைத்து அனைத்தையும் அசலாவிடம் கேட்டறிந்தார்,
“நீங்க சொல்றத வச்சுப் பார்த்தா பலத்தகாயம், இல்லன்னா சேதாரம் உறுதியா அந்த பையனுக்கு இருக்கும். அவங்க தரப்புல இருந்து உங்க மேல புகார் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கு… அதனால உங்களுக்கு முன்ஜாமீன் வாங்கி வைக்கிறது நல்லது அசலாட்சி!
உங்ககிட்ட தப்பா நடந்ததால மட்டுமே, நீங்க அவனை தாக்க வேண்டியதாப் போனதுன்னு அவன்மேல நீங்களும் ஒரு புகார் கொடுத்தால்தான், குழந்தைக்கு நடந்தத நம்மளால மூடி மறைக்க முடியும்” என அறிவுறுத்த முன்ஜாமீன் வாங்கப்பட்டு புகாரும் பதிவு செய்யப்பட்டது.
நடந்தவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரராஜுலுவிற்கு நடந்த அசம்பாவிதங்கள் சொல்லாமலேயே மெல்லமெல்ல தெரிய வர, முழுமையாய் அறியும் பொருட்டு அசலாவை திட்டியும் அன்பாய் பேசியும் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொண்டார்.
பேத்தியின் எதிர்காலத்திற்கு என, மகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தான் உறுதுணையாக இருப்பதாகவும் வாக்குறுதி அளித்து, தன் மனதில் எழுந்த பாரஉணர்வுகளை எல்லாம் கடவுளை திட்டியே சமன் படுத்திக் கொண்டார்.
ஒரு வழியாக சிகிச்சை பலன் அளித்து, வீட்டிற்கு திரும்பி வர பதினைந்து நாட்கள் கடந்து போய் இருந்தது.
ஆனால் மகேஷ் இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் இருப்பதாக அக்கம்பக்கம் உள்ளவர்கள் சொல்லிச் சென்றனர். அசலாட்சி காலால் கழுத்தை மிதித்து அழுத்தியதால், இப்பொழுது அவனது வார்த்தைகள் பாதிக்கும்மேல் காற்றுக்கு துணை போய் இருந்தது.
பெரும்பலத்துடன் கல்லைக் கொண்டு அடுத்தடுத்து தாக்கியதால், இடுப்பிற்கு கீழே உணர்வு நரம்பு அறுபட்டு உணர்ச்சியற்று போய் இருந்தது.
இரண்டு கால்களையும் இம்மியளவும் அசைக்க முடியாததால் படுக்கையில் இருந்தபடியே அனைத்தும் நடந்தேறியது. கைவிரல்களிலும் அடிபட்ட காரணத்தால் அந்த இடத்து நரம்புகள் செயலிலந்து போய் கைகள் மரத்த நிலையில் காணப்பட்டன. சுய உணர்வோடு இருந்தாலும், நடைபிணத்தை விடக் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான் அந்த அயோக்கியன்.
செய்த பாவத்திற்கு இந்த தண்டனை போதாது என்று சொன்ன அன்று வந்த பெண்கள் பிள்ளையை விசாரித்து விட்டுச் சென்றனர். நடந்த உண்மைகளை அவர்கள் அறிந்திருந்தாலும், தனக்கு தான் பாதிப்பு என்று வெளியே இருப்பவர்கள் விசாரித்தால் கூறுமாறு அசலாட்சி, அவர்களிடம் சொல்லி வைக்க அவர்களும் சரி என்று ஒப்புக் கொண்டனர்.
நாட்கள் இப்படியே செல்ல, கொடுத்திருந்த புகார்களும் அதன் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தன. அதனோடு பொம்மியின் செய்கையில் பெருமளவு மாறுதல்களும் ஏற்பட்டன.