kv-19
kv-19
19
உறைந்து போய் பயந்துடன் படுத்திருந்த ஜானவிக்கு “வில் வீலென” அந்த மிருகம் கத்துவது கேட்க, முகத்தை மூடியிருந்த துண்டை விலக்கி விட்டுப் பார்க்க, விஜய் அந்த மிருகத்தை ஒரு கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டிருந்தான்.
அவளது டெண்டை விட்டு வெளியே இழுத்துப் போட்டவன், அதனை வெளிச்சத்தில் பார்க்க அது ஒரு காட்டுப் பன்றி போல இருந்தது. ஆனால் அதன் கழுத்தில் ஏதோ ஒன்று கட்டி இருக்க, அதனை முதலில் அருகில் இருந்த மரத்தோடு சேர்த்துக் கட்டுவிட்டு பின் தன் ஹெட்லட்டை எரியவிட்டுப் பார்க்க,
ஒரு தங்க நிற டாலரில் குறுகும் நெடுக்குமாக கோடுகள் போடப்பட்ட முத்திரையும் பதித்து இருந்தது தெரிந்தது. அது என்ன முத்திரை என சரியாகப் பார்க்க முடியவில்லை.
மெல்ல பயத்தோடு எழுந்து வந்தாள் ஜானவி. விஜயின் பின்னால் நின்றவள்,
“இது என்ன மிருகம்.. பயங்கரமா இருக்கு.” குரலில் நடுக்கம் தெரிய,
“இது காட்டுப் பண்ணி தான். ஆனால் நல்ல தீணி. அதான் இவ்வளோ பெருசா இருக்கு. போய் கொஞ்சம் தண்ணி குடி..” சிறிதே சிறிது அக்கறை தெரிந்தது போல் இருந்தது.
அவளுக்குமே நா வறண்டு தான் போயிருந்தது. பிளாஸ்கில் இருந்த நீரை சிறிது பருகி விட்டு அவள் வர, அதற்குள் அவன் தன் மொபைலில் அந்த பன்றியின் கழுத்தில் இருந்த அந்த டாலரை போட்டோ எடுத்துக் கொண்டான்.
அவள் அப்போது தான் அதை கவனிக்க,
“இது என்ன, வளக்கர நாய்க்கு கழுத்துல செயின் போடர மாதிரி இதுக்கும் கட்டி இருக்காங்க. அப்போ இது யாரோ வளக்கர பண்ணியா? நம்மள ஃபாலோ பண்றாங்களா?” அவளுக்குள் நிறைய தோன்ற ஆரம்பிக்க அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள். ஆள் அரவம் இல்லாமல் தான் இருந்தது.
“இல்ல.. எனக்கென்னம்மோ இது காவல்க்கு வைக்கற மிருகம்னு தோணுது. காட்டுவாசிங்க திசைக்கு ஒண்ணா இந்த மாதிரி தான் சில மிருகங்கள பழக்கி அனுப்பி வெச்சிருப்பாங்க. இந்த மாதிரி தெரியாத ஆட்களோ அல்லது தீங்கு ஏற்படுத்தும் மிருகமோ வந்தா அவங்கள கொண்ணுடும்.
அவங்கள பாதுகாக்க அவங்க ஏற்படுத்திக்கற வழிகள் இது. இந்த மிருகம் அப்படிப் பட்ட ஒண்ணா தான் இருக்கும். கழுத்துல இருக்கற அந்த டாலர்ல முத்திரை வேற இருக்கு. நிச்சயம் அது காட்டுவாசிங்க முத்திரையா தான் இருக்கும்.” அவளுக்கு விளக்கம் சொன்னான்.
“அது சரி நீங்க எப்படி சரியான நேரத்துக்கு வந்தீங்க. நீங்க அப்போவே தூங்கிட்டீங்கன்னு நெனச்சேன்?” ஜானவி கேட்க,
“இந்த மாதிரி இடத்துக்கு வந்துட்டு எப்படி நிம்மதியா தூங்க முடியும். ஒரு சின்ன சத்தம் வந்தா கூட நாம விழிப்புணர்வா இருக்கணும். உனக்கு தூங்கறப்ப டெண்டை மூடனும்னு தெரியாதா?” மீண்டும் அவன் வார்த்தைகள் கடுகடுக்க,
“அது என் தப்பு தான். மூடிட்டேன்னு நெனச்சு வந்து படுத்துட்டேன்.” தவறை ஒத்துக்கொள்ள,
“என்னமோ இது ஒன்னு தான் தப்பு மாதிரி..” வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டு தன் டெண்ட்டுக்குள் சென்றான்.
அவளுக்கும் அது தெளிவாகக் கேட்க, அந்த சமயம் அந்த மிருகம் உறுமிக் கொண்டே தன்னை விடுவித்துக் கொள்ளப் பார்த்தது. அந்த சத்தத்தில் அவள் மீண்டும் பயம் கொள்ள,
“என்ன, நீங்க பாட்டுக்கு உள்ள போய்டீங்க? இப்ப இத என்ன பண்றது..?” அவனது டென்ட் வாசலில் வந்து நின்றாள்.
அவன் கையில் லைட்டர் எடுத்து வந்து பின் காட்டில் சில செடிகளைத் தேடினான்.அதிலிருந்து சில இலைகளைப் முகர்ந்து பார்த்து, அவற்றில் சிலதைப் பறித்துவந்து அந்த காட்டுப் பன்றியின் முகத்திற்கு எதிரே அவற்றைக் கொளுத்த, அதிலிருந்து வந்த வாசத்தால் அது மயங்கியது.
அதன் சத்தமும் அடங்க, அப்போது தான் ஜானவியின் உடல் சற்று நடுக்கத்தை நிறுத்தியது. சற்று நேரத்தில் நடந்துவிட்டக் கலவரம் அவளுக்குள் சிலிரிப்பை ஏற்படுத்த , தன் தலையை சிலுப்பிக் கொண்டு தன் உடலைக் கைகளால் அணைத்துக் கொண்டாள். அவளால் சில நொடிகள் பேச முடியவில்லை.
அந்த இலையின் வாசமோ எதுவோ அவளை பிரட்டியது. அவள் மடங்கி கீழே அமர, புருவம் சுளித்து அவளை நோக்கினான் விஜய்.
“என்ன தண்ணி எதாவது வேணுமா? என்ன செய்யுது?”
அவள் உடனே கையை அசைக்க, அவன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அவளது உதடுகள் வரண்டுவிட, நாக்கை நீட்டி அதை ஈரப் படுத்த முயன்றாள்.
அவன் கொடுத்த தண்ணீரால் முகத்தில் சிறிது தெளித்துக் கொண்டவள், சற்று தொண்டையையும் நனைத்துக் கொள்ள, மீண்டும் தெளிவு பெற்றாள்.
“என்னனு தெரியல, இந்த ஸ்மெல் எனக்கு பெரட்டிடுச்சு.” அவள் கூறியதும் அவளிடம் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தான்.
அதைப் பற்றி எதுவும் பேசாமல்,
“சரி போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. நாளைக்கு காலைல இந்த இடத்தை விட்டு உடனே போயாகனும். இந்த பண்றிய வெச்சு நாம மாட்டிக்கக் கூடாது.” என்றுவிட்டு தன் இடத்தில் சென்று படுத்துக் கொண்டான்.
மெல்ல அவளும் எழுந்து சென்று படுக்க, அவளது கைகால்கள் முறுக்கிக் கொண்டு வந்தது. ஏதோ கட்டுப் படுத்திக் கொண்டு படுத்தாள்.
அதிகாலையில் எழுந்தவன், வெளியே வந்து பார்க்க அங்கே அந்தப் பன்றி இல்லை. கட்டவிழ்த்துக் கொண்டு சென்றிருந்தது. அதை வைத்து யாரும் இங்கே வந்துவிடக் கூடாது என்று, அவசரமாக அவளை அழைக்கச் செல்ல, அவளே டெண்ட்டை திறந்து கொண்டு வந்தாள்.
பார்க்க அவள் சோர்ந்து தெரிந்தாலும்,
“சீக்கிரம் கிளம்பு” துரிதப்படுத்தி விட்டு, அவனது உடமைகளை எடுத்து வைக்கச் சென்றான்.
அவளுக்கு உடலில் இருந்த கொஞ்ச நஞ்ச வலுவைத் தேக்கி, அவளும் சமாளித்துக் கொண்டு அனைத்தையும் வாரி சுருட்டிக் கொண்டு கிளம்பினாள்.
ஓட்டமும் நடையுமாக அந்தக் காட்டிற்குள் பயணம் தொடர்ந்தது. வெகுதூரம் சென்ற பிறகு, அந்த இடம் சற்று முட்கள் அகற்றப் பட்டு வழிகள் பாதைகள் தெளிவாக இருந்தது.
உடனே சுதாரித்தவன், “ஒ! காட்.! மாடிக்கிட்டோம்!” என்றான்.
“என்ன.. என்னாச்சு இப்போ?” அவளும் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு ஓரளவு புரிந்தது போல கேட்க,
“கண்டிப்பா நம்மள சுத்தி ஆளுங்க இருப்பாங்க..ஷிட்..” பல்லைக் கடித்தான்.
“ஆமா.. அந்த மரத்துக்கு மேல ஒரு ஆள் கைல வில் வெச்சுட்டு உட்காந்திருக்கான்” தலையைக் கீழே குனிந்து கொண்டு மேல் கண்ணால் பார்த்தபடி ஜானவி சொல்ல,
“சரி தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத..சாதாரணமா நட” அவளுக்குக் குறிப்பாகக் கூறி விஜய் நடக்க, அவளும் கூடவே நடந்தாள்.
நாலு அடி அவன் எடுத்து வைத்ததும், ‘தொப்பென‘ அவனுக்கு எதிரே வந்து குதித்தான் ஒருவன்.
உடனே பின்னாலும் ஒருவன் குதித்தது தெரிந்தது. வலதுபுறம் ஒருவனும் இடதுபுறம் ஒருவனும் சேர்ந்துகொள்ள அவர்களை சுற்றி வளைத்தனர்.
பார்க்க படு பயங்கரமாக இருந்தனர் அனைவரும். எண்ணெய் உடலெங்கும் பூசப்பட்டு, கருத்த தேகத்துடன், இடையில் மான் தோலில் செய்த ஒரு உடையை உடுத்தி இருந்தனர். அவர்கள் கழுத்தில் அந்த பன்றியின் கழுத்தில் இருந்தது போன்ற அதே டாலர் ஒரு கயிற்றில் கட்டி அணிந்திருந்தனர்.
விஜய் ஜானவி இருவருக்கும் புரிந்துவிட்டது. இவர்கள் காட்டுவாசிகள். நிச்சயம் அவர்களை விடமாட்டார்கள் என்று தெரிய, ஜானவிக்கு உள்ளம் பதைத்தது.
விஜய் சற்று தைரியமாகவே நின்று கொண்டிருந்தான். நால்வரில் ஒருவன் தன் இடையில் வைத்திருந்த ஒரு வேர் ஒன்றைக் கையில் எடுத்து, விஜய் தலையில் இருந்து கால்வரை தடவியவன், பின் அதற்குத் தீ மூட்டினான்.
அந்த வேர் எரியாமல் அப்படியே இருக்க, நால்வரும் ஆச்சரியப் பட்டு,
“ஆவா….” என்று கை காட்டி அழைத்து முன்னே நடந்தான்.
“ம்ம்ம்..ம்ம்ம்” என மற்றவர்கள் இருவரையும் விரட்ட, அந்த காட்டுவாசிகள் காட்டிய வழியே நடக்க ஆரம்பித்தனர்.
ஜானவி ‘ அந்தப் பக்கம் வேகமா ஓடிடுவோமா‘ என விஜயிடம் கேட்கவர, அதைப் புரிந்து கொண்டவன்,
“எதுவும் பேசாதே!” என்பதைப் போலத் தலையசைத்தான்.
சரியென பின்னாலேயே சென்றவள், அவ்வப்போது மற்ற நால்வரையும் பார்த்து உள்ளுக்குள் பயந்தாள்.
சிறிது தூரம் சென்ற பிறகு, அங்கே ஒரு சிறு கிராமம் போன்ற அமைப்புடன் சில ஓலைக் குடிசைகள் இருப்பதைக் கண்டு வியந்தான் விஜய். இப்படியும் மக்கள் இந்தப் பகுதிகளில் இருக்கிறார்கள் என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அங்கே சென்றதும் இந்த நான்கு காட்டுவாசிகளும் ஒரு குடிசையின் கதவைத் தட்ட, உள்ளிருந்து நல்ல ஆஜானுபாகுவாக ஒரு நடுத்தர வயது மனிதன் வந்தார்.
அவரது காதில் இவர்களை அழைத்து வந்தவன் ஏதோ முனுமுனுக்க, அவரது கண்களில் ஆச்சரியம் தெரிந்தது.
விஜய்க்கு புரிந்தது, அவர் தான் இந்தக் கூட்டத்தின் தலைவராக இருக்க வேண்டுமென்று.
இவர்களை கைகாட்டி அவரும் ஏதோ சொல்ல, இருவரையும் மீண்டும் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அது ஒரு சபை போல இருந்தது. இருபுறம் வரிசையாக இருந்த சில மேடுகளும் நடுவில் இருந்த பெரிய மேடும், அமர்வதற்கான இடமாகத் தோன்ற, இவர்கள் அங்கே சென்றதும், அடுத்த பத்து நிமிடத்தில் ஆண்களும் பெண்களுமாக அங்கே ஒரு நாற்பது ஐம்பது பெர் குழுமிவிட்டனர்.
அவர்களது பாஷையில் ஒருவன் பேசினான்.
“இவன் உடலில் பட்ட வேர் நெருப்பில் கருகவில்லை. அதனால் இவன் ஒரு மகான்.” என்றான். அவன் கூறியதும் அங்கே சலசலப்பு ஏற்பட,
“அந்தப் பெண்ணை சோதிக்க இரு பெண்கள் வாருங்கள்” என அழைத்தான்.
அதன்படி இரு பெண்கள் வந்து அதே போல அவள் உடலில் அந்த வேர் கொண்டுவந்து தடவி அதை நெருப்பில் காட்ட அது எரிந்தது.
இதைக் கண்ட விஜய்குமே ஆச்சரியமாக இருந்தது. எப்படி தனக்கு மட்டும் அது எரியவில்லை என்று வியந்தான்.
பிறகு, “அவள் இங்கு இருக்க தகுதி இல்லை. வெட்டுங்கள்” என்று அந்த தலைவர் சொன்னதும், பெரிய அரிவாளுடன் அந்தப் பெண்கள் வர,
கண்கள் பெரிதாக ‘இதென்ன கொடுமை‘ என்று ஜானவி கத்த,
இடையில் புகுந்தான் விஜய்.
“இது நியாயம் இல்ல. எங்கள விட்டுடுங்க. உங்கள தொந்தரவு செய்ய நாங்க வரல” என்றான்.
இவன் பேசியதை புரிந்து கொண்ட ஒருவன், அதை தலைவரிடம் கூற, தலைவர் கூறிய பதிலை இவனிடம் சொன்னான்.
“இங்க எங்களைத் தவிர வேறு யாரும் வரக் கூடாது. அதுக்கு அனுமதி இல்லை. அப்படி வந்தா அவங்கள அங்கேயே கொன்னுடுவோம். உன் மேல பட்ட வேர் எரிஞ்சு போயிருந்தா நீயும் அங்கேயே செத்திருப்ப. பெண்கள ஆண்கள் தொடக் கூடாது அதுனால அவளை சோதிக்க இங்க வரைக்கும் கொண்டு வந்தோம். இப்போ அவ இங்க இருக்க தகுதி இல்ல. அதுனால நீ அதை தடுக்காதே” என்றான் .
“இது கடவுள் குடுத்த உயிர். அதை எடுக்க உங்களுக்கு உரிமை இல்லை. ஒரு மனிதன் இந்த உலகத்தில் இல்லாமல் போக்க கடவுள் ஒருவரால் தான் முடியும். அதை நீங்க செஞ்சா அந்த பாவத்துக்கு நீங்க தண்டனை அனுபவிக்கனும்” என்று தைரியமாகக் கூற,
அவனது பேச்சு அங்கிருப்பவர்களுக்கு புரியாமல் பார்க்க, அந்த மொழிபெயர்ப்பு செய்தவன் அதையும் அனைவர்க்கும் புரியும்படி எடுத்துக் கூறினான்.
சிறிது நேர அமைதிக்குப் பின், அந்த தலைவன் ஒரு முடிவோடு அவனை அழைத்து சிலவற்றைக் கூற, விஜய்க்கு அதை உரைத்தான்.
“ ஐயா, எங்களுக்கு ஒரு சாபம் இருக்கு. அது எங்க முன்னோர்கள் சிலர் அந்நியர்களை உள்ளே சேத்துகிட்டு செய்த சில பாவச் செயல்களால வந்தது. அதுல இருந்து நான் அந்நியர்கள் வந்தாலே இப்படித் தான் நடந்துப்போம். உங்களால எங்களோட அந்த சாபத்த போக்க முடிஞ்சா நாங்க உங்கள இங்கிருந்து போக அனுமதிக்கறோம்னு தலைவர் சொல்றாரு.” என்றான்.
சில நொடிகள் யோசித்தவன்,
“சரி என்ன செய்யணும்னு சொல்லுங்க. என்னால முடிஞ்சா நான் செய்யறேன். என்ன சாபம்? எப்படி வந்தது எல்லாம் சொல்லுங்க“
“அதுக்கு நீங்க இன்னும் ஒரு நாள் பொறுக்கணும். இன்னிக்கு இரவு இங்கேயே தங்குங்க.. எல்லாத்தையும் நான் விளக்கமா சொல்றேன்.” என்றான்.
கூட்டமும் கலைந்து செல்ல, அவர்களுக்கு சாப்பிட சிலவற்றை கொண்டு வந்து கொடுத்தார்கள். ஜானவி அவனை நன்றியுடன் பார்த்தாள். தனக்காக அவன் செய்ததை எண்ணி பூரித்தாள். தன்னை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். ஆனாலும் தனக்காக அவன் அவர்களிடம் தைரியமாகப் பேசியது அவன் மேல் ஒரு ஈர்ப்பைக் கொடுத்தது.
அவனுக்கு நன்றி சொல்ல அவனிடம் நெருங்கும்முன், மற்ற காட்டுவாசிகள் வந்துவிட, அவர்களுடன் அவன் சென்றான். ஜானவி அவனுக்கு நன்றி சொல்ல காத்திருந்தாள்.
ஒரு குடிசையை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்க, அங்கே அவர்களது உடமைகளை வைத்துவிட்டு நிதானமாக அமர்ந்து உண்டனர். அங்கிருந்த பெண்கள் சிலரும் ஆண்கள் சிலரும் அவர்களுக்கு உணவு கொடுக்க,
அது புதுவிதமாக இருந்தாலும், பசியில் எதுவும் தெரியாமல் போக, அதிகமாகவே உண்டாள் ஜானவி. விஜய் எப்போதும் போல அளவு மாறாமல் உண்டான்.
அதை அங்கிருந்தவர்கள் கவனிக்கத் தவறவில்லை. அவனது நேர்த்தியும், பழக்கமும் அவர்களைக் கவர்ந்தது.
உண்டு முடித்ததும், அவனிடம் விஷயத்தைக் கூறினான்.
“ஐயா, எங்க குலம் மிகவும் பழமையானது. எங்க தெய்வம் இந்த நதில இருந்து தோன்றும். முழுக்க முழுக்க அபரஞ்சி தங்கத்தால எங்க தெய்வம் இருக்கும். அதுமட்டும் இல்லாம எங்களுக்கு தங்கம் தண்ணி பட்ட பாடு. அதாவது எங்க நதில தங்கம் கிடைக்கும்.எங்க பாறைகள்ல தங்கம் கிடைக்கும். மண்ணுக்குள்ள தோண்டினா தங்கம் கிடைக்கும். அப்படி பட்ட எங்க கூட்டத்துல இருந்து ஒருத்தன் நகர வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு கொஞ்சம் தங்கத்த எடுத்துட்டு இந்த இடத்தை விட்டு வெளியூர் போனான்.
போன அவன் திரும்பி வரப்ப நாலஞ்சு வெளி ஆளுங்கள கூட்டிட்டு வந்தான். அவங்க எங்க கிட்ட இருந்த தங்கம் பத்தி தெரிஞ்சு அதை களவாட வந்தவங்க. எங்க ஆளுங்கள அத்தனை சுலபமா தாக்க முடியாது. வந்த நாலஞ்சு பேரோட திட்டம் தெரிஞ்சு நாங்க அவங்கள அடிக்க, அதுல ரெண்டு பெர் மட்டும் இங்க இருந்த நாட்கள்ல சுருட்டுன தங்கத்தை எடுத்துட்டு தப்பிச்சுட்டாங்க.
அதன் பிறகு அவங்க போய் கூட்டம் கூட்டமா ஆளுங்கள கூட்டிட்டு வந்து அங்க இருக்கற தங்கத்த எடுக்க முயல, எங்க தெய்வம் எல்லா தங்கத்தையும் தனக்குள்ள ஈர்த்துகிட்டு இங்க சுத்தி இருக்கற மலைக்குள்ள போயிட்டதா சொல்வாங்க.
இதுக்கெல்லாம் காரணமா இருந்தவன் இந்த நதில விழுந்து உயிரை விட்டுட்டான். அப்போ எங்க குல முன்னோர்கள் எங்க தெய்வம் ரொம்ப கோவமா இருக்கறதா சொன்னங்க. அதை சாந்தி படுத்தினா தான் எங்க குலம் நல்லா இருக்கும்.
ஆனா இது நடந்து ஒரு இருநூறு வருஷம் இருக்கும். இப்ப வரைக்கும் எங்க தெய்வம் சாந்தி ஆகல. அப்படி ஆனா தான் அது எங்க கைல வந்து சேரும்னு நம்பிக்கை.
அது வெளிய வர நீங்க தான் உதவனும்.” சுருக்கமாக அவர்களின் கதையைக் கூறி முடித்தான் அந்தக் காட்டு வாசி.