kv-21
kv-21
21
“உங்களுக்கு அந்தத் தகுதி வர முதல்ல உங்களை பல சோதனைகளுக்கு உள்ளக்குவோம். அதுக்கு உங்க மனதை நீங்க பக்குவப் படுத்திக்கணும். எங்க கிட்ட இருக்கற தங்கத்தை எல்லாம் ஒன்னு சேர்த்து ஒரு மூட்டை கட்டி அதை உங்க கூட ஒரு படகுல ஏத்தி விட்டுடுவோம்.
இந்த நதியை முழுசா நீங்க சுத்தி வரணும். ரெண்டு நாள் ஆகும் இல்ல மூணு நாள் கூட ஆகும். அந்தப் படகே உங்கள மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும். அப்படி நீங்க உயிரோட வந்து உங்க கூட இருந்த மூட்டைல இருந்த தங்கம் எல்லாம் ஒன்னு சேர்ந்து எங்களோட தெய்வமா உருவாகி வந்திருந்தா அப்பறம் நீங்க தான் எங்க தெய்வத்தை திருப்பிக் கொண்டு வந்த மகான்.
ஒரு வேளை அது வெறும் தங்கமாவே, நாங்க கொடுத்தது போலவே திரும்ப வந்தா, அந்தத் தகுதி உங்களுக்கு இல்லன்னு தெளிவாகிடும்.
அந்த ரெண்டு நாளும் நீங்க சோறு இல்லாமத் தான் இருக்கணும். அந்த நதி நீரை குடிச்சுக்கலாம்.” பய பக்தியுடன் சொல்லி முடித்தான் அந்தக் காட்டுவாசி.
“அது எப்படி அந்தத் தங்கம் உங்க தெய்வமா மாறும்?” புருவம் சுருங்க யோசித்த படி அவன் கேட்க,
“அது … ஒரு ரகசியம்.. உங்களுக்கே போகும் போது புரியும்” என்றவன் அதைக் கூறவில்லை.
அனைத்தையும் கேட்ட பிறகு, விஜய் சிறிது நேரம் யோசித்துவிட்டு “சரி நான் தயாரா இருக்கேன். எப்போ கிளம்பனும்” தீர்கமாகக் கூறினான்.
உடனே அந்தக் காட்டுவாசி ஓடிச்சென்று அவர்களின் தலைவரிடம் விஷயத்தைக் கூற விரைந்தான்.
அவனது இந்த முடிவைக் கண்ட ஜானவி சற்று கோபம் கொண்டாள். அவனிடம் சென்று ,
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நாம வந்த வேலைய விட்டுட்டு நீங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?” குரலில் காட்டம் தெரிந்தது.
“ உனக்கு இதுக்கு நான் பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை. இருந்தாலும் சொல்றேன். இன்னொரு தடவ என்னோட முடிவுகள்ல தலையிடாத. நாம ஒரு காரியம் செய்யக் கிளம்பும் போது, வழியில வர விஷயங்களுக்கு கண்டிப்பா முக்கியத்துவம் கொடுக்கணும். அதுவே நம்ம வேலைகளை சுலபமாக்கலாம். காட் இட்?” அவளுக்குக் குறையாத கோபம் அவனிடமும் தெரிய, அவள் சற்று சாந்தப் பட்டாள். ஏனெனில் விஜயின் கூற்றில் ஒரு அர்த்தம் இருந்ததை உணர்ந்தாள்.
“அப்பறம்… அந்த விலங்கு கிட்ட இருந்து நீங்க என்னை காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ்” என அவன் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு கூற, அதைக் கேட்க அவன் அங்கே இல்லை. வெளியே சென்றிருந்தான்.
“ப்ச்…” உச்சுக் கொட்டிக் கொண்டு தானும் வெளியே வர, அங்கே அந்த கூட்டத்தின் தலைவர் வந்து கொண்டிருந்தார்.
விஜய் அவரைப் பார்க்க, அவரோ நேரே வந்து விஜயின் காலில் விழுந்தார்.
உடனே அவரைத் தாங்கிப் பிடித்து நிறுத்தியவன்,
“என்னங்க இது நான் சின்னவன், என் காலுல ஏன் விழறீங்க.. என்னால முடிஞ்ச உதவிய நான் செய்யறேன். அவ்வளோ தான்.” என்றதும், அதை மொழிப்பெயர்த்துக் கூறினான் கூட இருந்தவன்.
இதைக் கண்ட ஜானவிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. விஜய் எப்படியும் அவர்களுக்கு உதவுவான். அதை வைத்து அவனை இவர்களுக்கு ஒரு நாள் அரசனாக ஆக்கும் படி கேட்டால் என்ன…என்று தோன்றியது. அது தானே அந்த வாசகத்திலும் இருந்தது. ‘காட்டின் அரசனாக வா‘ என்பதை நினைவில் வைத்திருந்தாள்.
ஆனால் இப்போது அதைக் கேட்பது நன்றாக இருக்காது. விஜய் சென்று வந்த பிறகு கேட்பது தான் கௌரவமாக இருக்கும் என நடப்பதை கவனிக்கலானாள்.
விஜய்க்கு அப்போதே சில சடங்குகள் செய்யத் துவங்கினர். அவனை முதலில் அந்த நதியில் நீராட வைத்து, அவர்களின் வழக்கப்படி புதியதாக செய்த புலித் தோல் ஆடையினை கொடுத்து அணிய வைத்தனர்.
விஜய் அதை அவனது தெய்வமான பத்மநாபசுவாமியை நினைத்துக் கொண்டு பெற்றுக் கொண்டான். இவர்களின் கோரிக்கையை எப்படியும் அவன் நிறைவேற்றிக் கொடுக்க அவன் துணையை வேண்டினான்.
இடையில் இருந்து முழங்கால் வரை துண்டு போல அந்தப் புலித் தோலைக் சுற்றிக் கட்டி இருந்தான்.
அத்தோடு, மேலே அங்கவஸ்திரம் போல் ஒன்றையும் அதே புலித் தோலில் கொடுக்க, அதையும் தோளில் இருந்து குறுக்காகக் கட்டிக் கொண்டான். அந்த உடையிலும் அவனது மிடுக்கும் கம்பீரமும் குறையவில்லை.
அவன் தங்களின் குலதெய்வத்தைத் தேடித் போவதை அங்கிருந்த அனைவர்க்கும் தெரிவித்தான் ஒருவன்.
உடனே பத்து நிமிடத்தில் மீண்டும் ஊர் கூட, விஜய்யை ஒரு பலகையின் மீது அமரவைத்து அவனுக்கு பெரிய காட்டுப் பூக்களால் ஆன மாலை ஒன்றை அணிவித்தான் அந்த அரசன்.
நெற்றியில் திலகமிட்டு அவனுக்கு முன் ஐந்தாறு பழங்களை வைத்து அவனை உண்ணச் சொல்ல,
“இல்ல, எனக்கு இப்ப வேண்டாம்.” என மறுத்தான்.
“சரிங்க, ஆனா இன்னிக்கு இரவு தான் நீங்க சாப்பிட முடியும். இதை விட்டா நீங்க திரும்பி வரப்ப தான் விருந்து. அதுனால இந்த வைபவம் முடியறப்ப சாபிட்டுடுங்க..” தமிழில் பேசிய காட்டுவாசி கூறினான்.
சரியென தலையசைத்தவன், அடுத்து அவனை வைத்து நடத்திய அந்த சடங்கை ஆச்சரியமாகப் பார்த்தான். அவனையே ஒரு தெய்வம் போல நினைத்து அவர்கள் பாட்டுபாடியும், பூக்கள் தூவியும் அவனை வாழ்த்தினர்.
ஜானவிக்கு இதெல்லாம் பார்க்க வியப்பாக இருந்தது.
கடைசியாக அவர்கள் எதிர்ப்பாராத ஒன்றாக, ஜானவியை அழைத்து அவனுக்கு மாலையிடச் சொன்னார்கள்.
விஜய் , ஜானவி இருவருமே அதிர்ந்து விழிக்க, அப்போது தான் புரிந்தது, இருவரையும் அவர்கள் கணவன் மனைவியாக நினைத்துக் கொண்டிருப்பது.
விஜய் எதுவும் சொல்வதற்கு முன்னமே , ஜானவியை மாலையைப் போடும்படி அங்கிருந்த பெண்கள் வற்புறுத்த, அவள் எவ்வளவோ சொல்லியும், அவர்கள் கேட்காமல் அவளை இழுத்து வந்திருந்தார்கள்.
அவர்களின் கூச்சலில் அவளின் பேச்சு எதுவும் எடுபடவில்லை. அவள் அருகில் மாலையுடன் இருப்பதைப் பார்த்த விஜய் கோபத்தில் கண்கள் சிவக்க அவளைப் பார்க்க, அவளும் ‘இவங்க சொன்னா கேட்கல‘ என கண்களால் அவனுக்கு உணர்த்த, இருவரும் பார்வையில் இருந்த நேரம்,
அந்தப் பெண்கள் அவள் கையை எடுத்து அவனுக்கு மாலையை போட வைத்து விட்டனர்.
பற்களைக் கடித்துக் கொண்டு அவன் அமர்ந்திருந்தான். அவளும் நடந்த நிகழ்வில் இருந்து தெளியாமல் அங்கிருந்து அவனைப் பார்க்க, மீண்டும் அவளை அவன் அருகில் இழுத்து வந்து அமர வைத்தனர்.
‘இது என்ன‘ என இருவரும் விழிக்க, குங்குமம் மஞ்சள் இரண்டையும் கொண்டு வந்து கொடுத்து விஜய்யை அவளுக்கு திலகமிடச் சொல்லினர் அந்தப் பெண்கள்.
இது பெண்கள் செய்யும் சடங்கு என்பதால், விஜயுடன் இருந்த காட்டுவாசி சற்று தள்ளி நின்று கொள்ள, விஜய் அவனை அழைத்தும் பலனில்லமல் போனது.
அவன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் அந்தப் பெண்கள் கலாட்டாவாக சிரிக்க, மேலும் எரிச்சலுற்றான்.
“நீ என் பொண்டாட்டி இல்லன்னு சொல்ல வேண்டியது தான..” அவளிடம் உறும,
“உங்களால மட்டும் சொல்ல முடிஞ்சுதா.. என்னை மட்டும் கேட்கறீங்க” பதிலுக்கு அவளும் அடிக்குரலில் பதில் சொல்ல,
“எனக்கு உனக்கு பொட்டு வைக்கப் பிடிக்கல.” என்றான்.
“எனக்கு மட்டும் ரொம்ப குளுகுளுன்னு இருக்கோ.. நீங்க வைக்கலனா அவங்க விடமாட்டாங்க… கோயில்ல பூசாரி வைக்கறதா நெனச்சுகறேன். வச்சுடுங்க. அட்லீஸ்ட் உங்க பக்கத்துல இருந்து எழுந்தாச்சும் போகலாம்.” சலித்துக் கொண்டு அவள் கூற,
‘நான் உனக்கு கோயில் பூசாரியா?’ என அதற்கும் உள்ளுக்குள் பொங்கியவன், அவளை தன் அருகில் இருத்திக் கொள்ள விரும்பாமல், பேருக்கு அவள் நெற்றியில் பட்டும் படாமல் பொட்டிட்டு திரும்பிக் கொள்ள,
ஜானவி எழ நினைத்தாள். ‘இன்னும் சடங்கு இருக்கு‘ என அவளை தோளைப் பிடித்து அமர வைத்து இருவரது வலது கையையும் பிடித்து சேர்த்து ஒரு நூலைக் கொண்டு சுற்றி அதில் பூக்கள் தூவ,
அவன் கையில் தன் கை இருப்பதால் ஒருவித இன்ப அவஸ்தை அவளுக்குள் எழவே செய்தது. விஜய்க்கு அவளது கையின் மென்மை அவனுக்குள் இருந்த கோபத்தை சற்று குறைப்பது போல இருந்தது.
இருவருமே ‘இது என்ன புது உணர்வு‘ என்று பார்க்க, இருவரின் கண்களும் ஒரு நொடி சந்தித்துக் கொண்டது. அவன் பார்வை இந்த உலகத்தில் அவளை மட்டும் தாங்கி இருந்தது. அவளது கண்களோ அவனை மட்டும் நிறைத்து அவனுக்குக் காட்டியது.
உடனே இருவரும் வேறு புறம் திரும்பிக் கொள்ள, ஜானவிக்கு முதன் முதாலாக நாணம் என்ற புது தோழி அறிமுகமானது. அவளையும் மீறி காதலுக்கான முதல் துளி அவள் மனதில் விழுந்தது.
பிறகு அந்தக் நூலை எடுத்து அவள் கையில் கொடுத்து, அவர்கள் எதுவோ சொல்ல, இருவரும் புரியாமல் நின்றனர்.
அப்போது வந்த காட்டுவாசி, “இவர் திரும்பி வர வரைக்கும் இந்த நூலை நீங்க கழுத்துல கட்டி இருக்கணும். அப்போ அவர் உங்க கூடவே இருக்கறதா அர்த்தம்.” என விளக்கம் சொல்ல
ஏனோ அதற்கு மறுப்பின்றி அவள் உடனே கழுத்தில் கட்டிக் கொள்ள , விஜய் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
‘இப்ப மட்டும் எதுக்கு இதை செய்யறா…கேட்டா பூசாரி அது இதுன்னு எதாவது சொல்லுவா‘ என அவன் மனம் கூறிவிட அடுத்து நடக்கவேண்டியதைக் கவனித்தான்.
ஒரு துணியை கீழே விரித்து வைத்தான் அந்தக் காட்டுவாசி, பின் ஒவ்வொருவராக வந்து அவர்களிடம் இருந்த அனைத்துத் தங்கத்தையும் கொண்டு வந்து அதில் போட்டனர். பின் அதில் மஞ்சள் குங்குமம் இட்டு ஒரு மூட்டையாகக் கட்டி அதற்கு தீபம் ஏற்றிக் காட்டி, பின் விஜயிடம் பக்தியோடு ஒப்படைத்தனர்.
“நீங்க திரும்பி வரப்ப எங்க தெய்வத்தை கொண்டுவாங்க.” என அந்தத் தலைவன் கண்ணீருடன் அவனிடம் கூறிச் சென்றான்.
பிறகு விஜய் செல்ல படகு , கூடவே ஒரு அணையா தீபம் என அவனுக்காக ஏற்பாடு செய்தனர்.
கடைசியாக விஜய் அந்தப் பழங்களை உண்ட பிறகு அவனை அந்தப் படகில் ஏற்றி அமர வைத்தனர். நேரம் அப்போதே நள்ளிரவு ஆகி இருந்தது.
மேளம் தாளம் முழங்க அவனை எல்லோரும் வணகி அந்தப் படகில் ஏரிக் கொள்ளச் சொல்ல, விஜய் கண்கள் ஜானவியை ஒரு முறைப் பார்க்க அவளுக்குள் ஒரு மின்னல் வர, ஏனென்று தெரியாமல் அவன் அருகில் ஓடினாள். அவன் அழைத்தது போன்ற பிரம்மை!
அவனும் அவளை அழைக்கத் தான் நினைத்தான். ஆனால் அழைக்கவில்லை. இருந்தும் அவள் வந்திருந்தாள். அவனைப் பார்த்து பூசாரி என்றது மீண்டும் நினைவில் வர,
“என்னோட திங்க்ஸ் எல்லாம் பத்திரம்.” என்று மட்டும் கூறி அனுப்பினான்.
ஜானவிக்கு ஏனோ சப்பென்று இருந்தது. ‘கிளம்பறேன்னு கூட சொல்ல மனசில்ல.. இவன் திங்க்ஸ நான் பாத்துக்கணுமா‘ என மனம் முரண்டாலும் ஏனோ அவன் தனியாக அந்த ஆற்றில் இரண்டு நாள் சுற்றி வரப் போவதை நினைத்து வறுத்தம் மூண்டது.
அனைவரும் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி வைக்க, விஜயின் பயணம் தொடர்ந்தது.
இருள் சூழ்ந்த அந்த இரவில் நத்யின் நடுவில் சில்லென்ற அந்த காற்று அவன் உடலைக் கிழித்தது. கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அந்தக் குளிரை அடக்க முயற்சி செய்தான்.
அந்தப் படகில் அவன் தனியாகக் துடுப்புப் போட அவசியமே இல்லாமல் அதுவே ஒரு பாதையில் அவனை அழைத்துச் சென்றது. இன்னும் இரண்டு நாட்கள் மனித வாடையே இல்லாமல் அவன் இருக்க வேண்டும்.
பெரிய மலைகள் அதைச் சுற்றி இருந்த இந்த நதி அவனின் வாழ்வில் அடுத்தக் கட்டத்தை அவனுக்குச் சொன்னது. இனி அவன் வாழ்வு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றி அவனை சிந்திக்க வைத்தது.
அன்றைய நிகழ்வை நினைக்கையில் அவனுக்கு ஆச்சரியம் தான் மிகுந்து இருந்தது. எங்கிருந்தோ வந்தான். இதோ இப்போது இந்த மக்களுக்காக யாரும் இல்லாத இந்த நதிப் பயணத்தை மேற்கொண்டு அவர்கள் தெய்வைத்தை மீட்கப் போய்க் கொண்டிருக்கிறான்.
அடுத்த நொடி எதுவேண்டுமானாலும் நாடக்கும் என்பதற்கு இதுவே சான்று எனத் தோன்றியது.
பிடிக்கவே பிடிக்காத ஒருத்தி! அவளை இன்று மனைவியாக இவர்கள் வரித்து செய்த சடங்கை ஏனோ அவனால் உதற முடியவில்லை. அத்தனை லேசில் அதைக் கடக்க முடியாமல் இருந்தான். விளையாட்டுக்குக் கூட அவன் நினைக்காத ஒன்று அது!
‘என் தந்தையைக் கொன்றவளா எனக்கு மனைவி… நோ நோ.. “ அவன் மனது சொன்னாலும் ஒரு புறம் அவனையும் தாண்டி ஒரு ஓரத்தில் இனித்தது போல் இருக்க , தலையச் சிலுப்பி வேறு சிந்தனைக்கு மாறினான்.
அந்த அமைதியான நதியில் நீல நிறத்தில் ஏதோ மின்னி மின்னி மறைந்தது.! அதைக் கண்டு அவன் ஆச்சரியப் பட, அது என்னவென்று ஆராய நினைத்தான்.