kv-5

kv-5

                                                                                                                5

அப்பண்ணா அன்று ஆனந்துவிற்கு மருந்து அரைக்க உதவிக் கொண்டிருந்தான். ஆனால் அப்பண்ணாவிற்கு நன்றாகத் தெரிந்தது அவனுடைய குரு அன்று வேறு சிந்தனையில் இருக்கிறார் என்று.

நீண்ட நேரம் பொறுத்துப் பார்த்தும் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. மருந்தை அரைத்துவிட்டு அவரிடம் வந்தான்.

எதாவது மருந்து குடுத்துவிட மறந்துட்டீங்களா ஐயா?” காதை சொரிந்த படி அவரின் முன் நின்றான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவர், “இல்லையே ஏன்?” யோசனையாகக் கேட்டார்.

காலையில் இருந்து ஒரு மாதிரி சிந்தனையில் இருக்கீங்க. அதனால கேக்கறேன்.”

இல்லபா. நாளைக்கு என் நண்பனோட மகன் இங்க வரான். அவனுக்கு நான் உதவனும். அது எனக்கு இருக்கற கடமை. என் நண்பன் எனக்காக நிறையா செஞ்சிருக்கான். அவனுக்காக அவன் மகனுக்கு நான் திருப்பி செய்யனும்.” சிந்தனை வயப்பட்டார்.

நான் எதாவது உங்களுக்கு உதவ முடியும்னா சொல்லுங்க. கண்டிப்பா செய்யறேன்.” குருவின் மேல் உள்ள மரியாதையால் கேட்டான்.

ஒரு பத்து நாளைக்கு இந்த வேலை எல்லாம் நீயே பாத்துக்கோ. யார் யாருக்கு மருந்து குடுக்கணுமோ நீயே குடு. எல்லாம் இங்க தயாரா தான் இருக்கு. ரொம்ப முக்கியமான விஷயம் இல்லனா என்னைத் தொல்லை செய்யாதே. அவன் ஊருக்கு கிளம்புன பிறகு நான் இதுல கவனம் செலுத்தறேன்.” அவனிடம் பொறுப்பைக் கொடுத்தார்.

கண்டிப்பா செய்யறேங்க. இது கூட நான் பண்ண மாட்டேனா..” அப்பண்ணா சம்மதித்தான்.

ஒரு வேலை முடிந்தது என்று அனந்து நினைக்க, இனி தான் உனக்கு வேலை தலைக்கு மேல் ஏற்றப் போகிறேன் என்று விதி நினைத்தது.

நான் இன்னிக்கு ராத்திரி காட்டுகுள்ள போகணும். எனக்கு சில பொருட்கள் மட்டும் வாங்கிட்டு வந்து தந்துட்டு நீ கெளம்பு அப்பண்ணா.” என்றார்.

அவனும் மறுபேச்சின்றி ஒத்துக்கொண்டான். அவர் காட்டுக்குள் போவது அவனுக்குப் புதிதல்ல. அவர் மட்டுமே அதக் காட்டுக்கு பயமின்றி சென்று வருவார்.

அவன் காரணம் கேட்டதில்லை. ஆனால் அவர் தன்னுடைய தெய்வத்தை அங்கு தான் காண முடியும் என்பார்.

அனந்து கேட்டபடி அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு , “ஐயா என்னோட சைக்கிள வேணும்னா விட்டுட்டு போகட்டுமா? உங்களுக்குத் தேவைப்படுமா?” அக்கறையாக் கேட்க,

இல்ல அப்பண்ணா. நான் நடந்தே போய்டுவேன். நீ எடுத்துட்டுப் போஎன்றுவிட்டார்.

அவனும் சென்றுவிட , அவன் வாங்கி வந்த பொருட்களை ஒரு பையில் போட்டுக் கொண்டு , ஒரு தூக்கில் பழைய சாதமும், பச்சை மிளகாயும் சிறு வெங்காயமும் எடுத்துக் கொண்டார். அவருடைய தோட்டத்தில் வைத்திருந்த துளசி செடியில் இருந்து சில இளைகைப் பறித்துக் கொண்டார். மாலை ஆறுமணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினார்.

இரு கைகளிலும் பையை எடுத்துக் கொண்டு நடந்தார். ஊரில் ஓரளவு ஜன நடமாட்டம் குறைந்திருந்தது. அதுவும் காட்டுப் பாக்கம் நிச்சயம் யாரும் வரமாட்டார்கள்.

விறுவிறுவென நடந்தவர் இருபது நிமிடத்தில் ஊர் எல்லையில் இருந்தார். மனதிற்குள் பத்மநாபனை வேண்டிக்கொண்டு காட்டிற்குள் அடி எடுத்து வைத்தார்.

சிறிது தூரம் நடக்க ஆரம்பித்த போதே அவருக்குள் குளிர் பரவ ஆரம்பித்தது. காடு கும் இருட்டாக இருக்க, அப்பண்ணா கொடுத்த பொருட்களில் ஒரு சீமெண்ணெய் விளக்கும் இருந்தது. அதை ஏற்றிக் கொண்டார்.

அவர் நடக்க நடக்க கூடவே ஒருவர் நடந்து வருவது போன்று உணர்ந்தார். போன முறை பூஜை செய்த இடத்திற்கே இம்முறையும் சென்றார். பொருட்களை அழகாக ஒரு வாழை இலையில் வரிசைப் படுத்தி வைத்தார். பக்கத்தில் பழைய சோற்றையும் , தொட்டுக்கொள்ள மிளகாயும் சிறு வெங்காயமும் வைத்தவர் ஒரு சிறு தீபத்தையும் ஏற்றி அதற்கு முன் அமர்ந்தார்.

முதலில் அவரது குல தெய்வத்தை வேண்டியவர், பின் கண்ணை மூடி தான் தனியே விட்டு வந்த பத்மநாபனை கண்ணுள் கொண்டு வர முயற்சித்தார்.

நீண்ட பதினெட்டு அடியில் படுத்துக் கொண்டிருந்த பெருமாள் கண்களுக்குள் தெரிய ஆரம்பித்தார். உடலெங்கும் புல்லரித்தது.

உன்னை விட்டு வந்ததில் இருந்து இந்தக் காட்டில் தான் மீண்டும் உன்னை காண வரம் கிடைத்தது. வா, வந்து சாப்பிடு.” கையில் இருந்த துளசிய அற்பனித்து உரிமையாக அழைத்தார்.

அழைத்துக் கொண்டே இருந்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, கழுகு சத்தம் கேட்டது. அதன் பின் காலடி சத்தம் கேட்டது. பக்கத்தில் ஒருவர் அமர்ந்து மூச்சு விடும் உணர்வு ஏற்பட ஆரம்பித்தது.

அனந்துவிற்கு அந்த வெட்டவெளியில் வியர்த்துக் கொட்டியது. உடலெங்கும் நடுக்கம்.

என்ன ஆனாலும் கண்ணை மட்டும் அவர் திறக்காமல் இருந்தார்.

பழைய சோறும் சின்ன வெங்காயமும் கூடவே மிளகாயும் உனக்கு விருப்பம்னு எனக்குத் தெரியும்.” அனந்து சொல்ல , தூக்கில் இருந்த பழைய சோற்றை உறிஞ்சும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

சிரித்த அனந்து, “ரொம்ப நாள் ஆச்சு நான் ஆன்மா கிட்ட பேசி, நாளைக்கு நான் நண்பனோட பேசணும். என்னுடைய ஆழ் மனசுல பொதிஞ்சு கிடக்கற என்னோட சக்திகள திரும்பவும் கொண்டு வரணும். அதுக்கு எனக்கு தைரியம் வேணும். அதை மட்டும் எனக்கு கூடவே இருந்து நீ தான் குடுக்கணும்.” கண்களில் கண்ணீருடன் குலுங்கியபடி வாய்விட்டு பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் மூச்சுவிடும் சத்தம் மட்டும் கேட்க, அது சம்மதமாக எடுத்துக் கொண்டு அனந்து வணங்கினார். மீண்டும் கழுகின் சத்தம் கேட்க, மெல்ல அவரது கண்களைத் திறந்தார்.

 

அற்பனித்த துளசி அங்கு இல்லை. ‘நிச்சயம் என் பத்மநாபன் அதை ஏற்றுக் கொண்டான்’, பூரிப்பு அவருக்குள் ஏற்பட நள்ளிரவைக் கடந்த அந்த நேரத்தில் எழுந்து வீட்டிற்கு நடந்தார்.

எல்லோருக்கும் அந்தக் காட்டில் கேட்கும் பேச்சு சத்தம் அவர் காதுகளையும் துளைத்தது.

அனைத்தையும் கேட்டபடி நடந்து கொண்டிருக்க, அவருக்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டது.

அதைக் கவனமாகக் கேட்டுத் தலையசைத்தார்.

விதி யாரை விட்டு வைக்கும். நானும் அதனுடைய கருவியே!” சிரித்து விட்டு வீடு வந்து சேர்ந்தார்.

அதிகாலை எழுந்து குளித்த விஜய் , தன் பையை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான். தந்தையை நினைத்து இரண்டு நிமிடம் தயங்கியவன்,

உங்களுக்கு என்ன ஆச்சு, யார் இதுக்குப் பின்னாடி இருக்காங்க இதையெல்லாம் நான் கண்டுபிடிக்காம இங்கிருந்து போக மாட்டேன் அப்பாஅவருடைய படத்தின் முன் நின்று பேசியவன், தெளிந்த முகத்துடன், அரவிந்துக்கு போன் செய்தான்.

இவன் பேச ஆரம்பிக்கும் முன்னமே, “அண்ணா, வந்துட்டே இருக்கேன். நீங்க வீட்டை பூட்டிட்டு வெளிய வாங்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்.” பேசி முடித்தான்.

ஓகேஎன விரைந்தவன் தந்தையின் படத்தின் முன்பு ஒரு விளக்கை மட்டும் எரியவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

கிருஷ்ணமாச்சாரி ஜானவியின் சொல்படி அவனைப் போகவிடாமல் தடுக்க முயற்சிகள் செய்வதாக அவளிடம் கூறினார்.

ஆனால் ஏனோ அவனைப் போகவிட்டு வேடிக்கை பார்த்தார். ‘புலிய கூண்டுக்குள்ள விட்டுட்டு வெளிய நின்னு அதை மிரட்டுறது வீரமா? நான் நேருக்கு நேர் சந்திக்கிற அளவு துணிவு இருக்கறவன். புலி வெளிய வரட்டும். அப்பறம் நான் யாருன்னு காட்றேன்.’ அந்த அதிகாலை வேளையில் மயானத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தார்.

முதல் நாள் இரவு முழுதும் அவர் தேடி எடுத்த இரண்டு மண்டை ஓடுகளை தன்னுடைய கருப்பு துணியில் செய்த பையில் போட்டுக் கொண்டு நடந்தார். தனது சக்திகளை அவர் மேலும் ஏற்றிக் கொண்டே போக அவர் கையாண்ட யுக்தி.

சூரியன் வரும் முன்பு அதை எடுத்துச் சென்றவர், அதை ஒரு குட்டையில் வைத்துக் கழுவினார். நன்றாக துடைத்து அதை மீண்டும் தனித்தனி துணியில் சுற்றி பையில் வைத்துக் கொண்டு தன் இருப்பிடம் சென்றார்.

விஜய் காரில் தன் உடமைகளை வைத்தவன், அரவிந்தை பக்கவாட்டில் உட்காரச் சொல்லிவிட்டு அவனே வண்டியை எடுத்தான்.

மணி இப்ப நாலு. பத்து மணிக்கெல்லாம் அங்க போய்டலாம்.” என்றான் அர்விந்த்.

அதுக்கு முன்னாடியே போய்டலாம்.” இறுக்கமாக இருந்த தன் முகத்தை அவனிடம் காட்டாமல் இருக்க முயன்றான். வண்டியை எடுத்த சில நிமிடத்தில் ஊரைக் கடந்தான். அப்போது அவன் கண்ணில் மீண்டும் கிருஷ்ணமாச்சாரி பட்டார்.

அர்விந்த் அங்க பாரு. அவர் தான் நான் அன்னிக்கு பாத்தேன். அந்த சாமியார் என வண்டியை மெதுவாக செலுத்தியபடி அவனிடம் காட்ட, அர்விந்த் உடனே குனிந்து கொண்டு தான் இருப்பதை மறைத்துக் கொண்டான்.

அண்ணா, சீக்கிரம் போங்க. அவர் கண்ணுல நான் படக் கூடாது.” பயந்தபடி அவன் கூற,

கிருஷ்ணமாச்சாரியும் அதே சமயம் விஜய் வண்டியில் செல்வதைப் பார்த்தார்.

ஏன்? யார் அவரு.. அன்னிக்கு உன் கண்ணுல படல. இன்னிக்கு தெரியறாரா?”

அவரு நினச்சா எப்படி வேணா வருவாரு. ரொம்ப டேஞ்சரான ஆளு. பாருங்க சுடுகாட்டுலேந்து வெளிய போறாரு. எவன் மண்டைய உருட்டப் போறாரோ. சீக்கிரம் போங்க ணா..” விட்டால் அழுதுவிடுவான் போல.

சற்று யோசித்தவன் , வேகமாக வண்டியைச் செலுத்தினான்.

அதன் பிறகு ஒரு பத்து நிமிடம் அப்படியே இருந்தவன், பின் மெல்ல தலையைத் தூக்கி நிமிரிந்து அமர்ந்தான். ஊரைத் தாடி வெகு தூரம் வந்துவிட்டோம் என்பதை உறுதி செய்த பிறகு தான் அவனுக்கு மூச்சே வந்தது.

காரை ஒரு ஓரமாக நிறுத்திய விஜய், “என்ன பிரச்சனையை, அவர் யாருன்னு முதல்ல சொல்லு. அன்னைக்கு உன் கண்ணுக்குத் தெரியல , என் கண்ணுக்குத் தெரிஞ்சாரு. ஆனா இப்ப அவர பாத்து நீ ஒளியற. எனக்கு நீ இப்ப உண்மைய சொல்லியே ஆகணும்.” முறைத்துக் கொண்டே கேட்க,

உண்மைய சொல்லனும்னா, அவர் ஒரு பயங்கரமான மந்திரவாதி. அவருக்கு நின்னசது கிடைக்க எது வேணும்னாலும் செய்வாரு. சொல்லப் போனா அவரு எங்க தாத்தாவையே பலி வாங்கினவரு.” சொல்லும்போதே அவனுக்குத் தொண்டையை அடைத்தது.

உங்க தாத்தாவ ஏன் அவரு பலி வாங்கணும். உனக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?” புருவத்தை நெருக்கி விஜய் பார்க்க,

நீ வண்டி ஒட்டிட்டே கேளுங்க சொல்றேன்என்றவனை நம்பி வண்டியை எடுத்தான் விஜய்.

அவரும் எனக்கு ஒரு மாமா. சொந்த தாய் மாமா. பேரு கிருஷ்ணமாச்சாரி. இப்ப பார்க்க போறோமே அனந்து மாமா , அவரும் இவரும் ரெட்டைப் பிறவிங்க. இவங்களுக்கு அப்பறம் பொறந்தவங்க தான் என் அம்மா.

எங்க அம்மாக்கு ரெண்டு அண்ணன்களையும் ரொம்ப பிடிக்கும். எங்க தாத்தா ஒரு ஜோசியர். அதுமட்டும் இல்லாம, ஊர்ல இருக்கற எல்லாருக்கும் மந்திரிக்கறது, ஹோமம் செஞ்சு வைக்கறது, இப்படி நிறைய விஷயம் பண்ணிட்டு இருந்தாரு. ரெண்டு பசங்களுக்கும் முறையா தனக்குத் தெரிஞ்ச விஷயங்கள் அனைத்தும் சொல்லிக் கொடுத்தாரு.

எல்லாமே நல்ல விதமா தான் போயிட்டு இருந்தது. அப்ப ஒரு நாள் எங்க தாத்தா ரெண்டு மகன்களையும் தன்னை விட அதிகமா இந்த ஜோசியம் அதுக்கும் மேல இருக்கற பல விஷயங்கள் கத்துக்க அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட அனுப்பினார்.

ஆனா அங்க போறதுக்கு முன்னாடி ரெண்டு பேரையும் கூப்பிட்டு ஆசீர்வாதம் செஞ்சாரு. உங்களுக்கு உங்க மனம் போல எல்லாம் நடக்கும்னு.

அவரோட ஆசீர்வாதம் நல்லாவே பலிச்சது. இவருக்கு மனம் முழுசும் சுயநல எண்ணம் தான். தனக்கு மட்டுமே எல்லாம் கிடைக்கணும்னு நினச்சாரு. அவருக்கு அனந்து மாமா தன்னை விட பெரியாள் ஆகிடக் கூடாதுன்னு எண்ணம் இருந்துச்சு.

அவங்க ரெண்டு பேரையும் கேதர்நாத் அனுப்பி வெச்சாரு. அதுவும் பயங்கர குளிர் இருக்கும் காலத்துல.

அவங்க ரெண்டு பேரும் தாத்தா சொன்னவரை தேடிக் கண்டுபிடிச்சு போனப்ப அவங்க இருந்த இடம் ஒரு சிறு குடிசை. இவங்களுக்கு பக்கத்துல ஒரு சின்ன குடிசை ஏற்பாடு பண்ணிக் குடுத்தாரு.

அவரும் ரெண்டு பேருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க , கிரிஷ்ணனுக்கு ஏனோ அது அவ்வளவாக பிடிக்கவில்லை. எப்போதும் அடுத்தவர் நலனே முக்கியம் னு ஏடுகளையும் பாடங்களையும் சொல்ல வேண்டாவெறுப்பா கத்துகிட்டாரு. ஆனா அனந்து எல்லாத்தையும் முறையா கத்துக்க பாத்தாரு.

இதெல்லாம் எனக்குத் தெரியும், வேற எதாவது புதுசா சொல்லித் தாங்க என்று கிருஷ்ணன் அலட்சியத்தைக் காட்ட , சொல்லிகொடுப்பவருக்கு புரிந்தது, இவன் லாயக்கு இல்லை என.

அதனால் தான் முதலில் தெரிந்தவற்றையே போதனை செய்தார்.

பொறுமையா இருப்பா. அடுத்தது எல்லாம் மிக முக்கியமான பாடங்கள்.” என அவர் முடிக்கும் முன்னே,

அப்ப நான் அடுத்த பாடம் சொல்லித் தரும் போது வரேன்என எழுந்து சென்றுவிட்டார்.

அந்த ஊரின் அழகு அவரை அழைக்க, அதைக் காணச் சென்றார்.

உன் உடன்பிறந்தவனுக்கு போரும்மை இல்லை. அடுத்து நான் சொல்லித் தரப்போவது இந்த உலகத்தையே உன் வசப்படுத்தும் பாடங்கள். நம்ம உடலில் இருக்கும் அனைத்து உயிர் நாடிகளையும் இணைக்கும் ஏழு சக்கரங்களை கட்டிப்போடும் யோகத்தை உனக்கு மட்டும் சொல்லித் தருகிறேன். அவனுக்கு இனி நான் குரு இல்லை என்றார்.”

அவனுக்கு நல்ல எண்ணம் நான் புகட்டறேன். அவனுக்கும்…” என சொல்லவந்த அனந்துவை கை காட்டி நிறுத்தினார்.

அவனுக்கு இப்ப வேற குரு கிடைச்சாச்சு. நீ அவனுக்கு எதுவும் சொல்லித் தர வேண்டாம்.” என்றார்.

அப்போது தான் கிருஷ்ணன் சென்ற மலைப் பாதையின் ஒரு குகையில் ஒரு அகோரியைக் கண்டான்.

அவருக்கு முன் சில மண்டையோடுகள் இருக்க அங்கே அந்தரத்தில் ஒரு நெருப்பு உருண்டை சுழன்று கொண்டிருந்தது. அது அவர் சொன்னபடியெல்லாம் ஆடியது.

அதைக் கண்டு அந்த வித்தையைக் கற்க ஆசைப் பட்டார் கிருஷ்ணன்.

error: Content is protected !!