லவி சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வர, தன் தாய் கூறிய திருமண செய்தி கேட்டு கோபத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தாள்.
லவியின் தந்தை வீட்டில் இல்லை. சங்கர் ஹாலில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்க, லவியின் ஆர்ப்பாட்டத்தைச் சமாளிக்க முடியாமல் கல்யாணி நித்திலாவை அழைத்திருந்தார்.
நித்திலாவின் வருகைக்காகக் கல்யாணி வாசலைப் பார்க்க, “அம்மா… எல்லாரும் என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? என்னைக் கேட்ருக்கணும். கல்யாணத்தைப் பற்றி என்னிடம் கேட்டிருக்கணும். நான் தான் கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு சொல்லிருக்கேன்ல?” என்று படிகளில் நின்றபடி கோபமாகக் கத்திக் கொண்டிருந்தாள் லவி.
“லவி… இந்தப் பிடிவாதம் சரி இல்லை. நீ போற இடத்தில் சீரழிய போற.” என்று லவியின் ஆட்டத்தைச் சமாளிக்க முடியாமல், பொறுமை இழந்து சமையலறையிலிருந்து கோபமாகக் கூறினார் கல்யாணி. “அம்மா… நானும் இதைத் தான் சொல்றேன். ஒரு இடத்தில் போய்ச் சீரழிய நான் ஏன் கல்யாணம் செய்யணும்?” என்று இடக்காகக் கேட்டாள் லவி.
அப்பொழுது நித்திலா உள்ளே நுழைய, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் கவனத்தைப் பத்திரிகையில் நுழைத்துக் கொண்டான் சங்கர்.
“லவி… இப்ப எதுக்கு இப்படி ஸீன் போடுற? இது சின்ன வயசில் பேசினது தானே. உனக்குத் தெரியாததா?” என்று கேட்டாள் நித்திலா. “லூசா நீ? நான் பாட்டிலில் பால் குடிக்கும் பொது, இவங்க எனக்குச் சம்மந்தம் பேசினா நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?” என்று லவி நியாயம் பேச, சங்கரின் உதடுகள் வளைந்தது. சங்கர் தன் புன்னகையை யாரும் அறியா வண்ணம் மறைத்துக் கொண்டான்.
“நித்தி நான் ஏற்கனவே சொன்னது தான்? ஐ ஹேட் மேரேஜ்.” என்று படிகளிலிருந்து இறங்கியபடி அழுத்தமாகக் கூறினாள் லவி.
“அப்படி என்ன கல்யாணத்தின் மேல் வெறுப்பு?” என்று அவள் தாய் கல்யாணி கடுப்பாகக் கேட்க, “அம்மா… இதுக்கொரு சோக கதை சொல்ற அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. பிடிக்கலை… பிடிக்கலை… பிடிக்கலை… அவ்வுளவு தான்.” என்று லவி பிடிவாதமாகக் கூற, “சரி… நீ ஒரு நியாயமான காரணம் சொல்லு. நாங்க ஒத்துக்கறோம்.” என்று அவளை மடக்கினாள் நித்திலா.
ஒரு நொடி யோசித்த லவி, “ஒன்றில்லை… ஓராயிரம் காரணம் சொல்லுவேன்.” என்று கூற லவியின் தயார் அவளை அதிர்ச்சியாகப் பார்த்தார்.
“திருமணம் ஆண்களின் சுயநலம். அவங்க வசதிக்காகச் செய்யப்படுறது தான் திருமணம்.” என்று லவி அசட்டையாகக் கூற, “ஆஹான்!” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் நித்திலா.
“என்ன நித்தி கிண்டல் பண்றியா?” என்று லவி கோபமாகக் கேட்க, “தப்பு லவி. உன் எண்ணம் தப்பு. திருமணம் ஓர் கனவு. இப்படி நினைச்சா ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கை ஏமாற்றமா தான் முடியும்.” என்று நித்திலா கூற, லவி அவளைக் குழப்பமாகப் பார்த்தாள்.
“ஆண்கள், ஒரு பொண்ணு வருவா… நம்மைத் தாங்குவான்னு நினைச்சாலும் சரி… ஒரு பொண்ணு ஒருத்தன் வருவான், நம்மைத் தாங்குவான்னு நினைச்சாலும் கல்யாணம் ஏமாற்றம் தான்.” என்று நித்திலா மெதுவாகக் கூறினாள்.
“திருமணம் கனவல்ல. நிதர்சனம்.” என்று நித்திலா கூற, சங்கர் தன் மனதில் சபாஷ் போட்டுக்கொண்டான். லவி நித்திலாவை சலிப்பாகப் பார்த்தாள்.
“நான் இதை உன்கிட்ட பல தடவை சொல்லணுமுன்னு நினைச்சிருக்கேன். அவசியம் வரும்பொழுது சொல்லலாமுன்னு விட்ருவேன்.” என்று நித்திலா கூற, லவி நித்திலாவிடம் கோபமாகப் பேச ஆரம்பித்தாள்.
லவியை இடைமறித்து, “நீ சொல்ற மாதிரி சுயநல ஆண்களும் இருக்காங்க… பல சுயநல பெண்களும் இருக்காங்க.”என்று நித்திலா கூற, லவி அவளைக் கூர்மையாகப் பார்த்தாள்.
“ஏன் ஒரு பெண்ணா, உன் மனதில் ஆசைகள் இல்லைனு சொல்லு… கற்பனை இல்லைனு சொல்லு… ஆண்கள் ஆசைப்படுவது சுயநலம்னா… உன்மனதில் இருப்பதும் சுயநலம் தானே ” என்று நித்திலா சவால் விட, லவி தன் தோழியை மௌனமாய் பார்த்தாள்.
“கல்யாணத்தைப் பற்றி அதிகமா நகைச்சுவை பேசுற நம்ம நாட்டில் தான் கல்யாணம் ஜேஜேன்னு நடக்குது.” என்று நித்திலா நக்கல் பேச, “என்ன என் வாயை அடைச்சிட்டுதா நினைப்பா?” என்று லவி கோபமாகக் கேட்க, நித்திலாவின் முகத்தில் புன்னகை பூத்தது.
“நான் உனக்காக அமைதியா இருக்கேன். வேற யாராவதா இருந்தா இந்நேரம் நடக்கிறதே வேற.” என்று லவி தெனாவட்டாகக் கூறியபடி அங்கிருந்த நாற்காலியில் கால்மேல் கால் போட்டுச் சாய்வாக அமர்ந்தாள்.
“கல்யாணம் வேண்டாம் வேண்டாமுன்னு சொல்றவங்களுக்கு தான் கல்யாண ஆசை அதிகமா இருக்குமாம்.” என்று நித்திலா லவியை பார்த்துக் கண்சிமிட்ட, லவி தன் முன் இருந்த புத்தகத்தை நித்திலா மீது வீசி, “இது என்ன புது தத்துவமா இருக்கு?” என்று கடுப்பாகக் கேட்டாள் லவி.
நித்திலா அதை லாவகமாகப் பிடித்து, தன் தோழியின் கன்னங்களைப் பிடித்து, “குழந்தை டீ நீ…” என்று செல்லம் கொஞ்சினாள் நித்திலா.
“நித்தி… எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்… நான் மேல படிக்கணும். பிசினெஸ் பண்ணனும். அதுவும் அந்த யாதவ் வாய்ப்பே இல்லை. அவன் ஒரு அம்மா கொண்டு. அத்தை சொன்னாங்கன்னு கல்யாணத்திற்குத் தலை ஆட்டிருப்பான் பூம் பூம் மாடு.” என்று லவி யாதவை திட்ட, அவள் தலையில் நறுக்கென்று கொட்டினான் யாதவ்.
திரும்பிப் பார்த்த லவி, “டேய்… நீ எப்ப டா வந்த?” என்று லவி யாதவை பார்த்துக் கேட்க, “நீ என்னைப் பூம் பூம் மாடுன்னு சொன்னப்பவே வந்துட்டேன்.” என்று யாதவ் தலை அசைத்துக் கூறினான்.
“நீயே கேட்டுட்டியா நல்லதா போச்சு. நான் உன்கிட்ட தனியா சொல்ல வேண்டாம்.” என்று லவி கூற, “உன்னை மனுஷன் கல்யாணம் பண்ணுவானா? அதுக்கு நான் அங்குத் தொங்கலாம்.” என்று மின்விசிறியைக் காட்டி கல்யாணிக்கு கேட்காவண்ணம் மெதுவாகக் கூறினான் யாதவ்.
“இங்கயும் யாரும் காத்து கிட்டு இல்லை.” என்று லவி கூற, “படிப்பு முடிந்தவுடன் தானே… அதுக்குள்ள எதாவது செய்து கல்யாணத்தை நிறுத்திரலாம்.” என்று யாதவ் கூற, சம்மதமாகத் தலை அசைத்தாள் லவி.
‘ இப்ப மட்டும் ஒற்றுமை ஆகிருவாங்க. இவர்கள் பேசுவது சரி இல்லை. இது எங்க போய் முடியுமோ?’ என்ற எண்ணத்தோடு அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தாள் நித்திலா.
நாட்கள் அதன் போக்கில் நகர, அந்த காலை நேரத்தில் வழக்கத்திற்கு மாறாகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் லவி.
அவள் படிப்பு இறுதி ஆண்டிலிருந்தது. அன்று கல்லூரி சிம்போஸியம். வழக்கமாக அணியும், ஜீன்ஸ், சுடிதார் இதற்கு மாறாக அனைவரும் சேலை கட்டுவதாக திட்டமிட்டிருந்தனர். இன்றைய டிரண்டில் சிவப்பு நிற டிசைனர் சேலை ஆங்காங்கே மணிகள் தொங்க அவள் மேஜை மீது அழகாக லவிக்காக காத்திருந்தது.
கல்யாணி சங்கருக்கு உணவு பரிமாற, “அம்மா… கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்.” என்று லவியின் குரல் ஓங்கி ஒலித்தது.
“சாப்பாடு வச்சிகிட்டு இருக்கேன்… வரேன் டீ…” என்று கல்யாணி குரல் கொடுக்க, “எனக்கு அம்மாவா இல்லை இந்த சங்கருக்கு அம்மாவா? எப்ப பாரு அவனைக் கவனிக்கிறது. இந்த சங்கரை…” என்று முணுமுணுப்பாகத் திட்டினாள் லவி.
“ஆண்ட்டி… நீங்கப் போங்க… நான் எடுத்து வச்சிக்கிறேன்.” என்று சங்கர் தன்மையாகக் கூற, ” இன்னைக்கி எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்?” என்று கல்யாணி சங்கரை பார்த்துக் கேட்டாள்.
“அவங்க காலேஜ் சிம்போஸியம் இன்னைக்கி. அதனால் சீக்கிரம் கிளம்ப வேண்டியது இருக்கும்னு நினைக்கிறேன் ஆண்ட்டி.” என்று சங்கர் கூற, கல்யாணி தலை அசைத்துக் கேட்டுக் கொண்டு படியேறி லவியின் அறையை நோக்கிச் சென்றார்.
“வாய் மட்டும் இங்கேயிருந்து அங்க வரைக்கும் நல்ல பேசு. ஒரு சேலை கட்ட தெரியலை. இதுக்கு அதிகாரம் வேற.” என்று கூறிக் கொண்டே கல்யாணி லவிக்கு சேலை கட்ட உதவ, ஆயிரம் சண்டைகளோடும், வாக்குவாதத்தோடும் சேலை கட்டி முடித்தாள் லவி.
‘சேலையில் கூட இத்தனை நவநாகரீகமாக அலங்காரம் செய்ய முடியுமா?’ என்ற எண்ணத்தோடு தன் மகளை வாயைப் பிளந்து பார்த்தார் கல்யாணி.
சிகப்பு நிற டிசைனர் சேலை சிங்கள் பிலீட்டில் பறக்க, கொதறிவிட பட்டிருந்த தலைமுடி அலையலையாக பறக்க… அதில் தலை முடிக்கு நடுவில் வெள்ளைக் கற்களான வண்ணத்து பூச்சி வடிவில் உள்ள கிளிப் பறக்காமல் அவள் தலையில் வீற்றிருந்தது.
வழக்கமாக பிரேஸ்லெட் அணியும் லவியின் கைகளில் இன்று வளையல், ஒன்றோடு ஒன்று மணிமணியாக இணைக்கப்பட்டு என்னைப் பார் என்று கூற, அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த டாலர் மின்னியது.
“லவி… இதெல்லாம் எங்க வாங்குவ?” என்று லவியின் தாய் ஆசையாகக் கேட்க, தன் உதட்டில் உள்ள லிப்ஸ்டிக், தன் நீளமான நகங்களில் உள்ள நைல் போலிஷ் இவை அனைத்தையும் சரி பார்த்துவிட்டு தன் தாயை மேலும் கீழும் பார்த்தாள் லவி.
கல்யாணி தன் மகளின் அழகில் மயங்கித் தான் நின்று கொண்டிருந்தார். “ஏன்? நீங்க வாங்கி போட போறீங்களா?” என்று தன் தாயிடம் கேட்டுக் கொண்டே, தன் பையை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் செல்ல வேகமாகப் படி இறங்கினாள்.
“பார்த்து மெதுவா போ… சேலை தடுக்கி கீழ விழுந்திர போற…” என்று கல்யாணி பதட்டமாகக் கூற, சங்கரை தன் ஓரக் கண்களால் பார்த்தபடி, “அம்மா… உன் பாசம் அப்பப்ப என் மேல கூட திரும்புது.” என்று கேலியாக கூறி மேஜை அருகே நின்றாள்.
‘இவளை எப்படித் திருத்த?’ என்று எண்ணி கல்யாணி படியிறங்கி வர, சங்கர் எழுந்து கொண்டான்.
“ஏய் நில்லு. நான் இன்னைக்கி சேலை கட்டிருக்கேன். என்னை காலேஜில் ட்ரோப் பண்றியா?” என்று லவி கேட்க, சங்கர் அவளைப் பதட்டமாகப் பார்த்தான்.
“ஒஹ்… உனக்கு கார் ஓட்ட தெரியாது. நான் பைக்கில் வர மாட்டேன். சரி விடு…” என்று சங்கரை நக்கல் அடித்தபடி லவி கிளம்ப, “சாப்பிட்டுட்டு போ…” என்ற கல்யாணியின் குரல் காற்றில் தான் ஒலித்தது.
நித்திலா பச்சை நிற சேலையில் மெலிதான அலங்காரத்தோடு லவிக்காக காத்திருந்தாள். நித்திலாவை ஏற்றிக் கொண்டு அவள் கார் கல்லூரியை நோக்கிப் பறந்தது. அங்கு அனைவரும் மும்முரமாக அவர்கள் வேலையில் மூழ்க ஹரியின் கண்கள் லவியை வட்டம் அடித்தது.
அப்பொழுது செமினார் அறையிலுள்ள மேடையிலிருந்து லவி, நித்திலா இருவரும் பேசிக்கொண்டே இறங்க, ஹரி லவியை நோக்கி வேகமாகப் படியேற நித்திலாவின் கண்கள் ஹரியைக் கவனித்துவிட்டது.
நித்திலாவின் உள்ளுணர்வு எதோ கூற, நித்தலா லவியை தன் பக்கம் இழுக்க, இதை எதிர்பார்க்காத ஹரி நித்திலாவின் சேலை நுனியை மிதித்துவிட்டான்.
ஹரி கடந்து செல்ல, நித்திலா படியிறங்க… தன் சேலையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நித்திலா படியில் உருண்டு விழுந்தாள்.
நித்திலாவை எதிர்பார்க்காத ஹரி சற்று விலகி நின்று நித்திலாவை அதிர்ச்சியோடு பார்க்க, நித்திலா ஹரியை பரிதாபமாகப் பார்த்தாள்.
தனக்கு வைத்த குறி என்றறிந்தாலும் நித்திலா கீழே விழ காரணமாயிருந்த ஹரியின் கன்னத்தில் பளார் பளாரென்று லவி அறைந்தாள்.
முதலில் ஹரி அதிர்ச்சி அடைந்தாலும், நொடியில் நிதானித்து, லவியின் கைகளை பின்னால் முறுக்கி, “இன்னைக்கி நீ தப்பிச்சிட்ட… வாழ்க்கை முழுக்க அழற அளவுக்கு, உன்னை அசிங்கப் படுத்துவேன் டீ…” என்று ஹரி ஒற்றை விரல் உயர்த்தி லவியை மிரட்டினான்.
ஹரியின் பிடியில் கைகள் வலித்தாலும், அதை மறைத்துக் கொண்டு, “பொறுக்கி ராஸ்கல்… உன்னால முடிஞ்சதை பண்ணுடா… உன் வீரத்தை என்கிட்டே காட்டுன… உன்னை நார்நாரா கிழிச்சிருவேன். இப்ப நித்திலாவை பார்த்துட்டு உன்னை கவனிச்சுக்குறேன். நித்திலாவுக்கு ஏதாவது ஆகட்டும் நீ செத்த… ” என்று ஹரியிடம் சவால் விட்டு அவனிடமிருந்து தன் கைகளை உருவிக் கொண்டு நித்திலாவை நோக்கி ஓடினாள் லவி.
“நித்தி… நித்தி…” என்று லவி கதற, ‘ஏன் லவி அவசரப்பட்டு கையை நீட்டின?’ என்ற கேள்வியை கண்களில் தேக்கி லவியை பார்த்தபடி நித்திலா தன் கண்களை மூடினாள்.”நித்தி… நித்தி…” என்ற லவியின் பதட்டமான குரல் மட்டுமே செமினார் ஹால் முழுதும் ஒலித்தது. அனைவரும் நித்திலாவை பரிதாபமாக பார்க்க, ஹரியும் அவன் தோழர்களும் லவியை க்ரோதமாக பார்த்தனர்.
லவ்லி லவி வருவாள்…
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss