b94c9e3c03a96c8666f9a00d1a41b348-329efcac

அத்தியாயம் – 18

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

ஜன்னலின் வழியாக பரவிய சூரிய வெளிச்சம் பட்டு கண்விழித்த சங்கமித்ரா தன்னை யாரோ அணைத்து படுத்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க இந்தர்ஜித் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

சின்ன வயதில் இருந்தே கவலைகளை மனதில் தேக்கி வைத்து இருப்பவனின் முகம் இன்று சற்று தெளிவாக இருப்பது போலத் தோன்றவே அவனின் கலைந்த முடிகளுக்குள் கையைவிட்டு கோதியவள், “இனிமேல் உன்னை சந்தோசமாக வைத்துக் கொள்வதுதான் மித்துவோட முதல் வேலை..” என்று அவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

ஏற்கனவே அரைத்தூக்கத்தில் இருந்த இந்தர்ஜித், “இந்த கன்னம்..” மற்றொரு கன்னத்தை திருப்பிக் காட்டினான்.

“திருடா தூங்கற மாதிரி நடிச்சிட்டு படுத்து இருக்கிற? ஆமா நைட் ரொம்ப நேரம் காத்துட்டு இருந்தேன் எங்கே போயிருந்த?” குரலில் வரவழைக்கப்பட்ட கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.

அதுவரை கண்மூடி இருந்தவன் விழிதிறந்து, “அதுவா என்னதான் நீ என்னிடம் பழகி இருந்தாலும் இடைபட்ட வருஷங்களில் நிறைய மிஸ் பண்ணிருக்கோம். நீ காதலை சொன்னது, நான் வீட்டில் சம்மதம் வாங்கியது, திருமணம் எல்லாமே சீக்கிரம் முடிந்துவிட்டது. அதனால் கொஞ்சநாள் காதலிக்கலாம்னு முடிவெடுத்து அறைக்குள் வருவதற்குள் நீ தூங்கிட்ட” என்றான் அவளின் கன்னத்தை வருடியபடியே..

அவளுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. விஷ்வாவிற்கு உண்மையை புரிய வைக்க இது ஒரு வாய்ப்பாக அமையலாம் என்ற எண்ணத்துடன், “நீ சொன்னால் சரிதான் அஜி..” என்றாள்.

அவளின் புதுவிதமான அழைப்பில், “அஜியா?” என்றவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

“ஆமா மத்தவங்களுக்கு நீ இந்தர். நான் காதலிக்கும்போது நீ எனக்கு ஜித்து. இப்போ புருஷன் போஸ்ட் கொடுத்ததால் அஜின்னு கூப்பிடுறேன். ஏன் பிடிக்கலையா?” என்று கேட்டதற்கு அவன் மறுப்பாக தலையசைத்தான்.

“ஏன்” என்றதும், “என்னதான் இருந்தாலும் ஜித்துவில் இருக்கும் நெருக்கம் இதில் வரலடா. சோ நீ எப்போதும் போலவே கூப்பிடு” அவளின் மூக்குடன் உரசினான்.

அவள் சிலிர்ப்புடன் கண்மூடிட, “என் லாலிபப்” கிறக்கமாக கூறியவன் அவளின் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான். முதலில் சற்று திணறிய மித்ரா பின் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அவன் கொடுத்த முதல் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.

அவன் இதழைப் பிரித்தபிறக்கும் மயக்கத்துடன் கண்மூடி இருந்தவளிடம், “மித்து ஒன்ஸ்மோர்” என்றான் குறும்புடன்.

பட்டென்று விழிதிறந்து அவனை முறைத்தவள், “அப்படியே கொடுத்து வெச்சிருக்கிற மாதிரி உரிமையோடு கேட்கிற? அதெல்லாம் கொடுக்க முடியாது. முதலில் போய் குளிச்சிட்டு கோவிலுக்கு கிளம்புங்க” அவனிடமிருந்து விலக முயற்சித்தாள்.

“டெப்பாசிட் பண்ணினால் கேட்கும்போது வித்ட்ரா பண்ணிக்கலாமா?” என்றவனின் கண்களில் மின்னல் வந்து போனது.

“நூறு அம்பது இது எல்லாம் திருப்பித்தர மாட்டேன். அதுக்குமேல் போச்சுன்னு கணக்கு இருந்தா கண்டிப்பா வித்ட்ரா பண்ணிக்கோ. யாரு இப்போ வேண்டான்னு சொன்னது. இது உன் பேங்க் அக்கௌன்ட் தானே” என்று உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்று காட்டினாள் மித்ரா.

“அப்போ ஓகே இனிமேல் நியூ அக்கௌன்ட்டில் நிறையவே டெபாசிட் பண்றேன்” அவன் ஏற்ற இறக்கத்துடன் சொல்லவே அவளின் முகம் செவ்வானமாக மாறியது.

அதன்பிறகு எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு சீதை எலியா கோவிலுக்கு கணவனும், மனைவியும் செல்ல அவர்களோடு விஷ்வாவும், சம்யுக்தாவும் சென்றனர்.  நால்வரும் கடவுளை மனதாரப் பிராத்தனை செய்துவிட்டு வீடு திருப்பினர்.

சங்கமித்ராவின் திருமணத்திற்காக இந்தியாவிலிருந்து வந்த அனைவரும் ஊருக்குச் செல்ல தயாராகவே அனைத்து ஏற்பாடுகளையும் முடித்த சம்யுக்தா யோசனையோடு மாடியில் தனித்து நின்றிருப்பதைக் கவனித்தாள்.

யாரும் அறியாதவண்ணம் தோழியின் அருகே சென்றவள், “சம்மு” என்றழைத்து தோளைத் தொடவே பட்டென்று திரும்பியவளின் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தது.

அவளின் கண்களில் தெரிந்த வலியைக் கண்டவுடன், “என்னடா ஒரு மாதிரி இருக்கிற? இப்போ ஏன் தேவையில்லாமல் அழுகிற? ஆமா நானும் இரண்டு நாட்களாக பார்க்கிறேன் உன் முகமே சரியில்ல என்ன விஷயம்”என்று விசாரித்தாள்.

அவள் உதட்டைக் கடித்துக்கொண்டு தோழியின் தோள் சாயவே, “சம்மு நீ என்னன்னு சொல்லுடா. மனசுக்குள் வைத்து மருகினாள் எனக்கு எப்படி தெரியும்” தோழியை ஆதரவாக அனைத்து அவளின் முதுகை வருடினாள்.

“மித்து எனக்கு விஷ்வாவை ரொம்ப பிடிச்சிருக்கு, நான் அவரிடம் இதை சொல்ல போனபோது, காதல், கல்யாணம் இந்த இரண்டைத் தவிர வேற விஷயம் இருந்தா பேசுன்னு சொல்லிட்டாரு” என்று கதறினாள்.

இதுநாள் வரை தனக்கென்று யாருமில்லையே என்று நினைத்து வருந்தும் தோழிக்கு பக்கபலமாக  நின்ற மித்ரா, “அவன் சொன்னால் அதுக்கு இப்படிதான் அழுவியா சம்மு. அவனுக்கு நானே விசயத்தைச் சொல்லி புரிய வைக்கிறேன். அதுவரை நீ இப்படியெல்லாம் அழுகக்கூடாது. முதலில் கண்ணைத் துடைத்துவிட்டு கீழே வா போலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றாள்.

சங்கமித்ராவின் நட்பு பட்டாளத்தை அவர்களே சென்று வழியனுப்பிவிட்டு வந்தவர்களிடம்,  “இங்கேயே பக்கத்தில் வீதியில் வீடு பார்த்து இருக்கேன் மாப்பிள்ளை. இனிமேல் அங்கேதான் தங்கப் போறேன்” என்ற ரகுவரனை வினோத் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அவள் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற விஷயம் அறிந்து வீட்டிற்குள் நுழைந்த விஷ்வாவின் பார்வை தன்னையும் அறியாமல் வீட்டைச் சுற்றி வந்தது.

அதைக் கண்ட மித்ரா, “வாடா நல்லவனே.. எல்லோரையும் அனுப்பி வைக்கும்போது வராமல் இப்போ வந்து யாரையோ தேடுற மாதிரி தெரியுது” என்று அவனை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தாள்.

சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டு, “நான் யாரையும் தேடவே இல்ல” என்றபடி அண்ணனின் அருகே அமர்ந்தான்.

அவன் வேண்டாவெறுப்பாக சொன்னதைக்கேட்டு கலகலவென்று சிரித்தவள், “நானும் நம்பிட்டேன்” என்றாள் கண்களில் குறும்பு மின்ன.

“அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றீயா மானு?” அவன் வேண்டுமென்றே அவள் வாயைப் பிடுங்க, “ஆமா விஷ்வா.. இதில் உனக்கு என்ன சந்தேகம்” என்று அவனின் தலையில் நறுக்கென்று கொட்டி தன் கோபத்தை தீர்த்துக்கொண்டு பட்டென்று விலகி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

“அண்ணா மானுகிட்ட சொல்லி வை. அவளுக்கு கல்யாணம் ஆனதும் பெரிய பொண்ணு ஆகிட்ட மாதிரி அடிச்சிட்டு போற பாரு” என்று தமையனிடம் குற்றப்பத்திரிகை வாசித்தான்.

இருவரும் சின்னபிள்ளை போல சண்டை போடுவதைப் பார்த்து, “நல்ல நண்பர்களுக்கு இடையே மூக்கை நுழைக்கக் கூடாது விஷ்வா. அது அண்ணனுக்கு நல்லது இல்ல. முதலில் அடியில் இருந்து தப்பிக்க எங்காவது ஓட முடியும். இனிமேல் அப்படி எங்கேயும் போக முடியாதுடா. சொன்ன புரிஞ்சிக்கோ” மனைவிக்கு தகுந்த கணவனாக அவன் சப்போர்ட் போட்டான்.

“இப்போவே ஜால்ரா போட ஆரம்பிச்சிட்ட. பரவல்ல நீ பொழக்குவா. அவ சொல்றதுக்கு எல்லாம் நீ இப்படி தலையாட்டினால் அவளும் உன்னை கண்கலங்காமல் பார்த்துக்குவா” அவன் நக்கலடிக்க, “ஏய் என் புருஷனை எதுக்கு நீ கிண்டலடிக்கிற” என்றபடி சமையலறையில் இருந்து வெளியே வந்தாள்.

இரு ஆண்களுக்கும் காஃபி கொடுத்துவிட்டு கணவனின் அருகே அமர்ந்தவள், “என் ஜித்து எனக்கு ஜிங் ஜக் அடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ முதலில் போய் உன் பெட்டிப் படிக்கையை எடுத்துட்டு வா. உனக்கு மேலே இருக்கிற ரூம் ரெடிபண்ணி வச்சிருக்கேன்” என்றாள் அதிகாரமாக.அதுவரை சிரித்த முகமாக இருந்த விஷ்வாவின் நினைவில் தாயின் பேச்சுக்குள் வந்து போனது.

அவன் மௌனமாக இருப்பதைக் கவனித்த மித்ரா நிதானமாக, “இங்கே பாரு நமக்கு நம்ம ஒற்றுமைதான் முக்கியம். அதுமட்டும் இல்லாமல் நீ தனியாக சமைத்து சாப்பிட்டு இருப்பது எனக்கு பிடிக்கல. நான் உங்க அண்ணனை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் ஓகே. இனிமேல் நீங்க இருவரும் இந்த வீட்டில் தான் இருக்கணும்” என்று உறுதியாக கூறிய மனையாளை இமைக்கமறந்து பார்த்தான் இந்தர்ஜித்.

இந்த விஷயத்தை ஏற்கனவே விஷ்வாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவன் சொல்லும் முன்னர் மித்ரா முந்திக் கொண்டது அவன் மனதிற்கு நிறைவை கொடுத்தது.

“மானு அது சரிபட்டு வராது..”மறுப்பாக தலையசைத்தான்.

அவள் கோபத்துடன் அவனை முறைக்கவே, “விஷ்வா மித்து சொல்றது சரிதான். இதுநாள் வரை நான் இருந்தும் நீ அநாதை மாதிரி இருந்தது போதும். நீ உடனே வீட்டைக் காலிபண்ணிட்டு வந்துவிடு. உனக்கு என்ன வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுடா. நான் இருக்கேன்டா” என்றவன் தம்பியின் தலையைச் செல்லமாக கலைத்துவிட்டான் இந்தர்ஜித்.

அவனின் கண்கள் லேசாக கலங்கிட, “சரிண்ணா” என்றான் கரகரப்பான குரலோடு.

மித்ரா கணவனின் தோள் சாய்ந்துகொண்டு, “உனக்கு விருப்பம் இல்லாத காதல், கல்யாணம் இரண்டைப் பற்றி பேச மாட்டேன். கண்ணைக் கசக்கி தொலைக்காதே பார்க்க சகிக்கல” கண்சிமிட்டியவளின் குறும்பைக் கண்டு வாய்விட்டு சிரித்தான் இந்தர்.

அவன் கோபத்துடன் அவளை முறைக்கவே, “என்னடா இவ லாஜிக் வச்சு பேசற. டேய் பொறந்தவனே இவகிட்ட ஜாக்கிரதையா இருந்துக்கோ. இல்ல உன்னையும் குடும்பத்தனாக மாறிவிடுவா. என்னை கவுத்து கேம் ஆடினா பாரு அந்த மாதிரி” என்று சிரித்தவனை நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.

“அடியே வலிக்குது” என்று விஷ்வா அலறவே திருதிருவென்று முழித்தபடி கணவனை நிமிர்ந்து பார்த்தாள் சங்கமித்ரா.

இந்தரோ விஷ்வாவின் கையைக் காட்டி, “ஏன் மித்ரா அவனைப் பிடிச்சு கிள்ளி வச்ச?” கண்ணில் குறும்பு மின்னிட கூறிய கணவனை அடிக்கும் எண்ணத்துடன் எழுந்தாள் மித்ரா.

“அடியே கல்யாணம் ஆனா மறுநாளே கபடி விளையாட வைக்காதே. மித்து சொன்னால் கேளு” என்று அவன் எழுந்து ஓடி டைனிங் டேபிளின் மறுப்பக்கம் நின்றுகொண்டான்.

அவனைப் பிடிக்க முயற்சி செய்த மித்ரா, “நீங்க செய்த காரியத்துக்கு மண்டையை உடைக்கும் அளவிற்கு கோபம் இருக்கு” என்று கடுப்பில் பல்லைக் கடித்தாள்.

அதெல்லாம் பார்த்த விஷ்வாவின் முகத்தில் மாறுதல் தெரிந்தது. தாய் – தந்தையின் சண்டையை பார்த்து மட்டுமே வளர்ந்தவனுக்கு அண்ணனின் முகத்தில் இருக்கும் குறும்பும், புன்னகையும் சிந்திக்க தூண்டியது.

தன் தமையனை உயிராக காதலித்து அவனையே திருமணம் செய்திருந்த மித்ராவின் முகத்தையும் கவனித்தான். எல்லையற்ற சந்தோசம் அவளின் முகத்தில் முகாமிட்டு இருப்பதை கண்டு, ‘நான் காண்பது நிஜமா’ என்ற சந்தேகத்துடன் அவளையே இமைக்க மறந்து பார்த்தான்.

எதிர்பார்க்காத விதமாக நெஞ்சில் சம்யுக்தாவின் முகம் தோன்றி மறையவே எரிச்சலோடு நிமிர்ந்தவனுக்கு அங்கே இருப்பது முள்ளின் மீது நிற்பதுபோல தோன்றியது.

அவனின் மனநிலை அறியாமல் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டும் கணவனைப் பிடிக்க எண்ணி, “பீம்பாய் எனக்கு ஹெல்ப் பண்ணுடா” என்று விஷ்வாவை துணைக்கு அழைத்தாள்.

அவனோ, “எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலன்னு சொன்ன இல்ல. அப்படியே ஓடிரு.. பீம்பாய்னு சொல்லி மனுஷனோட கோபத்தைக் கிளறிவிடாதே” என்றவன் எழுந்து செல்லவே மித்ரா அதிர்ச்சியும், திகைப்புமாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

சம்யுக்தாவின் மீது காதல் இல்லை என்று சொல்பவன் இப்போது எதற்காக கோபப்பட வேண்டும் என்ற சிந்தனையோடு நின்றவளின் அருகே வந்த இந்தர்ஜித், “என்னாச்சு மித்து” என்றான் அக்கறையோடு.

மறுப்பாக தலையசைத்த மித்ரா சட்டென்று சுதாரித்து, “ஜித்து உனக்கு கொழுப்பு அதிகமாகிடுச்சு இல்ல. என்மேல் பயமில்லாமல் போயிடுச்சு” என்று சொல்லி அவனின் காதைப் பிடித்து திருகினாள்.

“ஏய் ராட்சசி விடுடி.. ரொம்ப வலிக்குது” என்று அவன் கெஞ்சிடவே அவளும் பாவம் பார்த்து விட்டுவிட்டு நகர நினைத்தாள்.

சட்டென்று அவளை இழுத்து சுவரில் சாய்த்து நிறுத்திய இந்தர்ஜித், “என் காதை திருகும் அளவிற்கு தைரியம் வந்துச்சு இல்ல” என்றவன் அவளை நெருங்கி பட்டென்று கன்னத்தை கடித்து வைத்தான்.

“ஆ வலிக்குது” அவள் கத்தவே, “எனக்கும் இப்படிதானே வலித்தது..” என்றவன் சிரித்தான்.

“வலிக்கு வலியை பரிசளிக்கிற நீயெல்லாம் ஒரு நல்ல காதலனா?” என்று சிணுங்கிவிட்டு அவள் நகர்ந்துவிட, “எனக்கு சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும் உனக்கும் நானும் வலி கொடுக்க மாட்டேன்” என்றவனின் கண்ணில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து சட்டென்று அவனை திரும்பிப் பார்த்தாள்.

அவனின் கண்கள் கலங்கி இருக்க கண்டு, “ஜித்து சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு எல்லாம் வருத்தபட்ட சந்தோசமான நிமிடங்கள் வீணாகும்டா.. நீ போய் விஷ்வாவை வீட்டிற்கு கூட்டிட்டு வா” என்று கணவனை திசை திருப்பிவிட்டு வழக்கம்போல வீட்டை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் வெற்றிகரமாக தனக்கு பிடித்தது போல வீட்டை மாற்றியமைப்பதை கண்ட விஷ்வா, “பாவம் எங்க அண்ணன். உன்னிடம் கிட்டு முழிக்கிறான்” என்று உச்சுகொட்டிவிட்டு செல்வதை கண்டு, “போடா என் புருஷனை பார்த்துக்க எனக்கு தெரியும். அவனாவது வாயைத் திறந்து உண்மையைச் சொல்வான். உன்னை மாதிரி அவன் இல்ல” என்று உதட்டை சுழித்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

சட்டென்று திரும்பி தோழியைப் பார்த்த விஷ்வா, “என்னை வெற்றிபெற முயற்சிக்காதே மானு. கண்டிப்பா நீ தோற்றுத்தான் போவாய்” என்றான் சிரிப்புடன் கையின் கட்டை விரலை தலைகீழாக காட்டினான்.

“நான் சங்கமித்ரா! உனக்கு தெரிந்த மானு இவ இல்லன்னு சீக்கிரமே நீ புரிஞ்சிக்குவ பாரு” சவால் விடுவதைப்போல கூறியவளை பார்த்து நக்கலாக சிரித்திவிட்டு நகர்ந்தான்.

வீட்டை மாற்றியமைத்த சங்கமித்ரா கடைசியாக ஒரு போட்டோ பிரேமை மாட்டுவதற்கு முயற்சி செய்தாள். அவளால் அது முடியாமல் போகவே, “ஜித்து, விஷ்வா” என்று இருவரையும் அழைத்தாள்.

அவளின் குரல்கேட்டு ஹாலுக்கு வந்த இருவரிடமும், “இந்த போட்டோவை கொஞ்சம் மாட்டுங்க” என்றாள். இருவரும் சேர்ந்து பிரேமை மாட்டும் போதுதான் விஷ்வா கவனித்தான்.

இந்தர்ஜித் தோளில் சங்கமித்ரா புன்னகையோடு சாய்ந்திருக்க விஷ்வாவின் கைகோர்த்து கொண்டு சம்யுக்தா நின்றிருந்தாள். இந்தரின் பக்கத்தில் வினோத் மற்றும் சுரேஷ் இருவரும் நின்றிருந்தனர்

 அவன் போட்டோவை மாட்டிய பிறகு, “நம்ம கல்யாண போட்டோவில் நம்ம ஃப்ரெண்ட்ஸ்” என்றவளின் பார்வை விஷ்வாவின் மீது படிந்து மீண்டது.

“ரொம்ப அழகாக இருக்கு மித்து” என்றான் இந்தர்ஜித் புன்னகையோடு.

விஷ்வா எதுவும் பேசாமல் அறைக்கு சென்றுவிட, “இவனுக்கு எதுக்குதான் இவ்வளவு கோபம் வருதோ எனக்கு தெரியல” என்றபடி மற்ற வேலைகளைக் கவனிக்க சென்றான்.

தன் இலக்கை நோக்கி காயை நகர்த்த தொடங்கிய மித்ராவின் திருமண வாழ்க்கை அழகாக ஆரம்பித்தது. அதே நேரத்தில் இந்தர்ஜித் – சங்கமித்ரா, விஷ்வா மூவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடக் காரணமாக மாறியது. மூவருக்கு இடையே இருந்த ஒற்றுமை மெல்ல சிதைய தொடங்கியது.

இருவருக்கும் இடையே நடக்கும் போட்டியில் மித்ரா வெற்றி பெறுவாளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!