0828b72190b457ac2aa6b41404a05a67

அத்தியாயம் – 2

கஸ்தூரியின் வீட்டிற்குள் நுழைந்த இருவரும் அங்கிருந்த சோபாவில் அவளைப் படுக்க வைத்தனர். இந்தர்ஜித் மித்ராவின் தலையைப் பாசத்துடன் வருடிவிடவே, “அண்ணா நீ அவ பக்கத்தில் இரு.. நான் போய் தண்ணீர் எடுத்துட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக சமையலறையை நோக்கிச் சென்றான் விஷ்வா.

தன் அருகே படுத்திருந்த மித்ராவின் தலையைத் தூக்கி மடியில் போட்டு அவளின் கலைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு அழுத சுவடாக கண்ணீர் கோடுகளை அழுந்த துடைத்த இந்தர்ஜித், ‘எங்க தலைவிதி. நானும், விஷ்வாவும் தினம் தினம் அந்த நரகத்தில் நிம்மதியை தொலைச்சிட்டு வாழ்றோம். உனக்கு என்னடா கவலை..? நீ எதுக்குடா எங்கள மாதிரி கலங்கினாய்?’ என்றவனின் கண்களில் லேசாக கண்ணீர் பெருகியது.

அதற்குள் டம்ளாரில் தண்ணீரோடு வந்த விஷ்வா தமையன் கலக்கம் சுமந்த முகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டு, “அண்ணா மானுக்காக நீயேன் அழுகிற? அவ பாவமண்ணா சின்ன குழந்தை. அதுதான் தெரியாமல் தன் கண்முன்னே நடந்த நிகழ்வதைப் பார்த்து பயத்தில் அழுதுட்டா. நீயும் அவளைப் பார்த்து அழுதால் என்ன அர்த்தம்?” என்று கேட்ட விஷ்வா மித்ராவின் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.

இந்தர்ஜித் மெல்ல அவளின் கன்னம் தட்டி, “மித்து” என்று அழைக்கவே விழி திறந்து பார்த்தாள். அவள் கண்விழித்ததை பார்த்தவுடன் மற்ற இருவரின் முகமும் பளிச்சென்று பிரகாசமானது.

மெல்ல எழுந்து அமர்ந்த மித்ரா, “ஸாரி என்னால தானே உங்களுக்கு பிரச்சனை?” என்று கேட்டவளை இருவரும் புரியாத பார்வை பார்த்து வைத்தனர்.

“நான் வரும்போது உங்கப்பா இவ்வளவு பெரிய கட்டையை எடுத்து உங்கம்மா தலையில் போட்டது பார்த்து ரொம்ப பயந்துட்டேன். என் அப்பா ஒருமுறை கூட எங்க அம்மாவை அடிச்சி நான் பார்த்ததே இல்ல. எங்கம்மா அப்பாமேல் அவ்வளவு பாசமாக இருப்பாங்க. இப்போ எங்களை இங்கே விட்டுட்டு சாமிகிட்ட போயிட்டாங்க. உங்க அம்மாவைப் பார்க்கும்போது எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்திருச்சு” என்று அழுகை, பயம், ஏக்கம் கலந்த குரலில் சங்கமித்ரா சொல்ல இந்தர்ஜித் அவளின் தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவளின் மற்றொரு புறம் அமர்ந்த விஷ்வாவும் கலங்கிய விழிகளோடு அவளின் தோளில் கைபோடவே இருவருக்கும் இடையில் அமர்ந்திருந்த மித்ரா, “உங்க அம்மா அப்பா ஏன் சண்டை போட்டுகிட்டாங்க” சந்தேகத்துடன் இருவரிடமும் கேட்டாள்.

பத்து வயதில் தாயை இழந்து வாடும் மித்ராவைப் பார்த்து, “உனக்கு அம்மா இல்லன்னு கவலைபடற.. எங்களுக்கு எல்லாம் ஏன் இருக்காங்கன்னு நினைச்சு நாங்க வருத்தபடுறோம். இத்தனை வருடமாக எதுக்காக இருவரும் சண்டை போடுறாங்கன்னு எங்களுக்கு தெரியாது. இன்னைக்கு சரியாகும்.. நாளைக்கு சரியாகும்னு பொறுமையாக இருக்கோம்” என்று விரக்தியோடு கூறிய இந்தர்ஜித்தை இமைக்க மறந்து பார்த்தாள்.

அவனின் முகம் கசங்கி இருப்பதைப் பார்த்து, “நீ என்னிடம் இப்படி எல்லாம் சண்டை போடுற இல்ல. நீ உங்க அப்பாகிட்ட சண்டை போட வேண்டான்னு சொல்லலாம் இல்ல” என்று விஷ்வாவிடம் குழந்தைத்தனம் மாற்றாமல் கேட்டாள் மித்ரா. மற்ற இருவருக்கும் அவளின் கேள்வி ஆச்சரியத்தை அளித்தது.

சின்ன பெண்ணாக இருந்தபோதும் இவ்வளவு தெளிவாக பேசும் அவளின் பேச்சில் நியாயம் இருப்பது புரிந்துகொண்ட விஷ்வா, “உன்னை மாதிரி நானோ இல்ல அண்ணாவோ போய் நியாயம் கேட்க முடியாது மானு. அப்படியே நாங்க நியாயம் கேட்டாலும் அங்கிருந்து இன்னொரு பிரச்சனை ஆரம்பமாகும். கிணறு வெட்ட போன இடத்தில் பூதம் கிளம்பிய மாதிரி” என்றவுடன் இருவரின் கைகளையும் விலக்கிவிட்டு எழுந்தால் மித்ரா.

இந்தர்ஜித், விஷ்வா இருவரும் அவளை குழப்பத்துடன் நோக்கிட, “நான் சங்கமித்ரா. அதனால் யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் போய் அங்கிளிடம் கேட்க போறேன். ஏன் இவங்க இருவரையும் நிம்மதி இல்லாமல் பண்றீங்கன்னு கேட்க போறேன்” என்று வாசலை நோக்கி திரும்பியவளின் கையை இருவருமே பிடித்து தடுத்தனர்.

இடதுகரம் இந்தரின் கைகளிலும், வலதுகரம் விஷ்வாவின் கையிலும் சிக்கி இருப்பதை கண்டு, “ஏன் இருவரும் என்னை தடுக்கிறீங்க” என்று பொதுவாக கோபத்துடன் கேட்டாள்.

“நாங்க நிம்மதியாக இருக்கணும் இல்ல. அதுதான் உன்னை தடுக்கறோம்” என்று இந்தர் வேகமாக பதில் கொடுக்கவே அவள் சிந்தனையோடு இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“பிளீஸ் மானு. இதெல்லாம் பேசும் வயசு உனக்கில்லை. எங்க இருவரையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோ மானு” என்றான் விஷ்வா.

அவனின் பரிதமான முகத்தை கண்டு மனம் இறங்கிய சங்கமித்ரா, “சரி நான் போகல. ஆனால் நீங்க இருவரும் ஒற்றுமையாக என்னோடு கடைசி  வரை இருக்கணும். யாருக்காகவும், எதுக்காகவும் நீங்க பிரிஞ்சி போகக்கூடாது, விட்டுகொடுக்கவும் கூடாது” என்று கண்டிஷன் போட்டவளின் குழந்தைத்தனம் கண்டு இருவரும் சிரித்தனர்.

அவள் முறைக்கவே, “சரி நாங்க நீ சொல்றபடியே கேட்கிறோம் போதுமா?” என்று கேட்டான் இந்தர். விஷ்வா மெளனமாக இருக்கவே இருவரையும் பார்த்தவள் சரியென்று தலையசைத்தாள்.

“மித்துக்குட்டி இவ்வளவு விவரமான பொண்ணா?” என்று இந்தர்ஜித் வேண்டும் என்றே வம்பிற்கு இழுத்தான்.

“ஆமா” என்றாள் அவள் அசராமல்.

“அப்போ ஏன் மயங்கி விழுந்தாய்?” என்று விஷ்வா குறும்புடன் கேட்கவே திருதிருவென்று விழித்தாள் மித்ரா.

அவள் முகம் போன போக்கைப் பார்த்து அண்ணனும் தம்பியும் வாய்விட்டு இருக்கவே, “அம்மா சொல்வாங்க சிரிப்பு ஒரு வரம் அது யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காதுன்னு. அதனால் கீப் ஸ்மைலிங்” என்று குட் டே பிஸ்கெட் விளம்பர பாணியில் சொன்னாள் மித்ரா. அவளிடம் இருந்த ஏதோவொன்று மற்ற இருவரின் மனதையும் கவர்ந்தது.

தங்களைவிட பல வருடம் சிறிய குழந்தைகள் எப்படி சில விஷயங்களை அழகாக நமக்கு புரிய வைத்து வழிநடத்தி சொல்கின்றனர். அதே மாதிரிதான் இந்தர்ஜித், விஷ்வாவின் வாழ்க்கையைத் திசை இருப்பிச முயற்சித்தாள் சங்கமித்ரா.

அதற்குள் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு மூவரும் வாசலை நோக்கினர். காரின் கதவுகளைத் திறந்துகொண்டு மித்ராவின் பாட்டி கஸ்தூரி மற்றும் இந்தர்ஜித், விஷ்வாவின் தாயான மரகதம் இருவரும் இறங்கினார்.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன், “அம்மா என்னாச்சும்மா?” என்ற கேள்வியுடன் தாயின் அருகே சென்றான் இந்தர்ஜித்.

“என் தலையை இரண்டாக உடச்சிருக்கார் உங்கப்பா ஏன் பார்த்த தெரியலயா? இதுக்குதான் பாழாப்போன இந்த காதல் கல்யாணமே வேண்டான்னு எங்கம்மா தலை தலையாக அடிச்சிகிட்டாங்க? அப்போ எல்லாம் இவருதான் வேணும்னு அடம்பிச்சு கட்டிய பாவத்திற்கு இரண்டு பிள்ளையைப் பெத்து ஊரறிய கெட்ட பேரும் வாங்கிட்டேன்” என்று புலம்ப தொடங்கினார்.

அந்த சத்தம்கேட்டு சாலையில் நடந்து சென்ற சிலர் திரும்பிப் பார்ப்பதை கவனித்த இந்தர், ‘காதல் திருமணம் பண்ணினால் இப்படியொரு நரக வாழ்க்கை மட்டும்தான் வாழணுமா?’ என்ற கேள்வி அவனின் மனதில் ஆழப்பதிந்து போனது.

மரகதம் பொறுமை இழந்து கத்துவதை கண்டு, “என்னம்மா பதினைந்து வயசு பையனிடம் என்ன பேசணும்னு தெரிஞ்சிதான் பேசுகிறாயா?” என்று கோபத்துடன் அவளை அதட்டினார் கஸ்தூரி.

விஷ்வா காரணம் புரியாமல் தமையனைப் பார்க்க, “ம்ம் என் மகனிடம் இன்னும் எத்தனை பொய் சொல்லி என்னை கெட்டவன் ஆக்க முடியுமோ அதெல்லாம் நல்லா செய். அப்போதானே நீ உன்னை நல்லவன்னு நிரூபிக்க முடியும்” என்று இரண்டு கைகளையும் தட்டியபடி உள்ளே நுழைந்தார் பாஸ்கர்.

மரகதம் தன் கணவனை கொலைவெறியுடன் நோக்குவதை கவனித்த விஷ்வாவோ, ‘புரிதல் இல்லாத வாழ்க்கையை வாழணுமா? இதற்கு இப்படியே தனிமரமாக நின்றுவிடலாம்’ என்று நினைத்தான். திருமணம் என்ற வார்த்தையை முற்றிலுமாக வெறுத்தான். இந்தர்ஜித்தை விட விஷ்வா இரண்டு வருடம் சிறியவன்.

இந்தர்ஜித் மற்றும் விஷ்வா இருவரும் தாய் தந்தையை கேள்வியாக நோக்கிட, “இங்கே பாரு மரகதம். இத்தனை நாளாக உன்னைத் திருத்தி பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற எண்ணம் மனசில் இருந்தது. ஆனால் இப்போது அந்த நினைப்பையே வெறுக்கிறேன். என் வாழ்க்கைக்கு ஒரு பதிலை சொல்லிட்டு நீ உன் வழியில் போயிட்டே இருக்கலாம்” என்றார்.

இரண்டு பேரும் சண்டைக்கோழி போல சிலிர்த்துக்கொண்டு நிற்பதை கண்ட மித்ரா பயத்துடன் இரண்டு பேரின் கரங்களையும் அழுத்தமாகப் பிடித்துகொண்டாள். இனிமேல் அவர்களை பிரியவே விடமாட்டேன் என்ற எண்ணத்துடன் பிடித்தாளோ அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

மரகதம் அமைதியானபிறகு மீண்டும் பாஸ்கர் தொடங்குவதை கண்டு, “ஏன் இப்படி இருவரும் பொறுமையே இல்லாமல் சண்டை போடுகிறீங்க? உங்க வாழ்க்கையை நீங்க தீர்மானிக்கும் காலம் முடிந்துவிட்டது. இனிமேல் நீங்க இருவரும் சண்டைபோடாமல் இருக்கணும். முத்து முத்தாக இரண்டு ஆண் பிள்ளைகளை பெற்று வைத்துக்கொண்டு இருவரும் பேசுவது சரிதானா?” என்று கோபத்துடன் கேட்டார் கஸ்தூரி.

அவரின் கேள்வியில் நியாயம் இருப்பதை புரிந்துகொண்டவர், “அம்மா நான் வேண்டுமென்று சண்டையிழுக்க வரவில்லை. எனக்கு இவளை சுத்தமாக பிடிக்கல. அதனால் என் வாழ்க்கைக்கு ஒரு வழியைச் சொல்லிட்டு அவளை கிளம்பு சொல்லுங்க” என்றான் அதிகாரமாகவே.

அதுவரை பொறுமையை இழுத்துபிடித்து நின்றிருந்த மரகதம், “இங்கே பாருங்க.. நான் பணத்தை யாரிடமும் கொடுக்கல. ஆனால் நீங்க என்மேல் சந்தேகப்பட்டு அடித்தபிறகும் உங்களோடு வாழ நான் தயாராக இல்லை. இந்தர்ஜித்தை நீங்க வச்சுக்கோங்க. நான் விஷ்வாவை வளர்க்கிறேன். மற்றபடி நமக்குள் வேற எதுவுமே இல்லை” என்று சொல்லிவிட்டு சின்ன மகனின் கரங்களைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றார்.

மற்றொரு புறம் இத்தனை நாளாக வாய் திறந்து பேசாத தன் மனைவி கடைசியில் பணப்பேயாக இருப்பதை கண்டவருக்கு வாழ்க்கை கசந்துவிட, “இந்தர்ஜித் இவளை எல்லாம் பேசி நம்ம ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்” என்ற கேள்வியுடன் பெரிய மகனை தன்னோடு அழைத்துச் சென்றார்.

அவர்கள் நால்வரும் சென்றபிறகு மெல்ல பாட்டியின் அருகே சென்ற மித்ரா, “பாட்டி அவங்க இருவரும் பாவம் இல்ல” என்று சோகமான முகத்துடன் வாசலின் மீது பார்வை பதித்து கேட்டபேத்தியின் முகத்தை நிமிர்த்தி விழிகளைப் பார்த்தார்.

“அவங்க பாவம்னு நம்ம நினைத்தால் இருக்கும் நிம்மதியும் தொலைந்து போய்விடும் பாப்பா. அவங்க வாழ்க்கை இப்படிதான் என்றால் அதை மற்ற யாராலும் முடியாது” என்றவர் மித்ராவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

‘பாட்டி ஏன் இப்படி சொல்றாங்க’ என்று தனக்குள் கேள்வி கேட்டுகொண்டே அன்று இரவு சாப்பிட்டுவிட்டு சீக்கிரமே உறங்கிவிட்டாள். அடுத்த இரண்டு நாளில் மரகதம் அதே வீதியில் மற்றொரு வீட்டை பார்த்து அதற்கு குடி பெயர்ந்தனர்.

விஷ்வா அவன் பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு தாயுடன் செல்வதை கண்ட இந்தர்ஜித்தின் கண்களில் ஏக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது. மற்றொரு புறம் விஷ்வாவிற்கு தமையனைப் பிரிந்து செல்வது கஷ்டமாக இருந்தது. ஆனால் இருவருமே அந்த பாசத்தை வெளிபடுத்தாமல் தங்களுக்குள் மறைத்துக் கொண்டனர்.    

அதன்பிறகு வந்த நாட்களில் அண்ணனும், தம்பியும் மூன்றாம் நபர்போல பள்ளிக்கு சென்று திரும்புவதை பார்த்துக்கொண்டே இருந்தாள் சங்கமித்ரா. அவளுக்கு இருவரும் வேறு வேறு பாதையில் செல்வது சுத்தமாக பிடிக்காமல் போனது.

அன்று மாலை வழக்கம்போலவே தன் சைக்கிளில் ஊரைச் சுற்றி பார்க்க கிளம்பினாள் மித்ரா. அப்போது தூரத்தில் விஷ்வா யாரோ ஒரு பையனோடு நின்று பேசுவதை பார்த்தவுடன், ‘நீ இங்கேதான் இருக்கிறாயா?’ என்ற கேள்வியுடன் தன் சைக்கிளை எடுத்தவள் வேகமாக மிதிக்க தொடங்கினாள்.

விஷ்வாவின் மோதும் வேகத்துடன் சென்றவள் அவன் விலக நினைக்கும்போது அவனின் மீதே சைக்கிளை மோதுவது போல கொண்டு சென்று சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தவே அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

“ஏய் என்ன உனக்கு விசாரா?” விஷ்வா கோபத்துடன் கேட்கவே, “எனக்கில்லையே” என்று நக்கலாக பதில் கொடுத்துவிட்டு சைக்கிளை மிதிக்க தொடங்கினாள்.

அவள் கொஞ்ச தூரம் செல்லும் வரை புரியாமல் நின்ற விஷ்வாவைப் பார்த்து அவள் நாக்கை துருத்தி அழகு காட்டிவிட்டு செல்வதை கண்டு, “என்னிடமே உன் விளையாட்டை காட்டுகிறாயா?” என்று வேகமாக தன் சைக்கிளில் ஏறி அமர்ந்தவன் வேகமாக மிதித்தான்.

‘விஷ்வா தன் பின்னோடு வருகிறானா?’ என்று பார்த்தபடி திரும்பிய மித்ராவின் விழிகளில் விழுந்தான் இந்தர்ஜித்.

“இந்தர் என்னை காப்பாத்துடா. விஷ்வா என்னை அடிக்க சைக்கிளில் துரத்திட்டு வருகிறான்..” என்று பயத்தில் கத்தியபடி சென்றவளை பார்த்தவன் அவளின் பின்னோடு வந்த விஷ்வாவை தடுத்தான்.

“ஏண்டா மித்துக்குட்டிகிட்ட சண்டை போடுற? அவ பாரு எவ்வளவு பயத்தில் சைக்கிளில் வேகமாக போறான்னு” வழக்கம்போலவே இந்தர் அவளுக்கு சப்போர்ட் போட்டு பேசியதில் கடுப்பான விஷ்வா, “அண்ணா புரியாமல் பேசாதே” என்றவன் சற்றுமுன் நடந்ததை அவனிடம் கூறினான்.

“அந்த வாலு அப்படியா பண்ணுச்சு” என்ற கேள்வியோடு திரும்பி மித்ராவைப் பார்க்கவே, “ஜித்து நீ நல்ல ஏமாந்தியா? மித்ரான்னா யாருன்னு நினைச்சீங்க..” என்று குறும்புடன் கேட்டாள்.

அதுவரை அவளுக்கு சப்போர்ட் போட்ட இந்தருக்கு கோபம் வரவே, “ஏய் வாலு என்ன தைரியம் இருந்தால் நீ என்னையே கிண்டல் பண்ணுவ” என்றபடி சைக்கிளில் ஏறிய தமையனைக் கண்டு குஷினானான் விஷ்வா.

அண்ணன், தம்பியை பார்த்து, “உங்களால் முடிஞ்சா இந்த மித்ராவை பிடிக்கடா பார்க்கலாம்” என்று சவால் விடும் தோணியில் சொன்னவள் புயல் வேகத்தில் சைக்கிளை மிதிக்க தொடங்கினாள்.

அவளை பிடிக்க நினைத்த இந்தர்ஜித், விஷ்வா இருவரும் சைக்கிளில் அவளை பின் தொடர்ந்தனர். அந்த உற்சாகத்தில் இருவரும் ஒரே பாதையில் பயணிப்பதை மறந்தனர்.

சட்டென்று சைக்கிளை திருப்பிக்கொண்டு அவர்களின் அருகே வந்த மித்ராவோ, “அப்பா, அம்மா சண்டைபோட்டு பிரிந்தால் அண்ணனும், தம்பியும் இஞ்சி தின்ன ஏதோ மாதிரி இருக்கணும்னு அவசியம் இல்ல. நமக்கு பிடிச்சதை செய்ய நமக்கு முழு உரிமை இருக்கு. என்ன நான் சொல்றது புரிஞ்சிதா…” என்று மிரட்டலோடு கேட்டவள் மலை பாதையில் சந்தோஷத்துடன் பயணத்தை தொடங்கினாள்.

அவளின் பேச்சில் இருந்த ஏதோவொன்றில் கவரப்பட்ட இருவரும் அவளை பின்தொடர்ந்தனர். இரு வேறு பாதையில் பயணித்தவர்களின் மனதை நிமிடத்தில் மாற்றிவிட்டாள் மித்ரா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!