Maane – 29 Pre – Final

Maane – 29 Pre – Final
அத்தியாயம் – 29
அவள் அருகில் இருக்கும் வரை புரியாத காதலை உணர்ந்தவன் வேகமாக எழுந்து தம்பியின் அருகில் சென்றான். அவனுக்கும் மித்ரா அதே போலவே ஒரு வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பியிருந்தாள். அவன் அதை ஆன் செய்யவே பயந்து கொண்டிருந்தான்.
ஏற்கனவே அண்ணன் ஒளிபரப்பிய வாய்ஸ் ரெக்கார்டில் தன் தோழியின் கதறலை கேட்டவனால் தனக்கு சொல்லபட்டு இருக்கும் செய்தியை கேட்கும் சக்தி இல்லாமல் அமர்ந்திருந்தான்.
ஆனால் இந்தர்ஜித் தம்பியின் இடது தோளில் கைவைத்து அழுத்தம் கொடுத்து வலது கையில் அவனின் கையிலிருந்த வாய்ஸ் ரெக்கார்ட்டை ஒலிக்கவிட்டான்.
“இந்த மித்துவிற்கு என்ன பிரச்சனை வந்தாலும் பக்கபலமாக நின்று தோள் கொடுக்கும் என் உயிர் தோழன் விஷ்வா. உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி தூண்டியது ஒரு தவறா? நான் மட்டும் கணவன், குடும்பம் என்று சந்தோசமாக இருக்கும்போது நீயும் என்னை மாதிரியே இருக்கணும்னு ஆசைப்பட்டேன் என்ன காரணம் தெரியுமா?” என்ற கேள்வியிலேயே முற்றிலுமாக உடைந்தான் விஷ்வா.
தான் மட்டும் சந்தோசமாக வாழ்ந்தால் போதுமென்று நினைக்கும் சுயநலமான உலகம் இது. ஆனால் தனக்கு இணையான சந்தோஷத்தை மற்றவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே அரிது. அந்த எண்ணத்துடன் தன்னை அவள் கண்டிப்பதை உணராமல் போன மடத்தனத்தை நினைத்து மனம் நொந்து போனான் விஷ்வா.
“என் நண்பனுக்கு அப்பா துணை ஆரம்பத்தில் இருந்தே இல்ல. அம்மாவோட இருந்தவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா வாழ்க்கையே வெறுக்க தொடங்கிட்ட சமயத்தில் ஒருநாள் மன அழுத்தம் தாங்காமல் உன்னை நீயே அழித்துகொண்டால் என்னாகும் என்ற பயம்தான் அதிகம். அதை தடுக்கத்தான் உன்னை திருமணத்திற்கு தூண்டுகிறேன் என்று உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்?” என்ற கேள்வியில் விஷ்வா தன்னையும் மீறி தமையனின் வயிற்றில் முகம் புதைத்தான்.
தன் தம்பி அழுவதை பார்க்க முடியாமல், “விஷ்வா என்னடா குழந்தை மாதிரி அழுகிற?” என்று அவனை சமாளிக்க முயற்சித்தான்.
அதே நேரத்தில் அவனின் சிந்தனையை ஈர்க்கும் விதமாக, “எல்லா பொண்ணுங்களும் உங்க அம்மா மாதிரியே இல்லன்னு உனக்கு புரிய வைக்கணும் இல்ல. தன் நண்பன் தவறான வழியில் போகும் முன்னே தடுப்பது தானே தோழமையின் உண்மையான கடமை” என்றவள் சொல்லும்போது தன் கடமையிலிருந்து அவன் விலகிவிட்டத்தை அப்போதுதான் உணர்ந்தான்.
“இந்தரை காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டேன். ஜித்து வெளியே கோபபடுவான். ஆனா அடுத்த நிமிஷம் எனக்காக யோசிக்கும்போது ஒரு தாயாக மாறிபோய்விடுவான். இங்கே அள்ள அள்ள குறையாத அமிர்தம் ஒன்னு இருக்குடா அதுக்கு பெயர் தான் அன்பு. ஒரு தோழியாக உன்னோடு கடைசி வரை வர எனக்கு எந்த தடையும் இல்ல” அவளின் ஒவ்வொரு வார்த்தைகளில் மனம் வலித்தது.
“அதையும் தாண்டி வாழ்க்கை ரொம்ப அழகானது. மலைப்பாதையில் சைக்கிளில் பயணித்த நாளெல்லாம் நினைச்சு பார்த்து இருக்கிறாயா? வாழ்க்கையும் அந்த மாதிரி ஒரு அழகான பயணம். நம்மதான் மேடு, பள்ளம் பார்த்து செல்லணும். எங்க இருவரின் வாழ்க்கையைப் பார்த்து உன் மனசிலும் காதல் ஆசை வரும்னு நினைச்சேன்” அவளின் கணிப்பு சரியாக இருந்து தன்னுடைய விளையாட்டுத்தனத்தினால் அவள் விலகி சென்றதை நினைத்து தலையிலடித்துக் கொண்டான்.
“நீயும் ஒரு பெண்ணை உயிராக விரும்பும்போது உன் மனசில் இருக்கும் வெறுமை மறந்துவிடும்னு கனவு கண்டேன். ஆனால் நான் திருமணம் செய்ய சொன்னதும் நரகம்னு சொன்ன இல்ல அப்போவே புரிஞ்சிகிட்டேன். என் முயற்சி எல்லாம் தோற்று போயிடுச்சு!” என்று சொல்லும்போது தான் அந்த ஊருக்கு வந்ததும் அவள் தன்னுடம் சேலஞ் பண்ணியதே நினைவு வந்தது.
“நீ நிமிர்ந்து இந்தரின் முகத்தைப் பாரு அப்போ புரியும் காதல் வாழ்க்கை அவ்வளவு கொடுமையானது இல்ல. அது அழகான ரயில் பயணம்னு புரிஞ்சிக்குவ. நீ கல்யாணம் பண்ற எண்ணம் இருந்தால் என்னை தேடு விஷ்வா. இல்ல நான் இப்படியேதான் இருக்க போறேன் என்ற முடிவில் இருந்தால் நானும் கடைசிவரை உன் கண்முன்னே வரவே மாட்டேன்” என்றதும் விஷ்வாவின் மனமே வெடித்து சிதறியது.
அவள் கடைசியாக, “பாசிட்டிவ் தாட்ஸ் உடைய என்னையே ஜெய்த்துவிட்டாய். உனக்கு வேண்டாத எதுவும் எனக்கு வேண்டான்னு முடிவு செய்து விலகி போகிறேன் விஷ்வா. என்னுடைய இந்த முடிவு உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிச்சுகோங்க” என்றதோடு ரெக்கார்ட் முடிந்திருந்தது.
அவள் சொன்னது போல விஷ்வா நிமிர்ந்து தன் தமையனை பார்த்தான். மித்ரா அருகே இருக்கும் வரை அவன் கண்ணில் தெரியாத காதல் இப்போது கண்ணீராக வெளி வந்தது. இத்தனை நாளாக அவளிடம் எரிந்து விழுந்தவனின் உதடுகள் அவளின் பெயரை மட்டுமே உச்சரித்தது.
தன்னுடைய விளையாட்டால் அவள் எடுத்திருக்கும் முடிவில் தன் தமையனின் வாழ்க்கையும் பாதித்துவிட்டத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டான்.
இருவரின் கவனமும் அவள் வைத்துவிட்டு சென்ற மூன்றாவது கடிதத்தின் மீது படிந்தது.
“கடைசி வரை உங்க பிரிவுக்கு நான் காரணம் ஆகக்கூடாதுன்னு நினைச்சு நான் உங்களைவிட்டு பிரிஞ்சி போறேன். என்னைக்கும் உங்களை சேர்க்கும் புள்ளியாக இருப்பேனே தவிர பிரிக்கும் எண்ணம் எனக்கில்லை.அண்ணன் – தம்பி இருவரும் கடைசிவரை சேர்ந்தே இருங்க உங்களைப் பிரிச்ச பாவி சங்கமித்ரா என்ற பெயரை எனக்கு வாங்கி கொடுத்திடாதீங்க” என்ற வரிகளுக்கு கீழே..
என் உயிரான இந்தருக்கும், என் துன்பங்களுக்கு தோள் கொடுக்கும் விஷ்வாவிற்கு நான் முக்கியமானவள் கிடையாது. என்னைவிட்டு நீங்க இருவரும் சந்தோசமாக, நிம்மதியாக இருக்கலாம். ஆனால் இந்த சூரியன், சந்திரன் இல்லாத என் வானம் என்னைக்கும் வெறுமையாக மட்டும் தான் இருக்கும்.
இப்படிக்கும் பிரியமுடன்
சங்கமித்ரா இந்தர்ஜித்”
அவள் எழுதி இருந்த படித்தபிறகு வீடு முழுக்க வெறுமை மட்டுமே மீதிருந்தது. அவள் இருக்கும்போது உயிர்ப்புடன் இருந்த வீடு இப்போது உயிர் இல்லாத வெறும் கட்டிடமாக மட்டுமே தெரிந்தது.
இந்தர்ஜித் நிற்க தெம்பில்லாமல் சோபாவில் பொத்தென்று அமர்ந்தான். இத்தனை நாளாக தன்னையே சுற்றி வந்தவளின் அன்பு, பாசம், அக்கறை, காதல் இன்றி தன்னால் வாழ முடியுமா என்ற எண்ணம் எழுந்து அவனை நிம்மதியிழக்க செய்தது.
விஷ்வாவோ, ‘நான் வந்த அன்றைக்கே உண்மையைச் சொல்லிருந்தால் கண்டிப்பா இன்று இப்படியொரு நிலை வந்திருக்காது..’ என்ற சிந்தனையோடு தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.
இந்தர்ஜித் மீண்டும் ஒரு முறை அலங்காரம் செய்த அறையை சுற்றி பார்வையைச் சுழற்றியவன், ‘இது அக்டோபர் மாதம் தானே? அவளுக்கு ஜனவரி மாதம்தானே பிறந்தநாள்..’ என்ற சிந்தனை ஓடி மறையவே சட்டென்று எழுந்தான்.
சங்கமித்ரா இங்கேதான் எங்கோ பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு மனதில் எழுந்தது. சட்டென்று வீட்டைச்சுற்றி பார்வையைச் சுழற்றிவிட்டு, “விஷ்வா மித்ரா இங்கேதான் எங்கோ இருக்கிற.. நீ உடனே காரை எடு.. நம்ம மாமா வீட்டிற்கு போய் பார்க்கலாம்” என்று பரபரத்தான்.
அவன் சொன்னவுடன் காரை எடுக்க வெளியே செல்லும்போது மித்ரா என்று வீட்டிற்குள் நுழைந்த வினோத்திடம் அவர்கள் இருவரும் நடந்த விஷயத்தை கூறவே, “நீ அன்னைக்கே அவளிடம் சம்யுக்தாவை லவ் பண்ற விஷயத்தை சொல்லியிருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கடைசி நேரத்தில் அவளை தொலைச்சிட்டு நிற்கிற நீங்க இருவரும் முட்டாள்தான்டா” என்று திட்டி தீர்த்தான்.
அவர்கள் மூவரும் ரகுவரனின் வீட்டிற்கு செல்ல, “என்ன மாப்பிள்ளை விஷயம்?” என்றவர் அக்கறையோடு விசாரித்தார்.
அப்போது அவரிடம் நடந்த விஷயத்தை சொல்லவே, “இந்த உடல்நிலையை வைத்துகொண்டு நான் இப்போ எங்கே போய் அவளைத் தேடுவேன்” என்றவரை மூவரும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தனர்.
சிறிதுநேரம் அங்கே கனத்த மௌனம் ஆட்சி செய்ய ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவர், “மாப்பிள்ளை என் மகளை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சிடுங்க. அவளுக்கு நீங்க இருவரும் மட்டும்தான் உலகம். சில நேரத்தில் மனம் வெறுத்தா இப்படி யோசிக்க தோணும்” என்றவரின் வருத்தம் அவர்களை வெகுவாக பாதித்தது.
“நாங்க தேடுகிறோம் மாமா. நீங்க அவளைப் பற்றி யோசித்து உங்க உடல்நிலையைக் கெடுத்துகாதீங்க. என்கமேல் நம்பிக்கை வைங்க மாமா” என்றவன் சொல்ல கசந்த புன்முறுவலோடு அவனை ஏறிட்டார் ரகுவரன்.
மூவரும் காரணம் புரியாமல் அவரை நோக்கிட, “அவ வைத்த நம்பிக்கையே இல்லன்னு ஆனபிறகும் அதைப் பற்றி பேசறீங்களே மாப்பிள்ளை” என்று கேட்க இந்தர்ஜித் அவரின் பார்வையைத் தவிர்த்து வேறுபுறம் பார்த்தான்.
அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியதும், “விஷ்வா உங்க அம்மாவிடம் அவ எங்கே போனால் என்று கேட்கலாமே” என்று வினோத் சொல்லவே அவன் மறுப்பாக தலையசைத்தான்.
“ஏன்டா” என்று அவன் காரணம் புரியாமல் கேட்க,
“அம்மாவிற்கு ஏற்கனவே அவளைப் பிடிக்காது. இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பா அவளை தவறாக பேசுவாங்க. நான் செய்த காரியத்தால் இன்னைக்கு அண்ணாவோட வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிபோச்சு. இதுக்குமேல் அவளைத் தவறாக பேசுவதை அவன் காதில் கேட்டால் அண்ணா தாங்க மாட்டான் வினோத்” என்றவன் தமையனை திரும்பி பார்த்தான்
ஸ்டேரிங்கை பிடித்துக்கொண்டு கண்களில் வலியை தேக்கி அமர்ந்திருந்தவனின் தோற்றமே அவனின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டியது. அத்தனை நாளாக அவனின் முகத்திலிருந்த தெளிவு, சந்தோசம் இரண்டும் சென்ற இடம் தெரியவில்லை. முகம் முழுவதும் இருளோடு அவளை எங்கே தேடுவதென்று தெரியாமல் பித்துப்பிடித்து அமர்ந்திருந்த இந்தர்ஜித் அவளுக்கு முற்றிலும் புதியவன்.
விஷ்வா யோசனையோடு பார்வையைத் திருப்பிட அதே வழியில் நடந்து வந்து கொண்டிருந்த பாஸ்கரின் மீது அவனின் பார்வை படிந்தது. அவரைப் பார்த்தும் காரைவிட்டு இறங்கிய இந்தர்ஜித் அவரின் எதிரே சென்று நின்றான்.
அவர் நிமிர்ந்து அவனைப் பார்க்க, “அப்பா மித்துவை பார்த்தீங்களா?” என்று கேட்டான்.
“நான் பார்க்கவே இல்ல.. ஆமா நீயேன் அவளைத் தேடுற?” என்று கிடுக்கிப்பிடி போட்டவரிடம் உண்மையைச் சொல்லாமல், “வீட்டில அவளை காணோம். அதுதான் கேட்டேன்” என்று சமாளிக்க அவரோ இளக்காரமாக ஒரு பார்வை பார்த்தார்.
“என்னடா மகனே நான் சொன்ன மாதிரியே பண்ணிட்டாளா? ஒரேயடியாக உன்னைத் தவிக்கவிட்டு போயிட்டாளா?” என்று கேட்டதும் அவனின் கோபம் சுர்ரென்று கோபம் வந்தது.
அவரை எரிப்பதுபோல பார்த்த இந்தர், “உங்க வாயில் நல்ல வார்த்தையே வராதா? உங்களிடம் கேட்க வந்த என் புத்தியை” என்றவன் வேகமாக காரில் சென்று ஏறிவிட்டான்.
தன் தோழியைத் தவறாக பேசுவதைக்கேட்டு எரிச்சலடைந்தவன், “வயசாகுதே தவிர புத்தியே வரல” என்று கூற வினோத் பார்வையோ அவரைக் கூர்மையாக அளவேடுத்தது.
வழக்கத்திற்கு மாறாக அவரின் முகத்தில் இருந்த தெளிவும், மித்ராவைக் கேட்டவுடன் அவரின் கண்ணில் வந்து போன மின்னலைக் கவனித்தவனின் பார்வை அவரின் மீதே நிலைத்தது. இந்தர் காரை எடுக்க சுற்றிலும் பார்வையை சுற்றியனான் விஷ்வா. இந்தர் அவள் செல்லும் இடங்களுக்கு சென்று அவளைத் தேடினான்.
வினோத் அவளின் நட்பு வட்டாரம் என்று அனைத்திற்கும் போன் பண்ணி விசாரிக்க நேரம் கடந்து சென்றது. அவளை எங்கு தேடியும் காணாமல் ஸ்டேரிங்கை கையால் குத்தியவன், “மித்ரா உன்னைவிட்டு ஒரு நிமிஷம் கூட என்னால் இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும் தண்டிப்பது நியாயமே இல்லடி.. ப்ளீஸ் மித்ரா வந்துவிடு.. என்னால் இந்த வலியைத் தாங்க முடியலடி” என்று ஸீட்டில் அமர்ந்தபடி வாய்விட்டு புலம்பினான் இந்தர்.
அவள் இல்லாத கொஞ்சநேரத்தில் தமையன் அனுபவிக்கும் வலியை கண்டவனின் மனதில் வேதனை அதிகரித்தது. அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் வெளியே வேடிக்கை பார்க்கும் விதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
இருவரும் மித்ராவைக் காணவில்லை என்ற உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்ததால் ரகுவரன், பாஸ்கர் இருவரின் கண்களிலும் வந்து சென்ற மின்னலை கவனிக்க மறந்தது.
ஆனால் நிதானமாக இருந்த வினோத், ‘இல்லையே எங்கையோ கணக்கு தப்பாக இருக்கு.. சங்கமித்ரா இவங்க இருவரையும் தவிக்கவிட இப்படி பண்றாளோ’ என்ற சந்தேகம் அவனின் மனதில் எழுந்தது. அடுத்து எங்கு தேடுவதென்று புரியாமல் மூவரும் காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு அவரவர் யோசனையில் மூழ்கி இருந்தனர்.
“டேய் உங்க அப்பா, மாமா இரண்டு பேரும் ஏதோ கேம் ஆடுறாங்கடா. மித்ரா இங்கேதான் எங்கயோ இருக்கிறா. நீங்க இருவரும் அவளைப்பற்றி ரகுவரன் அப்பாவிடம் சொல்லும்போது அவர் பதறவே இல்ல. உங்க அப்பாவிடம் பேசும்போது அவர் முகத்தில் இருந்த பிரகாசம் எனக்கு என்னவோ தப்பாவே படுதுடா” என்று கூறினான் வினோத்.
ஏற்கனவே தந்தை மீது ஆத்திரத்தில் இருந்தவன், “அந்த ஆளுக்கு மித்ராவைக் கண்டாளே பிடிக்காது. இந்த இலட்சணத்தில் அவளைக் காணோம்னு சொன்னால் சந்தோசபடாமல் வேற என்ன செய்வான்” என்று எரிந்து விழுந்தான்.
அவன் சொல்வது சரியென்று விஷ்வாவிற்கும் தோன்றவே, “அதுதான் நான் இன்னும் அம்மாவிடம் பேசவே இல்ல வினோத் அண்ணா. அவங்களுக்கு தெரிஞ்சா அந்த வீதி முழுக்க சொல்லி மித்ராவோட மானத்தையே வாங்கிடுவாங்க. பிள்ளைகளைப் பற்றிய அக்கறை இல்லாதவங்க” என்று தன் கோபத்தை வெளிபடுத்தினான்.
இரவு முழுவதும் மூவரும் தேடியலைந்தும் அவளைக் கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியுடன் வீடு வந்து சேர்ந்தனர். இந்தர்ஜித் – விஷ்வா இருவருக்கும் அவள் இல்லாத வீட்டிற்கு செல்லவே பயமாக இருந்தது. வாழ்க்கையின் சந்தோஷ நிகழ்வுகளை மட்டும் சுமக்கும் அந்த வீட்டிற்குள் அவள் இல்லாமல் செல்ல முடியாமல் வாசலில் அமர்ந்துவிட்டனர்.