d55c5788e05b04f89d4e13e73a7a6ee3-63f83e8a

அத்தியாயம் – 28

சென்னையிலிருந்து விஷ்வா வந்ததில் இருந்து கவனித்துகொண்டு இருந்தாள் சங்கமித்ரா. இப்போதெல்லாம் அவன் அடிக்கடி மொட்டை மாடியில் சென்று அமர்வது, இருவரும் சண்டைபோடும் வேலையில் சத்தமில்லாமல் நகர்ந்துவிடுவது என்று அவனின் செயலை உன்னிப்பாக கவனித்தவள் மீண்டும் அவனிடம் திருமணப்பேச்சை எடுத்தாள்.

அன்று மதியம் வழக்கம்போல் வீடு திரும்பிய இருவரும் ப்ரேஷாகிவிட்டு வரவே, “விஷ்வா நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போகிறாய்” என்று ஆரம்பித்தாள். அவன் பதில் சொல்லாமல் சாப்பிட அவளுக்கு கோபம் வரவே கணவனை முறைத்தாள்.

அவளிடம் விளையாட எண்ணிய இந்தர், “ஏன் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு அனுபவிப்பது போதாதா? இவன் வேற தனியாக அனுபவிக்கணுமா?” என்று கேட்டதும் அவளின் கோபம் எல்லைக் கடந்தது.

தன்னவனே தன்னை புரிந்து கொள்ளாமல் பேசுகிறானே என்ற எண்ணம் இதயத்தில் ஈட்டியைப் பாச்சியது.

அது தந்த வலியைக் கண்ணில் தேக்கி, “நான் உங்களை ரொம்ப படுத்தி எடுக்கிற மாதிரி பேசறீங்க? என் இடத்தில் வேறொரு பொண்ணு இருந்தால் இந்நேரம் நீயும் வேண்டாம், உன்னோடு வாழும் வாழ்க்கையும் வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிருப்பா. நான் என்பதால் அமைதியா இருக்கேன் இல்ல. அதுதான் உங்களை இப்படியெல்லாம் பேச சொல்லுது” என்றது தான் தாமதம்.

“அதுக்கென்ன உங்க அப்பா வீடு அடுத்த தெருவில் தானே இருக்கு போக வேண்டியதுதானே.. இங்கே இருந்து ஏன் எங்க உயிரை வாங்குற” அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளை காயப்படுத்தி கொண்டிருப்பதை உணராமல் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்தான் இந்தர்ஜித். 

இருவருக்கும் இடையே இருக்கும் சேலஞ் அறியாமல் பேசும் கணவனை நினைத்து உள்ளம் கொதிக்க, “ஜித்து நான் விலகிப்போனால் கண்டிப்பா கடைசிவரை உன்னால் என்னைக் கண்டே பிடிக்க முடியாதுடா. நான் இல்லன்னா நீ உடைஞ்சி போயிருவ” என்று அவள் நிதர்சனைத்தை புரிய வைக்க முயற்சித்தாள்.

“இத்தனை நாளாக நீ இல்லாமல் நான் இருந்தே இல்லையா? சும்மா கதையளக்காமல் அப்பா வீட்டுக்கு பெட்டி படிக்கையைக் கட்டும் வேலையைப் பாரு” விளையாட்டாக கூறியவன்  சாப்பிட்டு கைகழுவ எழுந்து சென்றுவிட்டான்.

அண்ணன் வேண்டுமென்றே வம்பு வளர்ப்பதை உணர்ந்து தனக்குள் சிரித்துக் கொண்டான். அவளின் கோபத்தை தூண்டிவிடும் வேலையை சிரிப்பாக செய்துவிட்டு நகர்ந்த அண்ணனை மனதிற்குள் மெச்சிக்கொண்டு மித்ராவை நிமிர்ந்து பார்த்தான் விஷ்வா.

“அவ்வளவு சீக்கிரம் உன்னை ஜெய்க்க விடுவானேனா மானு’ மனதிற்குள் நினைத்தவன், “காதல், கல்யாணம் இரண்டுமே நரகம். அதில் வாழ்வதற்கு இப்படியே இருப்பது எவ்வளவோ மேல்” அவன் எரிச்சலோடு கூறவே ஒரு கசந்த புன்முறுவலோடு அங்கிருந்து அகன்றாள் மித்ரா. 

அடுத்த இரண்டு நாட்கள் இயல்பாகவே கழிந்தது. தன்னுடைய பேச்சிற்கு சலனமே இல்லாமல் இருக்கும் மித்ராவை கண்டு கேள்வியாக புருவம் சுருக்கியதோடு விஷயத்தை லூசில் விட்டு தன் வேலையைக் கவனித்தான் விஷ்வா.

அன்று ஆபீஸ் கிளம்பும்போது, “சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வாங்க ஜித்து. நம்ம கொஞ்சம் வெளியே போகும் வேலை இருக்கிறது” என்றாள் தன் மன வருத்தத்தை மனதிற்குள் மறைத்தபடி.

“என்னால் வர முடியாது மித்து. அதனால் நீயே போயிட்டு வா” என்று சொல்லிவிடவே அவளின் முகமே வாடிப் போனது.

தன் கணவனோடு வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசையை நிராகரித்துவிட்டு சென்ற இந்தரை நினைத்து கலங்காமல் அவர்களை அனுப்பிவிட்டு சோபாவில் அமர்ந்து யோசிக்க தொடங்கினாள். நேரம் கடக்க மனம் பாறையென கனத்தது.

மாலை நேரம் நெருங்குவதை உணர்ந்து வேறு வழியில்லாமல், ‘விஷ்வாவைக் கூட்டிட்டுப் போலாமா?’ என்ற எண்ணத்துடன் அவனுக்கு அழைத்தாள் மித்ரா.

அவன் ஒரு பிஸ்னஸ் மீட்டிங்கில் இருந்ததால் அவளின் அழைப்பை கவனிக்கவில்லை. ஒருபக்கம் உயிர் காதல், மற்றொரு பக்கம் உயிர் நட்பு இரண்டுமே தன்னை வைத்து விளையாடுவதை உணர்ந்து கண்கள் லேசாக கலங்கியது மித்ராவிற்கு!

இதுநாள் வரையில் அழுவது கோழைகளின் செயல் என்று சொன்னவளால் இன்று அது முடியாமல் போனது. தன்னையும் மீறிய வெளி வந்துவிட்ட கண்ணீரை மறைக்க முடியாமல் அழுதுவிட்டு எழுந்து சென்று முகத்தை கழுவிவிட்டு உடையை மாற்றிகொண்டு வெளியே சென்றாள்.

தன்னுடைய பிறந்த நாளிற்கு என்று உடை தேர்வு செய்து தர ஆள் இல்லாதபோதும், கணவனுக்கும், நண்பனுக்கும் துணியைத் தேர்வு செய்து எடுத்தவள், தனக்கு வேண்டாவெறுப்பாக ஒரு சேலையை தூக்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

அவள் வீட்டிற்குள் நுழையும்போது விஷ்வா சோபாவில் அமர்ந்து முக்கியமான பைலைப் புரட்டுவதைக் கண்டவளின் முகத்திலிருந்த வெறுமை காணாமல் போக,“என்ன விஷ்வா இன்னைக்கு மீட்டிங் எப்படி போச்சு?” என்று கேட்டாள்.

“உனக்கு பைத்தியமா மித்ரா. மீட்டிங்கில் இருக்கும்போது விடாமல் போன் அடிச்சிட்டே இருக்கிற.. அந்த கோபத்தில் மீட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு வந்து பார்த்தால் வீடு பூட்டி இருக்கு. ஏன் இப்படி தொல்லை தரன்னு சத்தியமா புரியல. இந்த மீட்டிங் மட்டும் முடிந்திருந்தால் கண்டிப்பா நல்ல லாபம் வந்திருக்கும். எல்லாம் உன்னால் வீணாகப் போச்சு” என்று தன் மொத்த கோபத்தையும் தோழியிடம் கொட்டி தீர்த்தான்.

தன் நண்பன் தன்னை புரிந்து கொள்ளாமல் பேசுவதை உணர்ந்து, “ஸாரிடா இனிமேல் இப்படி போன் பண்ண மாட்டேன். ஷாப்பிங் போனபோது உனக்கும், ஜித்துவுக்கும் துணி எடுத்தேன். இந்த இது உனக்கு பிடிச்சிருக்கான்னு பாரு” அவனிடம் ஒரு பார்சலை நீட்டினாள்.

“இப்போ ரொம்ப முக்கியமா மானு? அதை அங்கே வெச்சிட்டுப் போ” என்றவன் தன் வேலையில் கவனமாகிவிட அதை டீபாய் மீது வைத்துவிட்டு அங்கிருந்து நகரும் முன்னே கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு வாசலுக்கு விரைந்தாள்.

ஏற்கனவே ஆபீஸில் இருந்து கோபத்துடன் வீடு வந்த இந்தர்ஜித் வாசலில் நின்றவளை கண்டவுடன், “இன்னைக்கும் ஷாப்பிங் போகும்போது கூட வரலன்னு சண்டைபோட தயாராகிட்டியா? ஏன் இப்படி உயிரை வாங்கிற மித்து. எந்த நேரமும் ஏதாவது ஒன்னு செய்து என் நிம்மதியை இழக்க செய்வதையே வேலையாக வைத்திருக்கிற” தவறைப் புரிந்துகொண்டு பேச என்ற கணவனின் பேச்சில் விக்கித்து நின்றாள்.

தன் கழுத்தில் கட்டியிருந்த டையை கழட்டி தூர வீசியவன், “இந்த காதல், கல்யாணம் எல்லாம் எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல. எந்த நேரம் வீட்டுக்கு வந்தாலும் நொச்சு நொச்சுன்னு பேசியே உயிரை வாங்கறாங்க” அவன் உணராமல் பேசிய வார்த்தைகளை கேட்டு சுக்குநூறாக உடைந்தது சங்கமித்ராவின் மனது!

எத்தனையோ முறை தந்தை சொல்லியும், ‘தன் காதல், நட்பு இரண்டும் நிலைக்கும்’ என்று வாதாடிய மித்ராவின் மனதில் இன்று வெறுமை சூழ்ந்தது. அதே நேரத்தில் விஷ்வா இருவரையும் நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌனமாகிவிடவே அவளுக்கு மனம் வலித்தது.

அதற்குள் உடையை மாற்றிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தவனிடம், “இந்தாங்க உங்களுக்கு துணியெடுத்துட்டு வந்தேன். நல்ல இருக்கான்னு பார்த்து சொல்லுங்க” கணவனிடம் பார்சலை நீட்டினாள்.

அதை வாங்காமல், “இப்போ எனக்கு இதை  பார்க்க நேரமில்ல மித்ரா. ஒரு முக்கியமான ஆளை சந்திக்க வெளியே கிளம்பணும்” என்றதும் பதில் சொல்லாமல் சரியென்று தலையசைத்துவிட்டு நின்றிந்தாள்.

தன் கையிலிருந்த பார்சலை பிரிக்க நேரமில்லாத அளவிற்கு தான் தேவை இல்லை என்ற நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் அவளின் நிம்மதியை இழக்க செய்தது.  இந்தர்ஜித் வெளியே செல்ல அவனின் பின்னோடு சென்ற விஷ்வாவையும் பார்த்த மித்ரா டீபாய் மீது வைத்திருந்த பார்சலையும் எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்தாள்.

ஒருவர் செய்யும் தவறால் மற்றவர்கள் வழியை அனுபவிக்க நேரும் என்று படித்திருந்த மித்ரா அந்த வரிகளில் இருக்கும் உண்மையை உணர்ந்தாள். அடுத்த இரண்டு நாளும் மின்னல் வேகத்தில் சென்று மறைய மித்ராவின் பிறந்தநாள் தினமும் மறக்க முடியாத தினமாக மாறிப் போனது.

ஆண்கள் இருவரும் வேலை விஷயமாக வெளியே சுற்றுவதால் மித்ராவின் பிறந்தநாளை முற்றிலுமாக மறந்தனர். ஏற்கனவே மனதளவில் வலியை அனுபவித்தவளோ அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போனாள்.

அவர்கள் இருவரும் மதியம் வந்து பார்க்கும்போது வீட்டின் தோற்றம் முற்றிலுமாக மாறியிருந்தது. அங்கே பலூன்கள் கட்டபட்டு அலங்கரித்து இருப்பதை கண்டு அண்ணனும், தம்பியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். நடுஹாலில் அவர்களை வரவேற்கும் விதமாக கேக் வைக்கபட்டிருந்தது.

அதன் அருகே சென்றபோது, ‘விஷ் யூ ஹாப்பி பர்த்டே சங்கமித்ரா’ என்று எழுதபட்டிருப்பதை பார்த்தபிறகுதான் அவளின் பிறந்தநாளே நினைவு வந்தது. அதற்கு பக்கத்திலேயே இரண்டு டேபிள் வைத்து பார்சல் மற்றும் இரண்டு கடிதத்தை வைத்திருந்தாள் மித்ரா.

அத்தோடு மூன்றாவது கடிதமாக  கேக் வெட்டும் கத்தியின் மீது ஒரு கடிதம் இருப்பதை கண்டு, “அண்ணா” என்றான் விஷ்வா புரியாத பாவனையோடு.

“என்னன்னு தெரியல விஷ்வா. இதெல்லாம் பார்க்கும்போது ஏதோ தப்ப இருக்குன்னு மட்டும் தோணுது” என்ற இந்தர்ஜித் பார்சலின் மேலிருந்த பெயரை படித்துவிட்டு அதன் மீதிருந்த கடிதத்தை எடுத்து பிரித்தான்.

“உங்க செல்லிற்கு ஒரு வாய்ஸ் ரெக்கார்ட் அனுப்பியிருக்கேன் ஜித்து அதை கேளுங்க” என்று எழுதியிருக்கவே வேகமாக தன் செல்லை எடுத்து வாட்ஸ் ஆப்பிள் அவள் அனுப்பியிருந்த வாய்ஸ் ரெக்கார்ட்டை ஆன் செய்தான்.

“ஜித்து இந்த ரெக்கார்ட் நீ கேட்கும்போது நான் உன்னைவிட்டு ரொம்ப தூரம் போயிருப்பேன். என்னடா இத்தனை நாள் இல்லாமல் இன்னைக்கு ஏன் இப்படி செய்யறேன்னு உனக்கு புரியாமல் போகலாம் ஜித்து. ஆனால் எனக்கு இந்தநாள் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.

நான் உன்னிடம் அடிக்கடி காதலா சொல்வேன் இல்ல. நான் பிறந்ததே உனக்காகத்தான் என்று! அந்த காதலை இன்னைக்கு காணோம் ஜித்து. வீட்டில் எல்லா இடத்திலும் தேடினேன் கிடைக்கல தெரியுமா?” என்று அவள் உடைந்துபோய் பேசுவதைக் கேட்டு இந்தரின் கண்கள் கலங்கியது.

“ஒவ்வொரு முறையும் நான் உன்னை உயிராக காதலிக்கிறேன்னு சொன்னபோது எல்லாம் மனசுக்குள் அவ்வளவு சந்தோசம் பரவும். உனக்கு அதெல்லாம் புரியாது ஜித்து. நான் இந்த கல்யாணத்தை பண்ணேனோ சொல்லும்போது என் காதல் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணுதுன்னு உன்னிடம் எப்படிடா நான் சொல்லட்டும்” என்ற அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் நின்றிருந்தான் இந்தர்ஜித்.

தன்னுடைய விளையாட்டான வார்த்தைகள் அவளின் மனதை வெகுவாக பாதித்திருப்பதை உணர்ந்தான். சங்கமித்ராவின் நுணுக்கமான மன உணர்வுகளை சரியாக படிக்காமல் விட்டுவிட்டேனோ? எங்கே எப்போது தவறு நடந்தது? என்று புரியாமல் நின்றிருந்தான்

அவன் மீண்டும் வாய்ஸ் ரேக்காடை கேட்க, “ஒவ்வொரு முறையும் உன்னை வெளியே கூட்டிட்டுப் போன்னு அடம்பிடிப்பேன். அதுக்கு காரணம் நீ என்னோடு இருக்கணும் நான் சொல்றது எல்லாம் செய்யணும் என்ற அதிகாரமில்ல. நம்ம இருவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து விஷ்வா வேறொரு பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ணிக்க மாட்டானா என்ற ஏக்கம்தான்” என்று அவள் சிலநொடிகள் இடைவெளிவிட சுக்குநூறாக உடைந்து கொண்டிருந்தது இந்தரின் காதல் மனம்!

நேற்று கோபத்தில் பேசிய வார்த்தைகள் அவளை பாதித்திருப்பதை உணர அவளின் குரல் மட்டும் மீண்டும் ஒலித்தது.

“நம்ம கல்யாணத்திற்கும் விஷ்வாவிற்கும் என்ன சம்மதம் என்று நீ யோசிக்கலாம். அப்பா – அம்மாவை பார்த்து காதல், கல்யாணம் இரண்டையும் வெறுத்த நீ என்னோடு சந்தோசமாக இருப்பதை பார்த்தால் அவனும் மாறுவான் என்ற எண்ணம்தான். விஷ்வாவிற்கு பெத்தவங்க சரியா அமையல” என்ற கருத்தை அவனும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். அதுவும் உண்மைதானே..?!

 “நம்ம அவனுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும் இல்லையா? அந்த கடமை நமக்கு இருக்கு இல்ல. அவனுக்கு அண்ணி என்ற உறவு இப்போது சமீபத்தில் வந்தது. அவன் எனக்கு நண்பன் என்ற உறவு ஆதியிலிருந்து வந்தது. நம்மதிருமண வாழ்க்கையை பார்த்து அவன் மனதில் வைத்திருக்கும் வெறுப்பை மறக்க மாட்டானா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்குடா” என்றபோது இந்தர்ஜித் பார்வை தம்பியின் மீது திரும்பியது.

அடுத்து அவள் பேசிய பேச்சுக்கள் அவள் தன்மீது கொண்ட காதலின் அளவை அவனுக்கு துல்லியமாக உணர்த்தியது.

“உன்னிடம் சண்டை போடுவது எதுக்காக தெரியுமா? அந்த சண்டை முடிந்ததும் பாசமா அன்பா பேசி என்னை சாப்பிட வைப்பாயே அந்த அன்புக்காகத்தான். ஒரு காலத்தில் தாய் பாசத்தை காட்டிய நீ ஏண்டா இப்போ என்மேல் வெறுப்பை மட்டும் காட்டுற? உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டது எதற்குன்னு நீ பலமுறை யோசிக்கலாம். விஷ்வா ஜாலி டைப். எதையும் மனசில் வச்சுக்க மாட்டான். ஆனால் நீ ரொம்ப அழுத்தக்காரன்” என்று சொல்லும்போது அவளையும் மீறி சிரித்திருந்தாள்.

அதற்கு எதிர்மாறாக இந்தரின் கண்கள் கலங்கிட, “வீட்டில் அம்மா – அப்பா இருவருக்கும் நடக்கும் பிரச்சனையில், ‘நீ பிறக்காமல் இருந்திருந்தா வாழ்க்கை வசந்தமா இருந்திருக்கும்னு’ அவங்க சொல்வதை கேட்டு வளர்ந்ததால் நீ மனசளவில் ரொம்பவே காயப்பட்டு போயிருந்த. எனக்கு அம்மா அன்பை காட்டிய உனக்கு அனைத்துமாக இருக்கணும்னு ஆசைபட்டேன்” என்றதும் அவன் செல்லை கையில் வைத்துகொண்டு ஸ்தம்பித்து நின்றான்.

இது என்ன வகையான நேசம்.. எந்த ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியமோ அவள் அவனின் வாழ்க்கையில் வரமாக வந்திருந்தாள். அவளை இழந்து நிற்கும்போது உயிர் போகும் அளவிற்கு மனதில் வலியை உணர்ந்தான்.

 “நீ முழுவதுமாக மாறிவிட்ட உண்மை எனக்கு தெரியும். ஆனால் உன் வார்த்தைகள் என்னை எவ்வளவு தூரம் காயப்படுத்தும் என்பதை உணராமல் விளையாடிவிட்டாயே. உன் மாற்றம் எனக்கு பிடிச்சிருந்த போதும் நம்ம இனிமேல் சேர்ந்து வாழ முடியாது” என்றவளின் குரல் மெல்ல கம்மியது.

அதே நேரத்தில் தன் காதலை பணையமாக வைத்துவிட்டு சென்றவளை நினைத்து, “மித்து உன்னை புரிஞ்சிகிட்டேன். இனிமேல் நான் அந்தமாதிரி பேச மாட்டேன். பிளீஸ் என்னைவிட்டு விலகி போகாதே மித்து. நீ இல்லன்னா நான் நடைபிணமாக மாறி போயிருவேன். உடலை விட்டுட்டு உயிரை மட்டும் எடுத்துட்டு போறீயே” என்று  அவனின் உதடுகள்  வார்த்தைகளை உதிர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!