Maane – 7

07fd1e6fc81403bee0818f8157dff59c

Maane – 7

அத்தியாயம் – 7

அந்த மருத்துவமனைக்கு வெளியே வந்த சங்கமித்ரா மீண்டும் சம்யுக்தாவிற்கு அழைக்கவே, “மித்து சொல்லு.. அந்த பெசண்டுக்கு இரத்தம் கொடுத்துட்டியா?” அக்கறையுடன் விசாரித்தாள்.

“ம்ம் கொடுத்தேன்.. இப்போ அவர் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்லிடாங்க சம்மு.. நாளைக்கு நான் இலங்கை கிளம்பறேன். எல்லா ஏற்பாடுகளும் முடிஞ்சிது.. நீ நம்ம சுரேஷ் கூட ஏர்போர்ட் வந்துவிடு சரியா?” அவளை பேசவிடாமல் முழு தகவலையும் கூறினாள்.

“ஏன் மித்து இன்னும் கொஞ்சநாள் சென்னையில் இருக்கலாம் இல்ல. இப்படி திடீர்ன்னு கிளம்பி இலங்கை போறேன்னு சொன்னால் எங்களுக்கு எல்லாம் வருத்தமாக இருக்காதா?” தோழியைப் பிரிய போகும் எண்ணத்துடன் கேட்டாள்.

சற்றுநேரம் அமைதியாக இருந்த மித்ராவோ, “சம்மு புரிஞ்சிக்கோ என்னதான் ஊர் உலகம் முழுக்க சுற்றி வந்தாலும் பிறந்த இடம் பழகிய மனிதர்களை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் எல்லோரின் மனசிலும் இருக்கும். நான் மட்டும் அதுக்கு விதிவிலக்கா சொல்லு பார்க்கலாம்” என்று அவளை சமாளிக்கவே சம்யுக்தாவினால் பதில் பேச முடியாமல் போனது.

“சரி நான் நாளைக்கு சுரேஷ் கூட ஏர்போர்ட் வருகிறேன்” என்றவள் சொல்லவே அழைப்பை துண்டித்துவிட்டு தன் ஸ்கூட்டியில் வீடு நோக்கி பயணித்தாள் சங்கமித்ரா.

அவள் அங்கிருந்து சென்ற கொஞ்சநேரத்திலேயே இந்தர்ஜித் கண்விழித்து விட்டதாக நர்ஸ் வந்து சொல்லவே தன் யோசனையை நிறுத்திவிட்டு அவசரமாக எழுந்து அறைக்குள் சென்றான்.

மெல்ல கண்திறந்து தன் நண்பனை பார்த்த இந்தர், “ஏன்டா என்னை காப்பாற்றின.. என் உயிர் போயிருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும் தெரியுமா?” என்று விரக்தியுடன் கேட்டான்.

ஏற்கனவே அவனுக்கு விபத்து என்ற பதட்டத்துடன் சற்றுமுன் யாரோ ஒரு  பெண்ணிடம் வாங்கிய திட்டும் சேர்ந்து வினோத் கோபத்தை அதிகரிக்கவே, “என்னடா பேசற.. சென்னையில் நம்ம கம்பெனிக்கு தனியாக ஒரு கிளை தொடங்கலாம்னு வந்து எல்லாமே வெற்றிகரமாக முடிஞ்சநேரத்தில் உங்கப்பா போன் பண்ணி அப்படி என்னதாண்டா சொல்லி தொலைச்சாரு? அதுவும் நீ தற்கொலைக்கு போகும் அளவிற்கு” என்று எரிந்து விழுந்தான்.

ஒருப்பக்கம் உடம்பில் வலி வின் வின்னேன்று தெறிக்க மற்றொரு புறம் நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும் என்று உடல்வலியை பல்லைக்கடித்து பொறுத்து கொண்டான் இந்தர்ஜித்.

அவனின் முகம் மாறுவதை வைத்தே, “இதெல்லாம் உனக்கு தேவையா சொல்லு பார்க்கலாம்” என்ற வினோத் அவனின் அருகே இருந்த சேரில் அமர்ந்தான்.

தன் நண்பனின் தவிப்பை பார்த்து, “நான் என்ன ஆசைப்பட்டா வலியையும், வேதனையும் விலைக்கு வாங்கி இருக்கேன். அப்பாதான் போன் பண்ணி அவரோட நண்பரோட மகளை நான் கல்யாணம் பண்ணிக்கிறதாம். எனக்கு வரும் மருமகளை நான் ரொம்ப நல்ல பார்த்துக்குவேன். நீ சரின்னு சொல்லு நான் எல்லா ஏற்பாட்டையும் கவனிக்கிறேன்னு சொல்றாருடா” என்று விரக்தியின் உச்சத்தில் வார்த்தைகளை சிதறவிட்டான்

“உங்க அப்பனுக்கு என்னதான் பிரச்சனை? சரி அவர் சொன்னால் அதுக்கு தற்கொலைக்கு முயற்சி பண்ணணுமா? அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கிறேன்னு சொல்லி இருக்கலாம். இல்ல வந்து பொண்ணை பார்த்த பிறகு சொல்றேன் அப்பான்னு சொல்லி இருக்கலாம் இல்ல” என்று கேள்விகளை அடுக்கினான் வினோத் கோபத்துடன்.

அவன் அதற்கு பதில் சொல்லும் முன்னரே, “சார் பெசண்டை டிஸ்டப் பண்ணாதீங்க” என்று நர்ஸ் கூறவே வினோத் இந்தர்ஜித்தை முறைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றான்.

மருந்தின் வீரியத்தினால் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல அவனின் நினைவுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட போது அவனின் கனவில் மித்ராவுடன் அவன் கடத்திய நாட்கள் அனைத்தும் படமாக விரிந்தது. சின்ன வயதில் அவள் செய்த சேட்டைகளில் தொடக்கி சற்று முன் தன்னோடு பேசியது வரை அனைத்தும் மனதில் ஆழப்பதிந்து இருந்தது.

மறுநாள் காலை கண்விழித்த இந்தர்ஜித்தை டாக்டர்கள் செக் செய்துவிட்டு, “நீங்க இவரை பத்திரமாக பார்த்துகோங்க. இன்னும் இரண்டு வாரங்களில் டிஸ்சார்ஜ் பண்ணிவிடலாம்” என்றதும் சரியென்று தலையசைத்தான் வினோத்.

அவனுக்கு தேவையான மாத்திரை மருந்தை கொடுத்துவிட்டு, “நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லடா” என்று நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்கினான்.

“அப்பா, அம்மா பிரியும்போதே என் தம்பியுடன் நான் வேற ஊருக்கு ஓடி போயிருந்தால் கூட இவ்வளவு வலியும், வேதனையையும் அனுபவிச்சிருக்க மாட்டேன். அன்னைக்கு அந்த முடிவை எடுக்காமல் விட்டதுதான் நான் செய்த பெரிய தவறுடா” என்றவன் கோபத்துடன் கூறவே வினோத் அமைதியாக இருந்தான்.

ஆனால் இத்தனை நாளாக மனதில் அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் மனதிலிருந்து முட்டி மோதி வார்த்தைகளாக வெளி வர தொடங்கியது.

“இவ்வளவு வருடங்கள் ஆனபிறகும் அப்பாவுக்கு, அம்மா மேல் என்ன கோபம்னு சத்தியமா எனக்கு தெரியலடா. ஒவ்வொரு நாளும் உங்கம்மா இப்படி அப்படின்னு சொல்லியே எனக்கு காதல், கல்யாணம் இரண்டுமே பிடிக்காமல் போயிருச்சு. நேற்று போன் பண்ணி அவரு வசதிக்கு ஏற்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னால் கோபம் வராமல் என்னடா வரும்”என்று வினோத்திடம் கேட்டான்.

அவன் சொன்னதை கேட்ட போது ஏனென்றே அறியாமல் நேற்று பேசிவிட்டு சென்ற அந்த பெண்ணின் நினைவு வரவே, “அதுக்காக சாகணும்னு முடிவேடுக்கனுமா? உன்னால் யாருன்னே தெரியாத அவ எல்லாம் என்னை கிழிச்சு தோரணமாக தொங்க விட்டுட்டுப் போனா..” என்றவனை புரியாத பார்வை பார்த்து வைத்தான் இந்தர்ஜித்.

“எந்த பொண்ணுடா” என்று அவன் கேட்கவே,

“நீ பேச்சை மாற்றாமல் பதிலை சொல்லுடா” அதட்டவே அவன் அமைதியாக இருந்தான்.

திடீரென்று ஞாபகம் வந்தவனாக, “ஆமா அப்பா மேல நீ சொல்ற குற்றச்சாட்டு சரிதான் என்றாலும் சாகும் அளவுக்கு கல்யாணத்தை வேறுக்கிறாயா?” வினோத் சந்தேகமாக புருவம் உயர்த்தவே இந்தர்ஜித் மௌனத்தை பதிலாக கொடுத்தான்.

அவன் அமைதி வினோத் பொறுமையை சோதிக்கவே, “இந்தர் ஒழுங்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா” என்று கடுப்புடன் கேட்டவனின் பார்வை அவனின் மீதே நிலைத்தது.

அவனின் பார்வையை தவிர்த்துவிட்டு வேறுபுறம் பார்த்தவன், “நான் இருப்பதால் தானே திருமணம் பண்ணிக்கோ என்று கட்டாயப்படுத்துகிறார். நானே இல்லாமல் போயிட்டா அப்போ யாரிடம் போய் கல்யாணம் பண்ணிக்க சொல்ல முடியும்?” என்று நிறுத்தி நிதானமாக கேட்டான்.

வினோத் சிந்தனையோடு இந்தரை பார்த்து, “அதெல்லாம் சரி இத்தனை வருடமாக தம்பியை பார்க்க கூட நீ ஏண்டா மலையகம் போகாமல் இருக்கிற? காரணம் உங்க அம்மா மட்டுமா இல்ல வேற ஏதாவது இருக்கிறதா?” என்று கிடுக்குபிடி போட்டான்.

மலையகம் என்றவுடன் முத்துவின் மலர்ந்த முகமே மனக்கண்ணில் வந்து போகவே அதுவரை இறுகிபோயிருந்த இந்தர்ஜித் முகம் இளகியது.

“ம்ஹும்.. என்னால் மலையகம் போக முடியாதுடா..” என்றவன் ஒரு மாதிரியான குரலில் கூறினான்.

“அதுதான் ஏன்னு சொல்லுடா” என்று நிதானமாக கேட்டான்..

அவன் பேச்சை விடாமல் வளர்ப்பதை கவனித்த இந்தர்ஜித், “ஏண்டா இப்படி கேள்வி கேட்டு என்  உயிரை வாங்கிற” என்று பல்லைக் கடித்தான்.

வினோத் கோபத்தை தொடங்கும் முன்னே, “ஆமா நேற்று எனக்கு அடிப்பட்ட விஷயம் உனக்கு எப்படிடா தெரியும்?” என்று லாவகமாக பேச்சை மாற்றினான் இந்தர்ஜித்.

“நேற்று ரோட்டில் உனக்கு ஆக்சிடென்ட் ஆனது பார்த்து சுரேஷ் என்ற ஒருத்தன் தான் ஹாஸ்பிட்டலில் கொண்டு வந்து சேர்த்துவிட்டு எனக்கு தகவல் கொடுத்தான். உனக்கு நிறைய இரத்தம் வீணாகப் போயிருச்சு. அப்புறம் அவனோட பிரெண்ட் மூலமாக உனக்கு இரத்தம் கொடுக்க ஏற்பாடு செய்தான். அந்த பொண்ணு மட்டும் வந்து இரத்தம் கொடுக்கல என்றால் உன்னை உயிரோடு பார்த்திருக்கவே முடியாது” வினோத் நடந்த அனைத்தையும் அவனிடம் ஒப்பித்தான்.

சட்டென்று அமைதியாக இந்தர்ஜித் மனதில் ஒரு பெண் தன்னிடம் பேசிய அனைத்தும் நினைவு வரவே, “ஏய் நேற்று மித்து வந்து என்னுடன் வந்து பேசிட்டு போகும்போது நீ எங்கே இருந்த?” என்று சந்தேகமாகவே அவனை பார்த்தான்.

“என்னடா சொல்ற? மித்து எப்படி இங்கே வர முடியும்? அவ அங்கே மலையகத்தில் தானே இருப்பா. அவளுக்கும் சென்னைக்கும் என்ன சம்மதம்?” கடுப்புடன் கேட்டான். வினோத் கேள்வியில் நியாயம் இருந்தபோதும் அவனின் மனம் அதை ஏற்க மறுத்தது.

“இல்லடா நேற்று மித்து இங்கே வந்தாள். என்னோடு பத்து நிமிஷம் பக்கம் பேசிட்டு மறுபடியும் உன்னை சந்திக்கும்போது நல்ல ஒரு சூழ்நிலையில் சந்திக்கணும்னு சொல்லிட்டுப் போனாளே.. நான் அதை உணர்ந்தேன்.. எனக்கு சிகிச்சை நடக்கும்போது அவ இங்கேதான் இருந்திருக்கணும்” என்று அவன் உறுதியாக கூறியவனின் முகத்தில் ஒரு பரபரப்பு.

‘அப்போ அந்த இரத்தம் கொடுக்க வந்த பொண்ணுதான் இங்கே இருந்தாள்’ என்ற நினைவுடன், “அப்போ உனக்கு பிளட் கொடுக்க வந்த பொண்ணுதான் எனக்கு முன்னாடி உன்னை பார்த்துவிட்டு கிளம்பி போனாள். ஒருவேளை அவ உன்னிடம் பேசி இருக்கலாம்” என்று கூறிய வினோத் தீவிரமான சிந்தனையில் மூழ்கினான்.

“அவ பேரு என்னன்னு கேட்டியா?” என்று இந்தர்ஜித் அடுத்த கேள்வியைத் தொடுக்க மறுப்பாக தலையசைத்தான்.

“என்னடா இவ்வளவு தூரம் வந்துட்டு போயிருக்கிற? உனக்கு அவளை அடையாளம் கண்டுபிடிக்க முடியலையா?” என்று கோபத்துடன் எரிந்து விழுந்தான்.

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த வினோத், “உன்னை பற்றிய சிந்தனையில் இருந்ததால் அவளிடம் பெயரைக் கூட கேட்கல. ஆனால் அவளை நீ மித்துவுடன் கம்பேர் பண்ணியது தப்பே இல்லடா. நேற்று என்னை அந்த அளவிற்கு திட்டிட்டு தான் கிளம்பி போனாள். நான் அப்போவே யோசிச்சேன் இந்த பொண்ணை எங்கோ பார்த்த மாதிரி இருக்குன்னு தோணுச்சு. ஆனால் அது மித்துவாக இருக்க வாய்ப்பே இல்ல” என்று தெளிவாக குழப்பியவனை பார்வையால் எறிந்தான்.

அதுவரை மித்துவைப் பற்றிய எண்ணங்கள் இல்லாமல் இருந்த வினோத்திற்கு ஏதோ புரிவது போல இருந்தது. இந்தர்ஜித் இதுவரை மலையகம் போகாதது. கல்யாணம் என்றவுடன் அவன் தற்கொலைக்கு முயன்றது. தன் கேள்விக்கு அவன் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தது என்று அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வந்து நிற்கவே அவனின் மனதில், ‘இவன் மித்துவை விரும்புகிறானா?’ என்ற சந்தேகம் எழுந்தது.

“இப்போ வந்துட்டு போன பொண்ணு யாரு என்ற கேள்வி ஒருப்பக்கம் இருக்கட்டும். ஆமா நீயேன் மலையகம் போகவே இல்ல. அதுவும் எட்டு வருடங்கள் உன் தம்பியைப் பார்க்க கூட போகாமல் இருக்கிறாயே அதுக்கு காரணம் மித்துவா?” தன் மனதில் எழுந்த கேள்வியை வெளிப்படையாக கேட்டான்.

சட்டென்று நிமிர்ந்து இந்தர்ஜித், “ம்ம் அவதான் முக்கிய காரணமே. மித்துவுடன் இருந்தவரை என் வாழ்க்கையில் வெறுமை இல்லடா. ஒரு நொடியில் மனநிலையை மாற்றிவிட்டு விடுவாள். அவ சிரிப்பு சத்தமும், எந்த நேரமும் பட்டாம்பூச்சி மாதிரி சுற்றிவரும் அவகிட்ட ஏதோவொரு மேஜிக் இருக்குன்னு சொன்னால் நீ நம்புவியா?” என்றவனை அதிசயத்தை பார்ப்பது போல வாயைப் பிளந்தபடி பார்த்தான் வினோத்.

அவன் மௌனம் சாதிக்கவே, “நான் அங்கிருக்கும் வரையில் அவளோடு இருந்த நாட்களில் நட்பை தாண்டிய ஏதோவொன்று இருந்ததை புரிஞ்சிக்கவே இல்ல. ஆனால் மலையகம் விட்டு நான் கொழும்பு போவதாக சொன்னபோது அவ விளையாட்டாக பேசிவிட்டு விலகிப்போய் என் பிரிவு தாங்காமல் அழுதபோது எல்லாமே மாறிபோச்சு வினோத்” அத்தனை நாளாக மனதில் பூட்டி வைத்திருந்த விஷயத்தை அவனிடம் கூறினான்.

“அப்பா, அம்மாவின் பிரச்சனைகளை பார்த்தே வளர்ந்த எனக்கு அங்கிருந்து கிளம்பும் வரை மித்ராவின் மீது வைத்திருந்தது காதல் என்று புரியல. ஆனால் அன்னைக்கு எல்லாமே தெளிவாக புரிஞ்சிது. அதுக்குப் பிறகு ஒருநாள் கூட அவளை நினைக்காமல் இருந்ததே இல்லடா.  மலையகம் போனால் நான் எனக்கு என்று போட்டு வைத்திருக்கும் கட்டுப்பாடுகளை அவகிட்ட காதலை சொல்லிவிடுவேனோ என்று பயம்” என்று தன் மனதிலிருந்த பாரத்தை நண்பனிடம் இறக்கி வைத்தான்.

வினோத்திற்கு இந்தர்ஜித் சொல்வது புரியாமல் போகவே, “காதலை சொல்வதற்கு ஏண்டா பயப்படணும். என்னைக்கு இருந்தாலும் ஒருநாள் நீ அவகிட்ட உன் காதலை சொல்லிதானே ஆகணும்” என்று கேட்கவே அவன் மறுப்பாக தலையசைத்தான்.

“இல்லடா காதல், கல்யாணம் என்ற ஆசையே வராத அளவிற்கு அப்பா அதன்மேல் அறியாத வயதில் மனதில் வெறுப்பை விதைச்சிட்டார். அதையும் தாண்டி நான் அவளை காதலிக்கிறேன் என்ற விஷயம் எனக்கு அதிசயமா இருக்கு. நான் மலையகம் போகும்போது அங்கே மித்ராவை பார்த்தால் இதெல்லாம் தூக்கி போட்டுட்டு அவளிடம் காதலை சொல்லி கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று சில நொடிகள் நிறுத்தி மௌனமானான் இந்தர்ஜித்.

“அதுக்கு பிறகு நான் மனதில் வளர்த்து வைத்திருக்கும் வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாத்திடுச்சு என்றால் அவளோட வாழ்க்கை வீணாக போயிரும். நானும் எங்க அப்பா மாதிரியே மாறிவிடுவேனோ என்று எனக்கு பயமாக இருக்குடா” இத்தனை நாள் இல்லாமல் திடீரென்று தன் மனதில் இருக்கும் கவலைகளையும், அழுத்தத்தையும் கொட்டி தீர்த்த நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று வினோத்திற்கு புரியவில்லை.

அவனின் மனநிலை உணராத இந்தர்ஜித், “அதுதான் இன்னைக்கு வரைக்கும் மலையகம் நான் போகவே இல்ல. எனக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கும் மித்து காலம் முழுக்க சந்தோசமாக இருக்கணும் என்றால் நான் மலையகம் போகவே கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அதனால் தான்டா இன்னும் என் தம்பியைக் கூட போய் பார்க்காமல் இருக்கேன்.” என்று தன் மனதோடு வைத்திருந்த விஷயங்களை நண்பனிடம் பகிர்ந்துவிட்டு விழி மூடியவனின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.

தன்னை ஒருவன் உயிருக்கு உயிராக நேசிப்பதை அறியாத மித்ரா சென்னையில் இருந்து தந்தையுடன் கிளம்பினாள். அவள் இருக்கும் இடத்திற்கு போகவே மாட்டேன் என்று அவன் சபதம் எடுத்திருக்க, அவன் இருக்கும் கொழும்புவை நோக்கி சந்தோசமாகப் பயணித்தவளின் மனம் முழுவதும் இந்தரின் நினைவுகளே..!

Leave a Reply

error: Content is protected !!