Malar – 1

roZL52b-ed009e67

Malar – 1

அத்தியாயம் – 1

“பளார்” என்ற சத்தத்தைகேட்டு அங்கிருந்த அனைவரின் கவனமும் அவளின் பக்கம் திரும்பியது. இருவரும் கண்ணாடி தடுப்பின் அருகே நின்றபோதும் வெளியே நின்றவர்களின் பார்வை அவர்களையே சுற்றி வந்தது. டெய்லர், கடையின் சேல்ஸ்மேனில் தொடக்கி வாட்ச்மேன் வரை எல்லோரின் கவனமும் அவர்களின் மீதே நிலைத்தது. 

பச்சை நிறத்தில் வெள்ளை நிற பார்டர் வைத்த காட்டன் சேலையை நேர்த்தியாக கட்டியிருந்த அவளின் தோளில் இன்ச் டேப் தொங்கிக் கொண்டிருந்தது. நேராக நேர் எடுத்து அழகான பின்னலிட்ட ஜடை இடையை தொட்டது.

ஐந்தரை அடி உயரத்தில் பளிங்கு முகத்துடன் பார்ப்பவர்களை கவரும் புன்னகையுடன் வலம்வரும் பெண்ணின் விழிகள் ரௌத்திரத்தில் சிவந்திருக்க, அவளின் எதிரே நின்றவனின் கன்னம் இவள் அடித்த அடியில் தக்காளி பழம்போல பழுத்து இருந்தது.

“மத்த பொண்ணுங்க மாதிரி நீ பக்கம் வந்ததும் பல்லை காட்டிட்டு நிற்பேன்னு நினைச்சியா?” கனல் மின்னும் கண்களோடு அவனை ஏறிட்டாள். அவளின் எதிரே கன்னத்தை கைவைத்தபடி நின்றபடி அவளை கொலைவெறியுடன் பார்த்தவனின் பார்வை கடையைச் சுற்றி வந்தது.

அனைவரின் முன்னிலையில் கடையின் முதலாளி என்று பாராமல் தன்னை அவமானப்படுத்திவிட்ட ஆத்திரத்தில், “ஏய் ஒரு ஆசரமத்தில் வளர்ந்த உனக்கே இவ்வளவு திமிரா? ஏன் இதுவரை உன்னை யாரும் தொட்டு பேசியதே இல்லையோ? நீ என்ன கலியுக கண்ணகியா?” தான் நினைத்து நடக்கவில்லை என்ற எரிச்சலில் கத்தினான்.

“ஆமா நான் கலியுக கண்ணகிதான். என்னடா பண்ண முடியும் உன்னால? எங்கே இன்னொரு முறை கையை நீட்டு பார்க்கலாம்” என்றவளின் கரங்கள் கத்திரிக்கோலை எடுக்க பயத்தில் இரண்டடி பின்னே நகர்ந்தான்.

அவனின் விழிகளை நேராக பார்த்த செவ்வந்தி, “நீ சம்பளம் கொடுக்கிற காரணத்திற்காக அடங்கி போவேன்னு நினைக்காதே. நான் பாசத்துக்கு தான் அடிபணிஞ்சி போவேன். உன்னை மாதிரி ஆளுங்களுக்கு தலைவணங்கி சலாம்போட நீ வேற ஆளை பாரு” கையில் இருந்த கத்திரிக்கோலையும், கழுத்தில் போடப்பட்டிருந்த இன்ச் டேப்பையும் எடுத்து வீசிவிட்டு தன் ஹென்பேக்கை எடுத்துகொண்டு உடனே கடையைவிட்டு வெளியேறினாள்.

அவளின் கோபம் அறிந்திருந்த தோழி ஒருத்தி காரணம் புரியாமல், “ஸாரி சார்” என்று சொல்லிவிட்டு உடனே கடையைவிட்டு வெளியே வந்தவள் ஆவேசமாக சென்றவளின் கரம்பிடித்து தடுத்தாள் மைதிலி.

“ஏய் செவ்வந்தி உள்ளே என்ன நடந்துச்சு எதுக்கு நீ இவ்வளவு கோபமாக ஓனரை அடிச்சிட்டு வந்துட்டே இருக்கிற” காரணம் புரியாமல் கேட்டாள்.

சட்டென்று நிமிர்ந்து தோழியை நோக்கி,“எனக்கு தொடுவது, உரசுவது எதுவும் பிடிக்காதுன்னு உனக்கே தெரியும் இல்ல” என்று கேட்க அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.

சற்று மூச்சை இழுத்துவிட்டு மனதை சமநிலைக்கு கொண்டு வந்து, “அந்த ஆளு என் இடுப்பை பிடிச்சு கிள்ள வந்தான். இடுப்பில் கை வைத்தும் எனக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது அதன் கையை நீட்டிட்டேன்” சாலையில் சென்ற வாகனங்களின் மீது கவனத்தை திருப்பினாள்.

அவள் சொன்னதைகேட்டு மைதிலிக்கு இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. நான்கு வருடமாக வேலை பார்க்கும் இடத்தில் அப்படியொரு விஷயம் நடந்ததில்லையே என்ற எண்ணத்துடன் தோழியை ஏறிட்டாள்.

 “அவர் அப்படிப்பட்டவர் இல்லையே” என்ற அவளை முறைத்த செவ்வந்தியின் எரிச்சல் அதிகமானது.

“என்னை அவன் ரொம்பநாளாக நோட் பண்ணிட்டு இருந்தான். இன்னைக்கு துணி வெட்டும்போது எதையோ எடுக்க வரமாதிரி அருகில் வந்து சட்டுன்னு இடுப்பை பிடிக்கவும் கோபம் வந்து அடிச்சிட்டேன்” என்றாள் கோபம் குறையாமல்.

அவளை தீர்க்கமாக பார்த்த மைதிலி, “இவனை இப்போ அடிச்சதால் இனிமேல் இங்கே உனக்கு வேலை இல்லன்னு தெளிவாக தெரிஞ்சிபோச்சு” கோபத்துடன் கூறினாள்

 “இப்போ அதுதான் ரொம்ப முக்கியமா? ஆசரமத்தில் வளர்ந்ததால் எப்படியும் இதில் எல்லாம் கைதேர்ந்த பெண்ணாக இருப்பேன்னு தப்புகணக்கு போட்டான். அதன் கன்னம் சிவக்க இரண்டு கொடுத்துட்டு வந்தேன். ஏன் ஆசரமத்தில் படிக்கிற பொண்ணுங்க ஒழுக்கமாக தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் இருக்க மாட்டாங்களா” என்ற அவளின் கேள்விக்கு மைதிலியிடம் பதில் இல்லை.

அவள் கேட்பதும் தவறில்லை என்ற எண்ணத்தில் மைதிலி நின்றிருக்க, செவ்வந்தியின் பார்வை அவளின் மீது படிந்தது.

‘இன்னும் சற்றுநேரம் அங்கே நின்றால் தன்னை கரித்து கொட்டிவிடுவாள்’ என்று புரிந்துகொண்டு, “சரி வா கிளம்பலாம்”என்று அவளை இழுத்துக்கொண்டு ஜூஸ் கடைக்கு சென்றவள் இருவருக்கும் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் கொடுத்துவிட்டு அங்கிருந்த டேபிளில் அமர்ந்தனர்.

“இல்லடி எனக்கு ஆப்பிள் வேண்டாம் முலாம்பழம் ஜூஸ் போட சொல்லு” செவ்வந்தி வேகமாக சொல்லவே மைதிலியின் உதட்டில் புன்னகை அரும்பியது.

“அண்ணா ஆப்பிள் வேண்டாம் முலாம்பழம் ஜூஸ் போடுங்க” என்றவள் அவளின் புறம் திரும்பினாள். கடையில் இருந்த அனைவரையும் கதிகலங்க வைத்துவிட்டு, இங்கே அமைதியின் மறு உருவமாக அமர்ந்து செல்லில் எதையோ தேடிக்கொண்டு இருப்பதை பார்த்து அதுவரை இருந்த டென்ஷன் முற்றிலும் மறந்து போனது மைதிலிக்கு.

“ஏண்டி அங்கே ஓனரை லெப்ட் அண்ட் ரையிட்  வாங்கிட்டு வந்துட்டு இங்கே ஜில்லுன்னு ஜூஸ் அதுவும் முலாம்பழம் தான் வேண்டுமோ”  ஏற்ற இறக்கங்களோடு சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“அந்த ஆளை அடிச்சிட்டு வந்து மூஞ்சை முக்கால்முலம் தூக்கி வெச்சிட்டு, ஐயோ வேலை போயிருமே.. இனி என்ன பண்றதுன்னு கண்ணீர் வடிச்சிட்டு உட்கார்ந்து இருப்பேன்னு நினைச்சியா?” என்று அவள் கேட்ட கேள்வியில் அசந்தே போனாள் மைதிலி.

இதுதான் செவ்வந்தி. என்ன பிரச்சனை வந்தாலும் நேரடியாக சமாளிக்கும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் நிறைந்த பெண் என்பதை அவளோடு பழகிய கொஞ்சநாளில் புரிந்து கொண்டாள் மைதிலி.

பத்தாம் வகுப்பு முடிந்ததும் பேஷன் டிசைனிங் முடித்து அதற்கு மேல் பேஷன் டிசைனிங் மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு அந்த கடையில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்கிறாள். எந்த விசயத்திற்கும் பயந்து போகாமல் தானே முன்னின்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பாள்.

அவளின் பேச்சில் ஆச்சர்யமடைந்த மைதிலி, “அப்போ நீ இதெல்லாம் பண்ணாமல் வேற என்ன செய்ய பிளான் போட்டு வெச்சிருக்கிற”  ஆர்வத்துடன் கேட்கும்போது இருவரும் ஆர்டர் கொடுத்த ஜூஸ் வந்துவிட அதை பருகினாள் செவ்வந்தி.

தன் மனதை நொடியில் கணித்துவிட்ட தோழியை பார்வையால் மெச்சிக்கொண்டு, “நான் படிக்க நினைத்து இருந்தால் வேறு எந்த துறைக்கு வேண்டும் என்றாலும் தேர்வு செஞ்சிருக்கலாம். ஆனால் நான் இதை தேர்ந்தெடுக்க காரணம் இதில் மற்றவங்க தலையீடு இருக்காது நம்ம விருப்பம்போல இருக்கலாம் என்று தான் இந்த துறை தேர்வு பண்ணேன்” என்றவள் தொடர்ந்து,

“இப்போ படிப்பு முடிந்து மூன்று வருஷம் தொழில் கத்துக்கிட்டேன். நான் வேலை செய்து சேர்த்து வைத்த பணம் கணிசமாக பேங்கில் சேர்ந்து இருக்கு. அதுகூட பேங்க் லோன் போட்டு ஒரு ஜவுளிக்கடை மாதிரி ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்” என்றாள் சர்வசாதாரணமாக.

சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்த மைதிலி, “நீ இங்கேயே எப்படி முடியும்?” என்றாள் அவள் சந்தேகமாக.

“நான் இங்கே இருக்க போவதில்லையே” அவள் முடிவை பட்டென்று சொல்லிவிட மைதிலியின் முகத்தில் கலக்கம் சூழவே, “ஏன் திடீர்னு இப்படியொரு முடிவு?” அவளை கேள்வியோடு ஏறிட்டாள்.

“நான் இங்கே ஆசரமத்தில் படித்த விஷயம் தெரியும் என்பதால் தானே இந்தளவுக்கு என்னைத் தரக்குறைவாக எடை போடுறாங்க? அதான் நான் வேற ஊருக்கு போலாம்னு இருக்கேன்” அவள் காரணத்தைத் தெளிவாக எடுத்துரைக்க இனி பேசி பயனில்லை என்பதால் அவள் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை கவனித்தாள்.

முதல் வேலையாக அவள் வேலை செய்த ஜவுளிகடையில் கணக்கு முடிக்கபட்டது. அடுத்து அவள் தங்கியிருந்த ஹாஸ்டலை காலி செய்துவிட்டு கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றனர். மைதிலி பேசியபடி வர செவ்வந்தியோ வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. அவள் ரயில் நிலையத்தில் இறங்கியதும்,

“எந்த ஊருக்கு போறேன்னு சொல்லிட்டுப் போடீ. என்னால் முடிந்தால் நானும் அங்கேயே வந்துவிடுகிறேன்” என்றாள் மைதிலி தோழி பிரிந்து தனியே செல்கிறாளே என்ற கவலையோடு கூரினால்.

அவளின் கலக்கத்தை போக்கும் விதமாக,“நாமக்கல் தான் போகிறேன். உனக்கு லீவ் கிடைத்தால் நேரில் வா மைதிலி” என்று சொல்லிவிட்டு தன் பொருட்களோடு ரயில் ஏறினாள்.  

 “ஜாக்கிரதையாக இருடி. எனக்கு நேரம் கிடைக்கும்போது நான் கண்டிப்பாக அங்கே வரேன்” என்று சொல்ல அவளும் சரியென்று தலையசைக்க ரயில் கிளம்பியது.

நாளை பற்றிய சிந்தனையை ஒதுக்கிவிட்டு இயற்கை அழகினை ரசித்தாள் செவ்வந்தி.

நாமக்கல் நகரின் மைய பகுதியில் கம்பீரமாக இருந்த வீட்டில் காலைபொழுது விடிந்து சூரிய வெளிச்சம் அறையில் பரவியதை கூட உணராமல் ஆழ்ந்த துயிலில் இருந்தான் வெற்றி வேந்தன்.

அவன் கண்விழித்து பார்க்கும்போது மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்க, ‘இவ்வளவு நேரம் தூக்கிட்டேனா’ என்று குளியலறைக்குள் புகுந்தான்.

அவன் அறையைவிட்டு வெளியே வர வீட்டில் இருந்த மற்ற மூவரும் பரபரப்பாக எங்கோ கிளம்புவதை பார்த்த வெற்றி கேள்வியாக புருவம் உயர்த்தினான். அந்த வீட்டில் அவனை யாரும் கண்டுகொள்ளாமல் தங்களின் வேலையில் கவனமாக இருந்தனர்.

“அம்மா எனக்கு ஒரு கப் காபி” என்ற மகனிடம்,  “நான் வெளியே கிளம்பிட்டு இருக்கேன்.. நீயே போட்டு குடி” என்று சொல்லிவிட்டு தன் பட்டுப்புடவையின் மடிப்பை சரி செய்தார் விமலா.

அவன் வேறு எதுவும் பேசாமல்  சமையலறைக்குள் நுழைந்து காபிபோட்டு எடுத்துவந்து ஹாலில் அமர, “அம்மா நான் கிளம்பிட்டேன்” என்று அறையைவிட்டு வெளியே வந்தாள் ஜமுனா.

அவனின் தந்தை ஏற்கனவே தயாராகி அமர்ந்திருப்பதை கண்டு, “என்னப்பா ஏதாவது விஷேசமா?” என்று கேட்டான் மகன்.

“ம்ம் நம்ம புதுசாக ஒரு கம்பெனி தொடங்க போறோம். இன்னைக்கு அதோட திறப்புவிழா. அதன் மூன்று பேரும் கிளம்பிட்டு இருக்கோம்” என்றதும் சட்டென்று அவனின் முகம் வாடிப்போனது. தன்னிடம் வீட்டில் இருந்த யாரும் இதுபற்றி சொல்லவில்லையே என்று மனம் வருந்தினான் வெற்றி.

எப்போதும் அண்ணா என்று தன்னையே சுற்றி வரும் தங்கை ஜமுனா கூட இதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லையே என்ற எண்ணம் மனதை காயமாக்கியது. அவர்கள் தன்னை அழைக்கவில்லை தகவல் மட்டும் சொல்றாங்க என்ற உண்மை அவன் மூளைக்கு புரிந்தாலும், மனம் அதை ஏற்றுகொள்ள மறுத்தது.

“நம்ம புது கம்பெனிக்காக எவ்வளவு தூரம் அலைஞ்சிருப்பீங்க. என்னிடம் ஒரு வார்த்தை சொன்னால் நானும் என்னால் முடிந்த உதவியை செய்துருப்பேன் இல்ல” மனம் தாளாமல் கேட்டுவிட ஏண்டா கேட்டோம் என்று மனம் வருந்தும் அளவிற்கு அவன் ஒரு பதிலை சொன்னார்.

“உன்னிடம் சொன்னால் இப்போ இதுவும் லாஸில் தான் போய் முடியும். இதுக்கு முன்னாடி எத்தனை கம்பெனி தொடங்க நீ ஹெல்ப் பண்ணது எல்லாமே தோல்வியில் தான் முடிஞ்சிருக்கு. உன்னோட பெயரில் மட்டும்தான்டா வெற்றி இருக்கு. மற்றபடி நீ தொட்டது எதுவும் தொலங்காதுன்னு தெளிவாக தெரிந்துவிட்டதே. இதுக்கு பிறகும் உன்னிடம் இதுபற்றி சொன்னால் நான்தான் அடி முட்டாள்” என்று சொல்ல விமலா அவரின் பின்னோடு அமைதியாக நின்றிருக்க தன் முகம் மாறாமல் இருக்க ஜமுனா கஷ்டப்பட வேண்டியதாக இருந்தது.

அவன் தலைகுனிந்து அமர்ந்துவிட, “விமலா, ஜமுனா இருவரும் கிளம்பிட்டீங்களா” என்ற கேள்விக்கு அவர்கள் ஒப்புதலாக தலையசைக்க, “நானும் வரட்டுமா அப்பா” என்று கேட்டான் வெற்றி தலை நிமிராமல்.

“நீ வர வேண்டாம்” என்றவர் எழுந்து காருக்கு செல்ல மகன் தாயின் முகத்தை ஏறிட்டான். விமலா மெளனமாக கணவனை பின்தொடர்ந்து சென்றுவிட கடைசியாக அவனின் பார்வை தங்கையின் மீது வந்து நிலைத்தது.

“அண்ணா நீ எங்களோடு வர வேண்டாம்” என்றவள் இரண்டடி எடுத்து வைக்க தமையனின் குரல் அவளைத் தடுத்தது.

“நீ கூட என்னை எதுக்கும் கைலாகதவன்னு நினைச்சிட்ட இல்ல ஜமுனா” என்றவனின் உதடுகளில் கசந்த புன்முறுவலோடு தங்கையை ஏறிட்டான்.

அவனின் பேச்சில் பதறிப்போன ஜமுனா, “அண்ணா என்ன பேச்சு பேசற நீ? நான் என்னைக்காவது உன்னை அப்படி நினைச்சு இருக்கேனா?” என்று கவலையோடு கேட்டவள்,

“அந்தாள் நிறுவனம் தொடங்கும் இடத்திற்கு நீ வந்தால் உன்னைத்தான் தேவை இல்லாமல் அவமானப்படுத்துவார். என் அண்ணா தலைகுனிந்து நிற்பதை பார்க்க நான் விரும்பல. அவரோட கம்பெனி திறப்பு விழாவிற்கு நீ வருவதைவிட வேற ஏதாவது கம்பெனிக்கு இண்டர்வ்யூ போவது மேல் இல்லையா?” என்று அவனைச் சமாதானம் செய்ய தங்கையின் பேச்சில் அவனின் முகம் மலர்ந்தது.

“என் செல்லம்மா” என்று அவளின் தலையை செல்லமாக கலைத்துவிட்ட வெற்றி, “நீ பத்திரமாக போயிட்டு வா. அப்பா உன்னைக் கவனிக்க மாட்டார், அம்மா உன்னைக் கண்டுக்காது. அதனால் கவனமாக இருக்கணும்” என்று அவளுக்கு அறிவுரை சொல்லி வழியனுப்ப வாசல் வரை வந்தான் வெற்றி.

அவள் சரியென்று தலையசைத்தபடி காரில் கிளம்பிட பெருமூச்சுடன் வீட்டிற்குள் நுழைந்தான் வெற்றிவேந்தன். அவனின் பெயரில் மட்டும் தான் வெற்றியே தவிர அவன் இன்றுவரை தொட்டது அனைத்தும் தோல்விதான். அதனால் நிறைய பணம் நட்டம் ஆனதால் மகனை வெறுத்துவிட்டார் நரசிம்மன். கணவனின் பேச்சை மீறி எதையும் செய்யாத விமலாவும் மகனின் பக்கம் நிற்க மறுத்துவிட்டார்.

அவனின் தங்கை ஜமுனா மட்டும் தான் அவனின் மீது முழு நம்பிக்கை வைத்து இருக்கிறாள். அவனுக்காக வீட்டில் அதிகம் சண்டை போடுவது அவளாக மட்டுமே இருக்கும். அவனுக்கு தங்கை தான் உலகம்.

எம்.பி.ஏ முடித்துவிட்டு சில வருடங்களாகவே வேலை தேடி கொண்டிருக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!