Malar – 11

images - 2020-11-04T134304.548-dbd08846

Malar – 11

அத்தியாயம் – 11

மாலைநேரம் மேற்கு வானம் செவ்வானமாக சிவந்தது. கடலலைகள் கரையை மெல்ல தழுவிச் சென்றது. தென்றல் காற்று சிலுசிலுவென்று வீசிட மணலில் கால் புதிய கணவனும் – மனைவியும் கடலோரம் விளையாடும் மற்றவர்களை வேடிக்கைப் பார்த்தபடி நடந்து சென்றனர்.

ஏற்கனவே மனோஜ் வந்து சென்றது பற்றி மனைவியிடம் கூறியிருந்தார். நேற்று திடீரென்று வந்து, “நான்  நாமக்கல் போகிறேன். உன் நம்பர் கொடுப்பா” என்று கேட்கவே முதலில் மறுத்தார் ஜெகதீஸ். ஆனால் அவரின் மறுப்பை பொருட்படுத்தாமல் அவரின் நம்பரை வாங்கிக்கொண்டு சென்றார்.

“மனோஜ் அண்ணா வந்துட்டு போனது மனசுக்கு நிறைவாக இருக்குங்க” என்று மனைவி சொல்ல அவரும் ஒப்புதலாக தலையசைத்தார்.

அங்கிருந்த மணலில் அமர்ந்த சங்கீதா, “முதலில் நிறைய மனசில் போட்டு குழப்பிக்குவேன். இப்போதெல்லாம் வேற எந்த சிந்தனையும் இல்லாமல்  மனசு ரொம்ப தெளிவாக இருக்கு. நம்ம பொண்ணு எங்கயோ இருக்கிற. நேரம் வரும்போது கண்டிப்பாக வருவா என்ற நம்பிக்கை வந்திடுச்சுங்க” என்று அவர் போக்கில் பேசிக்கொண்டே சென்றார்.

“நானும் அதுதான் கீதா நினைக்கிறேன். அதுமட்டும் இல்லாமல் இந்த வருஷம் கிருஸ்மஸ் நாள் வேற நெருங்கிட்டே இருக்கு. ஒருவேளை நம்ம மலர் நம்மள தேடி வரும் நாள் நெருங்கிடுச்சு என்று மனசுக்குள் ஒரு எண்ணம் ஓடிட்டே இருக்கு. பொறுமையாக இருந்து பார்க்கலாம் சங்கீதா. இதுவரை நடந்த அனைத்தும் நல்லதாக நடந்தது. இதுவும் நல்லதாவே நடக்குமென்று நம்புவோம்” என்றவர் சொல்ல மனையாளும் அமைதியாக கேட்டுக் கொண்டார்.

இடைபட்ட நாட்களில் சங்கீதா முற்றுலுமாக மாறிப் போயிருந்தார். எந்த மகளின் எண்ணங்கள் அவளை பதினைந்து ஆண்டுகள் முடக்கி வைத்திருந்ததோ அதே நினைவுகளைக் கொண்டே தன்னை மீட்டெடுத்தார்.

இப்போதெல்லாம்  மகள் வருவாளா என்ற கேள்விக்கு பதிலாக, ‘என்மகள் வரும்போது நான் ஒரு ஜெடம் மாதிரி இருந்தால் அவள் துடிச்சி போயிருவா. அதுக்காகவே நான் மாறனும்’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு அந்த தாக்கத்தில் இருந்து வெளிவர தொடங்கிவிட்டார்.

தன் மனையாள் மீண்டும் வருவதைக் கண்டு சந்தோசப்படுவதா? காணாமல் போன மகள் தேடி வரவில்லை என்று வருத்தபடுவதா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அஸ்தமனமாகும் சூரியனை வேடிக்கைப்  பார்த்தார்.

‘அஸ்தமனம் என்றது உலகமே இருண்டு போவதில்லை. நாளை மீண்டும் சூரியன் உதிக்கும்’ என்ற நம்பிக்கையுடன் தன்னை தேற்றிக் கொண்டவர் எழுந்து நிற்க, “வீட்டுக்கு போலாம்” என்றவருடன் எழுந்து வீடு நோக்கி சென்றார் சங்கீதா.

இரவு உணவை முடித்துக்கொண்டு கணவனின் அருகே படுத்த சங்கீதா உடனே உறங்கிப் போக, மற்ற சிந்தனைகளோடு விடியும் வரையில் தூங்காமல்  விழித்திருந்தார் ஜெகதீஸ்.

அதன்பிறகு வந்த நாட்களில் புதிய கடை தொடங்கப்பட்டு இவர்களுக்கு வேலை குறைந்தது. அதை நினைத்து மற்றவர்கள் மனம் வருந்திட ஒருநாள் சரண்யா வாசலில் அமர்ந்து இருப்பதை கண்ட செவ்வந்தி, “என்ன காலையில் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிற?” என்ற கேள்வியுடன் அவளின் அருகே அமர்ந்தாள்.

அவளின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்ட சரண்யா, “அக்கா அந்த கடை தொடங்கியதில் இருந்தே நமக்கு வேலையில்லாமல் போயிடுச்சு. அந்தபக்கமிருந்து வரும் கஸ்டமர் எல்லாம் அங்கேயே தைச்சுக்கிறாங்க” என்று வருத்தத்துடன் கூறினாள்.

“அவங்களுக்கு எங்க பிடிக்குதோ அங்கேயே துணி எடுக்கிறாங்க தைக்கிறாங்க. இதுக்கெல்லாம் கவலைப்பட்டுட்டு உட்கார்ந்திருப்பியா? முதலில் எழுந்துபோய் வேலையைப் பாரு.. நமக்குன்னு வர இருப்பதை தடுக்க யாராலும் முடியாது. சும்மா நெகட்டிவ்வாக நினைச்சிட்டே இருந்தான்னு வை என்னிடம் அடிதான் வாங்குவ” என்று மிரட்டிவிட்டு எழுந்து கடைக்குள் செல்ல திரும்பியவள் அங்கே நின்றிருந்த வெற்றியைப் பார்த்து மௌனமானாள்.

செவ்வந்தி உதட்டைக் கடித்தபடி அமைதியாக நின்றிருக்க அவளின் அருகே வந்த வெற்றி, “புதிய கடை வருதே. செவ்வந்தி மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு நான்தான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் போல. நீ ரொம்ப தெளிவாக இருக்கிற. பாசிட்டிவ் வைபிரேசன் உன்னை நல்லாவே ஆட்டி வைக்குது” என்றவனின் பார்வை  அவளின் உதட்டில் படிந்தது.

அவள் தலை நிமிராமல் நின்றிருக்க, “செவ்வந்தி இதழைக் கடிக்காதே! அதை முதலில் விடு” என்றான் மிக மெல்லிய குரலில்.

வெற்றியின் சொல்லுக்கு இணங்க அவள் உதட்டைக் கடிப்பதை நிறுத்திவிட்டு விறுவிறுவென்று கடைக்குள் சென்று மறைந்தாள். பின்னதலையை வருடியபடி சிரிப்புடன் வெளியே கிளம்புவதை பார்த்த சரண்யா, ‘இவங்க இருவரும் லவ் பண்றாங்களா?’ என்ற கேள்வியுடன் செவ்வந்தியைப் பின்தொடர்ந்தாள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் செவ்வந்தி துணி வேட்டிகொடுத்துவிட்டு மற்ற வேலையில் முழுவதுமாக தன் கவனத்தை திருப்பியிருந்தாள். வீட்டில் வரைந்த நியூ மாடல் கொண்ட டிசைன்களை வரைந்து அதற்கு தேவையான பேட்டன் ரைட்ஸ் வாங்க வெளியிடங்களுக்கு சென்று வந்தாள்.

அவள் நினைத்தது போலவே அவளின் நியூ டிசைன்னுக்கு உடனே அப்ரூவ் கிடைத்துவிடவே தன் கடையில் அதை பேட்டன் போட்டு எடுத்து வைத்தாள். தீபாவளி நெருங்குவதால் புதிய டிசைன் கொண்ட துணிகளை எடுக்க வெற்றி சுரத் சென்றுவிடவே இரவு அனைவரையும் அனுப்பிவிட்டு முன்பக்கம் கடையை பூட்டிவிட்டு அவள் மட்டும் தனியாக அறையினுள் அமர்ந்து தைத்துக் கொண்டிருந்தாள்.

இதுவே ஒரு வாரம் தொடந்தது மறுவாரம் மற்றவர்களும் அவளோடு இணைந்து கொள்ள இரவு ஒரு மணிக்குமேல் அனைவரும் தூங்கியபிறகு செவ்வந்தி மட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தாள். வெற்றி சரக்குகளை குடோனில் இறக்கிவிட்டு கடைக்கு வர அங்கே மற்றவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க இவள்மட்டும் வேலை செய்வதை கண்டு அவனுக்கு மனம் வலித்தது.

“நீங்களும் கொஞ்சநேரம் படுத்து ரெஸ்ட் எடுக்காமல் என்னங்க தைச்சிட்டு இருக்கீங்க?” என்ற வெற்றியின் குரல்கேட்டு நிமிர்ந்தாள் செவ்வந்தி.

கலைந்த கூந்தல், இரவு பகல் தூங்காமல் வேலை பார்த்ததில் கண்கள் இரண்டும் ரத்தமென்று சிவந்திருந்தது. முகம் ரொம்பவே சோர்வாக காணப்பட்டது.

“வாங்க வெற்றி.. போன வேலையெல்லாம் நல்லபடியாக முடிந்ததா?” என்ற கேள்வியுடன் மிஷனில் இருந்து எழுந்தாள்.

அவள் சோர்வாக இருப்பதைக் கண்டு, “முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” என்றான்.

“ஒரு நிமிஷம் இருங்க வெற்றி முகம் கழுவிட்டு வரேன். ஒரு வாரமாக கண்விழித்து வேலை பார்த்து, வெளியே அலைந்தது என்று ரெஸ்ட் துளிகூட இல்ல. அதுதான்  தூக்கமே வருது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவள் சென்ற சிறிதுநேரத்தில் அங்கிருந்த லேப்டாப்பில் புதிய மாடல் டிசைன்ஸ் மற்றும் பேட்டன்ஸ் அனைத்தையும் பார்த்த வெற்றியின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.

அதற்குள் முகம் கழுவிட்டு வந்த செவ்வந்தி, “இதெல்லாம் தீபாவளிக்கு வடிவமைத்த உடைகள் வெற்றி. பேஷன் டிசைனிங் பண்றவங்க எல்லோருமே பெரிய அளவில் செய்யறாங்க. சிலபேர் மாடலிங்கில் தங்கள் வடிவமைத்த உடைகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யறாங்க. ஆனால் அதெல்லாம் பாமர மக்களுக்கு சென்றடைய ரொம்பவே லேட் ஆகுது. இது அவங்களுக்காக நான் வடிவமைத்த பிரத்யோக உடைகள்” என்று சொல்லி புதிய மாடலில் சுடிதார், சல்வார்கள், அனார்கலி என்று அனைத்தையும் அவனுக்கு எடுத்து காட்டினாள்.

மற்ற உடைகளைப்போல இல்லாமல் அவளின் வடிவமைப்புகள் அனைத்தும் புதுவிதமாக இருந்தாலும், பார்ப்பவர்கள் கண்ணைப் பறிக்கும் விதமாக எம்ராடிங் டிசைன்ஸ் அனைத்தும் அழகாக இருந்தது.

“நிஜமாவே இந்த திறமையை உங்களிடம் நான்  எதிர்ப்பார்க்கவே இல்ல செவ்வந்தி. தொழிலில் போட்டியாளர்கள் வராங்க என்றதும் புதிதாக சிந்தித்து அவற்றை வடிவமைத்த உங்களோட உக்தி என்ன சொல்றதுன்னு எனக்கே தெரியல” என்று வியப்புடன் கூறினான் வெற்றி.

அவனின் பாராட்டை பெற்றதே அவளின் மனதிற்கு நிறைவாக இருந்தது. ஒரு பெண் தன்னைவிட திறமையாக இருக்கிறாள் என்ற உண்மையறிந்த ஆண்கள் பலர் அவளை தனக்கு அடிமையாக்கும் சுயநலமான உலகம் இது. ஆனால் வெற்றி அவற்றில் இருந்து சற்று மாறுப்பட்டு தெரிந்தான்.

மறுநாளே அவள் வடிவமைத்த உடைகளுக்கு விலை நிர்ணயம் செய்து முப்பது செக்கேன்ட் வீடியோ எடுத்து யூடியூப்பில் அப்லோட் செய்தாள். தன் கடைக்கு முன்னால் அவற்றை மாட்டி வைத்துவிட்டு மற்றவர்களுக்கும் வெட்டி கொடுத்து உடைகளை நிறைய தைக்க சொன்னாள். இவளின் புது மாடல் டிசைன்ஸ் அனைத்தும் மக்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற தொடங்கியது.

தீபாவளிக்கு ஒருவாரம் என்ற சமயத்தில் கடையில் கூட்டம் களைகட்ட தொடங்கியது.சேல்ஸ்மேன் முதல் டெய்லர்கள் வரை அனைவருக்குமே வேலை இருந்தது. ரெடிமேடாக தைக்கபட்ட அதிகமாக தைக்கபட்டது. ராம்மோகன் – சரண்யா, பிரகாஷ் – ஜோதி நால்வருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. வேலை இருக்காது என்று நினைத்தற்கு எதிர்மாறாக அதிகமாக வேலை இருந்தது. தூங்க நேரம் கிடைப்பதே அரிதாக இருந்தது.

அந்த ஒரு வாரத்தில் மலர் டெக்டைல்ஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சேல்ஸ்மேன் ஆள் போதாமல் வீட்டிலிருந்த ஜமுனா கூட ஒருவாரம் கடைக்கு வர தொடங்கியிருந்தாள். தீபாவளி அன்றுகூட கடையில் கூட்டம் குறையவில்லை. அதற்கு மறுநாள் அனைவருக்கும் சம்பளத்துடன் சேர்த்து போனஸ் கொடுத்து ஒரு வாரம் விடுமுறை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

அவர்கள் அனைவரும் சென்றபிறகு அமர்ந்து கணக்குவழக்கு பார்த்ததில் அதிக இலாபம் வந்திருந்தது. வெற்றி அதை வேண்டாமென்று மறுத்தும், “என் வேலைக்கு தகுந்த இலாபத்தை நான் எடுத்துகிட்டேன். இது உங்களுக்கான இலாபம் வேண்டான்னு சொல்லாதீங்க வெற்றி” என்றவள் வற்புறுத்தி கொடுத்தாள்.

வெற்றி தன் கையில் இருந்த இலாபம் மற்றும் சம்பளம் இரண்டையும் கண்டு தங்கையின் மீது பார்வையைத் திருப்பினான். தன் அண்ணன் கைநிறைய சம்பரிப்பான் என்ற அவளின் கனவு நிஜமான சந்தோசம் ஜமுனாவின் கண்களில் தெரிந்தது.

அத்தோடு நில்லாமல் ஜமுனா மற்றும் வெற்றிக்கு தீபாவளி உடையை எடுத்து கொடுத்தவள், “ஹாப்பி தீபாவளி” என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிய நேரம் வாசலில் குல்பி வண்டி நிற்பதைக் கண்டு குஷியாக அதன் அருகே சென்றாள்.

அப்போது, “அப்பா எனக்கு குல்பி” தந்தையின் தோளில் உப்பு மூட்டை ஏறியிருந்த மகள் சலுகையாக கேட்டாள்.

“இரவு நேரத்தில் இதென்ன பழக்கம் மலர்” என்று அவளின் தாய் கண்டிப்புடன் மறுக்க மனையாளை கண்ணாலே சமாதானம் செய்து மகள் கேட்ட குல்பியை வாங்கி கொடுத்தார் அந்த அன்பு தந்தை.

தன் பேச்சைக் கேட்காமல் மகளுக்கு குல்பி வாங்கி கொடுக்கும் கணவனை அவள் கோபம் கொண்டு முறைக்க, “பிளீஸ்டா. அவ ஆசைப்பட்டால் என்றுதான் வான்கிகொடுத்தேன். அதுக்காக ஏன் என்னை முறைக்கிற” என்று மனைவியயை அவர் தாஜா செய்தார்.

“அப்பா அம்மாவுக்கு ஒரு குல்பி வாங்கி கொடுங்க கூல் ஆகிடுவாங்க” என்ற மகளின் தலையை செல்லமாக கலைத்துவிட்டு இருவருக்கும் குல்பி வாங்கி அங்கேயே நின்று சாப்பிடுவது அவள் கண்களுக்கு தெரிந்தது.

“என்ன அண்ணி இங்கேயே நின்னுட்டிங்க” என்ற ஜமுனாவின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டபோது அங்கே குல்பி வண்டி மட்டும் இருந்ததே தவிர மற்ற மூவரையும் காணவில்லை.

“ஒண்ணுமில்ல ஜமுனா” என்றவள் குல்பி வாங்கி சாப்பிடும்போது அவள்  கண்ணில் தெரிந்த வலியை மற்ற இருவராலும் உணர முடிந்தது. ஏற்கனவே மனம் முழுவதும் வலியை சுமப்பவளிடம் காரணம் கேட்டு அந்த காயத்தை பெரிது படுத்த வேண்டாமென்று விட்டுவிட்டனர் அண்ணனும், தங்கையும்!

அதன்பிறகு அவர்களிடம் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினாள் செவ்வந்தி. அடுத்த ஒருவாரம் மின்னல் வேகத்தில் சென்று மறையவே வேலையும் வழக்கம்போல தொடங்கியது.

காலையில் சீக்கிரமே கடைக்கு வரும் செவ்வந்தி வரவில்லை என்றதும் வெற்றியின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. வெற்றி வாசலைப் பார்ப்பதும், வேலையைக் கவனிப்பதுமாக இருந்தான். நேரம் சென்றதே தவிர அவள் வரவில்லை. அவளுக்கு போன் செய்தால் செல் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அவனால் ஒரு மனதாக வேலை செய்ய முடியவில்லை. மனமெங்கும் அவளின் நினைவுகளே ஊர்வலம் போக கடைசி ஒரு வாரம் முழுவதும் அவள் தூங்காமல் வேலை செய்தது நினைவிற்கு வந்தது. ஒரு வேளை அவளுக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற எண்ணத்தில் தன் தங்கைக்கு அழைத்தான் வெற்றி.

“ஹலோ அண்ணா சொல்லுங்க” என்றாள் ஜமுனா.

“ஜமுனா செவ்வந்தி இன்னும் கடைக்கு வரலம்மா. நீ எதுக்கும் அவங்க வீடு வரை போய் பார்த்துட்டு வருகிறாயா?” என்ற பதட்டத்துடன் தங்கையிடம் கேட்டான்.

அவனின் குரலில் இருக்கும் மாறுதலை உணர்ந்து, “சரிண்ணா நான் என்னன்னு பார்த்துட்டு உனக்கு போன் பண்றேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள் உடனே குளித்து உடையை மாற்றிவிட்டு செவ்வந்தியின் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

விமலா அவளைக் கேள்வியாக நோக்கிட, “என் பிரெண்ட் ஒருத்திக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னாம்மா. அதுதான் என்னன்னு பார்த்துட்டு வரேன்” என்றவள் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

செவ்வந்தியின் வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்ற மகளை பார்த்த விமலா ஒரு பெருமூச்சுடன் டி.வி.யில் தன் கவனத்தை திருப்பிவிட்டார்.

சூரியன் கிழக்கே தன் பயணத்தை தொடக்கி வெகுநேரம் சென்றிருந்தது. வீட்டின் கதவுகள் படபடவென்று தட்டப்படும் சத்தம்கேட்டு கண்விழித்தாள் செவ்வந்தி. அவளின் உடல் ஓய்விற்காக ஏங்கியது.

தந்தையோ, தாயோ அருகே இருந்தால் இந்நேரம் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் எழவே பெருமூச்சுடன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று கதவைத் திறந்தாள். வீட்டின் வாசலில் கையில் கூடையுடன் நின்றிருந்த ஜமுனாவைப் பார்த்தும் அவளின் விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது.

வீட்டின் வாசலில் புன்னகையோடு நின்றிருந்த ஜமுனா, “என்ன அண்ணி இன்னைக்கு ரொம்ப தூக்கம் போல” என்று கிண்டலாக கேட்டாள்.

அவளைப் பார்த்ததும் செவ்வந்தி, “அதெல்லாம் இல்ல. வா ஜமுனா உள்ளே உட்காரு நான் முகத்தைக் கழுவிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வேகமாக பாத்ரூம் உள்ளே சென்று கதவை அடைத்தாள்.

ஜமுனா சிந்தனையோடு பார்வையை சுழற்றியபடி அங்கிருந்த சேரில் அமர, “என்ன திடீரென்று வந்திருக்கிற?” என்ற கேள்வியுடன் வெளியே வந்தவள் சமையலறை நோக்கி சென்றாள்.

“மதியம் ஆகியும் நீங்க கடைக்கு வரவே இல்லன்னு அண்ணாதான் வீடு வரை போய் பார்த்துட்டு வர சொன்னான் அண்ணி” அவள் காரணத்தை சொல்லவே கையில் காபியோடு  வந்த செவ்வந்தி அவளுக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டு தானும் பருகியபடி மெளனமாக இருந்தாள்.

தாய், தந்தையைப் பற்றிய நினைவலைகள் அவளின் மனதை ஆக்கிரமித்து இருந்தது. அதனால் ஜமுனா பேசிய எதையும் அவள் கவனிக்கவில்லை. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் துடித்துப்போகும் பெற்றவர்களின் முகம் வந்து சென்றது. அதே நேரத்தில் கிறிஸ்மஸ் நாளும் நெருங்குவதை நினைத்து உள்ளத்தின் ஓர் ஓரத்தில் வலி சுருக்கென்று தைத்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!