ninavenisapthmaai-6

NN_Pic-7ec44f88
Renuka

நினைவே நிசப்தமாய்  – 6

விஜயின் கண்கள் தெறித்து விடுவது போல் விழித்து கொண்டு நிற்க, அவள் கலகலவென்று சிரித்தாள்.

அந்த இருளில், அவள் முகமும் அவள் சிரிப்பும் முதலில் அச்சத்தை கொடுத்தாலும், ‘பேய், பிசாசுன்னு ஓண்ணுமில்லை’ அவன் திடப்படுத்தி கொண்டு, அவன் மின்விளக்கை உயிர்பித்தான்.

“மித்திலா, நீ ஏன் இங்க வந்த? எப்படி வந்த? அதுவும் இப்படி இருட்டில் நின்னு பயம்புடுத்துற மாதிரி…” விஜயின் குரலில் எரிச்சல்.

 “உன் தைரியத்தின் அளவை சோதிக்க தான்” மித்திலாவின் குரலில் கேலி.

“போதும் உன் சிரிப்பை நிறுத்து” அவன் குரலில் கோபம்.

சரேலென்று நிஷா வைத்துவிட்டு சென்ற கத்தியை எடுத்து அவன் கழுத்தருகே வைத்து, “அருண் எங்க?” என்று அழுத்தமாக கேட்டாள் மித்திலா.

“எனக்கு தெரியாது” விஜயின் தோள்கள் அசட்டையாக குலுங்கியது.

மித்திலா, கத்தியை நெருக்க, “நிஷா, எமோஷனலாகி என் மேல் கத்தியை செலுத்த வாய்ப்பிருக்கு. நீ அப்படி இல்லை. அதனால், கத்தியை தூக்கி போட்டுட்டு அப்படியே உட்கார்ந்து பேசுவோமா?” அசட்டையாக மித்திலாவை ஒதுக்கிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் விஜய்.

“அருண் எங்க?” மித்திலா அவன் எதிரே நாற்காலியை இழுத்து போட்டு அமர, “எனக்கு தெரியாது” அருண் அழுத்தமாக கூறினான்.

“அருண் பாவம். அவன் எனக்கு உதவி செய்ய வந்தவன். அவனை இந்த விளையாட்டில் இருந்து நீக்கிருவோம்” மித்திலாவின் குரல் சற்று இறைஞ்சியது.

விஜய் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

அவன் பார்வையில், “விளையாட்டை, நீயும் நானும் விளையாடுவோம்” அவள் குரலில் சவால் இருந்தது.

“இருள் கவ்விய நேரம். ஏகாந்த இரவு. நீயும் , நானும் தனிமையில். என்ன விளையாட்டு விளையாட?” அவன் தன் விரலால் அவள் முகத்தை மெல்ல நெருங்கி, மெல்லிய காற்று புகும் இடைவெளி விட்டு சீட்டியடித்தான்.

அவளிடம் மீண்டும் சிரிப்பு. “அந்த விளையாட்டை நீ விளையாட நினைச்சிருந்தா, நேத்து என்னை அடைச்சு வச்சப்பவே விளையாடிருப்ப” அவள் குரலில் கேலி.

“ஓ… அது தான் நான் நல்லவன்னு நம்பி என்னை பார்க்க என் வீடு தேடி  வந்திருக்க?” விஜயின் குரலில் இப்பொழுது கேலி.

“இந்த விஷயத்தில் நீ நல்லவன் தான்” அவள் குரலில் உறுதி.

“ம்… உனக்கு என்ன வேணும்? அங்கிருந்து தப்பிச்சு போன நீ அப்படியே போக வேண்டியது தானே?” அவன் கேள்வியை தொடுத்தான்.

“நான் தப்பிச்சு போகலை. தப்பிச்சு போக நீ வழிபண்ணி குடுத்த” மித்திலா சிரிக்க, அகப்பட்டு கொண்டவனாய் அவன் விழித்தான்.

‘நான் கணித்ததை விட இவள் புத்திசாலி.’ அவன் எண்ண, “இதுக்கே நீ ஷாக் ஆனா எப்படி?” அவள் புருவம் உயர்ந்தது.

“நான் ஷாக் ஆகலை” அவன் சமாளித்தான்.

“நீ யாருக்கோ வேலை பார்க்குற.   நீ அன்னைக்கு அடிக்கும் பொழுதும், என்னை மிரட்டும் பொழுதும் அதில் கடமை தான் இருந்தது. கடினம் இல்லை” அவள் கூற, அவனுக்கு அவள் பேச்சு பிடித்தது.

“அங்க கேமரா இருந்திருக்கணும். அதுல யாரோ உன்னை கண்காணிக்கிறாங்க. அது தான் நீ அப்படி நடந்திருக்க. ராத்திரி, யார் மூலமா நான் தப்பித்து போக நீ வழி பண்ணிருக்க” மித்திலா நடந்ததை கூறி அவன் முன் தன் வலது கைகளை சுழற்றினாள்.

அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

“எப்படி?” அவள் நிறுத்த, “பிரில்லியண்ட்…” அவன் அவளை சிலாகித்தான்.

“அருண் எங்க?” மித்திலா மீண்டும் வினவ, “என்னை பத்தி கண்டுபிடிச்ச நீ, அருணையும் கண்டுபிடிக்க வேண்டியது தானே?” அவன் புருவம் உயர்த்தினான்.

“விஜய், நான் சொல்றதை கேளு.” அவள் ஆரம்பிக்க, “நான் ஏன் கேட்கணும்?” அவன் குரலில் அசட்டை.

மித்திலா அவன் எதிரே சோர்வாக அமர்ந்தாள்.

“நீ என்னை காப்பாத்திருக்க. நீ யார் கிட்ட வேலை பாக்குறன்னு  எனக்கு தெரியும். நான் அங்க உன்னை காட்டி கொடுத்தால்…” அவள் நிறுத்த, “ம்… செய்…” அவன் சிரித்தான்.

“உன்னை நம்ப மாட்டங்க. உன்னை திரும்பி அடைத்து வைப்பாங்க” அவன் குரல் அவளை எச்சரித்தது.

“என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும்” அவள் குரல் எகிற, “என்ன தெரியும்?” அவன் கோபத்தில் அவள் கன்னத்தை பிடித்தான்.

“உனக்கு என்ன தெரியுமோ? அது தான் எனக்கும் தெரியும்.  நான் பொறுமையா இல்லை. உனக்கு என்ன அவசரம்?” அவன் பற்களில் நறநறப்பு.

“ரவீந்தர்?” அவள் அவனை பார்க்க, “….” அவன் தன் கண்களை இறுக மூடினான்.

“உன் அவசர புத்தியால், அருணுக்கு ஆபத்து” அவன் குரலில் கோபம்.

“நான், எங்க அப்பாவை காப்பாத்தணும். அவர் இப்ப எப்படி இருக்கார் தெரியுமா?” அவள் குரலில் நடுக்கம்.

“எங்க அண்ணன்…” விஜய் தடுமாறினான்.

“அவங்களை தான் வேற ஊருக்கு அனுப்பினியா? அவங்களை அனுப்பும் பொழுது தான் நான் உள்ளே வந்து ஒளிஞ்சிகிட்டேன்” மித்திலா கூற, அவன் தலை அசைத்தான்.

“இதுக்கெல்லாம் யாரோ தானே காரணம்? உனக்கு தெரியும் தானே ?” மித்திலாவின் குரலில் படபடப்பு.

அவன் மேஜை மீது இருக்கும் கத்தியை சுழட்டினான்.

“யாரோ காரணுமுன்னு தான் எனக்கு தோணுது. உங்க அப்பா, என் அண்ணன் எல்லாரும் ஒண்ணா வேலை பார்த்திருக்காங்க. இது போல இன்னும் சிலர், எல்லாருக்கும் ஒரே பிரச்சனை.” அவன் நிறுத்தினான்.

“பிரச்சனை வந்த எல்லாரும் ஒதுங்கிட்டாங்க” மித்திலா தொடர்ந்தாள்.

“நீ ஒதுங்கலை” அவன் நிறுத்த, “நீயும் ஒதுங்கலை” அவளும் நிறுத்தினாள்.

“எனக்கு உன்னை தெரியாது. தெரிஞ்சிருந்தா, நான் உன் கிட்ட வந்திருப்பேன். அருண் சிக்கலில்  மாட்டிருக்க மாட்டான்.” அவள் குரலில் வருத்தம்.

“நீ எங்கையும் வர வேண்டாம். இங்கிருந்து வெளிய போ. உனக்கு வேண்டிய விஷயம் தெரிஞ்சிருச்சு தானே?” விஜய் கேட்க, “நான் எங்க போக விஜய். என் அப்பா இப்ப என் கூட இல்லை. நான் தங்குற இடத்தில இனி நான் இருக்க முடியாது. எனக்கு பாதுகாப்பு இல்லை.  நான் புது இடம் பார்க்கும் வரை இங்க தான் இருப்பேன். ” அவள் குரலில் உறுதி.

‘இது என்ன வம்பு?’ அவன் அவளை பரிதாபமாக பார்க்க, “நான் அங்க சில டாக்குமெண்ட்ஸ் தேடும் பொழுது தான் எனக்கு சில விஷயங்கள் தெரிய வந்தது. உங்க அண்ணன் குடும்பதோட, உன் போட்டோவை  பார்த்தேன். உன்னை பத்தி ஓரளவு  கணிச்சிக்கிட்டேன்” அவள் பேசி கொண்டே போனாள்.

“நீ இங்க இருக்க கூடாது. அது சரி வராது. வெளியே போ” அவன் உறுதியாக கூறினான்.

“இப்போதைக்கு இது தான் எனக்கு பாதுகாப்பான இடம். நான் ஒரு அறையில் இருந்திக்குறேன்.” அவள் குரல் கெஞ்சியது.

அவனிடம் தர்மசங்கடம்.

“ரவீந்தர் பத்தி பேச தான் நான் அருணை சந்திக்க போனேன். ஆனால், எல்லாம் தப்பா போச்சு.” அவள் பேச, அவனிடம் மௌனம்.

“அதுவும் ஒருவகையில் நல்லது தான். ரவீந்தர் மேல எனக்கு இருந்த சந்தேகம் உறுதியாகிருச்சு. ரவீந்தர் ஏதோ தப்பு செய்யறான். அது என்னனு தான் எனக்கு தெரியலை.” மித்திலா நிறுத்த, அவன் பேசவில்லை.

“ஏன் விஜய் அமைதியா இருக்க? நான் உண்மை தான் சொல்றேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் நான் சொல்லிட்டேன்.” மித்திலா குரலில் நேர்மை இருந்தது.

“எனக்கும் ரவீந்தர் மேல தான் சந்தேகம். அது தான் அங்க வேலைக்கு சேர்ந்தேன். அங்க சேர்ந்ததும், அது ஊர்ஜிதமாகிருச்சு. ஆனால், என்னால் மேல எதுவும் கண்டுபிடிக்க முடியலை.” விஜய் பேச, “நாம் சேர்ந்து கண்டுபிடிக்கலாம்” அவள் குரலில் ஆர்வம்.

அவன் அவளை பார்த்து நட்போடு புன்னகைத்தான்.

“எனக்கு பசிக்குது. உங்க வீட்ல ஏதாவது இருக்கா சாப்பிட?” அவள் கேட்க, அவன் சமையலறையை கை காட்டினான்.

“எனக்கு சமைக்க தெரியாது. எதாவது ஆர்டர் பண்ணுவோமா?” அவள் யோசனை கூற, “நீ இங்க இருக்கிறது யாருக்கும் தெரிய கூடாது. நீ வெளிய போக கூடாது. இங்கயும் யாரும் வர கூடாது. ரெண்டு ஆளுக்கு சாப்பாடு வாங்கினோம் விஷயம் வெளியே போய்டும்.” அவன் தலையில் அடித்து கொண்டு சமையலறைக்கு சென்றான்.

அவள் திண்டின் மேல் ஏறிக்கொள்ள, அவன் தோசை வார்த்து சட்னி அரைத்தான்.

“உனக்கு தங்க இடம் கொடுத்து, சாப்பாடும் நான் போடணுமா?” அவன் முணுமுணுக்க, “நான் காசு கொடுத்திருவேன்” அவள் சத்தியம் செய்தாள்.

“உன் காசு யாருக்கு வேணும்?” அவன் கேட்க, “நான் உனக்கு ஐடியா கொடுக்குறேன். நீ  டெக்னிக்கலி ரொம்ப சுமாரா இருக்க” அவன் கொடுத்த தோசையை ருசித்தபடி அவள் பேச அவன் அவளை முறைத்தான்.

“கூல் விஜய். நீ நல்லா சமைக்குற. புத்திசாலி தான் ரவீந்தரை நெருங்கிட்ட. ஆனால், டெக்னிக்கல் விஷயம் உனக்கு தெரியலை. என்னால், உனக்கு உதவ முடியும்” அவள் உறுதி, அவனை யோசிக்க வைத்தது.

‘இவளை வைத்து நான் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். தனியா எத்தனை தான் செய்வது?’ அவன் சிந்திக்க, “நல்ல யோசி விஜய், நம்ம கூட்டணி வேலைக்கு ஆகும்.” அவள் அடுத்தடுத்த தோசையை உள்ளே தள்ள, அவன் அவள் தட்டை பார்த்தான்.

“பசி விஜய். அடச்சி வச்ச இடத்தில் சாப்பிடலை. வெளிய சாப்பிட பயம். எங்க வீட்டை அவசரஅவசரமா காலி பண்ணேன். நீ தோசை வேற நல்லா செய்யறீயா” அவளின் பேச்சில் விஜயின் முகத்தில் புன்னகை.

அப்பொழுது, அந்த புன்னகையை கலைப்பது போல விஜயின் அலைபேசி ஒலித்தது.

“விஜய், மித்திலா உயிரை எடுத்திரு.” அருணின் குரல் அழுத்தமாக ஒலித்தது.

அந்த சொல்லின் தாக்கத்தை விட அந்த குரலின் தாக்கத்தில் மித்திலா வெடவெடத்து போனாள். விஜயின் முகத்தில் புன்னகை கீற்று அரும்பியது.

தொடரும்…