Malar – 13

Malar – 13
அத்தியாயம் – 13
காலையில் வழக்கம்போலவே சீக்கிரம் எழுந்த பெண்கள் இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்தபடி வேலையைத் தொடந்தனர். ஜமுனா குளித்துவிட்டு வருவதற்குள் செவ்வந்தி சாப்பாட்டை எடுத்து வைக்க, “என்ன அண்ணி இன்னைக்கே கடைக்கு கிளம்பிறீங்களா?” என்று தலைவாரியபடி கேட்டாள்.
“ஆமா ஜமுனா.. தீபாவளி முடிந்ததால் கடையில் வேலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்” என்றவள் குளிப்பதற்கு சென்றாள்.
‘அண்ணா நேற்று ஏனோ ஒரு மாதிரி இருந்தான். நமக்கு இவங்கதான் அண்ணியாக வரணும்னு ஆசை இருந்தாலும் தலை விதியை யாரால் மற்ற முடியும்?’ என்றவளின் சிந்தனை எங்கோ சென்றது.
‘அண்ணி பேசியதற்கு அண்ணா ஏன் எதுவுமே சொல்லாமல் எழுந்து போயிட்டான். இங்கிருந்து நேராக கடைக்கும் போகல. அப்புறம் எங்கே போயிருப்பான்?’ என்றவளின் மனதில் ஜனனியின் முகம் மின்னி மறைந்தது.
‘இந்த பிசாசுதான் வெளியே கூட்டிட்டுப் போக சொல்லியிருப்பா. அவ மட்டும் இல்லன்னா அண்ணன் லைப் ரொம்ப நல்லாக இருக்கும். என்னதான் சொல்றவங்க சொன்னாலும் அதை கேட்க எங்க அண்ணன் தயாராக இருக்கணுமே?! இவன் வாழ்க்கைக்கு என்றுதான் விடிவுகாலம் வருமோ?’ ஜமுனாவின் மனம் தமையனை நினைத்து கவலைக் கொண்டது.
அதற்குள் செவ்வந்தி குளித்துவிட்டு தயாராகி வெளிவரவே இருவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து கிளம்பும் முன்னரே மைதிலியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஹே மையூ சொல்லு. என்ன ஊருக்கு வந்துட்டியா?” என்றபடி ஸ்கூட்டியில் அமர்ந்தாள் செவ்வந்தி.
சிறிதுநேரம் மௌனத்திற்கு பிறகு, “அந்த வேலையை விட்டுட்டு கிளம்பி வந்துட்டேன். இனிமேல் நான் உன்னோடுதான் இருக்க போறேன்” என்றவள் படபடவென்று விஷயத்தை ஒப்பித்தாள்.
“உன்னை வரவேண்டாம்னு சொன்ன மாதிரியே பேசற பார்த்தியா? இப்போ எங்கே இருக்கன்னு சொல்லிடி லூசு” என்று கோபத்துடன் கேட்டாள் செவ்வந்தி.
“ஈரோட்டில் இருந்து பஸ் ஏறிட்டேன். இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கும்” என்றாள் மைதிலி.
அதைக்கேட்டு யோசனையோடு ஜமுனாவைப் பார்த்தவள், “நீ நாமக்கல் பஸ் ஸ்டாண்டு வந்துட்டு கால் பண்ணு. நான் நேரில் வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றவள் ஜமுனாவைப் பற்றி சுருக்கமாக சொல்லி போனை கட் செய்தாள்.
தன் சிந்தனையிலிருந்து விடுபட்ட ஜமுனா, “அண்ணி அவசரம் என்றால் நீங்க கிளம்புங்க. இங்கே பக்கத்தில்தான் வீடு. நான் மெல்ல நடந்து போகிறேன்” என்றாள்.
ஆனால் அவளை தனியாக அனுப்ப மனம் இல்லாமல், “அதெல்லாம் வேண்டாம். உன்னை வீட்டிற்கு நடந்து போக சொல்வேன் என்று நினைச்சியா?” என்றவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ததுவிட்டு சின்னவளை பார்க்க அவளோ அடம்பிடிக்கும் குழந்தைபோல நின்ற இடத்திலிருந்து நகராமல் நின்றாள்.
“மைதிலி என் பெஸ்ட் ஃப்ரெண்ட் நான் சொன்னால் தெளிவாக புரிஞ்சுக்குவா. அதனால் நீ நேரத்தைக் கடத்தாமல் சீக்கிரம் வண்டியில் ஏறு” என்று அதட்டினாள்.
மறுநொடியே எதுபற்றியும் பேசாமல் வண்டியில் ஏறிய ஜமுனாவை பத்திரமாக அவளின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, “சரிடா அண்ணி கிளம்பறேன்” என்றவளை இடைமறித்தாள் சின்னவள்.
செவ்வந்தி அவளை கேள்வியாக நோக்கிட, “வீடு வரை வந்துட்டு வாசலோடு போறீங்களே அண்ணி” என்ற ஜமுனாவின் கேள்விக்கு புன்னகையை பரிசாக தந்துவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டாள்.
ஜமுனா வீட்டிற்குள் நுழைய நரசிம்மன் – விமலா இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். வாசலில் நிழலாட கண்டு நிமிர்ந்து பார்த்த நரசிம்மன் மனைவியிடம் அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினார்.
பிறகு, “இப்போ வந்துட்டுப் போன பொண்ணு யாரு?” என்று கேட்டார்
“அவங்கதான் அண்ணா வேலை செய்யும் கடையின் ஓனர்” என்றவள் பதில் கொடுத்துவிட்டு நகர நினைத்தாள்.
“அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்றார் விமலா.
சட்டென்று நிமிர்ந்து தாயைப் பார்த்தவள், “அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல” என்றதும் நரசிம்மன் புருவங்கள் சுருக்கியது.
இருவரின் முகத்தில் வந்து சென்ற உணர்வுகளை துல்லியமாக கணித்த ஜமுனா, “உங்க மகன் தொட்டது தொலங்காதுன்னு நீங்க கட்டிவிட்ட பெயர் ஊரெல்லாம் தெரிந்தது. வெற்றி என்று பெயர் வைத்தவங்க எல்லாம் தோல்வியை மட்டுமே சந்திப்பாங்கன்னு நீங்க கணக்கு போட்டிங்க. ஆனால் உங்களுக்கு மேல ஒருத்தன் உட்கார்ந்து கணக்கு போடுறான். அவனுக்கு தெரியும் யார் நல்லவங்கன்னு.. உங்க முகத்திரை கிழிய நாளும் கிழமையும் வந்துட்டே இருக்கு” என்றவளின் மறைமுகமான பதிலடியில் நரசிம்மனின் முகம் பேய் அறைந்தது போலானது.
அதை திருப்தியோடு பார்த்த ஜமுனா, “வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்.. சர்தான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்.. எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது?” என்று பாடியபடியே அறைக்குள் சென்று மறைந்தாள்.
மகளின் பேச்சின் பின்னோடு இருந்த வண்ணம் விமலாவின் மனதை வாள்கொண்டு அறுத்தது. கணவன் மட்டுமே உலகம் என்று இருந்துவிட்டது தவறோ என்று தோன்றாமல் இல்லை. ஆனால் அதற்காக கூட பிறந்த அண்ணனின் இறப்பை மறந்து இருப்பது மனதிற்கு உறுத்தவே செய்தது.
இன்றுவரை கணவனின் பேச்சிற்கு மறுபேச்சு பேசியது கிடையாது. பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளைவிட கணவனின் காதல் முக்கியமாகி போனது.
நரசிம்மன் மனைவியின் கையைப்பிடித்து ஆறுதலாக ஒரு பார்வை பார்த்ததில் சோகமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறையவே, “அவ எப்பவும் அவளோட அண்ணன் பக்கம்தான்னு உங்களுக்கு தெரியாதா?” என்று மற்றதை மறந்து கணவனைத் தேற்றினார்.
இருவரின் காதல் சம்பாஷனைகளை அறையிலிருந்து கேட்ட ஜமுனாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அறியாத வயதில் ஏற்பட்ட காயம் ஆறியபோதும் வடு அப்படியே இருந்தது.
நேராக நாமக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு சென்ற செவ்வந்தி மீண்டும் மைதிலிக்கு அழைத்தாள்.
அவள் திருச்சங்கோடு தாண்டி வந்து கொண்டிருப்பதாக சொல்லவே, “சரி அப்போ நான் பார்க்கில் வெயிட் பண்றேன்” என்றவள் பார்க்கின் வெளியே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.
நாமக்கல் மலையை வேடிக்கைப் பார்ப்பதற்கு ஏற்றார்போல மரத்தின் கீழே போடபட்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தாள் செவ்வந்தி. அவள் சுற்றிலும் வேடிக்கைப் பார்க்கும்போது நகத்தைக் கடித்து கீழே துப்பியபடி பதட்டத்துடன் அமர்ந்திருந்த பெண்ணின் மீது அவளின் பார்வை படிந்தது.
‘இந்த பொண்ணு அன்னைக்கு ஒரு ஆளை லேப் அண்ட் ரைட் வாங்கியவளா?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.
அவள் சிந்தனையோடு வாசலைப் பார்ப்பதும், மீண்டும் நகத்தைக் கடித்தாள். அப்போது வாசலில் வெற்றியின் பைக் வந்து நிற்க கண்ட செவ்வந்தியின் புருவங்கள் சுருங்கியது.
‘வெற்றி எதுக்காக இங்கே வரணும்? ஒருவேளை இந்த பெண்ணின் காதலி இவர்தானோ?’ சட்டென்று எண்ணம் தோன்றி மறையவே அமர்ந்த இடத்திலிருந்து வெடுக்கென்று எழுந்துவிட்டாள் செவ்வந்தி.
ஏற்கனவே வெற்றியின் மனம் தெரியும் என்பதால், ‘இந்த நேரத்தில் நம்ம இங்கே இருப்பது சரியில்ல. நான் இங்கிருப்பது தெரிந்தால் கண்டிப்பா அவர் என்னிடம் வந்து பேசுவார். அது அவங்க காதலிக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு இருக்கு’ தனக்குள் முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப நினைத்தாள்.
ஜனனியின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றபோது எங்கிருந்து தொடங்கி அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பதென்ற குழப்பத்தில் இருந்தாள்.
“ஜனனி” என்ற அழைப்புடன் அவளின் எதிரே அமர்ந்தவன் முகம் வழக்கத்திற்கும் மாறாக பிரகாசமாக இருந்தது.
அவள் என்ன பேசுவதென்று மனதிற்குள் ஒத்திகை பார்த்து தொடங்கும் முன்னே, “உன்னிடம் நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று அவளின் சிந்தனையைக் கலைத்தான் வெற்றி.
ஜனனி கேள்வியாக நோக்கிட செவ்வந்தி மரத்தை சுற்றிகொண்டு அவர்களின் பின்னே செல்ல வெற்றி பேசுவது அவளின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
“நீயும், நானும் ஒரே கல்லூரியில் படிச்சவங்க. என்னோட திறமை எல்லாமே உனக்கு நல்லாவே தெரியும். அப்படியிருந்தும் நான் தொட்டது தொலங்காமல் போகுது என்ற காரணத்திற்காக நீ என்னை கீழ்த்தரமான எடைபோட்டது ரொம்ப தப்பு” என்றதும் அவளின் பார்வை சற்று கூர்மை பெற்றது.
இதுநாள்வரை ஆணென்ற கர்வம் இல்லாமல் முதுகெலும்பு இல்லாதவன் போல இருந்தவனிடம் புதிதாக தோன்றியிருந்த நிமிர்வு அவளை புருவம் சுருக்கி யோசிக்க வைத்தது.
அதே நேரத்தில் செவ்வந்தி அவர்களைக் கடந்து செல்ல, “ஒரு காதலுக்கு அடிப்படையே நம்பிக்கைதான். ஆனால் நீ என் காதலியாக இருந்தபோதும் என்மேல் உனக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்ல. நம் காதலில் அடிப்படையே ரொம்ப தப்பாக இருக்கு. இந்த மனநிலையோடு அது நம்ம இருவரின் வாழ்க்கையும் கேள்வி குறியாக்கிடும். அதனால் பிரிந்துவிடலாம் ஜனனி” என்றவன் சொல்லி முடிக்க ஜனனியின் முகம் சூரியனைக் கண்ட தாமரைப் போல மலர்ந்தது.
அவனின் பேச்சு அந்த பெண்ணிற்கு எப்படியொரு வலியைக் கொடுக்க போகிறதென்று உணர்ந்த செவ்வந்தி விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டாள். அவள் பார்க்கின் வாயிலை அடையும்போது மைதிலியிடமிருந்து போன் வரவே, “இதோ அங்கேதான் வந்துட்டு இருக்கேன்” என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.
தான் சொல்ல வந்த விஷயத்தை அவன் சொன்ன சந்தோஷத்தில், “இதைதான் உன்னிடம் எதிர்பார்த்தேன் வெற்றி. எங்க வீட்டில் எனக்கு வேறொரு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. அதனால் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். ஆனால் நீங்க முன்னாடியே சொன்னது எனக்கு நிம்மதியாக இருக்கு” என்றவள் படபடவென்று சொல்லி முடித்தாள்.
இந்த காலகட்டத்தில் காதல் தோல்வி என்று யாரும் பெரிதாக எடுப்பதில்லை. இங்கே பலபேர் நட்பையும், காதலையும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை வெற்றி உணர்ந்து கொண்டான்.
எதிலிருந்தோ விடுபட்ட உணர்வுடன்,“ஓகே அப்போ நான் கிளம்பறேன் ஜனனி” என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அவன் விலகி செல்கிறானே என்ற வருத்தமோ வலியோ வராமல் சந்தோசமாக நின்றிருந்தாள். அவனைவிட அவளின் எதிர்கால வாழ்க்கை அவளுக்கு பெரிதாக தெரிந்தது.
பார்க் விட்டு வெளியே வந்த வெற்றி மூச்சை இழுத்துவிட்டு, “என் வாழ்க்கையில் ராகுகாலம் முடிஞ்சிபோச்சு. இனிமேல் குரு திசைதான்..” என்றவன் உதடுகள் முணுமுணுத்தன. இத்தனை நாளாக மனதில் அழுத்திய ஒரு விஷயத்தில் இருந்து விடுபட்ட உணர்வு. அதே எண்ணத்துடன் கடையை நோக்கி சென்றான்.
செவ்வந்தி பஸ் ஸ்டாண்ட்டிற்கு செல்ல, “ஹப்பாடி வந்துட்டியா? ஏய் முதலில் ஒரு கப் காபி வாங்கிதா. என்னால் தலைவலி தாங்க முடியல” என்று புலம்ப தொடங்கினாள்.
வெற்றியைப் பற்றிய சிந்தனை பின்னுக்கு தள்ளப்படவே, “சரி நடுரோட்டில் நின்று புலம்பாதே வா வீட்டிற்கு போலாம்” என்றாள்.
“இல்ல நீ கடையில் காபி வாங்கிதா” என்ற பிடிவாதத்துடன் நின்றவளை கண்டு தலையிலடித்துகொண்டு வண்டியை எடுக்க மைதிலி அவளின் பின்னோடு ஏறிக் கொண்டாள்.
“என்னடி வெறும் துணிமணிகளை மட்டும் எடுத்துட்டு வந்திருக்கிற?! இவ்வளவுதான் ரூமில் உன்னோடு பொருட்கள் இருந்ததா?” என்று வேண்டுமென்றே தோழியிடம் வம்பிழுத்தாள் செவ்வந்தி.
“நம்ம ஹாஸ்டலில் இந்த துணிமணிகளை மட்டும்தான் வைக்க முடியும். தனியாக ரூமில் தங்கியிருந்தால் சமைக்க பாத்திரங்கள் இருந்திருக்கும். வேலை செய்வது துணிக்கடையில், சாப்பிடுவதற்கு ஹோட்டல், படுத்து தூங்குவதற்கு ஹாஸ்டல் இதைத்தவிர நம்ம வாழ்க்கையில் வேற என்னடி இருக்கு?” என்று மைதிலி ரைமிங்காக சொல்லி முடித்தாள்.
செவ்வந்தி கடையின் முன்னே வண்டியை நிறுத்த குஷியாக இறங்கி வேகமாக கடைக்குள் சென்ற மைதிலி இருவருக்கும் காபி ஆர்டர் கொடுத்துவிட்டு ஒரு டேபிளில் அமர்ந்தாள்.
அவளின் பின்னோடு கடைக்குள் நுழைந்த செவ்வந்தி அவளின் எதிரே அமர, “என்னடி ஒரு மாதிரி இருக்கிற?” என்ற கேள்வியோடு தோழியின் குழப்ப முகத்தை ஆராய்ச்சியோடு ஏறிட்டாள்.
அவளிடம் வெற்றியைப் பற்றி அனைத்தையும் கூறிய செவ்வந்தி, “இன்னைக்கு அவர் அப்படி சொன்னதும் எனக்கு என்னவோ போல ஆகிடுச்சு” என்றவள் புலம்பிட மைதிலிக்கு அவளின் மனம் தெளிவாக புரிந்தது.
“என்னதான் காதலியாக இருந்தாலும் காலுக்கு ஆகாத செருப்பை கழட்டி விடுவதுதான் சரி. அந்த பொண்ணு அவரை ஒரு மனுஷனாக கூட நினைக்கல. இதுவரை காதலிப்பதாக சொன்ன வெற்றியே இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால் ஒன்னு அவருக்கு இது காதல் இல்ல வெறும் ஈர்ப்பு என்று புரிந்திருக்கலாம். சோ இதை நினைத்து கவலைபடாமல் வேற வேலையைப் பாரு செவ்வந்தி” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி முடிக்கும்போது ஆர்டர் செய்த காபி வந்தது.
செவ்வந்தி சிந்தனையோடு காபியை பருகுவதை கண்டு, “ஆமா வெற்றிக்காக நீயேன் இவ்வளவு வருத்தபடுற?” என்றாள் மைதிலி.
சட்டென்று முகம் மலர, “அவரோட பெயர்தான் இத்தனைக்கு காரணம் மையூ” என்றவளின் நினைவுகள் எங்கோ சென்று திரும்பியது.
“என்னடி சொல்ற?” மைதிலி சிரிப்புடன் செவ்வந்தியை ஏறிட்டாள்.
“ஆமா எல்லோருக்கும் அவன் வெற்றி எனக்கு மட்டும் வேந்தன் மாமா. என்னை செல்லமாக அரளின்னு கூப்பிடுவான். அவங்க அப்பா, அம்மாவை நேரில் பார்த்த ஞாபகம் இல்லை. அவன் எங்க வீட்டில் தான் வளர்ந்தான். அவனுக்கு ஒரு தங்கச்சி கூட இருக்கா தெரியுமா?” அதை சொல்லும்போது அவளின் முகம் மலர்ந்திருந்தது.
சின்ன நிகழ்வுகள் மனதினுள் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுக்கிறது என்று அவளின் முகம் பார்த்து உணர்ந்தாள் மைதிலி. வருடங்கள் பல சென்றபிறகு கூட தாய் – தந்தை அவளின் மனதில் ஏற்படுத்திச் சென்ற காயத்தை மறக்காமல் இருக்கிறாளே என்ற எண்ணமே மைதிலியின் மனதில் நெரிஞ்சிமுட்களாக மாறி குத்தியது.
தோழியின் மனநிலை அறியாத செவ்வந்தி அவள் போக்கில் சொல்ல, ‘உறவுகளைக் கொடுக்காத அந்த ஆண்டவன் உனக்கு நல்ல வாழ்க்கைக் கொடுக்கணும். அதுமட்டும்தான் செவ்வந்தி என்னோட வேண்டுதல். இதோ இப்போ நீ சிரிக்கிற மாதிரி எப்பவும் சிரிச்சிட்டே சந்தோசமாக இருக்கணும்’ என்று மனதினுள் வேண்டிக்கொண்டாள்.
அப்போதுதான், “நாங்க மூவரும் வேளாங்கண்ணி போகாமல் இருந்திருந்தால் இன்னைக்கு எல்லாமே நன்றாக நடந்திருக்கும். நானும் என் குடும்பத்தை இழந்திருக்க மாட்டேன். என்னதான் கோடிகணக்கான சொத்திற்கு சொந்தக்காரியாக பிறந்தாலும் அதை ஆண்டு அனுபவிக்கும் ஆசை எனக்கு என்னைக்குமே இருந்ததில்லை. இதுவரை நடந்ததெல்லாம் நல்லதுக்கு என்றால், இனி நடப்பதும் நல்லதுக்குன்னு நினைக்க வேண்டியதுதான்” என்றவள் எழுந்து பில் கட்டிவிட்டு வெளியே சென்றாள்.
அவளை பின்தொடர்ந்த மைதிலி, ‘யாருக்கும் கெடுதல் நினைக்காத உனக்கும் நல்லதே நடக்கும் செவ்வந்தி’ என்று நினைத்துக் கொண்டாள். அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டி பறக்கவே மைதிலியும் மலர் டெக்டைல்ஸில் ஒருத்தியாக மாறிப் போனாள். கிருஸ்துமஸ்க்கு இரண்டுநாள் முன்னர் யாரிடமும் சொல்லாமல் செவ்வந்தி வேளாங்கண்ணிக்கு கிளம்பி சென்றாள்.