TT – 19

அத்தியாயம் – 19:

அழுது அழுது தொண்டை வறண்டது ப்ரியாவிற்கு. வயிற்றை மெதுவாக வருடியவள் மனதில்… ‘இது என் காதலின் வெளிப்பாடு மட்டும் இல்லை. அவன் காதலின் பிரதிபலிப்பும் கூட’ என்று எண்ணியபோது, கண்களில் கண்ணீர் கட்டுப்பாடின்றி வெளிவந்தது.

‘இவ்வளவு ஆசை மனதில் வைத்துக்கொண்டு… எதற்காக அவன் அப்படி சொல்லவேண்டும்? என்ன தேவை?’ என்று யோசிக்கும் போது தான் அவளுக்கு புரிந்தது… இதுவரை அவனுடைய கடந்தகாலத்தை வெளிப்படையாக அவன் பகிரவில்லை என்று.

ஓரிரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும். யாரிடமும் எதுவும் பகிராமல் எப்படி மனதில் மறைத்து புதைத்துக்கொள்ள முடியும் ஒருவனால்? என நினைக்க… மின்னல் வெட்டியதுபோல ஒரு உணர்வு அவளுள்.

‘எதையாவது மறைக்க இதுபோல பேசினானோ? அப்படி என்னவாக இருக்க முடியும்?’ மண்டையே வெடிப்பது போல இருந்தது.

அவசரமாக டைரிகள் இருந்த அலமாரியை பார்த்தாள், வேறு ஏதேனும் கிடைக்குமா என்று.

எதுவும் இருக்காது. இந்த வருடத்திற்கான டைரி அவனிடம் தான் இருக்கும். இங்கிருக்கும் சில டைரிக்களே மும்பை வீட்டில் இருந்து அவன் எடுத்துவந்து வைத்தது அவளுக்கு தெரியும்

என்னசெய்வது என்று புரியாமல் இருக்க, மொபைல் அடித்தது.

‘அவனாக இருக்குமோ? நேற்றுக்குப்பின் அழைக்கவே இல்லையே…’ என நினைத்து பார்க்க, அது அகிலன்.

“சொல்லுண்ணா… இதோ அஞ்சு நிமிஷம் கிளம்பறேன்… சரிண்ணா” அகிலனிடம் பேசிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

இங்கு இனி தேவைப்படுவது எதுவுமில்லை என நினைத்து, டைரிக்களை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

சென்னை வந்தடையும் வரை, மனம் ஒரு நிலையில் இல்லை. செழியனின் டைரியில் சில விஷயங்களை படித்தபின், சில கேள்விகளுக்கான விடைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என அவள் மனம் யோசித்தது.

வீடு வந்ததும், தன்னை சாதாரணமாக காட்டிக்கொள்ள முயற்சித்தாள் ப்ரியா.

அகிலனிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, ரெஃப்ரெஷ் ஆகி கீழே வர, லட்சுமியும் கவிதாவும் சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்க, அகிலன் வெண்பாவுடன் இருந்தான்.

கவிதாவின் முகம் வாட்டமாகவே இருந்தது. அது வெளிப்படையாக தெரிந்தது.  ‘தன் தம்பியால் ஏதாவது பிரச்சனை வந்திருக்குமோ?’ என்ற எண்ணம் அவளுள்.

உணவு அனைவரும் உண்ட பின், லட்சுமி ப்ரியாவை தனியாக அழைத்துச்சென்று, “உன் அண்ணியை பார்த்தல்ல. அவ சரியா பேசவேயில்லை நான் வந்ததுல இருந்து. தம்பிட்ட பேசட்டானு கேக்கறா… நான் தான் வேணாம்னு சொல்லி வச்சுருக்கேன். ஏதாச்சும் உங்களுக்குள்ள பிரச்சனைன்னா பெரியவங்க எங்க கிட்ட சொல்லு. அப்படிலாம் எதுவும் இல்லைனா சகஜமா இரு. இதுபோல முஞ்சியை தூக்கி வச்சுட்டு இருந்தா, உன் அண்ணன் அண்ணிக்குள்ள தான் பிரச்சனை வரும். முடிவு பண்ணு. சீக்கிரம் கிளம்பற வழிய பாரு” சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அவள் இருந்த மனநிலையில்… ‘எல்லோருக்கும் அண்ணா அண்ணி வாழ்க்கை தான் முக்கியம். என் வாழ்க்கை எப்படி போனாலும் கவலையில்லை’ மனது வேதனையில் ஏதேதோ யோசித்தது.

இவளிடம் பேசிவிட்டு சென்ற லட்சுமியின் மனதிலோ… ‘ஏதாவது செய்து ப்ரியாவை அவள் கணவனுடன் அனுப்ப வேண்டும்’ என்பதே.

அவர் ப்ரியாவின் ஜாதகத்தையும் செழியனின் ஜாதகத்தையும் ஜோதிடருக்கு அனுப்பியபோது… அவர் சொன்னது… ‘இந்த ரெண்டு ஜாதகம் தான் கண்டிப்பா கூடும். நீங்க வேற என்ன நினைச்சாலும் நடக்காது. பத்துக்கு ஒன்பது பொருத்தம் ரெண்டு பேருக்கும். என்ன… ஒரு பெரிய கண்டம் இருக்கு அத மட்டும் தாண்டிட்டாங்கன்னா, இவங்கள போல ஒரு ஜோடி யாருமே இல்லைன்னு சொல்ற அளவுக்கு இவங்க வாழ்க்கை இருக்கும்’ என்று நல்லதையும் கூடவே கெட்டதும் சேர்த்து சொல்ல, பதறினார் லட்சுமி.

பரிகாரம் ஏதாவது என கேட்டபோது, ‘எது செய்தாலும் நடக்கப்போவது கண்டிப்பாக நடக்கும். பரிகாரம் பணவிரயமே’ என்றார் அந்த ஜோதிடர்.

‘ஜோதிடர் சொன்னது போல இப்போது நடக்கிறதே’ மகளின் வாழ்க்கை குறித்த பயம் அவருள்.

ப்ரியா லட்சுமியிடம் பேசிவிட்டு நேராக சென்றது அகிலன் கவிதா அறைக்கு.

அவளை பார்த்ததும் அகிலன் கவிதா இருவரும் அவளிடம் பேச ஆரம்பிக்க, ப்ரியா அகிலனிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றாள்.

கவிதா அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே செல்லலாம் என நினைக்க… அவளையும் இருக்கச்சொன்னாள் ப்ரியா.

பின் அகிலனிடம்… “ஏன் ண்ணா அண்ணியை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு கல்யாணத்த நிறுத்த சொன்ன?” என நேரடியாக விஷயத்திற்கு வர, அகிலன் கொஞ்சம் அதிர்ந்தான்.

கவிதாவை பார்த்தான், அவள் முகத்தில் அடிபட்ட உணர்வு. நிலையை சமாளிக்க அகிலன், “அது எதுக்குடா இப்போ? முடிஞ்சுபோன விஷயம்” என்றான் பேச்சை முடிக்க.

ப்ரியா விடாமல்… “உங்களுக்கு முடிஞ்சு போன விஷயம். ஆனா அதுனால நடந்தது என்னனு தெரியுமா?” என நிறுத்தி, செழியன் குறித்து எதையும் சொல்ல மனம் வராமல், “சொல்லு ண்ணா. எதுனாலன்னு? கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு நீ சாதாரணமா தானே இருந்த” ப்ரியா விடுவதாக இல்லை.

அகிலன் பேச வரும்முன்… கவிதா “என்னால தான்” என்றாள்.

ப்ரியா புரியாமல் கவிதாவை பார்க்க, கவிதா மூச்சை உள்ளிழுத்து… ‘திருமணத்திற்கு முன் அவள் அஜய்யை காதலித்தது, அதனால் அகிலனிடம் திருமணத்தை நிறுத்தச்சொன்னது, அஜய் கவிதாவிற்காக துணை நிற்காமல் போனது, பின் விருப்பமில்லாமல் அகிலனை அவள் திருமணம் செய்துகொண்டது’ என ப்ரியாவிடம் சொன்னாள்.

கவிதா சொல்ல சொல்ல அவள் கண்களில் கண்ணீர். அதை அகிலனால் பார்க்க முடியவில்லை. கவிதாவை அவன் ஆசுவாசப்படுத்த… ப்ரியா முகத்தில் வெற்றுப்புன்னகை.

“இவ்ளோ நடந்துருக்கே… உங்க தம்பிக்கு இதெல்லாம் தெரியுமான்னு யோசிச்சீங்களா அண்ணி?” என்றதும் ஒருசேர கவிதா மற்றும் அகிலன் அவளை பார்த்தார்கள்.

“பாவம் அண்ணி இளா. கல்யாணம் வேணாம்னு சொன்ன மாப்பிள்ளையோட அக்கா எப்படி வாழ முடியும்னு ரொம்ப தவிச்சான். நாங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சதே உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான்” என நிறுத்தி…

“ஏன் ண்ணா. நம்ம மச்சான் நம்மகூட சரியா பேசமாட்டேங்கறானே, என்ன காரணமா இருக்கும்னு நீ கூட யோசிக்கல… இல்ல? மாமாவ பக்கத்துல வச்சு பார்த்துக்கணும்னு தெரிஞ்ச உனக்கு இளாவ பத்தி யோசிக்கவே தோணலையே… ஏன் ண்ணா?” என்றதும் சுருக்கென்றது அகிலனுக்கு.

‘ஆம் செழியன் குறித்து தான் அதிகமாக யோசிக்கவில்லை. ஏன் தனக்கு தோன்றவில்லை? ஒருவேளை அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான் என்பதனாலோ?’ என யோசித்தான்.

“நான் மும்பை போனதுல இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன். அதுக்கு முன்னாடி கூட… அண்ணி எப்பயாச்சும் தான் போன் பண்ணி அவன் கூட பேசுவாங்க போல. சரி அவங்களுக்கு தெரியல, உனக்கு கூடவா ண்ணா தெரியல? நீயாச்சும் சொல்லியிருக்கலாமே… அண்ணியை அடிக்கடி அவன்கூட பேச சொல்லி. அண்ணி வாழ்க்கை பத்தி யோசிச்சிட்டு பாவம் தனியாவே இருந்தான் ண்ணா அவன்” செழியன் டைரி படித்ததில், மனதளவில் எவ்வளவு கஷ்டப்பட்டான் இதனால் என நினைத்து கேட்க வேண்டும் என நினைத்ததை கேட்டுவிட்டாள்.

இதற்கு பதில் தேவையில்லை என்பதுபோல… “நான் நாளைக்கு காலைல மும்பைக்கு டிக்கெட் போட்டுருக்கேன். நான் கிளம்பறேன் ண்ணா. ஒரு சின்ன ரெக்வஸ்ட். கொஞ்சம் அவன்கூட பேசுங்க ரெண்டுபேரும். ரொம்பவே லோன்லி’யா நிறைய டைம் ஃபீல் பண்ணி பார்த்திருக்கேன். தப்பா ஏதாச்சும் பேசி இருந்தா சாரிணா சாரி அண்ணி” பேசிவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் சென்றவுடன், “அகி நான் சொல்லிடவா செழியன் கிட்ட நடந்த எல்லாத்தையும்? நம்மனால ஏதாச்சும் பிரச்சனை போல அவங்களுக்குள்ள” என கவிதா கிட்டத்தட்ட அழக்கூடிய நிலையில் கேட்க…

கொஞ்சம் யோசித்த அகிலன்… “ப்ச் வேணாம் பேபி. இப்போ பேசினா, ப்ரியாவுக்காக தான் பேசுற மாதிரி இருக்கும். ஆனா பாரேன் எவ்ளோ அழகா நான் பண்ண தப்ப சொல்லிட்டு போறா” என நிறுத்தி…

“கூட பிறந்த தங்கை எனக்கு முக்கியம்னு யோசிச்ச நான், உன் தம்பி உனக்கும் முக்கியம்னு யோசிக்காம போய்ட்டேன். நீ இருந்த மனநிலைல அத யோசிக்க முடியல. நான் யோசிச்சிருக்கணும் செழியன் ஏன் இப்படி நடந்துக்கறான்னு…ஹ்ம்ம் சரி பார்ப்போம். நம்ம எதுவும் இப்போ பேச வேணாம். நடக்கறது நடக்கட்டும். நீ இனி சாதாரணமா பேசு செழியன் கிட்ட” என்றான்.

‘அவனே தான் ஒருமுறை ப்ரியாவிடம் சொன்னான்… அண்ணி தனியாகவே விடுதியில் வளர்ந்தவள். சொந்தம் குறித்து அதிகம் தெரியாது. நாம் தான் நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்று. ஆனால் அவனே அதை மறந்துவிட்டான் செழியன் விஷயத்தில் என்ற எண்ணம் அவனுள்.

இதுதான் அகிலன். தவறு இங்கு அவன் மீது குறைவே. இருந்தாலும் பழியை அவனே ஏற்றுக்கொண்டான் கவிதாவின் மேல் உள்ள அன்பினால்…. காதலால்!

ப்ரியா தன் அம்மாவிடம் சென்று அடுத்த நாள் கிளம்புவதாக சொல்லிவிட்டு, கிளம்ப தயாரானாள்.

அதேபோல அடுத்த நாள் அதிகாலை விமானத்தில் மும்பை சென்றடைய, வீட்டின் அழைப்பு மணியை அடித்தாள்.

கதவை திறந்தான் செழியன்.

அவளை பார்த்ததும் ஒரு நொடி… ஒரே ஒரு நொடி கண்கள் அகல சந்தோஷப்பட்டவன், அடுத்தநொடி கண்களை சுருக்கி பார்க்க, ப்ரியா அவன் இருந்த கோலம் கண்டு நொந்து போய்விட்டாள்.

வெட்டப்படாத தாடி, சீவப்படாத கேசம், வாடிய முகம், உயிர்ப்பிழந்த கண்கள் என பார்ப்பதற்கு அலங்கோலமாக இருந்தான்.

சில நொடிகள் இருவரும் பார்த்திருக்க, அவனை கடந்து உள்ளே சென்றாள் ப்ரியா.

சமையலறை சென்று பார்க்க, சமைத்ததற்கான தடயமே இல்லை. ப்ரியா வெளியே வர, அவளையே பார்த்து நின்று கொண்டிருந்தான் செழியன்.

‘ஒன்னும் செஞ்சு சாப்பிடல. ஏன் டா இப்படி இருக்க?!’ என நினைத்துக்கொண்டு குளியல் அறைக்குள் ப்ரியா புகுந்துகொள்ள, அவள் கண்களில் தெரிந்த பசியை பார்த்த செழியன் அவசரமாக டீ போட்டான் இருவருக்கும்.

அவள் குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், டேபிள் மேல் டீயை வைத்தான்.

அதை பார்த்தும் பார்க்காதது போல ப்ரியா வெளியே சென்றுவிட, செழியன் இப்போது குளியல் அறைக்குள் புகுந்தான்.

‘என்ன இது கண்ணாமூச்சி ஆட்டம்?’ சலிப்பாக இருந்தது ப்ரியாவிற்கு. ‘மனம் விட்டு பேசவே மாட்டானா’ என்கிற கோபம் அவளுள். 

Pregnancy kit’டை அவன் கண்ணில் படும்படி வைத்துவிட்டு, கல்லூரிக்கு கிளம்ப தயாராக, குளியல் அறையில் இருந்து வெளியே வந்தான் செழியன். வந்தவன் கண்ணில் அந்த கிட் தெரிய, புரியாமல் ப்ரியாவை பார்த்தான்.

“என்னது இது?” யோசனையுடன் அவன் கேட்க, ப்ரியா கண்ணாடி வழியே அவனை பார்த்தாள்.

அவளிடம் பதில் வராமல் போக, அதிலிருந்த பெயரை கூகுள் செய்து பார்த்தான்.

மறுபடியும் ஒரு நொடி அவள் பக்கம் திரும்பிய செழியன் கண்களில் அளவு கடந்த சந்தோஷம். இதை கண்ணாடி வழியாக ப்ரியா பார்க்க, ஒரே ஒரு நொடி தான் அவன் கண்களில் அந்த சந்தோஷம். பின் மறைந்துவிட்டது.

அவள் பக்கத்தில் அவன் வர, ப்ரியாவும் ஆவலுடன் திரும்பினாள்.

அவன் அடுத்து சொன்ன விஷயம்… “அபார்ட் பண்ணிடு” என்பதைக் கேட்டவுடன், கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள் ப்ரியா. ஆத்திரத்தில், கண்கள் சிவக்க, அடுத்த நொடி அவள் கை அவன் கன்னத்தில் பதிந்தது.

செழியன் எதிர்வினை எதுவும் காட்டாமல், கண்களை மூடித்திறந்து, மறுபடியும் “வேண்டாம். கலச்சுடலாம்” என்றான் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன்.

அதே ஆத்திரத்துடன், ப்ரியா அவன் மேலே போர்த்தியிருந்த டவலை கொத்தாக பிடித்தவாறு, “வெட்கமா இல்ல இதை சொல்ல? இப்போ சொல்ற… அப்போ எங்க போச்சு புத்தி?” அவள் கேட்க…

சில நொடி மௌனத்திற்கு பின், அவன் கண்களை மூடிக்கொண்டு, கொஞ்சம் தயங்கி… “நான்… நான் அப்போ… வேணும்னு கேட்கல” என்றவுடன், சேற்றை பூசி கொண்டதுபோல அருவருப்பாக உணர்ந்தாள் ப்ரியா. 

அவனை பற்றியிருந்த கையை விடுவித்து, அடிபட்ட வலியுடன், எதுவும் சாப்பிடாமல் கிளம்பத் தயாரானாள் கல்லூரிக்கு.

மறுபடியும் அவள் முன்னே வந்தவன், “இது கைய மீறி போறதுக்குள்ள ஏதாச்சும் பண்ணனும். இதை சொல்ல எனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்” என்றான். ஆனால் அவனால் நேராக அவளை பார்த்து சொல்ல முடியவில்லை.

அவனை பார்த்து ஏளனமாக புன்னகைத்த ப்ரியா… “நீ சொன்ன மாதிரி இது என்னால உருவானது தானே. நானே பார்த்துக்கறேன்” என்றாள்.

அவன் பட்ட துன்பம், மனதளவில் பட்ட காயங்கள்… அவள் கண் முன்னே வந்து வந்து செல்ல, அவளால் அவனிடம் கடுமையாக பேச முடியவில்லை இதற்குமேல்.

மனது முழுவதும் அவன் பேசியதே ஓடிக்கொண்டிருந்தது. அவளால் துளியும் நம்ப முடியவில்லை பேசியது செழியனா என்று!

ஆனால் அவனுடைய சின்ன சின்ன அசைவுகள், கண்களில் தெரிந்த நொடிப்பொழுது சந்தோஷம், ‘அவன் ஏதோ மறைக்கிறான். கண்டிப்பாக இவ்வளவு கீழ்த்தரமாக பேசக்கூடியவன் இல்லை’ என்று மட்டும் புரிந்தது அவளுக்கு.

‘அவனை குறித்து தெரிந்துகொண்ட விஷயங்களை இப்போது சொல்வது சரியல்ல. முழுவதும் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த கடைசி டைரியை பார்த்தாக வேண்டும்’ என நினைத்து அவனுக்கு முன் கிளம்பினாள் கல்லூரிக்கு.

‘அவனுடனான வாழ்க்கை என எவ்வளவு கனவு கண்டேன். எல்லாம் தலைகீழாகிவிட்டதே. எப்படி நேர் செய்வது. யாரிடமும் சரியாக பேசாதவன், அவன் வாழ்க்கை குறித்து தன்னிடமே சொல்லாதவன் வேறு ஒருவரிடம் கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டான்’ என நம்பினாள்.

சிறிது நேரத்தில் ‘அவன் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டான்’ என்று தெரிந்ததும், மறுபடியும் வீட்டிற்கு சென்றாள்.

படிக்கும் அறையில் பார்க்க, அங்கு டைரி இல்லை. பின் அவன் படுக்கையில், தலையணை அடியில் என பார்க்க, அங்கே இருந்தது டைரி. பக்கத்தில் ஒரு டிரஸ். அது ப்ரியாவின் டிரஸ்.

அதன் பொருள் புரிந்து, பழைய நினைவுகள் எல்லாம் அவளை தாக்க, கண்களில் கண்ணீர்.

‘ஏன் இளா… என்ன ஆச்சு உனக்கு? என்கிட்ட என்ன மறைக்க நினைக்கற?’ மனம் முழுவதும் வலியுடன்… ‘இன்னும் என்னென்ன தனக்கு காத்திருக்கிறதோ!’ என்ற பயத்துடன், அவன் டைரியை எடுத்தாள்.

அவனுடைய நடந்து முடிந்த நிகழ்வுகளின் குறிப்புக்களுடன், தன் நினைவுகளையும் இப்போது சேர்த்து, படிக்க ஆரம்பித்தாள்.

*************************************************

திருமண தேதி குறித்த பின், செழியன் மனது உழன்று கொண்டே இருந்தது.

‘அதெப்படி தந்தை அந்த அமெரிக்கா மாப்பிள்ளையுடன் தன்னை சேர்த்து பேசலாம்? அவனும் நானும் ஒன்றா? என் படிப்பென்ன? சொந்த உழைப்பால் இதுவரை வந்துள்ள நானும் அவனும் ஒன்றா? இசை என் வாழ்வில் வருவதற்கு நான் எடுத்த சிரத்தைகள் என்னென்ன? கஷ்டங்கள் என்னென்ன!’

‘என்னால் முடியாது என்று அவர் எப்படி நினைக்க முடியும்? நான் நினைத்தால், புகழ்பெற்ற பல நிறுவனங்களில் வேலைக்கு சேர முடியும். இந்தியாவிலோ இல்லை வெளிநாட்டிலோ… அவனை விட பல மடங்கு சம்பாதிக்க முடியும். நான் செய்யும் ஆராய்ச்சி குறித்து என்ன தெரியும் இவர்களுக்கு?’

‘இந்திய டிஃபென்ஸ்’ஸில் (defence) மிக முக்கிய பதவியில் இருக்கும் விஞ்ஞானியுடன் நேரடியாக வேலை பார்க்கிறேன். ஆராய்ச்சி முடிந்தவுடன், எனக்கு கீழ் சில பேர் வேலை பார்க்கப்போகிறார்கள். அவ்வளவு சாதாரணமானவன் ஆகிவிட்டேனா நான்!’

‘இசை பிறந்தநாள் பரிசுக்காக நான் செய்த ப்ராஜக்ட், அதன் மதிப்பு தெரியுமா இவர்களுக்கு? என்னுடைய பேராசிரியருக்கே, அது குறித்து அதிகம் தெரியாது. ஆனால், அதை நான் வெற்றிகரமாக செய்து முடித்தேன். என்னை அத்தனை பேர் முன் தலை குனிய வைத்துவிட்டாரே?!’

அவன் மனதில் பல வாதங்கள். கோபம். ஆற்றாமை. ஆனால் இது அனைத்தையும் தாண்டி மனதின் ஒரு மூலையில் ஒரு நிறைவு. அது ‘இசைப்ரியா! இனி தன் வாழ்வில்… மனைவியாக!’ என நினைத்து.

‘பெரிய பதவியில் உட்கார்ந்து… இப்போது பார்த்தீர்களா என் நிலையை!’ என்று மார்தட்டி சொல்ல வேண்டும் என நினைத்தான்.

அந்த இலக்கை அடைந்த பின், மனமார ‘உனக்காக தான் இதை செய்தேன். நீ என் வாழ்வில் வரவேண்டும் என்று தான் இதை செய்தேன்’ என சொல்லி, காதலை ப்ரியாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

‘மனதில் அனைத்தையும் புதைத்துக் கொள்வது புதிதல்ல. கொஞ்ச நாள். ப்ரியா மீதுள்ள தன் ஆசை காதல் அனைத்தையும் மனதின் உள்ளேயே வைத்துக்கொள்ளவேண்டும்’ எனவும் எண்ணிக்கொண்டான்.

‘ப்ரியா உடனான திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது, பணம் நிறைய தேவைப்படும். யார் உதவியும் வேண்டாம். பெறவும் கூடாது’ என நினைத்து, சிற்சில முதலீடுகளும் செய்தான்.

அதிகம் மனம் விட்டு யாருடனும் பேசாமல், திருமணம் வரை வந்தாயிற்று. இதோ இப்போது… அவன் பக்கத்தில் அவள். இன்னும் சில நிமிடங்களில் அவன் மனைவி.

அதே எண்ணம் ப்ரியாவினுள். ஆசையாக செழியனை பார்த்தாள்.

ஒன்றாக வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து பல ஆயிரம் கனவுகளுடன், இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்!