129117961_3792642510787937_8841292475401793232_o-b62418be

அத்தியாயம் – 16

கிருஸ்துமஸ்க்கு மகள் வருவாள் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய்விடவே மீண்டும் சங்கீதாவின் மனம் துவண்டு போனது. ஆனால் ஜெகதீஸ் மனம் தளராமல் இருந்தார். இத்தனை வருடம் இல்லாத ஒரு புதிய எண்ணம் அவரின் மனமெங்கும் தோன்றியது.

அன்று செவ்வந்தி பூவை கவரோடு கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்ற பெண்ணின் முகத்தை பார்த்திருக்க வேண்டுமோ என்ற சிந்தனையில் உழன்றது அவரின் மனம். யாரோ முகவரி அறியாத பெண்ணை தன் மனம் ஏன் நேரில் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது என்ற கேள்விக்கு அவரிடம் விடையில்லை. ஆனால் என்னவோ நல்லது நடக்க போவதாக மனம் சொன்னது.

கணவன் சாப்பிடாமல் ஏதோவொரு தீவிரமான யோசனையில் இருப்பதைக் கண்ட சங்கீதா, “முதலில் வயிறார சாப்பிடுங்க” என்று அதட்டல் கேட்டு அவரின் கவனம் மனைவியின் பக்கம் திரும்பியது.

“என்னைவிட நீதான் சோகமாக இருந்தே. இப்போ என்னாச்சு ரொம்ப தெளிவாக இருக்கிற மாதிரி இருக்கு” என்றார் சாப்பிட்டபடியே.

சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்த சங்கீதா, “என் நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரம் இலந்துவிடுவேன்னு நினைச்சீங்களா? இல்ல கண்டிப்பா என் மகளுக்கு எதுவும் ஆகியிருக்காது. என்ன என்னைத் தேடி வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாளாகும் அவ்வளவுதானே?” என்று சாதாரணமாக கேட்டார்.

இதுதான் சங்கீதாவின் குணம். எந்தவொரு நிலையிலும் தன்னுடையை தன்னம்பிக்கையை மட்டும் அவள் இன்றுவரை இழந்தது கிடையாது. தோல்வி என்று துவண்டு வந்து விழுகும் வேளையில், “நிறைய தோல்வியை சந்திக்கிறீங்க என்றால் கண்டிப்பா வளர்ச்சி பாதையை நோக்கி போயிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம். அவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைச்சிட்டா தான் என்ற கர்வம் வந்துவிடுங்க. அதுக்கு இது எவ்வளவோ பெட்டர்..” என்று சொல்லி கணவனைத் தேற்றிவிடுவார்.

அவள் அதிகமாக பாதிக்கபட்டு இருந்தது மகள் விஷயத்தில் மட்டும்தான். அந்த நேரத்தில் கூட அவரின் வேலையை அவரே சரியாக செய்து கொள்வார். காலையில் எழுந்தும் குளித்து உடைமாற்றிக் கொள்வது, துணியைத் துவைத்து போடுவது, அதை எடுத்து மடித்து வைப்பது, வீட்டை சுத்தமாக செய்வது என்று அனைத்தும் செய்வார்.

அதெல்லாம் நினைத்த ஜெகதீஸ், “என்னவோ மகளை எதிர்பார்த்து இந்த ஊரிலேயே பதினாறு வருடத்தை ஓட்டிவிட்டோம்” என்றார்.

கணவனை சிரிப்புடன் ஏறிட்ட சங்கீதா, “நிஜம்தான். இதில் என்ன ஹைலைட்  என்றால் மத்துவங்களுக்கு பிடிக்கும் பணப்பேய் நமக்கும் பிடிக்காமல் இருந்ததே அதுதான். ஒத்த மகளை கடலிடம் பறிகொடுத்ததற்கு பரிகாரமாக கற்றுக்கொண்ட பாடம். ஆயிசுக்கும் மறக்காது” என்றவர் சொல்லி முடிக்க ஜெகதீஸ் கூட தன்னை மறந்து சிரித்துவிட்டார்.

எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கி அதிலிருந்து மீண்டும் வரும் வல்லமை அவர்களிடம் இருந்தது. இருவரிடக்கும் இடையே இருக்கும் காதலும் புரிதலும் தான் அவர்களின் வாழ்க்கைப் பாதையில் இலகுவாக வழிநடத்தி செல்கிறது.

நாட்கள் அதன் போக்கில் செல்ல நியூ இயர், பொங்கல் என்று நாட்கள் ரெக்கைகட்டி கொண்டு பறந்தது. வெற்றி திருமண ஏற்பாடுகளில் மும்பரமாக ஈடுபட்டிருந்தான். இந்த விஷயம் அறியாத விமலா மகனின் திருமணம் பற்றி கணவனிடம் பேச்செடுத்தார்.

காலை மகன் வீட்டிருந்து கிளம்பிச் சென்றவுடன் தங்களின் அறைக்கு சென்று கணவனின் எதிரே அமர்ந்தார் விமலா. அவர் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்தியபடியே, “என்ன விஷயமாக பேசணும்?” என்றார்.

நரசிம்மன் அப்படி கேட்டவுடன், “இல்லங்க நம்ம வெற்றிக்கு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்துவிட்டால் அவன் சந்தோசமாக இருப்பான் இல்ல. நமக்கு கடமை முடிந்தது என்று நிம்மதியாக இருக்கலாம்” என்றவர் கணவனின் முகத்தைப் பார்த்தார்.

அவர்களின் அறையைக் கடந்து சென்ற ஜமுனாவின் காதுகளில் விழுந்தும், ‘அண்ணனுக்கு திருமணமா?’ என்ற கேள்வியுடன் அங்கே நின்று அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்.

மகள் வெளியே இருப்பதை அறியாத நரசிம்மன், “அவனைப்பற்றியும் அவன் ராசி பற்றியும்தான் ஊருக்கே தெரியுமே.. இதில் நான் எங்கே போய் அவனுக்குப் பெண் பார்க்க முடியும்? அப்படியே பார்த்தாலும் கடைசியில் நம்ம மானம்தான் கப்பல் ஏறும். அதனால் இந்த பேச்சை இத்தோடு விடு” என்றவர் தன் வேலையில் கவனத்தை திருப்பினார்.

இத்தனை வருடங்களாக இல்லாமல் கணவன் பேசிய பேச்சில் கோபமடைந்த விமலா, “சும்மா அவனை குத்தம் சொல்லாதீங்க. அவன் தொடங்கிய தொழில் எல்லாமே நல்ல இலாபம்தான் வந்துச்சு. அதெல்லாம் நீங்கதான் மாற்றி பொய் கணக்கு எழுதி ஊரையே நம்ப வச்சீங்க. இத்தனை வருடமாக நீங்க செய்த தவறுக்கு நானும் உடந்தையாக இருந்திருக்கிறேன் இல்லன்னு சொல்லல. ஆனால் இப்போ அவனுக்கு ஒரு வாழ்க்கைன்னு வரும்போது இப்படி சொன்னால் என்னக அர்த்தம்” என்று பட்டென்று கேட்டுவிட்டார்.

மனைவியிடம் இப்படியொரு பதிலடியை எதிர்பார்க்காத நரசிம்மன், “ஓ அப்போ நான்தான் எல்லாம் பண்ணினேன் இல்ல. நான் மட்டும் அவனுக்கு ராசி இல்லாதவன் பட்டம் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நீயும், நானும் இந்த சொத்துக்கு சொந்தகாரங்களாக இருந்திருக்க முடியாது. அதனால் தான் அவனை தட்டி வைக்கிறேன்னு உனக்கு புரியல. நாளைக்கே அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து காட்டி வைத்தால் அவ நம்மகிட்ட கேள்வி கேட்பா. அதுக்கு இடம் கொடுக்க கூடாதுன்னு நினைத்தால்..” என்றவருக்கு எரிச்சலாக வந்தது.

கணவனின் கோபம் புரிந்தபோதும், “இதெல்லாம் ரொம்ப சுயநலங்க. என்னதான் இருந்தாலும் அவன் நம்ம பெத்த பையன்” என்றார் விமலா கோபத்துடன்.

“ஆனால் அவனை வளர்த்தது யாருன்னு உனக்குத்தான் நல்ல தெரியுமே?! அவங்களோட சேர்ந்து நேர்மையை நல்லாவே பழகி இருக்கான் உன் மகன். சொத்துக்காக சொந்த மகனையே அவங்க வீட்டில் வளரவிட்ட கடைசியில் அவன் எனக்கே எதிரா திரும்புகிறான். இன்னைக்கும் சொத்து முழுவதும் அவங்க பெயரில் தான் இருக்கு. அதை நிர்வாகிக்கும் பொறுப்பு மட்டும்தான் நம்மகிட்ட இருக்கு” என்று மனைவிக்கு நினைவுப்படுத்தினார்.

ஆனால் இத்தனை நாளாக பேசாமல் அமைதியாக இருந்த விமலா, “நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேங்க. ஆனால் பிள்ளைகள் வாழ்க்கையில் விளையாடாதீங்க. பாவம் வெற்றி அறியாத வயதில் இருந்தே ஊரார் பழிச்சொல்லுக்கு ஆளாகி நின்னுட்டான். இனிமேலாவது அவன் நல்ல இருக்கட்டுமே” என்றவர் கணவனிடம் கெஞ்சினார்.

“இந்த விஷயத்தில் என்னால் ஒண்ணுமே பண்ண முடியாது விமலா” என்றவர் கோபத்தில் சொல்லிவிட்டு படுக்கையில் இருந்து எழுவதை கண்ட ஜமுனா சட்டென்று தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டு சரிந்து தரையில் அமர்ந்தாள்.

தாய் – தந்தையும் பேசியதை முழுவதுமாக கேட்டு, ‘அண்ணன் தொடங்கிய தொழிலில் அப்பா பொய் கணக்கு எழுதும் விஷயம் எனக்கு தெரியும். ஆனால் ஏன் அப்படி செய்கிறார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்தது. இப்போ இந்த சொத்து நம்மளோடது இல்லன்னு சொல்றாரு. அப்போ இந்த உண்மையெல்லாம் அண்ணனுக்கு தெரியுமா? அதெல்லாம் தெரிந்தும் அவன் ஏன் அமைதியாக இருக்கணும்?’ என்ற தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

அடுத்த ஒரு வாரம் அமைதியாக சென்றது. அன்று இரவு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி அனைவரையும் தடுத்தவள் வெற்றியைப் பார்வையால் தேடினாள்.

அதை கவனித்த மைதிலி, ‘என்ன விஷயம் ஜமுனா?’ என்று பார்வையால் சின்னவளிடம் வினாவினாள்.

‘எனக்கும் ஒன்னும் புரியல’ என்று உதட்டைப் பிதுக்கினாள்.

அனைவரும் என்ன சொல்ல போகிறாள் என்ற ஆவலோடு செவ்வந்தியைப் பார்த்தனர். அதற்குள் வேலைகளை முடித்துவிட்டு கடைக்குள் நுழைந்த வெற்றி கூட்டத்தை விளக்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அவன் நேராக செவ்வந்தியின் அருகே வந்து நின்று, “திடீரென்று எதுக்கு உங்களை நிற்க வைத்திருக்கிறோம் என்ற கேள்வி எல்லோருக்கும் வரலாம்” என்றவன் சிறிது இடைவெளி விடவே மற்றவர்கள் சுவாரசியமாக அவனையே பார்த்தனர்.

“நாளைக்கு நானும், செவ்வந்தியும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போறோம். திடீரென்று முடிவெடுத்ததால் கிராண்டாக செய்ய முடியல. அதுக்கு நீங்க அனைவரும் கண்டிப்பாக வந்து கலந்துக்க வேண்டும். உங்களை கவனிச்சிக்கிற பொறுப்பை ராம்மோகன் – சரண்யா, பிரகாஷ் – ஜோதியிடம் ஒப்படைச்சிருக்கேன்” என்று வெற்றி திருமணத்தை பற்றி சொல்லவே அனைவரின் முகத்திலும் சந்தோசம் பரவியது.

வெற்றியின் பேச்சில் தன்னை மறந்து அவனையே பார்த்தாள் செவ்வந்தி. அவன் யாரும் கவனிக்காத நேரத்தில் சட்டென்று அவளைப் பார்த்து கண்ணடித்து உதடுகுவித்து, ‘உம்மா’ என்றதும் குப்பென்று அவளின் முகம் சிவந்து போனது.

மைதிலி மற்றும் ஜமுனா இருவருக்கும் இது எல்லையில்லாத சந்தோஷத்தை கொடுத்தது. அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றபிறகு, “அண்ணா கூட பிறந்த தங்கைக்கே கடைசி நிமிசம்தான் விஷயத்தை சொல்ற” என்று அவனோடு சண்டைக்கு வந்தாள் ஜமுனா.

“உன் அண்ணியை இப்படியே விட்ட வருடம் முழுவதும் மிஷுனுக்கும் ஆச்சு எனக்கும் ஆச்சுன்னு தச்சிட்டே இருப்பா. அதான் இந்த அதிரடி முடிவு..” என்று சொல்லவே ஜமுனா புன்னகையோடு அண்ணனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

செவ்வந்தி மைதிலியின் கையைப் பிடிக்க, “எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. நீ வெற்றியை வாழ்க்கை துணையாக தேர்ந்தேடுப்பென்னு நான் நினைக்கவே இல்ல. ஆனால் மனசுக்கு நிறைவாக இருக்கு” என்றாள்.

மறுநாள் விடியல் செவ்வந்தியின் வாழ்க்கையை மாற்றியமைக்க போகும் விடியல் என்பதால் அவளின் மனதில் சந்தோசம் நதிபோல கரைபுரண்டு ஓடியது. செவ்வந்தி சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு வெளியே வர அவளிடம் ஒரு புடவையைக் கொடுத்த மைதிலி, “இதைக் கட்டிட்டு வா” என்று கேள்வி கேட்க விடாமல் விரட்டினாள்.

சிறிதுநேரத்தில் புடவையை அணிந்துகொண்டு வெளியே வந்த செவ்வந்தியைப் பார்த்து இமைக்க மறந்து நின்றாள் மைதிலி. செவ்வந்தியின் நிறத்திற்கு வாடாமல்லி நிறத்தில் இருந்த புடவை பந்தமாக பொருந்தி இருந்தது. அத்தோடு அவளின் நிறம் எடுப்பாக தெரிவதோடு இல்லாமல், அவளின் அழகு சற்று அதிகரித்ததைப் போல தோன்றியது.

தன்னை இமைக்க மறந்து பார்க்கும் தோழியின் தோளைப்பிடித்து உலுக்கிய செவ்வந்தி, “ஏய் என்னாச்சுடி” என்றாள் கோபத்துடன்.

அதில் தன்னை மீட்டெடுத்து நிமிர்ந்த மைதிலி, “உனக்கு இந்த புடவை எவ்வளவு அழகாக இருக்கு தெரியுமா? பாவம் வெற்றி பார்த்ததும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை” என்றாள் பிரம்மிப்புடன்.

அவளிடம் பாராட்டில் லேசாக சிவக்க தொடங்கிய முகத்தை மறைக்கும் விதமாக திரும்பிய செவ்வந்தி, “நானே ரெடியாகிறேன். நீ போய் உன் வேலையை கவனி” மைதிலியை அங்கிருந்து அனுப்பிவிட்டு கண்ணாடியின் முன்னே அமர்ந்தவள் அளவான ஒப்பனையில் தயாரானாள்.

அவள் அணிந்திருக்கும் புடவை திருமணத்திற்கு எடுக்கப்பட்டது என்றவள் நினைத்திருந்தாள். ஆனால் அந்த புடவையின் பின்னோடு இருக்கும் கதை அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. தான் வாங்கிக் கொடுத்த புடவையில் தன்னவளை கல்யாணப்பெண்ணாக பார்க்கும் வெற்றியின் மனம் என்னவாகுமோ?

மைதிலி சுடிதாரில் கிளம்பி வீட்டிற்கு வெளியே வருவதற்குள், ராம்மோகன் – சரண்யா இருவரும் காரில் வந்து அவர்களை அளித்துக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்றனர்.

அதே நேரத்தில் தன் வீட்டில் சாண்டில் நிற பேண்ட், புளூ கலர் சர்ட் அணிந்து கம்பீரமாக தயாராகி வந்த அண்ணனைப் பார்த்து, “ஐயோ இப்போ மட்டும் உங்களை அண்ணி பார்த்தால் அசந்து போயிருவாங்க அண்ணா”  கண்ணில் குறும்பு மின்னி மறைந்தது.

“ஏய் வாலு..” என்று அவளின் தலையைச் செல்லமாக பிடித்து ஆட்டிவிட்டு, “ஆமா அந்த சேலையை எடுத்து வச்சிட்டியா?” என்றவன் ரகசியமாக தங்கையிடம் கேட்டான்.

அவளோ எதுவும் தெரியாது போன்ற பாவனையோடு, “எந்த சேலை” என்று அவனை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தாள்.

“அதுதான் அன்னைக்கு இரண்டு பட்டுப்புடவை வாங்கிட்டு வந்தேனே” என்றவன் இழுக்க,

“நான் கூட ஒன்னு அண்ணிக்கு என்று எடுத்து வைத்தேனே அதை சொல்றீயா அண்ணா?” என்றாள் வேண்டுமென்றே.

அவன் பதில் சொல்லாமல் அவளை முறைக்க, “அந்த புடவையை அண்ணி வந்தும் நீயே உன் கையால் கொடு. இப்போ எடுத்துட்டு போனாலும் அதை அவங்க கட்ட முடியாது” என்றாள் குறும்புடன் கண்சிமிட்டி.

இருவரும் பேசுவதைக் கேட்டபடி ஹாலிற்கு வந்த நரசிம்மன் – விமலா ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

பிறகு, “ஆமா நீங்க இருவரும் எங்கே கிளம்பிட்டீங்க?” என்று ஆராய்ச்சி பார்வையோடு கேட்டார் நரசிம்மன்.

“அண்ணனுக்கு கல்யாணம்.. அதுக்குதான் ரிஜிஸ்டர் ஆபீஸ் போறோம்” என்றாள் மகள் அலட்சிய பார்வையோடு.

அதைக்கேட்டு நரசிம்மன் கோபத்துடன் மகனை முறைத்தபடி, “இப்போ உனக்கு கல்யாணம் ஒரு கெடா” என்றதும் ஜமுனாவிற்கு கோபம் வந்து வாயைத் திறக்கும்போது அவளின் கையைப்பிடித்து தடுத்தான் வெற்றி.

அவள் அண்ணனை பார்க்க மறுப்பாக தலையசைத்தவன், “எனக்கு பிடிச்ச பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இதில் உங்களுக்கு எதுக்கு கோபம் வருகிறது? உங்ககிட்ட சொல்லும் அளவுக்கு நீங்க என்னை மகனா என்ன மனுசனாகக் கூட மதிக்கல. அதன் நானே ஒரு முடிவெடுத்து என் பாதையில் போக தொடங்கிட்டேன்” என்றவன் தங்கையை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

நரசிம்மன் போகும் மகனைப் பார்வையால் சுட்டெரிக்க, அதற்கு எதிர் மாறாக விமலாவின் உள்ளம் குளிர்ந்து போனது. இத்தனை நாளாக கணவனின் கண்ணசைவில் பொம்மையாக இருந்தவர், ‘என் மகன் வாழ்க்கை இனிமேலாவது நல்லா இருக்கணும் கடவுளே’ ஒரு தாயாக மனமார வேண்டிக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!