Malar – 21

121677346_107347137817932_2902235567797713916_o-7b657fe6

Malar – 21

அத்தியாயம் – 21

செவ்வந்தி வாசலில் தனியாக நிற்பதைக் கவனித்த சம்பூரணம், “நீங்க பேசிட்டு இருங்க இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி விரைந்தார். அப்போது அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டு கதறியபடி எதிர் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

அதை கண்டவுடன், “வெற்றி இங்கே வாப்பா. உன் மனைவி மழையில் நனைத்தபடி உன் மாமா வீட்டுக்குள் ஓடுற” என்று சத்தமிடவே ஆண்கள் இருவரும் பதட்டத்துடன் வெளியே வந்தனர்.

அப்போதுதான் அவள் ஓடுவதை கவனித்த வெற்றி அவளின் பெயர் சொல்லி அழைத்தபடி பின்னோடு ஓடினான். அதற்குள் கால் வழுக்கி கீழே விழுந்தவள், “அம்மா” என்று அலறினாள்.

நெற்றியில் இரத்தம் ஊற்றெடுத்து பெருகிட, “ஏண்டி இப்படி பண்ற” என்ற வெற்றி அவளை தூக்கி நிறுத்த கால் ஊன்றி நிற்க முடியாமல் தடுமாறினாள். ஆனால் அவளின் பார்வை முழுவதும் ஏக்கம், தவிப்பு, நிராசை, கோபம், துக்கம் என்று அனைத்தும் கலந்திருக்க கண்டு திகைத்து நின்றான்.

அவளின் மனநிலையை தெளிவாக உணர்ந்தவன்,“செவ்வந்தி இங்கே என்னை பாரு?” என்று அவளின் கன்னம் தட்டிட அவளின் கையைத் தட்டிவிட்டு நடக்க முடியாமல் மீண்டும் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தது வரை மட்டுமே நினைவு இருந்தது.

செவ்வந்தி மயங்கி சரிவதை கண்ட வெற்றியின் இதயத்துடிப்பு சிலநொடிகள் தன் வேலையை நிறுத்திக் கொண்டதை போல உணர்ந்தான். சிறிதுநேரம் அசைவின்றி செயல் இழந்து நின்ற வெற்றியை உலுக்கி இயல்நிலைக்கு கொண்டு வந்தார் மனோஜ்.

அப்போதுதான் அவளின் நிலையை உணர்ந்து வெற்றி அவளை கையில் தூக்கிக்கொண்டு, “அப்பா ஹாஸ்பிட்டல் போகணும்” என்றான் பதட்டத்துடன்.

அதற்குள் அந்தப்பக்கமாக வந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அவளின் நெற்றியில் பெருகிய இரத்தம் வெற்றியின் சட்டையை நனைத்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் மருத்துவனையில் செவ்வந்தியை சேர்க்க டாக்டர்கள் அவளுக்கு ட்ரீட்மெண்ட் தொடங்கினர்.

வெற்றி பயத்துடன் அங்கிருந்த சேரில் அமரவே, “இவ நம்ம செவ்வந்தியா?” என்று கேட்டபடி அவனின் அருகே அமர்ந்தார் மனோஜ்.

அவன் ஒப்புதலாக தலையசைத்துவிட்டு மௌனமாகிவிடவே, ‘ஜெகதீஸ் – சங்கீதாவின் நம்பிக்கை வீண் போகல. அவங்க நினைச்ச மாதிரியே செவ்வந்தி உயிரோடுதான் இருக்கிறா. இப்போ அவங்க உயிரோடு இருக்கும் விஷயத்தை வெற்றியிடம் சொல்லலாமா?’ என்ற யோசனையோடு அமர்ந்திருந்தார்.

சிறிதுநேரத்தில் அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர், “செவ்வந்தியின் கணவன்” என்று கேட்க, “நான்தான் டாக்டர்” என்றபடி பதட்டத்துடன் எழுந்து நின்றான் வெற்றி.

“அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அவங்களுக்கு தலையில் கட்டுப்போட்டு தூங்குவதற்கு ஊசி போட்டு இருக்கேன். காயம் சரியானதும் ஒருமுறை கூட்டிட்டு வாங்க. ஸ்கேன் எடுத்துப் பார்க்கணும்” என்று சொல்லவே அவனும் சரியென்று தலையசைத்தான்.

“கொஞ்சநேரம் கழிச்சு போய் பாருங்க” சொல்லிவிட்டு அவர் சென்றுவிடவே அறைக்குள் நுழைந்தான் வெற்றி. அங்கே படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த செவ்வந்தியைக் கண்டவுடன் அவனின் மனம் கனத்துப்போனது.

அவன் இதுவரை யாரிடமும் உண்மையைச் சொல்லாமல் இருக்க ஒரே காரணம் அந்த சொத்துதான். அந்த சொத்தை நிர்வாகம் செய்யும் உரிமை மட்டுமே நரசிம்மனின் கைகளில் இப்போது இருக்கிறது. இன்றும் அவர்களின்  சொத்து முழுவதும் செவ்வந்தியின் பெயரில் இருக்கிறது.

ஏனென்றால் சுனாமியில் ஜெகதீஸ் குடும்பமே இறந்துவிட்டதாக சொல்லபட்டது. ஆனால் உயிலின் படி இருபத்தி ஐந்து வருடம் வரை அதை யாருக்கும் விற்க முடியாது. அதே நேரத்தில் இறந்ததாக சொல்லப்பட்ட ஜெகதீஸ் குடும்பம் திரும்ப வந்தால் அவர்களிடம் சட்டப்படி சொத்தை ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை சொத்தை உரிமை கொண்டாடி யாரும் வராத பட்சத்திற்கு அந்த சொத்துகள் அனைத்தும் வெற்றியிடமே ஒப்படைக்கப்படும்.

இப்போது இவள்தான் சொத்துக்கு உரியவள் என்ற உண்மை வெளியே தெரிய வந்தால் கண்டிப்பாக செவ்வந்தியின் உயிருக்கு ஆபத்து வருமென்ற காரணத்தினால் மெளனமாக இருக்கிறான் வெற்றி. அதையெல்லாம் நினைத்தபடி அவன் அவளின் அருகே சேர் போட்டு அமர்ந்தான்.

அவள் மீண்டும் கண்விழித்து பார்க்கும்போது ஹாஸ்பிட்டல் படுக்கையில் இருந்தாள். தன்னுடைய தலையில் கட்டுப்போட்டு இருப்பதை உணர்ந்த செவ்வந்தி சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். அங்கே வெற்றி கவலையுடன் சேரில் அமர்ந்தபடி உறங்கி போயிருந்தான். செவ்வந்தி எழுந்து அமர முயற்சிக்க, அவளிடம் இருந்து அசைவை உணர்ந்த வெற்றி கண்விழித்து பார்த்தான்.

“என்னை எழுப்பி இருக்கலாமே செவ்வந்தி” அவளுக்கு உதவி செய்தபடியே கேட்டான்.

சிறிதுநேர மௌனத்திற்கு பிறகு, “நான் எப்படி இங்கே?” என்று புரியாமல் குழப்பத்துடன் அவனை கேள்வியாக நோக்கினாள்.

அவளின் அருகே சேரை இழுத்துபோட்டு அமர்ந்தவன், “நீ கேட் திறப்பதற்கு முன்னால் மயங்கி விழுந்துட்டா செவ்வந்தி. உன்னைக் கொண்டு வந்து இங்கே சேர்த்தோம்”என்றவன் முடிக்கவே அவள் மௌனமாகிவிட்டாள்.

தீவிரமான சிந்தனையில் அமர்ந்திருந்த மனைவியிடம், “உனக்கு தூக்கம் வரலயா?” என்று கேட்டதற்கு மறுப்பாக தலையசைத்தாள் செவ்வந்தி. அதன்பிறகு அவனும் அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாகிவிடவே நேரம் கடக்க தொடங்கியது.

அவளின் மனம் முழுவதும் தாய் – தந்தையின் வசமே இருந்தது. ஒரு காலத்தில் அவர்கள் சந்தோசமாக வாழ்ந்த வீடு. இப்போது ஜெகதீஸ் – சங்கீதா இருவருமே உலகில் உயிரோடு இல்லை. ஆனால் அந்த கோர சம்பவத்தின் தாக்கம் அவளின் மனதைவிட்டு நீங்காமல் இருந்தது.

அதன் பிடியிலிருந்து வெளி வர முடியாமல் தினம் தினம் அவள் அனுபவிக்கும் கொடுமையை நினைத்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவள் திடீரென்று அழுவதைக் கண்ட வெற்றி, “செவ்வந்தி என்னாச்சுடா” என்று கேட்டதுதான் தாமதம்.

“வெற்றி டாக்டரிடம் சொல்லி எனக்கு தூக்க மாத்திரை வாங்கிதறீயா? எனக்கு தூக்கம் வரல.. ஆனால் நான் தூங்கணும்.. எனக்கு அப்பா, அம்மா ஞாபகமாகவே இருக்கு.. அந்த கடலலை என்னை இழுத்துட்டு..” என்று அவள் விம்மி விம்மி அழுதபடியே கூறினாள்.

அவள் சொன்ன விஷயம் அவனை அதிர்ச்சிக் கொடுக்க, “உனக்கு தூக்க மாத்திரை போடும் பழக்கம் இருக்கா? நீ வீட்டில் தூக்க மாத்திரை போட்டு நான் பார்த்ததில்லையே” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“இல்ல தினமும் தூக்க மாத்திரை போடுவேன். உங்க வீட்டுக்கு வந்த முதல் மட்டும்தான் போடவே இல்ல. மற்ற நாளில் பாலில் கலந்து குடிச்சிடுவேன்” என்று அழுகையுடன் உண்மையை உளறினாள். அவள் தூக்கத்தில் பேசுவதும், அவளின் மனதில் ஏற்பட்ட காயம் ஓரளவு அவனுக்கு தெரியும் என்றாலும் இந்த விஷயம் அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

அவள் அத்தோடு நிறுத்தாமல், “உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்? அந்த வீட்டைப் பார்த்தும் நான் ஏன் வைலன்ட்டாக பிகேவ் பண்ணேன் எதுவுமே உனக்கு தெரியாது” என்றவளை அவன் இழுத்து அணைத்து ஆறுதல் படுத்த முயற்சித்தான்.

அவளோ அழுதபடி அவனின் வயிற்றில் முகம் புதைத்தபடி, “நாங்க எல்லோரும் சந்தோசமாக வாழ்ந்த வீடு வெற்றி” என்றவளை சமாதானம் செய்ய அவன் எடுத்த முயற்சிகள் வீணாகியது.

அவனிடமிருந்து விலகிய செவ்வந்தி, “எனக்கு சொந்தபந்தம்னு யாருமில்லாத விஷயமும், நான் ஆசிரமத்தில் படித்தது எல்லாமே உண்மைதான். அதுக்கு முன்னாடி என் வாழ்க்கை எப்படி இருந்துச்சுன்னு உனக்கு தெரியாது” என்று சொல்ல தொடங்கினாள். தன்னுடைய அத்தை மகனான வெற்றி வேந்தனிடம் உண்மையைச் சொல்கிறோம் என்று அவளுக்கு தெரியாது.

எல்லாம் தெரிந்த வெற்றியோ, ‘இதனால் உன் மனசுக்கு ஆறுதலாக இருக்குமென்று நீ நினைத்தால் சொல்லு நான் கேட்கிறேன்’ என்றபடி அவளின் அருகே அமர்ந்தான். அவனிடம் தன் மனபாரத்தை இறக்கி வைக்க எண்ணி தன்னுடைய கடந்த காலத்தை அவனிடம் கூற தொடங்கினாள் செவ்வந்தி.

வெற்றியின் மனம் மெல்ல கடந்த காலம் நோக்கி பயணித்தது.

செவ்வந்தியின் வீடு அந்த காலத்தில் அவளின் தாத்தாவின் சொந்த உழைப்பில் கட்டபட்டது. வேதாசலம் – வாசுகி என்றால் தெரியாத ஆட்கள் ஊரிலேயே இருக்க முடியாது. அந்தளவிற்கு பணம் படைத்த மனிதர் என்றாலும் அனைவரிடமும் நன்றாக பழகுவார். அவர் ஒரு விஷயம் செய்தால் அதில் அடுத்தவர் நலனும் கலந்திருக்கும்.

ஆஸ்திக்கு ஒரு மகனும், ஆசைக்கு ஒரு பொண்ணு என்று இரண்டு பிள்ளைகள். ஜெகதீஸ் அப்படியே குணத்தில் தந்தையை போலவே இருந்தான். வாழ்க்கையில் வெற்றியோ, தோல்வியோ மனம் தளராமல் அதை எதிர்கொள்ளும் வழி முறைகளை தந்தையிடமிருந்து கற்று வைத்திருந்தான். ஒரு மனிதனைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவரை துல்லியமாக எடைப் போட்டுவிடுவான். அதனால் தான் வாழ்க்கையில் அதிகம் தோல்வியை அவர் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனது.

ஆனால் விமலா அப்படியே எடுப்பார் கைபிள்ளை. யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு சரியென்று சொல்வாள். யாரின் மீதாவது கண்மூடி தனமான அன்பை வைத்துவிட்டால் கடைசிவரை அதிலிருந்து அவளால் வெளி வர முடியாது. அவளே தெளிந்து வெளிவர நினைத்தால் மட்டும்தான் தன்னுடைய தவறை உணர்வாள். மற்றபடி சுற்றி இருப்பவர்கள் என்ன சொன்னாலும் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டாள்.

வேதாசலம் தன் மகனுக்கு சங்கீதா என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். ஜெகதீஸ் குணத்திற்கு ஏற்ற பெண்ணாக அமைத்ததில் வீட்டில் இருந்தவர்கள் சந்தோசம் அடைந்தனர். சங்கீதாவிற்கு வாசுகி மற்றொரு தாய் ஸ்தானம் தான். தன் மகளுக்கு அவர் செய்வதையெல்லாம் தன் மருமகளுக்கு செய்து அழகு பார்த்தார்.

இதற்கிடையே, தன் நிறுவனத்தில் வேலை செய்த நரசிம்மனுக்கு விமலாவை கட்டி வைக்க முடிவெடுத்தனர். ஏற்கனவே நடுத்தர குடும்பத்தில் கஷ்டப்பட்டு முன்னேறிய நரசிம்மனுக்கு பணம் என்றால் பைத்தியம் என்றே சொல்லலாம். பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற எண்ணம் ஒன்றே அவரை சம்மதிக்க வைத்தது.

திருமணம் முடிந்தபிறகு மருமகனுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து அவர்களை தனிக்குடித்தனம் வைத்துவிட்டார். நரசிம்மன் விமலாவின் குணமறிந்து அவளை தன் கை பொம்மையாக மாற்றிவிட்டார். காதல் என்ற ஒரு வார்த்தை அந்த பாவையை கட்டிபோட பொதுமானதாக இருந்தது. அடுத்தடுத்த ஒரு வருடத்தில் வந்து பிறந்தான் வெற்றி.

தன் தங்கை மகனை முதல் முதலாக கையில் வாங்கிய ஜெகதீஸ், “என் மருமகன் அப்படியே என்னை மாதிரியே இருக்கான். எங்க நேரம் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதற்கு பிறகு பிறக்குமா தெரியல. அதனால் இவனை நானே வளர்க்கிறேனே” என்று பாசத்துடன் மச்சானின் முகம் நோக்கினார்.

சங்கீதா ஏக்கத்துடன் கையில் குழந்தையை வாங்க நிற்பதைக் கண்டு, ‘இவங்களுக்கு குழந்தை பிறக்க சான்ஸ் இல்ல. அதனால் என் மகன்தான் மொத்த சொத்துக்கும் வாரிசு. அவனை நான் வளர்ப்பதைவிட அவங்க வீட்டில் அவன் வளர்ந்தால் அது நமக்குதான் நல்லது” என்ற முடிவிற்கு வந்தார்.

“இதில் என்னிடம் கேட்க என்ன இருக்கு? உங்க தங்கைக்கும் அவனை சரிவர பரமாரிக்க தெரியாது. அதற்கான பக்குவம் இன்னும் அவளுக்கு வரல. அவனை நீங்களே வளர்த்துகொங்க. நாங்க கொஞ்சநாள் சந்தோஷமாக இருக்கோம். அதுக்கு பிறகு ஆசைக்கு ஒரு பொண்ணு பெத்துகிட்ட போச்சு” என்று சர்வசாதாரணமாக குழந்தையைத் தூக்கி கொடுத்தார்.

ஜெகதீஸ் – சங்கீதா இருவருக்கும் அன்றிலிருந்து அவன்தான் உலகமாகவே மாறிப் போனான். அவனைத் தரையில் நடக்கக்கூட விடமாட்டார்கள் அந்தளவுக்கு வெற்றியின் மீது உயிரையே வைத்திருந்தனர்.

வேதாசலம் – வாசுகி இருவருக்கும் பேரன் என்றாலே தனி பாசம். அவனின் சின்ன அசைவிற்கு கூட அவர்களுக்கு அர்த்தம் தெரியும்.  அவர்கள் கேட்டவுடன் மகனைத் தூக்கி கொடுத்த நரசிம்மனின் மனம் என்னவென்று தெரியாமல் மொத்த குடும்பமும் வெற்றியின் மீது அன்பை பொழிந்தனர்.

சில வருடங்களில் அவன் நன்றாக வளர்ந்துவிட்டான். அவனுக்கு பாசம் காட்டி வளர்க்க வேண்டிய இருவருமே உல்லாச வாழ்க்கையில் ஈடுபாடாக இருந்ததால் தாய் – தந்தையின் பாசம் இல்லாமல் வளர்ந்தான். அதுமாட்டுதான் பெரிய குறையாக இருந்தது.

கொஞ்சம் வளர்ந்தபிறகு தன்னோடு விளையாட ஆள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, “அத்த எனக்கு ஒரு பாப்பா வேணும் விளையாட” என்று விளையாட்டாக கேட்க தொடங்கினான். மழலையிடம் உண்மையைச் சொல்லி புரிய வைக்க முடியாமல் குடும்பத்தினர் தடுமாறுவார்கள்.

“உனக்கு விளையாட பாப்பா வேணுமா வெற்றி. அவ்வளவுதானே சீக்கிரம் உன் அத்தையை பெத்து தர சொல்றேன்” என்று சமாளிக்க தொடங்கினார்.

இந்த பிரச்சனை முடிந்த சில நாட்களில் தோட்டத்தில் வெற்றியுடன் விளையாடிக் கொண்டிருந்த சங்கீதா செவ்வரளி செடியின் அருகே திடீரென்று மயங்கி சரிந்தாள்.

அதைக்கண்ட வெற்றி, “பாட்டி அத்தை மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க..” என்று கத்தியபடி வீட்டிற்குள் ஓடியவன் மற்றவர்களைத் தோட்டத்திற்கு அழைத்து வந்தான். அங்கே மயக்கத்தில் இருந்த சங்கீதாவை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கே அவளை செக் செய்த டாக்டர் கற்பத்தை உறுதி செய்தனர்.

அந்த சந்தோசமான செய்தியைக் கேட்டு வீட்டிலிருந்த அனைவருக்குமே சந்தோசம். வெற்றிக்கோ தன்னோடு ஒரு குட்டிப் பாப்பா விளையாட வர போகும் மகிழ்ச்சியில் ஹாஸ்பிட்டலில் கத்தி ஆர்பரிக்க தொடங்கிவிட்டான்.

வெகுநாட்களாக  குழந்தை இல்லாமல் இருந்த சங்கீதா திடீரென்று கர்ப்பமான விஷயமறிந்து வந்த நரசிம்மன், “மாமா உங்க மகளோட சொத்தை தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டால் பரவால்ல” என்று குண்டைத் தூக்கி போட்டார்.

இத்தனை வருடங்களாக இல்லாமல் திடீரென்று மருமகன் தன்னிடம் வந்து சொத்தை பிரித்து தர சொல்வதைகேட்டு, “உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா மாப்பிள்ளை? இப்போது எதற்க்காக சொத்தை பிரிக்க வேண்டும்?” என்று விசாரித்தார்.

சட்டென்று அவரின் பார்வை ஜெகதீஸ் தோளில் சாய்ந்திருந்த வெற்றியின் மீது படிந்து மீண்டது.

“என் மகன்தான் சொத்துக்கு வாரிசுன்னு நினைச்சேன். இப்போதான் அவங்களுக்கே குழந்தை பிறக்க போகுதே?! அப்புறம் எப்படி சொத்தை என் பெயருக்கு எழுதி தருவாங்க மாமா? நீங்க இருக்கும்போதே சொத்தை பிரிச்சு கொடுத்துட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை..” என்று தன்மையாக பேசி தன் காரியத்தை முடித்தார்.

உடனே வக்கீலை வரவழைத்து சொத்துக்களை தன் பேரப்பிள்ளைகள் மீது எழுதி வைத்தார் வேதாசலம். நரசிம்மனின் மீதிருந்த நம்பிக்கை இன்மை அவரை முழுவதுமாக நம்ப விடவில்லை. அதனால் வெற்றியின் பெயரில் பாதியை எழுதினார். அதிலும் அவன் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவன் உயிருக்கு ஆபத்து வந்தால் சொத்துக்கள் அநாதை ஆசிரமத்திற்கு சேர்ந்துவிடும் என்று எழுதி வைத்தார்.

மற்றொரு புறம் ஜெகதீஸ் குழந்தையின் மீது மீதி சொத்தை எழுதியவர் இருபத்தி ஐந்து வயதின் முடிவில் கண்டிப்பாக சொத்து அவளின் கைகளில் சேர்க்க வேண்டும். அவள் இறந்துவிட்டால் சொத்துக்கள் அனைத்தும் வெற்றியைச் சேரும். ஆனால் அதை மற்றவர்களின் பெயருக்கு மாற்றி எழுத அனுமதி இல்லை. அதுவரை உரியவர்கள் நிர்வாகம் செய்யலாமே தவிர விற்க முடியாது.

இப்படி உயில் எழுதி வைத்துவிட்டார். அதன்பிறகுதான் அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பமானது!

Leave a Reply

error: Content is protected !!