“நேத்து நமக்கிருந்த சந்தோஷம் நாளைக்குத் தீர்ந்து போயிடும். அதேமாதிரி இன்னைக்கு இருக்கிற துக்கமும் நாளைக்குச் சாதாரணமாத் தெரியும். வலியும் வேதனைகளும் கூட எப்பவுமே சதா நம்மளோட பயணிக்கப் போறதில்லைங்க. கடந்து போயிடும். இந்தப் புரிதல் நமக்கு இருந்ததுன்னா சோர்ந்து போகாம உயிர்ப்போட நம்ம கடமையைச் செய்யலாம். இதை நான் சொல்லலை நேயர்களே. பாலகுமாரன் சொல்லுறாரு. இப்போ ஒரு நேயர் வந்திருக்காங்க. யாருன்னு பார்த்திடலாம். ஹலோ! யாரு பேசுறீங்க?”

“பார்கவி! நான் நந்தகுமார் பேசுறேன்.” அந்தக் குரலில் அந்தப் பெயரில் பார்கவி கொஞ்சம் தடுமாறினாள்.

“அருவி மாதிரிக் கொட்டுற பார்கவி என்ன இன்னைக்கு அதிசயமா அமைதியாகிட்டாங்க?” இப்போது உறுதியாகத் தெரிந்தது. இது நந்தாவே தான்.

லைனுக்காக இதுவரை முயற்சி பண்ணிய லதா மகன் பேச ஆரம்பிக்கவும் அவன் தலையைச் செல்லமாகக் கலைத்து விட்டு நகர்ந்து விட்டார்.

“சொல்லுங்க நந்தகுமார், நீங்க எங்க இருந்து பேசுறீங்க?” பார்கவி இப்போது தன்னை முழுதாகச் சுதாரித்திருந்தாள்.

“நந்தா ன்னு கூப்பிடலாமே பார்கவி.”

“ஓ… உங்களுக்கு அப்படிக் கூப்பிடுறது பிடிக்குமோ நந்தகுமார்?” வேண்டுமென்றே கேட்டாள். ஏனென்றால் அவளைத் தவிர வேறு யாரும் நந்தகுமாரை நந்தா என்று அழைப்பதில்லை.

“ரொம்பப் பிடிக்கும் பார்கவி. எனக்கு நெருக்கமான ஒருத்தங்க என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க.” அவன் குரலிலும் இப்போது சிரிப்பு. வானலையில் நாடகமாடியது இரு உள்ளங்கள்.

“ஆஹா! ரொம்ப நெருக்கமானவங்களா நந்தகுமார்? அவங்க கூப்பிடுற மாதிரி நானும் கூப்பிட்டா அவங்களுக்குக் கோபம் வருமோ என்னவோ?” போட்டு வாங்கினாள் பெண்.

“கோபமா? அவங்களுக்கா? அதுவும் எம் மேலயா? சான்ஸே இல்லை பார்கவி.”

“ரொம்பவே ஆழமான நட்பா நந்தகுமார்?”

“நட்போட நிறுத்திக்கத்தான் நான் நினைச்சேன் பார்கவி. ஆனா அதுக்கு அவங்க அனுமதிக்கலை.”

“ம்ஹூம்… நட்பு இப்போ காதலா மாறிடுச்சா நந்தகுமார்? அது அவங்களுக்குத் தெரியுமா? தெரியப்படுத்திட்டீங்களா?”
“உங்க ப்ரோக்ராம் கண்டிப்பா அவங்க கேப்பாங்க. இப்போ இந்த நிமிஷம் நிகழ்ச்சி கேட்டுக்கிட்டு இருக்கிற அத்தனை நேயர்களையும் சாட்சியா வெச்சு அவங்களுக்கு என்னோட அன்பைத் தெரியப்படுத்துறேன் பார்கவி. எங்க காதலுக்கு இந்த பார்கவியும் சாட்சி.”

“ரொம்பவுமே நெகிழ்வான தருணம் நந்தகுமார். உங்கள் காதல் வாழ்வாங்கு வாழ நேயர்கள் சார்பா நானும் வாழ்த்துறேன். நந்தகுமாருக்காகவும் அவரை நந்தா ன்னு அழைக்கிற அந்த நங்கைக்காகவும் இதோ வருகிறது பாடல்…”

‘நந்தா நீ என் நிலா… நிலா…’ பாடல் இனிமையாக ஒலிக்க ஆரம்பிக்க அதுவரை கலகலவென்று பேசிக்கொண்டிருந்த பார்கவி வாய்பொத்திக் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அதேநேரம் சைலண்ட் மோடில் இருந்த அவள் ஃபோன் அலறியது. நந்தகுமார் தான் அழைத்துக் கொண்டிருந்தான். அழைப்பை ஏற்றவள் மௌனமாக இருந்தாள்.

“பார்கவி…”

“…………..”

“பாகீ… அழுறியா?”

“…………”

“இப்போ நீ பேசலைன்னா திரும்பவும் ஃபோனைப் போட்டு இந்த பார்கவியைத் தான் நான் காதலிக்கிறேன் ன்னு ஊருக்கே சொல்லுவேன்.”

அவன் சொல்லவும் பார்கவி அழுகையை மறந்து பக்கென்று சிரித்தாள். அந்தப்புறம் நந்தகுமாரும் சிரித்துக் கொண்டான்.

“பாகி மேல இப்போ தான் கருணை வந்திருக்கா?”

“அப்படியில்லை பொண்ணே! என் நிலைமையை நீயும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும்.”

“உங்க கடந்த காலத்தைப் பத்தி நான் கவலைப்படலையே நந்தா? அப்புறம் என்ன?”

“நீ படலைன்னாலும் அந்த சங்கடம் எம் மனசுல இருக்கு பாகி. அதுவும்… இப்போ, இந்த நிலையில…”

“நந்தா… ப்ளீஸ்… நம்பிக்கையோட இருங்க. உங்க பார்வை சீக்கிரமாவே வந்திடும். எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.”

“ம்… எனக்காக இல்லைன்னாலும் உனக்காகவாவது வரணும்.”

“பாட்டு முடியப் போகுது. நான் வெச்சிடட்டுமா?”

“ம்… ப்ரோக்ராம் நல்லா இருக்கு.”

“தான்க் யூ நந்தா.” அணைப்பைத் துண்டித்தவள் புதிய துள்ளலோடு நிகழ்ச்சியைத் தொடர்ந்தாள்.
***********

ஆறு மாதங்கள் கடந்து போயிருந்தன. மித்ரமதி பாதியாகிப் போயிருந்தாள். ஆளே உருக்குலைந்து அமர்ந்திருந்தாள்.
அன்றும் மீட்டிங் ஒன்று அவசரமாகக் கூட்டப்பட்டிருந்தது. ஆனால் என்ன பேசுவது? எப்படி விளக்குவது? ஒன்றுமே புரியவில்லை. அடுத்தடுத்ததாக இவர்கள் கம்பெனி அனுப்பிய அனைத்து கொட்டேஷன் களுமே ஒன்றன்பின் ஒன்றாக நிராகரிக்கப் பட்டிருந்தன.

புதிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்று அனைத்துப் ப்ராஜெக்ட் களையும் தட்டிக்கொண்டு போயிருந்தது. இத்தனைக்கும் இதுநாள் வரை பெரிதாகப் பேசப்படாத கம்பெனி அது. நிச்சயமாக மித்ரமதி அந்தக் கம்பெனியை எல்லாம் தனக்குப் போட்டியாக நினைக்கவே இல்லை.

இத்தனைக்கும் இவர்கள் கம்பெனி கண்மூடித்தனமான லாபத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. ஒன்றிரண்டு தவறுவது இயற்கை தான். ஆனால் ஒன்றுமே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற போது துடித்துப் போனாள். எங்கேயோ இடறியது.
எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். திவாகர் மாமாவை எப்படிச் சமாளிப்பது? கடந்த நான்கு மாதங்களாக மனிதர் பொங்கிக் கொண்டிருக்கிறார்.

கையிலிருந்த அத்தனை ப்ராஜெக்ட் களும் முடிந்து விட்டது. கம்பெனியின் கையிருப்பிலும் கை வைத்தாகி விட்டது. ஊழியர்களுக்கான சம்பளம், வாடகை, மற்றைய செலவுகள் என அனைத்தும் எந்த வருமானமும் இன்றி கடந்த ஆறு மாதங்களாக நடந்திருக்கிறது.

இதற்கு மேலும் தாமதிக்க முடியாத தருணத்தில் தான் அவசரமாக மீட்டிங் ஏற்பாடாகி இருந்தது.
ரிச்சர்ட் இவளையே பார்த்தபடி நின்றிருந்தான். எங்கேயோ தவறு நடக்கின்றது. அது அவனுக்கு நன்றாகவே தெரியும். கூடவே இருக்கும் யாரோ ஒருவர் தான் அனைத்திற்கும் காரணம். ஆனால் அதைச் சொன்னால் மித்ரமதி ஏற்றுக்கொள்ள மாட்டாள். கோபப்படுவாள்.

அதனால், அமைதியாகவே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மேடம்!”

“ம்…”

“எல்லாரும் வந்துட்டாங்க.”

“ஓ…” நடைப்பிணமாக எழுந்து வந்தவளைப் பார்த்த போது ரிச்சர்ட்டுக்கு வலித்தது. இருந்தாலும் அவனாலும் தான் என்ன செய்ய முடியும்?
கான்ஃபரன்ஸ் ஹாலில் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். எல்லோரும் என்றால்… சக்திவேல், தினகர், திவாகர் மூன்று பேரும் தான்.

இப்போது மித்ரமதி யும் ரிச்சர்ட்டும் இணைந்து கொண்டார்கள். யாரும் எதுவுமே பேசவில்லை. சற்று நேரம் அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள்.

“இப்படி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறதா உத்தேசம்?” திவாகர் தான் பேச்சை ஆரம்பித்தார். அத்தனை பேரின் பார்வையும் மித்ரமதியை நோக்கித் திரும்பியது.

“மித்ரா! இதுக்கு உன்னால ஏதாவது விளக்கம் குடுக்க முடியுமாம்மா?” தன்மையாகவே கேட்டார் சக்திவேல்.

“மாமா… இதுவரைக்கும் இப்படி நடந்தது கிடையாது. அது உங்க எல்லாருக்குமே தெரியும்…”

“இப்போ நடக்குதே, அதுக்கு முதல்ல பதில் சொல்லு மித்ரா.” திவாகர் குறுக்கிடவும் ரிச்சர்ட் பல்லைக் கடித்தான். அந்த மனிதரை அடித்து நொறுக்கலாம் போல அத்தனை ஆத்திரம் வந்தது.

“பொறுமையா இரு திவா. எல்லாத்துக்கும் அவசரப்படாதே.”

“அவசரப்படாம என்ன பண்ணச் சொல்லுற சக்தி? எல்லாம் கைமீறிப் போயாச்சு. இதே நிலைமையில போனா கம்பெனியை இழுத்து மூட வேண்டியது தான்.” ஆத்திரத்தில் திவாகருக்கு மூச்சு வாங்கியது.

சக்திவேலிற்கும் நண்பரின் பேச்சில் இருந்த நியாயம் புரிந்தது. இருந்தாலும் மித்ரமதியைக் குறை சொல்ல ஏனோ மனது வரவில்லை.

“இவ்வளவு நாளும் கொள்ளை லாபம் வந்தப்போ இப்போ நிக்க வெச்சுக் கேள்வி கேக்குற யாரும் அன்னைக்கு மேடமைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டலை.” இது ரிச்சர்ட்.
“தலையே சும்மா உட்கார்ந்திருக்கு. வால் நீ எதுக்கு இந்தக் குதி குதிக்கிற? என்ன மித்ரா? என்னை மிரட்டத்தான் இவனை இப்போ கூட்டிக்கிட்டு வந்திருக்கியா?” திவாகரின் பேச்சில் மித்ரமதி ரிச்சர்ட்டை ஒரு பார்வை பார்த்தாள். ரிச்சர்ட் அமைதியாகிப் போனான்.

“மித்ரா! நீ சொல்லும்மா.” இப்போது தினகர் வாய் திறந்தார்.

“தினா மாமா… ஒன்னு ரெண்டு கான்ட்ராக்ட் அப்பப்போ விட்டுப் போறதுதான். இல்லேங்கலை. ஆனா எல்லாமே இப்படி மிஸ் ஆகுறது இதுதான் முதல் தடவை. எங்க என்ன தவறு நடந்தது ன்னு என்னால கண்டுபிடிக்க முடியலை மாமா. மத்த ஸ்டாஃப் எல்லாரும் சேர்ந்து கொட்டேஷன் தயார் பண்ணினாலும் ஃபைனல் அமௌன்ட் நம்மளைத் தாண்டி யாருக்கும் தெரியாது.”

“ம்… புரியுதும்மா. அப்போ இது எப்படிச் சாத்தியம்? திருட்டுப் போகவும் வாய்ப்பில்லையே.”

“இல்லை மாமா. அதுக்கு வாய்ப்பே இல்லை.”

தினகரும் மித்ரமதியும் பேசிக் கொண்டிருக்க மற்றைய மூவரும் அமைதியாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். சட்டென்று திவாகர் தனது பார்வையை ரிச்சர்ட் மேல் திருப்பினார்.

“அதான் இங்கொன்னு நிக்குதே. இது என்ன பண்ணிச்சோ?” திவாகர் வாயை மூடும் முன் அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்று சுவரில் மோதி வீழ்ந்தது.

“ரிச்சர்ட்!” மித்ரமதி போட்ட சத்தத்தில் அந்த விசுவாசி முஷ்டியை இறுக்கித் தனது ஆத்திரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

“சக்தி மாமா… அப்பாவோட நண்பர்கள் எங்கிறதால உங்க மேல எனக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கோ… அதேயளவு நம்பிக்கை எனக்கு ரிச்சர்ட் மேலயும் இருக்கு. அவனைக் கொன்னு போட்டாலும் சாவானேயொழிய எனக்குத் துரோகம் நினைக்க மாட்டான்.” மித்ரமதியின் முகம் இப்போது கோபத்தில் சிவந்து போனது.
திவாகரிடம் பேசாமல் சக்திவேலிடம் பேசினாள் மித்ரமதி. அதிலிருந்தே அவளுக்கு திவாகரிடம் பேசப் பிரியமில்லை என்று சொல்லாமலேயே புரிந்தது.

“சரி… இப்போ இந்தப் பிரச்சினைக்கு என்னதான் முடிவு?”

“சக்தி! நான் சொல்லுறதை இப்போவாவது கேளு. நான் மித்ராவைத் தப்புச் சொல்லலை. சின்னப் பொண்ணு, அனுபவம் பத்தலை. நான் அப்போ சொன்னப்போ நீங்க யாரும் கேக்கலை. இவ்வளவு பெரிய தொழிலைத் தூக்கி அந்தச் சின்னப் பொண்ணு கையிலே குடுத்தீங்க.”

இதை திவாகர் சொல்லும் போது கண்களை இறுக மூடிக் கொண்டாள் மித்ரமதி. பெருத்த அவமானமாக இருந்தது. இத்தனை நாளும் பட்ட பாடு விழலுக்கு இறைத்த நீர் போலத் தெரிந்தது.

“என்ன திவா இப்படிப் பேசுறே? நம்ம எல்லாரோட கண்காணிப்பிலயும் தான் தொழில் இருந்திச்சு. சட்டுன்னு நட்டம் வரும்ன்னு யாருமே எதிர்பார்க்கலை. ஏன்… நீ கூடத்தான் எதிர்பார்த்திருக்க மாட்டே.”
“சரி… போனதை விடு. இனி என்ன பண்ணுறதா உத்தேசம்?”

“நீ பேசுறதைப் பார்த்தா தீர்வைக் கையில வெச்சுக்கிட்டுப் பேசுற மாதிரி இருக்கு. அதால நீயே சொல்லு திவா.”
“சக்தி! புதிய பார்ட்டி ஒன்னு வந்திருக்கு. நம்ம நிலைமையை அப்படியே எடுத்துச் சொன்னேன். பையன் ரொம்பவே கெட்டிக்காரனாத் தெரியுறான். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை, கம்பெனியைக் கை மாத்திக்கலாம்னு சொல்றான். நீங்க என்ன சொல்லுறீங்க?”

திவாகர் பேசி முடிக்கவும் மித்ரமதி துடித்துப் போனாள். ஆனால் சக்திவேலும் தினகரும் அந்தக் கருத்தை எதிர்த்து ஒன்றுமே பேசவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்தார்கள்.

“இதுல யோசிக்க எதுவுமே இல்லை சக்தி. கம்பெனி மட்டும்தான் கை மாறுது. மத்தப்படி எந்த மாற்றமும் இல்லை. மித்ரா கூட அதே போஸ்ட் ல இருக்கலாம்னு சொல்லுறாங்க.”

இதை திவாகர் சொன்ன போது சக்திவேல் சட்டென்று மித்ரமதியைத் திரும்பிப் பார்த்தார். கண்களில் நிறைந்த நீரை யாரும் பார்க்கா வண்ணம் தலையைத் திருப்பியது பெண். ரிச்சர்ட் நொறுங்கிப் போய் நின்றிருந்தான்.

“என்னால சட்டுன்னு எதுவும் சொல்ல முடியலை திவா.”

“ஆனா சட்டுன்னு முடிவெடுக்க வேண்டிய நிலைமையில தான் நாம இப்போ இருக்கோம். இதை விட நல்ல வாய்ப்பு நமக்கு வராது சக்தி. சென்டிமென்ட் பார்க்குற நேரம் இது இல்லை. கையிலிருந்த லாபம் தான் இதுவரைக்கும் போயிருக்கு. முதலுக்கு இன்னும் மோசம் வரலை.‌ அதுக்குள்ள சுதாரிச்சாப் புத்திசாலித்தனம்.”
தனது நிலையை விளக்கி விட்டு திவாகர் அமைதியாகிவிட்டார்.
“சக்தி! திவா சொல்றது எனக்கும் சரின்னு தான் தோணுது. நஷ்டம் நமக்கு வந்தாலும் பரவாயில்லை. மித்ராவை யோசிச்சுப் பாரு. வாழ வேண்டிய பொண்ணு. இந்த நஷ்டம் அவளோட வாழ்க்கையைப் பாதிக்கும் இல்லையா?”
“ம்…” சக்திவேல் அப்போதும் யோசித்த படியே தான் இருந்தார்.
“இதுக்கு நீங்க யாரும் ஒத்து வரலைன்னா நான் என்னோட பங்கை விற்க வேண்டி வரும்.”
“திவா! என்னடா… இப்படிப் பேசுறே?”

“என்னை வேற என்ன பண்ணச் சொல்லுற தினா? முன்ன மாதிரி இப்போ இல்லை. பசங்க வளர்ந்துட்டாங்க. கேள்வி கேக்குறாங்க. நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்லுறது? எனக்கு இது தான் சரின்னு தோணுது. இதுதான் என்னோட முடிவு.”

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல திட்டவட்டமாக அறிவித்து விட்டு வெளிநடப்புச் செய்துவிட்டார் திவாகர். தினகரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர் திவாகர் சொன்னதையே ஆமோதித்தார்.

“மனசுக்குக் கஷ்டமா இருந்தாலும் திவா சொல்றது சரின்னு தான் எனக்கும் தோணுது சக்தி. இன்னும் இன்னும் சிக்கலை உருவாக்க வேணாம். நமக்காக இல்லைன்னாலும் மித்ராவுக்காக இதை நாம ஏத்துக்கத்தான் வேணும்.”

இதேபோல சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த தினகரும் கிளம்பிப் போய் விட்டார். சக்திவேல் மட்டும் கிளம்பாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

“நீ என்ன சொல்ற மித்ரா? உனக்கு ஏதாவது எங்கிட்டச் சொல்லணுமா?”

“எங்கேயோ தவறு நடந்திருக்கு மாமா. இல்லேங்கலை. அது என் கவலையீனமாகக் கூட இருக்கலாம். இப்பவும் ஒன்னும் பெரிய நஷ்டம் வந்திடலை மாமா. கம்பெனி ஃபண்ட் ல கை வெச்சிருக்கோம். நான் வீட்டை வித்திடுறேன் மாமா.”

சட்டென்று அதிர்ச்சியோடு அண்ணாந்து பார்த்தார் சக்திவேல்.

“வித்துட்டு…”

“எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா. என்னால பழையபடி எல்லாத்தையும் தூக்கி நிறுத்த முடியும்.”

“ரிச்சர்ட்… எனக்கு டீ சொல்லு.” லேசான கண்ணீரோடு மித்ரமதி சொல்ல நெற்றியைத் தடவிக் கொண்ட சக்திவேல் ரிச்சர்ட்டிடம் சொன்னார்.

அதன் பிறகு கொஞ்ச நேரம் தனக்குத் தனிமை தேடிக் கொண்டார் சக்திவேல். மித்ரமதியிடம் கூடப் பேசவில்லை. ரிச்சர்ட்டிடம் மட்டும் ஏதோ கணக்கு வழக்குகள் பற்றி விசாரித்தார். யாரோடோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

கடைசியாக அவர் மித்ரமதியின் அறைக்குள் வந்த போது கண்ணாடிச் சுவருக்கு வெளியே தெரிந்த இருள் வானை வெறித்துக் கொண்டிருந்தாள் பெண்.

சக்திவேலின் வருகையை உணர்ந்து எழுந்து கொள்ளப் போனவளைத் தடுத்தவர் அவளையும் அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டார். ரிச்சர்ட்டும் கூட இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

“மித்ரா! தொழில்ல ஏதோ தவறு நடந்திருக்கு. எனக்கும் அது நல்லாவே புரியுது. ஆனா யாரையும் சந்தேகிக்க என்னால முடியல. அதுக்காக நீ சொல்லுற முடிவையும் என்னால ஏத்துக்க முடியாதும்மா. தொழிலா… நீயா… எங்கிற கேள்வி வரும்போது எனக்கு நீதான் முக்கியம். உன்னோட அப்பா இருந்திருந்தாலும் நான் எடுக்கிற இதே முடிவைத் தான் அவனும் எடுத்திருப்பான்.”

மித்ரமதி எதுவும் பேசவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

“வீட்டை விக்கிறது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லை. உன்னோட அம்மாவும் அதைத் தாங்கிக்க மாட்டாங்க. தினகரையும் திவாகரையும் எதிர்த்துக்கிட்டு என்னாலயும் எதுவும் பண்ண முடியாதும்மா. இப்போதைக்கு அவங்க முடிவுக்குக் கட்டுப்படுறது தான் எனக்கும் சரின்னு தோணுது.”

ஒரு கசப்பான புன்னகை மட்டுமே பெண்ணிடமிருந்து பதிலாக வந்தது.

“உனக்கு இதை ஏத்துக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கும்ன்னு எனக்கும் புரியுது. ஆனா… சில நேரங்கள்ல புத்திசாலித்தனமா முடிவெடுக்கவும் கத்துக்கணும் மித்ரா. இந்தக் கஷ்டத்திலயும் ஆண்டவன் நமக்கு ஏதோ ஒரு நன்மையை வெச்சிருக்கார்னு ஏத்துக்குவோம். மனசைத் திடப்படுத்திக்க மித்ரா.”

நிதானமாகப் பேசிய சக்திவேல் அத்தோடு கிளம்பிவிட்டார். மித்ரமதி மட்டும் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள்.

“மேடம்…” ரிச்சர்ட்டின் குரலில் திரும்பிப் பார்த்தவள் விழிகளை வெறுமை நிரப்பி இருந்தது.

“டைம் ஆச்சு. கிளம்பலாம்.”

“நீ கிளம்பு ரிச்சர்ட். நான் அப்புறமா போய்க்கிறேன்.” அவனை ஒருமையில் அழைப்பதைக் கூட உணராமல் பேசினாள் மித்ரமதி.

“ம்ஹூம்… இல்லை மேடம். இந்த நிலைமையில என்னால உங்களைத் தனியா விட்டுட்டுப் போக முடியாது. ப்ளீஸ்… கிளம்புங்க.” வற்புறுத்தி அவளைக் கிளப்பியவன் காரின் கீயை வாங்கிக் கொண்டான்.

லண்டன் மாநகரின் இரவு நேரச் சாலைகளில் அந்த ஆடி டிடி அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. ஆள் அரவமற்ற ஒரு சாலையில் காரை நிறுத்தியவன் மித்ரமதியைத் திரும்பிப் பார்த்தான்.

“அழுதிடுங்க மேடம்.” அந்த வார்த்தைகளுக்காவே காத்திருந்தவள் போல அவன் சொல்லி முடிக்கவும் வெடித்து அழுதாள் பெண்.

லேசாக அவள் தோள் தொட்டுத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டவன் அவளை அழ அனுமதித்தான். அவள் காதல் தனக்கு இல்லையென்று தெரிந்த போதும் ஒரு நண்பனாக அவளை அரவணைத்துக் கொண்டான்.

“ஏன் ரிச்சர்ட்? ஏன் இப்படியெல்லாம் நமக்கு நடக்குது? யாரு இதெல்லாம் பண்ணுறாங்க?” அழுகையினூடே கேள்வி கேட்டாள் மித்ரமதி.

“நீங்க கோபப்பட்டாலும் என்னோட பதில் ஒன்னுதான் மேடம். மிஸ்டர்.திவாகர்.” ரிச்சர்ட்டின் முகம் எரி தணல் போல் ஆனது.

“என்னால நம்ப முடியலை ரிச்சர்ட்.”

“எனக்கு ஒரு நாலு நாள் டைம் குடுங்க மேடம். அத்தனை விஷயத்தையும் உங்க முன்னாடி கொண்டு வர்றேன்.”
“வேணாம் ரிச்சர்ட்… விட்டுடு. இதுக்கு மேல இதைத் தோண்டித் துருவி என்ன ஆகப்போகுது. அசிங்கம் தான்.”
“ம்… அப்போ நீங்க கொஞ்சம் சிரிச்ச முகமா இருங்க. இப்போவும் ஒன்னும் தலைகீழா மாறிடலை மேடம். எல்லாம் அதே மாதிரித்தான் தொடரப் போகுது. இது நாள் வரை நீங்க முதலாளி. இனித் தொழிலாளி. அவ்வளவுதான் வித்தியாசம். லைஃபை ஈஸியா எடுத்துக்கோங்க மேடம்.”

“ம்… தான்க் யூ ரிச்சர்ட்.” அழுது ஓய்ந்ததாலோ என்னவோ இப்போது லேசான தெளிவொன்று மித்ரமதியின் முகத்தில் தோன்றியது.

“இதை வேற மாதிரியும் சொல்லலாம்…”

“என்னது?” வாய்க்குள் முணுமுணுத்தவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
“இல்லை… நமக்குள்ள எதுக்கு தான்க்ஸ் ன்னு சொன்னேன் மேடம்.”
“ஓ… கிளம்பலாம் ரிச்சர்ட். நேரமாச்சு.”

“ஓகே மேடம்.” கார் மித்ரமதியின் வீடு நோக்கிக் கிளம்ப, அது நேரம் வரை அவர்களையே பின்தொடர்ந்த இன்னுமொரு காரும் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது.
**************

“எனக்கு இது கொஞ்சம் ரிஸ்க் எடுக்கிற மாதிரி இருக்கு கார்த்திக்.”

“ஏன் டாட்.” அம்மா, அப்பா, கார்த்திக் மூன்று பேரும் அமர்ந்து டின்னர் எடுத்துக் கொண்டிருந்தார்கள். உணவோடு சேர்ந்து தொழில் சம்பந்தமான விவாதங்களும் இப்படி அடிக்கடி நிகழும்.

“நஷ்டத்துல போகுதுன்னு சொல்லுறே… அதோட… இங்கன்னாக் கூடப் பரவாயில்லை. லண்டன்… அதான் யோசிக்கிறேன்.”
“என்ன டாட், சின்னப் பையன் கிட்டப் பேசுற மாதிரிப் பேசுறீங்க?”

“எவ்வளவு வளர்ந்தாலும் எங்களுக்கு நீ இன்னும் சின்னப் பையன் தான் கார்த்திக்.” இது பத்மா.

“அம்மா…” லேசாகச் சிரித்தான் கார்த்திக் ஹரிகிருஷ்ணா. மகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் பத்மா. அத்தனை கம்பீரம் அவனிடம்.

‘இவனை நெறிப்படுத்த நல்லதொரு பெண்ணை இவன் கண்ணில் காட்டு ஆண்டவா!’ பெருமூச்சுடன் உணவில் கவனமானார் பத்மா.

“இப்போதான் நஷ்டம் ஆகியிருக்கு டாட். சீக்கிரமா கையில எடுத்தா சரி பண்ணிடலாம்.”

“இத்தனை வருஷமாப் பண்ணுறாங்கன்னு சொல்லுறே. குடுப்பாங்களா கார்த்திக்?”
“தகவல் அப்படித்தான் வந்திருக்கு. கேட்டுப் பார்ப்போம். குடுத்தா வாங்குவோம், இல்லைன்னாப் போகட்டும்.”

“நீ டிசைட் பண்ணிட்டியா?”

“ம்… உங்க முடிவுக்காகத்தான் வெயிட்டிங் டாட்.”

“தென் கோ அஹெட் கார்த்திக். நோ ப்ராப்ளம். என்ன ஹெல்ப் வேணும்னாலும் தாராளமாக் கேளு. ஓகே.”
“தான்க் யூ டாட்.” மகனின் மகிழ்ச்சியில் சக்ரதேவும் புன்னகைத்தார். ஒரு சிரிப்போடு பெற்றோர்களுக்கு குட்நைட் சொன்னவன் தனது ரூமிற்கு வந்துவிட்டான். வந்ததும் வராததுமாக கை ஃபோனை எடுத்தது.
“மார்க்.”

“சொல்லுங்க சார்.”

“மிஸ்டர்.சக்திவேல் கிட்ட நாளைக்கே பேசிடு. அவர் எப்போ சொல்றாரோ அப்போ லண்டனுக்கு டிக்கெட் போட்டுடு.”
“ஓகே சார்.”

“இந்த முறை ஹோட்டல் புக் பண்ணிடு.”

“சரி சார்.”

“ஆனா கூடிய சீக்கிரமே வீடொன்னு பார்த்திடு.”

“சார்… வீடு…”

“ம்… வாங்கிடு. அடிக்கடி போக வேண்டி வரும். சில நேரம் அம்மா அப்பா வருவாங்க. அதுதான் வசதி.”

“டன் சார். அப்போ கார்…”

“இல்லையில்லை. அதை இப்போ ஹோட்டல்ல பார்த்துக்கலாம்.”

“ஃபைன் சார்.”

அணைப்பைத் துண்டித்து விட்டு ஃபோனை பாக்கெட்டில் போட்டவன் வீட்டின் முன்னாலிருந்த தோட்டத்திற்கு வந்தான். எப்போதும் சாப்பிட்டவுடன் தூங்க மாட்டான். பொடிநடையாக நடப்பது அவன் வழக்கம்.

ஃபோனின் திரை ஒளிர்ந்தது. புது நம்பராக இருந்தது. யாராக இருக்கும்? அத்தனை சீக்கிரத்தில் அவன் நம்பர் யார் கைக்கும் போகாது.

“ஹலோ.”

“கார்த்திக்!” குரலில் சாக்லேட்டின் இனிப்பு. அதுவே சொன்னது இது அராபியன் குதிரை என்று.

“ஹாய் பேபி!” அன்று நல்ல மூடில் இருந்ததாலோ என்னவோ கார்த்திக்கின் குரலிலும் சரசம் தெரிந்தது.

“பெயர் சொன்னாலே புரியாது உங்களுக்கு. இன்னைக்கு குரல்லயே கண்டு பிடிச்சிட்டீங்க?”

“ஹா… ஹா… தப்பு டார்லிங். நான் மறந்து போறேன்னா… எனக்கு அது அப்போ தேவையில்லைன்னு அர்த்தம்.”

“அப்போ… இப்போ நான் உங்களுக்குத் தேவைப்படுறேனா கார்த்திக்?”

“அப்படியும் இருக்கலாம்…”

“கார்த்திக்!” அவன் வார்த்தைகளில் அத்தனை மகிழ்ச்சியை வெளிக்காட்டியது பெண்.

“ஐ லவ் யூ கார்த்திக்.”

“ம்ஹூம்…”

“நீங்க சொல்ல மாட்டீங்களா?” குரல் கொஞ்சியது. சிறிது கெஞ்சவும் செய்தது.

“ஐ டோன்ட் லைக் தட் வேர்ட்ஸ் பேபி.”

“ஓ… ஏன் கார்த்திக்?”

“தெரியாது. ஆனாப் பிடிக்காது.”

“ஒரேயொரு முறை சொல்லிப்பாருங்க. அதுக்கப்புறம் அந்த வார்த்தைகளை நீங்களே ரொம்ப ரசிப்பீங்க.” அவள் அனுபவித்துச் சொல்லவும் அவன் லேசாகப் புன்னகைத்தான்.

“நான் நிஜமாத்தான் சொல்லுறேன் கார்த்திக். இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் உங்களுக்கு அப்படி யாரையாவது பார்த்துச் சொல்லத் தோணும். அப்போ நீங்க அதை உணருவீங்க கார்த்திக்.”

“குட்நைட் பேபி.” அந்தப் பெண்ணின் ஆரூடம் அவனுக்குச் சிரிப்பை வரவைத்தாலும்… ஏதோ ஒரு சுகம் மனதுக்குள் பரவியது. அப்படியும் நடக்குமோ!

“குட்நைட் கார்த்திக்.” காதில் வந்து விழுந்த முத்தச் சத்தத்தைக் கண்மூடி அனுபவித்தான் கார்த்திக்.

கார்த்திக் ஹரிகிருஷ்ணா.

error: Content is protected !!