Mathi – 2

271932643_457364386061628_5898256654330733132_n

Mathi – 2

அவள் வரவை எதிர்பார்த்து காத்திருந்த மதிவேந்தன் கோபத்தின் உச்சியில் இருந்தான். அவனைக் கண்டும் காணாததுபோல் கடந்து சென்ற மலர், தாயின் சொல்படி துர்க்கைக்கு விளக்கு போட்டுவிட்டு கோவிலை மூன்று முறை சுற்றிவிட்டு பிரகாரத்தில் வந்து அமர்ந்தாள்.

அவனது முகம் கடுகடுவென்று இருக்க கண்டு, “வேந்தா!” அவள் ஏதோ சொல்ல தொடங்க, கையமர்த்தி தடுத்தான் மதிவேந்தன்.

“நான் என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா? உனக்காக எவ்வளவு நேராமா இங்கே வந்து வெயிட் பண்றேன் தெரியுமா?” கோபத்தில் கடுகடுவென்று இருந்தவனைப் பார்க்கவே பயமாக இருந்தது.

கோபம் வந்தால் சூரியனைப்போல சுட்டெரிக்கும் அவனே, நிலவைப்போல் அன்பைப் பொழிவான். இரண்டு குணத்தையும் அளவுகடந்து காட்டுவதுதான் அவனுக்கிருக்கும் ஒரே பிரச்சனை.

‘தன் அன்பினால் அவனை முற்றிலுமாக மாற்றிவிட முடியும்’ என்ற நம்பிக்கையில், “வீட்டில் வேலையெல்லாம் முடிச்சிட்டு கிளம்பி வர நேரமாகிடுச்சு.” சமாதானம் செய்ய நினைக்க, அவன் அதைக் காதிலேயே வாங்கவில்லை.

“உன்னை மாதிரி நினைத்ததும் கிளம்பிவர என்னால் முடியாதுடா…” என்றாள் மெல்லிய குரலில்.

மதிவேந்தன் கோபத்துடன் அவளை முறைக்க, “எங்க அம்மாவுக்கு இன்னும் நம்ம விஷயம் தெரியாது. என் தம்பிக்கு தெரிந்தால், கண்டிப்பா வீட்டில் போட்டு கொடுத்திடுவான்.” அவள் புலம்பத் தொடங்க, அவனது கோபம் சற்று தணிந்தது.

மெல்ல உதடுகளில் புன்முறுவல் பூக்க, “இன்னைக்கு உன் தம்பிக்கு டிமிக்கி கொடுத்து எப்படி வந்தே?” கிண்டலுடன் கேட்க, அவனது முக மாற்றம் கண்ட பிறகே, மலருக்கு போன உயிர் திரும்ப வந்ததுபோல் இருந்தது.

தாங்கள் இருக்கும் இடம் மறந்து, “என்னைப் பார்த்தா உனக்கு கிண்டலாக இருக்கா?” அவன் முதுகில் நான்கு அடிபோட, அவன் கோபம் காணாமல்போக சத்தமாக சிரித்தான். கோவிலில் சாமி கும்பிட வந்த சிலரின் பார்வை அவர்களின் மீது படிந்து மீண்டது.

“ஏய், இது கோவில்!” தாங்கள் இருக்கின்ற இடத்தை அவனுக்கு உணர்த்த, “அதுக்காக சிரிக்காமல் இருக்க சொல்றீயா?” அதுக்கும் அவளிடம் சண்டைக்கு வந்தான்.

அவனைக் கையெடுத்து கும்பிட்ட மலரோ, “அப்பா சாமி ஆளைவிடு! கோவிலுக்கு வந்து சாமி கும்பிட தெரியுது. ஆனால் நெற்றியில் திருநீறு வைக்க நேரமில்ல.” அவனைக் கடிந்துகொண்டு தன் கையில் இருந்த விபூதியை எடுத்து வைத்துவிட்டாள்.

அவளது ஸ்பரிசத்தில் நெஞ்சினில் சாரலடிக்க, “இன்னும் நீ என்னோட கேள்விக்கு பதிலே சொல்லல.” என்றான்.

“நேற்று அம்மா போய் ஜாதகம் பார்த்துட்டு வந்திருக்காங்க. என்னோட திருமணத்தில் ஏதோ பெரிய பிரச்சனை வர போகுது. அதனால் வீட்டினரின் நிம்மதி கெடும். அதெல்லாம் சரியாக கோவிலுக்கு போய் விளக்கு போட சொல்லிருக்காங்க.” அதைத் தொடர்ந்து வீட்டில் நடந்த சம்பவத்தை விவரிக்க, மதிவேந்தன் மெளனமாகக் கேட்டான்.

மலரின் மீது அளவுகடந்த காதலை வைத்திருந்த மதிவேந்தன், அவளை நம்பவில்லை. ஏதோவொரு சூழ்நிலையில் தாயின் சொல்பேச்சுக்கேட்டு, தன்னைவிட்டு விலகி சென்று விடுவாளோ என்ற பயம் அவன் மனதைக் கவ்வியது.

இந்த பயம் இன்று நேற்று வந்ததல்ல. அவளைக் காதலிக்க தொடங்கிய நாளில் இருந்தே மனதில் இருந்தது. அதற்காக அவளை மற்றவர்களுக்கு விட்டுத்தரும் அளவுக்கு அவன் பொறுமைசாலியும் அல்ல.

அவனுக்குள் இருக்கும் கோபம் கொஞ்சம், கொஞ்சமாக அவனை மிருகமாக மாற்றுவதை உணராமல் இருக்கிறான். நெடுநேரமாக அவன் பேசாமல் இருப்பதைக் கண்ட மலர், “என்ன நான் மட்டும் பேசிட்டே இருக்கேன், நீ சிலையாட்டம் உட்கார்ந்திருக்கிற?” என்றாள்.

அவளது கேள்வியில் சிந்தனைக் கலைய, “அத்தை உனக்கு பொருத்தமாதான் பேரு வச்சிருக்காங்க. என் மனதை மயக்கும் தேன்கொண்ட மலர்தான் நீ! அவ்வளவு கோபத்தில் இருந்தேன், இப்போ அது போன இடம் தெரியல. ஏதோ வசியம் பண்ணிட்டியான்னு யோசிச்சேன்.” கிறக்கத்துடன் கூறியவனின் பார்வை அவளின் இதழ்களில் படிந்து மீண்டது.

அவன் விழிவீச்சு தாளாமல் தலை கவிழ்ந்த மலரோ, “சீக்கிரம் கிளம்பு, ஆபீஸ் போகணும். இங்கே நல்லா ரொமாண்ட்டிக்கா பேசிட்டு அங்கே போனதும் வேலை சொல்லியே என்னை ஒருவழி பண்ணுவே.” சிணுங்கியபடி அவனை வம்பிற்கு இழுத்தாள்.

அவளின் குறும்புத்தனத்தை மனதினுள் ரசித்த மதிவேந்தன், “அங்கே நான் உனக்கு மேலதிகாரி, சோ அப்படித்தான் இருப்பேன்.” காதைப்பிடித்து செல்லமாக திருகினான்.

“ஐயோ காது வலிக்குது! ப்ளீஸ் விடு…” என்றவுடன் காதைவிட்டு சட்டென்று எழுந்து நின்று, தன் கரத்தை அவளின் முன்பு நீட்டினான். அதைப்பிடித்து எழுந்த மலரோ, மெளனமாக அவனுடன் இணைந்து நடந்தாள்.

அவன் உறவின் அடிப்படை நம்பிக்கை இல்லாமல், “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே காதலிச்சிட்டே இருக்க சொல்ற மலர். நம்ம இருவரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.” தன் மனதை வெளிப்படுத்தினான்.

அவனை உயிராக நேசித்த மலரோ, “இப்பவே என்ன அவசரம்? நேரம் வரும்போது நானே எங்க வீட்டில் பேசறேன் வேந்தா. அம்மாவோட அனுமதியுடன் நம்ம திருமணம் நடந்தால்தான், நம்ம நல்லா வாழ முடியும்.” அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க, அவன் வந்த கோபத்தை மனதோடு மறைத்தான்.

அவனது முகமாறுதலைக் கவனித்த மலர் கேள்வியாக புருவம் உயர்த்த, “எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்ல. நான் சொன்னா நீ கேட்க போறதும் இல்ல. நீ என்னைவிட்டு விலக நினைத்தால், அப்புறம் தெரியும் என்னோட சுயரூபம்.” அவளது கையை உதறிவிட்டு முன்னே செல்ல, அவளுக்கு ஐயோ என்று கத்த வேண்டும்போல இருந்தது.

ஆசிரமத்தில் வளர்ந்த மதிவேந்தனுக்கு சதாசிவம், நிர்மலா இருவரைத் தவிர உறவென்று சொல்ல யாரும் இல்லை. இருவரும் கல்லூரியில் இருந்தே காதலர்கள். இந்த விஷயம் அவளது வீட்டில் யாருக்கும் தெரியாது.

தாயின் அனுமதியோடு தன்னவனைக் கரம்பிடிக்க நினைக்கும் மலர், கல்யாணப்பேச்சு எடுக்கும்போது தன் காதல் விவகாரத்தைச் சொல்லலாம் என நினைத்து நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறாள்.

மலரின் தாயார் மீது மதிவேந்தனுக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை. யாருமே இல்லாத ஒருவனுக்கு பெண்ணைக் கட்டிக் கொடுக்க போவதில்லை என்ற உண்மையை உணர்ந்தே இருந்தான். யார் தடுத்தாலும் தன்னவளைக் கரம்பிடிக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தான்.

***

தன் அக்காவை ஆபீஸ் வாசலில் இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிய அருண்மொழி, நேராக வேலை செய்யும் வங்கியின் முன்பு பைக்கை நிறுத்தி இறங்கினான். பொதுமக்கள் ஒரு பக்கமும், அவனுடன் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றொரு பக்கமும் நின்றிருந்தனர்.

அவனைக் கண்ட பூரணி, “அக்கா புராணம் பாடும் அருண்மொழி வந்தாச்சு!” என்றாள் கிண்டலாக.

தன் தோழியின் முதுகில் இரண்டு அடி போட்டு, “அவரோட அக்கா புராணத்தை அவர் பாடுறார், அதில் உனக்கென்ன பிரச்சனை?” அருண்மொழி மீது பார்வையைப் படரவிட்டபடி கேட்டாள் நந்தினி.

“பின்ன எந்த நேரமும் அக்கா புராணம் பாடும் மனுசனை வச்சி என்னடி செய்யறது? நாளைக்கே கல்யாணம், குழந்தைன்னு ஆனபிறகும் இவனை மாதிரி ஆளுங்களைத் திருத்தவே முடியாது.” சலிப்புடன் கூற, நந்தினிக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

“நாளைக்கே உனக்கொரு குழந்தை பிறந்து அதுக்கு சீர் செய்ய யாரை வர சொல்லுவே?” நந்தினியின் குரல் அருணின் காதில் விழவே, சட்டென்று திரும்பி பார்த்தான்.

அவனது பார்வையைக் கவனிக்காத பூரணியோ,“என்னோட இரண்டு அண்ணனுக்கும் சொல்வேன், அவனுங்கதானே தாய் மாமனுங்க.” பதில் சொல்லி நந்தினியுடன் வசமாக மாட்டிக் கொண்டாள்.

“அப்போ உன் அண்ணனுங்க மட்டும் தங்கை புராணம் பாடலாம். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் செய்யலாம். சில தம்பிகள் அக்கா புராணம் பாடினால், நீ அதை கிண்டல் செய்வாயா?” கிடுக்குபிடிபோட, பூரணி பேந்த பேந்த விழித்தாள்.

“சரி உனக்கும் அண்ணன் இருக்காரு நந்தினி, நாளைக்கு அவருக்கு கல்யாணமான பிறகு உங்க அண்ணா உன் புராணத்தை அவங்ககிட்ட பாடினால், அவங்களுக்கு கோபம் வரும் இல்ல.” பூரணி

அவளிடம் இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்த நந்தினியோ, “எனக்கு வரப்போற அண்ணி கண்டிப்பா என்னோடு போட்டி போடுவாங்க. அது நீ சொல்ற மாதிரி உன் தங்கைக்கு செய்யாதே, அவமேல் பாசத்தைக் காட்டாதே இந்த மாதிரி இல்ல.” இடைவெளிவிட, அருண்மொழி ஆர்வத்துடன் அவளையேப் பார்த்தான்.

“எங்க அண்ணனுக்கு சமமாக என்மேல் பாசத்தைக் காட்டுவாங்க. அப்போ ஆட்டோமேட்டிக்கா எங்க அண்ணா அவங்க புராணம் பாடுவாரு. மத்த ஆண்கள் பாசத்தை வெளிப்படையாக காட்ட மாட்டாங்க. அருண் அதை நேரடியாக காட்டுவதால், நீ அவரைத் தவறாக நினைக்கிற.” என்றாள்.

அவளது பதிலைக் கேட்ட பூரணி, “அடிப்பாவி!” வாயைப் பிளக்க, அருண்மொழி சிரித்தபடி பேங்க் உள்ளே செல்ல, மற்றவர்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.

அன்று மதியம் உணவு இடைவெளியின் போது, நந்தினியைத் தேடி சென்றான் அருண்மொழி. அவள் வழக்கமாக அமரும் இடத்தில் உட்கார்ந்திருக்க, “ரொம்ப தேங்க்ஸ்!” என்றபடி அவளின் எதிரே அமர்ந்தான்.

அவன் எதுக்காக நன்றி சொல்கிறான் என்று புரியாமல் அவள் விழிக்க, “எனக்கு அக்கா புராணம்னு பேங்க்கில் பட்டப்பெயர் இருப்பது தெரியும். அக்கா, தங்கையைப் புகழ்வது தவறில்லன்னு நீங்க பூரணிக்கு புரிய வச்சதுக்கு தேங்க்ஸ்.” என்றதும் நந்தினி முகம் மலர்ந்தது.

“உங்க இடத்தில் எங்க அண்ணன் இருந்தாலும், இப்படித்தான் பேசுவான். நீங்க இப்படி பேசுவது, உங்கக்கா மீது நீங்க வைத்திருக்கும் பாசத்தைக் காட்டுது. இன்னும் எத்தனை நாளைக்கு அவங்களை நீங்க கொண்டாட முடியும்?” நிதர்சனத்தைக் கூற, அவன் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

“நான் இப்படியேதான் இருப்பேங்க, அதில் என்னைக்கும் மாற்றமே இல்ல.” என்றவன் எழுந்து செல்ல, நந்தினி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் இயல்பாக கழிந்தது. அருண்மொழி தூரத்து சொந்தத்தில் ஒருவர் திருமணத்திற்கு செல்ல வங்கியில் விடுமுறை எடுத்தான். தாய், தம்பி இருவரையும் வழியனுப்ப பஸ் ஸ்டாண்ட் வரை வந்தாள் மலர்.

பஸ் நிலையம் வழக்கம்போலவே பரபரப்புடன் செயல்பட, ஆங்காங்கே ஊருக்கு செல்ல காத்திருந்தனர் பொதுமக்கள். வெவ்வேறு ஊர்களின் பஸ் வருவதும் போவதுமாக இருக்க, “டேய் அம்மாவுடன் இரு. அங்கே சொந்த பந்தத்தில் யாராவது பொண்ணு கேட்கும் விஷயம் தெரிந்தால் எனக்கு போன் பண்ணி சொல்லு.” என்றதும் அவனும் சரியென்று தலையசைத்தான்.

“ஏய் மலரு! நீயும் எங்களோடு வந்தால் என்ன?” என்றார் பத்மாவதி கோபத்துடன்.

“அம்மா ஆளைவிடு! அங்கே வந்து எல்லோருக்கும் இவதான் என் பொண்ணு மலருன்னு ஆரம்பிச்சிடுவே. நான் வேலை செய்யும் ஆடிட்டர் வீட்டு கிரகப்பிரவேசம் இருக்கு. கண்டிப்பா நான் போய்த்தான் ஆகணும்.” என்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

பத்மாவதி மகளை முறைக்க, “அம்மா நீ சொன்னதும் லீவ் எடுக்க, இது ஒன்னும் சொந்த தொழில் இல்ல. நான் சொன்னால் புரிஞ்சிக்கோங்க, அடுத்த முறை உங்களுடன் நானும் வர முயற்சி பண்றேன். இப்போதைக்கு தம்பியுடன் போயிட்டு வா.” என்றாள்.

திருமணம் என்று சொன்னாலே பிடிகொடுக்காமல் பேசும் மகளின் மீது கோபம் வர, “பின்ன காலம் முழுக்க பிறந்த வீட்டிலேயே இருக்கலாம்னு நினைக்கிறீயா? அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.” பத்மாவதி மிரட்டலோடு கூற, அருண்மொழி தமக்கையைப் பார்த்து, ‘நான் இருக்கேன், நீ கவலைப்படாதே அக்கா’ என்றான் விழி ஜாடையில்.

அவளும் சிரிப்புடன் சரியென்று தலையசைக்க, “எனக்குன்னு ஒருத்தன் பிறந்திருப்பான். அவனைக் கரம்பிடித்து அப்படியே கிளம்பி போயிடுவேன்!” கண்ணில் கனவுகள் மின்ன கூறிய மகளை சந்தேகமாக பார்த்தார்.

“அடியே காதல்கீதல்னு வந்து நின்ன…” அவர் வாக்கியத்தைப் பாதியில் நிறுத்த, தாயின் கோபம் உணர்ந்து சட்டென்று சுதாரித்தான் அருண்மொழி.

“அக்கா காதல் எல்லாம் செய்யவேமாட்டா அம்மா. இப்போதைக்கு அக்கா திருமணம் செய்ய இஷ்டம் இல்லன்னு சொல்றாங்க. அதை ஏன் நீங்க தப்பாக நினைக்கிறீங்க?” அவன் தாயை சமாளிக்க, ‘அம்மாடியோ ஒரு நிமிசத்தில் உண்மையை உளற இருந்தேன்’ பெருமூச்சுவிட்டாள்.

 அதற்குள் பஸ் வந்துவிட, “உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்.” என்ற பத்மாவதி முன்னே செல்ல, “அம்மா அப்படித்தான், நீ அதை பெருசாக எடுத்துக்காதே அக்கா.” தைரியம் சொன்ன அருண்மொழி பின்னோடு சென்றான்.

இருவரையும் வழியனுப்பிய மலர் வீடு நோக்கி செல்ல, பத்மாவதி மனதில் சுருக்கென்றது. இத்தனை நாளாக இல்லாமல், மகளின் பேச்சினில் மாற்றத்தை உணர்ந்தார். அவளாக திருமணம் செய்யும் முன்பு, தானே ஒரு வரனைப் பார்த்து திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்.

தாயின் முகத்தில் தோன்றி மறையும் உணர்வுகளை உன்னிப்பாக கவனித்த அருண்மொழி, “மலரக்கா விளையாட்டுக்கு பேசியதை நீங்க ஏன் போட்டு குழப்பிக்கிறீங்க. அக்கா மீது எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றவன் கூற, அதை அவர் காதிலேயே வாங்கவில்லை.

“எனக்கென்னவோ இது சரியாகப் படல. அங்கிருந்து வரும்போது கட்டாயம் மாப்பிள்ளைப் பார்த்து பேசி முடிச்சிட்டுதான் வரப்போறேன் பாரு.” என்றவர் இருக்கையில் சாய, அருண்மொழிதான் குழம்பிப் போனான்.

‘இந்த அக்கா வேற வாயைக் கொடுத்து வசமாக மாட்டிக்கிட்டாங்களே’ மனதிற்குள் புலம்பியபடி வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்தான்.

அன்றிரவு இருவரும் சொந்த ஊரான செங்கல்பட்டு சென்று சேர, உறவினர்களைக் கண்டவுடன் கலகலப்பாக பேசிய அன்னையைப் பார்த்து பெருமூச்சு விட்டான் அருண்மொழி.

error: Content is protected !!