kv-17

kv-17

17

விஜய் தன்னுடைய துணிகளையும், சில அத்தியாவசிய தேவைகளை கவனித்துக் கொள்ள சில பொருட்களையும், கூடவே ஜானவியும் தானும் எழுதி வைத்த பேப்பரை மறக்காமல் எடுத்து ஒரு பாலிதீன் கவர் போட்ட ஃபைலில் எடுத்து வைத்தான். அவனுடைய பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய தோளில் மாட்டிக் கொள்ளும் பெட்டியில் அடங்கிவிட்டது. ஏனெனில் அவன் நீண்ட தூரம் தூக்கி நடக்க வேண்டி வந்தால் அதிக சுமை கூடாது என்று யோசித்தான்.

அவனைப் போலவே ஜானவியும் சமயோஜிதமாக யோசித்து தன் தேவைகளை சுருக்கிக் கொண்டு மிகவும் கொஞ்சமாகவே எடுத்துக் கொண்டாள். அந்த இடம் குளிர் இருக்கும் என்பதால், ஃபர் ஜாக்கெட் கோட்டை எடுத்துக் கொண்டாள்.

அவள் வெளியூர் செல்வது மிகவும் அரிதான ஒன்று. ஆனால் இந்த ஆராய்ச்சிக்காக அவள் சென்ற இடங்களுக்காக பொது விமானங்களை பயன்படுத்துவது ஒரு சாட்சி ஆகும் என்பதனால், அவள் ஒரு தனியார் ஜெட் வாங்கி இருந்தாள்.

அவள் எப்போது பயனிக்கவேண்டுமோ அப்போது ஒரு மணி நேரத்திற்கு முன்னால் சொன்னால் கூட, அவளுக்காகத் தயார் செய்து விடுவார்கள். இதை அவள் யாரும் அறியாமல் பார்த்துக் கொண்டாள். அரண்மனை என்பதால், அவளது அம்மா அப்பாவிற்குக் கூட எதாவது வேலைகள் இருக்கும் என்பதால் சில நாள் அவளைக் கேட்கமாட்டார்கள்.

மூன்று நாட்களுக்கு மேல் ஆகும் என்றால் மட்டும் அவள் எதாவது காரணம் சொல்லிவிட்டு செல்வாள். இம்முறை நிச்சயம் நாட்கள் ஆகும் என்று தோன்ற, அவளது தந்தையிடம் சென்று அவள் ஊர் சுற்றிப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு சென்றாள்.

இரவு அவனுக்கு முதல் முறையாக போன் செய்தாள். போன் ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவன் எடுக்கவில்லை.

அவனோ ஃபோனை கையில் தான் வைத்திருந்தான். ஆனால் அவளின் குரலைக் கேட்க அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. அந்த ரம்யமான இரவை அவன் வீட்டு முற்றத்தில் அமர்ந்து நிலைவைப் பார்த்தபடி தன்னுடைய போக்கில் ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் நினைவு கூட அதைக் கேடுப்பதாகத் தோன்ற சைலென்ட் பட்டனை அமுக்கிவிட்டு ஓரமாய் வைத்தான்.

கைகளைத் தலைக்குப் பின்னால் மடக்கி வைத்து அந்த நிலவு மிதந்து வரும் வானத்தைப் பார்த்தபடி படுத்துவிட்டான். லேசான தென்னை மரக் காற்றும், எங்கோ டீக்கடையில் ஒலிக்கும் பழைய பாட்டும் மெல்லிதாகக் கேட்க , வேறு எந்த சிந்தனையும் இன்றி அந்த நொடிய ரசித்தபடி கண்களை மூடிக் கொண்டான்.

விடிந்தால் அவனின் பயணமும் இனி அவன் எதிர் கொள்ளப்போகும் கடும்பாதையும் மூளையை எட்டாமல் அவனை இன்று இரவாவது நிம்மதியாக உறங்க வைத்தது விதி.

அப்படியே உறங்கியவன், பிரம்ம முகூர்த்தத்தில் தான் கண் விழித்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தவன், அது மூன்றரை என்று காட்டியதோடு, இரண்டு முறை ஜானவியின் தவறவிட்ட அழைப்பையும், அவள் அனுப்பிய செய்திகளையும் முன்னே நிறுத்தியது.

கண்களைத் தேய்த்துக் கொண்டு அதைத் திறந்துப் பார்த்தவன்,

ஃப்ளைட் ரெடி‘ , ‘காலை நாலரை மணிக்கு ஏர்போர்ட் வாசலில் காத்திருகிறேன்,’ சுருக்கமாக ஆனால் விஷயத்தை மட்டும் அனுப்பி இருந்தாள்.

ஏற்கனவே அனைத்தையும் விஜய் எடுத்துவைத்துக் கொண்டதால், குளித்துவிட்டு உடனே கிளம்பினான்.சொன்னபடி ஜானவி அங்கே காத்திருந்தாள். இவனும் தாமதிக்காமல் சரியான நேரத்தில் அங்கே இருக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

இருவருக்கும் சேர்த்து ஜானவி ஏற்கனவே விமான டாகுமென்ட்டை அனுப்பி இருக்க, பாஸ்போர்ட்டை மட்டும் சரி பார்த்துவிட்டு உள்ளே அனுப்பினர்.

அனைவரும் செல்லும் வழியில் அல்லாமல் அவர்களின் ப்ரைவேட் ஜெட் பகுதிக்குச் செல்ல, விஜய் ஆச்சரியப் பட வில்லை. அவன் எதிர்ப்பார்த்துத் தான் இருந்தான்.

எதுவும் பேசாமல் அவளுடன் சென்றான் மனதில் கருவிக்கொண்டு. அவளை அவனுக்கு இம்மிகூட பிடிக்கவில்லை. அழகு மட்டும் ஒருவரைப் பிடிக்கப் போதுமானதாகாது! அவரது குணமும் காரணம் ஆகும். இவளைப் பற்றி முதலிலிருந்தே நல்ல விதமாக மனதில் பதியாததால் அவனுக்கு அதை மாற்ற முடியவில்லை.

ஜானவிக்காக காத்திருந்த அந்த பைலட் இருவரும், அட்டெண்டர் இருவரும் அவர்களை வரவேற்றனர். அதில் ஒரு பெண் அட்டெண்டர் மட்டும் விஜயைப் பார்த்து கைகுலுக்கி விட்டு,

சர் ஐ நோ யூ. டெல்லில ஒரு முறை மினிஸ்டர்கூட ட்ராவல் பண்ணப்ப நான் தான் உங்க ப்ளைட்ல அட்டெண்டர். ஹவ் ஆர் யூ சார்…” வழிய ஆரம்பித்தாள்.

விஜய்க்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சிறிய தலையசைப்புடன் கடந்து சென்றுவிட, அந்த அட்டென்ட்டர் பெண்ணுக்கு சப்பென்று ஆனதோடு, தன் சக ஊழியர்கள் முன்னால் சற்று அசிங்கமாகவும் போனது. பிறகு வேலையை மட்டும் அவள் கவனித்தாள்.

ஜானவிக்கு, ‘இவன் சிரிக்கக் கூடவா மாட்டான்எனத் தோன்றினாலும் அவர்களின் வரவேற்பில் சிந்தை கலைந்து விமானத்தில் ஏறிக்கொண்டாள்.

விஜய் அவளைத் தாண்டி சென்று பைலட்டிடம் பேசினான்.

எந்த ஏர்போர்ட்ல லேண்ட்டிங்?”

காத்மாண்டு சார்ஒரு பைலட் பதில் சொல்ல,

ரூட்ட மாத்துங்க. காத்மாண்டுல இருந்து நாங்க போகவேண்டிய இடம் ரொம்ப தூரம். அதுனால, ஜோம்சம் ஏர்போர்ட் போயிடுங்க. அது தான் பெட்டரா இருக்கும்.” விஜய் கூறியதும் ஜானவி அருகில் வந்தாள்.

ஏன் காத்மாண்டு வேணாம்னு சொல்றீங்க? அங்க எதாவது தேவைனா வாங்கிட்டு போகலாம் இல்லையா?” குற்றம் சொல்வது போலக் கூற,

எனக்கு வேண்டியது எல்லாம் என்கிட்ட இருக்கு. உனக்கு வேணும்னா நீ காத்மாண்டுல இறங்கிடு.” யாருக்கும் கேட்காத வண்ணம் ஏறிட்டும் பார்க்காமல் பேசினான்.

நான் இறங்கணுமா? நான் தான் எல்லாத்தையும் அறேஞ் பண்ணேன்” பதிலுக்கு பல்லைக் கடித்தாள். பிறகு அவசரப் பட்டு அதிகமாகப் பேசிவிட்டதை நினைத்து வாயை மூடிக் கொள்ள,

நான் உன்னை வரசொல்லவே இல்லையே. நீயா தான் வர, அண்ட் இதையும் தெரிஞ்சுக்கோ. நீ இந்த விமானத்த ஏற்பாடு பண்ணலன்னாலும் நான் போக கவர்ன் மென்ட்டே தனி விமானம் ஏற்பாடு செஞ்சு தரும்.” உண்மையை அவளுக்கு உணர்த்த , ஜானவியிடம் பதில் இல்லாமல் போனது.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் விமானம் பறந்தது. அதன் பிறகு அவள் எதுவும் பேசவில்லை. அவனும் அவனுடைய ஹெட்செட்டுடன் ஐக்கியமாகி இருந்தான். அதில் ஓடுகின்ற ஒரு மெல்லிய நீரோடையின் ஒலி மட்டும் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தது.

அவளோ கண்டகி நதியின் மேப்பை (map) பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் சுற்றுப் பகுதி பற்றி ஆராய நினைத்தாள்.

அந்த புத்தகத்தில் அவர்கள் படித்த வாசகத்தின்படி, ‘காட்டின் அரசனாக வாஎன்றால் அங்கே எத்தவது காடும், அங்கே மனிதர்களும் வாழ வேண்டும் என்று யூகித்தாள். அதனால் அந்த பகுதியில் காடுகள் எங்கெங்கே இருக்கிறது என்பதைத் தேடிக் கொண்டிருந்தாள்.

விஜய் தன் மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு இப்போது தெளிவாக நிறைய சிந்திக்க வேண்டி இருந்தது. அதனால் அவன் தனக்குள்ளேயே நிறைய விஷயங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.

அவ்வபோது விமான உதவியாளர்கள் வந்து காபி தண்ணீர் என கொடுக்க, ஜானவி தான் அதை வாங்கிக் கொண்டாளே தவிர, விஜய் மறுத்துவிட்டான். அவனுக்குள் என்னவென்று அவனே ஆராய ஆரம்பித்திருந்தான். அரண்மனை வாரிசான ஜானவிக்கோ அல்லது அவளது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கோ இது வாய்க்காமல், தன் தலையில் இந்தப் பொறுப்பு விழ காரணம் என்ன.. என்று அவன் மனது குழம்பியது. ஒரு நிலைப் படுத்த நினைத்தால், இப்படிப்பட்ட கேள்விகளும் குழப்பங்களும் தன்னை சுற்றுவதை அவனால் தடுக்க முடியவில்லை. கடைசியில், ‘இது தான் என் விதி என்றால், ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.’ என்று தீர்மாணிக்க, விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.

கிருஷ்ணமாச்சாரியை வர சொன்ன இடம், ஒரு மறைவான இடமாக இருக்கும் என்று நினைத்துப் புறப்பட்டார்.ஆனால் அது ஒரு விமான நிலையம். ‘இங்கு எப்படி மறைவாக சந்திக்க ஏற்பாடு செய்தார்கள்? அதுவும் உலகில் இருக்கும் பல முக்கியப் பட்டவர்கள் இவ்விடம் வர எப்படி சம்மதித்தார்கள்?’ என்ற பல கேள்விகள் அவருக்குள் எழுந்தது.

அவர் விமான நிலையத்தில் நுழைந்ததுமே அவரிடம் இரண்டு பேர் வந்து நிற்க, அவரது செல்போனில் அழைப்பு வந்தது. அவர்களுடன் கிளம்புமாறு செய்தி வர, அது நம்பிக்கையானவர்கள் குரல் என்பதால், அவர்களுடன் சிறிதும் யோசிக்காமல் புறப்பட்டார்.

ஏர்போர்ட்டின் வடிவமைப்பே ஒரு வித்தியாசமாக இருந்தது. ஆகாங்கே பலப்பல ஓவியகள் மாட்டி வைக்கப் பட்டிருக்க, அவை அனைத்துமே, அபசகுனமான படங்களாக இருந்தது.

ஒரு பெண் கையிலும் காலிலும் கத்தி வைத்துக் கொண்டு பறந்தபடி நின்று நான்கு ஆண்களை கொல்லுவதாக ஒரு படம், அதே போல் ஒரு வயதான பெண்மணி உணவு மேஜையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் ஒரு கோப்பையில் விஷம் ஊற்றிக் கொடுத்து அவர்களை அருந்தச் சொல்லி நிற்பது போன்ற ஒன்று, இறந்து போன ஒருவன் மீது செருப்புகளை வீசுவதாக ஒரு படம் , ராட்சசன் மண்டை ஒட்டு மேலே கொம்பு வைத்துக் கொண்டு சிரிப்பது என பார்ப்பதற்கே மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் பல விதங்கள் அங்கே இருந்தது.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே நடந்த கிரிஷ்ணனுக்கு பயம் இல்லை மாறாக, இந்த இடத்தில் ஏன் என்று கேள்வி தான் குடைந்தது. அவரை அழைத்துச் சென்றவர்கள் ஓரிடத்தில் திரும்ப, அங்கே வெறும் சுவர் மட்டுமே இருந்தது. ஆட்களும் அங்கே யாரும் நடக்காத பகுதி. பரபரப்பான இடம் அப்படியே அடங்கியது போல இருந்தது. சட்டென அப்படி ஒரு இடம் அந்த ஏர்போர்ட்டில் எப்படி வந்ததோ!

அந்த இடத்தின் வாசனையே சொன்னது, யாரும் அங்கே அதிகம் புழங்கவில்லை என்பதை.

இங்க வெறும் சுவர் தானே இருக்கு. இங்க எப்படி?” இருவரையும் பார்த்துக் கேள்வி கேட்க,

இருவரும் அதைக் காதிலேயே வாங்கவில்லை. ஒருவன் மட்டும் அவர்கள் நின்றிருந்த தரையை இருமுறை காலால் உதைக்க, அது அவர்கள் மூவரும் நின்று கொண்டிருந்த அந்தப் பகுதியை மட்டும் சதுரமாக பிளந்து கீழே இழுத்துச் சென்றது. அது ஒரு லிஃப்ட் போல வேலை செய்ததை உணர்ந்தார். நீண்ட தூரம் சென்றது ஆனால் வேகமாகச் சென்றது. அவர்கள் இறங்கியதும் மறுபடியும் மேலே சென்று மூடிக் கொண்டது.

கீழே இறங்கியவர் சுற்றும் முற்றும் பார்க்க, ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது. மேலே இருந்த பிரம்மாண்டமான விமான நிலையத்திற்கு சிறிதும் குறைவில்லாமல், ஒரு பிரம்மாண்ட மான நகரம் இருந்தது.

பெரிய பெரிய கட்டிடங்களும், பலவிதமான உயர் ரக கார்கள், ஷாபிங் காம்ப்ளெக்ஸ் என சகலமும் அங்க தனி நகரமாக இயங்கிக் கொண்டிருந்தது. இவர்கள் சென்று இறங்கியதும் ஒரு மால் என்பதால், வாய் பிளந்தார் கிருஷ்ணமாச்சாரி. அவர்கள் வெளியே வந்ததும் ஒரு தானியங்கி டெஸ்லா கார் வந்து நிற்க, மற்ற இருவரும் இருந்து கொண்டு, அவரை மட்டும் அதில் ஏற்றி அனுப்ப, அவரும் ஏறிச் சென்றார்.

அந்த டெஸ்லா ஐந்து நிமிடத்தில் ஒரு பெரிய அரைவட்டம் போல் அமைத்த கட்டிடத்தின் முன் சென்று நின்றது.

கிருஷ்ணன் கீழே இறங்க, அவரிடம் அடிக்கடி பேசும் நபர் வந்து அவரை வரவேற்றார்.

கிருஷ்ணன், வாங்க… உங்களுக்காக தான் எல்லாரும் காத்திருக்காங்க

ஒரு நிமிஷம். இது என்ன இடம். இந்த உலகத்துல இருந்து தனியா பிரிஞ்சு இருக்கற மாதிரி இருக்கே..” வியப்பை விடாமல் கேட்க,

சரியா சொன்னீங்க. இந்த உலகத்தை நாம ஆட்டி வைக்கணும்னா, அதுலயே இருந்து செய்ய முடியாதே. அதான் நமக்குன்னு தனி உலகம் அமைச்சிருக்கோம்.” கர்வமாகக் கூறினார்.

உள்ளே செல்ல கதவு எதுவும் இல்லை. அந்த நபர் தன் கையில் இருந்த ஒரு செல்போனில் ஒரு நம்பரை அழுத்த, அங்கே வாசல் தோன்றி இருவரும் உள்ளே சென்றனர்.

வட்ட வடிவ மேஜையில் முக்கியப்பட்ட பத்து பேர் அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் வணக்கம் சொல்லி அவர்களுடன் அமர்ந்தார் கிருஷ்ணமாச்சாரி. அவர்கள் அனைவரும் கிருஷ்ணமாச்சாரியை இமைக்காமல் பார்க்க , அவருக்குள் ஒரு எண்ணம் உதித்தது. அது அங்கிருப்பவர்களை எப்படி நம்ப வைப்பது என்றது.

விஜய் விமானத்தில் இருந்து இறங்கியதும், தன் கைகால்களை நீட்டி நெட்டி முறித்து நிற்க, ஜானவியும் தன் உடமைகளுடன் இறங்கினாள்.

இங்க இருந்து அஞ்சு கிலோமீட்டர் இருக்கு.. டாக்ஸி கிடைக்கும்னு நினைக்கறேன்.” தன் திமிரையும் மீறி அவனிடம் சொல்ல,

விஜய் அதற்குள் ஒரு டாக்ஸியை அழைத்து விட்டிருந்தான்.

டிக்கியில் தன் உடமைகளை வைத்துவிட்டு முன் சீட்டில் ஏறிக்கொள்ள, அவள் அவனை முறைத்தபடி நின்றாள்.

அரைநிமிடம் பொறுத்தவன், “சரி கிளம்புங்கஎன டாக்ஸி ட்ரைவரைப் பார்த்துக் கூற, இவனிடம் முறைத்தால், அடுத்து விட்டுவிட்டுப் போய் விடுவான் என்று பயந்தவள், அவசரமாக பின் சீட்டில் ஏறிக்கொண்டாள்.

வண்டி இருவரையும் கூட்டிச் சென்று கண்டகி நதிக் கரையில் இறக்கியது.

error: Content is protected !!