Mathu…Mathi-1

Mathu…Mathi-1

மது…மதி – 1

“மது போதையில் மதுமதி.”  தொலைக்காட்சியில் தலைப்புச் செய்தியாக ஒளிபரப்பாக, அப்பொழுது கொட்டை எழுத்தில் இருந்த “மதுமதி” என்ற பெயரிலும், பெரிதாக காண்பிக்கப்பட்ட அவள் புகைப்படத்திலும் தொலைக்காட்சியின் தொலையியக்கியை கையில் வைத்து அதை இயக்கி கொண்டிருந்தவன் தன் கைகளை கூட அசைக்காமல், தன் இதயம் நின்றவன் போல் திக் பிரமை பிடித்து நின்றான்.

அவன் கைகள் அசையாவிட்டாலும், அவன் இதயம் துடிக்க மறந்தாலும் அவன் இமைகள் இமைக்க மறந்தாலும், அவன் செவிகள் அங்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த செய்தியை உள்வாங்கி அவன் மூளைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.

“மதுபோதையில் தன் காரை ஓட்டிய மதுமதி, இளம் பெண்ணை இடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம். மதுமதியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.” ஒரு முறை அவன் மூளையை தொட்ட செய்தியாக இருந்தாலும், அவன் மூளை அந்த செய்தியில் நின்றுவிட,  மீண்டும் மீண்டும் அந்த செய்தி மட்டுமே  அவனை  பலமுறை தாக்க, அங்கிருந்த சாய்வமர்க்கையில் மொந்தென்று அமர்ந்தான்.

அவன் கேட்ட செய்தியால் ஏற்பட்ட துயரத்தில் அவன் உயரம் அடங்கியது போல் அவன் உடல் கூனி குறுகியது. கம்பீரத்தை மட்டுமே தேக்கியிருக்கும் அவன் முகம் களையிழந்து காணப்பட்டது. ஆஜானுபாகுவாக இருந்த அவன் தோள்கள் கோபத்தில் முறுக்கேறியது.  முத்துமுத்தான வியர்வை அவன் தேகம் எங்கும் அரும்ப அவன் கைகள் கோபத்தில் நரம்பு புடைக்க, அவன் தன் கை முஷ்டியை இறுக மூடினான்.

அப்பொழுது வைரத்தோடு, வைரவளையல் அணிந்து  சற்று பருத்த உடலோடு அங்கு வந்த லலிதா தேவி, தொலைக்காட்சியில் அந்த செய்தியை கண்களை சுருக்கி பார்த்தபடி, “ம்… இவளுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். நாம வேண்டாம்வேண்டாமுன்னு கெஞ்ச கெஞ்ச நம்ம வீட்டை விட்டு போனா, இப்படித்தான் ஆகும்” அவர் நீட்டி முழக்க, தன் தாயை அவன் உறுத்து விழிக்க, “லலிதா” தன் மனைவியை கண்டிக்கும் விதமாக அழைத்தார் பாலா கிருஷ்ணன்.

“மதுமதி கெளதம் ஸ்ரீனிவாசனா? இல்லை மதுமதியா? தன் கணவனை பிரிந்த சோகத்தில் மது அருந்தினாளா? தன் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பத்தில், வேறு ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் எதிர்பாராமல் அழித்து விட்டாளா? இல்லை வேறு எதுவும் முன் பகையா? என்று போலீசார் தீவிர விசாரணையில், ஈடுபட்டுள்ளுனர்.” என்ற செய்தி ஒளிபரப்பாக,

அவன் மேலும் அங்க நிற்க விரும்பாமல் தன் அறைக்குள் சென்று படாரென்று  கதவை மூடினான். ‘யாருக்கும் அழைக்கலாமா? ஏதாவது செய்யலாமா?’ என்று ஒரு நொடி சிந்தித்தவன், மறுப்பாக தலையசைத்து, மூடிய அந்த கதவின் மேல் சாய்ந்து நின்றான்.

மூடிய அறைக்குள் அவள் இல்லாமல் அவனா? அவள் ஸ்பரிசம் தீண்டாமல் அவன் அறைக்குள் அவன் நுழைவானா? கதவுக்கு பின் ஒளிந்து கொண்டு அவள் காட்டும் கண்ணாம்பூச்சி ஆட்டத்திற்கு அவன் காதலும் அல்லவா அவனோடு சிக்கி கொண்டு தவிக்கும்.

“மதும்மா…” அவன் இதழ்கள் அவளை அழைக்க, அவன் கைவளைவில் அவள்.

அவள் அணிந்திருந்த சேலைக்கு இடையில், அவள் வெற்றிடையை தனதாக்கி அவன் ஆள்காட்டி விரலால் அவள் முகத்தை ஏந்தி அவன் கண்சிமிட்ட, அவள் புருவத்தை உயர்த்தினாள். “மதும்மா சொல்றதை கேளு” அவன் குரல் கட்டளையிட்டு கொஞ்ச, “ம்… ஹூம்…” அவள் தலையை இருப்பக்கமும் வேகமாக அசைக்க,

“ம…” அவன் ஆள் காட்டி விரல் அவள் நெற்றியை வருட, அவன் இதழ்கள் அவன்  விரல் வருடிய இடத்தில் தடம் பதிக்க, “…து…” அவன் ஆள் காட்டி விரல் அவள் மூக்கை ஆட்ட, அவன் இதழ்கள் அவன்  விரல் வருடிய  இடத்தில் தடம் பதிக்க, “…ம்மா…” அவன் ஆள் காட்டி விரல் அவள் பெயரை சொல்லியபடி அவள்  இதழ்களை வருட, அவன் இதழ்கள் அவன்  விரல் வருடிய இடத்தில் தடம் பதிக்க, மறுப்பு தெரிவித்து கொண்டிருந்த அவள் தலை அவன் கட்டளைக்கு இணங்கி அசையாமல் நின்று அவன் அன்புக்கு இசைய, அவள் முகம் செவ்வானமாக சிவந்து, “என்னங்க…” என்று அவன் நெஞ்சோரமாக சாய்ந்து கொண்டாள்.

அவள் ஸ்பரிசத்தில் அவன் தன்னை தொலைக்க, இன்றும் அவளிடம் தொலைய எத்தனித்தவன், அவளை தன்னோடு  முழுதாக சேர்த்து கொள்ள முயற்சிக்க, அவள் முழுதாய் தொலைந்து போனதை உணர்ந்தவன், “ம…” அவள் பெயரை சொல்லாமல் , சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் கண்ணீர் அவன் கண்களை திரையிட, அவனுக்கு எதிரே இருக்கும் அவர்கள் புகைப்படத்தின் அருகே சென்று அவள் விழிகளை உற்று நோக்க, அவன் அலைபேசி ஒலித்தது.

அவன் அலைபேசியை எடுக்க, “சார்… சா…” எதிர்முனை கிசுகிசுப்பாக ஒலிக்க, அவன் புருவம் சந்தேகத்தோடு நெளிந்தது. “சார்…” எதிர்முனை எதையோ கூற வந்து, தடுமாறுவது போல் இழுக்க, “எஸ்… அட்வகேட் கவுதம் ஸ்ரீநிவாசன் ஹியர்” அவன் குரல் அழுத்தமாக ஒலிக்க, “சார், நான் ஸ்டேஷனலிருந்து கான்ஸ்டபிள் சுந்தரம்” எதிர்முனை கூற, “சார், உங்க மனைவி…” எதிர்முனை தடுமாற, “சொல்லுங்க…” என்றான் எதிர்முனை சொல்ல வருவதை கூர்மையாக கேட்டபடி.

“சார், எல்லாமே தப்பா இருக்கு சார். அவங்க…” சுந்தரம் ஆரம்பிக்க, “மதுமதி குடிச்சிருக்க மாட்டா. மதுமதிக்கு குடிக்குற பழக்கம் கிடையாது. அவ எந்த தப்பு செஞ்சிருக்க மாட்டா.” கௌதமின் குரல் அழுத்தமாக உறுதியாக ஒலித்தது. “சார், உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியலை சார். ஆனால், அந்த பொண்ணு ஏதோ பெரிய பிரச்சனையில் மாட்ட போற மாதிரி தெரியுது சார். எங்க ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்…” எதிர்முனை தடுமாற,

“தேவராஜ் தானே?” கெளதம் கேட்க, “சார், சரியா சொல்லிடீங்க சார். ஏதோ, பெருசா திட்டமிடுறாங்க சார். நான் ஒன்னும் பண்ண முடியாது. ஆனால், என் மனசாட்சிக்கு உட்பட்டு, உங்க கிட்டயாவது சொல்லாமுன்னு…” சுந்தரம் இழுக்க, “மதுமதி, அவங்களுக்கு யாரும் இருக்காங்கன்னு சொன்னாங்களா?” அவன் கேட்க, “அது ஊருல…” சுந்தரம் இழுக்க, “என் பெயரை சொன்னாளா?” அவன் ஆதங்கத்தோடும், எதிர்பார்போடும் கேட்டான்.

“இல்லை சார். அவங்க உங்க பெயரை சொல்லலை சார்” சுந்தரத்தின் குரல் கம்மலாக ஒலிக்க, “சரி…” என்று கூறிவிட்டு தன் அலைபேசி பேச்சை முடித்துக்கொண்டான்.

‘இப்ப கூட என் பெயரை சொல்லமாட்டாளா?’ அவன் அலைபேசியை மெத்தை மீது விசிறி எறிந்தான். ‘இந்த மனிதர்களின் கோபத்தின் வீரம் என் மேல் மட்டும் தானா?’ என்ற பரிதாபமான கேள்வியோடு அவன் அலைபேசி மெத்தை மீது உருண்டது.

*** *** **** 

சிறைக்குள் அமர்ந்திருந்தாள் மதுமதி. அழுக்கு தோய்ந்த சுவர். இரத்த கறை படிந்த சில இடங்கள்.மங்கலான வெளிச்சம். அவள் முடி கலைந்திருந்தது. அவள் நெற்றியில் வட்டமாக சாந்து பொட்டு. அவள் உடுத்தியிருந்த சிவப்பு நிற சேலை, அவள் அமர்ந்திருந்த இடத்தின் காரணமாக சற்று அழுக்காகி பொலிவிழந்து காட்சியளித்தது.

“சுந்தரம், அந்த டாகுமெண்ட்ஸ் எல்லாம் கொண்டு வாங்க” அழைத்தபடி அவள் முன் கால் மேல் கால் அவன் பூட்ஸ் அவள் முகத்தை தொட்டும் தொடாமலும் இருப்பது போல் அமர்ந்தான் தேவராஜ். நல்ல உயரம். வாட்டசாட்டமான தோற்றம். சிறிதும் கனிவை காட்டாத கண்கள். இல்லை இல்லை கோபத்தில் சிவந்த கண்கள்.

“இந்தா கையெழுத்து போடு” அவன் காகிதத்தை நீட்ட, “நான் குடிக்கலை. எந்த தப்பும் பண்ணலை” அவள் அழுத்தமாக கூற, “அட ச்சீ… போடுறி கையெழுத்தை. உன்கிட்ட நான் என்ன சொல்றேன். நீ என்ன ம… ம்..ச்…” என்னை பேச வைக்காத” அவன் அவள் முன் காகிதத்தை எறிந்தான்.

“என்னால, எதுலயும் கை எழுத்து போட முடியாது. தப்பே பண்ணாத என்னை இங்க வச்சிருக்கிறதே  தப்பு.” அவள் நிதானமாக சற்று கோபமாகவும் கூற, “வக்கீல் பொண்டாட்டின்னு சட்டம் பேசறியா? அது தான் வக்கீல் உன்னை அத்துவிட்டானில்லை. பொட்டச்சின்னு நான் கம்முனு போனா, என்கிட்டயே ஏறி பேசுதியா? உன்னை…” அவன் அவளை அடிக்க கைகளை ஒங்க, அவள் அவனை எதிர்த்து பார்த்தாள்.

“அடி…” இப்பொழுது அவள் எதிர்த்து நின்றாள். “என்னை பொம்பளைக்கு மரியாதை கொடுக்க தெரியாதா? பொட்டச்சின்னு சொல்லுத? நீ யாருன்னு எனக்கு தெரியும். என்னை எதுக்கு இங்க வச்சிருக்கன்னு எனக்கு தெரியும். எம்மேல கையை வச்சி பாரு, உம் உயிரு மண்ணா தான் போவும்.” அவள் இப்பொழுது எகிற, தேவ்ராஜ் கொலை வெறியோடு அவளை நெருங்கினான்.

“சார், வேண்டாம் சார்” குறுக்க விழுந்தார் சுந்தரம். கொஞ்சம் ஒல்லியான உடல் வாகு. சற்று வயது முதிர்ந்த தோற்றம். “சார், பெரிய இடம் சார். அவங்க உங்களை வில்லங்கத்துல மாட்டிவிட தான் சார் பேசுறாங்க” சுந்தரம் தேவராஜை தடுக்க, “என்னய்யா பெரிய இடம்?” தேவராஜ் முகத்தை சுளித்துக்கொண்டு,

“அட்வகேட் வந்து உன்னை காப்பாத்துவான்னு நினைக்குறியா? இந்நேரம் உன்னை பத்தின விஷயம், நியூஸ், வாட்ஸாப்ப், யூடுயூப்ன்னு தீயா பரவுது. வரணுமுன்னு நினைச்சிருந்தா இந்நேரம் வந்திருப்பான்.” தேவராஜ் நக்கலாக கூற, “அட்வகேட் உதவி எல்லாம் எனக்கு தேவை இல்லை. என்னை கோர்ட்டுக்கு கொண்டு போங்க. எனக்கு நானே வாதாடிப்பேன். என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும்.” அவள் அவனை கூர்மையாக பார்த்தபடி கூறினாள்.

“நான் என்ன பண்ணனுமுனு நீ சொல்ல வேண்டாம்” அவன் அவளை அடிக்க நெருங்க, “சார்…” சுந்தரம் இழுக்க, சிறைக்கு வெளியே வந்து அவன் நாற்காலியில் கோபமாக அமர்ந்தான் தேவராஜ்.

“அது தான் அந்த அட்வகேட்க்கும் இந்த பொண்ணுக்கும் டைவர்ஸ் ஆகிருச்சில்லை?” அப்பொழுது சூடாக வந்த தேநீரை பருகியபடி  தேவராஜ் ஏளனமாக நக்கலாக சிரித்தான். “இன்னும் டைவர்ஸ் ஆகலை. பிரிஞ்சி தான் இருக்காங்க சார்” சுந்தரம் மெதுவாக கூற, “என்னையா, அவங்க வீட்டு விஷயம் எல்லாம் உமக்கு நல்லா தெரியுது” தேவராஜ் கேலியாக கூற, “எல்லாரும் பேசறது தான் சார்” தன் தலையை சொறிந்தபடி கூறினார்.

“நீவீர் சொல்றபடி பார்த்தா, இங்க அடிச்சா அங்க வலிக்குமுன்னு சொல்லு” தேவராஜ் தன் மீசையை முறுக்கி சிரிக்க, “நமக்கு அடி பலமா விழுந்தாலும் விழும் சார்” மெதுவாகவே கூறினார் சுந்தரம். “யோவ்… நீ நம்ம ஆளா, இல்லை அவன் ஆளா?” தேவராஜ் இப்பொழுது கடுப்பாக கேட்க, “உங்க ஆளா இருக்க போய்தான் சார், உண்மை சொல்லி உங்க கிட்ட திட்டு வாங்கறேன்” அவன் பதவிசமாக பேச, “சரி, நாம தான் எவிடென்ஸை சரியா கொடுக்கணும். இந்த பொம்பளைகிட்ட இங்க பேசி பயனில்லை. லேடி போலீசை இங்கயே இருக்க சொல்லணும். இல்லை அதை வைத்து ஏழரையை கூட்டுவாங்க” தேவராஜ் கூறிவிட்டு வெளியே சென்றான்.

அவன் சென்றதை உறுதி படுத்திவிட்டு, சுந்தரம் மதுமதி அருகே சென்றான்.

“அம்மா, உங்க கணவர் கெளதம் ஸ்ரீனிவாசன் ஐயான்னு சொல்லுங்க போதும். நீங்க பிரிஞ்சிருக்கிற கதை எல்லாம் இப்ப எதுக்கு? உங்க குடும்ப கதையையும் எல்லா இடத்துலயும் கிழிகிழினு கிழிக்குறாங்க. நீங்க கெளதம் ஐயா பெயரை மட்டும் சொல்லுங்க. போதும்.  இந்த ஆளுங்க எல்லாம் உங்க கிட்ட நெருங்க கூட மாட்டாங்க. அவர் உங்களுக்காக வருவாருன்னு தெரிஞ்சா கூட கொஞ்சம் பயப்படுவாங்க. அவர் வரமாட்டாருன்னு தான் இவங்க எல்லாம் செய்யறாங்க” சுந்தரம் தன்மையாக கூற,

“உங்களை மாதிரி நல்ல போலீஸ் எல்லாம் இருக்கும் பொழுது எனக்கு என்ன கவலை? என்னை ஒன்னும் பண்ண முடியாது. நான் எந்த தப்பும் பண்ணலை. நாளைக்கு கோர்ட்டில், நானே எனக்காக வாதாடிப்பேன். எனக்கு எந்த பயமுமில்லை. எனக்கு இந்த போலீஸ் எல்லாம் பார்த்து பயம் எல்லாம் கிடையாது.” அவள் தெளிவாக கூற,

“உங்க கணவர்…” சுந்தரம் மீண்டும் ஆரம்பிக்க, “எனக்கு அப்படி யாருமில்லை” அவள் உறுதியாக கூறிவிட, சுந்தரம் வேறு வழியின்றி வெளியே சென்றார். ‘இந்த காலத்து பொண்ணுகளுக்கே பிடிவாதம் அதிகம் தான்.’ அவரால், அவளுக்காக பரிதாபம் மட்டுமே பட முடிந்தது.

அந்த இருட்டறையில் “அட்வகேட்  கெளதம் ஸ்ரீநிவாசன்” அவள் இதழ்கள் அவன் பெயரை உச்சரிக்க, அவள் கண்களில் காதல் மிளிர்ந்தது. அவள் ஓர் அழைப்பு கொடுத்தால் போதும். அவன் வருவான். அவளுக்கு தெரியும். அவள் வரவேண்டும் என்று நினைத்தாலே போதும். அவன் வருவான். அவளுக்கு தெரியும். ஆனால்…

‘நான் ஏன் அவங்களை நினைக்க வேண்டும்? அவங்களுக்கும் எனக்கு என்ன சம்பந்தம்? நான் கேட்டதை எனக்காக செய்ய முடியாத கணவன் எனக்கு எதற்கு?’ அவள் தலையை சிலுப்பிக்கொண்டாள். ‘எந்த பிரச்சனையாக இருந்தாலும், நானே சமாளிப்பேன்’ அவள் அவனை அழைக்க கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டாள். அவள் என்னை அழைக்க வேண்டும் என்று அவன் தவியாய் தவித்தான்.

 “ஐயா, அந்த கௌதமுக்கு பொண்டாட்டிடீன்னா உசிரு. ஆனால், இப்ப டைவர்ஸ் வரைக்கும் வந்திருக்காங்க ஐயா. காரணம் தான் தெரியலை. காரணம் தெரியாமலே அவங்க கதை ஊரெல்லாம் நாறிப்போயிருக்கு. அதனால், அந்த அட்வகேட்டு நிலைமை திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி ஐயா. வரணுமுன்னு துடிப்பான். ஆனால், அவன் பொண்டாட்டி ராங்கி. ஒத்துக்க மாட்டா. நமக்கு ஒத்த கல்லில் ரெண்டு மாங்காய். புருஷன் பொண்டாட்டியை இந்த கேஸோட முடிச்சிருவோம்.” அவர்கள் இருவரையும் வைத்து தேவராஜ் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.

மது… மதி! வருவாள்… 

Leave a Reply

error: Content is protected !!