Mathu…Mathi!- 11

mathu...mathi!_Coverpic-50891873

Mathu…Mathi!- 11

மது…மதி! – 11

மதுமதி அங்கிருந்த சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தாள். “இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். வேண்டாம். வேண்டவே வேண்டாம்” அவள் இதழ்கள் அழுத்தமாக முணுமுணுக்க, அவர்கள் இருந்த அறையின் ஜன்னல் கதவு அசைய, அவள் படக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

அவள் ஜன்னலை திறக்க, அங்கு யாருமில்லை. ‘யாருமில்லையே… ஆனால், யாரோ நம்மளை பார்த்த மாதிரி இருந்ததே’ அவள் தன் தாடையை தடவி யோசிக்க, மறுபடியும் அங்கு யாரோ நடப்பது போலத் தெரிய, அவள் படபடவென்று வெளியே செல்ல எத்தனித்தாள்.

“மதுமதி” அவன் குரலின் கர்ஜனையில் அவள் அங்கு அசையாமல் நிற்க, “எங்க கிளம்பிடீங்க மேடம்?” என்றான் அவன் தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்தபடி. அவனுடைய பரந்து விரிந்த மார்பை நேரடியாக பார்க்க வெட்கங் கொண்டு அவள் முகத்தை திருப்பினாள். அவளுள் பல நியாபகங்கள் மோத, அவள் முகத்தில் செம்மை படர்ந்தது. அவள் முகம் திருப்பிய வேகமும், அவள் முகத்தில் படர்ந்த செம்மையும் அவனுக்கு பல செய்திகள் கூற, அவனுள் சுவாரசியம் கூடியது.

அவள் அருகே வந்து அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். எதுவும் அறியாதவன் போல், “என்னைப் பார்த்து பேசு” என்றான் அதிகாரமாக. “பார்க்க பிடிக்கலைன்னு தானே வேறு பக்கம் திரும்பறேன்” அவள் மெட்டுவிடாமல் கூற, “பார்க்க பிடிக்காமலா? இல்லை பார்த்தால் பிடிச்சிடுமோன்னு பயமா?” அவன் புருவம் உயர்த்த, அவன் கண்கள் சிரிக்க, அவள் மனம் அவனிடம் மயங்க ஆரம்பித்தது.

குளித்து முடித்து வந்த அவன் வாசம்… அவன் அருகாமையில் அவன் தேகம் தொட்டு வந்த நீர்த்துளிகள் அவளையும் தீண்ட அவளுள் மெல்லிய மயக்கம். சட்டென்று மூச்சை உள்ளிழுத்துக் கொண்டாள். அவள் தடுமாற்றம் அவனுக்கு பிடித்திருந்தது. அவனுக்கான அவள் தடுமாற்றத்தில் அவனுள் மாமழை.

“மதும்மா…” அவன் அழைப்பு மாறியிருக்க, அவன் இதயகுரலில் அவள் இதயம் தடுமாற, அவள் படபடவென்று பின்னே விலகினாள்.

“யாரோ நம்மளை தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கு” அவள் எந்தவித உணர்வுமின்றி கூறினாள்.

“ம்…” அவனும் நிதானத்திற்கு வந்தான். “என்ன ம்ம்ம்?” அவள் வெடுக்கென்று கேட்க, “தெரியுமுன்னு அர்த்தம்” அவன் சிடுசிடுத்தான். எதையோ இழந்த கோபத்தில்.

“கோபமா?” அவன் முன் வந்து நின்று அவன் முகம் பார்த்து கேட்டாள். அவள் குரலில் அன்பும் காதலும் கரிசனமும் அக்கறையும் இருக்க, அவன் மறுப்பாக தலையசைத்தான்.

“என்னால், அதை கூட உன் மேல முழுசா படமுடியலைடி” அவன் குரல் தழுதழுத்தது. அவள் எதுவும் பேசவில்லை. அவள் அமைதியாக அமர்ந்தாள். ‘சண்டை போட்டால் சண்டை போடலாம். ஆனால், இப்படி பேசினால்…’ அவள் அவன் முகம் பார்த்து அமர, “கிளம்பலாம்” என்றான் ஒற்றை வார்த்தையாக.

“யாரு நம்மளை தொடர்ந்து வராங்க?” அவள் கேட்க, “தெரியலை” என்றான். அதற்கு மேல் அவளும் எதுவும் பேசவில்லை. அவனும் எதுவும் கூறவில்லை.

அலைபேசியில் மட்டும் எதுவோ ரகசியமாக பேசிவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு காரை கிளப்பினான். கார் காவல் நிலையத்திற்கு முன் நின்றது. அவர்கள் காவல் நிலையத்திற்குள் உள்ளே சென்று மதுமதி கையெழுத்திட்ட கொஞ்ச நேரத்தில் காவல் நிலையம் முன் பெருங்கூட்டம் கூடியது.

மதுமதியும் காவல் நிலையத்தில் உள்ள மற்றவர்களும் பதட்டம் அடைய, “சார் நான் பார்த்துக்கறேன்” என்று இன்ஸ்பெக்டர் நட்போடு புன்னகைத்து கைகுலுக்க, கௌதமின் கண்கள் நட்போடு அவனிடம் விடைபெற்றது.

மதுமதியின் கைகளை அழுத்தமாக பற்றி, வேகவேகமாக காவல் நிலையத்திற்கு வெளியே வந்து கூட்டத்திற்குள் நுழைத்தான். ஒன்றும் புரியாமல் அவனோடு சென்றாள் அவள். வந்த காரில் ஏறாமல் வேறொரு காரில் ஏறினார்கள். கார் மின்னல் வேகத்தில் பறந்தது.

மதுமதி படபடவென்று அங்கு நடந்ததை புரிந்து கொண்டாள். ” இப்ப நாம போற கார் ஹோட்டலிலும் நின்னுச்சு. அப்பவே சாமானை இதில் ஏத்தீடீங்க. யாரோ நம்மளை தொடர்ந்து வராங்க. அவங்க நம்மளை போலீஸ் ஸ்டேஷன் வரை தொடர்ந்து வருவாங்கன்னு தெரியும். ஸோ, போலீஸ் ஸ்டேஷனில் கூட்டத்தை வரவச்சீங்க. இன்ஸ்பெக்டர் கைகுலுக்கும் பொழுது சாவி கைமாறியிருக்கு. இப்ப அந்த காரும் கிளம்பியிருக்கும். வந்தவங்க அந்த காரை தொடர்ந்து போவாங்க. நாம வேற பக்கத்தில் போறோம்” நடந்ததை கணக்கிட்ட படி அவள் நிதானமாக கூற, அவன் தலையசைத்தபடி வண்டியை வேகமாக ஓட்டினான்.

“எப்படி படபடன்னு உங்களை புரிஞ்சி எல்லாம் கண்டுபிடிச்சேன். ஒரு பாராட்டெல்லாம் கிடையாதா?” அவள் அவன் முகம் பார்த்து, “என்னை முழுசா புரிஞ்சி, இப்ப என்னை நம்பி வர்ற மாதிரி வாழ்க்கையிலும் வரலாமே மதும்மா” அவன் கூற, “நீங்க அதை விடவே மாட்டீங்களா?” அவள் கோபமாக கேட்க, “எப்படி விட முடியும்?” அவன் கேட்டான்.

அங்கு அமைதி. மயான அமைதி.

“இப்ப எங்க போறோம்?” அவளே அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தாள்.

“குற்றாலம், தேவராஜ் மனைவியை பார்க்க” அவன் கூற, “இப்ப நம்மளை தொடர்ந்து வர்றது…” அவள் கேள்வியை முடிக்குமுன், “நிச்சயமா தேவராஜ் ஆளுங்க இல்லை” அவன் பதிலோடு அவளை இடைமறித்தான்.

“அவன் நமக்கு இடைஞ்சல் கொடுத்தான். கொடுப்பான். ஆனால், கொலை செய்யவெல்லாம் துணிய மாட்டான். என்ன தான் இருந்தாலும் குடும்பம் குட்டின்னு இருக்கிற போலீஸ்காரன் தானே. அவன் வெறும் அம்பு தான். அவனுக்கு உன்னையும் என்னையும் அவமானப்படுத்தனும் அவ்வளவு தான். அது நிறைவேறிடுச்சு. நம்மளை கொலை செய்யற வெறி அவனுக்கு கிடையாது” கெளதம் சாலையில் கவனத்தை செலுத்தியபடி கூறினான்.

“அப்ப, அது யாரு?” என்று கேட்டாள் மதுமதி.  “தெரியலை, அதை கண்டுபிடிக்கத்தான் இங்க வந்தோம். நமக்கு இருக்கிற துருப்பு சீட்டு, தேவராஜ் மனைவி. அவங்களை வைத்துதான் காய் நகர்த்தனும். நாம அங்க போறது யாருக்கும் தெரிய கூடாது. அதுக்கு தான் இவ்வளவு வேலை பார்க்குறேன்.” அவன் கூற, அவள் எதுவும் பேசவில்லை.

விரைந்து சென்ற அந்த கார் பயணம், மலைப்பாதையை தாண்டி குற்றாலத்திற்குள் சென்று அங்கிருந்த வீட்டின் முன் நின்றது.

“வாங்க அட்வகேட் சார்” என்று இன்முகமாக வரவேற்றாள் தேவராஜின் மனைவி சரண்யா. “நான் உங்க உதவியை வேண்டி வந்திருக்கேன்” என்றான் கெளதம் நேரடியாக விஷயத்திற்கு வந்தபடி. “அட்வகேட் சார் காரியமில்லாமல் வர மாட்டார்ன்னு எனக்கு தெரியும். நீங்க ஏற்கனவே சொன்னதால், வேலைகாரங்க கூட யாரும் வீட்டில் இல்லை. எல்லாரையும் அனுப்பிட்டேன்.” என்று கூறிவிட்டு, வெட்டி வைத்திருந்த நுங்கை எடுத்து வைத்தாள்.

“தேவராஜ் மூலமா எங்களுக்கு கொஞ்சம் பிரச்சனை. ஆனால், அது யாருனு எங்களுக்கு தெரியலை. நீங்க, கண்டுபிடிக்க முடியும். தேவராஜ் கூட…” கௌதமின் பேச்சை இடைமறித்தாள் சரண்யா. “என்னால், அவர் கூட வாழவே முடியாது” சரண்யா பட்டென்று கூறினாள்.

நடப்பவற்றை அவன் அருகே அமர்ந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமதி.

“உங்களுக்காக இல்லைனாலும், எங்களுக்கு ஓர் உதவி. இப்ப என் மனைவி மேல இருக்கிற கேஸை நான் சரிபண்ணிடுவேன். ஆனால், யாருனு தெரிஞ்சா தான் நான் முழுசா எல்லாத்தையும் சரி செய்ய முடியும்” என்றான் கெளதம்.

அவன் அவள் மீது காட்டிய பாசம், அவர்கள் அருகாமை இதெயெல்லாம் கவனித்த சரண்யா, “நீங்க ரெண்டு பேரும் டைவேர்ஸ் பண்ண போறீங்கன்னு கேள்விப்பட்டேன்” கேலியாக கேட்க, “மீடியா ஆயிரம் சொல்லும், போலீஸ்காரன் மனைவி உங்களுக்கு தெரியாததா?” என்று சோபாவில் சாய்ந்து கெளதம் சிரிக்க, “அது சரி, கௌதமை விட்டு எந்த பெண்ணாவது போவாளா? நியூஸ் பொய்ன்னு நான் நினைத்தது சரி தான்” என்று சரண்யா அவர்களை பார்த்து சிரித்தாள்.

“நாங்க சொல்ல வந்த விஷயம்…” கெளதம் அதிலே குறியாக நிற்க, “நான் யோசிக்கணும்… அதுமட்டுமில்லாமல், நான் ஏன் உங்களுக்கு உதவி செய்யணும்?” சரண்யா கேள்வியாக நிறுத்த, பன்மையிலிருந்து ஒருமைக்கு மாறினான் கெளதம்.

“சரண்யா, நான் தேவராஜ் மனைவிக்கிட இப்ப பேசலை. என் தோழி சரண்யா கிட்ட உதவி கேட்டு வந்திருக்கேன். நாம, ஒண்ணா படிச்ச காலத்தில் என் தோழி நான் கேட்டு மறுக்கமாட்டா. என் வாழ்க்கை உன் கையில் இருக்கு” அவன் கூற, “இப்படி முதலிலேயே கேட்டிருக்கலாமில்லை?” தோழியாய் அவள் சண்டைக்கு நின்றாள். “நான் சொல்ல வந்த விஷயம்…” அவன் தொடங்க, “கௌதம்…” அவள் தடுமாறினாள்.

“உனக்கு தேவராஜ் பத்தி தெரியும் தானே? அவர் செய்தது…” அவளை இடைமறித்தான் கெளதம். “நிச்சயம் மன்னிக்க முடியாதா தப்பெல்லாம் இல்லை. தேவராஜ் அவ்வளவு மோசமானவனும் கிடையாது. நீ தேவராஜை மன்னித்து கூட சேர்ந்து வாழலாம். தேவ்ராஜ்க்கு உன் மேலையும், குழந்தைங்க மேலையும் அவ்வளவு பாசம் உண்டு. அது எல்லாவற்றையும் சரி செய்யும்” கெளதம் பேச, சரண்யா எதுவும் பேசவில்லை.

கெளதம் மேலும் பேசத் தொடங்க, “நீ எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம். அதை கேட்க சகிக்கலை. நான் எனக்காக போகலை. உனக்காக போறேன். என்ன விஷயமுன்னு கண்டுபிடித்து சொல்றேன்” அவள் கோபமாக கூற, கெளதம் சிரித்துக் கொண்டான்.

“நாங்க கிளம்பறோம்” அவன் கூற, “என்ன அதுக்குள்ள, இங்க தங்கிட்டு போகலாமே?” அவள் கூற, “வேண்டாம் சரண்யா. நாங்க இங்க வந்தது யாருக்கும் தெரிய வேண்டாம். நான் இங்க இருக்கிற காட்டேஜில் தங்கிக்கறேன்” அவன் கூற, “அதுவும் சரி தான்” என்று சரண்யா கூறினாள்.

“நீ…” கெளதம் ஆரம்பிக்க, “நான் இன்னைக்கே கிளம்பிடுறன். அவருக்கு சந்தேகம் வராத மாதிரி கிளம்புறேன். அவர் என்னை கூப்பிட்டுக்கிட்டே தான் இருக்கார். அதனால், எந்த பிரச்சனையுமில்லை” என்று சரண்யா கூற, வந்த காரியம் முடிந்த திருப்தியில் கெளதம் அங்கிருந்து கிளம்பினான்.

அவர்கள் காரில் செல்ல, “என்ன வந்த இடத்தில, அப்படியே உங்க பிரெண்டுக்கு நல்லது பண்ற மாதிரி சேர்த்து வைக்க முயற்சி செய்த மாதிரி இருந்துச்சு?” மதுமதி கேட்க, “ஊருக்கு புண்ணியம் பண்ணினா, நமக்கு ஏதாவது நல்லது நடத்துக்குமான்னு பார்க்குறேன்” என்று சிரித்தான்.

அவன் சிரிப்பில், பெருமையில்லாத அவன் பேச்சில் அவன் குணத்தில் அவனை தன்னை மறந்து பார்த்தாள் மதுமதி. ‘கௌதமை விட்டு எந்த பெண்ணாவது போவாளா?’ சரண்யா சொன்னது நினைவில் வர, அவள் தடுமாறிப்போனாள்.

“உங்களை பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஒரு பெண் போக கூடாதா?” மதுமதி ஆழமான குரலில் கேட்க, அவன் அதற்கும் சிரித்தான். “யாருவேணுமினாலும் போகலாம். ஆனால், என் மதுமதி போக கூடாது. போகவும் விடமாட்டேன்” அவன் புன்னகையிலும் அழுத்தமிருக்க அவர்கள் தங்கவந்த காட்டேஜ் இருந்தது.

“அது தான் வந்த வேலை முடிச்சிருச்சுல இங்கிருந்து போக வேண்டியது தானே?” என்று மதுமதி கேட்க, “நான் நினைத்து வந்த வேலை முடிச்சிருச்சு. ஆனால், நம்மளை தேடி வந்த வேலை முடியலை. வா, ரெப்பிரேஷ் ஆகிட்டு கிளம்புவோம்” என்று கூறி உள்ளே சென்றான்.

உள்ளே சென்ற சில நிமிடங்களில் அவர்கள் கிளம்ப, யோசித்தவன் போல் அவள் பக்கம் திரும்பினான். “இது வேண்டாம் மது. லெகிங்ஸ் டாப்ஸ் போட்டுக்கோ” என்றான்.

“உங்க ரசனைக்கேத்த மாதிரி எல்லாம் நான் டிரஸ் பண்ணிக்க முடியாது” அவள் அவன் முன் வெடவெடப்போடு நிற்க, அவள் அவன் தோள் மீது இருகைகளையும் வைத்தான். அவன் விழிகள், அவளை ஆழமாக பார்க்க, அவன் ஆள் கட்டி விரல், அவள் நெற்றி குங்குமத்தை உரிமையோடு தீண்டியது.

அவன் பார்வை அவள் முகவடிவை ரசித்து அவள் கழுத்தின் பக்கம் இறங்கியது. அவள் விலக எத்தனிக்க, அவன் பிடி அவளை அழுத்தியது. அவன் பார்வை அவளை அளவிட்டபடி அவள் அங்கவடிவை ரசிக்க, “என்ன பண்ணறீங்க?” அவள் பற்களை நறநறத்தாள்.

“என் ரசனையை பத்தி ஆராய்ச்சி பண்ணறேன்” அவன் கூற, “என்ன நக்கலா?” என்று அவள் கேட்க, “நீ தான் மதும்மா நக்கல் பண்ற. உன் வசதிக்காக லெக்கிங்ஸ் போடுன்னு சொன்னா, ரசனையா என்னை பாருன்னு சொன்னது நீ தானே?” என்றான் அவன்.

“நான் அப்படி சொல்லலை” அவள் ஆரம்பிக்க, “அப்ப எப்படி சொன்ன?” அவன் ஆர்வமாக கேட்க, “நான் டிரஸ் மாத்திட்டு வரேன்” அவள் பட்டென்று பெட்டியை திறந்து லெக்கின்ஸ் எடுத்தாள். “என்னோடது எல்லாம் சரியா எடுத்து வச்சிருக்காங்க” முணுமுணுத்தபடி உடை மாற்றிக்கொண்டு வந்தாள்.

ஏதோ எல்லா இடமும் தெரிந்தவன் போல், மலை மேல் ஒற்றையடி பாதையில் ஏறினான். அவளும் பின் தொடர, அங்கு ஒரு பாழடைந்த வீடு இருந்தது. அங்கு மதுமதி எட்டிப்பார்க்க, அவள் அதிர்ந்து நின்றாள். முன்னே சென்ற கணவனின் கைகளை எட்டி பிடித்தாள்.

“அந்த பொண்ணு… அந்த பொண்ணு…” அவள் கூற, அவன் அவள் வாயை மூடினான். “ஏய் தொரத்துங்கடா அவங்களை…” ஒருவன் அலற, இருவரும் ஓட்டம் பிடித்தனர். மதுமதியின் கைகளை பிடித்துக்கொண்டு அவன் வேகவேகமாக ஓட, சில நொடிகளில் மதுமதி வீலென்று அலற, அங்கு கத்தி பாய்ந்து இரத்தம் தெறித்தது.

மது… மதி! வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!