Mathu…Mathi! – 13

mathu...mathi!_Coverpic-7fd2fc87

Mathu…Mathi! – 13

மது…மதி! – 13

மதுமதி அவள் மனதில் தோன்றிய காட்சியை மறக்கவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் இரக்கம் காட்டவும் மனமில்லாமல் இறுகி நின்றாள்.

‘என் கிட்ட சொன்னால் என்ன?’ கெளதம் அவளை ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தான்.  “மதும்மா…” அவன் அவளருகே செல்ல, “கிளம்பலாம்ங்க” அவள் அவனை தூர நிறுத்தினாள்.

கெளதம் தலையசைத்து கொண்டான். எதுவும் பேசவில்லை. காரை மருத்துவமனை வாயிலில் நிறுத்தி, அவளை தூக்கி சென்று பின் பக்க சீட்டில் அமரவைத்தான். “வேண்டாம்…” என்ற அவள் மறுப்பு மதிப்பிலாமலே செயலிழந்து போனது.

அவள் கால் நீட்டுவதற்கு ஏதுவாக, குட்டி குட்டி தலையணைகளை வைத்தான். அதன் பின் அவன் காரை செலுத்த, அவள் கண்மூடி தூங்க முயன்றாள். அவன் கரிசனத்தில் அவள் கண்கள் கலங்கியது.

“எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு மதும்மா. கோர்ட்ல கேஸ் விஷயம் எல்லாம் க்ளியர். ஆனால், இதை செய்தது யாருன்னு தான் பார்க்கணும். தேவராஜ்ஜை வைத்து தான் நாம அதை பண்ணனும். இனி இந்த மாதிரி ஒரு விஷயம் நடக்கவே கூடாது.” அவன் வண்டியை ஓட்டிக்கொண்டே  பேச, அவள் “ம்…” கொட்டினாள்.

‘அடுத்து என்ன?’ என்ற கேள்வி அவள் மனதில். அப்படியொரு கேள்வியெல்லாம், அவன் மனதில் இல்லை. அவன் தெளிவாக இருந்தான். “எங்க போறோம்?” அவள் சுருக்கமாக கேட்க, “நம்ம வீட்டுக்கு…” அவன் அழுத்தமாக கூறினான். அவள் பேச ஆரம்பிக்க, “நீ எதுவும் சொல்ல வேண்டாம் மதும்மா. அதை கேட்க நான் தயாராயில்லை” அவன் முடித்துவிட, அவள் எதுவும் பேசாமல் கண்ணுறங்க முயன்றாள்.

அவள் எண்ணங்கள், ‘நம் வீட்டுக்கு…’ என்ற அவன் சொல்லை சுற்றியே வந்தது. அவள் எண்ணங்கள் அவன் வீடு அவன் உறவினர்கள் அவன் சொல் என்று பின்னோக்கி சென்றது.

****

அவள் திருமணம் முடிந்தன்று.

அனைவர் முன்னும் பல விதமான உணவு வகைகள். நெல்லையப்பர் கோவிலில்,  கெளதம் மதுமதி திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. அருகே இருந்த ஹாலில் அனைவருக்கும் பஃபெ முறையில் உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

சக்கர நாற்காலியில் இருக்கும் கெளதம் சாப்பிடுவதற்கு ஏதுவாக ஒரு மேஜை ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அவனுக்கு உதவியாக அவளும் அருகே அமர்ந்திருந்தாள். அவன் பார்வை அவளை வட்டமடித்தது. அவள் பார்வையோ, சுற்றி இருந்த அனைவரையும் கணக்கிட்டு கொண்டு இருந்தது.

‘எல்லார் ட்ரெஸ்ஸும் பயங்கரமா இருக்கே. ரொம்ப பணக்காரங்க போல?’ மதுமதி சிந்திக்க அவள் எண்ண ஓட்டத்திற்கு தடா விதித்தது அவன் குரல்.

“சாப்பிடு மது…” அவன் குரல் தேனினும் இனிதாக ஒலித்தது. “நீங்க சாப்பிடுங்க” அவள் அவனை உண்ண சொல்ல, “நான் உன்னை சாப்பிட சொல்ல கூடாதா?” என்று மென்னகையோடு புருவங்களை உயர்த்தினான். 

“நான் அப்படி சொல்லலியே!” அவள் இமைகள் படபடத்தது.

அவள் படபடப்பு, அவனுக்கு இன்னும் ரசனையை கொடுக்க, “எதுக்கு இந்த படபடப்பு மது?” அவன் கண்களில் புது மாப்பிள்ளையின் ஆர்வம்.

“…” அவள் முகத்தில் புதுப்பெண்ணின் நாணம் மட்டுமே!

“நீ பல இடங்களில் படபடன்னு பேசி நான் பார்த்திருக்கிறேன்” அவன் கூற, திருமணம் முடிந்த கையோடு, அவன் உரிமை பேச்சில் தெரிவதை அவள் மனம் உள்வாங்கி கொண்டது.

“என்னை எங்க  பார்த்தீங்க?” அவள் புருவம் உயர்த்த, “அது எதுக்கு இப்ப? நீ சாப்பிடு. காலையிலிருந்து கல்யாண படபடப்பில் ஒண்ணுமே சாப்பிட்டிருக்க மாட்ட” அவன் அக்கறையோடு கூற, “எனக்கு இத்தனை வகையை பார்த்ததும், பசியே பறந்து போச்சு” அவள் வெகுளித்தனத்தோடு கூறினாள்.

“இதுக்கு தான் ஸ்டேட்டஸ் பார்த்து கல்யாணம் செய்யணும். இப்படி ஒன்னும் இல்லாத வீட்டில் பொண்ணு எடுத்தா, இப்படி தான் ஆகும்” உறவினர் பக்கம் ஒரு குரல் வர, கெளதம் கடுங்கோபமாக திரும்பி பார்த்தான்.

மதுமதி முகத்தில் மெல்லிய புன்னகை. அவன் கைகள் இறுக, பற்களை நறநறக்க, “இப்ப எதுக்கு இப்படி கோபப்படுத்தீங்க?” மதுமதி நிதானமாக கேட்டாள்.

“உனக்கு கோபம் வரலியா?” அவன் அவளை பார்த்து ஆச்சரியமாக கேட்க, “இல்லை…” அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“அவங்களை பார்த்தா தான் பாவமா இருக்கு. அந்த காலத்துல இருக்காங்க. இந்த மாதிரி பேசுறதெல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி படத்துல தான் வரும். வெரி ஓல்ட் ஸ்டைல்… அவங்க கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணிருக்கலாம்” மதுமதி கண்களை விரிக்க, அவன் முகத்தில் கொஞ்சம் தெளிவு.

அவன் நிதானத்திற்கு வந்ததும், “அவங்களும் பொய் சொல்லலியே. அவங்க சொல்றதும் கொஞ்சம் உண்மை தான். நான் இவ்வளவு விதவிதமா உணவை எல்லாம் பார்த்ததில்லை. பார்த்ததுமே எனக்கு வயிறு ஃபில் ஆன மாதிரி தான் இருந்தது.” மதுமதி கூற, அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

அவள் கை மேல் தன் கையை வைத்தான் கௌதம். “நாளைக்கே நம்ம வீட்டுக்கு போயிடுவோம். உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. உன் சந்தோசம் மொத்தமும் என் பொறுப்பு.” அவன் கூற, அவள் புன்னகைத்து கொண்டாள்.

‘எல்லாத்தையும் இந்த புன்னகையால் மட்டும்தான் சமாளிப்பாள் போல…’ சிந்தித்தபடியே பேச்சை மாற்றினான்.

“கோவில் பத்தி நிறைய விஷயம் சொல்றேன்னு சொன்ன, எதுமே சொல்லலியே?” அவன் உணவை ருசித்து கொண்டே அவள் கவனத்தை முழுதும் ஆக்கிரமிக்க,  “நீங்க தான் தாலி கட்டின கையோட என்னை இங்க  கூட்டிட்டு வந்துடீகளே?” மதுமதி, உணவை குற்றம் போல் காட்டி கூற, அவன் பக்கென்று சிரித்துவிட்டான்.

“காந்திமதி அம்மாள் பத்தி மட்டுமில்லை. எங்க ஊரு பத்தி கூட நிறைய சொல்லுவேன். மலையும் சரி கடலும் சரி ஆறும் சரி காடும் சரி எல்லாம் சூழ்ந்த ஒரே இடம் எங்க ஊரு திருநெல்வேலி மட்டுந்தான் தெரியுமா?” மதுமதி பெருமையாக கேட்டாள்.

“எப்படி பக்கத்து டிஸ்ட்ரிக்ட் எல்லாம் காசு கொடுத்து விலைக்கு வாங்கிட்டிங்களா?” அவன் கேலி போல கேட்க, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

“எனக்கு சென்னை தான், வேலை விஷயமா திருநெல்வேலி பக்கம் வந்திருக்கேன். ஆனால், நீ ஊர் பெருமை ரொம்ப பேசுற மாதிரி இருக்கே” என்று கூறி அவன் “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான்.

“ரொம்ப சிரிக்க வேண்டாம்… எங்க ஊர் பெருமை எல்லாம் பல காலம் முன்னமே சொல்லிருக்காக” மதுமதி தலையை சிலுப்பி கொண்டாள்.

“அது எங்க?” அவன் ஆர்வமாக கேட்டான்.

“வல்அமணர் தமைவாதில்

  வென்றதுவும் வழுதிபால்

புல்லியகூன் நிமிர்த்ததுவும்

  தண்பொருந்தப் புனல்நாட்டில்

எல்லையிலாத் திருநீறு

  வளர்த்ததுவும் இருந்தவத்தோர்

சொல்லஅது கேட்டுவந்தார்

  தூயபுகழ் வாகீசர்”

இந்த பாட்டில் சேக்கிழார் சொல்லிருக்கிற இடம் திருநெல்வேலி தான் தெரியுமா?” அவள் கேட்க, அவன் அவள் அறிவை பிரமித்து பார்த்தான்.

“இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.” அவள் கூற, “இல்லை மதி, இந்த ஒண்ணே போதும்” அவன் தோல்வியை ஒத்து கொள்பவன் போல கைகளை உயர்த்தி சிரித்தான்.

முத்து பற்கள் தெரிய அவன் சிரித்ததில் அவள் மயங்கி நின்றாள்.  அவன் ஒற்றை புருவம் உயர்த்த, ‘ஐயோ… கண்டுகொண்டாங்களே என்னை…’ மதுமதி, சட்டென்று பேச்சை மாற்றினாள்.

“நான் உங்களுக்கு சுத்தி காட்டுறேன் எங்க ஊரை, அப்ப தான் நீங்க நம்புவீங்க” அவள் சாதுரியமாக பேச்சை மாற்றி கண்களை உருட்டினாள்.

“என் கால் சரியானவுடன், நாம் முதலில் உங்க ஊரை தான் சுத்தி பார்க்குறோம்” அவன் கூற அவள் தலை அசைத்தாள்.

*** ****

“நீ உங்க ஊரை பத்தி பெருமை பேசுறதை கேட்டுகிட்டே ஊரை சுத்தணும் மதும்மா” அவன் பேச்சில் நனவுலகத்திற்கு திரும்பினாள் மதுமதி.

“நம்ம கல்யாணம் முடிந்தப்ப எனக்கு உடம்பு சரியில்லை. இப்ப உனக்கு உடம்பு சரியில்லை” என்று அவன் கூற, அவள் மீண்டும், “ம்…” கொட்டினாள்.

“எல்லாம் சரியாகிரும் மதும்மா” என்றான் அவளை சமாதானம் செய்யும் விதமாக. “ஹ்ம்…” அவள் மெல்ல சிரித்தாள்.

“என்ன சிரிப்பு?” அவன் கேட்க, “நமக்குள்ள எல்லாம் சரியாகிருமுன்னு நினைக்குறீங்களா?” அவள் கேட்க, “நமக்குள்ள என்ன பிரச்சனை சரியாகுறளவுக்கு?” அவன் அவளை கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டே  கேட்க, அவள் அவனை கண்ணாடி வழியாக முறைத்தாள்.

“சிறுபிள்ளை தனமா, பிரிவோம் டைவர்ஸ் அப்படின்னு சொல்றது நீ. அப்படி எல்லாம் விவாகரத்து பண்ண எதுக்கு ஊரை கூட்டி கல்யாணம் பண்ணனும்?” அவன் கேட்க, அவள் பதில் பேசவில்லை.

“உனக்கு என்னை பிடிக்கலைன்னு ஒரு வார்த்தை சொல்லு மதும்மா. நான் உன்னை சந்தோஷமா வச்சிக்கலைனு சொல்லு மதும்மா. நான் விலகிடுறேன்” அவன் குரலில்  சொல்லில் வடிக்க முடியாத உணர்வுகள் இருக்க, அவள் மௌனித்தாள். “பதில் சொல்லு மது” அவள் கட்டளையிட்டான்.

“எனக்கு உங்களை… எனக்கு உங்களை…” அவள் வார்த்தைகளை மென்று விழுங்கினாள். “சொல்லுன்னு சொல்றேன்” அவன் காரை வேகமாக அழுத்தி, கோபமாக கூற, “எனக்கு உங்களை பிடிக்கும்… பிடிக்கும்…பிடிக்கும்…” அவனை விட அவள் கோபமாக கூற, அவன் கோபமும் மட்டுப்பட்டது. காரின் வேகமும் மட்டுப்பட்டது.

“நீங்க என்னை சந்தோஷமா தான் வச்சிருந்தீங்க. ஆனால், நான் சந்தோஷமா இல்லை. உங்களை பிடிக்கும். ஆனால், உங்க பழக்கவழக்கம் பிடிக்கலை.” அவள் கறாராக கூற, அவனிடம் மௌனம்.

“ஏன் பேசாம இருக்கீங்க? உங்க பழக்க வழக்கத்தை உங்களால் மாத்திக்க முடியுமா?” அவள் நிறுத்த அங்கு மீண்டும் மௌனம். “நம்ம கல்யாணம் முடிந்தனைக்கு நீங்க சொன்னது நிஜம் தான். எல்லாம் நான் பார்த்துக்கறேன்னு சொன்னீங்க. செஞ்சீங்க, நான் இல்லைனு சொல்லலை. உங்க வீட்டு ஆளுங்க  என்னை எதுவும் சொல்ல முடியாதபடி பார்த்துக்கிட்டிங்க. ஆனால், உங்க பழக்க வழக்கத்தை நீங்க எனக்காக மாத்திக்கவே இல்லையே” அவள் வருத்தமான குரலில் கூற,

“லைப் இஸ் நாட் எ டீல் மதும்மா. இட்’ஸ் லவ்” என்றான் அவன். “நான் பேசி முடிக்கலை” என்றாள் அவள் அவன் சொன்ன சொல்லுக்கு சம்பந்தமில்லாமல்.

“உங்களுக்கும் எனக்கும் பிரச்சனை வந்தபிறகு, உங்க வீட்டு ஆளுங்க என்னை பேசினப்ப நீங்க மௌனமா தான் இருந்தீங்க” அவள் கூற, “அதுக்கு இடம் கொடுத்தது நீ தான் மதும்மா. நீ செய்ததெல்லாம் சரியா?” என்று அவன் கேட்க, “நான் செய்த, செய்ற, செய்யப்போற எல்லாம் சரி” அவள் ஆணித்தரமாக கூற, அவனுக்கு கோபம் வராமல் ஏனோ மென்னகை வந்தது.

அதை மறைத்துக் கொண்டான். “சரி, மதுமதி. எல்லாம் பேசி சரி பண்ணுவோம். கால் சரியாகுற வரைக்கும் நீ நம்ம வீட்டில் இரு. அப்புறம் பார்த்துக்கலாம்” அவன் கூற, மேலும் பேசி பயனில்லை என்ற எண்ணம் தோன்ற, அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அதே நேரம், தேவராஜ்  வீட்டின் கதவு தட்டப்பட்டது.

“சரண்யா” என்றான் தேவராஜ் ஆர்வமாக. அவள் எதுவும் பேசவில்லை. அவன் காக்கி உடையில் இருந்தான். அவன் கண்கள் அவள் பின்னே தேடியது. “குழந்தைகளை கூட்டிகிட்டு வரலையா?” அவன் ஏமாற்றமாக கேட்டான்.

“நீங்க இந்த காக்கி சட்டைக்கு உண்மையா இருந்தா கூட்டிகிட்டு வரேன்” அவள் அமர்த்தலாக கூறினாள். “சரண்யா” அவன் தயங்கி நின்றான். “நீங்க செய்யற எல்லா வேலையும் எனக்கு தெரியும்” அவள் கூற, அவன் மெளனமாக நின்றான்.

“உன் நண்பனோட மனைவி கேஸ் முடிச்சிருச்சு” அவன் தன் மனைவியை ஆழம் பார்க்க முனைந்தான். “அதை பத்தி எனக்கென கவலை” அவள் கூற, அவன் அவளை நெருங்கினான். அவள் பின்னே செல்ல செல்ல அவள் சுவர் மீது மோதி நின்றாள்.

“உனக்கு அதை பத்தி கவலை இல்லை?” அவன் அழுத்தமாக கேட்க, “இல்லை…” அவள் எங்கோ பார்த்தபடி மறுப்பாக தலை அசைத்தாள். அவன் விரல் தன் மனைவியின் முகத்தை ஏந்தி, தன் முகத்தை பார்க்க செய்தது. தன் மனைவியின் முகத்தை பார்த்தான். “சரண்யா, உன்னை அந்த கெளதம் பார்க்க வந்த விஷயம் எனக்கு தெரியும். நீ இல்லைனு சொல்லி என்னை காயப்படுத்திராத” அவன் ஆழமாக கூற, “நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே. அவன், மதுமதி விஷயமா அங்கு வந்திருந்தான். ஆனால், அப்படியே நம்ம வீட்டுக்கு வந்து, என்னை உங்க கூட சேர்ந்து வாழச் சொன்னான்.” அவள் கூற,

“அதனால் தான் வந்தியா?” தேவராஜ் சற்று வருத்தமாக கேட்க, சரண்யா மறுப்பாக தலையசைத்தாள். “உங்களை மன்னிக்க சொன்னான். நீங்க பெரிய தப்பெல்லாம் செய்யலை. நீங்க வெறும் அம்பு தான் எல்லா இடத்திலையும்ன்னு சொன்னான். அவன் சொல்றதில் நியாயம் இருக்கானு பார்க்க வந்தேன்” அவள் நேரடியாக கூற, தேவராஜின் கண்கள் சுருங்கியது.

“நீ எதுக்கு வந்திருந்தாலும் சரி. நீ வந்ததே எனக்கு மகிழ்ச்சி தான்” அவன் வெளியே கிளம்பி செல்ல, சரண்யா வீட்டை சோதனையிட ஆரம்பித்தாள்.

அப்பொழுது அவள் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்து அவள் அறிந்து கொண்ட விஷயத்தில் அதிர்ந்து நின்றாள்.

மது… மதி! வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!