mathu...mathi!_Coverpic-6b5e794e

Mathu…Mathi!-16

மது…மதி! – 16

   சிலிட்ட உடலை சரிசெய்ய மதுமதி முயற்சித்தாலும், இறந்த பூனையை பார்க்கும் பொழுது  மதுமதிக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது. ‘இங்க என்ன நடக்குது?’ அவளுள் கேள்வி எழும்பியது.

‘ரம்யா தான் நான் குடிக்க கொண்டு வந்தா. ரம்யா அப்படிப்பட்ட பொண்ணு இல்லை. அப்படியே இதை ரம்யா பண்ணிருந்தாலும், இப்படி அப்பட்டமா கொண்டு வந்து கொடுக்க மாட்டா’ அவள் தலை விண்வினென்று வலிக்க, மெத்தை மீது சோர்வாக அமர்ந்தாள்.

‘ஒருவேளை ரம்யாவின் அம்மா?’ அவளுள் சந்தேகம் கிளம்ப, “அப்படினாலும் பொண்ணு கிட்டயேவா கொடுத்துவிடுவாங்க? இல்லை ரம்யா, தெரியாமல் கொண்டு வந்து கொடுத்திருப்பாளோ?” மதுமதியின் இதழ்கள் முணுமுணுத்தது.

‘என்னை கொலை செய்ய கூட துணிவாங்களா? ஒரே குழப்பமா இருக்கே.’ அவள் சில நிமிடங்கள் கழித்து அவள் ஜன்னல் அருகே சென்று வெளியே பார்க்க, அங்கு அந்த இறந்த பூனை இல்லை.

‘ஒருவேளை அந்த பூனை குட்டி சாகவில்லையோ? ஓடி இருக்குமோ?’ அவளுள் சந்தேகம் கிளம்பியது. ‘இல்லை, விழுந்து சில நிமிடங்கள் நான் பார்த்திட்டு தான் இருந்தேன். அந்த பூனை ஓடவில்லை. நான் ஜன்னலிலிருந்து மறைந்த பின் தான், யாரோ அந்த இடத்தை சுத்தம் செய்திருக்க வேண்டும்.’ அறைக்குள் அடைந்து கொண்டு, சிந்தனையில் இருந்தாள்.

நேரம் இரவை எட்டியது. மதுமதிக்கு பசி வயிற்றை கிள்ளியது. அவள் அறைக்கு சாப்பாடு வந்திருந்தாலும், அதை உண்ண அவளுக்கு பயமாக இருந்தது. ‘அவங்க இருந்தா கூட சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். எந்த தப்பும் நடக்காது. இப்படி எனக்கு தனியா வர்ற சாப்பாட்டை எப்படி சாப்பிடறது?’ அவள் முகத்தை சுளித்தாள்.

அவர்கள் அறையிலிருந்த தண்ணீரை, மட்டுமே நம்பி குடித்தாள். அந்த தண்ணீர் கெளதம் கொண்டு வைத்து கொடுத்தது. அதுவும் இப்பொழுது காலியாகிருந்தது. பசியில், மெல்லிய பயத்தில்,தனிமையில் கண்களில் கண்ணீர் மல்க, மெத்தையில் சரிந்து படுத்தாள்.

அதே நேரம், மதுமதியின் கேஸ் விஷயமாக பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருந்தான் கெளதம். ‘இதை யார் செய்கிறார்கள்?’ என்ற கேள்வி அவனுள் கனன்று எழ, அவன் இதுவரை தான் வாதாடிய பிரச்சனைக்குரிய வழக்குகளைப் பார்த்தான். அதில் உருவாகியிருக்க கூடிய எதிரிகளின் கணக்கை எடுத்துக்கொண்டான். ஒவ்வொருவரையும், ஒவ்வொரு விதமாக கண்காணிக்க ஏற்பாடு செய்தான்.

அன்றிரவு, அரசியல்வாதிகள் சந்திக்கும் பிசினெஸ் மீட் இருக்க, தானும் அங்கு சென்றான். அவன் தான் சந்தேகிக்கும் நபர்களை எல்லாம் நேரடியாக சந்திக்க விரும்புவினான். அவர்களிடம் பேச்சை வளர்க்க விழைந்தான்.  அவன் நண்பரகள் குழாமும் அங்கிருக்க, அவனுக்கு அங்கு செல்ல வசதியாக இருந்தது.

 “ஹை கெளதம்” என்று அவனை தோள் தட்டி வரவேற்றார்கள். அங்கு, தேவராஜ் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். அவன் பார்வை இவனை வட்டமடித்தது. இவன் பார்வை அவனை கூர்மையாக நோக்கியது. “எ ஸிப்” என்று அவன் நண்பன் மது கிண்ணத்தில் மதுவை ஊற்ற முயல, மறுப்பாக தலை அசைத்தான் கெளதம்.

அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே போனது. கௌதமிற்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. “கெளதம், கொஞ்சம் ட்ரிங்க்ஸ் பண்றத்தில் என்ன ஆக போகுது?” அவன் நண்பன் கேட்க, கௌதமிற்கு அவன் நண்பன் சொல்வது சரியென்றே பட்டது.

கண்ணாடி கோப்பையை கையிலெடுத்தான். அந்த கோப்பை அவன் இதழருகே செல்ல,  அவனுக்கு மதுமதியின் முகம் நினைவுக்கு வந்தது. ‘மதுமதிக்கு பிடிக்காது. இந்த மதுவால் பல பிரச்சனைகள்’ அவன் மனமும் அறிவும் ஒரு சேர கூறியது.

‘மதுமதி என்னை விட்டுட்டு போன பிறகு நான் குடிக்கலை’ அவன் தன் நெஞ்சை நீவிக்கொண்டான்.  ‘அது தான் இப்ப மதுமதி வந்துடாள்ள? பேசி புரிய வைத்து விடலாம்’ அவன் அறிவு கூற, அவன் மனமும் அவன் அறிவின் வாதத்திற்கு ஒத்துழைத்தது.

மதுவின் அருகாமை அவனை மயக்கம் கொள்ள செய்ய, ‘மதுமதிக்கு பிடிக்காது. அவளா குடிக்க போறா? நான் தானே. மதுமதிக்கு பேசி புரிய வைத்துவிடலாம்’ அவன் சிந்தை அவனை சமாதானம் செய்ய, கெளதம் மிடறுகளாய் மதுவை அருந்த ஆரம்பித்தான்.

போதையோடு அவர்கள் பேச்சும் தொடர்ந்து கொண்டே போனது. கெளதம் நிதானம் தவறவில்லை. அவன் சிந்தை சுற்றி நடக்கும் விஷயத்தை கண்காணித்து கணித்துக் கொண்டே இருந்தது. மது மிடறுகளாய் அவனுள் இறங்கி கொண்டே இருந்தது.

மதுவின் போதையிலும் அவன் எண்ணம் முழுமையும் மதுமதியை சுற்றியே வந்தது. அவள் பாதுகாப்புக்கு தேவையான செய்திகளை சேகரித்துக்கொண்டே இருந்தான். நேரமும் நள்ளிரவை தொட ஆரம்பித்தது.

நேரம் செல்லச்செல்ல வீட்டில், மதுமதியின் பசி அதிகரித்துக்கொண்டே போனது. அவள் அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

பசி, இன்று நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட பயம், அடிபட்ட இடத்தில வலி  எல்லாம் சேர்ந்து அதீத நோவில் தன் கணவனுக்காக காத்திருந்தாள் மதுமதி.

கெளதம், தான் வர கொஞ்சம் நேரமாகும் என்று தகவல் கொடுத்திருக்க, மதுமதிக்கு அவள் இருக்கும் அவர்கள் அறைக்கு உணவை அனுப்பிவிட்டு, வீட்டில் அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு படுத்துவிட்டனர்.

கெளதம் வரும் ஓசை கேட்டது. கெளதம் கொஞ்சம் குடித்திருந்தான். நிதானம் எல்லாம் தவறவில்லை. அவனே வண்டியை ஒட்டிக்கொண்டு தெளிவாக வீட்டுக்கு வந்திருந்தான்.

கெளதம் அவர்கள் அறை நோக்கி வர, அப்பொழுது தான் உயிர் வந்தது போல் உணர்ந்தாள் மதுமதி. ‘தனியா கூட நிம்மதியா இருப்பேன். இந்த வீட்டில், அப்பப்பா…’ அவன் கதவை திறக்க, அவள் அவனை ஆசையாக, அவனே பிடிமானம் என்பது போல் பார்த்தாள்.

“மதும்மா…” அவன் அன்போடு, அவள் பக்கம் வர, அவள்  அவனை நோக்கி இறங்க எத்தனிக்க, அவன் வேகமாக சென்று அவள் கால்களை பற்றி, மெத்தையோடு அழுத்தினான்.  “நான் தான் வாரெனில்லை” அவன் குரலில் அக்கறையும் பாசமும் மட்டுமே குடி இருந்தது.

அவன் அக்கறையில் அவள் நெகிழ்ந்து போனாள். “ஏண்டா முகம் சோர்வா இருக்கு?” அவன் அவள் தலை கோத முயல, அவன் கைகள் சற்று நிதானம் தவறி, அவள் தேகத்தை பலவாறு தீண்டி அதன் பின் தலை கோதியது.

அவள் தன் பசியை மறந்தாள். அவள் சொல்ல வந்த பிரச்னையை பின் தள்ளினாள். “குடிச்சிருக்கீங்களா?” அவள் கண்களை சுருக்கி கேட்க, “ஜஸ்ட் காக்டெய்ல்” என்றான் மழுப்பலாக.

அவள் அவன் கைகளை சரேலென்று தட்டிவிட்டாள். “மதும்மா, நம்ம கேஸ் விஷயமா தான் பேச போனேன். அங்க எல்லாரையும் பார்க்கணும். அவங்க கூட பேசும் பொழுது சும்மாவே வா பேச முடியும். சில விஷயங்களை போட்டு வாங்க, நான் அவங்கலோடு சேர்ந்து ட்ரிங்க்ஸ் செய்து தான் ஆகணும்.” அவன் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கோடு கூறினான்.

“குடிகாரன் எல்லாருக்கும் ஒரு சாக்கு. ஒன்னு சோகம், இல்லை சந்தோசம். இப்ப புதுசா, என் பிசினெஸ் டீல் பேச குடிச்சேன். இல்லை, என் பாஸ் கிட்ட நெருங்கி பேச என்னால் ட்ரிங்க்ஸ் பண்ற டைமில் தான் ஃப்ரியா பேச முடியும். அப்ப தான் எனக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். இதெல்லாம் குடிகாரனுக்கு ஒரு சப்பைக்கட்டு” அவள் முகம் சுளிப்போடு அருவருப்பாக கூற,

“சும்மா சும்மா குடிகாரன் குடிகாரன்னு சொன்ன, அறைந்து பல்லை கழட்டிடுவேன்” அவன் அவள் கன்னத்தை பிடித்தான். “அடிங்களேன். என்னை அடிச்சி தான் பாருங்களேன். உங்க மேலையே கேஸ் போடுவேன். உங்களை காப்பாற்ற வேற லாயர் தான் வரணும்” அவள் முகம் திருப்ப அவன் சிரித்தான்.

“புருஷன் அடிச்சானு பொண்டாட்டி கேஸ் கொடுத்தா, பாதி புருஷன் ஜெயிலில் தான் இருக்கனும்.” வழமையாக அவன் அப்படி பேசுபவன் இல்லை. ஆனால், மதுவின் மயக்கத்தில், சற்று நிதானம் தவறிய நிலையில், அவள் காட்டிய விலகளில் நாட்டுநடப்பை எளிதாக எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கூறினான்.

“இது தான் நீங்க. குடிச்சா பேசுற நீங்க தான் நிஜம். இதைத்தான் நான் சொல்றேன். குடிச்சா பொண்டாட்டியை அடிக்கலாமுன்னு பேசுவீங்க. குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிற குடிகாரனுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?” அவள் காயத்தின் வலியால் நிற்க முடியாமல் நின்று காட்டுக்கத்தலாக கத்தினாள்.

“குடிச்சிட்டு வர்ற குடிகாரங்களுக்கும், சோசியல் ட்ரிங்கிங் பண்ற எனக்கும் என்ன வித்தியாசமுன்னு தானே கேட்குற. எத்தனை வித்தியாசம் வேணும்?” அவன் புருவம் உயர்த்தி, அவளை சுவரோடு சாய்த்தான்.

அவள் கால் வலியை மனதில் கொண்டு அவள் சுமையை அவன் தங்கினான். அவன் கைகளை அவள் தலை முடியின்  பின் பக்கம்  மென்மையாக பிடித்தான். “குடிகாரன் இப்படி பிடிக்க மாட்டான்” அவனின் தீண்டல் மென்மையாக மிக மென்மையாக உரிமையாக இருக்க, “முதல் வித்தியசாம்” என்றான் புன்னகையோடு.

அவன் கன்னத்தை அவள் கன்னம் அருகே கொண்டு வந்து, அவள் சுவாச காற்றை அனுபவித்தான். அவன் சுவாசத்தையும், அவன் காதலையும் உணர்த்தினான். அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்து, “குடிகாரன் காதல் பேச மாட்டான். அவன் கைகள் தான் பேசும். சோசியல் ட்ரிங்க்கிங் பண்றவன் காதல் பேசுவான். மனம் திறந்து காதல் பேசுவான்” அவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து கண் சிமிட்டி, “வித்தியாசம் இரண்டு” என்றான்.

அவள் எதுவோ, பேச எத்தனிக்க, அவன் அவள் இதழ்களை செயலிழக்க வைத்தான். இந்த சூழ்நிலையும், அவள் அவன் அருகாமையில் தன்னை இழக்க  ஆரம்பிக்க, அவள் கண்ணீர் முத்துக்கள் அவனை நனைக்க, அவன் முகத்தில் வெற்றி புன்னகை.

குடிகாரன் வெறுக்க வைப்பான். சோசியல் ட்ரிங்கிங் பண்றவன், தன் மனைவியை அப்பவும் காதலிப்பான் காதலிக்க வைப்பான். அவள் கண்ணீரை   தன் ஆள்காட்டி விரல்களால் தட்டி விட்டு, “வித்தியாசம் மூன்று” என்றான் பெருமித்ததோடு.

அவள் தேகம் வருடி, “இப்படி என்னால் ஆயிரம் வித்தியசாம் சொல்ல முடியும். ஆனால், நீ தாங்க மாட்ட. உன்னை வருத்தப்படுத்த கூடாதுன்னு தான் நான் அமைதியா இருக்கேன்.” அவன் கம்பிரமாக கூற, “ஆயிரம் ஒற்றுமை நான் சொல்லட்டுமா?” என்று வினவினாள் நக்கலாக.

அவன் அவளை கடுப்பாக பார்க்க, “எதை குடித்தாலும் குடிகாரன் தான். முதல் ஒற்றுமை” அவள் கூற, “பழைய கதை” அவன் சோபாவில் சாய்ந்து கால்களை அருகிலிருக்கும் நாற்காலியில் நீட்டி அவளை ஏளனமாக பார்த்தான்.

“இரண்டாவது ஒற்றுமை. போதை. குடிகாரனாலும் நிறுத்த முடியாது. உங்களாலும் நிறுத்த முடியாது. இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்தோம். இன்னைக்கே குடிச்சிட்டு வந்திருக்கீங்க. போதை, உங்க மூளை,இரத்தம், உடல் எல்லா இடத்திலும் ஏறின போதை” அவள் கூற, “லூசா நீ?” என்று அவன் கோபமாக கத்தினான்.

“நான் என்ன போதை தலைக்கு ஏறியா இன்னைக்கு போய் குடிச்சேன். ஆரம்பித்திலிருந்து இது தான் உன் கிட்ட பிரச்சனை. மரமண்டை… மரமண்டை…” அவன் பற்களை நறநறக்க, “நமக்கு ஒத்து வராதுன்னு நான் சொல்றேன். என்னை இங்க உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தது நீங்க” அவள் கூற,

“அதுக்கு நான் என்ன பண்ணனும்? நீ சொல்றதையெல்லாம் கேட்கணுமா? என்னால் முடியாது. ஆனால், உன்னை அப்படி எல்லாம் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது.” அவன் நிறுத்த, “நீங்க குடிகரதையும் நிறுத்த முடியாது. ஏன்னா, அது போதை. இரெண்டாவது ஒற்றுமை” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

“குடிகாரனாவது ஒரு விதத்தில் உசத்தி. தான் பண்றது தப்புனு அவனுக்கு தெரியும். இந்த சோசியல் ட்ரிங்கிங் பண்றவங்களுக்கு அது தப்புன்னே தெரியலை. என்னைக்கோ ஒரு நாள்ன்னு ஆரம்பிச்சு, மாசம் ஒரு நாளாகி, அப்புறம் வாரத்தில் ஒரு நாளாக்கி, அப்புறம் வெள்ளிக்கிழமையான குடிச்சே ஆகணும் அப்படிங்குற நிலைமைக்கு வந்திடறாங்க” அவள் பேச, அவனிடம் மௌனம்.

“கேட்டா, நான் பீர் தான் சாப்பிடுறேன். என் ஸ்கின் பளபளன்னு ஆகுமுன்னு கதை. நான் சாப்பிட்டுட்டு ஜிம்ல ஓடுவேன்னு சப்பைக்கட்டு. இரத்தத்தில் கலந்த குடி குடித்தான?” என்று அவள் நிறுத்த, அவனுக்கு கண்ணை கட்டியது.

“அப்புறம் ஜிமில் ஓடும் பொழுது திடீருன்னு ஹார்ட் அட்டாக். ஃபீட்டா தான் இருந்தார் எப்படி போனாருனு தெரியலைனு சொல்ல வேண்டியது” அவள் அடுக்கி கொண்டே போக, “மதும்மா, நான் வாரம் வாரமெல்லாம் குடிக்கலை மதும்மா. உன் விஷயமா நான் அலைந்தப்ப, நான் குடிச்சேனா?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“மதுவை விட உங்களுக்கு மதுமதி வேணும். மதுமதி வந்ததும் பழையபடி மது வேணும்” அவள் கூற, “நான் போன இடத்தில…” அவன் தன்  பல்லவியை ஆரம்பிக்க, “இது சாக்குபோக்கு” அவள் கடிந்த கொள்ள, அவன் அவளை சலிப்போடு பார்த்தான்.

“மூன்றாவது ஒற்றுமையை கேளுங்களேன்” அவள் கூறிய மூன்றாவது ஒற்றுமையில், அவன் அவள் கன்னத்தில் அறைந்திருக்க, அவள் நான்காவது ஒற்றுமையையும் சுட்டி காட்ட, அவன் மேலும் அங்க நிற்க முடியாமல் அறையை விட்டு வெளியே சென்றான்.

மது… மதி! வருவாள்…


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!