Mathu…Mathi!-2

Mathu…Mathi!-2

மது…மதி! – 2

அறைக்குள் கெளதம் மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் இதழ்கள் மட்டுமே மெளனமாக இருந்ததே ஒழிய, அவன் சிந்தை வேகவேகமாக சிந்தித்து கொண்டிருந்தது. ‘என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?’ அவன் சிந்தை அலைப்புற்றது.

‘நான் நேரடியாக தலையிடாமல் மதுமதியை வெளியே கொண்டு வர முடியுமா? ஆனால், விஷயத்தின் வீரியம் பெரிதாக இருக்கிறதே’ அவனுள் பல கேள்விகள்.

“டம்.. டம்…” என்று அவன் அறைக்கதவு தட்டப்பட, கெளதம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். “அம்மா…” அவன் அழைக்க, லலிதா அவனை ஆழமாக பார்த்தார். “கெளதம், யாரும் உன்னை எதுவும் கேட்கலை. ஆனால், அப்பாவை கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. மீடியா முழுக்க அவ பெயர் தான். அவ எக்கேடும் கெட்டு போகட்டும். நாம நம்ம வழியைப் பார்ப்போம். நமக்கும் அவளுக்கும் ஒரு  சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டு, நீ உன் கல்யாண விஷயத்தை சொல்லிடு.” லலிதாதேவி படபடக்க, கெளதம் தன் ஒற்றை கண்ணை சுருக்கி புருவத்தை உயர்த்தி தாயைப் பார்த்தான்.

தன் மகனின் பார்வையில் அவர் நிதானம் கொண்டார். “இல்லை, உனக்கும் அவளுக்கும் இன்னும் விவாகரத்து ஆகலை. சீக்கிரம் விவாகரத்து. அப்புறம் உனக்கும் ரம்யாவுக்கு கல்யாணமுன்னு சொல்லிடு” லலிதா தேவி கூற, “எஸ், கெளதம் யுவர் மாம் இஸ் ரைட். என் தங்கை பொண்ணு ரம்யா தான் உன் மனைவின்னு நாங்க எல்லாரும் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தோம். உங்க அத்தை பார்வதியும், ரம்யாவும் அப்படி தான் நம்பிகிட்டு இருந்தாங்க.” அவன் தந்தை பாலகிருஷ்ணன் பேச ஆரம்பித்தார்.

அங்கு அமைதி நிலவியது. “நீ ஏதோ காதல் அப்படி இப்படின்னு சொன்னதால நாங்க தலையிடலை. உன் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாம, உன் திருமணத்தை நடத்தி வைத்தோம். ஆனால், அது உனக்கு சரியா அமையலை” அவன் தந்தை கூற, “…” அவன் தன் பெற்றோரை யோசனையோடு பார்த்தான்.

தன் மகனின் அழுத்தமும், மௌனமும் அவர்களுக்கு பல செய்திகளை எடுத்துரைக்க, “இப்ப எதுக்கு பழைய கதை. மீடியா வாயை மூட முடியாது. நம்மளை பற்றிய பேச்சை நாசூக்கா முடித்துவிடு” அவன் தந்தை கூற, அவன் தாயும் ஆமோதிக்க, “முடிக்க வேண்டியது மதுமதியையா அப்பா?” என்றான் அமைதியாக.

“அவளை பத்தி…” லலிதா தேவி கோபமாக பேச ஆரம்பிக்க, “மதுமதி இதை செய்யலைன்னு எனக்கு தெரியும்” அவன் உறுதியாக கூற, “…” அங்கு மௌனம். “உங்களுக்கும் தெரியும்” அவன் அழுத்தமாக கூற, இருவரும் ஏதோ பேச ஆரம்பிக்க, “இதுக்கெல்லாம் அம்பு யாருன்னு எனக்கு தெரியும். எய்தவனை தான் யோசிச்சிகிட்டு இருக்கேன். இது வரைக்கும் எனக்கு உங்க மேல சந்தேகம் வரலை. வர வச்சிராதீங்க.” நிறுத்தி நிதானமாக கூறிவிட்டு, மடமடவென்று வீட்டை விட்டு வெளியே சென்று தன் புல்லெட்டில் வேகமாக காவல் நிலையம் நோக்கி சென்றான் அட்வகேட் கெளதம் ஸ்ரீனிவாசன்.

காவல் நிலைய வாசலில் தன் புல்லெட்டை நிறுத்தினான்.

        அழுத்தமான காலடிகள். நல்ல உயரம். அங்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் சற்று அண்ணாந்து பார்த்தார்கள். அவனை பார்த்ததும் சற்று மரியாதை. அவன் யாரென்று தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் படபடப்பு. சிலருக்கு அவன் உடற்கட்டு பார்த்து சற்று பயம். அவன் விறைப்புக்கு சற்று விலகல் என பல கண்ணோட்டத்தில் அனைவரின் பார்வையும் அவன் மீதே. எல்லோரும் ஏதேதோ காரணம் சொல்லி எழுந்து நிற்க, கால் மேல் கால் போட்டு ஏதோ ஒரு காகிதத்தில் கவனமாக இருப்பது போல் பாவனை காட்டிக்கொண்டிருந்தான் தேவராஜ்.

அவன் வருகையை மட்டுமே அனைவரும் உணர அவன் வாசனையை உணர்ந்தாள் மதுமதி. அவள் தேகம் முழுதும் அவன் அணைப்பிற்கும் ஆறுதலுக்கும் துடித்தது. அவள் விழிகளில் கண்ணீர் ததும்ப, அவள்  மூளையில் அபாய மணியடிக்க அவள் விழிமூடி அதை உள்ளிழுத்துக்கொண்டாள். அவள் விழிகள் அவள் கட்டளைக்கு உட்பட்டு விழிநீரை நிறுத்திக்கொண்டது. அவள் இதழ்கள், ‘என்னங்க… என்னங்க…’ என்று கதற துடித்தது. 

அவள் மூளை அவள் இகழ்களையும் கட்டுக்குள் கொண்டு வர, அவள் கால்கள் அவனை நோக்கி செல்ல,’நான் இங்கு இருக்கிறேன்’ என்று கதறி செய்தி சொல்ல முயல் குட்டியாக துடிக்க, அவள் தன் பாதத்தை தரையோடு அழுத்திக்கொண்டு அமர்ந்தாள். அவள் கொடுத்த அழுத்தத்தில் அந்த கரகரப்பான தரை அவள் பாதத்தை குத்தி பதம் பார்த்தது. பல வலிகளுக்கு இடையில் இதுவெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் அவள் உடலும் மனமும் அதை கண்டுகொள்ளவில்லை.

அவள் உடல் அவள் சிந்தைக்கு கட்டுப்பட்டாலும், அவள் மனம் அவனை எண்ணியே துடித்தது. அவனுக்காக ஏங்கி துடித்தது. ‘எதற்காக இங்க வந்திருக்காங்க?’ என்ற கேள்வியோடு துடித்தது.

அவன் முன் நின்று தேவராஜை அளவிடும் விதமாக பார்த்தான் கெளதம். தேவராஜின் பாவனையும் நீடித்து கொண்டே இருந்தது அவனை அவமதிக்கும் விதமாக. கெளதம் தன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டிருந்தான். எத்தனை மணி நேரம் தான் தேவராஜால் குனிந்த தலையை நிமிர்த்தாமல் இருக்க முடியும்?

“என்ன யோசிக்குறீங்க? இவங்களை சார்ன்னு கூப்பிடலாமா இல்லை போலீஸ் ஆஃபீஸ்ர்ன்னு மரியாதையா கூப்பிடலாமான்னு யோசிக்கறீங்களா?” அவன் உதட்டோரம் புன்னகையோடு கேட்க, தன் கால்களால் அங்கிருந்த நாற்காலியை பின்னே தள்ளி அவன் முன் அமர்ந்தான் கெளதம்.

“தப்பு பண்ற தேவராஜ். நீ தேவை இல்லாமல் என் வழியில் வர்ற” தன் ஆள்காட்டி விரலை உயர்த்தினான் கெளதம். அவன் மேலும் கீழும் பார்த்து, “உங்க மனைவி… சாரி உங்க மனைவின்னு சொல்லனுமா? இல்லை மாஜி மனைவின்னு சொல்லனுமா?” தேவராஜ் தன் கண்களை சுருக்கி சந்தேகம் கேட்டான்.

கெளதம் தன் பற்களை நறநறக்க, “நீங்க பிரிஞ்சிட்டிங்கன்னு நியூஸ் பார்த்து, டைவர்ஸ் ஆகிருச்சுன்னு நினைச்சேன். இல்லைனு இப்ப தான் கேள்விப்பட்டேன். எது உண்மை அட்வகேட் சார்?” அவன் அது தான் முக்கியம் என்பது போல் பேச, “தேவராஜ்” என்றான் சற்று மிரட்டும் தொனியில்.

“டைவர்ஸ் வாங்கறதில் எதுவும் பிரச்சனைனா, நான் வேணுமின்னா உதவி பண்ணட்டுமா? நல்ல வக்கீலா பார்த்து சொல்லட்டுமா?” தேவராஜ் மீண்டும் நக்கலாக கேட்க, இப்பொழுது கெளதம் சிரித்தான். “நல்ல வக்கீலா பார்க்கணும் தேவராஜ். கண்டிப்பா. உன்னை விட நான் நல்ல திறமையான ஆளா பார்த்து உனக்கு சொல்லுவேன். உன் மனைவி போட்ட டைவர்ஸ் கேஸ் இன்னும் இழுபரில தானே இருக்கு. வேணுமின்னா சொல்லு, முடிச்சி வச்சிருவோம்” கெளதம் புருவம் உயர்த்தி சிரிக்க,

“ஏய்” மேஜையை தட்டி கோபமாக எழுந்தான் தேவராஜ். “எதுக்கு இவ்வளவு பதட்டம்? தண்ணீர் குடிங்க போலீஸ் ஆஃபீஸ்ர்.” கெளதம் பொறுமையாக பேச, “என் மனைவி பிள்ளைன்னு எல்லாரும் என்னை விட்டு பிரிய காரணம்…” அவன் மேலும் பேசவில்லை. “ஸோ, எங்களை பழிவாங்க இப்படி ஒரு கேஸ்” கெளதம் நாசுக்காக தேவராஜின் வாயை கிளறினான்.

“உன் மனைவி குடிச்சிட்டு காரை ஒட்டியது நிஜம். வண்டியை இடித்தது நிஜம். அந்த சின்ன பொண்ணு விழுந்து செத்தது நிஜம். பக்கா எவிடென்ஸ் இருக்கு அட்வகேட்” தேவராஜ் நிதானித்துக் கொண்டு பேச, “ஆனால் பொண்ணு உடல் இன்னும் கிடைக்கலை. அந்த பெண்ணை போஸ்ட்மார்ட்டம் பண்ண ரிப்போர்ட் வரலை” கெளதம் பேச, “என்ன என் ஸ்டேஷன் வந்து என்னையே விசாரணையா?” தேவராஜ் வினவ,

“உன்னை விசாரிக்க நாள் வரும். அன்னைக்கு நீ…”கௌதமை இடைமறித்தான் தேவராஜ். “எதுக்கு இன்னொரு நாளுக்காக காத்திருக்க. இன்னைக்கே சொல்றேன். உன் மனைவி கொன்னது நிஜம். ஆனால், எங்க பாடியை டிஸ்போஸ் பண்ணாங்கன்னு தான் விசாரிச்சிட்டு இருக்கோம். இவங்களுக்கு உதவி பண்ணது யாருன்னு தான் விசாரணை பண்ணிட்டு இருக்கோம்.” மிகவும் அசட்டையாக பேசினான் தேவராஜ்.

கெளதம் அவன் வார்த்தைகளுக்கு இடையில் எதையாவது கண்டுபிடிக்க முடியுமா? என்பது போல் ஆழம் பார்க்க, “என்ன உன் மனைவியை பார்க்கணுமா? தனியா பேசணுமா?” என்று மிக அக்கறையாக கேட்டான் தேவராஜ்.

‘ஆம்…’ என்ற எண்ணம் இருந்தாலும், நிச்சயம் தேவராஜ் அனுமதிக்க போவதில்லை என்றறிந்த கெளதம் திரும்பி செல்ல எத்தனிக்க, “நீ என் மனைவி பிள்ளையை என்கிட்டே இருந்து பிரிச்சிட்ட. ஆனால், என்னால் உன் மனைவியை மட்டுந்தான் உன்கிட்ட இருந்து பிரிக்க முடியும். உனக்கு தான் பிள்ளை குட்டியே இல்லையே?” தேவராஜ் சோகம் போல் ஆரம்பிக்க,

கெளதம் சட்டென்று திரும்பினான். “ஒருவேளை நீங்க பிரிய அது தான் காரணமா? பிரச்சனை உன் கிட்டயா இல்லை உன் மனைவி கிட்டயா?” என்று தேவராஜ் ஆர்வமாக கேட்க, “ஏய்?” என்று மேஜையை தட்டி கர்ஜித்தான் கெளதம். “அட்வகேட் சார். இது என் ஸ்டேஷன்.அதாவது என் கோட்டை. கத்துறது, மேஜையை உடைக்கறது எதுவா இருந்தாலும் நான் தான் பண்ணனும். நாளைக்கு கோர்ட்ல நீங்க கத்தலாம், உங்க மேஜையை உடைக்கலாம், கூண்டை குத்தலாம்” தேவராஜ் அடுக்கி கொண்டே போக,

“மவனே, கேஸ் கோர்ட்க்கு வரட்டும். உன்னோட சேர்த்து உன் கூட இருக்கிறவங்களையும் முழுசா முடிக்கிறேன்” அவன் மிரட்டிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க, அவன் பார்வை அங்கிருந்த சிறையை நோக்கி திரும்பியது.

‘நான் இங்க இருக்கேன்னு தெரிந்தும் அவள் வரமாட்டாளா?’ அவன் மனம் ஏங்க, அவன் ஏக்கம் காற்றுவாக்கில் அவள் தேகத்தை தீண்ட அவள் தேகமும் அவள் மனமும் அவள் கட்டளையை நிராகரித்துவிட்டு அந்த சிறையின் மூலையிலிருந்து அவனை காண கதவருகே சென்றது. அவன் காலடிகள் அவளை நோக்கி நிதானமாக நடந்து வந்தது.

தேவராஜின் கண்கள் அவர்களை கூர்மையாக அளவிட ஆரம்பித்தது. அவர்களுக்கு இடையே இருந்த காதல் சங்கேத மொழியில், ‘இவர்கள் ஏன் பிரிந்தார்கள்?’ என்ற கேள்வி அவனை குடைந்தது.

அவன் அவளுக்கு மிக அருகே சென்றான். அவர்களுக்கு இடையில் சிறைக்கம்பிகள் மட்டுமே.  அவன் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. ‘இது தேவையா?’ என்பது போல அவன் கண்கள் அவளை குற்றம் சாட்டியது. அவன் கேள்விக்கு பல பதில் கூற, அவள்  இதழ்கள் துடித்தாலும், அவள் பிறப்பித்த உத்தரவில் அவை மௌனித்துக் கொண்டன.

ஆனால், மனம் அவன் அருகாமையில், அவன் சுவாசத்தில் துடிக்க, அவள் கண்கள் அவனை காதலாக ஏக்கமாக பார்த்தது. காதலை பொழியும் விழிகள் அவள் கட்டுபாட்டை மீறி அதிதீவிரமாக அதிவேகமாக செயல்பட்டது. சிறைக்கம்பிகளை பிடித்திருந்த அவள் விரல்களை பிடித்து ஆறுதல் சொல்ல அவன் விரல்கள் துடிக்க, அவன் கைகளை உயர்த்தினான். அவள் விரலை அவன் விரல்கள் நெருங்க, அவள் சட்டென்று விரல்களை எடுத்துக்கொள்ள துடித்தாள்.

‘எடுக்க வேண்டும்… விலக வேண்டும்…’ என்று அவள் நினைத்தாலும், அவனை அவமதிக்க முடியாமல் அவள் விரல்கள் அந்த சிறைக்கம்பிகளை இன்னும் அழுத்தமாக பிடிக்க, ‘அவங்க தொட்டால் இளகி விடுவேனோ? உடைந்து விடுவேனோ?’ என்று அஞ்சி அவள் உடல் நடுங்கியது.

அவன் விரல்கள் அவள் விரல் அருகே சென்று காற்று புகும் இடைவெளியில் சட்டென்று நின்று கொண்டது. ‘இவளை, நான் இப்பொழுது தொட்டால், நான் தொலைந்து விடுவேன். என் பொறுமை, நிதானம் எல்லாம் தொலைந்து விடும். தொட்ட கைகளை பற்றி கொண்டு போக வெறி வரும். இங்கு நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. கெளதம் நிதானம். பொறுமை…’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு தன் கைகளை இறக்கி கொண்டு அவன் விலகி செல்ல எத்தனிக்க,

“எனக்கு யார் உதவியும் வேண்டாம்” அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக மெல்லமாக ஆனால் அவள் வார்த்தை சற்று அழுத்தமாக வர, அவன் அங்கு நின்ற அவளைப் கூர்மையாக பார்த்தான். “யாரோ செய்ற உதவி எனக்கு தேவை இல்லை” அவள் இதழ்கள் வீராப்பு பேச, இந்த சூழ்நிலையிலும் அவன் இதழ்கள் புன்னகையில் மடிந்தது.

“என்னை காப்பற்றிக்கொள்ள எனக்கு தெரியும். நாளைக்கு கோர்ட்டில் நான் பார்த்துப்பேன். நீங்க தலையிட வேண்டாம்.” அவள் மேலும் மேலும் பேச, அவன் விரல் அவள் இதழ்களை சட்டென்று சுண்டியது. வலியை தராமல் வலியை கொடுத்த சுகமான தீண்டலில் அவள் விலக, “நீ தனியா என் கையில் சிக்கின, உனக்கு என் தண்டனையே வேற மாதிரி இருந்திருக்கும்” அவன் கண்சிமிட்ட, அவள் கண்களை விரித்து அவனை மலங்க மலங்க விழித்து பார்த்தாள். ‘இது என்ன இப்படி பேசுறாங்க. நாம தான் பிரிய போறோமே?’ தற்காலிக பிரச்சனையை மறந்து மதுமதியின் சிந்தை தன் சொந்த பிரச்சனையை சிந்தித்து.

‘விட்டா இந்த கெளதம் போலீஸ்ஸ்டேஷனை லவ்வர்ஸ் பூங்காவா மாத்திருவான் போல’ அவர்களை பார்த்துக் கொண்டிருந்த தேவராஜ் கடுப்பாக மேஜையை தட்ட, “இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி? இன்னும் நீ நிறைய பார்க்கணும் தேவராஜ்” என்று சொல்லி சவால் விடும் விதமாக புன்னகைத்துக் கொண்டு வெளியே சென்றான் கெளதம் ஸ்ரீநிவாசன்.

‘வரும் பொழுது இருந்த பதட்டம், இப்ப கெளதம் கிட்ட இல்லையே? நான் பேசும் பொழுது எதையாவது உளறினேனா?’ தான் பேசியதை மீண்டும் மீண்டும் சிந்தித்து தன் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தான் தேவராஜ்.

மது… மதி! வருவாள்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!