Mathu…Mathi!-20 (Final Episode)

mathu...mathi!_Coverpic-8b9b7742

Mathu…Mathi!-20 (Final Episode)

மது…மதி! – 20

கெளதம் அனைத்தையும் மறந்து, “அப்பா… அப்பா…” என்று அலறினான். அவன் அலறல் சத்தத்தில் மதுமதி அவர்கள் அறை நோக்கி வந்தாள். அவளுக்கு சூழ்நிலை புரிந்தது.

“ஆம்புலன்ஸ் கூப்பிடணும்” அவள் இதழ்கள் முணுமுணுக்க, அவள் விரல்கள் வேலையை செய்தது.

ஆம்புலன்ஸ் வரவும், லலிதா அவருடன் மருத்துவமனைக்கு செல்ல, கெளதம் காரை எடுக்க, “நீங்க குடிச்சிருக்கீங்க. நான் ஓட்டுறேன்” என்று மதுமதி கார் சாவியை வாங்க, “உன் காலில்…” அவன் தடுமாற, “அதெல்லாம் என்னால்  முடியும்” என்று தன் கட்டை விரலில் லாவகமாக ஆக்சிலேட்டரை அழுத்தி  காரை மருத்துவமனைக்கு செலுத்தினாள்.

மருத்துவர் அவர்கள் குடும்ப நண்பர். ஆனால், அவர் முகத்தில் கிஞ்சித்தும் சிநேகம் இல்லை. “ஹார்ட் அட்டாக்” மருத்துவர் கூற, அங்கு மயான அமைதி. “ட்ரிங்க்ஸ் வேற பண்ணிட்டு இருந்திருக்கார்” மருத்துவர் முகத்தில் எரிச்சலை காட்ட, அங்கு மீண்டும் அமைதி.

“எவ்வளவு  சீக்கிரம் ஆபரேஷன் பண்ண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆப்ரேஷன் பண்ணனும். பிளட் வேணும். நாங்களும் முயற்சி பண்ணறோம். நீங்களும் முயற்சி பண்ணுங்க” அவர் கூற, “எனக்கும், அப்பா பிளட் குரூப் தான்” கெளதம் படபடப்போடு கூற, “அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நீங்க குடிச்சிருக்கீங்க” மருத்துவர் சிடுசிடுப்பாக கூறிவிட்டு சென்றார்.

கெளதம், தலையில் கைவைத்து ஐ.சி.யு வாசலில் அமர்ந்தான்.  அவன் தோள் மீது கை வைத்தாள் மதுமதி. “என் நண்பர்கள் கிட்ட சொல்லிருக்கேன். அவங்க வருவாங்க. அவங்க பிரெண்ட்ஸ்ஸையும் கூட்டிகிட்டு வருவாங்க.” அவள் கூற, “என் நண்பர்கள்” என்று அவன் இழுத்தான்.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை. எல்லாரும் சோசியல் ட்ரிங்கிங்ல இருக்காங்க. யாரும் பிளட் குடுக்குற நிலைமையில் இல்லை.” அவள் கூற, அவன் எதுவும் பேசவில்லை. அதன் பின் அறுவை சிகிச்சை என அனைத்தும் இரண்டு நாட்கள்  வேகமாக ஓடியது. அப்பொழுது, அங்கு வந்தார் வீரபத்திரன். “மதுமதி” என்று அவள் அழுகுரலோடு வந்தார்.

“நீ இந்த ஆஸ்பத்திரியில் இருக்கேன்னு சொன்னாக. என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சிகிட்டு ஓடியாந்தேன்” அவர் கூற, அவள் எதுவும் பேசவில்லை.

“என்னை மன்னிக்க கூடாதா?” அவர் தழுதழுப்பான குரலில் கேட்க, மதுமதி கண்களில் கண்ணீர் மல்கியது. “தப்பு பண்ணினவங்களை மன்னிக்கவும் முடியாமல், ஏத்துக்கவும் முடியாமல் வலியோட வாழணுமுன்னு என் தலையெழுத்து போல” அவள் தன் கணவனையும், தகப்பனையும் ஒரு சேர பார்த்து கூற, வீரபத்திரனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், கௌதமிற்கு எல்லாம் புரிந்தது.

இரண்டு நாட்களாக தேவையைத் தவிர இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. மதுமதி மிதமிஞ்சிய கோபத்தில் இருந்தாள். அவளை சமாதானம் செய்யும் தன் பக்க நியாயங்கள் அனைத்தும் வலுவிழந்து நின்றதால் கெளதம் மௌனித்துக் கொண்டான்.

மருத்துவரிடமிருந்து அழைப்பு வர, “நீங்க பேசிகிட்டு இருங்க” என்று கூறிவிட்டு கெளதம் தன் தாயோடு மருத்துவரை பார்க்க சென்றான். பார்வதியும், ரம்யாவும் அங்கு அமர்ந்திருந்தனர்.

“மதுமதி…” வீரபத்திரன் பேச ஆரம்பிக்க, “என்னால், உங்களை மன்னிக்க முடியுமா? பேச முடியுமான்னு தெரியலை. எனக்கு உங்களை பார்க்கும் பொழுதெல்லாம், என் அம்மா நியாபகம் வருது. நான் உங்க காலில் விழுந்து அம்மாவை காப்பாத்துங்க அப்பா… அம்மாவை காப்பாத்துங்க அப்பான்னு நான் கதறினது மட்டும் தான் நியாபகம் வருது. அத்தோட, நீங்க சுயநினைவே இல்லாம கிடந்தது மட்டும் தான் என் கண்முன்னாடி வந்து தொலைக்குது” அவள் கண்ணீர் மல்க கூறினாள்.

“என்னை திட்டவாது இப்படி என் கூட பேசு தாயி” அவர் கெஞ்ச, அவள் கண்ணீரோடு அங்கிருந்த நாற்காலியில் மொந்தென்று அமர்ந்தாள்.

அதே நேரம், மருத்துவர் முன் அமர்ந்திருந்தான் கெளதம்.
அவர் கோப்புகளை பார்த்தார்.  அவர் முகத்தில் அன்றைய சிடுசிடுப்பு இல்லை. தோழமையோடு பேச ஆரம்பித்தார்.

“என்னை ஒரு நண்பனா மதிச்சு நீ அடிக்கடி கேட்பியே கெளதம். மதுமதிக்கு கவுன்செலிங் கொடுப்போமான்னு? ஒரு சோசியல் ட்ரிங்கிங்கை கூட புரிஞ்சிக்க மாட்டேங்குறா அப்படின்னு. நான் ஒவ்வொரு தடவையும் அதை தட்டி கழிப்பேன். ஏன் தெரியுமா?” மருத்துவர் கேட்க, அங்கு அமைதி.

“ஏன்னா, கவுன்செலிங் மதுமதிக்கு தேவை இல்லை. உனக்கு தான் கொடுக்கணும். அதை சொன்னால், நீ புரிஞ்சிச்சிக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். நீ இல்லை, இந்த தலைமுறை பெரும்பாலும் புரிஞ்சிக்க மாட்டாங்க.” என்றார்.

“பொதுவா நான் அட்வைஸ் பண்றதில்லை. ஏன்னா, இப்ப யாரும் டாக்டர்ஸ் அட்வைஸ் எல்லாம் கேட்குற நிலைமையில் இல்லை. வாட்சப்பில் வந்தா போதும். யூடியூபில் சொன்னா போதும். எல்லாரும் டாக்டர்ஸ் தான்.”

“பீர் நல்லது. அது அல்கஹாலிக் இல்லை. இது கொஞ்சம் அல்கஹாலிக். பீர் அடிச்சா ஒன்னும் பண்ணாது. ரம் பெருசா உடம்பை பாதிக்காதுனு நீங்களே முடிவு பண்ணிக்க வேண்டியது. ராத்திரி குடிச்சிட்டு சாப்பிட்டுட்டா எல்லாம் சரியாகிரும். காலையில் ஜிம்மில் ஓடினா சரியாகிரும். இதெல்லாம் எந்த டாக்டர் சொன்னாங்க?” என்று மருத்துவர் கேட்க, அவன் பதிலேதும் பேசவில்லை.

“அசிங்கம் கெளதம். பெரிய அட்வகேட், அவங்க அப்பா கீழே விழும் பொழுது டிரைவ் பண்ணவும் முடியலை. இரத்தம் கொடுக்கவும் முடியலை. கேட்டா ட்ரிங்க்ஸ் லைட்டா தான் சாப்பிட்டேன். அப்படின்னு சொல்லுவீங்க. ஒரு துளி விஷத்தை சாப்பிட்டுக்கிட்டே இருந்தா ஒரு நாள் சாகனும். இதுவும் அப்படித்தான் ஒரு நாள் இந்த சோசியல் ட்ரிங்கிங் உங்களை போதைக்கு அடிமையாக்கும். ஒவ்வொரு உறுப்பா சாகடிக்கும்” மருத்துவர் கூற, கெளதம் முதல் முறையாக தான் தவறு செய்கிறோமோ என்று எண்ணினான்.

“நான் இதுக்கு மேல பேசலை. இனி அவர் குடித்தால், கடவுளாலும் அவரை காப்பாத்த முடியாது” மருத்துவர் நிறுத்த, லலிதா தலையசைத்து கேட்டுக்கொண்டார்.

“அப்பா குடிச்சிட்டு வந்தா, பிள்ளைங்களுக்கு தெரியாம இருக்க அப்பா ஏதோ சாப்பிட்டிருக்கார் அப்படினு அம்மாக்கள் சொல்லும் பொழுது, எல்லாரும் நல்லாருந்தோம் அம்மா. ஆனால், புருஷன் குடிக்கறதை பெண்கள் பெருமையா பேசும் பொழுது குடும்பம் அழிய ஆரம்பிச்சிருது. உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய தேவையில்லை. ஆனால், சொல்ல வேண்டிய கட்டாயத்தில் என்னை கொண்டு வந்து நிறுத்திடீங்க.” மருத்துவர் கூற, லலிதாவின் கண்கள் கலங்கியது.

‘என் புருஷனுக்கு என்ன? நல்லாதானே இருக்கார்?’ அவர் பெருமை பேசியது, அவர் தலையில் சம்மட்டியாக இறங்கியது.

‘பாலை குடிக்கிறோம், தண்ணீரை குடிக்கறோம். ஆனால், அதை எல்லாம் குடி என்று சொல்வதில்லை. மதுவை மட்டும் தான் குடி என்று சொல்கிறோம். ஏனென்றால், அது மட்டும் தான் உயிரை குடித்து விடும்’ என்று எங்கோ படித்த வரிகள் அனைவர் மனதிலும் ஒரே நேரத்தில் வந்தது.

லலிதா எழுந்து செல்ல, கெளதம் அங்கு அமர்ந்திருந்தான். “அப்பாவை எப்ப நார்மல் ரூமுக்கு மாத்துவீங்க?” என்று கேட்டான். “சீக்கிரம் மாத்திருவோம்” என்றார் மருத்துவர்.

“அவரால், ட்ரிங்க்ஸை டக்குனு நிறுத்த முடியாது. கஷ்டப்படுவார். கொஞ்சம் சரியானதும் அவர் ட்ரிங்க்ஸ் பண்ணனுமுன்னு நினைப்பார். இதை அம்மா இருக்கும் பொழுது சொல்ல வேண்டாமுன்னு  தான் உன்கிட்ட சொல்றேன்” மருத்துவர் கூற, “என்னடா, இப்படி சொல்ற? நாங்க மொடா குடிகாரங்க எல்லாம் இல்லை” கெளதம் சிரித்தான்.

“உன்னாலையும் சட்டுனு நிறுத்த முடியாது” இப்பொழுது மருத்துவர் சிரித்தார். கெளதம் அதிரிச்சியாக பார்க்க, “சோசியல் ட்ரிங்கிங் பண்றவன் பலரால் சட்டுனு நிறுத்த முடியாது. உன் மனைவிகிட்ட உனக்கு என்ன ஈகோவா?” மருத்துவர் கேட்க, கெளதம் திருதிருவென்று விழித்தான்.

“ஏன் மதுமதி சொல்றதை அப்படியே கேட்க வேண்டியது தானே? உனக்கு தான் ஈகோ இல்லையே. மத்த எல்லா விஷயத்திலும் உன் மனைவி பேச்சை கேட்க முடிந்த உன்னால், இந்த விஷயத்தை கேட்க முடியலை. நீ சோசியல் ட்ரிங்கிங் நியாயத்தை தான் சொல்லிகிட்டே இருக்கிற. ஏன்னா, நீ அதுக்கு அடிமையாகிட்ட” அவர் கூற, “டேய், என் மனைவியே பரவால்லை” அவன் நண்பனாக பேசிவிட்டு  எழுந்திரிக்க, “அட்வைஸ் பண்ணியே கொன்னுட்டேனா? இப்ப சொல்லலைனா எப்பவும் சொல்ல முடியாதில்லை” மருத்துவரும் சிரிக்க கெளதம் கைகுலுக்கி வெளியே வந்தான்.

பாலகிருஷ்ணன் அறைக்கு மாற்றப்பட்டார். லலிதா, மதுமதி, பார்வதி ரம்யா என எல்லோரும் உள்ளே சென்று அவரை பார்த்தனர். கெளதம் வெளியே நின்று கொண்டான்.

“அப்பாவை பார்க்கலியா?” மதுமதி கேட்க, “நீ உங்க அப்பா கிட்ட பேசறியா?” என்று கேட்டான் கெளதம். “அப்பா பேசினதை கேட்டேன். இன்னும் கொஞ்சம் நாள் ஆகும். நானும் பேசுவேன்” என்றாள் மதுமதி. “எனக்கும் எங்க அப்பாவை பார்க்க கொஞ்சம் நாள் ஆகும். என் மனக்காயம் ஆறனும்” என்று அழுத்தமாக கூறினான் கெளதம். பாலகிருஷ்ணனின் கண்கள் தன் மகனை தேடியது. தன் மகனின் கோபம் அறிந்து விரகித்தாயாக சிரித்துக் கொண்டார்.

“நாம்ம வீட்டுக்கு போயிட்டு வருவோமா?” என்று கெளதம் கேட்க , மதுமதி தலையசைத்தாள்.

கெளதம் காரை செலுத்த, மதுமதி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். அவனும் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு வந்து குளியலை முடித்திருந்தார்கள். அவள் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தலையிலிருந்து வடிந்த நீர் முத்துக்கள் அவள் தேகம் தொட்டு ஓடியது.

பின்னோடு வந்த அவன், நீர் முத்துக்களை ஊதினான். அவன் வெப்பக்காற்றில், அவள் சரேலென்று திரும்பினாள். அவன் தாடை, அவள் நெற்றியில் மோத, “எதுவும் சரியாகலை” என்றாள் அவள். “எல்லாம் சரியாகிருச்சுன்னு நான் சொல்றேன்” அவன் கூற, ‘என்ன விளக்கம் கொடுத்தாலும், நான் ஏற்றுக்கொள்ள போவதில்லை’ என்று அவள் திடமாக நின்றாள்.

அவள் அவன் முகம் நிமிர்த்தி பார்த்தான். “உங்க அப்பா கிட்ட பேசுடீ. ஏதோ தெரியாமல் பண்ணிட்டார். உங்க அம்மாவை நினைத்து அவரும் வருத்தப்பட்டுட்டு தான் இருக்கார்” அவன் கூற, “நீங்க உங்க அப்பா கிட்ட பேசுங்க” என்றாள் அவள்.

“மாட்டேன். அப்பா என்ன பண்ணிருக்காங்கன்னு தெரியுமா?” அவன் கேட்க, “எல்லாம் தெரியும்” என்றாள் அவள். “எல்லாமுன்னா?” அவன் அதிர்ச்சியாக கேட்க,  “மாமா, என்னை ட்ரன்க் அண்ட் டிரைவ் கேஸ்ல மாட்டிவிட நினச்சது. ஆனால், அதில் மாமா எதிர்பார்க்காத விதமா கார்மேகமும், தேவராஜும் புகுந்து விளையாடியது.” என்று அவள் நிறுத்த, அவன் “ஓ…” என்று விலகினான்.

“வீட்டுக்கு வந்ததும், விஷமே இல்லாத பாலை சாப்பிட்ட பூனையை கொலை பண்ணிட்டாங்க. பாலில் விஷம் கலந்ததா என்னை நம்ப வச்சது. என்னை எப்படியாவது இங்க இருந்து துரத்திவிடணுமுன்னு மாமா செய்ததெல்லாம் எனக்கு தெரியும்” என்று அவள் கூற, “புத்திசாலி தான்” என்று அவன் மெச்சினான்.

“இது மட்டுமில்லை. நீங்க பண்ண வேலையும் தெரியும். தேவராஜை கடத்தினது. அது உங்களுக்கும் சரண்யாவுக்கும் மட்டும் தான் தெரியும். கார்மேகத்துக்கும் தெரிஞ்சிருக்கும்.  சரண்யா உங்களை திட்டுற மாதிரி திட்டிட்டு உங்க கூடவே வேலை பார்த்தது. சரண்யாவை வைத்தே நீங்க கார்மேகத்தை வெளிய கொண்டு வந்து சிக்க வச்சது. தேவ்ராஜ்க்கு இது தேவை தான். இனி ஒழுங்கா இருப்பான். சரண்யாவும் பார்த்துப்பாங்க.” மதுமதி கூற,

“எல்லாம் தெரிந்து என்னை ஏன் அப்பா கிட்ட பேச சொல்ற?” அவன் சிடுசிடுப்பாக கேட்டான்.

 

“மாமாவுக்கு நீங்க அவங்க சகோதரி பெண்ணை கல்யாணம் பண்ணிக்கனுமுனு ஆசை அதில் தப்பில்லையே?” அவள் கேட்க, “அதுக்கு எனக்கு விருப்பம் இருக்கணுமே” அவன் கூற, “எனக்கு உங்களை பிடிக்கலை” அவள் கூறி முடிக்குமுன், அவள் இதழ்கள் அவணைப்பில் இருந்தது.

“இனி இப்படி சொன்னால், இது தான் தண்டனை” அவன் கூற, அவள் விலகி செல்ல துடித்தாள். அவள் கண்கள் கலங்கியது. “மாமா, சரிந்து விழுந்தனைக்கு கூட… நீங்க…” அவள் தடுமாறினாள்.

அவள் விலகி செல்ல துடிக்க, அவள் வெற்றிடையை தனதாக்கி, “நான் உன் பக்கம் வந்துட்டேன் மதும்மா…” என்றான் கொஞ்சலோடு.

“என் பக்கம்ம்னா?” அவள் விழிகளை விரிக்க, “மதி இருப்பவன் மதுவை தொடமாட்டான்னு உன் பக்கம்” அவன் கூற அவள் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்.

“எந்த போதி மரம் உங்களுக்கு ஞானோதயம்  கொடுத்தது. வேற எந்த மரம் கொடுக்கும். ஹாஸ்பிடல் தான். அன்னைக்கு அப்பாவுக்கு ரத்தம் கொடுக்க முடியாமல் போனப்ப ரொம்ப குற்ற உணர்ச்சியா போயிடுச்சு. அப்பா மேல் எனக்கு பயங்கர கோபம். அவர் முகத்தை கூட எனக்கு பார்க்க பிடிக்கலை. ஆனால், அவர் உயிரை காப்பாத்த  நான் ரத்தம் கொடுக்க முடியலைன்னு ரொம்ப அசிங்கமா ஃபீல் பண்ணினேன். இன்னைக்கி என் டாக்டர் பிரெண்டு வேற வறுத்தெடுத்துட்டான்” கெளதம் கூற, மதுமதி அவன் அருகே நின்று கொண்டாள்.

“என்னால், உடனே மாற முடியுமான்னு தெரியலை” அவன் தடுமாற, அவன் தோள்களில் கைகளை மாலையாக கோர்த்துக்கொண்டாள் மதுமதி.  “முடியுமா முடியாதாங்கிறது நம்ம கையில் இருக்கு. ஆனால், சோசியல் ட்ரிங்கிங் தப்புனு புரிஞ்சிக்கிட்டாலே போதும். நம்ம மதி வேலை செய்யும் பொழுது மதுவை தொட மாட்டோம். அதை தப்புன்னு தெரியாமலே இந்த தலைமுறை அடிமையாகிட்டு இருக்காங்க. பாதிப்பை அடுத்த தலைமுறை உணர்வாங்க” அவள் பேச ஆரம்பிக்க, அவன் அவள் இதழ்களை ஆள் காட்டி விரலால் மூடினான்.

“ஒரு மனுஷன் எவ்வளவு தாண்டி அட்வைஸ் தாங்குவான்.” அவன் அவள் முடியை ஒதுக்கி செவியோரமாக கிசுகிசுத்தான். இதழ் தீண்டாமல், அவள் செவிகளில் தீண்டிய அவன் சுவாசத்தில் அவள் முகம் சிவக்க, “நோ அட்வைஸ்…” என்று அவன் இதழ்கள் உரிமையை நிலை நாட்ட, அவன் கைகளும் உரிமையை நிலைநாட்ட ஆரம்பித்தது.

“நான் உங்களை விட்டுட்டு போகமாட்டேன். நீங்க மாமாவை மன்னிக்கலாமே” அவள் கேட்க, “நானும் சொன்ன சொல்லை மீற மாட்டேன். நீயும் மாமாவை மன்னிக்கலாமே?” அவன் அவள் விழி பார்த்து விழி உயர்த்தி கேட்டான்.

“கொஞ்சம் நாள்…” அவள் இழுக்க, “கொஞ்சம் வருஷமாகும் மதும்மா எனக்கு. இந்த விஷயத்தில் நீ தலையிடாத. அப்பத்தான் எல்லாருக்கும் பயமிருக்கும்” அவன் குரலில் அவர்களுக்கான கண்டிப்பு இருந்ததேயொழிய, அவன் அருகாமையிலும், தீண்டலிலும் அவளுக்கான மென்மை மட்டுமே இருந்தது.

அவள் பேச்சினோடு அவனிடமிருந்து காற்று புகும் இடைவெளியை உருவாக்க, அவன் கரங்கள் வேகம் காட்டியது. “இந்த மதுவிற்கு மதியின் கட்டுப்பாடெல்லாம் இல்லை” என்று அவன் கூற, அவன் புரிதலில் அவன் செய்கையில் அவள் கிறங்கி நின்றாள்.

அந்த அறையெங்கும், “மது…மதி! மது…மதி! மது…மதி! மது…மதி! மது…மதி!” என்று அவன் குரல் மட்டுமே ஒலித்து கொண்டிருந்தது . 

அன்புடன்,
அகிலா கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!