மது…மதி! – 5
சுந்தரம் சொன்ன விஷயத்தில் கௌதம் சற்று அதிர்ந்து நிற்க, “சார்…” சுந்தரத்தின் குரலில் அவன் நிதானித்துக் கொண்டான். “சரி சுந்தரம். நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு அறையின் குறுக்கும் நெடுக்கும் யோசனையோடு நடந்தான். அப்பொழுது அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவன் புருவங்கள் இன்னும் குழப்பத்தோடு நெளிந்தன. அவன் மூளை நடப்பதைக் கோர்த்துச் சிந்திக்க ஆரம்பித்தன.
‘மதுமதி குடித்திருக்க மாட்டாள். ஆனால், குடிச்சிருக்கான்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது. அந்த ட்ரக் டெஸ்ட் பொய்யா இருக்குமுன்னு யோசிச்சேன். ஆனால், ட்ரக் டெஸ்ட் உண்மை. இது எப்படி நடந்திருக்க முடியும்? இப்படி யோசிச்சா ஒன்னும் நடக்காது.’ அவன் விறுவிறுவென்று அவள் அருகே செல்ல, அவள் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டு நின்றது. கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இந்த கடலை வைத்து எத்தனை காதல் கதைப் பேசுவாள். இது என்ன வாழ்க்கையே வெறுத்துப் போனது போல், வெறித்த பார்வை.’ அவனுள் கோபம் கனன்றது. “மதுமதி” சற்று கோபமாக அழைத்தான். அவள் கண்ணீர்த் துளிகள் வெளிவரத் துடித்து அவன் குரலில் சட்டென்று உள்ளே செல்ல, அவன் கேட்க வந்ததை விடுத்து இளகிப்போனான்.
“மதும்மா, பயப்படுறியா? இந்த கேஸ் என்ன ஆகுமுன்னு யோசிக்கறியா?” அவன் அவள் விழி நீவி, முடியை ஒதுக்கி ஆறுதலாகக் கேட்டான். “அட்வகேட் கெளதம் ஸ்ரீநிவாசன் எடுத்துகிட்ட கேஸ்க்கு தோல்வி உண்டா என்ன? நான் கேஸில் மாட்டிக்கிட்டதை நினைத்து வருத்தப்படலை. இப்படி உங்க கிட்ட மாட்டிக்கிட்டதை நினைத்துத்தான் வருத்தப்படுறேன்” அவள் அவன் கைகளை ஒதுக்கி ஒதுங்கி நின்று கூற, அவன் கலகலவென்று சிரித்தான்.
“அது ஆயுள் தண்டனை மதும்மா. சாபவிமோசனமே கிடையாது” அவன் கூற, “எப்படி சாபவிமோசனம் வாங்கனும்னு எனக்குத் தெரியும்” அவள் கூறிக்கொண்டு விலகி நடக்க, அவள் அவனைப் பிடித்து இழுக்க, அவன் பிடியில் நின்றாள் அவள். முறுக்கிக் கொண்டு நின்ற அவள் கைகளை அழுந்த பிடித்தான்.
அவன் தன் கைகளை இறுக மூடிக்கொண்டு நிற்க, “ம… து… ம்… மா…” அவள் விரலின் மென்மையை ரசித்தபடி, ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு விரலை அவள் விழிகளைப் பார்த்தபடி திறந்தான் அவன். விலகிச் செல்ல துடித்து விலக முடியாமல் நின்றாள் அவள்.
அவன் திறந்த விரல்களை அவள் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டே வர, “இந்த விரலுக்கு என்னவளின் எழுத்தில்லையே” கூறிக்கொண்டு அவன் இதழ் பதிக்க, அவள் அதிர்ந்து தன் முழு கையையும் திறக்க, அதில் கார் சாவியை வைத்தான் கெளதம். “கார் எடு வெளிய போறோம்” சற்று முன் அவள் முன் இருந்த காதல் கணவன் மறைந்து, அட்வகேட்டாக அவன் நின்று கொண்டிருந்ததை அவள் உணர, அவள் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவன் திரும்பி வேக நடையோடு முன்னே செல்ல, அவள் அவனை விட வேகமாக சென்று அவன் வழி மறித்து நின்றாள். “நான் ஓட்டலைங்க” அவள் கூற, “கிளம்புன்னு நான் சொன்னேன்” அவன் நடந்து கார் அருகே சென்றான். “இவ்வளவு பிரச்சனை இருக்கும் பொழுது, நான் டிரைவ் பண்றது…” அவள் இழுக்க, “சட்டத்துக்கு பயப்படுறியா? அதை நான் பார்த்துகிறேன்.” அவன் மறுப்பக்கம் ஏறி அமர, அவள் தயங்கி காருக்கு வெளியே நிற்க, அவன் சொடக்கிட்டு ஆள் காட்டி விரலால் அவளை அழைத்து, புருவத்தால் வண்டியை ஓட்டும்படி சொன்னான்.
வேறு வழியின்றி அவள் காரை ஓட்ட ஆரம்பித்தாள். “நான் சொல்ற வழியில் போ. கேமரா இல்லாத ரூட்டை நான் சொல்றேன்” அவன் கூற, அவள் தலையசைத்தபடி வண்டியை செலுத்தினாள்.
அவள் வண்டியை மெதுவாக ஓட்ட, “வண்டியை வேகம் எடு” என்றான் சற்று அழுத்தமாக. அவன் அழுத்தத்தில் அவள் பாத விரல் ஆக்சிலேட்டரை அழுத்த, வண்டி வேகம் எடுக்க, அவள் நினைவுகளோ முன்னே முன்னே சென்றது
முன்னே சென்ற அவள் நினைவுகளை இழுத்து பிடித்து, எதுவும் பேசாமல் அவள் காரை நேராக செலுத்த, “அன்னைக்கு என்ன நடந்தது?” அவன் கேள்வி கூர்மையாக வந்தது. “நான் ஏற்கனவே சொல்லிட்டனே” அவள் சாலையை பார்த்தபடி கூற, “நான் கேட்ட கேள்விக்கு பதில்” அவன் அவள் முகம் பார்த்தபடி கேட்டான்.
“நான் பீச்சிலிருந்து வந்துகிட்டு இருந்தேன்” அவள் கூற, “தனியா தான் பீச்சுக்கு போயிருந்தியா?” அவன் கேட்க, “ம்…” அவள் பதில் ஒற்றை எழுத்தாக வந்தது. “மழையில் எதுக்கு பீச்க்கு போன?” அவன் கேட்க, “நான் போகும்பொழுது கிளைமேட் நல்லா இருந்தது. மழைத்துளி விழுற மாதிரி இருந்ததும் தான் நான் கிளம்பினேன்” அவள் எந்தவித உணர்ச்சி வெளிப்பாடின்றி பதில் கூறினாள்.
“நல்ல மழையா?” அவன் கேட்க, “ரொம்ப எல்லாம் இல்லை. கொஞ்சம் நேரம் பெய்தது. அப்புறம் இல்லை. அப்படி விட்டுவிட்டு தான் பெஞ்சிது” அவள் கூற, “நீ இடித்த வண்டியில் வந்த பொண்ணு மிஸ்ஸிங். கேஸ் ஃபைல் ஆகியிருக்கு” அவன் கூற, அவள் சட்டென்று அதிர்ச்சியில் பிரேக் போட எத்தனித்து காரின் வேகம் பின்னால் வரும் வண்டியின் வேகம் என அனைத்தையும் கணக்கில் கொண்டு அதே வேகத்தில் வண்டியை செலுத்தினாள்.
அவளின் செயலை மனதில் குறித்துக்கொண்டான் கெளதம்.
“முதல் விஷயம், நான் அந்த பொண்ணோட வண்டியை இடிக்கலை. அந்த பொண்ணு தான் என் வண்டியில் வந்து இடித்தது. இரண்டாம் விஷயம், அந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு அந்த பொண்ணு நல்லா தான் இருந்தா. மூன்றாவது விஷயம் அந்த பொண்ணு ட்ரிங்க்ஸ் பண்ணிருந்தா. அவள் எங்கையாவது போயிருக்கலாம்.” மதுமதி தெளிவாக கூற, “மதி…” அவன் அழைக்க, அவள் எண்ணங்கள் பின்னோக்கி சென்றன.
* * *
மது அவ்வப்பொழுது மதியாகி போக, அதற்கு காரணம் தெரிந்தே ஆகவேண்டும் என்று அவள் வைராக்கியத்தோடு காத்திருந்தாள். அன்று அவள் தீவிரமாக அவன் வழக்கு ஒன்று ஒன்றை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டிருக்க அவன் அன்று அவளை, “மதி…” என்று அழைத்தான்.
“மதி…” அவன் அவள் பேச்சில் மயங்கி அழைத்து அவள் நெற்றியில் மோதி, “மதி…” அவன் கிறங்கி நிற்க, “எனக்கு இப்ப காரணம் தெரிய வேண்டும்” அவனை விலக்கி அவன் முன் அவள் கறாராக நின்றாள்.
“என்ன தெரியணும்?” அவளின் அருகாமை விலகிப்போன கோபத்தில் அவன் முகம் சுளிக்க, “அது என்ன அப்பப்ப மதி?” என்றாள் கண்சிமிட்டலோடு.
“ஹா… ஹா…” அவன் சிரிக்க, “சிரிக்க கூடாது. காரணம்… காரணம்…” என்றாள் அவள் கறாராக, “நீ எப்பவாது தான் அறிவோடு பேசறியா. அந்த கொஞ்ச நேர அறிவை பாராட்டலாமுன்ன்னு தான்” அவன் கண்சிமிட்ட, அவள் அருகே இருந்த பொருளை அவன் மீது வீசிவிட்டு செல்ல கோபத்தோடு மடமடவென்று நடந்தாள்.
“மதும்மா…” அவள் பின்னோடு சென்று அவளை அணைத்துக்கொண்டு, அவள் கழுத்தில் முகம் புதைத்து, “மது…” அவன் பிடியிலிருந்து திமிறிய அவளை கண்டிப்போடு அழைத்தான். “உன்னைப் பார்த்தாலே நான் மயங்கிடுறேன். அப்பவெல்லாம் மது… மதும்மா… நீ தீவிரமா பேசும் பொழுது உன் மதியில் மயங்கி நிற்கிறேன். அப்பவெல்லாம் மதி” அவன் அவள் கன்னத்தோடு தன் கன்னம் இழைத்து காரணம் கூற, “நம்பலாமா?” என்றாள் அவள் பின்பக்கமாக முகம் திருப்பி அவனை பார்த்தப்படி.
“உனக்கு அறிவிருக்குனு நம்பினா, இதையும் நம்பலாம்” அவன் மீண்டும் பெரிதாக சிரிக்க, அவன் மார்ப்பில் அவள் குத்த, அவள் கைகள் அவன் கரங்களில் அகப்பட்டுக்கொள்ள, அவள் கரங்கள் மட்டும்மல்ல அவளும் அவனிடம் அகப்பட்டுக்கொண்டாள். அந்த இனிய நீண்ட பொழுதுகள்…
* * *
“மதி…” அவன் அழைப்பில் அவள் நனவுலகிற்கு வந்தாள். “நான் சொன்னது புரிஞ்சிதா?” அவன் கேட்க, “இல்லை… சாரி நான் கவனிக்கலை” அவள் தடுமாற, “வக்கீல் மாதிரி நீயே பாய்ண்ட் பாய்ண்டா பேசிட்டா நான் எதுக்கு?” அவன் கேட்க, “எதுக்காக இந்த கேஸ்க்கு இவ்வளவு மெனக்கடறீங்க? கேமரா ரெக்கார்டிங் காட்டிடீங்க. எல்லாம் க்ளியர் தானே? கேஸ் தன்னைப்போல் முடிஞ்சிறாதா?” மதுமதி கேள்வியோடு நிறுத்தினாள்.
“இல்லை மதும்மா.” அவன் சற்று நிதானித்தான். அவன் எண்ணங்கள் பலவிதமாக கணக்கிட ஆரம்பித்தது. கேமரா பொருத்தப்பாடாத சாலை என்றாலும் நெருக்கடியான சாலைக்கு அவளை அழைத்து சென்றான். வாகனங்கள் வேகவேகமாக சென்று கொண்டிருந்தன. “வேகம்… வேகம்…” என்று அவளை துரிதப்படுத்தினான். அவன் சொல்லுக்கிணங்க அவளும் காரின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.
அவள் லாவகத்தை அவன் உற்று கவனிக்க ஆரம்பித்தான். நெருக்கடியான சாலை, சற்று வேகமாக கார் அவள் கைகளில் விளையாடிக் கொண்டிருந்தது.
“மதும்மா…” அவன் மென்மையாக ஆழமான குரலில் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில் பேச ஆரம்பித்தான்.
“கேஸ் அப்படி சீக்கிரம் முடியாது மதும்மா. அன்னைக்கு கேமரா சரியா ஒர்க் ஆகலை. அந்த தைரியத்தில் தான் அவங்க இவ்வளவு கட்டுக்கதை கட்டி கேஸ் ஃபைல் பண்ணிருக்காங்க. எனக்கு வந்த வீடியோ ரெக்கார்டிங்ளையும் முழு வீடியோ இல்லை. ஆனால், விட்டுவிட்டு ரெக்கார்டிங் ஆகியிருக்கு. நீ அந்த பெண்ணை காப்பாத்தினது ரெக்கார்டிங் ஆகலை. ஆனால், உன் வண்டி கடந்து போன நேரம் ரெக்கார்டிங் ஆகியிருக்கு. அதை வைத்து தான் இது ஹிட் அண்ட் ரன் கேஸ் இல்லைன்னு நான் சொன்னேன்.” அவன் நிறுத்த, அவளுள் அதிர்ச்சி. அதிர்ச்சியில் அவள் உறைந்தாலும், அவள் இயல்பாக காரை செலுத்திக்கொண்டிருந்தாள். அவன் அதை குறித்துக்கொண்டான்.
“நீ தான் செய்தேன்னு சொல்றதுக்கும் ஆதாரமில்லை. நீ செய்யலைனு சொல்றதுக்கும் ஆதாரம் இல்லை. அது தான் ஜாமீன் கிடைச்சிருச்சு” அவன் பேச அவளிடம் மௌனம். அவள் காரை லாவகமாக செலுத்திக்கொண்டிருந்தாள்.
‘இத்தனை விஷயம் சொல்லியும் இவள் கார் ஓட்டும் பொழுது தடுமாறவில்லை’ அவன் அவளை பார்த்தபடி, “அந்த பொண்ணு எங்கன்னு தெரியலை. அந்த பொண்ணு கிடைத்தால் தான் நம்ம கேஸ் ஈஸியா முடியும். ஆனால், அந்த பொண்ணு யார்கிட்ட சிக்கிருக்குன்னு தெரியலை. அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆகுறதுக்குள்ள நாம அந்த பெண்ணை காப்பாத்தணும்.” அவன் கூற, அந்த பெண்ணை பற்றிய எண்ணத்தில் அவள் முகத்தில் வியர்வை முத்துக்கள். அவள் சிந்தை இங்கு இல்லாவிட்டாலும், அவள் ஓட்டிச்சென்ற கார் இயல்பாக பயணித்துக் கொண்டிருக்க, அருகே இருந்த கடற்கரை அருகே அவளை வண்டியை செலுத்தச் சொன்னான். இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு கால்கள் மண்ணில் புதைய நடக்க ஆரம்பித்தனர்.
அவள் விலகி நடக்க, அவன் அவளை நெருங்கினான். அவளை இடையோடு அணைத்துக்கொண்டான். “அன்னைக்கு கார் ஓட்டும் பொழுது என்னை பத்தி தானே யோசிச்சிகிட்டு ஒட்டின? நம்ம பிரச்சனை பத்தி தானே யோசிச்ச?” அவன் கேட்க அவள் பதில் கூறாமல் முன்னே நடக்க, அவன் அவள் இடையை பிடித்து நிறுத்தி, அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி, “சொல்லு” என்றான் அவன் கண்களை ஆழமாக பார்த்து.
“என்ன சிந்தனையில் நான் எப்படி வண்டி ஓட்டுறேன் பார்க்கத்தானே இன்னைக்கு என்னை வண்டி ஓட்ட வச்சி எல்லா விஷயத்தையும் சொன்னீங்க. ஒரு வக்கீலா என்னை நோட்டம் பார்த்தீங்க” அவள் கண்களில் நீர் முத்துக்கள் கோர்க்க, தன் முகத்தை திருப்பிக்கொண்டாள். அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.
“நீ தான் அழகா தெளிவா நிதானமா ஓட்டுறியே. நீ தப்பு பண்ணலைன்னு ஒரு கணவனா எனக்கு தெரிந்தாலும், வக்கீலா என் வேலையை நான் செய்து தானே ஆகணும்” அவன் நீர் முத்துக்கள் கோர்த்த அவள் விழி நீரை சுண்டியபடி கூற, “எனக்கு கார் ஓட்ட சொல்லி கொடுத்தது வக்கீல் இல்லை. கெளதம் ஸ்ரீநிவாசன் என் கணவர்.” அவள் பெருமித்ததோடு கூற, அவன் அவளை வாஞ்சையோடு பார்த்தான்.
அவன் வாஞ்சையில் அவள் உருக, அவள் சட்டென்று சுதாரித்துக்கொண்டு, “அந்த பொண்ணு யாரு? என்ன ஆனா? தேவராஜ் ஆளுங்க அவளை ஏதாவது பண்ணிட்டா?” அவள் கேட்க, “அந்த பெண்ணை கண்டுபிடிக்கணும். இதுக்கு பின்னாடி யார் இருக்கானு கண்டுபிடிக்கணும். இந்த தேவராஜ் விஷயத்திற்கு ஒரு முற்று புள்ளி வைக்கணும்.” அடுக்கிக்கொண்டே போன அவன் சட்டென்று நிறுத்தினான். தலையசைத்துக் கொண்டான்.
“அதெல்லாம் விடு. நான் பார்த்துகிறேன். அன்னைக்கு வண்டி ஓட்டும் பொழுது, உனக்கு என் சிந்தனை தானே?” அவன் கேள்வியாக நிறுத்த, “….” அவளிடம் மௌனம்.
அவள் முகத்தை கைகளில் ஏந்தி, “நாம ஏன் பிரியனும் மதும்மா?” அவன் உடையும் குரலில் கேட்க, அவன் குரலில் அவன் ஏக்கத்தில் நொறுங்கிவிடுவோமா என்று அவள் அஞ்ச,
“அந்த வாட்ஸாப்ப் குரூப்பில் போட்டோ வந்த குடிகார பொண்ணு தானே இது. குடிச்சிட்டு கார் ஏத்தி ஒரு பெண்ணை கொலை செய்திருச்சில்லை?” இரு பெண்களின் குரலில் இருவரின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது. ‘குடிகார பொண்ணு…’ அந்த வார்த்தையில் அவள் அவனை விட்டு விலகி நின்றாள்.
“அக்கா நியூஸ்ல அந்த பெண்ணை காணுமுன்னு தான் சொல்றாங்க. விசாரணைன்னு போடுறாங்க.” இன்னொருத்தி கூற, “நியூஸ் எல்லாம் காசு கொடுத்து வாங்கிருப்பாங்க. முதல் நியூஸில் போட்டாங்க பாரு. ட்ரெண்டிங் நியூஸ். அது தான் உண்மை. வாட்ஸாப்ப், ஃபேஸ்புக் எல்லாத்திலையும் இவளை பத்தி தானே போடுறாங்க? அது தான் உண்மையா இருக்கும். எங்க அண்ணன் ஸ்டேட்டஸ்ல கூட வச்சிருந்தான். அப்ப அது தானே நிஜம் ” அவர்கள் பேசிக்கொண்டே போக,
“மீடியா ட்ரெண்டிங்கில் சொல்றது வாட்ஸாப்ப் ஃபேஸ்புக்கீல் வர்றது தான் இவங்களுக்கு நிஜம் இல்லையா?” மதுமதி அசூயையான புன்னகையோடு கேட்க, “ரெண்டு நாளில் ஒரு சினிமா நடிகை இல்லை சீரியல் நடிகை கல்யாண நியூஸ் வந்தா அவங்க பின்னாடி போகிற கூட்டம் தானே இது ” அவன் அவர்களை சிறிதும் மதிக்காமல் கூறினான்.
அதே நேரம், நான்கு பேர் ஒரு பெண்ணை துரத்த அந்த பெண் இவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள்.
மது… மதி! வருவாள்…
Leave a Reply