Mathu…Mathi!-6

mathu...mathi!_Coverpic-35ec4ab8

Mathu…Mathi!-6

மது…மதி! – 6

“என்னங்க… அங்க பாருங்க” ஒரு இளம் பெண் ஓடி வந்துகொண்டிருந்த திசையை நோக்கி கை காட்டினாள் மதுமதி.

அதற்குள் அவளை பின்னே துரத்தி கொண்டு வந்த நான்கு பேர் அவளை நோக்கி ஓர் கட்டையை வீச அவள் தடுக்கி விழுந்தாள்.

அவள் சுதாரித்து எழுவதற்குள் அவர்கள் அவளை நெருங்க, அவர்கள் பார்வை வட்டத்திற்குள் வந்திருந்தான் கெளதம் ஸ்ரீநிவாசன்.

“அட்வகேட்” ஒருவன் குரல் கொடுக்க, அவர்கள் ஓட்டம் எடுத்தார்கள்.

கெளதம் அவர்களை தொடர்ந்தான். அவர்களை பிடிக்கும் வேகத்தில் அல்ல. அவர்களை அறிந்து கொள்ளும் நோக்கோடு. அவர்கள் சிறிது தூரத்தில் ஜீப்பை எடுத்து கொண்டு வேகமாக செல்ல,  கெளதம் அவர்களையும் அவர்கள் செல்லும் வண்டியையும் கூர்மையாக பார்த்தான்.

அதே நேரம், அவர்கள் துரத்தி வந்த பெண், எழுந்து அவளை சற்று சுதாரித்துக் கொண்டு கௌதமை பார்த்த படி அவன் பாதுகாப்பில் நின்றாள்.  அப்பொழுது அங்கு வந்த மதுமதியை பார்த்த அவள் மீண்டும் ஓட்டம் பிடிக்க, மதுமதி அவளை பின் தொடர்ந்தாள்.

மதுமதி அவளை எட்டி பிடிக்க, அவள் கைப்பை நழுவி கீழே விழுந்தது. அந்த பெண் பையை எடுத்துக்கொண்டு ஓட, அங்கு வந்த ஆட்டோவில் ஏறி, எதையோ கூற, அந்த ஆட்டோ வேகம் எடுத்தது.

மதுமதி உதட்டை பிதுக்கி சோகமாக நின்றாள். “மது…” அவன் அழைக்க, அவள் அவன் பக்கம் திரும்பினாள்.

“அந்த பெண் நீ ஆக்சிடெண்ட் பண்ண பெண்ணா?” அவன் கேட்க, “இல்லை…” என்று அவள் மறுப்பாக தலை அசைத்தாள். “அப்புறம் எதுக்கு அந்த பெண்ணை துரத்தின?” கெளதம் கண்களை சுருக்க, “அந்த பொண்ணு உங்க பின்னாடி பாதுகாப்பா நின்னா. ஆனால், என்னை பார்த்ததும், மிரண்டு விழிச்சா. அப்புறம் வேகவேகமா ஓடினா. அது, தான் சந்தேகம் வந்து அவளை பிடிக்க முயற்சித்தேன். ம்… ச்… இது மட்டும் தான் அவ பையிலிருந்து கிடைச்சுது” அந்த பெண்ணின் கைப்பை கீழே விழும் பொழுது கிடைத்த காகிதத்தை எடுத்து கௌதமிடம் நீட்டினாள்.

“அந்த பெண்ணை துரத்தினவங்க யாரு?” அவள் கேட்க, “எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு அதை உறுதி செய்யணும். அவங்களை பார்க்கவும், வண்டியை நோட்டமிடவும் தான் போனேன்.” அவன் கூற, அவள் தலையசைத்துக் கொண்டாள். அவள் கொடுத்த காகிதத்தை அவன் பத்திரப்படுத்திக் கொண்டான்.

இருவரும் எதுவும் பேசவில்லை. கௌதமின் நெற்றி சுருங்கியது. அவன் பலவிதமாக யோசித்துக்கொண்டிருந்தான். “பெரிய பிரச்சனையோ?” அவள் கேட்க, அவன் எதுவும் பேசவில்லை. கடற்கரை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

அவளும் அவனோடு நடந்தாள். அவள் அருகே இருப்பதை மறந்தவன் போல் சிந்தனையில் ஆழ்ந்தபடி அவன் நடக்க, அவளும் எதுவும் பேசவில்லை. கடல் நீர் அவர்கள் காலை நனைக்கும்படி அவன் அமர, அவளும் அவனருகே அமர்ந்துக் கொண்டாள்.

‘எல்லாமே தப்பா இருக்கே.’ அவன் தன் வலது கையால் தன் கண்களை அழுத்தமாக மூடி அழுத்தி பின் திறந்தான். தாள முடியாத வருத்தத்தில் குழப்பத்தில் இருக்கிறான் என்பதை அவன் செயலில் புரிந்து கொண்டு, மேலும் எதுவும் தொணதொணக்காமல் மௌனமாக அமர்ந்திந்தாள் மதுமதி.

சில நிமிடங்களில், தன்னை மீட்டுக்கொண்டு, “மதும்மா…” என்று அவளை அழைக்க, அவன் முகம் பார்த்து சிரித்தாள். “கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகிரும்” அவள் ஆறுதல் கூற, அவன் சிரித்துக்கொண்டான்.

அந்த சிரிப்பு சுரத்தில்லாமால் இருக்க, “என்னங்க…” அவள் உரிமையோடு அவன் தோளில் சாய, அவன் அனைத்தும் மறந்து போனான். அவன் அவளை தன்னோடு சேர்த்து கொண்டான். “மதும்மா… நான் உன்னை இனி தனியா விடவே மாட்டேன்.” அவன் கைகள் கொஞ்சம் நடுங்கியது. அவன் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவள் சிந்தை விரும்பினாலும், அவள் கைகள் நடுங்கும் அவன் கரங்களை தன் மேனியின் மேல் அழுத்தி, அவள் அருகாமையை உறுதி செய்தது.

அப்பொழுது அவர்களை நோக்கி ஒரு தம்பதி சக்கர நாற்காலியோடு வர, அவர்கள் இருவர் முகத்திலும் ஒரே பாவனை. கடந்த சில நாட்களில் நடந்த அசாம்பாவித்தை கடக்க செய்த்தது, அவர்கள் கடந்த கால வாழ்க்கை. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அவர்கள் எண்ணமும் பின்னோக்கி சென்றது.

 

*** ****

‘மது… மதி!’ அவன் விழிகள் தன் கருவிழிகளை அசைக்காமல் அவளை ரசிக்க, அவன் தன் அதரங்களை அசைக்காமல், அவளை நெஞ்சோடு அழைத்து கொண்டான்.

‘இல்லை இப்படி அழைக்க கூடாது. ‘மதுமதி…’ என்று சேர்த்து தான் அழைக்க வேண்டும். ஒரே பெயர் என்று தான் சொன்னார்கள்’ அவன் அறிவு எடுத்தரைத்தது.

அவன் மனமோ, அவளை பார்க்கும் பொழுதெல்லாம் தேன் போன்றே தித்திக்க… அவள் முன்பு பேசியதை கேட்ட பொழுது, அவன் சிந்தை அவள் அறிவில் வியந்து நிற்க, அவன் அழைப்பு ‘மது…’ என்று ரசனையோடும் அவன் அறிவு ‘மதி…’ என்ற வியப்போடும் அழைக்கிறது.

அவள் அவனுக்கு ‘மது… மதி!’ ஆகி போனாள்!

அருகே பச்சை பசேலென்ற வயல், சலசலவென்று வெள்ளியின் நிறத்தில்  ஓடும் நீர். சில்லென்ற தென்றல் காற்று, அவள் முகத்தை வருடியது.

நிமிர்ந்து நின்றபடி இயற்கையை ரசித்து கொண்டிருந்தாள் அவள்.

நாணம், தயக்கம், அச்சம் இப்படி எதுவும் அவளிடம் இல்லை. பளபளக்கும் மேனி, அனைத்தும் பாந்தமாய் அழகாய் இருந்தாள். சங்க கால புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள் வரை கூறும் அனைத்து உவமைகளும், அவளிடம் தோற்றே போகும் என்று உரைக்கும் அளவுக்கு அழகாய் இருந்தாள். இல்லை அவன் கண்களுக்கு அப்படி தெரிந்தாள் என்றும் கூறலாம்.

‘இன்னைக்கு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கல்யாணம். திருநெல்வேலிக்கு போறதுக்கு முன்னாடியே, நான் பேசணும்னு இவளை தனியா கூப்பிட்டு வந்திருக்கேன். கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் நிற்கிறாளே?’ அவனுக்கு ஆச்சரியம். அவளை பார்த்த நாள் முதல் இன்று வரை அவனுக்கு பல ஆச்சரியங்கள் தான். ஆனால், இன்று சற்று அதிகப்படியாக இருந்தது.

‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை. பாரதி கண்ட புதுமை பெண் இவள் தான் போலும்.’ அவனுக்கு மென்னகை எட்டி பார்த்தது.

“ம்…க்கும்…” அவன் தொண்டையை கனைத்து கொண்டான்.

‘இப்படி தான் என்னை கூப்பிடுவாங்களா?’ அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

‘எப்படி ஆரமிப்பது? என் கால்கள் சரியாக இருந்திருந்தால், நான் அவளை விட உயரமாக இருந்திருப்பேன். நின்று கொண்டு, ‘ஹலோ…’ என்று சொல்லி இருப்பேன். அவள் கரங்களை பற்றி இருப்பேன்.’ அவன் கண்கள் அவள் கரங்களின் மீது அன்போடு வந்து நின்றது.

‘இந்த சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு, இப்பொழுது நான் கைகளை நீட்டினால், ஏதோ உதவி கேட்குற மாதிரி இருக்கும்.’ அவனுள் இறுக்கம் வந்து அமர்ந்து கொண்டது.

அழகும், அறிவும் நிறைந்த அவளிடம் காதலை கூட ரசனையாக சொல்ல முடியாத அவன் நிலையை எண்ணி அவன் முகம் கடுகடுத்தது.

‘எல்லாம் சரியாகும்’ தன்னை நிதானப்படுத்தி கொண்ட அவனிடம், “க்…க்கும்…” மீண்டும் கனைப்பு.

அவள் அவனை பார்த்தாள்.

“என் பெயர் கெளதம் ஸ்ரீநிவாசன். அட்வகேட் கெளதம் ஸ்ரீநிவாசன்” என்றான் புன்னகையோடு. தன் தடுமாற்றத்தை மறைக்கும் வகையான புன்னகை.

“தெரியும். பாட்டி சொன்னாங்க.” அவள் முகத்தில் அவன் புன்னகைக்கான பிரதிபலிப்பு.

“இந்த திருமண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து உங்ககிட்ட பேசணுமுன்னு முயற்சி பண்றேன். ஆனால் முடியலை” அவன் குரலில் மெல்லிய கோபம்.

“திருமண பேச்சு ஆரம்பிச்சு ஒரு வாரந்தான் ஆகுது. ஒரே வாரத்தில் இந்த பேச்சை கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க.” அவன் கோபத்தில் அர்த்தம் இல்லை என்பது போல் அவள் கூற, அவள் கூற்றை தான் பேச எண்ணியதற்கு சாதகமாக மாற்ற முயற்சித்தான் அவன்.

“ஏன் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?” அவன் தான் கேட்க  நினைத்ததை கேட்டுவிட்டான்.

மதுமதியின் செவிகளில் அவள் என்றோ பேசிய வார்த்தைகள் இன்று ஒலித்தது. ‘அம்மா… நீங்க ஏம்மா கல்யாணம் செய்தீக.  இப்ப கூட நமக்கு அப்பா வேண்டாம் அம்மா. இங்கிருந்து போய்டலாம் அம்மா. குறைஞ்சபட்சம் நானாவது பிறக்காமல் இருந்திருக்கலாம்’ அன்று மதுமதி கதறியது அவள் செவிகளில் இப்பொழுதும் ஒலித்தது.

 அந்த நாளின் நினைவில் அவள் உடல் இன்றும் நடுங்கியது. தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். தன் தாயின் தலையிலிருந்து வடிந்து கொண்டிருந்த இரத்தம் இப்பொழுதும் அவள் கைகளை நனைப்பது போன்ற பிசுபிசுப்பை அவள் உணர, தன் கைகளை தேய்த்து கொண்டாள்.

“உஃப்…” என்று பெருமூச்சை வெளியிட்டு, ‘இந்த சிந்தனை ஓட்டம் எதற்கும் நல்லதில்லை’ என்ற யோசனையோடு தன் எண்ண ஓட்டத்திற்கு கடிவாளமிட்டு கொண்டாள்.

கௌதமின் முகத்தில் ஆர்வம். அதை மறைத்து கொண்டு, “விருப்பம் இல்லைனா…” அவன் திருமணத்தை நிறுத்த மனமில்லாமல், வாக்கியத்தை நிறுத்தினான்.

“விருப்பம் இல்லைன்னு சொல்ல முடியாது. தெரியலைன்னு சொல்லலாம். உங்களை பத்தி எல்லாரும் சொன்னாங்க. நான் இன்னைக்கித்தான்  உங்களை பார்க்குறேன்” அவள் நேரடியான பதிலில் அவன் தலை அசைத்து கொண்டான்.

‘தன் சக்கர நாற்காலி நிலையை பற்றி எல்லாரும் கூறி இருப்பார்கள் அதை தெரிந்து தான் இவள் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறாள்’ என்று அவன் புரிந்து கொண்டான்.

“சரி, என்னை பார்த்தாச்சு. இப்ப என்ன முடிவு?” அவன் அவளுடைய நேரடி பேச்சில் கேள்வியோடு புருவம் உயர்த்தினான். இது இருவரின் வாழ்க்கை, அவள் விருப்பமில்லாமல் எதுவும் நடக்க கூடாது என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.

அவள் பார்வை அவன் கால்களில் வந்து நின்றது. அவன் முகத்தில் மெல்லிய வாட்டம் வந்தமர்ந்து.

 “….” அவர்களிடையே மௌனம்.

அவனை முன்பு விரும்பிய பலர், அவனின் இந்த நிலைக்கு பின் அவனை நிராகரித்து இருக்கிறார்கள். நிராகரிப்பு அவனுக்கு புதிதல்ல. அவனுக்கு அதில் வருத்தமுமில்லை. அவர்கள் யாரையும் அவனுக்கும் பிடிக்கவில்லை.

ஆனால், இன்று இவளை பிடித்திருக்கிறது. அதனால், வந்த வாட்டம்.

“நான் பேசலாமா? நான் பேசினா தப்பா நினைக்க மாட்டீங்களே?” அவள் கேள்வியோடு நிறுத்தினாள்.

“பேசுங்க…” அவன் மரியாதையாகவே பேசினான்.

“எனக்கு அம்மா, அப்பா கிடையாது. நான் ஒரு…” அவள் வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்தினாள்.

“அது எதுக்கு இப்ப?” அவள் வருந்துவது தாங்காமல் அவளை இடைமறித்தான்.

“இல்லை… இல்லை… வருத்தம் எல்லாம் எனக்கு இல்லை. எனக்கான விஷயத்தை நான் நேரடியா கேட்டு தெரிஞ்சிக்கிட்டுதான் எனக்கு பழக்கம்.” அவள் பட்டென்று கூறினாள்.

“கேளுங்க, அதுக்கு தானே உங்க கிட்ட நான் தனியா பேசணுமுன்னு கூட்டிட்டு வந்தேன். என்னால் எல்லோரை போலவும் நடக்க முடியாது. உங்களுக்கு அது பெரிய குறையா தெரிஞ்சா…” அவன் நிறுத்த, அவன் பேச்சின் போக்கு பிடிக்காமல் அவள் அவனை இடைமறித்தாள்.

“ச்… ச்ச… அப்படி இல்லை. ஆனால், உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால்?” அவள் முடிக்க, அவன் கண்கள் சுருங்கியது.

“புரியலை…” அவன் அவளிடமே பேச்சை திருப்ப, “இல்லை உங்களுக்கு அது பெரிய குறையா தெரிஞ்சா?” அவள் அவனிடம் கேட்டாள்.

“….” அவன் அவளை கூர்ந்து பார்க்க, “நீங்க பெரிய பணக்காரர். பெரிய வக்கீல். உங்க அந்தஸ்துக்கு பொண்ணு பார்க்காம, என்னை பார்த்த காரணம் என்னனு கேட்கனுமுன்னு எனக்கு தோணுச்சு. இவ, பணம் காசு இல்லாதவ, யாரும் இல்லாதவன்னு…” அவள் நிறுத்த, அவன் அவளை ஆழமாக பார்த்தான்.

“இந்த இங்கிலிஷ்ல்ல எல்லாம் சொல்லுவாங்களே? Take it for granted… அப்படி என்னை கல்யாணம் செய்யணும்னு நினைச்சீங்கனா, இந்த கல்யாணம் வேண்டாம். இந்த கல்யாணத்தை நிறுத்திருங்க.” அவள் தன் பேச்சை நிறுத்தினாள்.

அவன் மேலே பேசுமுன் அவளே தொடர்ந்தாள்.

“நீங்க பணக்காரங்க, நான் ஏழை. நீங்க நிறைய படிச்சிருக்கீக. நான் அவ்வளவு படிக்கலை. இதனால், நான் take it for granted அப்படின்னு நீங்க நினச்சா இந்த கல்யாணம் வேண்டாம். அப்படி எல்லாம் இல்லைனா, எனக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம் தான்.” அவள் அவனை பார்த்து கூறினாள்.

“ஹா… ஹா… உங்களை Take it for granted… மாதிரி எடுக்க முடியுமா? ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரித்தான்.

***

திடிரென்று நனவுலகிற்கு வந்தவளாக, “நான் உங்களுக்கு டேக் இட் ஃபார் க்ராண்ட்டட் (Take it for granted)  தானே?” அவள் ஏமாற்றத்தோடு கேட்டாள்.

அவள் மேனியில் உரிமை கொடாண்டிய கைகளை சட்டென்று விலக்கினான் கெளதம். அன்றைய புன்னகை அவனிடம் இன்று இல்லை.

“நான் உன்கிட்ட அப்படி ஒரு நாள் நடந்திருக்கேனா?” அவன் கண்களில் கோபம் குரலில் கர்ஜனை. அவளிடம் பதிலில்லை.

“நம்ம முன்னாடி எவ்வளவு பிரச்சனை இருக்குனு உனக்கு புரியுதா மதும்மா? உன்னை சுத்தி, உன்னை சிக்க வைக்க யார்யாரோ வலை பிண்ணுறாங்க. நீ என்னை எதிரியா பார்க்குற” அவன் அவளிடம் சிடுசிடுக்க, “மத்தவங்க வலையிலிருந்து நீங்க என்னை காப்பாதிருவீங்க. ஆனால், நீங்க எனக்கு விரித்த வலையிலிருந்து தான் என்னால் என்னை காப்பாத்திக்க முடியலை” அவள் வார்த்தைகளை அள்ளி வீச, அவன் எதுவும் பேசாமல் மடமடவென்று காரை நோக்கி சென்றான்.

அவளும் எதுவும் பேசாமல் அவனை பின்தொடர்ந்தாள். அவள் ஏறியதும் கார் சிவ்வென்ற வேகத்தில் பறந்தது.

அவர்கள் வீட்டிற்குள் சென்றதும் அவன் அவள் மீது காட்ட முடியாத கோபத்தை கதவின் மீது காட்டி அதை மொந்தென்று அடைத்தான். அத்தனை வெளிச்சமில்லை. இருட்டி இருந்தது. மின்விளக்கை உயிர்ப்பிக்க இருவருக்கும் மனமில்லை.

மெல்லிய நிலவொளி.

“இப்படி டம்டமுன்னு நடந்தா எல்லாம் ஆச்சா? நான் சொல்லுவேன். இப்பவும் சொல்லுவேன். எப்பவும் சொல்லுவேன். உங்களுக்கு நான், டேக் இட் ஃபார் க்ராண்ட்டட் தான். டேக் இட் ஃபார் க்ராண்ட்டட் தான். டேக் இட் ஃபார் க்ராண்ட்டட் தான்.” அவள் உச்சாணி கொம்பில் கத்த, அவன் பாதம் அவளை கோபமாக வெகு கோபமாக நெருங்கியது.

“டேக் இட் ஃபார் க்ராண்ட்டட் அப்படினா என்னனு உனக்கு தெரியுமா?” கேட்டுக்கொண்டே அவன் அவளை நெருங்க, அவள் பின்னே நடந்தாள். “பொண்டாட்டிக்கு தெரியாத விஷயத்தை நான் தானே கத்துக் கொடுக்கணும்.” அவன் அவளை நெருங்க, அவள் இன்னும் இன்னும் பின்னே நடந்தாள்.

“டேக் இட் ஃபார் க்ராண்ட்டட்” அவன் பெருங்குரலில் சிரித்தான். அன்றைய சிரிப்புக்கும் இன்றைய சிரிப்புக்கும் ஆயிரம் வித்தியாசத்தை மதுமதி சொல்லுவாள்.

பின்னே நடந்த அவள் சுவரில் மோதி நின்றாள். அவள் முகத்தை ஒற்றை ஆள் காட்டி விரலால் தூக்கினான். “சொல்லித்தரட்டுமா மதும்மா?” அவன் கேட்ட தொனி பலவாறாக ஒலிக்க, அவன் சுவாசக்காற்று அவளை தீண்ட அவன் அருகாமையில் கிஞ்சித்தும் பயமின்றி, “எனக்கு நீங்க ஏற்கனவே சொல்லி கொடுத்துடீங்க கெளதம்” கோபமான அவன் தோளில் சாய்ந்து அவன் சட்டையை பிடித்துக்கொண்டு அவள் விம்ம, அவள் முகத்தை கைகளில் ஏந்தி, அவள் கண்ணீரை அவன் விரல் கொண்டு துடைத்து, “நான் சரியா சொல்லி கொடுக்கலை போல தெரியுதே மதும்மா” அவன் விரலும் வார்த்தைகளும் பாசத்தை காட்டினாலும், அவன் குரல் கோபத்தை மட்டுமே காட்டியது.

“இன்னைக்கு சொல்லித்தரேன் என் மதுமதிக்கு… என் மதுக்கு…” ‘என்’ என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்து தன் மனைவியை பார்த்து நக்கலாக சிரித்தான்.

அதே நேரம்,

“யோவ், அந்த அட்வகேட்டும் அவன் பொண்டாட்டியும் வருத்தத்தில் இருப்பாங்கன்னு பார்த்தா, ஜாலியா பீச்ல இருக்காங்க. பீச் ஹவ்ஸில் ஹனிமூன் கொண்டாடிகிட்டு இருக்காங்க. அவங்களை வீட்டோட கொழுத்துங்க” வந்த கட்டளையில் தேவராஜ் சற்று மிரண்டு போனான்.

மது… மதி! வருவாள்…   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!