Mogavalai – 5

coverpic_mogavalai-d2fe8ca1

அத்தியாயம் – 5

ராகவ் பேசிவிட்டு சென்றதில்,  பார்வதி அதீத அதிர்ச்சியிலிருந்தார்.  ஆர்த்திக்கும் சற்று அதிர்ச்சி தான். ஆனால், ஆர்த்தியின் சிந்தனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருந்தது.

‘நான் ஆசைப் பட்ட வாழ்க்கை கிடைக்கலை. இன்னொரு வாழ்க்கை அமைத்துக் கொள்வதில் என்ன தவறு?’ என்ற எண்ணம் தோன்ற, அந்த எண்ணத்தை ஆசை கொண்ட அவள் மனம், ‘சரி…’ என்று கூறியது.

பார்வதி மீண்டும் பேசத் தொடங்க, “அம்மா… ” என்று தன் தாயை அடக்கினாள் ஆர்த்தி.

“அம்மா… எனக்கு இதில் சம்மதம் அம்மா. சரின்னு சொல்லிருங்க.” என்று தன் மகள் கூற, ‘நான் என் மகளை இப்படியா வளர்த்தேன்?’ என்ற எண்ணம் பார்வதிக்குத் தோன்றியது.

‘இதை எல்லாம் கண் கொண்டுப்  பார்க்கத்தான், நான் உயிரோடு இருக்கேனா?’ என்ற கேள்வி அவர் மனதில் தோன்றியது.

‘கலங்கக் கூடாது…’ என்று தன்னைத் தானே சமன்படுத்திக்  கொண்டு, இதை எப்படிக் கையாளுவது என்று மௌனமாக யோசித்தார் பார்வதி.

‘அடித்துத் திருத்த ஆர்த்தி சின்னப் பெண் இல்லை. அவள் மாப்பிள்ளையை உதாசீனப்படுத்தும் பொழுதே, நான் கண்டிச்சிருக்கணும். பண்ணாமல் இருந்தது என் தப்பு தான். அதுவா சரியாகும். அவளா புரிஞ்சிப்பான்னு, நான் நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம்.’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டார் பார்வதி.

‘குழந்தை வளர, வளர  சரியாகுமுன்னு நினச்சேனே… ஆனால், இன்னொருத்தன் வந்துட்டா?’ என்ற கேள்வி தோன்றப் பார்வதி நடுங்கிப் போனார்.

‘இதை எப்படிக் கையாளுவது?’ என்ற கேள்வி அவர் மனதில் எழ, தன் தாயின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு ஆர்த்தி அவள் அறைக்குள் செல்ல, “இது நடக்காது.” என்று ஆர்த்தியை நிறுத்தும் விதமாக அழுத்தம் திருத்தமாகக்  கூறினார் பார்வதி.

“அம்மா… நீங்க நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது. என்னால, ஒரு நாளும் அவனோடு சேர்ந்து வாழ முடியாது.” என்று ஆர்த்தி தன் தாயின் மனதைப் படித்தது போல் கூற, “என்ன டீ மாப்பிள்ளையை மரியாதை இல்லாம?” என்று பார்வதி எகிறினார்.

“அம்மா… அவர் மாப்பிள்ளையே இல்லைங்கறேன் நான். நீங்க என்னடான்னா?” என்று ஆர்த்தி கடுப்படிக்க, “அது தான் ஏன்னு கேட்கறேன்?” என்று பார்வதி முடிவோடுப் பேச ஆரம்பித்தார்.

“பிடிக்கலை…” என்று ஆர்த்தி ஒத்தை வார்த்தையாகக் கூற, “ஏன் பிடிக்கலை?” என்று தன் மகளின் பிடிவாதத்திற்கு ஈடு கொடுத்தார் பார்வதி.

இத்தனை சூடான விவாதத்தைப் பார்த்திராத குழந்தை, “வீல்…” என்று அழ ஆரம்பித்தது.

தன் மகளை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு, “அம்மா… உங்களால் இந்தத் திருமணத்தை  இப்ப ஏத்துக்க முடியலை. ஆனால், காலப்போக்கில் சரியாகிரும்.  நீங்க சொல்லுவீங்களே, மீராவை வச்சிக்கிட்டு நான் தனியா கஷடப்படுவேன்னு… ராகவ் ரொம்ப கெட்டிக்காரர். இந்த கல்யாணம் எல்லா கஷ்டத்துக்கும்  முற்றுப் புள்ளி வைக்கும்.” என்று ஆர்த்தி தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

மகளின் நிதானத்தில், பார்வதியும் நிதான நிலைக்கு வந்தார்.

“ஒரு பெண்ணோட ரெண்டாவது கல்யாணத்துக்கு நான் எதிரி இல்லை. ஏத்துக்  கொள்ள முடியாத பழமைவாதியும் இல்லை.” என்று ஒரு நொடி தன் பேச்சை நிறுத்தினார்.

“மாப்பிள்ளை உயிரோட இல்லைன்னா இரண்டாம் கல்யாணம் பண்ணலாம். மாப்பிள்ளை குடிச்சிட்டு வந்து, உன்னை அடிச்சா அடி வாங்கி செத்தாலும் அங்க சாவுன்னு நான் சொல்ல மாட்டேன். அந்த மாப்பிள்ளையைத் தூக்கி போடுன்னு நான் சொல்லுவேன். மாப்பிள்ளைக்கு வேறு பெண்ணோட தொடர்பு இருந்தா, தாலியைக் கழட்டி மூஞ்சில விட்டெறின்னு நானே சொல்லுவேன்.” என்று கூறிவிட்டுத் தன் மகளை ஆழமாகப் பார்த்தார்.

“ஆனால், உன் மாப்பிளைக்கு இப்படி எதுவுமே இல்லையே ஆர்த்தி.” என்று தன் மகளை விரக்தியாகப் பார்த்தார்.

“பிடிக்கலைன்னு சொல்ற உன்னால், உருப்படியா ஒரு காரணம் சொல்ல முடியுமா?” என்று தன் மகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார் பார்வதி.

தன் மேல் குற்றம் சொல்லவும், ஆர்த்தி சீறிக்கொண்டுப் பேச ஆரம்பித்தாள்.

“ஒன்னென்ன ஓராயிரம் சொல்லுவேன். மாப்பிள்ளை… மாப்பிள்ளைன்னு நீ கொண்டாடுற மனுஷன், பார்க்க படு சுமார். அதுவும் என் அழகுக்கு முன்னாடி, இன்னும் குறை. கிளியைப் பிடிச்சி குரங்கு கையில் குடுத்துட்டாங்கன்னு என் காது படப் பேசினாங்க.” என்று ஆர்த்தி கூற, பார்வதி தன் மகள் பேசட்டும் என்று அமைதி காத்தார்.

“அழகை விடுங்க… சரி பரவாலைன்னு நானுமே ஏத்துக்க ஆரம்பிச்சேன். கெட்டிக்காரத்தனம். தன் கல்யாணப் பேச்சை தானே பேசி முடிக்கிற கெட்டிக்காரத்தனம் வேண்டாம். கட்டின பொண்டாட்டியைப் புரிஞ்சிக்கிற கெட்டிக்காரத்தனம் கூட அவர் கிட்ட கிடையாது. என் கூட வரும் பொழுதாவது கொஞ்சம் கம்பீரமா, பதட்டம் இல்லாம வரச் சொல்லுவேன். அது கூட அவரால் வர முடியாது.” என்று சலிப்பாகக் கூறினாள் ஆர்த்தி.

“கார் ஓட்டத் தெரிய வேணாம். ஒரு பைக் ஓட்டக் கூடத் தெரியாத மனுஷனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க.” என்று ஆர்த்தி கூற, பார்வதி தன் மகளைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“இதை கேட்டா, ஒரே  பிள்ளைன்னு பொத்திப்பொத்தி  வளர்த்தாங்களாம்.” என்று முணுமுணுத்தாள் ஆர்த்தி.

“சினிமா நடிகர் அளவுக்கு இல்லைன்னாலும், ஒரு சீரியல் நடிகன் மாதிரி கூடவா இருக்கக் கூடாது?” என்று மனதின் குறையைக் கேள்வியாக்கினாள் ஆர்த்தி.

“கலகலன்னு பேசத் தெரியாது. நாலு பேரு வந்தா, பம்ம வேண்டியது.” என்று ஆர்த்தி செல்வமணியின்  குறைகளை அடுக்கிக் கொண்டே போக, “இதெல்லாம் ஒரு குறையா? மாப்பிள்ளை நல்லவர்!” என்று பார்வதி அவள் பேச்சில் குறுக்கிட்டார்.

“யாருக்கு வேணும் நல்லவன்? வல்லவன் வேணும்.” என்று ஆர்த்தி கூற, “அதை நீ செய்திருக்கணும் ஆர்த்தி. போன கொஞ்ச நாளிலேயே, அம்மா வீட்டில் வந்து உக்காந்துகிட்டு… அவரை நீ புரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே விவாகரத்து வரைக்கும் வந்துட்டியே ஆர்த்தி.” என்று தன் மகளின் வாழ்வைப் பற்றிய பரிதவிப்போடுக் கூறினார் பார்வதி.

“நான் ஏன் பண்ணனும்?” என்று ஆர்த்தி கேட்க, “கல்யாண வாழ்க்கைங்கிறது கடினமான பயணம் தான் ஆர்த்தி. வளைவுகளும், மேடு பள்ளங்களும் இருக்கத்தான் செய்யும். நாம வளைந்து கொடுத்து தான் போகணும். சில வலிகளை தாங்கித் தான் ஆகணும். பயணத்தை நிறுத்துவது முட்டாள்தனம். பயணத்தில் ஆழமான பள்ளத்தாக்கு வராதவரைக்கும், வலியைத் தாங்கிட்டு நீ ஓடியிருக்கணும் ஆர்த்தி. இந்த வலி, கல்யாண வாழ்க்கையில் பெண்களுக்கு மட்டுமில்லை. ஆண்களுக்கு உண்டு ஆர்த்தி.” என்று பார்வதி கூற, ஆர்த்தி முகத்தைச் சுளித்தாள்.

“அம்மா! தயவு செஞ்சு நிறுத்து. நீங்க சொல்றதை கேட்குற மனநிலையில் நான் இல்லை.” என்று ஆர்த்தி விட்டேற்றியாகக் கூற, “சரி… இப்ப கட்டிக்கப் போற மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னா, இவரையும் விவாகரத்துப் பண்ணிட்டு வேற மாப்பிளையைக் கட்டிப்பியா?” என்று ஆர்த்தியின் விட்டேற்றித்தனத்தில் காயப்பட்டு, கோபமாகக் கேட்டார் பார்வதி.

“அம்மா….” என்று அலறலோடு ஆர்த்தி தன் காதுகளை மூட, “நான் பேசினா நீ தாங்க மாட்ட ஆர்த்தி. அது தான் நான் அமைதியா இருந்துட்டேன். நான் உன்னை முன்னமே கண்டிச்சிருக்கணும்.” என்று பார்வதி புலம்பினார்.

தன் தாயின் பேச்சில் ஆர்த்தியின் கோபம் கட்டுக்கடங்காமல் போக, “உங்களால் என் வாழ்க்கை இப்படி மோசமா இருக்கு. என் தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்திருந்தா, நான் இப்படி ஆகியிருப்பேனா? என் கனவு, என் ஆசை எல்லாத்துலேயும் மண்ணள்ளிப் போடுற மாதிரி ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துட்டீங்க. அழகுக்காகப் பணக்கார இடம் வந்ததும், உங்க கௌரவத்துக்காக நீ என்னை கட்டிக் கொடுத்துட்டீங்க. உங்களைக் காயப்படுத்தக் கூடாதுன்னு தான், நான் இத்தனை வருஷம் அமைதியா இருந்தேன் .” என்று ஆர்த்தி பேச, பார்வதி நிலை குலைந்து சுவர் மேல் சாய்ந்தார்.

“இப்ப எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் பொழுதும், அதைக் கெடுக்கப் பார்க்குறீங்க. என் வாழ்க்கை தோத்த பிறகு கூட, நீங்க செஞ்சது சரின்னு நிரூபிக்கப் பார்க்குறீங்க.” என்று ஆர்த்தி, ‘என் உயிர் இந்த நொடி போகக் கூடாத? இதை எல்லாம் கேட்கவும் பார்க்கவும் தான் நான் இருக்கிறேனா?’ என்று இமைக்கவும் மறந்து தன் மகளைப் பார்த்தார் பார்வதி.

“நான் நல்லாயிருக்கணுமுன்னு நினச்சா, இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுங்க.” என்று தன் தாயிடம் அழுத்தமாகக் கூறிவிட்டு மீராவைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள் ஆர்த்தி.

தன் மகளின் இத்தகையப் பேச்சுக்குப் பின் பார்வதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அவர் சம்மதத்திற்காகக் காத்திருந்தது போலவே, திருமண வேலைகள் மடமடவென்று அரங்கேறின.

ஆர்த்தியின் நிலை கருதி, எந்தவித வம்புப் பேச்சுக்கும் இடம் கொடுக்காமல் திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த கையோடு மீராவைக் கையில் வைத்துக் கொண்டு, ஆர்த்தி தடுமாற, “என்ன ஆர்த்தி யோசிக்குற? என் கிட்ட கொடு குழந்தையை…” என்று மீராவைக் கையில் வாங்கிக் கொண்டான் ராகவ்.

திருமணத்திற்கு வந்த அனைவரும், இவர்கள் ஜோடிப் பொருத்தத்தைப் பேச மீரா, ராகவ் இருவரின் முகத்திலும்  பெருமிதம் பொங்கி வழிந்தது.

ராகவின் பேச்சு, அவன் பழகிய விதம் என அனைத்துமே பலரின் வம்புப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

திருமணம் முடிந்து ராகவின்  வீட்டுக்குச் சென்றுவிட்டு, பார்வதி கிளம்பினார்.

“அத்தை! எங்க கிளம்பிடீங்க?” என்று கேள்வியாக நிறுத்தினான் ராகவ்.

“எங்க வீட்டுக்கு.” என்று பார்வதி பட்டும் படாமலும் கூற, “நீங்க அங்க தனியா என்ன பண்ணப் போறீங்க?” என்று கேட்டான் ராகவ்.

ஆர்த்தி என்ன பேசுவதென்றுத் தெரியாமல் மௌனமாக அவர்களைப் பார்த்தாள்.

“மீரா உங்களைத் தேடுவா அத்தை.” என்று ராகவ் கூற, “நான் அடிக்கடி வந்து பார்த்திட்டுப் போறேன். இல்லைன்னா, ரெண்டு நாள் கூட்டிட்டுப் போறேன்.” என்று பார்வதி கூற, “அத்தை…  மீராவைக் கூட்டிட்டுப் போனா, ஆர்த்தி மீராவைத் தேடுவா… நீங்க எதுக்கு அங்கேயும் இங்கயும் அலைஞ்சுகிட்டு? இங்கேயே இருங்க.” என்று பிடிவாதமாகக் கூறினான் ராகவ்.

“இல்லை…” என்று பார்வதி மறுப்புத் தெரிவிக்க, ‘ராகவ், எத்தனை அத்தை போடுறாங்க. அம்மா, மாப்பிள்ளைன்னு கூப்பிட்டா குறைஞ்சா போயிரும்?’ என்ற வருத்தம் ஆர்த்தியின் மனதில் எழுந்தது.

“ஆர்த்தி… அத்தை இங்க இல்லைன்னா நாமளும் அங்க கிளம்பிருவோம்.” என்று ராகவ் உறுதியாக, பார்வதி ராகவை பதட்டமாகப் பார்த்தார்.

“அத்தை… நாங்க வேலைக்குப் போகும் பொழுது அங்க தான் வந்து விடப்போறோம். நீங்க கூட இருந்தா ஆர்த்தியும் நிம்மதியா இருப்பா. மீராவும் சந்தோஷமா இருப்பா.” என்று ராகவ் தன் முடிவில் உறுதியாக நிற்க, பார்வதி சம்மதமாகத் தலை அசைத்தார்.

ராகவ் மீராவைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல, ஆர்த்தி தன் தாய்க்குத் தேவையானதை எடுத்து வைத்துவிட்டு, ராகவ் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

ராகவின் பிடிவாத செயலில்  ஆர்த்தியின்  உள்ளம் நெகிழ்ந்தது.

‘இது என்ன இந்த ஆர்த்தி புருசனுக்கு இவ்வளவுப் பிடிவாதம். தான் நினச்சதையே முடிப்பான் போலயே? நல்லது நினைச்சா பரவாயில்லை. ஒருவேளை எதிர்காலத்தில், ஏதாவது தப்பாகிட்டா?’ என்ற எண்ணம் தோன்ற தன் மகளின் வாழ்க்கையை நினைத்துத்  தூக்கம் வராமல் புரண்டுப் படுத்தார் பார்வதி.