Mazhai – 1

640203-1975a292

அத்தியாயம் – 1

அன்று முக்கியமான முகூர்த்த தினம் என்ற காரணத்தினால் கூடுதல் பரபரப்புடன் காணப்பட்டது கோவை மாநகரம்.

புலர்ந்தும் புலராத காலை நேரத்தில் அந்த திருமண மண்டபமே கலகலவென்று இருந்தது. மணமகளுக்கு பெற்றவர்கள் உற்றார் உறவினர் என்று யாரும் இல்லாத காரணத்தினால் மொத்த வேலைகளையும் கவனிக்கும் பொறுப்பில் இருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

 திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்று அமர வைத்த சதாசிவத்தின் பார்வை மனையாளைத் தேடியது.

“என்னங்க..” என்று ஏதோ சொல்ல வந்த மனையாளை கையமர்த்தி தடுத்து, “நம்ம மாப்பிள்ளை இன்னும் வரவில்லையா?” என்று கேட்டார்.

சட்டென்று திரும்பி மனமேடையைப் பார்க்க அங்கே ஐயர் கேட்கும் பொருட்களை எடுத்து கொடுத்த மகளின் முகத்தை ஆராய்ச்சியுடன் பார்த்த மகேஸ்வரி, “என்னன்னு தெரியலைங்க.. மாப்பிள்ளை வரல.. இவ மட்டும் கிளம்பி வந்திருக்கிற..” என்றார் மெல்லிய குரலில்.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு, “சரிம்மா.. நம்ம பையனுக்கு சிந்துவைக் கல்யாணம் பண்ணி வைக்கல என்ற கோபமாக இருக்கும், அதுக்காக கவலைப்பட நேரமில்ல” என்றவர் தன் வேலையைக் கவனித்தார்.

கணவனிடம் பேசிவிட்டு மேடை ஏறிய தாயோ, “என்னம்மா கல்யாணப் பெண்ணை தயார் செய்யாமல் இங்கே நின்னுட்டு இருக்கிற.. நீ போ நான் இங்கே பார்த்துக்கறேன்” என்றார்.

தன் மன வருத்தத்தை தனக்குள் மறைத்துக்கொண்டு, “சரிம்மா” என்று சிரித்த மகளின் கன்னம் வருடிய மகேஸ்வரி கண்கள் லேசாக கலங்கியது.

தாயின் கரம்பிடித்து அழுத்திய மிருதுளா, “எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகரவே, ஐயர் மீண்டும் பொருளைக் கேட்க தன் வருத்தத்தை ஓரம்கட்டிவிட்டு மற்ற வேளைகளில் கவனத்தைத் திருப்பினார்.

மிருதுளா மணமகள் அறைக்குள் நுழையும்போது மற்றவர்கள் இணைந்து மணப்பெண்ணை அலங்கரித்து கொண்டிருந்தனர். மணமகளுக்கான கலகலப்பின்றி கடமைக்கு கல்யாணம் போல அமர்ந்திருந்தவளின் அருகே சென்று, “என்ன கல்யாணப்பொண்ணு ரெடியாகிட்டிங்களா?” என்று குறும்புடன் கேட்டாள்.

கண்ணாடி வழியாக மிருதுளாவைப் பார்த்தவள் இடதுபுருவம் உயர்த்தி, “ஏன் என்னைப் பார்த்தா கல்யாண பொண்ணு மாதிரி தெரியலையா?” என்று குறும்புடன் வம்பிற்கு இழுத்தாள்.

மெல்ல அவளின் தோளில் முகம் வைத்து, “கல்யாண பொண்ணுக்கு உண்டான கலகலப்பு, வெக்கம், படபடப்பு இதெல்லாம் மிஸ் ஆகுதுதே” அவள் சொல்லி முடிக்கும்போது சட்டென்று முக பாவனைகளை மாற்றிக்கொண்டாள்.

அதை கண்டவுடன், “ம்ஹும்.. நீ நடிகையாய் ஆகிருந்திருக்கலாம். ஹப்பா என்ன ஸ்பீடு.. அப்படியே முகபாவனைகளை மாற்றி வர்ணஜாலம் பண்றீயே..” என்று சிரித்த மிருதுளாவின் பார்வை அவளை அளவிட்டது. சிவப்பு நிற பட்டு சேலையில் ஆடம்பரமான நகைகளை அணிய மறுத்துவிட்டு  அளவான ஒப்பனையில் தயாராகி இருந்தாள்.

வட்ட முகமும், அடர்ந்த புருவம், மை தீட்டிய விழிகள், நேரான நாசி, சிவந்த இதழ்கள். அளவான உடல்வாகு உடைய ஐந்தரையடி உயரமுடைய பாவை. பார்ப்பவர்களின் கண்ணிற்கு கல்லூரி பெண்ணாக வலம் வருபவள். அதே போல பழகுவதற்கு இனிமையானவள்.

மிருதுளாவின் பார்வை தன்மீது நிலைப்பதைக் கண்டு, “அண்ணி உங்க தம்பி பாவமில்ல.. அவருக்காக கொஞ்சம் உங்க பார்வையை மாத்திகிட்ட நல்லா இருக்கும்” என்று குறும்புடன் கண்சிமிட்டினாள் சிற்பிகா.

அவளின் சிரித்த முகம் கண்டு மனக்கவலை மறந்த மிருதுளா, “நீ எப்போதும் சந்தோசமாக இருக்கணும்” என்றவள் அவளுக்கு திருஷ்டி போட்டு வைத்துவிட்டு வெளியே சென்றாள். அவள் சென்றதும் மீண்டும் பழையபடி அமர்ந்த பெண்ணின் மனம் நிலை என்னவென்று அவளுக்கே புரியவில்லை. இனிவரும் நாட்கள் எப்படி போகுமென்று யோசிக்கும்போது மனம் திக்கென்றது.  

அதே நேரத்தில் மணமகன் அறையில் கடும் கோபத்துடன் அமர்ந்திருந்தான் முகிலரசன். ஏனோ அவனுக்கு இந்த திருமணத்தில் எள்ளளவும் இஷ்டமில்லை. இருபத்தி நான்கு வயதில் ரெக்கைகட்டி பறந்தவனை திருமணம் என்ற பெயரில் கால்கட்டு போட நினைக்கும் பெற்றோரின் மீது கோபம் அதிகமானது.

தன் தந்தையின் கண்ணை மறைத்து செய்யும் தவறுகள் அனைத்தும் தெரிந்தபிறகே திருமண ஏற்பாடு நடக்கிறதென்று அவனுக்கும் புரியவே செய்தது.

வீட்டில் திருமணம் என்று சொன்ன ஒரே வாரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டார் சதாசிவம். தன்னுடைய பெற்றோர் திட்டமிட்டு இவ்வளவு வேகமாக வேலையை முடிப்பார்கள் என்று அறியாது அலட்சியமாக இருந்ததை எண்ணி மனம் நொந்தான்.

‘நான் செய்யும் தவறுகளைச் சொல்லி திருத்த முடியாத அளவிற்கு நானொன்று அவ்வளவு மோசமானவன் கிடையாதே’ என்ற சிந்தனை மனதினுள் ஓடி மறைந்தது.

“டேய் டைம் ஆகிட்டே இருக்கு.. ம்ஹும் சீக்கிரம் கிளம்பு” என்ற நண்பனை எரிச்சலோடு ஏறிட்டான்.

“இங்கே வாழ்க்கையே பறிபோகுது என்று பதறிட்டு இருக்கேன். மகனே உனக்கு என் நிலைமையைப் பார்த்த நக்கலாக இருக்கா?” யாரும் மீதோ இருக்கும் கோபத்தை நண்பனிடம் காட்டினான்.

அவனின் கோபம் அறிந்ததே என்பதால், “அதுக்காக என்னை எதுக்குடா திட்டுற.. நம்ம நினைக்கறது எல்லாமே நடக்கும்னு நினைக்கிறது முட்டாள்தனம். உனக்கு பிடிச்சிருந்த கல்யாணம் பண்ணிக்கோ. இல்ல உங்க அப்பாவிடம் போய் சொல்லிட்டு கிளம்பு..” என்றான் ராகுல்.

அவன் சொன்னது போல சதாசிவத்திடம் போய் சொல்லலாம். ஆனால் இன்றளவு வரை தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சு பேசியது கிடையாது. அவருக்கு கொடுக்கும் மரியாதையைக் கட்டாயம் தரவேண்டும் என்ற முடிவுடன், “டேய் சிகரெட் இருக்கா?” என்றான்.

“இந்நேரத்தில் இது தேவையா?” அவன் சண்டைக்கு வர..

“எனக்கு இப்போ தண்ணியடிக்கணும் போல இருக்கு.. வா பாருக்கு போலாம்னு சொன்னால் வருவீயா?” என்று கோபத்துடன் கேட்க தன் பாக்கெட்டில் இருந்த சிகரட்டை எடுத்து நீட்டினான்.

அதை வாங்கி பற்ற வைத்தவன் புகையை இழுத்துவிட்டு, “அப்பா மேல இருக்கிற மரியாதையால் இதுவரை பொண்ணுங்க சைடு திரும்பிப் பார்த்ததில்லை. அப்புறம் இந்த காதலெல்லாம் எனக்கு செட்டே ஆகாது. நான் ஆசைபட்ட ஒரே பொண்ணு சிந்து.. அவளோட இடத்துக்கு இவ வருவதை ஏத்துக்க முடியல. ஆனால் இவ்வளவு தூரம் வந்தபிறகு அப்பாவுக்காக கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று சொல்ல ராகுல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஆனால் ஒரு வருஷத்தில் இவளை பிடிக்கலன்னு சொல்லிட்டு டைவர்ஸ் பண்ணிட்டு அப்புறம் நம்ம போக்கில் போலாம்” என்றவன் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

முகிலரசனின் கல்லூரி நண்பன் ராகுல். அவனுக்கு தண்ணீர் அடிப்பது, சிகரெட் பழக்கம் இருந்தாலும், பெண்களின் விஷயத்தில் மட்டும் சற்று தள்ளி நிற்பவன். அவன் சொன்னதுபோல அவன் ஒன்றை செய்ய நினைத்தால் அதை தடுக்க யாராலும் முடியாது.

இப்போது அவனின் விருப்பமின்றி நடக்கும் திருமணம் என்பதால் டைவர்ஸ் பற்றி பேசிவிட்டு செல்லும் நண்பனின் நிலை புரிந்தாலும், ‘இவனை நம்பி கழுத்தை நீட்டும் அந்த பெண்ணோட வாழ்க்கை என்னவாகுமோ?’ என்று சிந்திக்கும்போது மனம் ஏனோ வலித்தது.

இன்றைய காலகட்டத்தில் திருமணம், விவாகரத்து என்ற வார்த்தைகள்  இளைய தலைமுறையினருக்கு விளையாட்டாக மாறிப்போனது. ஏதேதோ சிந்தனையில் உழன்ற மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவன் நிமிரும்போது பட்டுவேட்டி, சட்டையில் தயாராகி வந்தான்.

“மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ” என்ற ஐயரின் குரல்கேட்டு நண்பனுடன் அறையைவிட்டு வெளியேறினான் ராகுல்.

அவன் சென்று அமர்ந்து மந்திரங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது தன் குடும்பத்துடன் மண்டபத்திற்குள் நுழைந்த நிரஞ்சனை கண்டு சந்தோஷத்தில் கண்கலங்க மணமேடைவிட்டு விட்டு இறங்கி சென்றாள் மிருதுளா.

அதற்குள் அங்கே வந்த சதாசிவம், “வாங்க” என்று வரவேற்று முதல் வரிசையில் அமர வைத்தார்.

நிரஞ்சனின் அருகே சென்ற மிருதுளாவின் கண்கள் லேசாக கலங்கிட, “நானிருக்கும் போது நீ எதுக்கு கண்ணு கலங்கற? இவங்க வரமாட்டேன்னு சொன்னால் நான் விட்டுவிடுவேனா?” என்று மனைவியை சமாதானம் செய்த தமையனை கோபத்துடன் முறைத்தாள் சிந்து.

“என்னைவிட உனக்கு அண்ணி ரொம்ப முக்கியம் இல்ல” என்று கோபத்துடன் சண்டைக்கு வந்த தங்கையை நிமிர்ந்து பார்த்தான்.

வெளித்தோற்றத்தில் பார்க்க அழகிய பாவையாக இருக்கும் தங்கையின் கண்களில் இருக்கும் அலட்சியம் குடிகொண்டு இருந்தது. அத்தோடு அவளின் தானென்ற கர்வம், பிடிவாதம் குணம் என்று அவளிடம் இல்லாத நல்ல குணங்களே இல்லை. அவளின் இந்த குணத்தால் தான் முகிலனின் பெற்றோர் அவளை நிராகரிக்க முக்கிய காரணமே..

“இங்கே பாரு சிந்து.. நீ உன்னைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள முயற்சி பண்ணு. அப்போதான் வருங்காலத்தில் உனக்கு நல்லதொரு வாழ்க்கை அமையும்” என்று அறிவுரை சொல்ல கனகவல்லிக்கு கோபம் வந்தது.

“என் மகள் இப்படிதான் இருப்பாள்” அலட்சியத்துடன் கூறிய தாயை பார்த்து அவனின் எரிச்சல் சற்று அதிகரித்தது.

சரி தந்தை தனக்கு சாதகமாக பேசுவார் என்று நினைக்கும்போது, “அவளோட குணத்துக்கு என்னடா குறை” என்று மகனிடம் சண்டைக்கு வந்தார். ஆகமொத்தத்தில் பெற்ற பிள்ளையைக் கெடுப்பதே பெற்றோர்கள் தான் என்று என்னும் அளவிற்கு இருந்தது நிரஞ்சன் பெற்றோரின் நடவடிக்கை.

அதையெல்லாம் பார்த்த மிருதுளாவிற்கு மனம் வலித்தாலும், கடைசி நேரத்தில் குடும்பத்தை கையோடு அழைத்து வந்த கணவனின் மீது காதல் அதிகரிக்கவே செய்தது.

அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்த முகிலனின் பார்வை சிந்துவை வட்டமிட்டது. அவள் கோபத்துடன் முகம் திருப்புவதைக் காணும்போது, ‘இந்த திருமணம் பிடிக்கலன்னு சொல்லிட்டு எழுந்து போயிடலாமா?’ என்ற சிந்தனை கூட வந்தது.

அதே நேரத்தில் சிற்பிகாவை அழைத்து வந்து அவனின் அருகே அமர வைத்தார் மகேஸ்வரி. முகிலன் பார்வை தன்னருகே அமர்ந்த பெண்ணின் மீது படிந்தது. கல்யாண பெண்ணிற்கு உரிய கலகலப்பின்றி கற்சிலைபோல அமர்ந்திருந்த சிற்பிகாவை பார்க்கும்போது அவனின் எரிச்சல் அதிகமானது.

“ஏய் எதுக்கு முகத்தை இப்படி ஏழு முழத்துக்கு தூக்கி வச்சிருக்கிற?” என்று எரிந்து விழுந்தவனை சலனமே இன்றி நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

‘நான் பேசியது இவ காதுல விழுந்ததா?’ என்ற சந்தேகத்துடன் அவளை நோக்கியவனின் விழிகளில் வியப்பு வந்து சென்றது.

அவன் சொன்னது போலவே உதட்டில் புன்னகையைப் படரவிட்டு படபடப்பு மிகுந்த ஆர்வம் கலந்த பூரிப்புடன் அவனை நோக்கி, “இந்தளவுக்கு நடிச்ச உங்களுக்குப் போதுமா?” என்றவுடன் அவனின் மனதிற்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது.

இதுநாள்வரை பெண்களிடம் பழகியது கிடையாது என்று சொல்ல முடியாது. அவனின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் எல்லை தாண்டாமல் இருந்தது. முகிலனின் பணம், பதவி, அழகு அனைத்தையும் கண்டு மயங்கும் பாவைகள் ஏராளம். அதே தன் அழகைக் காட்டி அவனை வளைத்துவிட நினைத்த பெண்களையும் கடந்து வந்திருக்கிறான்.

ஆனால் அவன் பார்த்த பெண்களில் சற்று மாறுதலான குணத்தோடு இருந்த சிற்பிகாவை சிந்தனையோடு ஏறிட்டவன், ‘என்னை சீண்டிப்பார்க்கும் எண்ணத்துடன் செய்திருப்பாளோ?’ என்ற சந்தேகம் எழும்போது மீண்டும் அவனின் முகம் இறுகியது.

“சும்மா பொய்யாக நடிக்காதே.. எனக்கு நடித்தாலே பிடிக்காது” என்று எரிந்து விழுக சட்டேன்று தன் முகபாவனைகளை மாற்றிக்கொண்டு ஐயர் சொல்லும் மந்திரத்தை ஒப்பிக்க தொடங்கிவிட்டாள். மணமக்களின் இருபுறமும் நின்றிருந்த நிரஞ்சன் – மிருதுளா, சதாசிவம் – மகேஸ்வரி நால்வருக்கும் சந்தோசமாக இருந்தது.

தாலியை எடுத்து முகிலனின் கையில் கொடுத்தவர், “பொண்ணு கழுத்தில் கட்டுங்க.. கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” என்று குரல்கொடுக்க இசைக்கருவிகள் ஒருபக்கம் முழங்க, சிற்பிகாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டு அவளின் நெற்றியில் குங்குமத்தை அணிவித்தான்.

‘என்னுடைய திருமணக்கோலம் பார்க்க நீ அருகில் இல்லாமல் போயிட்டியே அம்மா’ என்று நினைத்தவுடன் இடியுடன் கூடிய மழை வந்தது.

“நல்ல நாளும் அதுவுமா? மழை வந்து உயிரை வாங்குது” என்று யாரோ  சொல்லகேட்டு அவளின் மனதில் சாரலடித்தது. திருமணம் இனிதாக நடந்து முடிந்திருந்த நிலையில், மற்றவர்கள் வந்து மணமக்களை வாழ்த்துவிட்டு சென்றனர். போட்டோ கிராப்பர் அவர்கள் இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து தள்ளினார்.

மணமக்களை வாழ்த்த மேடை ஏறிய தமக்கை குடும்பத்தைக் கண்டு, “வாங்க மாமா, வாங்க அத்தை..” என்றவனை முறைத்துவிட்டு இருவரும் அமைதியாக நிற்க சிற்பிகாவின் அருகே வந்து நின்றனர் நிரஞ்சனும் – மிருதுளாவும்!

இருவரும் ஜோடியாக நிற்பதைக் கண்ட சிந்து, “அப்பா நகருங்க.. நான் மாமா பக்கத்தில் நிற்கணும்” முகிலன் அருகே வந்து நின்றவளை வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோல பார்த்த சிற்பிகா சிரித்த முகமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தாள்.

அவள் சிரிப்பதைக் கண்டு மற்ற மூவருக்கும் கோபம் வந்தாலும் கண்டுகொள்ளாமல் நின்றுவிட்டு அவனுக்கு தங்களின் அன்பளிப்பை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்க இல்ல.. ம்ஹும் எனிவே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றவள் அவனிடம் போக்கேவை கொடுத்துவிட்டு சென்றாள்.

நிரஞ்சன் – மிருதுளா இருவரும் வந்து, “நீங்க இருவரும் ரொம்ப சந்தோசமாக இருக்கணும்” என்றவன் சிற்பிகாவிற்கு வைர நெக்லஸ் ஒன்றையும், முகிலனுக்கு மோதிரத்தை கொடுத்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு சென்றான்.

நல்ல நேரத்தில் மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நோக்கத்துடன், “நீங்க இருவரும் காரில் போங்க” என்று பூவினால் அலங்கரிக்கபட்ட காரில் அவர்களை அனுப்பிவிட்டு மற்றொரு காரில் வீடு நோக்கி புறப்பட்டனர்.

சடசடவென்று மழை பொழிவதை காணும்போது, ‘இப்படியே இறங்கி போய் சொட்ட சொட்ட நனைந்தால் மனசுக்கு இதமாக இருக்குமே’ என்று நினைத்தவள் காரின் கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்தாள்.

இந்த நிமிடம் வரை தன்னை ஒரு மனிதனாக நினைக்காதவள் மீது காரணமே இல்லாமல் கோபம் வந்தது. அவன் பேச நினைத்து வாய்திறக்கும்போது கார் வீட்டின் வாசலில் நின்றது.

இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று பூஜை அறையில் விளக்கேறிய பிறகு பாலும், பழமும் கொடுத்து தனித்தனி அறையில் தங்க வைத்தனர். இரவு அலங்காரம் செய்து சிற்பிகாவை தம்பியின் அறைக்குள் அனுப்பிவிட்டு சென்றாள் மிருதுளா.