Mazhai – 4

Mazhai – 4
அத்தியாயம் – 4
மதியம் மூன்று மணிக்கு கிளம்பியவளை இரவு பத்தாகியும் காணவில்லை. அதுவரை அலட்சியமாக இருந்தவனால் அதற்குமேல் சில நொடிகூட அமைதியாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. அவளை காணவில்லை என்றால் வீட்டினர் அனைவருக்கும் நானே பதில் சொல்ல வேண்டிவரும் என்ற நிதர்சனம் புரிந்தது.
“ச்சே போகும் போதே எங்கே போறேன் என்று சொல்ல வந்தாள். நான்தான் வீம்புக்கு பேசி அனுப்பிட்டேன். இப்போ எங்கே என்ன பண்றா ஒரு தகவலும் இல்ல” தனியாக புலம்பியவன் தன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.
அந்த ஏரியாவைச் சுற்றி இருந்த கோவில், பூங்கா, மால்கள் என்று அனைத்திலும் தேடினான். ரோட்டில் ஆள் நடமாட்டம் என்று முற்றிலும் குறைந்திருந்தது. தெரு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறுச்சோடி கிடந்தது தார்சாலை.
மின் கம்பங்கள் ஒளி வீசிய வண்ணமிருக்க தனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் சுற்றி தேடியதில் இரண்டு மணிநேரம் ஓடி மறைந்தது. சிற்பிகாவை பொறுப்பற்றவள் என்று சொல்லிவிட முடியாது. அவள் சொல்லிவிட்டு செல்ல நினைக்கும்போது தான்தானே வேண்டாவெறுப்பாக பேசி அனுப்பியது நினைவிற்கு வர தன் மீதே வெறுப்பானது.
அவளைக் காணாமல் தேடிய சோர்வும், இரவு உணவை சாப்பிட மறந்ததில் தலைவலியும் சேர்ந்ததில் அதன்பிறகு எங்கே தேடுவது என புரியாமல் வீடு திரும்பியவனுக்கு உள்ளே செல்ல மனம் வராமல் வாசலில் அமர்ந்தாள்.
சிற்பிகா என்ற பெயரைத் தவிர மற்ற எந்த விவரமும் அவனுக்குத் தெரியாது. அத்தோடு அன்று தந்தை அவளைப்பற்றி சொல்லும்போது அலட்சியபடுத்தியது நினைவில் வந்து சென்றது.
அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் இரு கையால் கரங்களைத் தாங்கி அமர்ந்திருக்க, “அண்ணா இதுதான் வீடு” கேட் அருகே அவளின் குரல்கேட்க பட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.
தன் ஸ்கூட்டியை நிறுத்தியபடி இறங்கியவள் வாசலில் நின்றிருந்த லாரிகாரரிடம் ஏதோ பேசுவது புரிந்தது. முகிலனின் பார்வை வேகமாக அவளை ஆராய்ந்தது. எந்தவிதமான சேதாரமும் இன்றி அவள் வீடு வந்து சேர்ந்தது மனதிற்கு நிம்மதியைத் தந்தது.
அவள் லாரியில் கொண்டு வந்த பொருட்களை இருவர் எடுத்து சென்று கீழிருந்த மற்றொரு அறையினுள் வைப்பதையும், சிற்பிகா தன்னுடைய கல்லூரி புத்தகங்கள் மற்றும் இன்னும் சில முக்கியமான பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்று பத்திரமாக வைப்பதை கவனித்தபடி மெளனமாக இருந்தான்.
கடைசியில், “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. இந்நேரத்தில் மற்ற ஆளுங்களோடு வருவது கொஞ்சம் சிரமம் தான். அப்புறம் ராஜி அக்காவிடம் நான் வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்துட்டேன் என்று சொல்லுங்க” என்று சொல்ல சரியென்று தலையசைத்தார்.
அவள் தன் பர்சை திறந்து பணம் எடுத்துக் கொடுக்க மறுப்பாக தலையசைத்தவர், ‘நீயே வச்சுக்கோமா’ சைகையில் சொல்ல இடையில் கையூன்றி அவரை முறைத்தவள்,
“உங்களுக்கு என்ன பெட்ரோல் சும்மா வருதா? முதலில் காசை பிடிங்க அண்ணா” என்று மிரட்டி அவருக்கு பணத்தைக் கொடுத்தாள். அதையெல்லாம் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த முகிலனை தன்னருகே அழைத்தார்.
அவன் மறுபேச்சின்றி அவரின் அருகே சென்றவுடன், ‘பெத்தவங்க இல்லாத புள்ள. ஏற்கனவே இவ ரொம்ப கஷ்டப்பட்ட பொண்ணு. நீங்க கொஞ்சம் பத்திரமாக பார்த்துகோங்க’ என்று சைகையில் சொல்ல அதை அவனுக்கு புரியும்படி மொழி பெயர்த்தாள் சிற்பிகா.
அவளை அழைத்து வந்தவருக்கு பேச்சு வராது என்ற உண்மை புரிய, “நீங்க கவலைபடாமல் போங்க. சிற்பிகா இனி என் பொறுப்பு” என்றவன் அவர்களை அனுப்பி வைத்தான்.
வீட்டிற்குள் செல்ல திரும்பியவளின் கையைப்பிடித்து இழுத்து நிற்க வைத்தவன், “நீ நினைச்ச நேரத்திற்கு கிளம்பி போவதற்கும், வருவதற்கும் இது ஒண்ணும் சத்திரம் கிடையாது?” கோபத்தில் எரிந்து விழுந்தான்.
“உங்களிடம் சொல்லாமல் போகணும்னு நினைக்கலயே.. நான் சொல்ல வந்தேன். நீங்கதான் காதுகொடுத்து கேட்கல. அது உங்க மிஸ்டேக். அடுத்து போன இடத்தில் வீட்டைக் காலி செய்து பொருளெல்லாம் ஏற்றி வருவதற்கு கொஞ்சம் தாமதமாகிடுச்சு” அவனின் கையிலிருந்து வலுக்கட்டாயமாக கையை உருவிக்கொண்டு வீட்டிற்குள் சென்று மறைந்தாள்.
அந்த அறைக்குள் இறக்கி வைத்திருந்த பொருள்களுக்கு நடுவே கேப்பார் அற்று கிடந்த பிளாஸ்டிக் கவரில் பால்பாக்கெட் மற்றும் பிரட் இரண்டும் இருந்தது. அதுவரை மறந்து போயிருந்த பசி தற்போது தெரியவே வேகமாக பாலைக் காய்ச்சி பிரட்டை நனைத்து இரவு உணவை முடித்தாள்.
தன்னை ஒரு வார்த்தை சாப்பிட அழைப்பால் என்ற அவனின் எண்ணத்தை சுக்குநூறாக உடைத்தாள். தன் தன்மானத்தை விட்டு அவளிடம் சென்று கேட்க மனம் வராமல் போகவே வேகமாக படியேறி தன்னறைக்குள் சென்று மறைந்தான்.
அப்போது தான் அந்த வீட்டில் ஒரு ஜீவன் இருப்பதே அவளுக்கு ஞாபகம் வர, ‘ஆமா இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பாரு நினைக்காதே. நீ கிளம்பியதும் தொல்லை ஒழிந்தது என்று நிம்மதியாக இருந்திருப்பார்’ தனக்குள் சொல்லிக்கொண்டு சமையலறை விட்டு வெளியே வந்தவள் பார்வையைச் சுழற்றினாள்.
அவன் இருப்பதற்காக அறிகுறி இல்லை என்றவுடன் கதவைத் தாழிட்டு ஒரு போர்வையை எடுத்து வந்து சோபாவில் கால்நீட்டி படுத்தவள் சிறிதுநேரத்தில் களைப்பில் உறங்கியிருந்தாள்.
தன்னறைக்குள் தஞ்சம் புகுந்த முகிலனின் மனதில் நிம்மதி நிலைகொள்ள, ‘சரியான இம்சை..’ என்று நினைத்தவன் தன்னையும் அறியாமல் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றான்.
மறுநாள் காலைப்பொழுது இருவருக்கும் அழகாகவே விடிந்தது. வழக்கம்போல சீக்கிரம் எழுந்தவள் குளித்துவிட்டு வந்து சமையலை முடித்துவிட்டு நிமிரும்போது மணி ஆறாகி இருந்தது.
கடைசியில் தொண்டைக்கு இதமாக காஃபியை வைத்து நிமிரும்போது மாடியிலிருந்து இறங்கி வந்தவனை ஏறயிரங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து காஃபியை பருகினாள்.
அவளை முறைத்தபடி அமர்ந்திருந்தவன், “ஒரு வார்த்தை காஃபி குடிக்கிறீங்களான்னு கேட்கிறாளா பாரு” என்று கோபத்துடன் சத்தமாக முணுமுணுத்தான்.
அவனின் முகத்திற்கு நேராக சொடக்குப் போட்டவள், “ஹலோ நான் மத்த பொண்ணுங்க மாதிரி சமைச்சு வச்சிட்டு ஐயோ அவரு கோபத்தில் சாப்பிடாமல் போயிட்டாரே என்று நினைத்து நானும் சாப்பிடாமல் பட்னி கிடக்கும் படிக்காத பட்டிக்காடு இல்ல. உங்களுக்கு என்ன வேணுமோ வாய்விட்டு கேட்டாத்தான் கிடைக்கும்” நிதானமாக அவள் விளக்கம் கொடுத்தாள்.
சுளீர் என்று கோபம் வர, “என் வீட்டில் உட்கார்ந்துட்டு என்னையே அதிகாரம் பண்ற.. அப்புறம் எதுக்குடி நான் உனக்கு தாலி கட்டிருக்கேன்” என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தான்.
வழக்கம்போலவே நிதானமாக அவனை ஏறிட்ட சிற்பிகா, “யூ மீன் திஸ் எல்லோ த்ரெட். எங்க ஊருல காத்துக் கருப்பு அடிச்ச கையிலயோ, கழுத்திலயோ சிவப்பு, கருப்பில் கயிறு மந்திருச்சு கட்டி விடுவாங்க. அந்த மாதிரி நீ சொன்ன தாலியும். எனக்கு நான் தினமும் அணியும் செயினோடு சேர்த்து இது ஒரு எக்ஸ்ட்ரா த்ரெட்” என்றவளை என்ன செய்வதென்று அவனுக்கே புரியவில்லை.
அவன் மெளனமாக இருப்பதை கவனித்தவள், “இதை என் பாதுகாப்புக்காக கட்டிருக்கு. இது இல்லாமல் வெளியே சுத்தினால் தேவையில்லாமல் பலபல பிரச்சனை வரும்” பாரபட்சம் பார்க்காமல் பதிலடி கொடுத்தாள்.
“இப்போ எனக்கு காபி கிடைக்குமா? கிடைக்காதா?” என்றான் வீம்புடன்.
“அதே தான் நானும் சொல்றேன். என்ன வேணுமோ நீங்க வாய்விட்டு கேட்ட மட்டும்தான் கிடைக்கும்” என்றாள் நிதானமாகவே.
‘ச்சே காலையில் எழுந்ததும் இம்சைகிட்ட சிக்கிட்டு முழிக்கிறேன்’ என்று மனதிற்குள் புலம்பியவன், “ஒரு கப் காஃபி கொடுக்கிறீயா?” என்று அவளிடம் தன்மையாகவே கேட்டான்.
சட்டென்று உதட்டில் அரும்பிய புன்னகையுடன் காஃபியை பருகியவள், “யார் நீ?” என்று கேட்க கொலைவெறியுடன் நிமிர்ந்தவனை கண்டு நாக்கைத் துருத்தி பலிப்பு காட்டினாள்.
அவளின் செய்கையில் அவனின் கோபம் போன இடம் தெரியாமல் மறைந்து போக, “பிளாஸ்கில் ஊற்றி வைத்திருக்கிறேன் உட்காருங்க எடுத்துட்டு வரேன்” என்று எழுந்து சென்றவளை பின் தொடர்ந்தது முகிலனின் பார்வை.
அவனுக்கு காபியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அறைக்குள் சென்று தன் வேலைகளைத் தொடர்ந்தாள் சிற்பிகா. அதற்குள் தன் அறைக்கு சென்றவன் குளித்து உடைமாற்றிவிட்டு கீழிறங்கி வந்தான்.
காலை உணவின்போது வெளியே வந்தவளிடம், “எனக்கு சப்பாத்தி செய்து தா..” என்று அதிகாரமாக சொன்னான் முகிலன்.
“சப்பாத்தி எல்லாம் இப்போ செய்ய முடியாது தோசை ஊத்தி ஹாட் பாக்ஸில் வச்சிருக்கேன். அப்புறம் நடக்கல்லை சட்னி ஆட்டி வச்சிருக்கேன் இரண்டையும் சாப்பிட்டுட்டு கிளம்புங்க” என்றவளை உக்கிரமாக முறைத்தான்.
“நீ செய்வதை எல்லாம் என்னால சாப்பிட முடியாது” வேண்டுமென்றே அவளிடம் வம்பு வளர்த்தான். ஏனோ அவளிடம் வீண் சண்டை இடுவது மனதிற்குள் உற்சாகத்தை வரவழைத்தது.
“அப்போ ஹோட்டலுக்கு போய் சாப்பிடுங்க. உங்களை சாப்பிட வா என்று இங்கே யாரும் வெத்தலை பாக்கு வைத்து அழைக்கல” என்று தாடையை தோளில் இடித்துவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.
அவளின் எதிரே அமர்ந்தவன், “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி கேட்டது கிடைக்கும்னு சொன்ன..” என்று அவன் சிந்தனையுடன் இழுத்தான்.
“ஆமா சொன்னேன். சாப்பாடு இது வேண்டும் என்று ஐந்து மணிக்கே மெனு வரணும். அப்புறம் அது குறிப்பிட்ட டைம்குள்ள செய்ய முடியாது என்றால் கண்டிப்பாக நீங்களும் கூடமாட உதவி செய்யணும். படத்தில் வர மாதிரி ஜிபூம்பா போட்டெல்லாம் சாப்பாடு செய்ய முடியாது” திட்டவட்டமாக கூறிவிட்டு சாப்பிட அமர்ந்துவிட்டாள்.
அதன் பிறகு பேசி பயனில்லை என்று புரிய பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் வழக்கமாக செல்லும் ஹோட்டலில் சென்று சாப்பிட அமர்ந்த சிறிதுநேரத்தில் அங்கே வந்த ராகுல், “என்ன புது மாப்பிள்ளை இரண்டே நாளில் வீட்டு சாப்பாடு வெறுப்பு தட்டிவிட்டதா?” என்ற கேலியுடன் எதிரே அமர்ந்தான்.
ஏற்கனவே கோபத்தில் இருந்தவன், “டேய் வேணும்னு என்னை சீண்டி பார்க்காதே. இன்னைக்கு இருக்கிற காண்டுக்கு மகனே உன்னை உண்டில்லைன்னு பண்ணிடுவேன்” என்று விரல்நீட்டி எச்சரிக்கும்போது ஆர்டர் கொடுத்த உணவுகள் அனைத்தும் வந்தது.
ராகுல் தனக்காக ஆர்டர் செய்ய, “நீ வருவன்னு தெரிந்தே உனக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்தேன் சாப்பிடு மச்சி” என்று சொல்ல அவனும் மறுப்பேச்சின்றி உணவில் தனது கவனத்தைத் திருப்பினான்.
“என்னடா சிஸ்டர் வீட்டில் சமைக்கலயா?” ராகுல் மெல்ல பேச்சுக்கொடுக்க நேற்று நடந்ததில் ஆரம்பித்து இன்று நடந்த அனைத்தையும் நண்பனிடம் பகிர்ந்தான்.
அவன் சொன்னதைக்கேட்ட ராகுலிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் முகிலன் இருக்கும் மனநிலை அறிந்து வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவனிடம் சிற்பிகாவின் அணுகுமுறை சரியென்றே தோன்றியது. மற்ற பெண்களைப் போல கொட்ட கொட்ட குனியும் பெண்ணாக இருந்தால் நாளை இவன் விவாகரத்து செய்யும்போது தன் சுயத்தை முற்றிலும் தொலைத்துவிட்டு தனிமரமாய் நிற்க வேண்டி வந்திருக்கும். சின்னப்பெண் என்றாலும் அவளின் பக்குவமான பேச்சும், நடைமுறையும் அவளின் வளமான எதிர்காலத்திற்கு தேவையான ஒன்று என்றே நினைத்தான் ராகுல்.
பூரியை பித்து கிழக்கில் தொட்டு வாயில் வைத்தவன், “நானும் எத்தனையோ பொண்ணுங்களை கடந்து வந்திருக்கேன். இவளை மாதிரி திமிர் பிடிச்சவளை எங்கேயும் பார்க்கல மச்சி. சரி சின்ன பொண்ணுதானே என்று கொஞ்சம் பொருத்து போனால் என்னையே என்ன செய்தின்னு கேட்குற.. இவளோட எல்லாம் கடைசிவரை குடும்பம் நடத்த முடியாது” தீவிரமான முகபாவனையுடன் கூறினான்.
முகிலனின் கோபத்தைக் கண்டு, “இரண்டே நாளில் இவ்வளவு மாற்றத்தை எதிர்பார்க்கல” என்று ராகுல் முணுமுணுக்க, “என்ன?” என்றான்.
“நான் என்ன சொன்னேன்? நீயுமாச்சு.. உன் பொண்டாட்டியும் ஆச்சு.. நான் பில் பே பண்ணிட்டு கிளம்பறேன்” என்று எழுந்து சென்றவனை முறைத்துவிட்டு சாப்பிட தொடங்கினான்.
சிறுவயதில் இருந்தே பசி தாங்கி பழக்கமில்லை. இப்போது வளர்ந்தபிறகு கூட தனக்கு பிடித்த உணவுகளை வாங்கி சாப்பிட்டு கொள்வான். ஆனால் நேற்று நடந்த பிரச்சனையில் உணவென்ற ஒன்றே மறந்திருந்தது. இரண்டு நேரம் சாப்பிடாமல் இருக்கவே வயிறு வற்றி போய்விட்டது.
தனக்கு சாப்பிட தோன்றியதை வாங்கி உண்டவனின் மனக்கண்ணில், ‘யூ மீன் திஸ் எல்லோ த்ரெட்’ திடீரென்று அவள் பிம்பம் தோன்றி மறைந்தது.
“என் உயிரை வாங்க வந்த இம்சை. வீட்டுக்கு வந்த இரண்டாவது நாளே என்னை சாப்பிட ஹோட்டலுக்கு அனுப்பிட்டா” என்று நல்ல வார்த்தைகள் நான்கினை சொல்லி வாணலி இல்லாமல் அவளை வறுத்தேடுத்தான்.
காலையில் வழக்கம்போல அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த நிரஞ்சன், “மிருதுளா சாப்பாடு எடுத்து வை” என்று அவன் சொல்வதைக் காதில் வாங்காமல் சிந்தனையோடு துணியை மடித்து வைத்தாள்.
அவளை சிந்தனையோடு நோக்கிய நிரஞ்சனுக்கு காலை கனகவல்லி பேசியது நினைவிற்கு வந்தது. கொஞ்சநாளாக குழந்தை இல்லை என்ற பேச்சின்றி அமைதியாக இருந்தது வீடு. இப்போது முகிலனின் திருமணம் முடிந்ததில் இருந்து பழையபடி தலை தூக்க தொடங்கியது.
காலையில் தாமதமாக எழுந்து வேலை செய்த மருமகளை கண்டவர், “கல்யாணம் ஆகி நாலு வருஷம் முடிய போகுது.. இன்னும் ஒத்த பிள்ளைய பெத்துக் கொடுக்க துப்பில்லை. அதைபற்றி கொஞ்சம்கூட கவலை இல்லாமல் எப்படித்தான் இருக்காளோ?” நிரஞ்சனின் காதுபடவே திட்டுவிட்டு சென்றார்.
தாயை தடுக்க முடியாது என்பது அவன் அறிந்ததே. ஆனால் அதற்காக அமைதியாக இருக்க முடியாமல் வேகமாக மிருதுளாவை நெருங்கினான் நிரஞ்சன்.
கண்ணிமைக்கும் நொடியில் அவளின் இடையுடன் கரம்கோர்த்து தோளில் முகம் புதைத்தவன், “சீக்கிரமே எல்லாம் சரியாகிடும் மிரு” காதோரம் மெல்லிய குரலில் கூறினான்.
கணவனின் பரந்த மார்பில் சாய்ந்தவள், “எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு” என்றாள். இருவரின் நம்பிக்கையும் கட்டாயம் ஒருநாள் பழிக்கும் என்பது போல வீட்டின் அருகே இருந்த கோவில் மணி அடிப்பதைக் கேட்டது.