Mazhai – 7

7032d77987abd645fe5bdf02ce0ee07d-07b88ad4

அத்தியாயம் – 7

அவள் தட்டில் வைத்த உணவைக் கண்ட முகிலனின் மனம் பதட்டமடைய தொடங்கியது. அவளுக்கு அசைவ உணவு வகைகள் எதுவும் ஒத்துகொள்ளாது என்று அவளோடு பழகிய கொஞ்ச நாளில் தெளிவாக புரிந்து வைத்திருந்தான்.

அவனின் மீதிருக்கும் கோபத்தைக் காட்ட நினைத்து நல்லதொரு பிரியாணி கடையில் இருந்து சிக்கன் பிரியாணி வாங்கி வந்திருந்தாள்.

அவள் சாப்பிட அமரும்போது, “சிபி.. வேண்டாம்.. உனக்கு அசைவம் ஒத்துக்காது. அதை சாப்பிடாதே.. அப்புறம் வாமிட் எடுத்தே சோர்ந்து போயிடுவ. காலேஜ் வேற போகணும்னு சொன்னால் கேளு” அவன் பதட்டத்துடன் எச்சரித்தான்.

அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் சற்று தள்ளி அமர்ந்து பதில் பேசாமல் சாப்பிட தொடங்க, “ஏய் நீயேண்ட அவங்களை சாப்பிட வேண்டான்னு சொல்ற?” நேரம் காலம் தெரியாமல் காரணம் கேட்டான் ராகுல்.

“அதெல்லாம் அவளுக்கு சுத்தமாக சேராத உணவுடா. அதை முதலில் அவகிட்ட இருந்து வாங்கு” முகிலன் கட்டளையிட ஒரு கவளம் சாப்பாடு மற்றும் கொஞ்சம் தண்ணீர் என்று உணவை கஷ்டப்பட்டு உள்ளே தள்ளினாள்.

ராகுல் தடுக்க வர, “அண்ணா எனக்கு ரொம்ப பசிக்குது. நைட் வேற சாப்பிடல. இப்போ காலேஜ்  போக கட்டாயம் தெம்பு வேணும். அதனால் நீ நகரு” என்று கோபத்தைக் காட்டி அவனை விலக செய்தாள்.

அவனின் கைகேட்டும் தூரத்தைவிட சற்று நகர்ந்து சாப்பிட்டதால் அவனால் முற்றிலும் தடுக்க முடியவில்லை. சட்டென்று எழுந்து செல்லலாம் என்று மனம் சொன்னாலும் கால்களில் கட்டுபோட்டு இருந்தால் அதுவும் முடியாமல் போனது.

“என்மேல் கோபம் இருந்தால் என்னிடம் கத்து சண்டை போடு. நான் மனசார ஏத்துக்குறேன். தயவு செய்து அதை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே சிபி.. ப்ளீஸ் என் பேச்சைக் கேளுடி” என்று எவ்வளவோ கெஞ்சினான்.

ஆனால் கடைசிவரை அவன் சொல்வதைக் கேட்காமல் உணவை அவள் தொடர்ந்து சாப்பிட, “இங்கே பாரு சத்தியமா இனிமேல் ஜென்மத்துக்கும் குடிக்க மாட்டேன் போதுமா” என்று கேட்டவனை நிமிர்ந்து முறைத்தவள் மீண்டும் கவனத்தை சாப்பாட்டில் திருப்பினாள்.

“இதை நான் உனக்காக சொல்லல. எனக்காக கவலைப்படும் அப்பா, அம்மா, அக்கா, அத்தான், ராகுல் இவங்க எல்லோருக்காகவும் நான் குடியை விட்டுவிடுகிறேன்” என்று சொல்ல மொத்த உணவையும் சாப்பிட்டு கை கழுவிவிட்டு தண்ணீரைக் குடித்தாள்.

தான் கையோடு எடுத்து வந்த பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு பேக்கை எடுத்துக்கொண்டு, “அண்ணா..” என்றவளுக்கு வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வரவே வேகமாக பேக்கை அங்கேயே வைத்துவிட்டு அருகே இருந்த பாத்ரூம் சென்று சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தாள்.

முகிலன் கெஞ்சும்போது சாதாரணமாக நினைத்த ராகுல், “என்னடா இவங்க குடம் குடமாக வாந்தி எடுக்கறாங்க” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

“அவளுக்கு  அசைவம் சுத்தமாக ஒத்துக்காது. ஏற்கனவே ஒருநாள் உருளைக்கிழங்கு என்று சொல்லி சாப்பிட கொடுத்தேன். அன்னைக்கு முழுக்க வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தாள். அதுதான் சாப்பிடும்போது வேண்டாம்னு எவ்வளவோ தடுத்தேன்” என்றவனுக்கு கோபம் வந்தது.

அதைவிட இப்போது அவளின் உடல்நலன் ரொம்ப முக்கியம் என்று நினைத்தவன், “ராகுல் நீ போய் டாக்டரிடம் விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வா” என்றவனுக்கு கட்டளையிட அறையின் கதவினைத் திறந்துகொண்டு வெளியே சென்றான்.

காலை ரவுண்ட்ஸ் வந்த டாக்டரிடம் சென்று, “என் தங்கச்சி வாந்தி எடுக்கிறா டாக்டர். கொஞ்சம் வந்து என்னன்னு பாருங்க” என படபடத்தான் ராகுல்.

அவன் சொன்னதும் அறைக்குள் நுழைந்த டாக்டர், “வாழ்த்துகள் முகிலன். பொண்டாட்டி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படித்தான் குடிச்சிட்டு வண்டி ஓட்டுவீங்களா?” கோபத்தில் திட்ட திடுக்கிட்டு திரும்ப பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே வந்த சிற்பிகா அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றிருந்தாள்.

“ஐயோ டாக்டர் அதில்லை. சிக்கன் பிரியாணி சாப்பிட்டது சேராமல்..” என அவன் நிலைமையைப் புரிய வைக்க முயன்றான்.

அதற்குள் இடையில் புகுந்த டாக்டர், “இந்தமாதிரி சமையத்தில் இந்த உணவுவகைகளை விரும்பி சாப்பிட நினைப்பாங்க. அது சகஜம்தான்” டாக்டரின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவள் அறையினுள் இருந்த இரண்டு ஆண்களையும் கொலைவெறியுடன் நோக்கினாள்.

அங்கே நின்றிருந்த சிற்பிகாவை அமர வைத்து, “இந்த மாதிரி நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கணும்” என்றவர் அவளை பரிசோதித்த டாக்டரின் முகம் மாறியது.

“ஸாரிம்மா.. காலையில் என்ன சாப்பிட்ட?” என்றார்.

“சிக்கன் பிரியாணி” என்று சிற்பிகா மௌனமானாள்.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு, “அசைவம் உனக்கு சேராதுன்னு முன்னாடியே தெரியுமா?” என்ற கேள்விக்கு ஒப்புதலாக தலையசைத்தாள்.

“சேராது என்று தெரிந்தும் அதை எதுக்கு சாப்பிட்ட? யாரோமேல் இருக்கும் கோபத்தை சோற்றின் மீது காட்டுற?” என்று அவளைத் திட்டினார்.

முகிலனுக்குமே அவளின் மீது கோபம் தான். சிற்பிகா தன்னைப்போலவே வீம்பு பிடித்த பெண்ணென்று தெரியும். ஆனால் இந்தளவுக்கு வீம்பும், கோபமும் இருக்குமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

“எனக்கு அது  தெரியும் டாக்டர். காலையில் சாப்பாடு செய்ய லேட். அதுமட்டும் இல்லாமல் வருகின்ற வழியில் இருக்கின்ற ஹோட்டலில் கூட்டம் அதிகம். அதனால்தான் சிக்கன் பிரியாணி வாங்கிட்டு வந்தேன். மத்தபடி யாரிடமும் கோபபட எனக்கு உரிமையும் கிடையாது. என் உடல்நிலையைக் கேடுத்துக்கும் அளவுக்கு நான் அடிமுட்டாளும் கிடையாது” என்று உண்மையை தைரியமாக கூறினாள்.

அவளுக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்ட டாக்டர், “சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் இப்படி சாப்பிட வேண்டியதுதான். ஆனால் சேராது என்றால் முடிந்தவரை தவிர்த்துவிடு” என்றவர் முகிலனை பரிசோதனை செய்தார்.

“நாளை நீங்க டிச்சார்ச் ஆகலாம்” என்ற டாக்டர் அறைவிட்டு வெளியேற தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தன்னுடைய கோபத்தில் காயப்படுத்தியபோது குறும்புடன் தன்னையே சுற்றிவரும் பெண் இன்று ஒருவார்த்தை பேசாமல் செல்வதை நினைத்து மனம் பாரமானது. எந்தநேரமும் வம்பு வளர்த்துகொண்டு துருதுருவென்று பேசி சிரிப்பவளின் முகம் இரண்டு நாளாக இறுகி கிடப்பதைக் கண்டு மனம் நொந்து போனான் முகிலன்.

அவள் அறையைவிட்டு வெளியேறிய சிறிது நேரத்தில், “டேய் ராகுல் அவளும் என்னைமாதிரி பசி தாங்க மாட்டாடா. இப்போ சாப்பிட்டது எல்லாமே வாந்தி எடுத்துட்டுப் போறா.. கேண்டீனுக்கு கூட்டிப்போய் அவளை சாப்பிட வை” நண்பனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு விழி மூடிக் கொண்டான்.

இருவரும் கீரியும், பாம்பும் போல சண்டைப் போடுவதை வைத்து பிரிந்துவிடுவார்கள் என்று நம்பியிருந்தான். ஆனால் அவர்களையும் அறியாமல் ஒருவர் மீது மற்றொருவர் ஆழமான அன்பை வைத்திருந்தனர். இருவருமே அதை உணராமல் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்தான் ராகுல்.

சிற்பிகாவின் நினைவு வர வேகமாக அறையைவிட்டு வெளியேறிய ராகுல் அவளைத் தேடி சென்றான். அவள் ஹாஸ்பிட்டல் கேண்டீனில்  அமர்ந்திருப்பதை கண்டு, “சிற்பிகா” என்ற அழைப்புடன் அவளை நெருங்கினான்.

“அண்ணா இரண்டு மசால் தோசை” என ஆர்டர் கொடுத்தவளின் எதிரே வந்து அமர்ந்த ராகுலை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் ஏதோ தன்னிடம் கேட்க நினைப்பதை புரிந்து கொண்டவள், “என்ன அண்ணா விஷயம் நேரடியாக கேளுங்க” அதற்குள் ஆர்டர் கொடுத்த உணவு வந்துவிடவே மசால் தோசையை சட்னியில் தோய்த்து சாப்பிட தொடங்கினாள்.

“இல்ல நேற்று இரவு என்னிடம் அத்தனை கேள்வி கேட்டியே..  ஆமா டிரிங் அண்ட் டிரைவ் ரொம்ப ஆபத்துன்னு உனக்கு நல்லாவே தெரியுமா?” என்ற கேள்விக்கு ஒப்புதலாக தலையசைத்தாளே தவிர உண்மையை மட்டும் சொல்லவில்லை.

அவளை சற்று ஆழ்ந்து நோக்கிய ராகுல், “உன்னை விவாகரத்து செய்கிறேன்னு சொல்லும் முகிலன் நல்ல இருக்கணும்னு நீயேன் நினைக்கிற. இதோ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி பிடிக்காத உணவை சாப்பிட்டு வாந்தி எடுத்துக்கணும்னு உனக்கென்ன தலையெழுத்தா.. இதுக்குப் பேரும் நம்ம ஊரில் முட்டாள்தனம் தான் சிற்பிகா” என்றவனை நிதானமாக ஏறிட்டாள்.

“ம்ஹும் நீங்க சொல்வது உண்மைதான். முகிலன் நல்ல இருக்கணும்னு நீ ஏன் நினைக்கிற என்ற கேள்வி சரிதான். எங்களுக்குள் நாங்க ஆயிரம் சண்டைப்போட்டு பிரிந்து இருந்தாலும் ஊர் உலகத்தின் கண்பார்வைக்கு நாங்க கணவன் – மனைவிதானே?” கேள்விகேட்டு ராகுலை மடக்கினாள்.

“அவர் சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சநாளில் நானே அவரோட  வாழ்க்கையைவிட்டு விலகி போயிடுவேன். அதுக்காக குடிபழக்கத்தில் ஒரு உயிர் போவதை கை கட்டி வேடிக்கைப் பார்க்க என்னால முடியாது. இந்த இடத்தில் அவருக்கு பதிலாக வேற யார் இருந்திருந்தாலும் நான் இதைதான்  செய்வேன்” என்று அவனின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சாப்பிட்டு எழுந்து சென்று கை கழுவினாள்.

தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு ராகுலை பார்த்தவள், “என்னதான் நான் ஆயிரம் சாக்கு சொன்னாலும், எங்க அம்மாவுக்குப் பிறகு எனக்கு கிடைத்த ஒரே உறவு அவர்தான். அவருக்கு பிடிக்காமல் போனால் விலகி போக என்னால் முடியும். அதே நேரத்தில் அவரோட இழப்பைத் தாங்கும் சக்தி எனக்கில்லை” என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டு விறுவிறுவென்று நிற்காமல் அங்கிருந்து சென்றவளைப் பின்தொடர்ந்தது ராகுலின் பார்வை.

விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையே நூலளவு இடைவெளி உண்டு. ஆளுக்கொரு முகமூடி அணிந்து ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதை புரிந்து கொண்டவன், “வாழ்க்கையைப் பகடைக்காயாக வைத்து விளையாடுறீங்க. ம்ஹும் சரி என்ன நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்” என்று வாய்விட்டு கூறியவன் முகிலனைத் தேடி சென்றான்.

அவள் கல்லூரிக்கு கிளம்பி சென்ற இரண்டு மணிநேரத்தில் நிரஞ்சனின் குடும்பமும், முகிலனின் பெற்றோரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

தன்னுடைய மகன் அடிபட்டு கிடப்பதைக் கண்டு பதறிய மகேஸ்வரி, “முகிலா என்னடா இப்படி கீழே விழுந்து கைகால்களை எல்லாம் உடச்சு வச்சிருக்கிற?” அழுகையுடன் மகனை நெருங்கினார்.

“அம்மா அதெல்லாம் ஒண்ணும் ஆகலம்மா” என்றவன் சமாளிக்க சதாசிவத்திற்கு சுர்ரென்று கோபம் வந்தது.

“அந்த குடியை விட்டுத்தொலைன்னா கேட்டாதானே ஆகும்?” மகனிடம் எரிந்து விழுந்தார்.

நிரஞ்சன் – மிருதுளா இருவரும் மற்றொரு பக்கம் நின்று ராகுலிடம் எப்படி விபத்து நடந்ததென்று விசாரிக்க, ராஜசேகரன் – கனகவள்ளியின் பார்வையும் அறையினுள் சிற்பிகா தேடியது.

“முகில் தம்பி உடம்பு எப்படி இருக்கு.. ஆமா உன்னோட மனைவி எங்கே மதியம் சாப்பாடு எடுத்துட்டு வருவதற்கு வீட்டிற்கு போயிருக்கிறாளா?” என அக்கறையுடன் விசாரித்தார்.

அவனோ, “இன்னைக்கு செமஸ்டர் எக்ஸாம் இருக்கு என்பதால் அவளை நான்தான்  அத்தை வற்புறுத்தி அனுப்பி வைத்தேன்” என்று மனைவியைக் காப்பாற்ற பொய் சொன்னான்.

“அடியாத்தி புருஷன் இங்கே அடிபட்டுக் கிடக்கும்போது அவளுக்கு எக்ஸாம் ரொம்ப முக்கியமாகிடுச்சா? நல்லா இருக்கு நீங்க இருவரும் குடும்பம் நடத்தும் லட்சணம்” முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு கூறினார்.

சதாசிவம் – மகேஸ்வரி இருவரும் சிற்பிகாவின் மனநிலையைப் புரிந்து  மெளனமாக இருக்க அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

“இத்தனை நாளாக இல்லாமல் கல்யாணம் ஆனா கொஞ்சநாளில் இப்படியெல்லாம் நடக்க மருமக அடியெடுத்து வைத்த நேரம் சரியில்லாமல் கூட இருக்கலாம். எதுக்கும் இன்னொரு முறை ஜாதகத்தை எடுத்துட்டுப்  போய் பாருங்க” அக்கறையுடன் கூறுவதாக நினைத்து விஷம் தடவிய வார்த்தைகளை பேசினார் கனகவள்ளி.

நிரஞ்சன்  கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு, “அம்மா கொஞ்சம் வாயை வைத்துக்கொண்டு சும்மா  இருக்கீங்களா?” தாயை அடக்க நினைத்தான்.

“அதில்ல கண்ணா. சில நேரம் பொண்ணுங்க ராசி சரியில்லாமல் இருந்தால் இப்படியெல்லாம் அபசகுணமாக நடக்கும். அதை சொன்னால் நீ எதுக்குடா என்னை அடக்கற?” மகனுக்கும் ஒரு குட்டு வைத்து ஏதும் அறியாதவர் போல அமைதியாக நின்றார்.

சதாசிவம் – மகேஸ்வரி இருவரும் மருமகனின் குணத்திற்காகவும், மகளின் எதிர்காலத்திற்காகவும் அமைதியாக இருக்க, “என் மனைவியைப்  பற்றி பேச இங்கே யாருக்கும் உரிமையில்ல. நான் குடிச்சிட்டுப் போய் கீழே விழுந்ததுக்கு அவ எப்படி காரணமாக முடியும்?” என்று அத்தையிடம் நேரடியாகக் கேட்டான்.

தான் செய்த காரியத்திற்கு அவர்கள் சிற்பிகாவை குற்றவாளி ஆக்குவது பிடிக்கவில்லை.

அதனால் அவன் கோபத்துடன் அவரிடம் சண்டைக்குப் போக, “கல்யாணத்திற்கு முன்னாடி குடிச்சா அது வாலிப பசங்க ஜாலியாக இருக்காங்க என்று சொல்லலாம். ஆனால் கல்யாணத்திற்கு பின்னாடி குடிக்கிறீயே.. அங்கேதானே  எனக்கு அதிக சந்தேகம் வருது. படிப்பைக் காரணம்காட்டி” என்று அவள் இழுக்கும்போது விஷயம் இன்னதென்று அனைவருக்கும் விலகியது.

அடுத்த நிமிடமே, “எங்க அக்கா மாமியார் என்று மரியாதை கொடுத்து பேசிட்டு இருக்கேன். இதே கேள்வியை வேற யாராவது கேட்டிருந்தால் இங்கே நடப்பதே வேறு. நரம்பில்லாத நாக்கு என்றால் என்ன வேண்டும் என்றாலும் பேசுவீங்களா?” அவன் கோபத்துடன் சண்டைக்கு வந்தான்.

“இதில் என்ன தப்பு இருக்கு நான் உள்ளதை தானே சொன்னேன். என் பெண்ணை விரும்பி கல்யாணம் பண்ணி வைக்கல என்று பெத்தவங்களை கஷ்டபடுத்த நினைத்து வீம்பு குடிச்ச.. திடீர்ன்னு கல்யாண ஏற்பாடு. பிடிக்காத மனைவிகிட்ட எதையும் எதிர்பார்க்கவும் முடியல. அதே நேரத்தில் என் மகளை மறக்கவும் முடியல..” என்று அவர் அடிக்கிக்கொண்டே சென்றார்.

ராஜசேகரன் மனைவியைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்க்க, “நீங்க சொல்வது எல்லாமே உண்மைதான். ஆனால் இப்போ இருக்கும் நிலை முற்றிலும் வேற.. உங்க பொண்ணு மேல வைத்திருந்த இனக்கவர்ச்சியை என் மனைவியின் மீதான காதல் தொக்கடித்து விட்டது. இப்போ என் மனசு முழுக்க முழுக்க சிற்பிகா மட்டும்தான் இருக்கா” என்று அவன் கோபத்தில் உண்மையைப் போட்டு உடைத்தான்.

நிரஞ்சனின் பெற்றோர் இருவரும் அதிர்ச்சியில் சிலையென உறைய மற்றவர்கள் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. சிறிதுநேரத்தில் கோபத்துடன் அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.