MIRUTHNAIN KAVITHAI IVAL 2

cover page-ea320afe

மிருதனின் கவிதை இவள்

2

புதைக்க வில்லை ஆம் மேகாவை  அவன்  கொன்று  புதைக்கவில்லை ஆனால்  அவள் மனதை உயிரோடு வதைத்திருந்தான்  .அவள் கொடுக்காமலே  அவளது பெண்மையை  தன் வசமாக்கினான்  அவளது  அரக்க  காதலன் அக்னி தீரன்  .  

எப்படியோ தொடங்க வேண்டிய அவர்களது  தாம்பத்யம்  பெண்ணவளின் ஆசைகள், கனவுகள்,  எதிர்பார்ப்புகள் என அனைத்தையும்  தவிடு பொடியாகிவிட்டு  சேற்றில் மலர்ந்திருந்தது .                                                        

நீரற்ற  கொடி போல மெத்தையில்  உலர்ந்து  கிடந்தாள் மேகா .  என்ன  உயிரற்ற சருகாகவில்லை ! அவ்வளவு தான்!

அவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது  .

‘அவன் எனக்கு வேண்டாம் , இந்த திருமணம் வேண்டாம் என்று  சொன்னனே  பா . ஏன் யாரும்  கேட்கல ?’அடிபட்ட பாவையின்  மனம் மௌனமாய் அழுதது  . தேகம் தொடர் விம்மலில் குலுங்கியது . எவ்வளவு முயன்றும்  கண்ணீரை மட்டும் மேகாவால்  கட்டுப்படுத்தவே  முடியவில்லை .

திடிரென்று கனமான ஏதோ ஒன்று  தன்னை  வளைத்து பிடிக்க , பதறி துடித்தவளை   தனது வெற்று மார்போடு அணைத்து  புதைத்திருந்தான் அக்னி தீரன் .

‘ முழித்துக்கொண்டானா  என்ன ?’ இதயம் வேகமாக துடிக்க , பயத்தில் தன் வாயை தன் கரம் கொண்டு கப்பென்று  மூடியவள் மூச்சை இழுத்து பிடித்து கொண்டு அசையாமல் படுத்திருந்தாள் .

‘ மீண்டுமா? ‘ என  அரண்ட மேகா  நடுக்கத்துடன்  நிமிர்ந்து பார்த்தாள்.நாசியில் இருந்து வெளியேறிய  சீரான மூச்சு காற்று அவனது தூக்கத்தை  உறுதி படுத்த ,இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை  எங்கே வேகமாய் வெளியிட்டால்  விழித்துகொள்வானோ  என பயந்து  மெது மெதுவாய் வெளியேற்றினாள்.

ஆழ்ந்த உறக்கத்திலும்  தன்னவளை தன்  வசம் வைத்திருந்த அக்னி தீரன் பெண்ணவளின் மனதை தன் வசமாக்க தான்  தவறிவிட்டான் . அதன் விளைவு கணவனின் அணைப்பில் துன்பம் துறந்து துயில் கொள்ள வேண்டியவள் . துயரமே உருவாய் தூக்கம் தொலைய எங்கோ திசை தெரியா காட்டில் சிக்கிக்கொண்டது போல தவித்து கொண்டிருந்தாள்   .

‘இது தான் வாழ்க்கையா ? தனக்கு ஏன் இந்த நிலை  ? இவனுடன் தன் மொத்த வாழ்க்கையையும்  கழிக்க முடியுமா ? ஒரு பொழுதுக்கே மனம் வலிக்கின்றதே வாழ்நாள் முழுவதும் எப்படி சகித்து கொள்ள முடியும் ? ‘ என ஆயிரம்  கேள்விகள் மேகாவின் மனதை பிசைந்தது .

மார்பில்  தவழ்ந்து கிடந்த  மஞ்சள் நிற தாலி அவள் கரங்களுக்குள் அகப்பட்டது ,  நிமிர்ந்து அவனது முகம் நோக்கினாள் .

ஏதும் அறியா பாலகன் போல ஆழ்ந்த நித்திரையில் நிம்மதியாக துயில் கொண்டிருந்தான்  தீரன் .நிர்மலமான  முகத்தில் கொஞ்ச நேரத்திற்கு முன்பு கண்ட  கடுமை  சிறிதும் இல்லை . ஆனால் ஏதோ ஒன்று தெரிந்தது தன்னிலை மறந்து அது என்னவென்று ஆராய்ந்தவளை ‘ அரக்கனிடம்  என்ன ஆராய்ச்சி ?? சில மணிநேரத்திற்கு முன்பு நடந்ததை மறந்துவிட்டாயோ ?’ என அவளது மனம் கடிந்து கொள்ள ,

‘மேகா ‘ என தன்னை தானே கடிந்து கொண்டவள் , அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் .

‘உன்னை ஏன் நான் பார்த்தேன் அக்னி ? நீ என் வாழ்க்கையில வராமலே இருந்திருக்கலாம், என்ன பண்ண போறேன்? ‘ என அவளுக்குள் வாழ்க்கையை குறித்த அச்சம் தொற்றிக்கொள்ள தன் மனதுடன் போராடியவளுக்கு தூக்கம் வெகு தூரம்  சென்றிருக்க , மனம் கடந்தகாலத்தை புரட்டியது .

          அன்று மத்திய  அக்டோபர் மாதத்தில் ஒருநாள் அதுவும் ஒரு இரவு வேளை , ஒருபக்கம் நச்சத்திரங்களையும்  பிறை நிலவையும் கருத்து கிடந்த கார்மேகம்  மொத்தமாய் தன்னுள்  சிறைவைத்திருக்க , மறுபக்கம் உயிரை பிடுங்கி தின்னும் தோரணையில் இடி முழங்கிக்கொண்டிருக்க ,

” இப்போ போனா மழை வருமா வராதா ” என தன் போக்கிலே பேசியபடி வீட்டிற்கு செல்வோமா வேண்டாமா என யோசனையில் மூழ்கிருந்த   மேகாவிடம்  வேகமாக வந்த  அவளது தலைமை மருத்துவர்,

“மேகா  வீட்டுக்கு இன்னும் கிளம்பலையா மா ” என்றார் .

“இதோ கிளம்பிட்டேன்  சார் …. மேகமா இருக்கு அதான் மழை வருமான்னு பார்த்துட்டு இருக்கேன் “

” ஒரு உதவி மா ” என்றார் சிறு தயக்கத்துடன் .

” சொல்லுங்க சார் ” என அவள் ஆர்வத்துடன் கேட்க ,

” ஒரு கேஸ் வந்திருக்கு மா , முதலுதவி செய்யணும் ,ஆனா எனக்கு இப்போ ஒரு சர்ஜெரி இருக்கு என்னால  ஹாஸ்ப்பிட்டல் விட்டு  உடனே போக  முடியாது  . ஸோ நீ போய் அட்டென்ட் பண்ணனும்  ” என்றார் .

“ஓகே சார் ” என்றாள்

” சரி சார் அப்போ நான் கிளம்புறேன் ” என்றவளை தடுத்தவர் ,

“என்கார்ல போ மா …ட்ரைவர் உன்னை கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வருவாரு “

“உங்களுக்கு எதுக்கு சார் சிரமம் நானே போய்க்கிறேன்  . அட்ரஸ் மட்டும்  சொல்லுங்க “

” இல்லை அது இடம் கொஞ்சம் தள்ளி இருக்கு ட்ரைவர் கூட்டிட்டு போவாரு  ” என்றவர் ,” எதுவா இருந்தாலும்  எனக்கு கால் பண்ணுமா , அப்புறம் போயிட்டு வேலைய  முடிச்சிட்டு வந்துட்டே இரு ” என்றவருக்கு மேகாவை அங்கே அனுப்புவதில் சிறு தயக்கம் தான் ஆனாலும் தவிர்க்க முடியாத  சர்ஜெரி இருப்பதாலும், மேகாவின் பயந்த சுபாவம் மற்றும் மென்மையான குணம்  பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பதாலும் மேலும்  மேகாவை தவிர வேறு யாரையும் அங்கு அனுப்பினால் ஏதும் பிரச்சனை வர கூடும் என்பதாலும் அவளை அரை மனதுடன் அங்கே அனுப்பினார் .

மேகாவும்  நடக்க போகும் விபரீதம் அறியாமல்  அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர் சொன்ன இடத்திற்கு காரில் வந்து இறங்கினாள்.

அது நகருக்கு  மிகவும் ஒதுக்குபுறமாக இருந்தது அந்த ஒற்றை கட்டிடத்தை தவிர ஒரு குடிசை வீடு கூட அங்கு இல்லை . சுற்றிலும் அடர்ந்த காடு போதாக்குறைக்கு  இடியின் மிரட்டல் என மேகாவை லேசாக பயம் சூழ்ந்து கொள்ள .

அப்பொழுது கேட்டை திறந்து கொண்டு அவள் முன்பு   துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவன் வந்தான் .

” டாக்டர் கனகராஜோட  ஆள் தானே ?” உணர்ச்சிகள் துடைத்த முக பாவத்துடன் கேட்டான் .

” ஆ..மா ” அவனது உயரமான, பருமனான , இறுக்கமான தோற்றத்தை கண்டு ஆடிப்போனவளின் காற்று குரல் காற்றில் கரைந்து போக தலை மட்டும் வேகமாக ஆடியது .

அவளது அடையாள அட்டையை வாங்கி சரிபார்த்தவன் அவளை உள்ளே அனுமதித்தான்  . அங்கே இருந்து மேகாவை அழைத்து சென்ற ஒருவன் ஒரு இருட்டறைக்கு அவளை அழைத்து செல்ல . அந்த இடத்தின் தோற்றமே அவளுக்கு வித்தியாசத்தையும்  ஒருவித அச்சத்தையும்  கொடுக்க  நடுக்கத்துடன் வந்தாள் .

அப்பொழுது  அங்கே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒருவன் தன் கால்களால் அவன் மார்பில் மிதித்து கொண்டிருந்ததை கண்டு  அதிர்ந்த மேகா . ஓடி சென்று  அவனை தடுக்க , கோபமுற்றவன்  தன்னை அழைப்பது  ஒரு பெண் என்பதை மறந்து அவளது இரு தோள்களையும் பற்றி   தூக்கி சுவற்றுடன் சாய்த்தான் .     

அவனது இந்த செய்கையில் அதிர்ந்த மேகா  திகைத்துப்போனாள் . அவனும் தான் ஆனால் அரை நொடி தான் , அவனிடம் இருந்து இப்படி ஒரு எதிர்வினையை  எதிர்பார்காதவள் அவனது இந்த  திடீர் செய்கையில் பதறினாள்  !

 அவனோ சுவற்றில் அவளை சாய்த்து தன் வலிய கரங்களால் அவளது இரு தோள்களையும் பிடித்து சிறைவைத்திருக்க மூச்சு காற்றுகள் மோதிக்கொள்ளும் இடைவெளியில் அவளது பார்வை அவனை சந்தித்தது .

ஆறடி உயரம் ! அவளை விட இருமடங்கு வளர்ந்த ஆஜானுபாகுவான உருவம் ! ஜெல் இல்லாமலே  பளபளத்த  அடர்ந்த கருங்கேசம் ! அகன்ற நெற்றி ! ஆளை எரிக்கும்  கனல்  விழிகள் ! கூர்மையான புருவங்கள் ! விடைத்திருந்த நேர் நாசி ! அதற்கு கீழே நுனியில் முறுக்கப்பட்ட  அழகு மீசை ! அளவான தாடி ! என கம்பீரமாக நின்றிருந்தான் . ஆண் அழகன் தான் ! ஆனால் ? என்ன வார்த்தை சொல்லவது ?என யோசித்த தன் மனதிடம்,   ‘அதான் அவன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறதே’

‘ காட்டுமிராண்டி! ‘ மெல்ல அவளது உள்ளம் சொல்லியது .                    

திகைப்பு  சற்றும் குறையாமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளை  விடுவித்தவன் சொடக்கு போட்டு அவளது கவனத்தை  தன் பக்கம் ஈர்த்தான் அவளது காட்டுமிராண்டி.

“யாரு நீ ?” அவனது கணீர்  குரல் அவளை மிரட்டியது.

“டா….க்….டர் மேக…..வர்…. ஷினி ” அவளது நா மேல் அன்னத்தில் ஒட்டிக்கொள்ள  , தன் பெயரையே சொல்ல முடியாமல் தடுமாறியபடி உளறினாள்.

“இங்க என்ன பண்ணிட்டு இருக்க ??” என  வினவியவனின் கவனத்தை தன் வசமாக்கியது அவளது முகம்  ! அழுந்த பிடித்தால் சிவந்துவிடும் வெள்ளை நிறத்தில்  அழகாய் ஜொலித்த  வட்ட முகம் ! அஞ்சனம் தீட்டாத பெரிய கரு விழிகள் ! செதுக்கி வைத்த நேர் நாசி ! சாயம் பூசாமலே சிவந்திருந்த இதழ்கள் ! அழகாய் விரித்துவிடப்பட்ட  இடை தாண்டி வளந்திருந்த நீண்ட  குழல் ! அவனது  பார்வை  அப்பாவையை விட்டு அகலவில்லை .       

“ட்ரீட்மெண்ட் குடுக்க வந்திருக்கேன்” இதோடு நான்காவது முறை கூறிவிட்டாள் . ஆனால் அது எதுவும் அவன் காதில் விழவே இல்லை .  தன் பார்வையாலே அவளை விழுங்கிக்கொண்டிருந்தான்  . அவனது பார்வையின் வீச்சை கண்டவளின் இதயம் தறிகெட்ட குதிரையாக வேகமாக ஓடியது.

அப்பொழுது அவர்களிடம் வந்த அஷோக் ,

“டாக்டர் கனகராஜன் அனுப்பினது நீங்க தானே ? ” என மேகாவிடம் வினவினான் .

“ஆமா” என்றாள்.

“அவரு ஏன் வரல?” காட்டுமிராண்டியின்  கணீர் குரல் அவளிடம் கேள்வி கேட்டது .

” அது ” தெரிந்த பதில் தான் , இருந்தாலும் அவனது  குரலை கேட்ட மறுநொடி அவளது மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குள்ளே சூழ் கொள்ள .”அது அது ” தவிர வேற எதுவும் பேச முடியாமல் திணறினாள்.

“அக்னி  அவருக்கு முக்கியமான சர்ஜரின்னு சொன்னாரு . வேற யாரவது அனுப்பட்டுமான்னு கேட்டாரு . நான் தான் அனுப்ப சொன்னேன் . அவங்களை ட்ரீட் பண்ண விடு ”  என்று  அஷோக்  கூறியதும் அவளை விட்டு விலகிய அக்னி தள்ளி நின்று சிகரெட்டை எடுத்து தன் வாயில் வைத்து புகைத்த படி அவளை ஆராய்ந்தான் .

“இவருக்கு  தலையில  பெருசா அடிபட்டிருக்கு . இங்க வச்சு ட்ரீட்மெண்ட் பண்ண முடியாது . என்னால முடிஞ்ச முதல் உதவிய பண்ணிருக்கேன் . எவ்வளவு சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல்க்கு கொண்டு போறோமோ   அவ்வளவு  நல்லது . நான் அம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்” கண்களில் சிறு பதற்றத்துடன் அஷோக்கை பார்த்து கூறினாள், மறந்தும் அவளது பார்வை அக்னியை சந்திக்கவில்லை .

“அதெல்லாம் வேண்டாம் ”  அதே குரல்! அவளை மிரட்டும் அதே குரல் ! அவனே தான் , உள்ளம் சொல்லியது திரும்பி பார்த்தாள்  .

அவளுக்கு மிக அருகில் அக்னி தன் கண்களில் தீ தெறிக்க உச்சகட்ட கோபத்தில் புகையை நன்கு இழுத்து  முடித்துவிட்டு சிகரெட்டை காலில் போட்டு மிதித்த படி  நின்றிருந்தான் . சிகரெட்டின் நாற்றத்தால் மேகாவுக்கு குமட்டிக்கொண்டு வர பொறுக்க முடியாமல் முகம் சுளித்தவள் ,

“முடியாதுன்னா என்னா சார் அர்த்தம்  ?ஹாஸ்ப்பிட்டல் போகலைன்னா அவரு செத்துருவாரு” பயம் தான் ஆனாலும் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தால் , அக்னியை பார்ப்பதை  தவிர்த்து அஷோக்கிடம் முறையிட்டாள் .

“நீ டாக்டர் தானே உன்னால   என்ன முடியுமோ அதை பண்ணு . அவன் இப்போ பேசணும்  அதுக்கு என்ன பண்ணணுமோ அதை மட்டும் பண்ணு ” என்றான் அக்னி தீரன் . இல்லை கட்டளையிட்டான் . அவனது அனல் வீசும் பார்வையை கண்டதும் நடுங்கியவள் ,

“ஆ…னா சார் . சரியான ட்ரீட்மெண்ட் குடுக்கலைனா  ரொம்ப கஷ்டம் ” திக்கி திணறினாள் .

” சரி அப்போ சரியான ட்ரீட்மென்ட் குடுங்க சிம்பிள் ” என்றான் அவளை இன்னும் நெருங்கியபடி .

அவன் நெருங்கியதும் மேகாவின்  பதட்டம் மேலும் அதிகரிக்க . அவளது உடல் வெடவெடவென்று நடுங்கியது .                          

“சீக்கிரமா ட்ரீட்மென்ட் பாரு ” அதட்டினான் .

“இதோ பார்க்கிறேன் ” தலையையும் சேர்த்து அசைத்தாள் . மேகாவின்  பதட்டம் கொஞ்சமும்  குறையவில்லை . இன்னமும் உடல் வெடவெடவென்று நடுங்கி கொண்டு தான் இருந்தது .

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”  காட்டுமிராண்டி  கண்களை உருட்டினான்  .

” ட்ரீட்மென்ட் குடுத்துட்டு தான் சார் இருக்கேன் இதோ இப்போ முடிஞ்சிரும் ” பயத்தில்  உளற  முடியாமல்  தடுமாறினாள்  .

” ம்ம் சீக்கிரம் ” மேகாவின் இதயம் ‘ டம் டம் ‘என வேகமாக அடித்துக்கொண்டது . அவளது பயம் கண்டு உள்ளுக்குள் ரசித்தவன்  வெளியே முறைத்தான் .

” ஆச்சா ?” வேண்டுமென்றே மேலும் மேலும் அவளை கலவரப்படுத்தினான் .

” ஹான் ” என்றவளுக்கு கரங்கள் மோசமாய் நடுங்க ,மிகவும் சிரமப்பட்டு  மருந்தை சிரிஞ்சில்  ஏற்றினாள் .

” ஏய் ! என்ன பண்ற ?” சீறியபடி அவளை நெருங்கினான் ! பார்வையாலே அச்சுறுத்தினான் .!

“மயக்க ஊசி  போடணும் ! அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் ” பதில் சொல்ல முடியவில்லை மூச்சடைத்தது . இதயம் ‘ டமார் டமார் ‘ என்று அடித்துக்கொள்ள.’ கிடு கிடு கிடு ‘ என்று மொத்த உடம்பும் ஆடியது .

“யாரை கேட்டு இதெல்லாம் பண்ற ? ” மேகாவிடம் அக்னி கத்தினான் .

” அக்னி அவங்களை ட்ரீட்மெண்ட் பார்க்க விடு ” என்று அஷோக் கூற ,

” நீ வாய மூடு ” என சட்டென்று  இவளிடம் இருந்து அவனிடம் பாய்ந்தவன் . அஷோக்கை அடக்கி விட்டு அவளிடம் திரும்பி ,

” ஏய்  உன் ஆட்டத்தை கொஞ்சம் நிறுத்து ”  அவளது நடுங்கும் உடலை  எரிச்சலுடன் பார்த்தபடி கத்தினான் .

” காங் …அது ” ஆடிப்போனவள்  முயன்று தன் நடுக்கத்தை நிறுத்தினாள் .

” மயக்க மருந்தெல்லாம் போட வேண்டாம்  ” எச்சரித்தான் !

” அப்போ இதை என்ன பண்ணட்டும் ?” பயத்தில் அவனிடமே கேட்டாள்.

” ஹான் உனக்கு குத்திக்கோ ” சீறினான் .பொம்மையை போல தலை ஆட்டியவள் . அவன் பார்த்த தீ பார்வையில்  பயந்து போய் தன் கையிலே குத்திக்கொண்டாள் .  அவன் அதிசயமாக  அவளை பார்க்க மெல்ல மெல்ல தன் கண்கள் சொருக தரையில் விழப்போனாள் மேகா ஆனால் அக்னி தீரனின் முரட்டு கரங்கள் அவளை ஏந்தியது .

சில மணிநேரம் கழித்து கண் திறந்தவள் முதலில் பார்த்தது  அவளை நோக்கி நடந்து வரும் அரக்கனை தான் .இல்லை இல்லை அக்னி தீரனை தான் .

‘ டமார் டமார் ‘ என அவளது இதயம் வேகமாக அடித்துக்கொண்டது . முகமெல்லாம் சூடாகி  நா வறண்டு மேனி சில்லிட்டது .அவனுடைய பார்வை ஈட்டி போல அவளை துளைத்து ஊடுருவி அவளது மனதை படிக்க முயற்சித்தது .

இதோ அருகில் நெருங்கிவிட்டான் ‘ டம் டம் ‘ இதயம் இன்னும் வேகமாய் துடித்தது .மீண்டும் உடலில் நடுக்கம் பிறந்தது .

” எப்படி இருக்கு ?” அக்கறையான கேள்வி தான் .ஆனால் அதில் கூட அன்பு இல்லை அதிகாரம் தான் மேலோங்கி இருந்தது . அவன் கேட்டதில் முதுகுத்தண்டு  சில்லிட . மிரண்டு போனாள் .

அவனுடைய பார்வை அவள் முகத்தை  தெளிவாய் அளந்தது .மிரண்ட.விழிகள் .துடிக்கும் அதரங்கள் .பயத்தில் கன்றி சிவந்து போன வதனம் . தன் கண்களை இறுக்கமாக மூடி தலையை உலுக்கிக்கொண்ட   அக்னி தீரன் . அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரியும் பயம் கண்டு ‘ ப்ச் ‘ எரிச்சல் அடைந்தவன் . ஆழமாக மூச்செடுத்து  வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான் . அவன் சென்றதும் ” உஸ் புஸ் ” என்று தன் மூச்சை வெளியிட்டவளுக்கு  அப்பொழுது  தான்   மனம் ஆசுவாசம் அடைந்தது.

அக்னி சென்றதும் அங்கு வந்த அசோக்  அவளிடம் நலம் விசாரித்துக்கொண்டிருக்க  அப்பொழுது ஒருவனின் கதறும் குரல் அவளது செவியை எட்ட  அஷோக்குடன்   குரல் வந்த திசை நோக்கி சென்றவள் , அங்கே அக்னி அடிபட்ட அதே  நபரை போட்டு அடிப்பதை பார்த்து நடுங்கியவள் , தன் கண்முன்னே ஒருவனின் உயிர் போவதை கண்டு பொறுக்க முடியாமல் ,

 ” விடுங்க சார் இப்படி அடிசீங்கன்னா அவர் செத்தே போயிருவாரு ” என அக்னியின் வலுவான புஜத்தை பிடித்து  தடுக்கப்பார்த்தாள்.

” கேட்டியா ரகு   இன்னும்  ஒரு அடி அடிச்சா உன் உடம்புல உயிர் இருக்காதாம் .யார் சொல்லி  இப்படி பண்ணுன   ??” அவனது காயம் பட்ட தோள்களை இறுக்கமாக பிடித்து உலுக்கினான் தன் கண்களில் கோபத்தீ தெறிக்க .                

” கிரண் பாஸ்கர்  ” என்று அவன் சொல்லவும் “கிரண் “என பயங்கரமாக கத்திய அக்னி , ரகுவை ரத்தம்  வெளியே தெறிக்க அடித்தான் .

” அவன் சொன்னா , சோறுபோட்ட   எனக்கு நீ துரோகம்  பண்ணுவியா டா ?” என தன் முதுகில் சொருகியிருந்த பிஸ்டலை எடுத்தான் .

ஒரு கையில் பிஸ்டல் , முகத்தில் ரத்தக்கறை என்று கொலைவெறியுடன்  ராட்சஸனை  போலக்காட்சியளித்த  அக்னியை பார்த்த மேகாவுக்கு பயத்தில் இதயம் நின்று துடித்தது .

உடலில் வலுவிழந்து  தலை தொங்கி கிடந்த ரகுவின் தலையில் துப்பாக்கியை பார்த்து மிகவும் பதறிய மேகா   ஒரு உயிரை காப்பாற்றும் பொருட்டு ,

“விடுங்க சார்,  இவரை கொலை பண்ண தான் என்னை ட்ரீட்மென்ட் பார்க்க சொன்னீங்களா ? உயிர்ன்னா அவ்வளவு ஈஸியா போச்சா  ” என ஆதங்கத்துடன் அக்னியின் கையை பிடித்தாள் மேகா . அதீத ஆத்திரத்தில் அவளை வெறித்தான் அவன் . 

                                                                                                                              -தொடரும்